பார்வை
1)
அவர் புன்னகை முகத்துடன் இருந்தார். நிறைய எடை உள்ளவராக இருந்தார். தொப்பை பெரியதாக இருந்தது. அருகில் ஈர்ப்பான வடிவமும் முகமும் கொண்ட பேரிளம் பெண் உட்கார்ந்திருந்தாள். அவருடைய இரண்டாவது மனைவியாக இருக்கக்கூடும். அவர் பட்டிமன்ற பேச்சாளர். கேட்பவர்களுக்கு சிரிப்பு வரும்படி பேசக் கூடியவர். பேரிளம் பெண்தான் அவருடைய உதவியாளராகவும் காரியதரிசியாகவும் இருக்கிறாள் என்பதை அவள் செயல்கள் மூலம் அறிந்தேன். விரைவு ரயிலில் இரண்டு நபர்கள் உட்காரும் வரிசையில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். நான் மூன்று நபர்கள் உட்காரும் வரிசையில் ஒர இருக்கையில் நடை பாதைக்கு இந்தப் பக்கம் உட்கார்ந்திருந்தேன். மூன்று அடி இடைவெளி எங்கள் இருவருக்கும் இடையே இருந்தது. பேரிளம்பெண் ஒர இருக்கையிலும் பட்டிமன்ற பேச்சாளர் ஜன்னலோரமாகவும் அமர்ந்திருந்தார்கள். நான் அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என்னைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. நான் இருக்கும் இடத்திலிருந்து அவர்களை நன்றாகப் பார்க்க முடிந்தது. கேட்டரிங்கிலிருந்து முதலில் கேசரி வந்தது. கேசரி வாங்கி இருவரும் சாப்பிட்டார்கள். அவள் அவருக்கு தண்ணீர் ஊற்றிக் கொடுத்தாள். துடைப்பதற்கு துண்டை எடுத்துக் கொடுத்தாள். நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணுகிறவர்களிடம் அலைபேசியில் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தாள். பட்டிமன்ற பேச்சாளர் புன்னகை மாறாத முகத்துடன் இருந்தார்.
திடீரென்று சற்றுக் கிழவித் தோற்றத்தில் ஒரு பெண் யாரையோ தேடி வந்து கொண்டிருந்தாள். எங்கள் இடத்துக்கு வந்ததும் அந்தப் பேரிளம் பெண்ணை அடிக்க ஆரம்பித்தாள். அவளும் திருப்பி அடித்தாள். பேச்சாளரின் முகம் மாறியது. ஆனாலும் புன்னகை மறைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றியது. பெண்கள் இருவரும் பேசிக்கொண்டதிலிருந்து வந்த பெண் அவரின் முதல் மனைவி என்பதை அறிந்து கொண்டேன். எங்கள் பெட்டியில் இருந்தவர்கள் எழுந்து நின்று நடப்பதைப் பார்த்தார்கள். நான் இருவரையும் விலக்கி விட்டேன். வந்த பெண்ணிடம் நான் பேசினேன்; ‘இவுங்க மாதிரி உங்களுக்கு செக்ரெட்டரி வேலை பாக்க முடியுமா. உங்களுக்கு வேற குறை இல்லை தானே’. அந்தப் பெண் தலையாட்டினாள். ‘பேசாமப் போங்க’ என்றேன். நான் ஆச்சரியப்படும்படியாக அவள் சென்றுவிட்டாள். பேரிளம்பெண் என்னைப் பார்த்துச் சிரித்தாள். பேச்சாளர் புன்னகை முகத்துடனேயே இருந்தார். அவள் எழுந்து எங்கள் இருக்கைகளுக்கு பின்புறம் இருந்த கதவைத் திறந்து வெளியே சென்றாள். நான் திரும்பிப் பார்த்தேன். அவள் என்னை அழைத்தாள். நான் எழுந்து சென்றேன். ‘உங்களுக்கு அவளைத் தெரியுமா’ என்று கேட்டாள். நான் ‘தெரியாது’ என்றேன். ‘உங்களிடம் மந்திர சக்தி இருக்கு. அதான் நீங்க சொன்ன உடனே அவ போயிட்டா’ என்றாள். அக்கம்பக்கம் பார்த்து அதிர்ஷ்டக்காரனும் அற்பனுமான என்னை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். கைப்பையைத் திறந்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் ஐந்தை எடுத்து என் சட்டைப்பையில் திணித்தாள். பிறகு அவள் தன்னுடைய இருக்கைக்குச் சென்றுவிட்டாள். நான் சென்று என்னுடைய இருக்கையில் அமர்ந்துகொண்டேன். பேச்சாளரின் முதல் மனைவி என் பேச்சுக்கு மறு பேச்சில்லாமல் ஏன் சென்றாள் என்று எனக்குத் தெரியவில்லை. அவள் திரும்பிச் செல்லும் முன் என்னைப் பார்த்த பார்வை என் நினைவில் இருக்கிறது.
***
இறந்த பெண்.
2)
கெட்டவனான நான் ஆதரவற்ற பெண் முதியோர்களுக்காக ஓர் ஆதரவு நிலையம் நடத்துகிறேன். அநாதைப் பெண் குழந்தைகளின் பராமரிப்பிற்காக ஒரு விடுதி நடத்துகிறேன். தூத்துக்குடி துறைமுகத்தில் எங்கள் தொழில் நடக்கிறது. எங்கள் எதிர் கோஷ்டிகளின் தொழில் நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதியில் நடக்கிறது. எங்களின் தலைமை பம்பாயில் இயங்குகிறது. என்னைப் போட்டுத்தள்ள எதிர் கோஷ்டியினர் மும்முரமாக இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்தது. நான் பெண் தெய்வங்களை வணங்குவதாலும் பெண்கள் மீது கருணை கொண்டவனாக இருப்பதாலும் ஒரு பெண்ணை என்முன் நிறுத்திப் பின்னால் இருந்து என்னைச் சுடுவதாக ஏற்பாடு என்று தகவல் கிடைத்தது. ‘முட்டாள்களாக இருக்கிறார்கள். இப்படியெல்லாமா ஒருவருக்கு கற்பனை செல்லும். நான் என்ன பீஷ்மரா ஆயுதத்தை துறந்து நிற்க. அந்தப் பெண்ணும் சேர்ந்து சாகப்போகிறாள்’ என்று நினைத்துக் கொண்டேன். என் ஆட்களைக் கூப்பிட்டு எனக்கு ஏதாவது நடந்தால் அவர்களை வேரோடு அழித்துவிட வேண்டும் என்று சொன்னேன்.
நான் என் பாதுகாவலர்களுடன் கோயிலிலிருந்து வெளியேறிக் காரை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு கார் வந்து நிற்பதைப் பார்த்தேன். காரிலிருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண் இறங்குவதைப் பார்த்தேன். சற்று நின்றேன். அந்தப் பெண்ணைப் பார்த்துப் பரிதாபப்பட்டேன். ஏற்கனவே நான் ஜிப்பாவிற்குள் இரண்டு கைகளையும் விட்டிருந்தேன். காரிலிருந்து இருவர் இறங்கி அவள் பின்னால் நிற்கப் போவதை அறிந்தேன். இரண்டு கைகளாலும் சுடப்பழகியிருந்த நான் ஜிப்பாவிலிருந்த துப்பாக்கியை எடுத்து இரக்கமில்லாமல் அந்த துர்பாக்யசாலிப் பெண்ணை நோக்கி ஒரு நொடியில் இரண்டு கைகளாலும் சுட்டேன். அவள் கீழே விழுந்தாள். பின்னால் நின்ற இருவரும் காரி ஏறிக் கிளம்பினார்கள். நானும் பாதுகாவலர்களுடன் காரில் ஏறிச் சென்றேன். என் ஆட்களை சரணடையச் சொன்னேன். இப்படி ஒரு விசித்திரமான திட்டத்தை என்னைக் கொல்லத் தீட்டிய நபர் யாரென்று தெரியவில்லை. இந்த சிந்தனையை எதிர் கோஷ்டியினரின் நம்பிக்கைக்கு உரிய மலையாள மாந்திரீகர் சொன்னார் என்பதைப் பின்னால் அறிந்தேன். யார் என்றே தெரியாத அந்தப் பெண் பலியாகிவிட்டாள்.
பம்பாயிலிருந்த எங்கள் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினராகி விட்டார். என்னை சட்டமன்ற உறுப்பினாராகும்படி எங்கள் தலைவர் கூறினார். தமிழ்நாட்டில் அது சாத்தியமில்லை என்பதால் கவுன்சிலராகி விட்டேன். அந்த மாந்த்ரீகவாதி பெரிய பாபத்தைச் செய்துவிட்டார் என்று எனக்குத் தோன்றிக்கொண்டே இருக்கிறது.
***
சுரேஷ்குமார இந்திரஜித்