கார்த்திக் புகழேந்தி
‘மனிதன் நெருப்பைக் கண்டு பயந்தான். பின்னர், அதனை வழிபடத் துவங்கினான்’ என்றே நம்முடைய வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் நமக்கு நெருப்பின் கதையை அறிமுகம் செய்து வைக்கின்றன. உளவியலாளர் சிக்மன் பிராய்ட் “மனிதர்களது அச்ச உணர்வும் குற்ற உணர்வுமே முதன்முதலில் வழிபாடுகளைத் தோற்றுவித்தன’ என்று குறிப்பிடுகின்றார். ‘தமிழறிவியலில் ஐம்பூதங்களில் ஒன்றெனக் கருதப்பெறும் நெருப்பு, அச்சத்தின் காரணமாகவே ஓர் வழிபாட்டுப் பொருளாக மாறியதா? அது சரி என்றால் மனிதகுலம் நெருப்பின் ஆற்றலை உணரும் முன்னே அவர்களுக்கு அச்ச உணர்வு பழக்கப்பட்டிருந்ததா? எனில், நெருப்பிற்கு முன்பாக மனிதன் எதைக் கண்டெல்லாம் பயம் கொண்டிருந்தான்? அவற்றை எவ்வாறு எதிர்கொண்டான். அவற்றின் மீதும் தனது வழிபடுதன்மையை ஏற்றியிருக்கிறானா? முதலில், நெருப்பிற்கும்- அச்சத்திற்கும் -மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்புகள் என்னென்ன?
மனிதகுலத்தின் எல்லா சமூக அமைப்புகளிலும், சில நம்பிக்கைகள் பிறப்பு முதல் இறப்புவரை அவர்களிடையே வேரூன்றியிருக்கின்றன. அவற்றில் நீண்டநெடிய முக்கியத்துவமும் பெற்றவை என்று கணக்கெடுத்தால் பேய், பிசாசு குறித்த நம்பிக்கைகள் என்றென்றைக்குமாக தங்களிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன.
இன்றைக்கும் ஆவி, பேய், பிசாசு, பூதங்கள் ஆகியவைகளிடமிருந்து தங்களையும், தங்கள் சந்ததிகளையும் காத்துக் கொள்வதற்காக பல்வேறுவிதமான சடங்கு மரபுகளைத் தொடர்ந்து கடைபிடித்துவரும் தொல்குடிச் சமூகங்களை உலகின் எல்லா மூலை முடுக்கிலும் அடையாளம் காண முடியும். இது வெறும் பேச்சுக் கணக்குகள் அல்ல. உலகளவில் 90 நாடுகளில் வாழும் 37 கோடி பழங்குடி மக்களைக்கொண்டு கண்டறியப்பட்ட முடிவு.
ஐயாயிரம் விதமான பண்பாட்டுக் கூறுகளையும், ஏழாயிரத்திற்குச் சற்று குறைவான மொழிகளைப் பாவிக்கிறவர்களாக அறியப்படும் அவர்கள், வெவ்வேறு நிலப் பரப்பினுள் அருகி வாழும் சூழலினால். தங்களிடையே நேரடியான கலாச்சாரத் தொடர்புகளோ மொழி, அறிமுகங்களோ ‘பெரும்பான்மையான நேரங்களில்’ ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளைப் பெறவில்லை. ஆனபோதும், அவர்களிடம் காணப்பட்ட முக்கியமான பொதுப்பண்பாக, பேய், பிசாசு, ஆவிகள் மீது அச்சமும், அவற்றின் இருப்பின்மீது தீவிர நம்பிக்கை கொண்டிருப்பதும், அவற்றைச் சாந்தப்படுத்தும் சடங்குகளில் பிரத்யேகமாக நெருப்பு வழிபாட்டினை (சில சமயங்களில் சூடிடுதல்) முதன்மையாகக் கொண்டிருந்தனர்.
விழித்திருக்கும் இரவுகள்
மனிதன் நெருப்பைக் கண்டுபிடிக்கவில்லை என்பது அறிவியல் நிஜம். நெருப்பின் ஆற்றலை எதேச்சையாகக் கவனித்த மனித முன்னோடிகள் (Homo-genus) அதனைப் புரிந்து கொள்வதின் மூலம், அதனைக் கட்டுப்படுத்தவும், பயன்படுத்தவும், தேவையின்போது மீளுருவாக்கம் செய்துகொள்ளவும் வேண்டிய வழிமுறைகளையே ஏறத்தாழ மூன்று இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிந்திருந்தனர். இப்படி கற்பனை செய்துகொள்ளலாம். ஹோமோ-ஜெனஸ் குழு ஒன்று பற்றியெரியும் நெருப்பு குறித்தான தங்களது புதிய புரிதலைத் தங்கள் கூட்டத்தினரிடையே உடலசைவுகளின் மூலம் மிகத் தீவிரமாக விவரித்துக் கொண்டிருந்தது. அவர்களுடைய அந்த ‘அசையுரையாடல்!’ அடுத்த ஒரு இலட்சம் ஆண்டுகளில் மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது எனும் உண்மை குறித்த எந்த யூகமும் அப்போது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கவில்லை.
அதுவரை, உதயகால வெளிச்ச நேரங்களில் வேட்டையாடி, பொழுது வீழ்ந்ததும் மரங்களிலும் குகைகளிலும் பாறை வெடிப்புகளுக்கு இடையேயும் கூட்டமாக/ தனித்து ஒடுங்கி, உயிர் பிழைத்திருந்த மனித முன்னோடிகளின் நீண்டகால ‘ரிதம்’ நெருப்பைக் கையாளத் துவங்கிய நாளில் முதன்முதலாகத் தடம்புரளத் துவங்கியது. தங்களது எல்லா வழக்கமான நடைமுறைகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டு, புதிய விதிமுறைகளில் பொருந்திக்கொள்ளவும், புதிய சூழலியல் அசைவுகளை எதிர்கொள்ளவும் அவர்கள் முன்வரத் தொடங்கினார்கள். (அதேநேரம், மனித இனத்தின் அனைத்து முன்னோடிக் குழுக்களும் இவ்வாறாக நெருப்பின் அறிமுகம் ஒரே காலத்தில் ஏற்பட்டிருக்கவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.)
நெருப்பின் ஆற்றலைப் பயன்படுத்தத் தெரிந்த ’சந்ததிகள்’ படிப்படியாக உணவுச் சங்கிலியின் மேல்மட்டத்தை நோக்கி வேகமாக முன்னேறத் துவங்கினார்கள். அதுவரையிலும் பனிப்பாலைகளில் வசித்த சில குழுவினருக்கு மட்டுமே இயற்கைவழி வாய்ப்பாக, பதப்படுத்தப்பட்ட இரையும் உணவும் கிடைத்துக் கொண்டிருந்த சூழலில், நெருப்பின் மூலமாகச் சமைத்து உருவாக்கப்பட்ட உணவு, வேட்டை நிகழாக் காலங்களிலும் உயிர்ப் பிழைத்திருக்கச் செய்யும் அரும்வாய்ப்பை அக்குழுவினர்களுக்கு வழங்கியது.
புதிய நிலத்தில்..
முதன்முதலில் நெருப்பு கூட்டிச் சமைத்த இறைச்சி, கிழங்குகள் அல்லது மெல்லுடலி ஆகிய வேகவைக்கப்பட்ட இரை மனித முன்னோடிகளது தாடையிலும் செரிமான உறுப்புகளிலும் மாற்றங்களை பின்வந்த நாட்களில் ஏற்படுத்தின. அவர்களின் குடல் திசுக்களின் நீளம் அபரிமிதமாகக் குறைந்தது. உணவு உண்ண எடுத்துக் கொள்ளும் நேரமும், செரிமான நேரமும், உடலியக்க ஆற்றலும் மிச்சமானது. நெருப்பினால் பதப்படுத்தப்பட்ட உணவு அவர்களது பசித்தலையும் காலத்தைச் சுருக்கி, உணவுத் தேடலின் நீண்ட அலைச்சலைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. எஞ்சியிருந்த நேரங்களில் அவர்கள் கலை முதலான காரியங்களில் ஈடுபடத் துவங்கினர்.
வேட்டை ஆயுதங்களை நவீனமாக்குதல், பாறைக் கீறல்கள், கரிச்சித்திர ஓவியங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்கள். ஓசைகளைக் கவனித்துப் பிரித்தறியும் திறனும், சிந்தனைகளின் துவக்கப் புள்ளியும் அவர்களது குழுவினரிடையே பெரும் மாற்றங்களை உண்டாக்கினது. மிக முக்கியமாகக் காப்பு நடவடிக்கைகளினால் உயிர்ப் பிழைத்திருத்தல் சதவிகிதம் மிகக்குறைந்த அளவில் அதிகரிக்கத் துவங்கியிருந்தது. இச்சந்ததிப் பெருக்கம் உணவுத்தேவையையும், இடப் பற்றாக்குறைகளைச் சீராக்கும் நடவடிக்கைகளை அவசியமாக்கின. முன் பின் அறிமுகம் இல்லாத நிலங்களுக்குள் மனித முன்னோடிகளைவிட சற்று வித்தியாசமான உடலமைப்பு கொண்டிருந்த அந்தப் புதிய குழுவினர் இடம்பெயரத் தொடங்கினர்.
“நெருப்பு உருவாக்கும் கழிகள்/ கற்களுடன், ஊசிகள், நார்கள், மரத்துண்டுகள், அவர்கள் உருவாக்கின கலைப் பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களுடன்‘’ கூட்டமாக நிகழ்ந்தது இந்த இடப்பெயர்வு. அவ்வாறு தாங்கள் கண்டடைந்த புதிய நிலத்தின் உணவு மண்டலத்தைப் போரிட்டும், அரிதான சமயங்களில் மிக எளிமையாகவும் கைப்பற்றினார்கள். அப்புதிய சூழலில் அவர்கள் எதிர்கொண்ட பெரிய உடல் கொண்ட பாலூட்டிகள் முதல் சின்னப் பூச்சிகள், மெல்லுடலிகள், மரங்கள், தாவரங்கள், மண், மலை, காடுகள், வெள்ளம், கடல், காலம், வானிலை ஆகிய அனைத்தையும் குறித்த புதிய கற்பிதங்களைத் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அவற்றுள் எவை தங்களுக்கு உதவும் எவை தங்களைக் கொல்லும் எனும் சாதக பாதக அம்சங்களைப் பகுத்துணரும் அவசியமும் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.
இந்தப் பகுத்துணர்வுத் தன்மை அலைகுடி-நிலைகுடி என இருவகை வாழ்க்கை முறைகளைக் கொண்ட குழுவினரிடையே வேறுவேறு தாக்கங்களை உருவாக்கியது. நிலைகுடிகள் ஆபத்தானவற்றைக் கூட்டுசேர்ந்து எதிர்த்து அழித்து, அதே இடங்களில் குழுவாகத் தாங்கள் வாழத் தலைப்பட்டார்கள். அலைகுடிகள் பலசமயம் அவற்றிடமிருந்து விலகித் தங்களைத் தற்காத்துக் கொள்ளவே பெருமளவு முயன்றார்கள்.
இருளைக் கேட்ட காதுகள்
தாங்கள் ஏற்கனவே அறிந்திருந்த தகவமைப்பு விதிகளுக்கு அப்பாற்பட்டு, இருளின் எந்தவோர் சின்ன அசைவையும் அச்சத்துடனே எதிர்கொண்டு வந்த மனித முன்னோடிகளுக்கும், நெருப்பு பயன்பாட்டின் மூலம் புதிய பகுத்துணர் திறனை வளர்த்துக் கொண்ட முதல்நிலை மனிதப் பிரிவினருக்கும் வெளிப்படையான வேறுபாடுகள் தெரியத் துவங்கின. நெருப்பின் ஆகிருதி எப்போதும் தங்களைக் காக்கும் என ஒரு சாரரும், எதிரிகள் கையிலுள்ள, ஒளிரும் ஓர் வினோத ஆயுதம் தங்களை எந்நேரமும் கொல்லக் கூடும் என மறுசாரரும் நம்பத் தலைபட்டனர்.
மனிதர்கள் தங்கள் பண்டைய வாழ்நாளில் பெரும்பாலான நேரம் பசி-பிழைத்திருத்தல், இடப்பெயர்வு-கண்டடைதல், அச்சம்-தற்காத்தல் அல்லது எதிர்கொள்ளல் ஆகிய இருமைகள் குறித்தே அதிகம் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. இயற்கைச் சூழலும் இருள்-வெளிச்சம் ஆகிய இரு முக்கிய பிரபஞ்ச விளைவுகளும் தினம் தினம் அவர்களோடு கண்ணாமூச்சி விளையாடியது. இருளின் புலப்படாத தன்மையும் ஆபத்துணர்வும் அவர்களுடைய பயச் சிந்தனையைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தன.
அச்சமயங்களில் நெருப்பின் ஆற்றலால் கிடைக்கும் வெளிச்சமும் பயனும் அவர்களுக்கு அச்சமறுக்கும் ஆயுதம் ஒன்றைக் கைக்கொண்டிருக்கும் கிளர்ச்சியைத் தந்தது. இதனால் குளிர், மழை, வெள்ளம், இடி, மின்னல், விலங்குகள், தாவரங்கள் எனத் தங்களைச் சூழ்ந்துள்ள மற்ற எவற்றைவிடவும், அவர்களது பண்டைய விலங்கு மனத்திற்குள் புதைந்துக் கிடந்த அச்ச உணர்வில் இருந்து விடுதலை அளித்த பேரொளியான நெருப்பின் மீதான தொடர்ச்சியான கற்பனைகள் மனித மனங்களுக்குள் கிளர்ந்துக் கொண்டே இருந்தன. அக்கற்பனைகளை அவர்கள் வெளிப்படுத்தத் துவங்கியபோதே அவர்களது கதைசொல்லிப் பண்பாடும் உருவெடுக்கத் துவங்கியது.
அக்கதைகளின் வழியாகக் கண்ணுக்குப் புலப்படாமல் தம்மைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்களும், தங்கள் சுற்றுப்புறத்தில் ஏற்பட்ட மாயாவாத நிகழ்வுகளும், (நீர்- நெருப்பு- இடி-மின்னல்-பொருள்கள்-விலங்குகள்) தவிர்த்து வேறு பல ஆற்றல்களும் உண்டு எனவும், அவை தங்களைக் காக்கவும் அழிக்கவும் கூடும் என்றும் அவற்றை வழிபடுவதன் மூலம் உயிர்ப் பிழைக்கலாம் என்றும் நம்பகங்கள் உண்டாகின. இதுவே, பின்னாளில் ஆவி வழிபாடு எனும் Animism தோன்றக் காரணமாக அமைந்தது. மேலும், இறப்பிற்குப் பின்பான கற்பனைகளிலிருந்து ஆவி வழிபாட்டின் மற்றொரு வகையான Spiritism-மும் தோன்றியது.
மாய சக்திகளாலும், இயற்கையைக் கடந்த ஆவிகளாலும் மனித இனம் காக்கப்படுகிறது என்ற எண்ணங்கள் வலுவுற உயிர்- இறப்பு- ஆவி- ஆன்மா- பேய்கள் ஆகியவை குறித்த அச்சமும் – நம்பிக்கையும் பொதுவான அம்சங்களாக இருந்தன. எனவே எவ்விதத் தடைகளுமின்றி பேய்-தெய்வம் ஆகிய இருநிலைகளின் இருப்பு காலத்துக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகிப் பெருகி வளர்ந்தது.
அச்சம் தீர்த்த தாய்
உலக நாட்டார் கதைகள் பலவும் ’நெருப்பை’ உண்டாக்கும் ஆற்றல் பெண்களிடமே இருந்தது என்கின்றன. அவர்களுக்கே முதன்முதலில் சூழலைக் கட்டுப்படுத்தும் மந்திர சக்திகளும் அளிக்கப்பட்டிருந்தன. மங்கோலியப் புராணங்களில் பெண்கள் நோய் தீர்க்கும் மருத்துவர்களாக வருகிறார்கள். அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தோனேஷியா, சைபீரியா மற்றும் இந்தியப் பழங்குடிக் கதைகளில் பெண்கள் மந்திரவாதிகளாகத் தோன்றுகிறார்கள். அவர்களே சூனியக்காரர்களாகவும் அறியப்பட்டிருந்தார்கள். செயற்கையாக நெருப்பை உண்டாக்கும் வல்லமையை அவர்கள் தங்கள் உடலுக்குள் மறைத்து வைத்திருப்பதாக நம்பப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் தலைமைத்துவம் கொண்டவராகவும், சமூகத்தின் ஆற்றல் வாய்ந்த இயற்கைக் கூறுகளுக்கும், செழிப்புக்கும், ஒரே சமயத்தில் தாயாகவும், நிலைமாறாக் கன்னியாகவும், அச்சத்தை விளைவிக்கும் காண்பதற்கரிய ஆற்றல்களுக்கும், கற்பனைகளுக்கும் பெண் தன்மையே அடையாளமாகக் கொள்ளப்பட்டது. உலகை உருவாக்கிய மூலப் பெண் தெய்வங்களாகக் கருதப்படும் மெசபடோமிய தியாமட் (Tiamat) எனும் ஐந்துதலை பெண் டிராகனும், சுமேரியர்களின் யூரினோம் (Eurynome) தேவதையும், தமிழர்களின் பூதேவியும் (Bhudevi) இவ்வாறு உருவானவர்களே.
இதேபோல உலகளவில், எகிப்தியர்களின் ஐசிஸ் (Isis), அகேடியரின் இஸ்தர் (Ishtar), ரோமர்களின் மாயா (Maia), மெக்ஸிகரின் கோட்லிகுவா (Coatlicue), பெரு நாட்டினரின் பச்சமமா (Pachamama), பினீசியர்களின் ஆஸ்ட்ரோன் (Astronoë), ஜெர்மனியர்களின் ஆஸ்ட்ரா (Austrō), இக்போக்களின் ஆருஷி (Arusi), ஜப்பானியர்களின் கிசியோடென் (Kichijōten), பாலஸ்தீனர்களின் அஸ்டார்ட் (Astarte) போன்ற தாய்த்தெய்வங்கள் அந்தந்த இனக்குழுவின் வணக்குத்திற்குரிய பெண் தாய்த் தெய்வங்களாகப் போற்றப்பட்டனர்.
இன்னொரு பக்கம், தமிழ்ச் சங்க இலக்கியங்களில் வரும் பேய்மகளிர், அராபிய வினோத பூதங்கள் (Genies) ஸ்காண்டி நேவிய குறும்பூதங்கள் (Trolls) இந்திய தேவதைகள் (Sprits) வட ஜெர்மானிய சிறுதேவதைகள் (Elves) தென்மேற்கு இங்கிலாந்தின் குறுந்தேவதைகள் (Pixies) ஐரிஷ் நாட்டு பூதங்கள் (Lepreshanuns) கிரேக்கத் தேவதைகள் (Angels) உலகத் தேவதைகள் (Fairies) பூதங்கள் (Demons) கொடும்பேய்கள் (Devils) எனத் தீநிலைக் குறியீடுகளாகவும் பெண்தன்மை உருவகப்படுத்தப்பட்டிருந்தது.
சங்க இலக்கியங்களில் காணப்படும் சூலி, சூர்மகள், வரையறை மகளிர், கடல்கெழு செல்வி, கானமர் செல்வி, பாவை, அணங்கு போன்ற பேய்த் தெய்வங்களை இந்த இருநிலைகளின் கலவைகளாகக் கொள்ளலாம். அதேசமயம், புத்த ஜாதகக் கதைகள், “பேய்களுக்கு நிழல் கிடையாது; நிழலற்றிருப்பது கடவுள் பண்பு” எனவே பேய்கள் மனித இனத்திற்கே சம்பந்தமற்ற ஒன்று என வலியுறுத்தின. இவ்வாறாக இந்திய நிலம் முழுக்க பேய்கள்-கடவுளர்-மானுடம் ஆகிய முப்பரிமாணம் குறித்துப் பல்வேறு விதமான நம்பிக்கைகளும், கதைகளும் எழுந்திருந்தன.
நல்லை அல்லை
தெய்வம் மற்றும் பேய்களில் பெண் தன்மையை முன்னிலைப்படுத்தியது போல ஆண்மையச் சிந்தனைகளும் பின்னாளில் உருவாகத் துவங்கின. இந்தியப் புராணங்களின்படி, பேய்கள் கடவுள்களுக்கு மூத்த சகோதரர்கள். பெரும் செல்வத்திற்காக இருசாரரும் போரிட்டபோது, பேய்களை வென்று கடவுளர் சொர்க்கம் சென்றுவிட்டனர். அங்கிருந்து அவர்கள் தங்களை நன்மைக்கும் பேய்களைத் தீமைக்கும் அதிபதிகளாக அறிவித்துக்கொண்டார்கள். “மக்களுந் தேவரும் பிரமரு நரகரும்; தொக்க விலங்கும் பேயு மென்றே; நல்வினை தீவினை யென்றிரு வகையாற்’ எனத் தீவினையாளர்களே பேய்களாகப் பிறக்கிறார்கள் என்கிறது பௌத்த காப்பியமான மணிமேகலை.
நம் கண்களால் பார்க்க முடியாத, அபார பலம் படைத்த கெட்ட தூதர்களே பேய்கள் என்றும், அவர்கள் கடவுளின் மகன்கள் என்றும் (ஆதியாகமம் 6:2), தேவதூதர்கள் (யூதா: 6) என்றும் விவிலியம் குறிப்பிடுகிறது. நோவா காலத்தில், பேய்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் எதிரிகளாகி, யெகோவாவுக்கு விரோதமாக நடந்த சாத்தானின் கலகங்களில் கூட்டுச் சேர்ந்துகொண்டன என்றும் மேலும் சில பேய்க் குறிப்புகள் விவிலியத்தில் உண்டு. (லூக்கா 8:30; அப்போஸ்தலர் 16:16; யாக்கோபு 2:19)
இவற்றின்படி பெண்-ஆண் எனும் பால் பேதம் கடந்து நன்மை-தீமை எனும் இருமையே பேய்கள் விஷயத்தில் முக்கியத்துவம் பெற்றது. சங்க இலக்கியங்களில் காணப்படும் சூலி, சூர்மகள், வரையறை மகளிர், கடல்கெழு செல்வி, கானமர் செல்வி, பாவை, அணங்கு போன்ற பேய்த் தெய்வங்களை இந்த இருநிலைகளின் கலவைகளாகக் கொள்ளலாம். அதேசமயம், புத்த ஜாதகக் கதைகள், “பேய்களுக்கு நிழல் கிடையாது; நிழலற்றிருப்பது கடவுள் பண்பு” எனவே பேய்கள் மனித இனத்திற்கே சம்பந்தமற்ற ஒன்று என வலியுறுத்தின.
இவ்வாறாக இந்திய நிலம் முழுக்க பேய்கள்-கடவுளர்-மனிதர்கள் ஆகிய முப்பரிமாணம் குறித்துப் பல்வேறு விதமான நம்பிக்கைகளும், கதைகளும், வழிபாடுகளும், சடங்குகளும் அவற்றினை அடிவாரமாகக் கொண்டு மதங்களும் தோன்றியிருந்தன.
மரணத்தின் கால்கள்
மனிதர்களில் தன் வாழ்நாள் முற்றுப்பெறும் முன்னே மரணத்தைத் தழுவியவர்கள் மீதமுள்ள காலம் வரைக்கும் பேயாகத் திரிவார்கள் என்றும், அச்சமயங்களில் பிறருக்குத் தீமையும், நன்மையும் செய்வார்கள் என்ற நம்பிக்கை வலுப்பட்டிருந்தது. சமண மகாவீரரும், பௌத்த கௌதமரும், வைணவ ஆண்டாளும், கிறிஸ்தவ இயேசுவும், இஸ்லாமிய நபியும், சீக்கிய குருநானக்கும், அய்யாவழி வைகுண்டரும், கேரள நாராயணகுருவும் தங்கள் உலக வாழ்க்கை பூர்த்தியடைந்து தெய்வ நிலையை எய்தியவர்களாகக் கருதப்படுகிறவர்கள்.
அவர்கள் போலவே சங்க இலக்கியங்களில் வரும், அணங்கு, சூரரமகளிர், இயக்கர், இயக்கிகள், அழன், அலகை, அள்ளை, இருள், கடி, கழுது, கருப்பு, காற்று, காற்றேரி, தூர்த்தேறி, குணங்கு, கணம், குணபம், கூளி, குறளி, சவம், சாவு, சாரதம், சாதகம், சோவு, பசாசு, பிசாசு, பாசம், பாரிடம், மருள், மண்ணை, மயல், முனி, பூதன், கிருத்திமம், மகோதரம், வெறி, வியந்தரம், நீலி ஆகியோருக்கும் வேறுபல பின்கதைச் சுருக்கங்கள் உண்டு.
சமணத் தத்துவ காவியமான நீலகேசியில் வரும் நீலி என்ற பெண் பேய், காரைக்கால் அம்மையார் சிவனோடு இணைத்துப் பாடும் கூளிக் கணங்கள் எனும் ஆண்பேய்கள், சிலம்பு தேவராட்டியான முதுவாய்ச் சாலினி, மாலிருஞ்சோலை மலையில் வசிக்கும் வனசாரினி, இடாகினி எனப் பால்பேதமின்றி தென்னிலத்து இலக்கியங்களிலும் தத்துவங்களிலும் பண்பாட்டிலும் சடங்குகளிலும் இடம்பெறும் துர்தேவதைகளும், பேய்களும், அவர்களில் நன்மை செய்யும் பேய்நிலைத் தெய்வங்களும் வேறுபல பின்புலங்களைக் கொண்டிருந்தார்கள்.
தெய்வம்-பேய் இருவருமே வீரநிலை வழிபாட்டுடன் அதிகம் தொடர்பு கொண்டிருப்பர்கள் என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது. பண்டைத் தமிழினப் போர்த் தெய்வமான கொற்றவையை நேரடியாக வழிபடுவதற்கும், அதே போர்களில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக நடப்படும் ‘நடுகல்’ வழிபாட்டுக்கும் அடிப்படையாகவே இருந்த வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளும்போது, தெய்வம்-மனிதன்-தெய்வநிலை; மனிதன்-பேய்-பேய்நிலைத் தெய்வம் என்ற இருவிதமான சங்கிலிப் பிணைப்பையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.
பேய்த்தனம்
மனித மனம் காலகாலமாக மரணத்திற்குப் பிறகான ‘நிகழ்வைக்’ குறித்த அச்சத்தால் உள்ளூர உறைந்திருக்கிறது. இறந்த பிறகு அடையும் உயர்நிலை குறித்த தீவிரமான வேட்கையுடன் மனித மனம் நீண்ட நெடுங்காலமாக பெரும் உரையாடலை மேற்கொண்டு வருகிறது. வரலாறு நெடுகிலும் மதங்களும், பிற சித்தாந்தங்களும் மனித வாழ்க்கையைப் புனிதமாக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும், உயிர் துறந்த பிறகு அடையும் அமைதி அல்லது உயர்பதவி ஆகியவையே புனிதத் தன்மையோடு கூடிய அதியுன்னதக் கற்பனைகளாக அறிவிக்கப்படுகின்றன.
பண்டைய தமிழர்களின் நடுகற்கள், மட்தாழிகள், மெசபடோமியரின் சிக்குரத்துகள், எகிப்தியரின் பிரமீடுகள், அமீரகரின் உம் அல்நார் கிணறுகள், சீனர்களின் சுடுமண் வீரர்கள் குழி, சோழர் பள்ளிப்படைகள், மாவீரர் துயில் இல்லங்கள் எனக் கிறிஸ்தவர்களின் கல்லறையிலிருந்து தலைவர்களின் சமாதிகள் வரைக்கும் இந்த உண்மையைதான் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
இறப்புச் சடங்குகளை மேற்கொள்ளும் வெட்டியானுக்கும், கிறிஸ்தவ பாதிரியாருக்கும், யூத குருவுக்கும், ஷாமன்களுக்கும், பிக்குகளுக்கும் ஜெப மந்திரங்கள் வேன்டுமானால் வேறுவேறாக இருக்கலாம். அவர்களது இலக்கு ஒரே திசையிலே மனித மனத்தைக் கட்டுவிக்கிறது. அது இறந்தோரை தெய்வ நிலைக்குச் சாந்திப்படுத்துவது அல்லது பேய்த் தன்மையைக் கட்டுப்படுத்துவது.
தமிழில் பேய் என்கிற சொல் அஞ்சுதல், அச்சுறுத்துதல் என்ற பொருள் கொண்டே உருவானது. “பேஎம் நாம் உரும் என வரூஉங் கிளவி; ஆமுறை மூன்றும் அச்சப் பொருள” என்கிறது தொல்காப்பியம். அச்சமூட்டும் இறந்த மனிதர்களின் ஆன்மா பல திக்குகளிலும் அலைந்து மக்களுக்குச் சொல்ல முடியாத தீமைகளைச் செய்வதாகக் கருதியதால் அவற்றிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும், தாம் இறந்த பிறகு பேய் நிலை அன்றி தெய்வ நிலை அடையவும் விரும்பிய போது, நன்மை தீமை இருமைகள் ஒழிந்து மேல்நிலை-கீழ்நிலைத் தெய்வங்கள் அளவின்றி பெருகியது.
பரிணாம அச்சு
மனித இனம் நாகரிகம் கொண்ட உழுகுடிச் சமூகமாக உருவாகத் துவங்கி ஏறத்தாழ 12ஆயிரம் ஆண்டுகளையும், கடவுள் மற்றும் மதக் கோட்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு 5 ஆயிரம் ஆண்டுகளையும், அவற்றை மறுதலிக்கும் அல்லது பயன்படுத்திக் கொள்ளும் அறிவியல் தொழில்நுட்பங்கள் உருவாகத் துவங்கி ஏறத்தாழ 500 ஆண்டுகளையும் கடந்துவிட்டோம். இக்காலக்கோட்டுச் சித்திரத்துக்குள் மனிதகுலம் பயணித்து வந்துள்ள தொலைவு வியப்பளிக்கக் கூடியது. இந்த நெடும்பயணத்தில் தனது பண்டைய ஞாபகங்களின் எச்சங்களை எப்போதும் தன் தலைக்குமேல் சுமந்துகொண்டே அலைகிறது. நவீனங்களோடு வாழும் இன்றைய காலகட்டத்திலும் இந்ஞாபகங்கள் கதைகளின் வழியாகவும், வாய்மொழியினாலும், எழுத்திலக்கியங்கள், பக்தி, சினிமா, அரசியல், உளவியல், மதங்கள் என யாவற்றிலும் பரவிக் கிடக்கின்றன.
ஆதியில் மனிதன் மேற்கொண்டிருந்த வினைகளில் பலவும், அவனது பழைய ஞாபகங்களாக, மரபின் தொடர்ச்சியாக, நினைவின் மிச்சங்களாக அவனால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அவனது தொன்மையான பழக்கங்களின் மீதே இன்றைய அவனது ‘நவீன மனம்’ கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தினம் தினம் அவன் எதிர்கொள்ளும்/ செயல்படுத்தும் பல்வேறு அன்றாடங்கள் வரலாற்றின் நெடிய சங்கிலியைத் தன் கையில் விடாமல் பற்றியிருப்பதற்கான குறியீடு. எத்தனையோ அழித்தொழிப்புகள், அதிகார மாற்றங்கள், இடப்பெயர்வுகள், போர்கள், சாவுகள், அடிமைத்தனம், மதத் தலையீடு யாவற்றையும் கடந்த ஓர் பொதுப்பண்பினை இம்மனித இனம் தன்னுள்ளே எப்போதும் கொண்டுள்ளதை நாம் மறுக்கவியலாது.
சமநிலையற்ற இவ்வுலகில் இன்றும், ஓர் தாயோ தகப்பனோ தன் பிள்ளைகளைக் கண்டிப்பதற்காக, தன்னையும் அறியாமல் ஏதோ ஒரு அச்சமூட்டும் கதைகளையோ வினைகளையோ மேற்கொள்வதும், தனிமையில் மனிதமனம் இருட்டு குறித்த கற்பனைகளைத் தனக்குள் ஏற்படுத்திக் கொள்வதும், ‘கேண்டில் லைட்’ விருந்துகளில் கூடிக் களிப்பதன் மீதான விருப்பங்களும், சேட்டைகள் செய்தால் சூடு வைப்பதும், சண்டையின் போது கற்களைத் தேடுவதும், உயரமான இடங்களில் இருந்து எச்சில் துப்புவதும், பேயோட்டும் சடங்குகளில் நெருப்பைப் பயன்படுத்துவதும், இறந்தவர்களை நெருப்பில் எரியூட்டுவதும், விளக்கெரிக்கும் வழிபாடும் உலகளாவிய ஆதி மனம் நெருப்பின் மூலம் ஏற்படுத்திக்கொண்ட அச்சம்-நம்பிக்கை-விடுதலை ஆகிய பண்டைய ஒருங்கிணைப்பின் ஞாபகக் கொடையே.
அதேசமயம் இன்னொரு தரப்பில், இன வரலாற்றை அழிக்க நூலகங்களை எரிப்பதும், கூலி உயர்வு கேட்டவர்களைக் குடிசையோடு கொளுத்துவதும், பெண்ணைச் சதியிலிடுவதும், தியாகங்களை நிகழ்த்த தன்னைத் தீக்கிரை ஆக்கிக் கொள்வதும் நெருப்பு வரலாற்றின் முந்தைய பிந்தைய பக்கங்களில் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டே வருகின்ற பெருங்கதையே..
***
கார்த்திக் புகழேந்தி
ஆசிரியர் தொடர்புக்கு – writerpugal@gmail.com
சிறப்பு
அருமையான கட்டுரை நண்பரே! இது தொடர்ந்து வருமா?
கட்டுரையென இதை வரையறுக்க இயலாததாய் இருக்கிறது, இது மனித வரலாற்றின் ஊற்றாகவே திகழ்கிறது. சேப்பையன்ஸ் / கி.மு – கி.பி யை மீறி ஒர் உயிரோட்டம் “தீயின் விளைவாக” பாகத்தில் உள்ளது. அது நம் நாட்டார் வழக்குடன் ஒப்பாக கூறும் தெய்வங்களை வைத்தும் துர்தேவதையை மேற்கோள் காட்டுகிறது. நீங்கள் வரையறுத்த பேய்கள் குறித்தான பெயர்கள் மற்றும் தொல்காப்பியம், மணிமேகலையை ஆங்கே சுட்டியதும் மெச்சத்தக்கது; எழுத்துப் பிழைகள் தவிர்த்து இத்தொடர் பல்லாயிரம் கணக்கான வாசகர்களை கண்டடைய வல்லமையுள்ளது.