பெருந்தேவி
“எப்போதோ நடந்ததைப் போலிருக்கிறது” என்றாள் சுகந்தா. ஒரு பெரிய கதையைச் சொல்லப் போகிறாள் என்று புரிந்தது. இளமாலையின் பொன்வெயில் வெளியே சொரிந்திருந்தது. மேசையை அடுத்திருந்த பெரிய கண்ணாடி வழியாகப் பார்க்க, சருகுக் குவியல்களிலிருந்து நிமிர்ந்து நின்றது நாகலிங்க மரம். சுகந்தா பள்ளியில் என்னுடன் படித்தவள். இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு ஃபேஸ்புக் வழியாகக் கண்டுபிடித்துக்கொண்டோம். நட்பைப் புதுப்பித்தோம். பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள பல கதைகள் இருந்தன. தென்சென்னைப் பகுதியில் சில மரங்களுக்கும் தொட்டிச் செடிகளுக்கும் நடுவே அழகான சிமிழ் போலத் துலங்கியிருந்த சிறிய காபி டே கஃபேயில் வாரம் ஒரு முறை சந்திக்கத் தொடங்கியிருந்தோம்.
அன்று சந்தித்தபோது எங்களுக்கு காபுசினோ ஆர்டர் செய்தோம். அதன் பின் சுகந்தா தன் பயண அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொண்டாள். புனைவை விட விசித்திரமான ஒன்று. பத்தாண்டுகளுக்கு முன்பு, அவள் அமெரிக்காவில் முனைவர் பட்டத்துக்கான படிப்பை முடிக்கும்போது, கேப் டவுனில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் பண்பாட்டு மானுடவியல் துறையில் பேராசிரியர் வேலைக்கான நேர்காணலுக்குச் சென்றிருக்கிறாள். பல்கலைக்கழகம் போல் இயங்கக்கூடிய பெரிய கல்லூரி அது. தென் ஆப்பிரிக்கா அவளுக்குப் பரிச்சயமில்லாத நாடு என்பதால் விமான நிலையத்திலிருந்து அவளை அழைத்துச் செல்ல, அந்தக் கல்லூரியிலிருந்து பேராசியர் ஜான் லிவிங்ஸ்டன் என்பவர் வந்திருக்கிறார். “லிவிங்ஸ்டன் ஒரு வினோதமான ஆசாமி, மத்தியக் கிழக்கின் பண்பாட்டை ஆய்வு செய்பவர் அவர்” என்று கேப் டவுன் யாத்திரையை விவரிக்கத் தொடங்கினாள் சுகந்தா.
“வெள்ளைக்காரர் நல்ல பருமன். வழுக்கைத் தலை. சிறிய சிவப்புப் புள்ளிகள் அங்கங்கே தெளித்த முகம். குடமிளகாய் மூக்கு. கோட் சூட்டோடு விமான நிலையத்துக்கு வந்திருந்தவர் எனக்கு முகமன் கூறி வரவேற்றார். நான் தங்கவேண்டிய ஓட்டலில் என்னைக் கொண்டுபோய் விடுவதற்கு முன் ‘மன்னித்துக் கொள்ளுங்கள், நாம் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு முதலில் சென்றுவிட்டு ஓட்டலுக்குப் போவோம்’ என்றார்.
கேப் டவுன் மையப்பகுதியில் அமைந்திருந்த பெரிய சூப்பர் மார்க்கெட் அது. ‘நீங்களும் உள்ளே வாங்களேன்,’ என்றதால் கூடச் சென்றேன். ஒரு டஜன் tampon பாக்கெட்களை அவர் வாங்கினார். பில் கவுண்டரில் கார்டைக் கொடுத்துவிட்டு என்னிடம் ‘என் மகளுக்காக’ என்று தெரிவித்தார். எனக்கு அவசியமில்லாத தகவல் அது. வெளியே வந்து காரில் ஏறினோம். கிளம்பும்போது அவருக்கு அலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏனோ ஸ்பீக்கரில் போட்டார்: ‘டார்லிங், நான் கேட்டதை வாங்கிவிட்டாயா?,’ ‘டார்லிங், அந்தப் பெண் வந்து இறங்கிவிட்டாளா?,’ ‘டார்லிங், அவளோடு சாப்பிடப் போகிறாயா?,’ ’டார்லிங், அவள் பார்க்க எப்படி இருக்கிறாள்?,’ ‘டார்லிங், என்னால் தனியாக இருக்க முடியாது, சீக்கிரம் வந்துவிடு.’ இப்படி இன்னும் இருபத்தைந்து டார்லிங்குகள். பேசி முடித்தவுடன், ‘என் மகள், அவளுக்குப் பதினைந்து வயது’ என்று சாவகாசமாகக் காரைக் கிளப்பினார். எதற்கு என்னைப் பற்றி அந்தப் பெண் விசாரித்தாள் என்று புரியவில்லை. அதிகாரம் செறிந்த குரல் அந்தப் பெண்ணுக்கு. ஆங்கிலத்தில் அவள் ‘she’ என்ற போதெல்லாம் ‘அவள்’ என்றே எனக்குத் தொனித்தது. பதினைந்து வயதுப் பெண்ணின் குரலாக அது இல்லை. அவரை அவள் ஆட்டுவிக்கக் கூடியவள் என்று எனக்குத் தோன்றியது.
கேப் டவுனில் நான் தங்கியிருந்த நாட்களில், ஓட்டலிலிருந்து கல்லூரிக்கும் கல்லூரியிலிருந்து ஓட்டலுக்கும் லிவிங்ஸ்டன்தான் என்னை அழைத்துச் சென்றார். தவிர, என்னை இரவு உணவுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பும் அவருக்குத் தரப்பட்டிருந்தது. அவருடன் நான் சென்றபோதெல்லாம் அவருக்கும் அவர் மகளுக்குமான சம்பாஷணைகளைக் கேட்க வேண்டியிருந்தது. எல்லா அழைப்புகளையும் அவர் ஸ்பீக்கரில்தான் போட்டுப் பேசினார். குறைந்தது ஆயிரம் டார்லிங்குகளையாவது நான் கேட்டிருப்பேன்.
இரண்டாவது நாள் அவரோடு இரவு உணவுக்குச் சென்றபோது தன் மகளைப் பற்றிய சில தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவருடைய வளர்ப்பு மகள் அவள் என்று தெரிவித்தார். அவளுக்குப் பதினாறு மொழிகள் நன்றாக எழுதப் படிக்கத் தெரியும், அனாயாசமாக ஏழெட்டு வாத்தியங்களை அவளால் வாசிக்க முடியும் என்று குரலில் பெருமை பொங்கச் சொன்னார். ‘வாசித்தல் என்றால் சும்மா வீட்டினர் மட்டும் கேட்கும் வகையில் அல்ல. அவளால் எந்தத் தயாரிப்புமில்லாமல் பெரிய இசைக் கச்சேரிகளை நிகழ்த்திவிட முடியும். விளையாட்டுகளில் அவள் திறமைசாலி. ஓட்டப் பந்தயங்களில் எப்போதும் முதலிடத்தில் வருபவள். சதுரங்கத்தில் அவளை யாரும் ஜெயிக்க முடியாது. ஒரு முறை அவளுடைய IQவை ஒரு பிரபலப் பல்கலைக் கழகத்திலிருந்து சோதித்துப் பார்த்தார்கள். அவளைச் சோதித்த கணினியே உடைந்து ரிப்பேர் ஆகிவிட்டது,’ என்றபோது அவர் விழிகள் பளபளத்தன. ‘உங்களிடம் சொல்வதற்கென்ன, அவள் இந்த உலகத்தவளா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. கணிதத்தில் முதுகலைப் பட்ட வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கே அவளால் கற்றுத்தர முடியும். இரண்டு வருடங்களுக்கு முன்பு செமஸ்டர் முடியும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு கணிதப் பேராசிரியருக்கு சில வாரங்கள் வகுப்பு எடுக்க முடியாமல் போனது. அவர் என் நெருங்கிய நண்பர். என் மகளை அழைத்து பாடங்களை நடத்தி முடிக்க வைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது அவளுக்கு பதின்மூன்று வயதுதான். ஆனால் ஒன்று, இந்த ஏற்பாடெல்லாம் எங்கள் கல்லூரிக்குத் தெரியாது’ என்று கூறினார்.
நீயே சொல், இதெல்லாம் நடக்கக் கூடியதா என்ன. அதுவும் ஒரு பெரிய கல்லூரியில். ஒருவேளை லிவிங்ஸ்டன் கிறுக்காக இருக்க வேண்டும். அல்லது மனப் பிரமையில் மூழ்குபவராக இருக்க வேண்டும். தவிர, இவர் ஏன் தன் மகளைப் பற்றி என்னிடம் விடாமல் பேசிக்கொண்டிருக்கிறார் என்று எனக்கு எரிச்சலாக இருந்தது. சாப்பிட்டுக் கிளம்பிய சமயத்தில், ‘நீங்கள் என் மகளை அவசியம் சந்திக்க வேண்டும். என்னிடம் வந்துசேரும் முன் காப்பகத்தில் நிறைய சிரமப்பட்டிருக்கிறாள். உங்களை மாதிரிதான் இருப்பாள் அவளும். அவளது கைவிரல்கள் உங்களுடையதைப் போல்தான் மெலிந்திருக்கும். உங்களைப் பார்த்தால் அவள் விடவே மாட்டாள்’ என்று ஒரு சிற்றுரையை நிகழ்த்தினார். என் விரல்கள் பற்றிய அவர் குறிப்பு எனக்குச் சற்று உறுத்தலாக இருந்தது.
எனக்கு நினைவிருக்கிறது, அவர் பேசி முடித்தவுடன் அலைபேசி அழைப்பு வந்தது. ‘டார்லிங், டின்னர் முடிந்துவிட்டதா?’ அவர் மகளேதான். அழைப்பில் ‘டார்லிங், மறக்காமல் அவளை நம் வீட்டுக்குக் கூப்பிடு’ என்று கேட்டாள் அவள். உடனே அவரும் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்தார். நான் முதலில் நாசுக்காக மறுத்தேன். ஆனால் அவர் விடவில்லை. ‘அவளுக்காகவாவது வாருங்கள்’ என்று மன்றாடத் தொடங்கினார். சாக்குப்போக்கு சொல்லி நான் தப்பிப்பதற்குள் பெரும்பாடாகிவிட்டது. அன்று நான் கொஞ்சம் பயந்துபோனேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
உனக்குத் தெரியும், பேராசிரியர் வேலைக்கான நேர்காணல் என்பது ஓரிரு அமர்வுகளில் முடிந்துவிடாது. கல்லூரித் தலைவர், மாணவர்கள், துறைப் பேராசிரியர்களுடன் சந்திப்புகள், பெரிய அரங்கத்தில் ஒரு மணி நேர ஆய்வுரை, மாதிரி வகுப்பு என்று நேர்காணல் பல கட்டங்களில் நடக்கும். என்னைச் சக்கையாகப் பிழிந்தார்கள். நானோ என் திறமையைவிட என் பலவீனத்தைத் தொடர்ந்து நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தேன். மனம் அலைக் கழிந்திருந்தது. டார்லிங்குகள் வேறு என் மனதில் ஒலித்துக் கொண்டிருந்தன. சம்பந்தமில்லாத ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை அது. ஆனால் என் செயல்திறனில் அது பெரிய குறுக்கீடாக இருந்தது. தவிர, வெவ்வேறு நேர்காணல் சந்திப்புகளின்போது லிவிங்ஸ்டனும் கூடவே இருந்தார். நேர்காணல் கமிட்டியின் தலைவரும் துறைத் தலைவரும் அவர்தான். கவனம் சிதறாமல் ஒரு நிமிடம் எனக்கு அமையவில்லை.
லிவிங்ஸ்டன் என்ற நபர் இருந்திராவிட்டாலும் அந்த நேர்காணலைச் சரியாகச் செய்திருப்பேனா என்றால் அதற்கு என்னிடம் பதிலில்லை. ஆனால் ஒன்று, அந்தத் துறைப் பேராசிரியர்கள் என்னிடம் கேட்டதெல்லாம் மூன்றாம் தர, நாலாந்தரக் கேள்விகள். எல்லாமே லிவிங்ஸ்டன் தொடக்கி வைத்துக் கேட்ட கேள்விகளுக்கு ஒத்தூதும் வகையிலான பொருளற்ற துணைக் கேள்விகள். சோர்வுற வைக்கக்கூடிய, புதிய பார்வைகளுக்கு எந்த இடமுமில்லாத, அதனாலேயே என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டாமென்று அவர்கள் முடிவு செய்துகொள்ளும் வகையில் அமைந்தவை. உருப்படியில்லாதவை.
கேப் டவுனிலிருந்து நான் கிளம்புவதற்கு முன்தினம், மாலையில் என்னை ஓட்டலுக்குத் திருப்பிக் கொண்டுவிடும் வழியில், எதிர்பாராத விதமாக லிவிங்ஸ்டன் என்னிடம் ‘நாம் டேபிள் மௌண்டனைப் பார்த்துவிட்டுப் போகலாமே’ என்றார். சட்டென்று என்ன சொல்லி மறுப்பது என்று தெரியவில்லை. அவரோ என் பதிலை எதிர்பார்க்காமல் மேற்கொண்டு காரைச் செலுத்தினார். டேபிள் மௌண்டன் கிட்டத்தட்ட தட்டையான மேற்பரப்பும் செங்குத்தான பாறைகளும் மலையேறிகளுக்கான பரிச்சயமான, ரகசியமான காட்டுப் பாதைகளும் அமையப்பெற்ற இயற்கைச் சிற்பம். அடிவாரத்திலிருந்து சற்று மேலேறி ஓரிடத்தில் கார் நின்றது. சரியாக அப்போது அவருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் ஸ்பீக்கரைப் போட்டவுடன், ‘இங்கே இறங்கிப் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று நழுவினேன். சில அடிகள் நடந்தபின் பூமரங்களோடான ஒரு பாதை தெரிந்தது. அதன் வழியே ஐந்து நிமிடம் நடந்திருப்பேன். ஒரு பாறை உச்சிக்கு வந்திருந்தேன்.
அங்கிருந்து பார்த்தால் கீழே இறங்கிய சரிவில் அடர்த்தி குறைந்தது போல் தெரிந்த காட்டுப் பகுதி, கொஞ்ச தூரத்திலேயே நகரத்தின் ஒரு பகுதி கண்சிமிட்டிச் சிரித்தது. நகரத்தின் அழைக்கும் வசீகரத்தோடும் காட்டின் ஏமாற்றக்கூடிய அமைதியோடும் மயக்கிய நிலக் காட்சி. என்னை மறந்து லயித்தபோது என் முதுகில் ஏதோ உணர்ந்து திரும்பினேன். சில அடிகள் தள்ளி லிவிங்ஸ்டன் நின்றுகொண்டிருந்தார். ஒரு நொடியில் அவர் நான் நின்ற இடத்தை அடைந்துவிட்டிருக்க முடியும். சட்டென்று அங்கிருந்து நகர்ந்து திரும்பி வேகமாக நடந்தேன். காருக்கு வந்தோம். அன்று என்னைத் தங்கியிருந்த இடத்தில் இறக்கிவிடும்போது, ‘நாம் எப்போதுமே தொடர்பிலிருப்போம், இந்த நேர்காணல் நீங்கள் எங்கள் ஊருக்கு வர ஒரு சாக்கு. என் மகளை நீங்கள் பார்க்கவில்லை என்பதுதான் எனக்கு ஒரே வருத்தம்,’ என்றபடி என் கையைப் பலமாகக் குலுக்கினார். நான் எதற்காக அவரோடு தொடர்பிலிருக்க வேண்டும் என்று உள்ளுக்குள் முகத்தைச் சுளித்துக்கொண்டேன். அதுவும் அவர் மகள், அவளைப் பற்றி அவர் குறிப்பிட்டபோது ‘டார்லிங்’ என்ற குரலைச் செவியுற்றது போன்ற உணர்வு. ஒவ்வாமையைத் தந்தது அது.
ஊருக்குத் திரும்பி வந்தபின் கேப் டவுனில் நடந்ததைப் பற்றிப் பல நாட்கள் யோசித்துக் கொண்டிருந்தேன். லிவிங்ஸ்டன் என்னிடம் நடந்துகொண்ட விதம் விடை தெரியாத புதிராக என் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. கேப் டவுனிலிருந்து திரும்பி வந்தபின் என் காதலனிடம் அதைப் பற்றிக் கூறினேன். அவன் வழக்கம்போல அசுவாரசியத்தோடு கேட்டான். எல்லாவற்றையும் விட்டுவிட்டு ‘அதற்கெதற்கு அந்த ஆள் ஒரு டஜன் tampon பாக்கெட்கள் வாங்கினார்?’ என்றான். அதற்காகவே ஒரு சண்டை எங்களுக்குள் நடந்தது. சில வாரங்கள் பேசாமலிருந்தோம்.
என்னுடைய ஒரு பேராசிரியர் ’லிவிங்ஸ்டனின் நடவடிக்கையைக் குறித்து நீ அந்த கல்வி நிறுவனத்துக்குப் புகாரளிக்க வேண்டும், நேர்காணலுக்கு வந்த பெண்ணிடம் இப்படி நடப்பதெல்லாம் அத்துமீறல்’ என்று ஆத்திரப்பட்டார். நானும் அதைப் பற்றி ஒரு நாள் யோசித்துப்பார்த்தேன். ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் புகார் கொடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன். இன்னொரு பேராசிரியரோ ’அவள் விளையாட்டாகக்கூட டார்லிங் என்று கூப்பிட்டிருக்கலாம். ஒவ்வொரு கலாச்சாரச் சூழலிலும் குடும்பச் சூழலிலும் மகள் தந்தையை அழைக்கும் விதம் மாறுபடலாம் தானே’ என்று வேறொரு கோணத்தைத் தந்தார். என் பக்கத்து வீட்டுக்காரி — அவள் ஒரு பிரெஞ்சுப் பெண் — அவளிடமும் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். முதலில் அவள் ‘ஒழுக்கரீதியாகவெல்லாம் இதை நாம் பார்க்க வேண்டாம்’ என்று அறிவுறுத்தினாள். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து ‘யோசித்துப் பார்த்தால் பத்து நிமிட அழைப்பில் முப்பது டார்லிங்குகள் அதிகப்படியாகத்தான் தெரிகிறது’ என்று பின்வாங்கினாள்.
சில நெருங்கிய இந்திய நண்பர்களுக்கும் என் நேர்காணல் பற்றித் தெரிவித்தேன். ஒரு சிநேகிதன் ’எனக்கென்னவோ வேறொருவருக்கு வேலை தருவதற்காக, உன்னைப் பயமுறுத்த அந்த வெள்ளைக்காரப் பேராசிரியரும் அவருக்குத் தெரிந்த ஒரு பெண்ணும் சேர்ந்து நாடகம் போட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது,’ என்று அனுதாபம் தெரிவித்தான். ஒரு பத்திரிகையாளன் அவன். ‘ஆமாம், என்ன இருந்தாலும் நாம் இந்தியர்கள், வெள்ளைக்கார மனோபாவமே வேறு மாதிரி,’ என்று அதை ஆமோதித்தேன். அதுவும் தென்னாப்பிரிக்க வெள்ளைக்காரர்கள், அவர்களது மூதாதையர்கள் நமது காந்தியையே பொது இடங்களில் என்ன பாடுபடுத்தினார்கள்!
கேப் டவுனில் நடந்ததைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் ‘வன்முறை என்பது மனிதன் தன்னை மீளுருவாக்கம் செய்துகொள்வதே’ என்று ஃப்ரான்ஸ் ஃபனான் எழுதியிருப்பது கண் முன்னால் நிற்கும். காந்திக்கு நடந்ததும் கறுப்பர்கள் காலங்காலமாக சந்தித்ததும் நான் எதிர்கொண்டதும், எல்லாம் ஒன்றா என்ன? ஆனால் ஃபனான் ஸ்தூலமான வன்முறையை மட்டும் வன்முறை என்று கருதியவர் அல்ல. ஆகவே, எதுவும் புரிபடாமல் கேப் டவுனில் என் நேர்காணல் பாதிக்கப்பட்டு, அதனால் ஒரு வகையில் என் எதிர்காலம் சீர்குலைந்ததை வன்முறை என்று நான் எண்ணிக்கொள்வதை அவர் ஆட்சேபிக்கப் போவதில்லை. அந்த வேலை ஒரு வெள்ளைக்காரருக்குத்தான் கிடைத்திருக்கும் என்று நினைத்து சோர்ந்துபோனேன். உனக்கே தெரியும், இன்று வரையிலும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவில்லை.
காலப்போக்கில் கேப் டவுன் பற்றிய நினைவும் தேய்ந்து போனது. கேப் டவுன் அனுபவத்தைப் புரிந்துகொள்ள, அதன் மீது பாய்ச்ச உதவியாக வெளியிலிருந்து வெளிச்சம் எதுவும் எனக்குக் கிட்டவில்லை என்பதுதான் உண்மை. அந்த வேலை உண்மையில் யாருக்குக் கிடைத்ததென்று தெரியவில்லை. எனக்கு அதைப் பற்றித் தெரிந்துகொள்ள பெரிதாக ஆர்வமும் இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு, மானுடவியல் துறைகள் குறித்த ஒரு சுற்றாய்வுக்கு, நான் பணியாற்றிய நிறுவனம் சார்ந்த ஆலோசகராக இருந்தேன். இணையத்தில் அதைச் சார்ந்து தேடிக் கொண்டிருந்தபோது, எதேச்சையாகக் கேப் டவுன் கல்லூரியின் இணையதளம் என் கண்ணில் பட்டது. .
எதற்கும் பார்க்கலாமென்று என்னை நேர்காணல் செய்த துறையின் பேராசிரியர்கள் பெயர்ப்பட்டியலில் கண்ணை ஓட்டிப் பார்த்தேன். என்னை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்ற ஜான் லிவிங்ஸ்டன் என்ற பெயர் அதில் இல்லை. ஆனால், பேராசிரியர் கென்னத் ஜே. லிவிங்ஸ்டன் என்ற ஒரு பெயர் தரப்பட்டிருந்தது. உடனே ஆர்வம் தாங்காமல், வேகமாக அவர் ப்ரொஃபைலைச் சொடக்கி, அவருடைய துறை சார்ந்த இணைய பக்கத்துக்குச் சென்றேன். கென்னத் ஜே. லிவிங்ஸ்டனின் புகைப்படம் அதில் பகிரப்பட்டிருந்தது. ஆனால் அவர் இளையவர். நான் பார்த்தவரில்லை.”
சுகந்தா இதையெல்லாம் விவரித்தபோது, டேபிள் மவுண்டனில் லிவிங்ஸ்டனின் காரிலிருந்து அவள் இறங்கிய கட்டத்தில் எங்களுக்கு காபுசினோ வந்துவிட்டிருந்தது. நான் அதைக் குடித்து முடித்திருந்தேன். அவள் கதையைக் கூறி முடித்தபின் மெதுவாக, “உன் பத்திரிகையாள நண்பன் சொன்னதுதான் சரி என்று படுகிறது. அந்த ஆள் தெரிந்த யாருக்கோ அந்த வேலையை வாங்கித்தரத் திட்டமிட்டிருப்பார். இப்போது அந்தக் கல்லூரியில் வேலை செய்யும் இளம் பேராசிரியர் அவர் மகனாகக் கூட இருக்கலாம். உன் திறமை தெரிந்து, உன் கவனத்தைச் சிதறடித்து, போட்டியிலிருந்து உன்னை அப்புறப்படுத்த ஒரு மகளை ஜோடித்து இத்தனை நாடகம்” என்றேன்.
“இருக்கலாம். ஆனால் யாருக்குத் தெரியும்? லிவிங்ஸ்டன் என்ற பெயர் அத்தனை அபூர்வமானதில்லை. அது சம்பந்தமில்லாத வேறொருவராக இருக்கலாம். மேலும் எதற்காக இப்படிச் சுற்றி வளைத்து ஒரு குழப்ப நாடகம்? தவிர, என்னை எதற்கு அவர் வீட்டுக்குக் கூப்பிடவேண்டும்? ஒருவேளை நிஜமாகவே அந்தப் பெண் அவர் மகள்தான் என்றால்?”
“ஆனால் அந்த டார்லிங் விஷயம்? தவிர அவள் ஒரு சிறுமி…”
சற்று நேரம் பேசாமல் மௌனமாக இருந்தோம். பிறகு, சூழ்நிலையை மாற்ற நினைத்து “ப்ரவுனி ஆர்டர் செய்யலாமா?” என்றேன். அவள் தலையாட்டினாள். ஒரு பணியாளரை அழைத்து ஆர்டர் செய்தேன். சில நிமிடங்களிலேயே ப்ரவுனிகளோடு அவர் வந்தார். தட்டுகளை மேசையில் வைத்துவிட்டு, காப்பிக் கோப்பைகளை எடுக்க அவர் முனைந்தபோது, அவர் கை தவறி கோப்பையிலிருந்த காப்பி அவள் உடையில் சிந்தியது. கொட்டியது என்பதுதான் சரி. ஏனெனில் அவள் காப்பியைக் கால்வாசி கூட குடித்திருக்கவில்லை.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த கஃபே மேனேஜர் ஓடி வந்தார். “சாரி மேடம்” என்று மன்னிப்பு கேட்டுவிட்டு டிஷ்யு பேப்பர்களைக் கொண்டுவந்து தந்தார். நாங்கள் ப்ரவுனியைத் தின்று முடிக்கையில் அவர் ஒரு சிறிய காகித அட்டைப்பெட்டியை கொண்டுவந்து அவளிடம் தந்தார். “எங்கள் சேவையில் நேர்ந்த குறைபாட்டுக்காக மன்னிப்பும் ஒரு சிறிய பரிசும்” என்றார். “ஒரு பேஸ்ட்ரி இருக்கிறது, அவ்வளவுதான்” என்றார் சிரித்தபடி. “கோகோ ஃபேண்டஸி பேஸ்ட்ரி ஒரு துண்டு.” சுகந்தா, “நன்றி, எனக்கு மிகவும் பிடித்த பேஸ்ட்ரி” என்றாள் வியப்போடு. ”எனக்குத் தெரியும்,” என்று புன்னகைத்தபடி நட்போடு கூறினார் அவர்.
ஒரு சிறிய சாதாரணத் தவறை இப்படி மெனக்கிட்டு சரி செய்கிறார்களே என்று எனக்குக் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. சென்னையில் ரெஸ்டரண்ட்கள், கஃபேக்களில் இதையெல்லாம் பார்ப்பது அபூர்வம். அவரிடம் நன்றி தெரிவித்தேன். “பேஸ்ட்ரிஸை நீங்கள் வீட்டிலிருந்துகூட ஆர்டர் செய்யலாம். இங்கே பக்கத்தில்தான் இருக்கிறீர்கள் என்றால் எங்கள் கிளையை நேரடியாகவே கூப்பிடலாம்” என்று சொல்லியபடி தன் கார்டைக் கொடுத்தார். “தொலைபேசியில் அழைக்கும்போது தவறாமல் என் பெயர் சொல்லிக் கேளுங்கள். நானே நேரில் வந்து தருகிறேன். என் பெயர் லிவிங்ஸ்டன், டேவிட் லிவிங்ஸ்டன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். எங்கள் மேசையிலிருந்து தட்டுகளை எடுக்கப் பணியாளரை அழைத்தவர், “உங்களைப் போலவே என் மகளுக்கும் கோகோ ஃபேண்டஸி என்றால் உயிர்” என்றார் சுகந்தாவைப் பார்த்தபடி. அவள் சட்டென மேசை மீது வைத்திருந்த தன் கைகளை எடுத்துக் கீழே வைத்துக்கொண்டாள்.
***
பெருந்தேவி
புனைவை விட விசித்திரமான ஒன்று.
வித்தியாசமான கதை…
அருமை…
நாம் சந்திக்கும் மனிதர்களம் அவர் தம் எண்ணங்களும் வார்த்தைகளும் செயல்களும் நம்மை எதிர்வினையாற்றச் செய்யவில்லையெனினும் , மூளையின் ஏதொவொரு பக்கத்தில் இருந்து ஆட்டுவிக்கிறது. பெண்ணின் உள்ளுணர்வு அதீதமானது, எச்சூழலிலும் அவளை காத்துக்கொள்ள அந்த உள்ளுணர்வு உதவும். பெயரால் பின் தொடர்பவர்கள், நினைவாய் பின் தொடர்வர்கள்.
கதையை ரசிக்க முடிந்தது! படிக்கும்போது, அப்பாஸ் கியோரஸ்தமியின் சர்ட்டிஃபைட் காபியை கொஞ்சம் நினைவுபடுத்தியது. க்ஷ