Saturday, November 16, 2024
Homesliderதரிசனம்

தரிசனம்

செந்தில்குமார் நடராஜன்

தே வானம்தான். இப்போது அடர்ந்த நீலநிறப் பின்னணியில் ஆரஞ்சுத் தீற்றல்களுடன் விடியத் தொடங்கியிருந்தது. இந்தக் குளிர் மனதுக்கு இதமாக இருந்தது. சிறிது நேரம் இமைகளை மூடியபடி புல்வெளியில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தேன். புல்லில் படர்ந்திருந்த ஈரம் மெதுவாக ஊடுருவி புட்டத்திலும், தொடைகளிலும் பரவியது. புற்களுக்கான பிரத்தியேக மணம் பனியில் கலந்து வீசிக்கொண்டிருந்தது. எனக்கு அஸ்தமனங்களை விட விடியல்களே மனதிற்கும் உடலிற்கும் நெருக்கமானவை. தலையை மேலே உயர்த்தி இரண்டு கரங்களாலும் முகத்தில் படிந்திருந்த மெல்லிய சோர்வின் படலத்தை வழித்தெடுத்தேன். நிலத்திலிருந்து கிளம்பும் பச்சை நிற  பனிமூட்டமாகி, பின்னர் நிறமிழந்து வானத்து நீலத்தில் கரைந்து கொண்டிருந்தது. என் மூச்சின் நீளம் அதிகரித்திருந்தது. உடல் ஓர் அப்பழுக்கற்ற கண்ணாடிக் குடுவைபோல் இருந்தது. அதன் புலன்களின் வழியே ஆரஞ்சு நிறக் குளிர் வேர்விட்டு, கிளைத்து உடலெங்கும் இறங்குவதை உணர முடிந்தது. மனதைக் கவிழ்த்துக் கொட்டிவிட்டு, பின்னர் அதில் வெறுமையை நிரப்பிச் செல்லும் இரவு நேரத்திற்குப் பிறகு என் உடல் நிச்சயம் எடையினை இழக்கிறது. அது பொருண்மை சார்ந்தது இல்லை. ஆனால் என்னால் அதை  உணர முடிகிறது.

என்னைப் போன்ற ஒரு தோல் வியாதிக்காரனுக்கு இந்த விடியல் தரும் ஆறுதல் தவிர்க்க இயலாதது. என் சட்டையை கழற்றிவிட்டு, புற்களில் முதுகினை சாய்த்துப் படுத்துக்கொண்டேன். இரண்டு கைகளையும் நீட்டி இந்த விடியலை ஒரு போர்வை போல இழுத்துப் போர்த்தியபடி கண்களை மீண்டும் மூடிக்கொண்டேன். சட்டென்று தூரம் சுருங்கிவிட்டது. என் முகத்திற்கு அருகில் ஆரஞ்சும் நீலமும் கலந்த மேகங்கள் நதியைப் போல தவழ்ந்தன. கறுத்துக் கிளைத்திருந்த மரங்கள் ஈரம் சொட்டச்சொட்ட அந்த மேகங்களின் மீது மிதந்து சென்றன. நெற்றிப் பரப்பில் நாரைக் கூட்டம் ஒன்று பறந்து சென்றது. அதன் அடிவயிற்றில் படர்ந்திருக்கும் மென்மையான மயிர்கள் காற்றில் அலைவது என் முகத்தில் ஒருவிதமான குறுகுறுப்பைத் தந்தது. என் சொரசொரப்பான தோலுக்கு ஒரு மிருதுத்தன்மை கூடியிருந்தது. உள்ளங்கை முழுவதும் இருந்த செதில் செதிலான வெடிப்புகள் மயிலிறகுகள் போல் நெகிழ்ந்து இருந்தன. முகத்தில் தொடங்கி என் கைகளுக்கு எட்டும் இடங்கள் வரை உடலெங்கும் அந்தக் குறுகுறுப்பை ஊர்ந்திடச் செய்தேன். இந்த நேரத்தில் மட்டும்தான் புற்களில் ஏறி விளையாடும் பனியில் நனைந்த எறும்புகள் என் உடலின் மீது எந்த வன்முறைகளையும் ஏவுவதில்லை. அப்படியே உடலை அசைக்காமல் ஒரு மாடுபோல வெகுநேரம் அந்தப் புல்தரையில் கிடந்தேன். என் மூடிய இமைகளுக்குள் பெயர் தெரியாத வண்ணங்கள் அலைந்து கொண்டிருந்தன. ஆரஞ்சு வெளிர் நீலமாக கொஞ்சம் கொஞ்சமாக ஒளியேறியபடி இருந்தது. அந்த வெம்மை தோள்களின் வெடிப்புகளில் இதமாக நுழைந்து பின்னர் உறைந்திருக்கும் இரத்தத் திட்டுக்களைப் பிளந்து உள்ளே இறங்கி நரம்புகளை உசுப்பத் தொடங்கியது. நீண்ட ஊசிகளின் மெல்லிய கூர்கள் மெதுவாக வலியை பெயர்த்து மூளைக்கு அனுப்பத் தொடங்கின. இமைகளுக்குள் மேகங்கள் உடைந்து நீர் திரண்டது. அவ்வளவுதான். என் இன்றைய நாளின் இதமான இறுதி நிமிடங்களுக்குள் நுழைந்து கொண்டிருந்தேன்.

இந்தச் சின்ன விடுதலை என்பது எனக்கு விடியலில் மட்டுமே தான் சாத்தியம். ஒருநாளில் விடியலுக்குப்பின் இத்தகைய விடுதலை என்பது இதே ஆரஞ்சுத் தீற்றல்களோடு அஸ்தமிக்கும் மாலை நேரத்தில்கூட சாத்தியமில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் உடலின் சொரசொரப்பும் மனதின் எடையும் கூடத் தொடங்கிவிடும். உடலுக்கு உள்ளேயும் வெளியிலும் புழுக்கள் நெளிவது போன்ற ஓர் அவஸ்த்தை சூழ்ந்துகொள்ளும். வெளிச்சம் என் தோலில் படுவதிலிருந்து ஒளிந்துகொள்ள இங்கும் அங்கும் ஓடவேண்டும். கிடைக்கும் அன்பை மறுத்து அழவேண்டும். நான் எந்நேரமும் கவனிக்கப்படுவேன். சாப்பிடுவது தொடங்கி மலம் கழிப்பது வரை கண்காணிக்கப்படுவேன். நான் ஏதும் செய்துகொள்வேனோ என்ற பயத்தால் என் ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்படும். என்னைத் தவிர எல்லோருக்கும் நான் முக்கியம். என்னை யாரும் பார்ப்பதை நான் விரும்புவதில்லை. நான்கூட என்னைப் பார்க்க விரும்புவதில்லை. நான் பார்க்க விரும்புவது இந்த விடியலை மட்டும்தான். விடியும் விடியாத இன்றைய அதிகாலை நேரத்தில் நான் என் உடலை இந்த இயற்கைக்கு ரகசியமாக கடைசியாக ஒருமுறை காட்சிப்படுத்த விரும்புகிறேன். ஆமாம். கடைசியாகத்தான். அதன் பிறகு சீக்கிரம் வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டும். இயன்றவரை மைதிலியோடும், மியாவுடனும் மீதமிருக்கும் இன்றைய நேரத்தைக் கழிக்க வேண்டும். இமைகளைத் திறந்தேன். நிதானமாக பாக்கெட்டிலிருந்து குப்பை போல கசங்கியிருந்த அந்தக் கவரை எடுத்தேன். சிறிய வெளிர் நீலநிறக் கண்ணாடிக் குப்பியின் உள்ளே என் நிரந்தர விடுதலை அடர் திரவமாக சின்னக் கடலைப் போல தளும்பிக் கொண்டிருந்தது. இன்னும் சில மணிநேரங்கள்தான். வானம் அப்பட்டமான நீலத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தது. சட்டென்று குப்பியைத் திறந்து வாயில் கவிழ்த்தேன். இன்னொரு பிறப்பிருந்தால் விடியல் நேரடியாக இரவில் முடியும் ஒரு பிரதேசத்தில் பிறக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். என்னுடைய வானத்திற்கு கடைசியாக ஒருமுறை என் நன்றியை தெரிவித்தேன். ஓங்கி அழவேண்டும் போல இருந்தது. வைராக்கியமாக கட்டுப்படுத்திக்கொண்டேன். இந்த நிமிடத்தை இப்போதே மறக்க வேண்டும்.

அவசர அவசரமாகச் சட்டையை அணிந்து கொண்டேன். அருகில் இருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த மியாவின் சங்கிலியை அவிழ்த்துக் கைகளில் சுற்றிக்கொண்டேன். பூங்காவிற்குள் ஆட்கள் வரத்தொடங்கினர். பூங்கா வாசலில் பொக்கே கடை வைத்திருப்பவன் ஒரு பெரிய மலர்களின் பொதியுடன் வழக்கமான வேகத்தில் என்னைக் கடந்து சென்றான். ஓர் இடத்திலிருக்கும் மென்மையை இன்னொரு இடத்திற்கு பிடுங்கி எடுத்துச் செல்வது எவ்வளவு பெரிய வன்முறை? இப்போது எனக்கு எதையும் பார்க்கப் பிடிக்கவில்லை. விடுவிடுவென நடக்கத் தொடங்கினேன்.

மியா தன் வாலை ஆட்டியபடி என் கால்களை உரசியபடி என்னோடு நடக்கத் தொடங்கினாள். அவளுக்குத் தெரியும். நான் அதிகாலை வேளையில் அவளை உதைத்துத் தள்ளுவதில்லை. மியா ஷோலோ ப்ரீட் மயிரிலி நாய். இவளை நான் தேர்வு செய்யவில்லை. அவளாகவேதான் என்னைத் தேர்வு செய்தாள். என்னிடம் உதைபடும் நேரங்களில் மட்டும்தான் மைதிலியிடம் ஓடுவாள். அதுவும் ஓரிரு நிமிடங்கள்தான். மற்ற நேரங்களில் என்னுடன்தான் இருப்பாள். மியாவின் முகத்தைப் பார்த்ததும் வயிற்றுக்குள் ஏதோ உருளத்தொடங்கியது. புல்தரையில் ஒரு முழங்காலில் மண்டியிட்டு கைகளை நீட்டினேன். ஆவேசமாக என்னை நோக்கித் தாவியவள் தன் உடலை வளைத்து வளைத்து என் கைகளை உரசியபடி இடதும் வலதுமாய் அலைந்தாள். விரல்களை ஆவேசமாக நக்கினாள். சற்று கூடுதலாக வெடித்திருந்த செதில்கள் பிளந்து எரிச்சலைத் தந்தன. அவளைப் பக்கத்தில் இழுத்து வழவழப்பான அவள் உடலைத் தடவினேன். அவளுக்குத் தேன் வழியும் டார்க் சாலேட் நிற உடல். நக்குவதை நிறுத்திவிட்டு தன் உடலை வளைத்து என் கால்களை இன்னும் அழுத்தமாக உரசினாள். அப்புறம் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுவதுபோல என்னிடமிருந்து மீண்டும் மீண்டும் விலகி ஓடிவிட்டுத் திரும்பினாள். சங்கிலியின் பரவும் அழுத்தம் என்னை வீட்டுக்குப் போகலாம் வா என்று அழைப்பதைப் போல் இருந்தது. ஒருவேளை அவள் நாம் சீக்கிரம் இந்த இடத்தைவிட்டு போய்விட வேண்டும் என்று அவள் நினைத்திருக்கலாம். எழுந்து புல்வெளியை ஒட்டியிருந்த சிமெண்ட் பாதையில் நடக்கத்தொடங்கினேன். தூரத்தில் விக்ரம் தன் வழக்கமான மரபெஞ்சில் உட்கார்ந்து இருந்தான்.

விக்ரமுக்கு  இருபத்தைந்து வயது இருக்கலாம். கண்ணில் அணிந்திருக்கும் கருப்புக் கண்ணாடியையும், பக்கத்தில் மடித்து வைத்திருக்கும் வாக்கிங் ஸ்டிக்கையும் கவனிக்காதவர்கள் அவன் பார்வை இல்லாதவன் என்பதை கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லை. பார்வையற்றவர்கள் பற்றி நம் மனதில் விரியும் எந்தவிதமான பிம்பங்களுக்கும் சற்றும் பொருந்தாத நேர்த்தியான தோற்றம் விக்ரமுக்கு உண்டு. தன் இயற்கையான உடலமைப்புக்கு அப்பாற்பட்டு புறத்தோற்றம் பற்றிய பிரக்ஞை உள்ள ரசனைக்காரர்களுக்கே உரித்தான நேர்த்தி அது. ஒருவேளை இவனை கவனித்துக் கொள்வதற்கு என்றே வீட்டில் வேலை ஆட்கள் இருக்க வேண்டும். மிகவும் திருத்தமான ஷேவ் செய்யப்பட்ட முகம் தொடங்கி, கத்தரிக்கப்பட்ட நகங்கள், எப்போதும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கும் சிகை அலங்காரம் வரை அவ்வளவு துல்லியமான திருத்தத்துடன் இருப்பது அவ்வளவு எளிதில் சாத்தியப்படாதது. அவன் அணிந்துவரும் டார்க் நிற ஜீன்ஸ்களும், அதற்கு ஏற்றாற்போல் அணிந்துவரும் வெளிர்நிற ஷர்ட்களும் மட்டுமல்லாமல், அதற்குப் பொருத்தமாக அவன் அணிந்து வரும் சாக்ஸ் வரை எதிலுமே ஆடம்பரம் இல்லை. ஆனால் மிகத்துல்லியமான ரசனை உணர்வு உண்டு. அவனைக் கடந்து செல்லும் சில வினாடிகள் வீசும் அந்த நறுமணம் பற்றி எனக்கு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. இதையெல்லாம் விட அவன் முகத்தில் எப்போதும் ஒட்டியிருக்கும் அந்தப் புன்னகை, அவனைக் கடந்து செல்லும் எவருடைய முகத்திலும் நொடிநேர பரவசத்தைத் தந்துவிடும். அங்கு உட்கார்ந்திருக்கும்போது இந்தப் பூங்காவும், மரபெஞ்சும் அவனுக்காகவே படைக்கப்பட்டது போன்ற உடல்மொழியுடன் இருப்பான். முதலில் அது கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும், பின்னர் எல்லோரையும் வசீகரித்துவிட்டது. அவனைப் பொறுத்தவரை வசீகரம் என்பது எப்படியானது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஓர் ஆண் இன்னொரு ஆணை இவ்வளவு தூரம் கவனிக்க வைக்க முடியுமா என்று யோசிக்கும் அளவு அவனை கவனித்திருக்கிறேன். எனக்குள் சின்னதாக அவன் தோற்றம் பற்றிய ஒரு பொறாமையும் உண்டு.

ஆரம்ப நாட்களில் அவனருகில் வந்ததும் அனிச்சையாக என்னையே ஒரு முறை பார்த்துக் கொள்வேன். என் கசங்கிய சட்டையும், பொருத்தமில்லாத பேண்ட்டும், அழுக்கேறி ஒழுங்கற்று வளர்த்திருக்கும் நகங்களும், ஷேவ் செய்யபடாத முகமும் ஒருவித அசூயையைத் தந்தன. உடலில் ஏதோ கெட்டவாடை வீசுவதுபோல இருக்கும். குளிக்கும்போதும், உடைகளை அணிந்து கொள்ளும்போதும் ஏற்படும் வலியைவிட என் தோற்றத்தினால் வரும் அசூயை அவ்வளவு வலி மிகுந்தது இல்லை. இவனுக்கென்ன, பார்வையைத் தவிர இவனுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. தினமும் காலையிலேயே இங்கு வந்து உட்கார்ந்து பாடத்தொடங்கி விடுகிறான். அதற்கப்புறம் எங்கே போவானோ? ஆனால் என்னால் ஒரு மணிநேரம் இல்லை, ஒரு நிமிடம்கூட வேதனையின்றி பகலை நகர்த்த முடியாது. என் நிலை குறித்து கொஞ்சம் கூடுதலாய் நான் வெளிப்படுத்தும் சுயகழிவிரக்கம் தரும் சின்ன ஆறுதலுக்குப் பழகியிருந்தேன். இந்த வேதனையெல்லாம் அவனுக்கு இருக்கப்போவதில்லை.

“சார்! சுந்தர் சார். வாங்க சார். என்ன சார் இன்னைக்கு லேட்டா?”

வாட்சை பார்த்தேன். ஆமாம். இன்று வழக்கமான வீடு திரும்பும் நேரத்தை விட கொஞ்சம் தாமதமாகவே திரும்புகிறேன். அவன் தோராயமாகவோ அல்லது பேச்சு வாக்கிலேயோ தான் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும். முதலில் என் பெயர் சுந்தர் இல்லை. அதிலொன்றும் ஆச்சர்யம் இல்லை. ஆனால் அவன் பேசுவது என்னிடம்தான். இன்னொன்று, அவன் பெயரும் விக்ரம் இல்லை. என் நாய்க்குட்டி பெயரும் மியா இல்லை. அவன் தான் எனக்கும் மியாவிற்கும் பெயர் வைத்தது. அதே போலத்தான் நானும் அவனுக்கு விக்ரம் என்று பெயர் சூட்டியிருந்தேன். ஒரு சாயலில் பார்ப்பதற்கு அந்தக் கால கமல் மாதிரிதான் இருப்பான். ஆனால் அவன் எப்படி எனக்கு ஆணின் பெயரையும், என் நாய்க்குட்டிக்கு பெண்ணின் பெயரையும் வைத்தான் என்றுத் தெரியாது. ஒருவேளை எங்கள் இருவரின் தோற்றம் பற்றி இந்தப் பூங்காவில் இருக்கும் வேறுயாராவது அவனுக்குச் சொல்லியிருக்கலாம். இதுவும் என் யூகம்தான்.  ஏனென்றால் நான் இதுவரை அவனிடம் பேசியது கூட கிடையாது.

இந்தப் பூங்காவிற்கு விக்ரம் இரண்டு மாதங்களாகத்தான் வரத் தொடங்கியிருக்கிறான். அதற்கு முன் அவனை இந்தச் சுற்றுவட்டாரத்தில் நான் பார்த்ததில்லை. தினமும் நான் பூங்காவிலிருந்து வெளியேறும் நேரத்தில் இதே மரபெஞ்சில் உட்கார்ந்திருப்பான். யாருக்காக வருகிறான், யாருக்காகக் காத்திருக்கிறான் என்றெல்லாம் தெரியாது. நான் அவனை எப்போது கவனிக்கத் தொடங்கினேன் என்றெல்லாம் கூட சரியாக நினைவில் இல்லை. நான் அவனைக் கவனிக்கத் தொடங்கிய நாட்களில், அவன் உட்கார்ந்திருக்கும் இடத்தை நெருங்கும்போது என் திசையைப் பார்த்து சினேகத்தோடு திரும்புவான். என் காலடி ஓசையையோ அல்லது மியாவின் சப்தத்தையோ வைத்துத்தான் எங்கள் வருகையை அவன் கண்டுபிடித்திருக்க வேண்டும். சில நாட்களில் எங்களையும் அறியாமல் என் முகமும் அவன் முகமும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல சந்தித்துக் கொள்வோம். ஒருநாள் அவன் உட்கார்ந்திருக்கும் இடத்தைக் கடக்கும்போது திடீரென்று “சார்! வாங்க சார்”, என்றான். பின்னர் மியாவின் திசையில் தோராயமாக தன் ஒரு கையை நீட்டி விரல் நுனிகளை குவித்து ஒன்றோடு ஒன்று உரசி, “ஹலோ பப்பி. மியா பப்பி…”, என்று கொஞ்சத் தொடங்கினான். முதலில் நான் அவனைக் கவனிக்காதது போலத்தான் கடந்து சென்றேன். ஆனால் மியா அவனை நெருங்கத் தொடங்கினாள். மியாவுக்கு அவன் சூட்டிய அந்தப் பெயர் பிடித்துவிட்டது. பின்னர் தினமும் மியாவுடன் அவன் விளையாடுவதை எப்படியாவது உறுதிசெய்து கொண்டான். ஒருநாள் மியாவுடன் விளையாடிக் கொண்டே “சார்! மியா எவ்ளோ நல்ல பேர்ல”, என்றவன், “உங்க பேர் கூட நல்ல அழகான பெயர்தான் இருக்கணும் சார். இந்த பிரபு, சுந்தர் இப்படிங்கிற மாதிரி.” மியாவின் கழுத்தை அணைத்தபடி நிமிர்ந்தவன் திடீரென்று, “சார்! உங்களுக்கு சுந்தர்ங்கிற பேரே இருக்கட்டும் சார்.” என்றபடிச் சத்தமாகச் சிரித்தான். இப்படித்தான் எனக்கு பெயர் வைக்கும் வைபோகம் மியாவின் முன்னிலையில் மிக எளிமையாக நடந்து முடிந்தது. எனக்குச் சூட்டப்பட்ட பெயர் பொருத்தமாக இல்லாவிட்டாலும் பிடித்திருந்தது. தவிர, அதை மறுப்பதற்காகக் கூட அவனிடம் பேச விரும்பவில்லை.

ஆனால் அந்த நாளுக்குப் பிறகு, நான் அவனைக் கடந்து போகும் போதெல்லாம் என் நடையின் வேகத்தைக் கொஞ்சம் அவனுக்காகக் குறைத்துக் கொண்டேன். மியாவுக்கு விக்ரமோடு விளையாட அதிக நேரம் கொடுக்கத் தொடங்கினேன். உடல் எரிச்சலைப் பொறுத்துக் கொண்டேன்.

எனக்கு அவனை அவமானப்படுத்தும் எண்ணமெல்லாம் இல்லை. இருந்தாலும் ஏனோ அவனிடம் பேசத் தோன்றவில்லை. ஒரு சபிக்கப்பட்டவன் இன்னொரு சபிக்கப்பட்டவனிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது? அவன் பார்வையற்றவன் என்ற இரக்கம் இருந்ததாலோ என்னவோ என்னையும் அறியாமல் என் முகத்தில் பரவும் ஒரு புன்னகையோடு கடந்துவிடுவேன். என்மீது எறியப்படும் இரக்கத்தை கொஞ்சம் அவன் மீதும் எறிவேன். இருந்தாலும், நாளடைவில் எந்த விதத்திலும் அவனைப் போய்ச் சேராத புன்னகை என்னை என்னவோ செய்யத் தொடங்கியது. அப்படி அவனைப் பார்த்துப் புன்னகைப்பதும் சீக்கிரமே நின்றுவிட்டது. அவனுக்கும் மியாவுக்கும்தான் தொடர்பு என்பதுபோல நடந்துகொள்ளத் தொடங்கினேன்.  அவனுக்கு மியாவை தொடுவதில் அவ்வளவு பரவசம். விக்ரம் தன் முகத்திற்கு நேராக மியாவின் முகத்தை இழுத்து விளையாடும்போதும், அவள் முதுகெங்கும் சற்று அழுத்தமாய் வருடி விடும்போதும் அவள் அவனோடு அன்யோன்யமாய் குழைந்தபடி நிற்பாள். தன் பங்கிற்குத் தானும் முகத்தால் எக்கி எக்கி அவனோடு ஏதேதோ பேசுவாள். ஒருவேளை, அவன் சிரிப்பும், தொடுதலும், அவன் கைகளின் வழியே தரும் அழுத்தங்களும் அவளுக்குப் புரிந்திருக்கலாம். அல்லது மியா அவள் மீது நான் செலுத்தும் வன்முறைகளைப் பற்றி விக்ரமிடம் முறையிட்டிருக்கலாம். அவர்கள் உரையாடலில் நான் நுழைந்ததில்லை. மற்றபடி நான் அவனை விலகி நிற்பதும், அவனோடு பேசாமல் இருப்பதும் தொடர்ந்தபடியே இருந்தது.

“சார்! சுந்தர் சார். என்ன சார்… மியா இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கா, ஏதும் விசேஷமா சார்?”
இன்றும் அப்படித்தான். அவன் கேள்விக்கு வழக்கம் போல் மௌனமாய் இருந்தேன். அவனும் தினமும் என்னை அவனோடு பேசவைக்க முயன்றுகொண்டே இருக்கிறான். நான் அவனிடம் பேசத்தொடங்கினால் ஒளிந்து வாழ விரும்பும் என் துயரைச் சொல்ல வேண்டியது வரும். ஒருவேளை அவன் துயரங்களை கேட்கவேண்டிய நிலையும் வரலாம். அதிகாலையில் மட்டும் வெளியுலகை பார்க்க விரும்பும் என் துயரைவிட, ஒரு காலத்திலும் வெளியுலகை பார்க்கவியலாத ஓர் அதிதுயரத்தை நான் கேட்க விரும்பவில்லை.

“சார்! நேத்து ஒரு கனவு கண்டேன் சார். என்னன்னு கேளுங்களேன்?”

விக்ரம் சுவாரசியத்தை வளர்க்க விரும்புகிறான். இருளைப் பற்றிய அவனுடைய கற்பனையானதொரு சித்திரத்தில் என்ன சுவாரசியம் இருந்துவிடப்போகிறது? இருந்தாலும் அவன் என்னவெல்லாம் தன் கனவில் பார்த்திருப்பான் என்ற ஒரு குறுகுறுப்பு சட்டென்று வந்து போனது. ஆனால் அவனிடம் இதைச் சாக்காக வைத்து அவனோடு பேச்சைத் தொடங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. நான் இன்று சீக்கிரம் வீட்டுக்குப் போகவேண்டும். என் நேரம் குறைந்துகொண்டே வருகிறது. ஆனால் அதற்குமுன் அவன் கனவுக்குள் நுழைந்து பார்க்கும் ஆசை கொஞ்சம் எட்டிப் பார்த்தது. அவனிடம் கேட்பதற்கு தயக்கமாக இருந்தது. நாமே நினைத்துப் பார்க்கலாமே என்று என் கண்களைக் கொஞ்சநேரம் மூடிகொண்டேன். எதை என் கனவில் தவிர்க்க நினைத்தேனோ அதுவே காட்சிகளாக விரிந்தன. புழுக்கமான சிறிய அறை. எப்போதும் வெளிச்சத்தை அள்ளி வீசிக் கொண்டிருக்கும் ஜன்னல். கட்டில் வரை வந்துவிட்டு பின் வாசலுக்கு போய் யாரையோ பார்த்துக் குரைக்கும் மியா, தண்ணீர் நிரம்பிய பாத்திரத்துடன் தோளில் வெள்ளை நிறத் துண்டை போட்டபடி அறைக்குள் நடந்துவரும் மைதிலி என மாறி மாறி காட்சிகளாக வந்தன. தலையைச் சிலிர்த்துக்கொண்டு கண்களைத் திறந்தேன். என்னால் நான் விரும்பும் ஒரு கனவைக்கூட காணமுடியவில்லை. என்னை ஆசுவாசப்படுத்தும் இந்த அதிகாலையின் காட்சிகூட என் கனவில் வராததை நினைத்து வெட்கமாக இருந்தது. என் மனம் என்னைத் தொல்லைபடுத்தும் காட்சிகளால் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. விக்ரமைப் பார்த்தேன். அவன் இமைகளின் படபடப்பில் பரவசம் தளும்பியது. நான் அவனைப் பார்த்தபடி காத்திருந்தேன். அவன் எனக்காகக் காத்திருக்கவில்லை.

“சுந்தர் சார்! கேளுங்க. என் கனவுல நீங்கதான் வந்தீங்க. பளபளன்னு இருந்த மியாவை சங்கிலியால் பிடித்துக்கொண்டு அரண்மனையிலிருந்து நகர்வலம் வரும் வரும் ராஜா போல இருந்தீங்க”
சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தேன். இந்த முறை எதிர்பாராத தாக்குதலை என் மீது நிகழ்த்திவிட்டான். என்னை ஒரேயடியாய் தூக்கி விசிறியடித்து வீழ்த்தும் ஆயுதம். அவன் கனவில் நான் வந்ததாகச் சொல்வது கூட ஆச்சர்யமில்லை. “அரண்மனையிலிருந்து நகர்வலம் வரும் ராஜா போல இருந்தீங்க”, என்பதுதான் என்னை நிலைகுலைத்துச் சாய்த்துவிட்டது. என் மனதிற்குள் நிறைந்து கிடக்கும் எந்தவிதமான பிம்பங்களிலும் தென்படாத ஒரு காட்சி. உடையையே விரும்பாத ஒரு ராஜா இருக்கிறாரா? நான் வெளிச்சத்தைக் கண்டு ஓடி ஒளியும் ராஜாவை பார்த்ததே இல்லை. இவன் வெளிச்சத்தையே பார்த்ததில்லை. நினைத்துப் பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், எது இந்த கனவை அவனுக்குச் சாத்தியப்படுத்தியிருக்கும் என்பதை யோசித்தால் கிளர்ச்சியாக இருந்தது. இவன் என் நேரத்தைத் தின்கிறான். நான் மைதிலியைப் பார்க்கவேண்டும். இருந்தாலும் மனம் நகர மறுத்தது.

இருந்தும், அவனிடம் பேசும் தயக்கம் உடைபடுவதை ஏதோவொன்று தடுக்க எனக்குள் முயன்று கொண்டிருந்தது. எனக்கு இப்போதே மைதிலியை பார்க்க வேண்டும். அவள் மடியில் படுத்து அழவேண்டும். அவளிடம் என் மன்னிப்பைக் கேட்கவேண்டும். இவன் வேறு ஏதேதோ பேசி என்னை இங்கேயே நிறுத்துகிறான். மீண்டும் கண்களை மூடினேன். இவன் சொல்லும் ராஜாவாக என்னை வலிந்து நினைத்துப் பார்த்தேன். மங்கலான வெளிச்சத்தில் கம்பீரமாக ஒரு பெரும் மக்கள் கூட்டதிற்கு மத்தியில் நடந்து வருகிறேன். சில நொடிகள்தான். அந்தக் காட்சி தந்த பரவசம் என்னை ஏதோ செய்தது. அழவேண்டும் போல் இருந்தது. நேரம் சுருங்கிக்கொண்டே இருந்தது. இப்போதே யாரிடமாவது சொல்லவேண்டும் போல இருந்தது. மியாவுக்கு நான் சொல்வது புரியலாம். மைதிலியிடம் சொல்ல வீடு வரை போகவேண்டும். விக்ரமின் முகத்தைப் பார்த்தேன். அப்பழுக்கற்ற முகம். அவன் இமைகள் துடித்துக்கொண்டே இருந்தன. எவ்வளவு அழகாக இருக்கிறான். முகம் தெரியாத மனிதர்களிடம் அன்பைப் பகிர்ந்துகொள்ள எவ்வளவு அழகான ஒரு மனநிலை வேண்டும். நான் ஏன் இவனை நிராகரிக்கிறேன். இன்று இந்தப் பூங்காவிலிருந்து வெளியேறும்போது எதை எடுத்துக்கொண்டு செல்லப் போகிறேன்? எதை இங்கே விட்டுவிட்டுப் போகப்போகிறேன்? எனக்கு ஏனோ இப்போது அவன் கைகளை முத்தமிடவேண்டும் போல இருந்தது. நான் பேசித்தான் ஆகவேண்டும். அவன் தெரிந்தே தான் என் பலவீனத்தை தொட்டுவிட்டான். இவனை நெருங்கியிருக்கக் கூடாது. இந்த நாளைவிட்டால் இனி இவனுடன் பேச வாய்ப்பிலாமல் போகலாம்.
“ஏழு வருடங்களாக மைதிலியும் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.”

பேசியே விட்டேன். மியா என்னை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு அவளுக்குச் சம்மந்தம் இல்லாதது போல தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். நான் அவனை பார்த்துக்கொண்டே இருந்தேன். இதுவரை நான் அவனைப் பார்ப்பதாலும் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என்றே நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அவனும் என்னைப் பார்ப்பது போல இருந்தது.

“சுந்தர் சார்!”, விக்ரமின் குரலில் பரவசமும் பற்றிக்கொண்டது. பேசியது என் குரல்தான் என்பதில் அவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அவன் குரலில் இருந்த ஏதோ ஒரு மாற்றம் அதை நான் பரிபூரணமாக நம்பும்படிச் செய்தது. அவன் என்னை அடையாளம் கண்டுவிட்டான். இப்போதில்லை. எப்போதோ அடையாளம் கண்டுபிடித்துவிட்டான். அவனுக்கே தெரிந்திராத எனக்காகத்தான் இந்தனை மாதங்களாக அவன் இங்கே வருகிறானோ என்னவோ?

என் கால்கள் தடுமாறுவது போல இருந்தன. நான் இப்போது உட்கார வேண்டும். அவனை விக்ரம் என்று பெயர் சொல்லி அழைக்கத் தயக்கமாய் இருந்தது. அது சுந்தர் அவனுக்குச் சூட்டிய பெயர். கையில் வைத்திருந்த தண்ணீரை அவசர அவசரமாகக் குடித்தேன். நான் முதன்முறையாகத் அவனிடம் தோற்கிறேன் என்ற எண்ணம் வந்தது. உண்மையில் அப்படி இல்லைதான். ஆனாலும் அப்படி நினைத்துக் கொண்டேன். அதுவும் மனதுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. மெதுவாகத் தயங்கியபடி நடந்து அவனை முன்னேறினேன். அவன் பக்கத்தில் சென்று உட்கார்ந்தேன். அந்தப் பூங்காவில் இருந்த எல்லோரும் என்னையே பார்ப்பது போலவும், நான் பேசப்போவதை கேட்கக் காத்திருப்பது போலவும் இருந்தது. அநேகமாக தலையைக் குனிந்தபடி அவனருகில் உட்கார்ந்திருக்கும் என்னைத்தான் அவன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். நிமிர்ந்து பார்க்காமல் மெதுவாக அவன் கையைத் தொட்டேன்.

“உண்மைதான் விக்ரம். ஏழு வருடங்களாக மைதிலியும் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.”
விக்ரமின் விரல்கள் பனியில் நனைந்த புற்களைப் போல அவ்வளவு மிருதுவாக இருந்தன. மெதுவாக நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தேன். அவன் மூடிய இமைகள் துடிப்பதிலிருந்து என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கெல்லாம் அவசியமோ நேரமோ இல்லை. அவன் தன் மற்றொரு கையால் அவனைப் பற்றியிருந்த என் விரல்களைத் பற்றிக்கொண்டான். இதுதான். இந்தத் தருணத்தைத்தான் நான் ஆயுள் முழுவதும் தவிர்க்க விரும்புகிறேன். நல்லவேளையாக விக்ரமால் இந்தச் சொரசொரப்பைப் பார்க்க இயலாது. குறைந்தபட்சம் இவனது இரக்கம் என்னைத் தொட்டதற்குப் பிறகே தொடங்கப் போகிறது.
*
காற்றில் ஈரம் இன்னும் மிச்சம் இருந்தது. அதற்குப்பின் உடலை மென்மையாகத் தழுவும் இதமான வெயில் தொடங்கிவிடும். இங்கிருந்து கிட்டத்தட்ட ஐம்பது அடிகள் நடந்தால் பூங்காவின் வாசலை அடைந்துவிடலாம். அங்கிருந்து வலதுபக்கச் சாலையில் திரும்பி ஓர் இருபத்தைந்து அடிகள் எடுத்துவைத்தால் பொக்கே கடை. கால்களில் சில்லென்று படரும் ஈரத்தையும், முறிக்கப்பட்ட கிளைகளின் பச்சையத்தையும் பல்வேறு மலர்களின் வாசனையையும் பெருமூச்சாய் இழுத்து மனதில் தேக்கிவைத்துக் கொள்ளலாம். எனக்குப் பார்வை இல்லை என்பதாலோ என்னவோ என் பேரை கொஞ்சம் சத்தமாகத்தான் அந்தக் கடைக்காரர் அழைப்பார். என்னால் நன்றாகக் கேட்க முடியும். பார்வை உள்ளவர்களை விடவும் துல்லியமாக ஒலியின் வேறுபாடுகளை என்னால் உணரமுடியும். ஆனால், கடைக்காரர் என் மீது கொஞ்சம் கூடுதலான அக்கறையைத்தான் இப்படி கொஞ்சம் சத்தமாகக் காட்டுகிறார். என்னிடம் தினமும் பூங்கொத்தைத் தரும்போது ஒரு குழந்தையை கொடுப்பது போல அதை ஒரு காகிதத்தில் சுற்றி, என் ஒரு கையில் சாய்த்து, என்னுடைய இன்னொரு கையால் அந்தப் பூங்கொத்தை அணைத்துக்கொள்ளச் செய்வார். ஒவ்வொரு நாளையும் இனிமையாக்க இதுபோன்ற பரிவையும், என் மேல் செலுத்தப்படும் அன்பையும்விட வேறென்ன ஒன்று தேவையாய் இருந்துவிடப்போகிறது. இப்போது அந்தப் பூங்கொத்தின் காகிதம் சுற்றப்பட்ட அடிப்பாகம் மாதிரிதான் என்னைப் பற்றிக்கொண்ட சுந்தர் சாரின் கை இருந்தது.

சுந்தர் சார் கூப்பிடும் “விக்ரம்” நானாகத்தான் இருக்க வேண்டும். இன்னொரு அழகான பெயர். நாட்களைக் கிழித்து வீசுவதைப் போல பெயர்களைக் கிழித்து வீசினாலும் நன்றாகத்தானே இருக்கும். ஒவ்வொரு நாளும் புதிய புதிய பெயர்கள். நான் தொடுவதன் வழியே புரிந்துகொள்ளும் உருவங்களும், கேட்கும் குரல்களும், சுவைகளும் அதிக வித்தியாசங்களைத் தர இயலாமல் ஒரு கட்டத்தில் சலித்துவிடுகின்றன. புதிது புதிதான அடையாளங்களின் வழியாக அவை தன் பரவசத்தை நீட்டித்துக் கொள்வது எனக்கு எவ்வளவு இதமானதாக இருக்கிறது.

“சுந்தர் சார்! உங்கள் கையைப் பிடித்திருப்பது பொக்கேயை பிடித்திருப்பதைப் போல இருக்கு. மைதிலி மேடம் இதையும் சொல்லியிருக்காங்களா?”

சுந்தர் சாரிடம் இருந்து பதில் வரவில்லை. மியா கொஞ்சம் தள்ளி விளையாடிக் கொண்டு இருக்கவேண்டும். தேவையான அளவு நிசப்தம் சூழ்ந்திருந்தது. ஓர் அசைவு புலப்படவேண்டும் அல்லது அவர் குரலாவது கேட்கவேண்டும். என்னால் அடுத்த கேள்விக்குப் போக முடியவில்லை. இப்போது நிச்சயம் சுந்தர் சார் பேசுவார் என்று தோன்றியதால் காத்திருந்தேன்.

சற்று நேரத்திற்குப் பிறகு ஒரு மெலிதான விசும்பல் மட்டும் கேட்கத் தொடங்கியது. மியா சங்கிலியை தரையில் இழுத்தபடி வருவதும் போவதுமாக இருந்தாள். சுந்தர் சார் தான் பிடித்திருந்த என் கையை இறுக்கினாரா அல்லது தளர்த்தினாரா என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் அந்தத் தொடுதலில் ஒருவிதமான ஏக்கத்தின் சாயல் இருந்தது.

“விக்ரம், உண்மையாவே நான் உன் கனவில் வந்தேனா? அதுவும் நகர்வலம் வரும் ராஜாவைப் போல? மியாவுடனா?”

அவர் குரல் கொஞ்சம் குழைவது போல் இருந்தது. காலையில் வாங்கும் மலர்களில் மதியம் தென்படும் ஒரு குழைவைப் போல் அந்தக் குரல் இருந்தது. மனிதனின் குரலில் எவ்வளவு நுட்பங்கள் ஒளிந்திருக்கின்றன? இந்தக் குழைவால் சோகம், நெகிழ்ச்சி, நன்றி, ஏக்கம் என எவ்வளவு உணர்வுகளை கடத்திவிட முடிகிறது. என்னால் சுலபமாக அவர் உணர்வைக் கேட்க முடிகிறது. நான் இப்போது சொல்லவேண்டும். என் கனவை சுந்தர் சாரின் மொழியில் சொல்லவேண்டும். அவர் என்னிடம் கேட்பது நான் பார்த்ததை இல்லை. அவர் பார்க்க விரும்புவதை. நான் ஒரு சித்திரத்தை என் பேச்சின் வழியாக அவருக்கு வரையவேண்டும். அந்தச் சித்திரம் நான் தொட்டு உணர்ந்த முப்பரிமாணங்களை, எனக்கு அறிமுகம் இல்லாத இருபரிமாணக் காட்சிகளில் வரைவது போல இருக்கவேண்டும்.

“ஆமாம் சார். இந்த பூங்காவைப் போன்ற பெரிய அரண்மனை அது. அங்கு நான் நடக்கும் நடைபாதையெங்கும் சீராகச் சமன் செய்யப்பட்டு இருந்தது. எனக்கு எந்தச் சிரமமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்லியிருந்தீங்களாம். எனக்குத் தெரியும் சார். நான் உங்களைப் பார்ப்பதற்காக விடியலுக்கு முன்பே வந்துவிட்டேன். குளிர் அதிகமாக இருந்தது. என்னைப் போலவே உங்களைப் பார்க்கவென்று நிறைய பேர் வந்திருந்தார்கள். அந்த இடமே ஒரே ஆரவாரமாக இருந்தது.”
“மைதிலி வந்திருந்தாளா? கையில் தண்ணீர்ப் பாத்திரம் ஏதும் வைத்திருந்தாளா?” சுந்தர் சார் குரலில் அவசரம் இருந்தது. மைதிலி ஏன் தண்ணீர்ப்பாத்திரம் வைத்திருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், சுந்தர் சாரின் குரல் தேவாலாயத்தில் பாவமன்னிப்புக் கேட்கும் ஒருவனின் குரல் போல இருந்தது.

“தெரியல சார். தூரத்தில் இருந்தாங்க சார். தேவதை மாதிரி…”

“தேவதைகள் தூரத்தில்தான் இருப்பாங்களா, விக்ரம்?”

“தூரம்னா ரொம்ப இல்ல சார். ஒரு ஐம்பது அடி எடுத்துவைக்கும் தூரம்தான் சார். நம்மைப் கவனித்துக்கொள்பவர்கள் ஏதாவது ஒரு சின்ன சப்தம் கேட்டால்கூட நமக்கு ஏதோ ஆபத்துன்னு பதறி ஓடி வந்துவிடும் தூரம்தான். நாம தடுமாறி விழப்போனா சட்டுன்னு ஓடிவந்து வந்து நம் கையை பிடிச்சுத் தூக்குற தூரம்தான். அது நீங்க நினைப்பது போன்று அவ்வளவு தூரம் இல்லை”

உளறுகிறேன்.

ஒழுங்கற்றும், முழுமையற்றும் அலையும் நினைவுகளை திரட்டித்தான் அந்தச் சித்திரத்தை அவருக்கு நான் வரைய வேண்டும். நான் சொல்வதும் அவர் கேட்பதும் வேறு மாதிரியான சித்திரங்களாகக்கூட இருக்கலாம். ஆனால் இருவருமே பார்க்க விரும்புவது ஒரே தரிசனத்தைத்தான். அவருக்கு வேறு எதைப்பற்றியும் சந்திக்கும் சந்தர்ப்பத்தை நான் தர விரும்பவில்லை. எப்படியாவது இந்த உரையாடலைத் தொடரவேண்டும்.
“சார், மியா இன்னும் உயரமா இருந்தா தெரியுமா? அவள் உடலிலிருந்து ஏதோ புதிய வாசனை ஒன்று வந்தது.” பேச்சை வேறு திசைக்கு மாற்றினேன். சுந்தர் சார் நான் சொல்வதைக் கேட்கும் மனநிலையில் இருக்க வேண்டும். எனக்கும் அவரோடு பேசவேண்டும்.

“அவள் வயிற்றில் ஏதாவது காயங்கள் இருந்ததா விக்ரம்?. சின்னதா பிறை மாதிரி…”

“நிச்சயம் இல்லை சார். அவள் தோலில் மிருது கூடியிருந்தது. என்னைப் பார்த்ததும் ஓடிவந்து என் மார்பில் ஏறினாள். என் மீது அவள் உடலைச் சரித்து, தன்னுடைய உடலை அசைத்து அசைத்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள். என் முகத்தை நக்கினாள். ரொம்ப திடமாக இருந்தா சார்.”  சுந்தர் சார் இதைத்தான் எதிர்பார்க்கிறாரா என்ற சந்தேகம் வந்தது. அவர் அசைவுகளோ சப்தங்களோ இல்லாமல் இருந்தார்.

“சார். அவளால் ஒரு நிமிடம்கூட என்னிடம் இருக்க முடியவில்லை. நாம் பேசுவதை உங்களிடமிருந்து எனக்கும், என்னிடம் இருந்து உங்களுக்கும் அவள்தான் ஓடி ஓடிச் சொல்லிக்கொண்டு இருந்தாள். ஆரம்பத்தில் நீங்கள் பேசவே இல்லை. உங்கள் குரல் கேட்கவே இல்லை. ஆனால், மியா நம் இருவருக்கும் இடையே அப்போதும் பேசிக்கொண்டேதான் இருந்தாள். அவளுக்கு உங்கள் மேல்தான் பாசம் அதிகம், சார். உங்களிடம் இருந்த அதே கம்பீரத்தை அவளும் தன் நடையில் இருப்பதாகக் காட்டிக்கொண்டாள். தரையில் புரளும் அதன் சங்கிலி உங்கள் கைகளில் சுற்றப்பட்டு இருக்கிறதா என்று அடிக்கடி நின்று கவனித்துக் கொண்டாள்.” எனக்கே கொஞ்சம் அதீதமாக இருந்தது. இருந்தாலும் மனம் அதீதத்தை மறைமுகமாக விரும்பியபடியே இருக்கிறதே! மியாவிடமிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. ஒருவேளை அவள் புற்களில் படுத்துக்கொண்டு எங்கள் இருவர் முகங்களையும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

“நான் என்ன மாதிரியான உடை அணிந்திருந்தேன் விக்ரம். உடலெல்லாம் மறையும்படியா? வெளிச்சம் என் மீது படும்படியா? என்ன நிறத்தில்?” அவர் உடலும் குரலும் தளர்ந்தது போல் இருந்தது. என்னிடம் இருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட உடைகளைப் பற்றிய நினைவு வந்தது. அலமாரியிலிருந்து எடுக்கும்போதும் அதை அணிந்து கொள்ளும் போதும் அந்த உடைகளின் இருப்பை உணர்ந்திருக்கிறேன். உடலை அதிகம் உறுத்தாத உடைகள். மற்றதெல்லாம் பிறர் சொல்வதுதான்.

எனக்கு கனவிலும் நிஜத்திலும் தெரியும் உருவங்களுக்கோ, உடைகளுக்கோ பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஒருவேளை சுந்தர் சாரின் கனவுகளில் அப்படி ஏதும் வித்தியாசங்கள் இருக்குமா என்று தெரியவில்லை. என்னிடம் சிலர் அவர்கள் தங்களுடைய கனவுகளில் தண்ணீரின் மீது நடந்ததாகவும், வான்வெளியில் மிதந்தாகவும் சொல்லியிருக்கின்றனர். தங்கள் பரவசத்தை படமாக வரைந்து காட்டியிருக்கின்றனர். சிறிய பறவையின் மிருதுவான இறகினையும், கண்ணாடித் தொட்டியில் அலைந்துகொண்டிருக்கும் மீனின் அழகிய துடுப்புகளையும் என்னைப் போன்ற ஒரு மனித உடலுக்குப் பொருத்தி என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. மேலும் நான் உணர்ந்த தனித்தனியான இந்த முப்பரிணாம உருவங்களை வரைபடமாக என்னால் உணர முடிந்ததில்லை. இருந்தாலும் நான் சுந்தர் சாருக்கு அந்தக் காட்சியை சொல்லியே ஆகவேண்டும். உடையை மட்டும் என்னால் சொல்ல இயலாது என்றுத் தோன்றியது.

“சார், முதலில் பளிங்குத் தரையில் சங்கிலிகள் உரசும் சப்தம் கேட்டது. உங்கள் பெயரைச் சொல்லி எல்லோரும் எழுப்பிய ஆராவாரம் காதைப் பிளந்தது. அந்த இடத்தை புதுவிதமான பசுமையின் நறுமணம் நிறைந்திருந்தது. அவ்வளவு இரைச்சல்களுக்கு மத்தியிலும் உங்கள் காலடி ஓசை எனக்குத் தெளிவாகக் கேட்டது. வழுவழுப்பான ரோஜா மலரின் இதழைப் போன்றதொரு மென்மையான அங்கியை அணிந்திருந்தீங்க சுந்தர் சார். அதற்கு மேல் முன்பக்கம் திறந்திருக்கும் ஆளுயர மேலங்கியை அணிந்திருந்தீங்க. ஒரு மதிய நேர வெப்பத்தைப் போன்றதொரு சிவப்புநிறம் சார். சார், மியாவின் தோலைப் போல இந்த உடை மினுமினுப்பாக இருந்தது. தலையில் சின்னதாய் மலர்கள் வேயப்பட்ட ஒரு கிரீடம். கடலின் நீல நிறத்திலான ஒரு கல் பதிக்கப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட தேவதைகள் வைத்திருப்பதைப் போன்ற ஒரு வெண்ணிற கோலை கையில் வைத்திருந்தீர்கள். அதன் முனையில் பறவையின் மெல்லிய இறகுகள் பொருத்தப்பட்டிருந்தன. முனைகள் கூராக இல்லாமல் பஞ்சினால் சுற்றப்பட்ட காலணிகளை அணிந்திருந்தீங்க. ஒரு ராஜாவை இவ்வளவு கருணை பொருந்திய கம்பீரத்துடன் பார்க்கவே முடியாது சுந்தர் சார்.”

நான் கேட்ட ராஜாக்களையும், துண்டு துண்டாக சிதறிக்கிடக்கும் அந்தக் கனவில் கிடந்த சத்தங்களையும், அரூபங்களையும் சுந்தர் சாரின் எதிர்பார்ப்புகளையும் சேர்த்து சேர்த்து என் கனவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உயிரூட்டிக்கொண்டு இருந்தேன்.

“கூட்டத்திலிருந்த நான் என் கைகளை உயர்த்தி சத்தமாக உங்களிடம் ‘என்னைத் தெரிகிறதா?’ என்று கேட்டேன். நீங்கள் பதில் சொல்லவேயில்லை சார். ஆனால் நீங்கள் என்னைப் பார்த்து நிச்சயம் புன்னகைத்திருக்க வேண்டும். அப்போது என் உதடுகளில் லேசான துடிப்பு இருந்தது. நானும் அப்போது புன்னகைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைக் கடந்து செல்லும்போது மட்டும் மெதுவாக நடந்தீங்க. நானும் மியாவும் உற்சாகமாய் இருந்தோம். அவள் தோளில் மேலும் மிருது கூடியிருந்தது. சிறிது நேரம் நின்று மியா என் முகத்தை ஆவேசமாக நக்கினாள். நான் மீண்டும் ஆவேசமாக உங்களைப் பார்த்து , “சார் ராஜா மாதிரி இருக்கீங்க”, என்று கத்தினேன்.”

என்னால் என்னை நிறுத்த முடியவில்லை. சுந்தர் சாருக்கு நான் மறுபடியும் மறுபடியும் தொடர்பற்ற காட்சிகளை சொல்லத் தொடங்கினேன். எனக்கு நூறு அடிகளுக்கு அப்பால் இருந்து சங்கிலி தரையில் உரச வழவழப்பான தோலுடன் ஓடிவரும் மியாவை, “தொலை தூரத்திலிருந்து அசைந்து வரும் ஒளிபொருந்திய வெண்பஞ்சுப் பொதியைப் போன்ற என் நாய்க்குட்டி” என்றேன். இரண்டும் ஒன்றுதானே? மியா என் முகத்தை நக்கும்போது பரவும் நீர்மையை, வெம்மையும் குளிருமாய் தோலை உறுத்தாமல் வருடும் அதிகாலை நேரத்தை, மதிய நேர சிவப்பை, திடீரென்று மியா வயிற்றில் புரளும் என் கைகளில் இடறும் பிறை வடிவத் தழும்பை, நான் பாடும் பாடலில் வரும் ஓர் இசைக்குறிப்பின் கம்பீரத்தை எனச் சொல்லிக்கொண்டே இருந்தேன். அரவமற்ற தெருவில் ஒலிக்கும் சிறு ஓசைக்கும், காதுகளை விடைத்தவாறு தலையை உயர்த்திப் பார்க்கும் என் அதீத உணர்வுகளையும், கண்களை மூடியபடி படுத்திருக்கும் இரவின் முகத்தையும், அந்த இரவின் முகத்தைத் தன் ஈரமான நாவினால் நக்கிக் கொடுக்கும் அவர் அன்பையும் சொன்னேன். ஒரு நாய்க்குட்டியாகவும், என் இரவின் ஆன்மாவாகவும் புரண்டுகொண்டிருக்கும் ஒரு கனவைச் சொன்னேன். ஒரு பார்வையற்றவனின் கனவின் உன்னதங்களைச் சொன்னேன். காட்சிகளுக்குப் புலப்படாத என் வாழ்வின் மேன்மைகளைச் சொன்னேன். எனக்குப் பித்துப் பிடித்தது போல் இருந்தது.

சுந்தர் சார் என் தோளில் சரிந்து தன் முகத்தைப் புதைத்துக் கொண்டார். அப்போதுதான் என் கனவிலிருந்து எனக்கு விழிப்பு வந்தது போல இருந்தது. நிச்சயம் விழிப்பும் கனவும் வெவ்வேறாக இருந்தன. சுந்தர் சாரிடமிருந்து வரும் வார்த்தைகள் மேலும் மேலும் குழையத் தொடங்கின. மீண்டும் அவர் விசும்பல் அதிகமானது. நான் அவரை ஆதரவாக இழுத்து என் மார்பில் தாங்கிக் கொண்டேன்.

பின்னர் அவர் காதில் மெதுவாக “சார். ஒரு பொக்கே சரிந்து என் மேல் விழுந்து கிடப்பதைப் போல்”, என்றேன்.

திடீரென்று தன் பலத்தையெல்லாம் திரட்டி ஒரு புயல் காற்றின் வேகத்தோடு என்னை இறுக்கிக் கொண்டு ஓவென அழத் தொடங்கினார். மியா வேகவேகமாகக் குரைத்தபடி சங்கிலியை இங்கும் அங்கும் இழுத்தாள். சட சடவென சுற்றிலும் இருந்த மரங்கள் கிளைகள் முறிந்து விழுவது போல இருந்தது. நின்ற இடத்திலேயே புதைக்கும் மூர்க்கத்துடன் ஒரு மௌனம் எங்களை அழுத்தியது. இருவருமாக ஒரு பரவசத்தின் உச்சத்தில் திளைத்திருந்தோம். நான் பேசுவதை முழுமையாக நிறுத்தினேன். என்னால் இந்தக் கனத்தைத் தாங்க இயலவில்லை. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. சுந்தர் சார் துவண்டுபோய் என் மீது சரிந்தார். தேவைக்கு அதிகமான நிசப்தத்தில் அவர் விசும்பல் மட்டும் ஊடுருவிக்கொண்டு இருந்தது. சுற்றிலும் காலடிச் சத்தங்கள் குறைந்தது யாராவது நின்று வேடிக்கைப் பார்க்கிறார்களா என்ற சந்தேகத்தை எனக்குத் தந்தது. சுந்தர் சார் உடலும் குரலும் ஆசுவாசம் அடையும் வரை அவரை அணைத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் என் முதுகில் ஈரமாக கரையத் தொடங்கினார். மறுபடியும் நிசப்தம் திரும்பும் வரை காத்திருந்தேன். மியா இப்போது கொஞ்சம் அமைதி அடைந்திருக்க வேண்டும். கால்களுக்கு நடுவில் குழைந்தபடி என்னை நக்கத் தொடங்கினாள். முகத்தில் ஏறிக்கொண்டிருந்த வெப்பம், வானம் நீல நிறத்தை அடைந்திருப்பதை உணர்த்தியது.

என்னால் சுந்தர் சாரை இப்போது முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

“மைதிலி மேடம் இப்படித்தான் சொன்னாங்களா சார்? நாளைக்கு அவங்களை அழைச்சிட்டு வாங்க”, என்றேன்.

“விக்ரம், நாளைக்கு நான் வருவேனான்னு தெரியாது. அவங்க மியாவோடு வரலாம்.” சுந்தர் சாரின் பிடி நழுவியது போல இருந்தது. லேசான பதட்டம் என்னைத் தொற்றிக்கொண்டது. சுந்தர் சார் தடுமாறியபடி எழுந்தார்.

“சார், நான் வேணும்னா உங்களோட வரவா சார்”, என்றேன்.

“நீ தேவதைகளை பார்த்ததுண்டா? அவர்களுக்காக கனவு கண்டதுண்டா விக்ரம்?” சுந்தர் சாரின் குரல் ஒரு குழந்தையின் குரலைப் போல் இருந்தது. கையில் தண்ணீர்ப்பாத்திரத்துடன் நடந்துவரும் மைதிலியின் குரலைக் கேட்கவேண்டும் போல் இருந்தது. முதன்முறையாக என்னிடம் பதில் இல்லாமல் தவித்தேன்.  சுந்தர் சார் மீண்டும் என்னை நெருங்கி வந்தார். என் தலையில் தன் கையை வைத்துக் கோதினார். பின்னர் அவர் விரல்கள் என் நெற்றியில் அலைந்து இமைகளில் இறங்கின.

“கனவு காண்பதை மட்டும் நிறுத்திடாதே விக்ரம்”, என்றார்.

இன்னும் அடர்வான ஓர் உலகம் எனக்குள் திறந்துகொண்டது. எனக்குப் பிடித்த அந்த உலகில் பார்வை குறித்தான எந்தத் தேவையும் எனக்கு இருந்ததில்லை. பார்வை என்பது எனக்குப் புறஉலகின் ஒரு பண்பு மட்டுமே. என் அக உலகில் எது ஒளி எது இருள் என்ற கேள்விகள் இல்லை. என்னால் எல்லாவற்றையும் உணர்ந்துகொள்ள முடிந்ததே எனக்குப் போதுமானதாக இருந்தது. என் உலகில் புற உலக பேதங்களுக்கு இடம் இருந்தே இல்லை.

சுந்தர் சார் தன்னை என்னிடமிருந்து விடுவித்துக் கொள்ள முயன்றார். மியாவின் சங்கிலியை அவர் கைகளில் இருந்து கழற்றி என் கைகளில் சுற்றினார். என்னிடமிருந்து சில அடிகள் விலகினார். பின்னர் என்னை நோக்கித் திரும்பியிருக்கக் கூடும். நான் அவர் முகத்திற்கு நேர்க்கோட்டில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது மியா என் மடியில் கிடந்தாள். சுந்தர் சார் என் நெற்றியை தடவியது போல இருந்தது. நான் மியாவின் நெற்றியில் என் விரல்களால் அலைந்து கொண்டிருந்தேன். சுந்தர் சார் மீண்டும் தன் கட்டுப்பாட்டை இழப்பது போல இருந்தது. என் மீது மலரின் பொதி ஒன்று விழுந்து அழுத்துவது போல் இருந்தது.

“விக்ரம், எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக இருட்டுவது போல் இருக்கிறது.” சுந்தர் சாரின் குரல் தெளிவில்லாமல் கேட்டது.

ஓர் இருள் இன்னொரு இருளின் மீது கவிழ்ந்தது. அது பேரொளியாய் தன்னுள் அனைத்தையும் வாரிச் சுருட்டிக்கொண்டது..


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular