தென்னிந்திய கலைக் கண்காட்சி 2016 (பதிவு)
ஜீவ கரிகாலன்
சென்னையில் ஓவியக்கலை சார்ந்து நடக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்த சந்திரா இளங்கோ ஆர்ட் ஃபவுண்டேசன் ஒவ்வொரு வருடமும் நடத்தி வரும் தென்னிந்திய கலைக் கண்காட்சி அமைந்தது. இந்த வருடம் சென்னை லலித்கலா அகாதமியில் டிசம்பர் 14 முதல் 18 வரை நடைபெற்றது
சந்திரா இளங்கோ ஆர்ட் ஃபவுண்டேசன் எனும் அமைப்பு 2012ல் தொடங்கப்பட்டது. 2013ல் இந்த அமைப்பின் முதல் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது, 2016 – நான்காவது காட்சியாக நடைபெற்றது. அதன் தொடக்க நாளான அன்று, நிகழ்வை ஏவி இளங்கோவுடன் மூத்தக் கலைஞரான சேனாதிபதியும் பங்குபெற்றார். அவர்களுடன் ஓவியர்களான விஷ்வம், கலை இயக்குனர் ஜே.கே, ஃபோரம் கேலரியின் க்யூரேட்டர் ஷாலினி ஆகியோர் உடனிருந்தனர்.
ஓவியர் ஏவி இளங்கோ, சென்னையில் வசிக்கும் முக்கியக் கலைஞர்களில் ஒருவர். ராஜிவ்காந்தி சாலையின் ஆரம்பத்தில் மத்திய கைலாஷம் கோயிலின் பின் அமைந்திருக்கும் ஐந்திணை எனும் சிற்பத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் நான் அவரை நினைத்துக் கொள்வேன். சென்னையில் இது போன்ற நிகழ்வைக் காண்பது மிக அரிதான ஒன்று என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
தன் கலைப்பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்து வந்த தன் மனைவியான சந்திரா இளங்கோ அவர்களின் நினைவாக ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் வாயிலாக இளம் படைப்பாளிக்கும், வளரும் படைப்பாளிகளுக்கும் ஊக்கம் கொடுத்த, புதிய பாதைக்கான நம்பிக்கைகளை உருவாக்கி, அவர்கள் பயணத்திற்கான வழிகாட்டியாக இந்த அறக்கட்டளையினை அவர் முன்னெடுப்பதாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
வர்தா புயலின் காரணமாக திசம்பர் 12ல் தொடங்க வேண்டிய இந்நிகழ்வு இரண்டு நாட்கள் தாமதமாக திசம்பர் 14ல் தொடங்கியது. தொடக்க நாளன்று அறக்கட்டளையின் சார்பாக அந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட கலைஞர்களுக்கும், காட்சிக்கு வைக்கப்பட்ட படைப்புகளில் சிறப்பெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளுக்கும் பரிசும் விருதும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டின் சிறந்த படைப்பாக்கம் மற்றும் செயல்திறனுக்கான சந்திரா இளங்கோ ஃபவுண்டேசனின் கோப்பை கும்பகோணத்தைச் சேர்ந்த கலைஞரான அந்தோனிராஜ் என்பவருக்கு வழங்கப்பட்டது. அவரது போர்ட்ரெயிட்டிற்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவரின் ஓவியம் பற்றி சென்ற பகுதியில் பேசியிருக்கிறோம்.
இந்தக் கண்காட்சியில் படைப்புகளை மட்டும் காட்சிக்கு வைக்காமல், சொற்பொழிவு(lecture), விவாதம், நிகழ்த்துக்கலை என்றெல்லாம் பன்முகத்தன்மையோடு அமைகின்றது. டிசம்பர் 14 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பல்வேறு நவீன ஓவியர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. மாணவர்கள், இளம்படைப்பாளிகள், மூத்த படைப்பாளிகள் என ஒன்றாக அரங்கேற்றியிருப்பது இக்கண்காட்சியின் மற்றொரு சிறப்பு.
விருதுபெற்ற அந்தோனிராஜின் படைப்புகளைப் போல இளம் படைப்பாளிகளான விஜய் பிச்சுமணி, முருகன் தங்கராஜ் உட்பட மூத்த படைப்பாளிகளான செழியன் (ஓவியம், சிற்பம்), நரேந்திரபாபு, ஜி.பிரபு, கணபதி சுப்ரமணியம் போன்ற பலரது படைப்புகளை பார்க்க முடிந்தது. ஓவியர் விஷ்வம் 16 டிசம்பர் வெள்ளிக்கிழமை அன்று நிகழ்த்துக்கலையாக தன் படைப்பை அரங்கில் வைத்து உருவாக்கிக் காட்டினார். பீதாம்பர் போல்சானி எனும் கலை விமர்சகரின் சொற்பொழுவு “சமகாலக்கலை” எனும் தலைப்பில் நிகழ்ந்தது.
இவற்றை தலைமையேற்று முன்னின்று நடத்தும் ஏவி இளங்கோ தன் அமைப்பிற்கு உறுதுனையாக இருக்கும் மூத்தக் கலைஞர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றிட்கு நன்றி தெரிவித்தார். அறக்கட்டளை வாயிலாகப் புதிய/இளம் கலைஞர்களுக்கு களங்களை அமைத்துத் தர சில அமைப்புகளோடு செய்து வரும் ஒப்பந்தங்களுக்கான முயற்சிகளும் அதன் விளைவாகக் கிட்டிய சில பலன்களையும் பகிர்ந்துக் கொண்டார். கொச்சின் கலைத் திருவிழாவில் (COCHIN ART BIENNIELE) பங்கு பெற அமைப்பு வாயிலாகச் செல்லவிருப்பதாக அறிவித்தார். தொடர்ந்து பிற ஊர்களில் அமைப்பு சார்பாக கண்காட்சிகள் நடத்தப்படும் என்றும் பதிவு செய்தார்.
கலைத்துறையில் முன்னேறத் துடிக்கும் ஓவியர்களையும், கவிஞர்களையும் நிறுவனங்களும், தொழிலதிபர்களும் ஸ்பான்சர் செய்வது அவசியம். அதுவே ஒரு ஆரோக்கியமான சமூகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வழியாக அவர் பேசியதன் சாரம்சமாக இருந்தது.
பொதுவாக கலைஞர்களைப் பாதுகாப்பதும், அவர்கள் தங்களது கலை வழி சமூகத்திற்காக பங்களிப்பதற்கு வசதிகள் செய்வது, அங்கீகரித்து ஊக்குவிப்பது போன்ற பணிகளை வளர்ச்சிக்கான பாதையை நோக்கும், ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க விரும்பும் அரசாங்கங்கள் மேற்கொள்ளும் பணிகள். ஆனாலும் இந்தியக் கலை வரலாற்றில் இது போன்ற பணிகளை தனிநபரின் முன்னெடுப்பால் உருவான இயக்கங்கள் தான் சாதித்து வந்திருக்கின்றன. ஓவிய உலகில் சுதேசிய ஓவியங்கள் ஒருபுறமிருக்க உலக அளவிலான சிந்தனைமுறைக்கு ஏற்ப உருவான முற்போக்கு ஓவியக் குழுக்களாகட்டும் அல்லது கே.எஸ்.பணிக்கர் உருவாக்கிய சோழமண்டலம், விவான் சுந்தரம் உருவாக்கிய PLACE FOR PEOPLE அமைப்பு, ஜே.ஸ்வாமிநாதனின் பெரும் உழைப்பில் உருவெடுத்த மத்திய இந்தியாவை கலைக்கான கேந்திரமாக்கிய போபாலின் பாரத் பவன் ஆகட்டும் தனிநபரின் முன்னெடுப்பில் உருவானவையே. மேற்சொன்ன எல்லாவற்றிட்கும் ஒரு சாதாரணத் தொடக்கம் தான் இருந்து வந்தது.
இந்த அமைப்பின் வாயிலாக ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி கூட அப்படியான ஒரு தொடக்கத்தைத் தருமென்றால் தமிழகத்தில் வரப்போகும் தசாப்தம் புதிய உத்வேகம் கொண்ட கலைச்சூழலுக்கான சாத்தியங்களுக்கு வழிவகுக்கும்.