சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் – 02

3

1) அழுகின்ற பெண்கள்.

நான் பஸ்சிற்காக நின்று கொண்டிருந்தேன். சாலையில் ஒரு பெண் அழுதுக் கொண்டே சென்றாள். பஸ்ஸிற்காக  நிறைய ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். சாலையில் நடந்து செல்கிறவர்களும் வாகனங்களில் செல்பவர்களும் அவளைப்  பார்த்துக் கொண்டே சென்றார்கள். அவள் எதற்காக அழுதுக் கொண்டே செல்கிறாள். யாரும் இறந்துவிட்டார்களா. இறந்தால்தான் அழ வேண்டும் என்று இல்லை. பல காரணங்கள் உண்டு. கணவனிடம் அடி  வாங்கி அழுதுக் கொண்டே செல்லலாம். மனிதர்கள்  மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களைக் காட்டிலும் துயரமாக  இருக்கும் நேரங்கள்தானே அதிகம். நான் பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று சிகரெட் வாங்கி வைத்துக் கொண்டேன்.  பஸ் வந்தது. பஸ்ஸில் ஏறினேன். பஸ்ஸில் அவள் உட்கார்ந்திருந்தாள். அழுதுக் கொண்டிருந்தாள். பஸ்ஸில் கண்டக்டர் டிக்கெட்  கொடுத்துக் கொண்டிருந்தார். பஸ்ஸில் இருந்தவர்கள் அனைவரும் அவரவர் எண்ணங்களுடன் உட்கார்ந்திருந்தார்கள். ஆட்கள் பஸ்ஸில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள். கடைசி நிறுத்தம் வந்தது. 

அவள் அழுதுகொண்டே இறங்கினாள். நானும் இறங்கினேன். எதிரே இருந்த சர்ச்சினுள் நுழைந்தாள். நானும் நுழைந்தேன். அவள் மண்டியிட்டு கண் மூடி அழுது கொண்டிருந்தாள். நான் வேறொரு பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்தேன். எனக்குப் பழக்கம் இல்லாததால் மண்டியிடுவது சிரமமாக இருந்தது. அவளுக்கு என்ன துயரம் இருக்கக்கூடும். என்ன நிவாரணம் கேட்டுப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டிருக்கிறாள் என்பது அவளைத் தவிர யாருக்கும் தெரியாது. என்னுடைய கற்பனையில் வாழ்க்கையில் அவள் ஆதரவற்ற நிலையில் இருக்கிறாள் அல்லது ஒருவருடைய உடல் நலப்   பிரச்சினை காரணமாக இருக்கும் என்று தோன்றியது. அவள் திடீரென்று   கதறிக்  கதறி  அழுதாள். அழுகை நின்றது. கண்களைத் துடைத்துக் கொண்டாள். சர்ச்சை விட்டு வெளியேறும்போது மீண்டும் அழுதாள். அழுதுகொண்டே அந்தப் பக்கம் வந்த பஸ்சை நிறுத்தி ஏறினாள்.அவரவர்க்கு அவரவர் வேலை. நான் என் வேலையைப் பார்க்கக் கிளம்பினேன்.

*

2) மச்சம்

அவனுடைய மனைவி உதட்டிற்குக் கீழே ஒரு மச்சம் வைத்துக்கொள்வாள். ‘எதற்காக’ என்று அவன் கேட்கும் போது ‘அழகுக்காக’ என்பாள். அவனுக்கு எரிச்சலாக இருக்கும். திருமணமான ஒரு மாத காலத்திலேயே அவர்களுக்குள் இது தொடர்பாக சண்டை வந்துவிட்டது. ஆனால் அவள் விட்டுக் கொடுப்பதாக இல்லை. விவாகரத்து செய்து கொள்வோம் என்று கூடப் பேசிப் பார்த்துவிட்டான். ‘நான் எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்’ என்று சண்டைக்கு வருவாள். ஆனால் மச்சம் வைப்பதை நிறுத்தமாட்டாள். தன்னுடைய பிரச்சினையை  வெளியே சொல்வதற்கு அவனுக்கு சங்கோஜமாக இருக்கிறது. ஆனாலும் ஒரு நண்பனிடம் சொன்னான். மச்சம் அழகாகத்தான் இருக்கிறது என்று அவன் சொல்லி விட்டான்.  மனநல மருத்துவரிடம் அவளைக் கூட்டிச் செல்லலாம் என்று கூட அவனுக்குத் தோன்றியது. அவளிடம் இதைச் சொன்னாலே பெரும் சண்டை வந்துவிடும். 

பிறகு அவனே மன நல மருத்துவரிடம் சென்றான். ‘ஏன் மச்சம் இருந்தால் என்ன.  மச்சம் நன்றாகத்தானே இருக்கும்’ என்றார்  அந்த மருத்துவர். ‘அவள் மச்சம் வைத்துக்  கொள்வதை விட மாட்டேன் என்கிறாள். ஆனால் என் மனதுக்கு அது  பிரச்சினையாக இருக்கிறது. என் மனதில் ஏதோ  கோளாறு இருக்கிறது. என்ன  என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள்தான் என் மனக்கோளாறை  சரி செய்ய வேண்டும்’ என்று மருத்துவரிடம் கூறினான். அவனை அவர் விநோதமாகப் பார்த்தார். பிறகு ‘முகத்தில் மச்சம் உள்ள யாராவது உங்களை பாதித்து இருக்கிறார்களா’ என்று கேட்டார். யோசித்துப் பார்த்துவிட்டு ‘அப்படி யாரும் இல்லை டாக்டர்’ என்றான்.

‘உங்கள் மனக்குழப்பத்திற்கு மாத்திரை தருகிறேன். அடுத்த வாரம் வாங்க’ என்றார். வீட்டிற்கு வந்துவிட்டான்.

இரண்டு நாட்கள் கழித்து அவள் மச்சம் வைத்துக் கொள்ளாமலிருந்ததை பார்த்தான்.  அவன் அது பற்றிக் கேட்டபோது ‘மச்சத்திற்க்காக நாம் ஏன் சண்டை போட்டுக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. விட்டுவிட்டேன்’ என்றாள்.  இப்போது அவனுக்கு, அவள் மச்சத்தோடு இருக்கும்போதுதான் அழகாக இருந்ததாகத் தோன்றியது.

***

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here