கப்பிரி உலகம்

7

லீனா மணிமேகலை

ஃபோர்ட் கொச்சி. இரண்டு ரூபாய் சில்லறைகளைப் பொறுக்கியெடுத்து டிக்கெட் வாங்கி, ஃபெர்ரியில் போர்ட் கொச்சிக்குப் பயணிப்பது என்றால் கனிக்கு அவ்வளவு விருப்பம். கேரளப்மபெண்களின் கூந்தலை கடல் காற்று கலைக்கும் போதெல்லாம் வீசும் தேங்காய் எண்ணெய் வாசனையும், கைலியைத் தம் தோல் போல அவ்வளவு அனிச்சையாய் அணிந்து திரியும் ஆண்கள் நாக்கைச் சுழற்றி சற்று கர்வத்தோடு உரக்கப் பேசும் மலையாளத்தில் தெறிக்கும் பீடித்துகள்களும், தங்கள் சைக்கிள்களை ஃபெர்ரியில் ஏற்றி அவற்றை விட்டுப்பிரிய மனமில்லாமல் அவற்றின் மேலேயே அமர்ந்து கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு வரும் பள்ளி மாணவ மாணவிகளையும், ஏதேதோ வியாபாரத்திற்கான சரக்குகளை விதவிதமான மூட்டைகளாய் ஏற்றிக்கொண்டு வரும் ஆட்டோக்களையும் அரைபாடி வண்டிகளையும், துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பல்கள் அலைகளுக்கு அசைந்து கொடுத்து ஆடிக் கொண்டிருப்பதையும், அணுஅணுவாய் ரசிப்பது அவளுக்கு அலுக்கவே அலுக்காது. கனி ஒரு இண்டீரியர் டிசைனர். அதிலும் பட்ஜெட் டிசைனர். கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கும் இடங்களின் சூழலுக்குத் தகுந்தாற்போல, சுற்று வட்டாரத்தில் கிடைக்கும் உள்ளூர் பொருட்களைச் சேகரித்து பத்துக்கு பத்து அறைகளைக்கூட கலாபூர்வமாக மாற்றி விடும் கனிக்கு கிராக்கி அதிகமென்றாலும் தேர்ந்தெடுத்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வடிவமைப்பு வேலைகளை ஏற்றுக்கொண்டு செய்து தருவாள். இயற்கை வண்ணங்களில் கைநெசவு செய்த ஆடைகளை தனக்கேற்றாற்போல் தன் கையாலேயே தைத்து அணிந்து கொள்ளும் கனியை அவளைக் கடந்து போகும் யாரும் சில நொடிகள் நின்று கவனித்துப் பார்க்காமல் செல்வது அரிதுதான். கிட்டத்தட்ட ஒரு கடலோர ஐரோப்பிய நகரத்தின் தெருக்கள் போல டூரிஸ்ட் வேகபாண்ட்கள் நிறைந்த ஃபோர்ட் கொச்சியின் நடுவே கம்பீரமாக நிற்கும் ஜூயிஷ் சினகாக்கின் அருகில் தன் கேரளத்தோழி நீலாம்பரி, புதிய காஃபி ஷாப்பை திறக்கும் திட்டத்தைச் சொல்ல, ஆலோசனை வழங்க வந்திருக்கிறாள் கனி. சன்னல்களைத் திறந்தால் சீன வலைகள் ராட்சச சிலந்திக்கூடுகள் போல கடற்கரையை ஆக்கிரமித்திருக்கும் காட்சி தெரியும்படியான விடுதி அறையொன்றை ஓரிரவுக்கு தங்குவதற்காக ஏற்பாடு செய்துவிட்டு காலையில் வருவதாக செய்தி அனுப்பியிருந்தாள் நீலாம்பரி. ஒரு வெந்நீர்க் குளியலைப் போட்டுவிட்டு கடற்கரையோரம் காலாற ஒருநடை போட ஆயுத்தமாகிறாள் கனி.

நடுத்தரமானதென்றாலும் ரசனையாக கட்டப்பட்ட அந்த விடுதியின் வரவேற்பறையில் ஃபோர்ட் கொச்சியின் வரலாறு சொல்லும்படியான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. வெளியேறுவதற்கு முன் அவற்றை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று வந்த கனிக்கு அங்கு போடப்பட்டிருந்த ஒரு மர சோஃபாவில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் கண்ணில் படுகிறான். கைவேலைகள் செய்யப்பட்டிருந்த உறைகள் போர்த்தியிருத்த மெத்தையில் சாய்ந்து அமராமல், சோபாவின் நுனியில் ஒருவித பதட்டத்தோடு அமர்ந்திருக்கிறான். கலைந்த தலைமுடியும், சவரம் செய்யப்படாத தாடியும், தாழ்ந்த கண்களுமாய் இருக்கிற அவன், கனியை இன்னொரு முறை கவனிக்க வைக்கிறான். லாபியில் வேறு யாரும் இல்லை. புகைப்படங்களை ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு திரும்பியபோதும் அதே இடத்தில், அதே கோலத்தில் அமர்ந்திருக்கும் அவனிடம் பேசலாம் என முடிவெடுத்து அவனருகே போகிறாள் கனி. அவள் அருகில் வந்ததையும் கவனிக்காது, கைவிரல்களைப் பிரிப்பதும் கோர்ப்பதுமாய் ஏதோ யோசனையில் இருக்கிறான். ஹாய் என்ற அவளின் குரலுக்கு திரும்பியவன் கண்களில் நீர் முட்டிக்கொண்டிருக்கிறது.”ஒரு வாக் போகலாம்னு.. நீங்களும் வரீங்களா’ என்று கேட்க நினைத்த கனி பேசாமல் நிற்கிறாள். ‘ஹாய்’ என்று தீனமாய் முகமன் சொல்கிறான். ‘ஆர் யு ஒகே’ என்ற கனிக்கு மையமாய் தலையாட்டினாலும் நுனியிலேயே தான் அமர்ந்திருக்கிறான். அருகில் கொஞ்ச நேரம் அமரலாம் என முடிவு செய்து சோபாவின் அடுத்த முனையில், தன் ஸ்லிங் பேக்கை மாட்டுகிறாள் கனி. சில நிமிடங்கள் மெளனமாக கரைகின்றன. ‘சரி.. போகலாம்’ என எழுந்திருக்கும் கனியை நோக்கி, பின்பக்கம் தெரியும் அவனுடைய அறையை காண்பிக்கிறான் அவன். “ரூமுக்குப் போக மனமில்ல. என் கேர்ள் ஃபிரண்ட் தூங்கிட்டு இருக்கா. எழுப்பிட்டா திரும்ப சண்டை தான். வாக்குவாதம் தான்.. சரி அமைதியா கொஞ்ச நேரம் உக்காந்திருக்கலாம்னு தான்…” என்கிறான். ‘வாக்கிங் வர்றீங்களா’ என்று சற்றுமுன் கேட்க நினைத்ததை அப்போது கேட்கிறாள் கனி. “இல்லங்க.. அவங்க எழுந்திருக்கிறப்ப இல்லன்னாலும் பிரச்சனை தான்…” என்று காத்திருக்கும் அவனை யோசனையுடன் பார்க்கிறாள். வாழ்க்கையின் பெரும்பகுதியை நாம் காத்திருப்பதில் தானே கழிக்கிறோம் என்று அவளுக்குத் தோன்றுகிறது. யாரோ ஒருவருக்காக, அரிய கனவொன்றிற்காக, விருப்பப் பூர்த்திக்காக, பருவ மாறுதலுக்காக, முழு நிலாவிறகாக, விடிவதற்காக, வடுக்களின் ஈரம் காய்வதற்காக, புதியவைக்காக, கேட்கப்பட வேண்டுமென்பதற்காக, உணரப்படுவதற்காக, புரியவைப்பதற்காக, நல்ல நேரத்திற்காக, சரியான தருணத்திற்காக, காரணத்திற்காக, சொல்ல தவிப்பதை சொல்வதற்காக, அந்த கடிதத்திற்காக, பதிலுக்காக, பயணத்திற்காக, சென்று சேர்வதற்காக, துன்பங்கள் தீர்வதற்காக, முடிவதற்காக, தொடங்குவதற்காக, அன்பை தருவதற்காக, பெறுவதற்காக, வாழ்வதற்காக, சாவதற்காகவென்று நாம் காத்துக்கொண்டே தானே இருக்கிறோம். தள்ளிப்போடுவதை தான் வாழ்வதாக நம்புகிறோம். வாழ்கிறோம்.

கனிக்கு தன் கணவன் நினைவுக்கு வருகிறான். உருகி உருகி காதலித்து திருமணம் செய்தவன். “சாப்பிடறயா” “வீட்டு சாவி ஷூ ராக்கில் வச்சிட்டுப் போறேன்” “காஃபி போடறேன், வேணுமா” “இன்னிக்கு வெளியூர் போறேன், வர்றதுக்கு இரண்டு நாள் ஆகும்” “செடிங்களுக்கு தண்ணி ஊத்திட முடியுமா” “வைரவனுக்கு டாக்ஃபுட் வாங்கிட்டு வந்துடு” என்று உரையாடல்கள் வெறும் அன்றாடங்களுக்கு சுருங்கி விட்ட உறவாக மாறிவிட்டிருந்தது அவர்களது திருமண வாழ்க்கை. ஒருவரையொருவர் தொடாமல் ஒரு நிமிடம் இருந்தாலும் பூமிப்பந்தே நின்றுவிட்டதைப் போன்ற பதட்டத்தில் இருவரும் செயலற்று நின்ற காலம் ஒன்றிருந்தது. ஒருநாளின் மொத்த கனத்தையும் இறக்கி வைக்கும் வேகத்தில் நடந்ததையெல்லாம் பேசிக்களித்து நீளும் இரவுகளை கலவியில் தோய்த்துக் காட்டாறுகளாக்கிய பருவமும் தூரத்து நினைவாய்ப் போயிருந்தது. காலத்தின் விளையாட்டில் நாள்தோறும் ஒருவருக்கொருவர் மீள மீளத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லையென்றால், பொம்மைகள் தொலைந்த செஸ் போர்டு போல காதல் வெறும் கட்டங்கள் வரையப்பட்ட அட்டையாகி விடுகிறது. ஃபோர்ட் கொச்சியில் வருடப்பிறப்பிற்காக, மக்கள் கடற்கரையில் கூடி ஆடிப்பாடி பாப்பன்ஜி உருவ பொம்மைகளை எரிப்பார்கள். பாப்பன்ஜி என்றால் போர்த்துகீசிய மொழியில் பாட்டன். ஃபோர்ட் கொச்சி முசிரிஸ் துறைமுகமாக இருந்த காலத்தில் போர்த்துகீசியர்கள் ஆண்டதால், புழக்கத்தில் இன்னும் இருக்கும் நிறைய போர்த்துகீசிய சொற்களைக் கேட்கலாம். பாப்பன்ஜி பொம்மையை எரிப்பது கடந்து போன காலத்தை எரிப்பதுதான் என்று கனி கேள்விப்பட்டிருக்கிறாள். கடக்க விரும்பும் காலத்தையெல்லாம் பொம்மையாக்கி எரித்துவிட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறாள் கனி.

கட்டிடங்களில் கம்பீரமாய் பறக்கும் சிவப்புக்கொடிகள் பழமைக்கும் புதுமைக்கும் இடையே இழுத்த கோட்டுச் சித்திரம் போல நகரத்தை அலாதியாக வைத்திருக்கின்றன. கடற்கரைக்கு அடுத்து கனிக்கு, ஃபோர்ட் கொச்சியில் பிடித்த இடம் கப்பிரி பார். சுருட்டு ஒன்று புகைந்து கொண்டே இருப்பது போன்று ஒளிரும் நியான் விளக்கு சுழலும் அதன் முகப்பு வசீகரமானது. அந்நியப் படையெடுப்பு காலங்களில் அடிமைகளாக வரவழைக்கப்பட்ட ஆப்பிரிக்க கறுப்பின மக்களை அந்த காலக்கட்டத்தில் வணிகம் செய்ய வந்த அரபுமார்கள் ‘காஃபிர்’ என்று அழைத்தது மறுவி ‘கப்பிரி’ என்றாகி விட்டதென்பது வரலாறு. இந்த நகரத்தை தங்கள் ரத்தத்தாலும் வியர்வையாலும் கட்டிய கப்பிரிகள் இன்று ஃபோர்ட் கொச்சி மக்கள் தொழும் சிறு தெய்வங்கள். பல நூறு வருடங்களாக வேர்பிடித்து நிற்கும் தொன்மையான மரங்களின் அடிவாரத்தில் கற்களால் கட்டப்பட்ட சின்ன மாடத்தில் புகைந்து கொண்டிருக்கும் சுருட்டு தான் கப்பிரி என்ற காவல் தெய்வத்தின் வழிபாட்டு உருவம். மலர மலரப் பிடித்த மீன்களைக் கையோடு கொண்டு வந்து அந்த பாருக்குள் கடை போடும் வயதுபோன மீனவரிடம், கப்பிரி பெயர் காரணக் கதையை முதல் தடவையாக கேட்டு தெரிந்து கொண்ட அனுபவம் கனிக்கு சுவாரஸ்யமானது. அந்த மீனவரின் பெயர் மறந்து போனாலும் அவர் சிபாரிசு செய்து சாப்பிட சொன்ன மீன் சினைப் பொரியலை அவளால் மறக்கவே முடியாது. ஏழு டிகிரியில் பதம் செய்யப்பட்ட சிவப்பு வைனுடன் மீன் சினையைக் கொறிப்பது கனிக்கு சொர்க்கம். ஜாஸ் அதிர, கப்பிரி உலகம் ஒரு தீவிரமான ஏகாந்தத்தில் திளைத்திருக்கிறது. பெருங்கலைஞன் ஜான் கொல்திரானின் In a Sentimental Mood ஒலிக்க கனிக்கு ஹோட்டல் வரவேற்பறையில் சந்தித்த அந்த இளைஞனின் முகம் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்துக்கொண்டே இருக்கிறது. கொடுக்க வழியில்லாத அன்பை வைத்துக்கொண்டு அதை கரைக்கவும் வழியில்லாமல், நொறுக்கவும் சக்தியில்லாமல், கடத்தவும் துணிவில்லாமல் ஏங்கியே சிறுத்துப்போன இதயங்கள் கொஞ்சம் நீண்டு துடிப்பதும் அதே கதியில் அடித்துக் கொள்ளும் மற்றொரு இதயத்தை சடுதியில் இனம் கண்டுவிடும் என்பதும் உண்மை தான் போலிருக்கிறது. வீட்டில் பார்த்த பெண்ணையே மணந்து கொண்டிருந்தால் ‘மனைவி’யாக நடந்து கொண்டிருப்பாள் என்பது கனியுடைய கணவனின் புகார். வேலை நிமித்தம் மாதம் முப்பது நாளில் பத்துநாட்கள் பயணம் செய்வது காதலிக்கும்போது பிரச்சினையாகத் தெரியாதது திருமணத்திற்குப் பிறகு மட்டும் பூதாகரமானதின் புதிரை அவிழ்க்க முற்பட்டால், அவள் மனதுக்குப் பிடித்த வேலையைக் கைவிடும் அபாயம் நிகழ்ந்துவிடும் என்பது கனியின் அச்சம். பொருத்தமில்லாத கதாபாத்திர வார்ப்புகளால் கலையாக மாறாமல் விழுந்துவிட்ட ஒரு தோல்வியடைந்த திரைப்படமாக தன் திருமணத்தை சமயத்தில் கற்பனை செய்து கொள்வாள். தன்னைப்போலவே அகச்சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறானோ அந்த இளைஞன் என்ற எண்ணம் குமைச்சலாகிய பொழுதில் முக்கால்வாசி வைன் பாட்டில் முடிந்திருந்தது.

விடுதிக்கு கனி திரும்பும்போது, இரவு ஒன்பதாகி விட்டிருக்கிறது. அதே சோபா நுனியில் இன்னும் காத்திருக்கும் அந்த இளைஞன். அவனுடைய அறையை தன்னிச்சையாய் திரும்பி பார்க்கிறாள் கனி. இன்னும் அடைத்தே வைக்கப்பட்டிருந்தது கண்டு சற்று துணுக்குறும் கனி, “இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பீங்க… என் அறைக்கு வேணா வந்து உக்காந்திருங்க..” என்கிறாள். “சரி” என்று எழுகிறான் அவன். அவர்களுக்குள் ஒரு இனம்புரியா பந்தம் உண்டானது போன்ற உணர்வு. அறையைத் திறந்து அவனை அமரவைத்து உணவு ஆர்டர் செய்கிறாள் கனி. தான் ஐ.டியில் வேலை செய்வதாகவும், தன் கேர்ள்ஃபிரண்ட் ஒரு போட்டோகிராஃபர் எனவும் சொல்கிறான். தங்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வருவதாகவும், அவள் அர்த்தமில்லாமல் கோபப்படுகிறாள் எனவும் வருத்தப்படுகிறான். உறவில் விழும் பாதுகாப்பின்மையின் முடிச்சுகளை அவிழ்ப்பதில் இருக்கும் அவஸ்தைகள் குறித்து மணிக்கணக்கில் நீள்கிறது பேச்சு. உணவு முடித்து ஒரு முழு சிகரெட் பாக்கெட்டையும் காலி செய்கிறான் அவன். கடலின் இரு மிதவைகள் அலைகளினூடே ஊர்ந்து அருகில் வந்தும் தொடாமல் அசைந்து கொண்டிருப்பது போலத் தொடர்கிறது கனிக்கும் அவ்விளைஞனுக்குமான உரையாடல். மிக நெருங்கிய நண்பர்களை விட அந்நியர்களிடம் தன்னைத் திறந்து வைத்துவிட முடிவு செய்யும் மனம் கோடையில் பெய்வதற்கு முடிவு செய்யும் மழை போன்று தான். பின்னிரவு கடந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. தன் கேர்ள்ஃபிரண்ட் உடனே வரச்சொல்கிறாள் என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறுகிறான். விரைந்து ஓடும் அவனை வைத்த கண் விலகாமல் பார்க்கும் கனி ஒரு உந்துதலில் படிகளிறங்கி கீழே வருகிறாள். அவன் அறை வெளிச்சமாய் இருக்கிறது. அறைக்கு வெளியே கத்தலும் கெஞ்சலுமாய் வாக்குவாதத்தின் சத்தம் கசிகிறது. தன் அறைக்குத் திரும்பும் கனி, விளக்குகளை அணைக்காமல், கதவை மூடாமல், தன்னை விழுங்குவது போல வாய்பிளந்து கிடக்கும் பெரிய கட்டிலைத் தாளாது, சோஃபாவில் ஒடுங்கிப் படுத்து தூங்கிப்போகிறாள்.

காலையில் ஒரு கட்டன்சாய் குடித்துக் கொண்டே அவனுக்காக ஒரு குறிப்பு எழுதுகிறாள் கனி. ’Quit‘ என்று எழுதிய அந்த குறிப்பில் அவள் பெயரும் இல்லை, அவன் பெயரும் இல்லை. இருவருமே பெயர்களைக் கேட்டு தெரிந்துக் கொள்ளவில்லை என்பது உறைக்கிறது. அவனின் அறை எண்ணைக் குறிப்பிட்டு ஒரு கவரில் மடித்து வைக்கிறாள். அவளுடைய அறை எண்ணை கவரின் முன்பக்கத்தில் எழுதுகிறாள். அப்போது அவளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எந்த முன்பின் விசாரிப்புகளுமில்லாமல், அன்று மின்சாரக் கட்டணம் கட்டுவதற்கு கடைசி நாளெனவும், மறக்காமல் இணையதளத்தில் கட்டி விடவும் என்றும் நினைவுறுத்துகிறான் கனியின் கணவன். ஃபோன் பேசி வைத்துவிட்டு ஏதோ தோன்ற அவள் எழுதிய குறிப்பை கவரில் இருந்து எடுத்து படித்துப் பார்க்கிறாள். தனக்கு ஏன் இந்த குறிப்பை அவள் எழுதிக் கொள்ளவில்லை என்ற யோசனை திடீர் காய்ச்சல் போல வருகிறது. காதுகள் அடைத்துக்கொண்டு ஙே என்று சத்தம். எதுவும் தோன்றாமல் பல மணித்துளிகள் அப்படியே அமர்ந்து விடுகிறாள். பிரிவதை விட சகித்துக்கொள்வது வசதியாக இருப்பதால் தான் உறவுகள் நீடிக்கின்றனவா? உடைவதற்கு அச்சப்பட்டு ஊசலாடிக் கொண்டிருப்பதற்கு மனித ஆயுள் அவ்வளவு நீளமானதா? தீர்ந்துப் போனதை இன்னும் இருப்பதாக பாசாங்கு செய்து யாருக்கு என்ன நிரூபிக்கப் போகிறோம்? கேள்வி மேல் கேள்வி. அவள் எழுதிய குறிப்பு காற்றில் படபடக்கும் சத்தம் ஓங்கி கேட்கிறது. ஏறியது தவறானப் பேருந்து என தெரிந்தும் பாதியில் இறங்கி அவதிப்படாமல் அது போய் நிற்கும் கடைசி நிறுத்தம் வரை மூச்சை நீட்டிப்பிடித்து போவதில் அர்த்தம் இல்லை என்று உறைக்க தன் கைபேசியைத் திறந்து தன் கணவனின் எண்ணை தேடுகிறாள். குட்டிப்பா என்ற பெயரில் வசீகரமாக சிரித்துக் கொண்டிருக்கும் அவனுடைய புகைப்படம். அதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வாட்ஸ் ஆப்பை அழுத்துகிறாள். தன் கணவனுடன் சேட் செய்தே ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டதை ஹிஸ்ட்ரி காட்டுகிறது. விரல்கள் நடுங்க “I Quit” என்று டைப் செய்கிறாள். அழிக்கிறாள். மீண்டும் டைப் செய்கிறாள். அனுப்புவதற்கு துணிவில்லாமல் ட்ராஃப்டில் வைக்கிறாள். சட்டெனப் பிணம் போல பாரமாகத் தெரியும் ஃபோனைக் கைகளில் இருந்து மாற்றி ஸ்லிங் பேகில் போட்டுக் கொண்டு நீலாம்பரியின் காஃபி ஷாப்பிற்கு செல்லும் சாலையில் விறுவிறுவென நடக்கிறாள்.

டபுள் எக்ஸ்பிரஸ்ஸோவை ஒரே ஷாட்டில் விழுங்கிவிட்டு, தன் லேப்டாப்பைத் திறந்து சிமுலேஷனில் காஃபி ஷாப்பின் வடிவமைப்பை விளக்கத் தொடங்கிய கனியை சற்று நிறுத்திய நீலாம்பரி “நேத்து சரியா தூங்கலயா? என்ன ஆச்சு” என்று கேட்கிறாள். நீலாம்பரியின் கைச்சூடு உடலில் பட்டதும் கனியின் இறுக்கமும் விடைப்பும் தளர்கிறது. கம்ப்யூட்டரை மூடி வைத்துவிட்டு மெளனமாகிறாள். தன்னையே உறுத்து கவனிக்கும் தோழியின் கண்களை சந்தித்தால் உடைந்துவிடக்கூடும் என அஞ்சி வேறெங்கோ பார்வையை திருப்பிக் கொண்டு அமர்ந்திருக்கும் கனியின் மோவாயைத் திருப்புகிறாள் நீலாம்பரி. இரவில் தான் சந்தித்த இளைஞன் முதல், வாட்ஸ் ஆப் டிராஃப்டில் இருந்த குறுஞ்செய்தி வரை நடந்ததைப் பகிர்கிறாள் கனி. எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, “யார் கண்டது, உன்னை சந்தித்தது கப்பிரியாக கூட இருக்கலாம்” என்ற நீலாம்பரியை குழப்பத்துடன் பார்க்கிறாள் கனி. தன் சுருட்டு புகைந்து கொண்டிருக்கும் வரை கப்பிரி, ஃபோர்ட் கொச்சியில் யாரையும் தனிமையில் வாட விடமாட்டார் என்கிறாள் நீலாம்பரி. அவளிடம் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு வெளி வராந்தாவிற்கு வரும் கனி வானத்தை அண்ணாந்துப் பார்க்கிறாள். நிலா இன்னும் தேயாமல் வானத்தில் மங்கலாக காய்ந்து கொண்டிருக்கிறது .வெயில் ஒரு புகை போல எல்லாவற்றின் மீதும் இறங்குகிறது.

***

லீனா மணிமேகலை

7 COMMENTS

  1. நியோ ரியலிஸம் சார்ந்த இந்த கதை மிகவும் நுட்பமானதும் கூட! வாழ்த்துகள் தோழர்

  2. காப்பிரி உலகம் சிறுகதை இளம் இணையரின் வாழ்வியலில் ஊடாடும் உளவியலை லீனா தொன்மத்தின் பின்னணியில் எடுத்துரைக்கிறார். கனியின் மனப்போக்குக்கு ஏறிய பஸ்ஸில் பயணத்தின் இடையில் இறங்குதல் என்ற படிமம் கதைக்கு உதவியாக இருக்கிறது. காப்பிரி ராத்திரி தனிமைக்கு துணையாக வந்திருப்பார் என்ற முடிவு பொருந்தா ஒட்டு. நல்ல கதை .வாழ்த்துக்கள்.

  3. நடுவில் கொஞ்சம் உரையாடல்களாகக் கதையினைச் சொல்லியிருக்கலாம்

  4. super ah irundhudhu…. and yaavarum.com contact panna mudiayala… facebook, contact ellam try pannitten.. error varudhu.. ungala eppadi contact panradhu.

  5. அருமை அருமை…. உண்மையில் நிறைய யோசிக்க வைக்கிறது… நிறைய பேருக்கு “quit ” என்ற ஒற்றை வார்தையை சொல்ல முடியாமலே வாழ்க்கை முடிந்து விடுகிறது. மாறாக பேரன் பேத்தியெடுத்த பின்பும் சமுதாய நிர்ப்பந்தத்தால் மட்டுமே வாழ்கின்ற சூழல் உள்ளது… ஆண்களுக்காவது பரவாயில்லை சில நேரங்களில் “துறவு” யென போய்விடுகிறார்கள். சில காலத்திற்க்கு முன் முதியவர் ஒருவர் “divorce” செய்வதாக செய்திதாளில் பார்த்தது ஞாபகம் வருகிறது. அப்போது “இந்த வயதில் இது தேவையா” யென நினைத்தேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here