நாஞ்சில்நாடன்
பழைய சினிமாக்களில், கதைகளில், பெற்ற தாய் அடம்பிடிக்கிற, சேட்டை செய்கிற மகனைப் பார்த்துப் “பொலி போட்டிருவேன்” எனச் சினந்து உரைப்பதைக் கேட்டிருப்போம். அந்தச் சொற்றொடர் எம்மண்ணின் பிறப்பு அல்ல. மாறாக, “வெட்டிக் கூறு போட்டிருவேன்” அல்லது “கொண்ணே போட்டுருவேன்” என்பார்கள். முரண்டு பிடிக்கும் சொந்தப் பிள்ளைகளை வெருட்டும்போது இந்தப் பொலி போடுதல், வெட்டிக் கூறு போடுதல், கொன்று போடுதல் என்பதற்கு சினந்து கண்டிக்கும் பொருளேயன்றி அகராதிப் பொருள் கொளல் ஆகா. அண்மையில் நாம் செவிப்பட்ட சொற்றொடர், “சோலியை முடிச்சிருவேன்” என்பதுவும் அத்தன்மையதே!
ஆனால் தீவிரமான அர்த்தத்தில் பொலி போடுதல் என்றால் கொன்று போடுதல் என மனதில் குறித்துக் கொண்டேன். ஒருவேளை பலி போட்டு விடுவேன் என்பதைத்தான் பொலி போட்டு விடுவேன் என்று சொன்னார்களோ என்று யோசித்துப் பார்க்கும் அளவுக்கு நமக்குத் தமிழின் வேர்ச்சொல் அறிவும் இல்லை, படிப்பும் இல்லை, கேள்வி ஞானமும் இல்லை. சபை நடுவே நீட்டோலை வாசிக்கத் தெரிந்தவன் எல்லாம் இங்கு தமிழறிஞர் எனும் விருதுக்குத் தகுதியானவனே!
பொலி எனும் சொல்லெனக்கு ஐந்தாறு வயதில் அறிமுகம் ஆகியிருக்கும். 1977-ம் ஆண்டு நானெழுதிய பதினைந்தாம் சிறுகதை ‘வாய் கசந்தது’. அதில் பொலி எனும் சொல்லைப் பலமுறை பயன்படுத்தி இருக்கிறேன். எண்பது கதைகள் கொண்ட ‘நாஞ்சில் நாடன் கதைகள்’ தொகுப்பில் அந்தக்கதை கிடக்கும். தமிழினி வெளியீடு.
பொலி வீசுதல், பொலி கூட்டுதல், பொலி அளத்தல், பொலி எத்தனை மேனி கண்டது, மாடு பொலியில் வாய் வைக்கிறது என்றெல்லாம் பிரயோகங்கள் உண்டு. ஆறேழு வயதிருக்கும் போதே நமக்கு விவசாயம் தொடர்பான விடயங்கள் அறிமுகமாகத் தொடங்கி விட்டன. கிழமேற்காகத் தெற்குப்பார்த்த நீண்ட மாட்டுத் தொழுவத்தில் ஒரு எருமை, ஒரு கிழட்டுக்கடா, ஒரு கிடாக்கன்று கிடக்கும். கிழட்டுக் கடாவும் கிடாக்கன்றும் கலப்பை இழுக்கும், மரமடிக்கும். எருமை ஈன்றுயீன்று பால்கறக்கும். பெரும்பாலும் எருமைக் கன்றுகள் தங்குவது பராமரிப்பைப் பொறுத்தது. அப்படித் தங்கினாலும், கிடேரி என்றால், பால்குடி மாறிய பிறகு, ஏதேனும் தேவைக்குக் கிடேரியை அப்பா விற்று விடுவார்.
மூன்று உருப்படிகள் கிடந்த தொழுவில் மேற்கு மூலையில் கலப்பை, நுகம், மரம், வள்ளக்கை என சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். தேங்காய்ச் சவுரி நாரில் முறுக்கிய உழவுக்கயிறும், எருமை மாட்டின் சந்துப் பகுதி நீளத்தோலில் செய்த தொடைக்கயிறும் தொங்கிக்கிடக்கும். வள்ளக்கையையும் மரத்தையும் பிணைக்கும் குறுங்கா வளையம் நான்று கிடக்கும். தொழுவத்தின் கூடைக்கும் அதன் கீழ் கல்தூண்களின் மீது பொருத்தப்பட்டிருக்கும் செவ்வகச் சட்டகத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் பொழித்தட்டுப் பலகை, இறைவட்டி, பனைநார்ப் பெட்டி, பனையோலைக் கடவம், பிரம்புக்கூடை கிடக்கும்.
கூரைவீடு தென்வடலானது. வாசல் மேற்குப் பார்த்து. நடுவில் சிறியதோர் முற்றமும் முற்றத்தின் மேற்றிசையில் ஒட்டுப் படிப்புரையும். ஒட்டுப் படிப்புரையின் வடக்கு மூலையில் இரண்டு வெட்டுக்குத்தியும் புல்லறுக்கும் – கதிர் அறுக்கும் பன்னரிவாள் மூன்றும் கூரையின் நெடிய பனங்கம்பில் மாட்டிய வளையத்தில் தொங்கும். மூலைச்சுவரோடு சார்த்தப்பட்ட கோடி மண்வெட்டி, கட்டை மண்வெட்டி, ஊடு மண்வெட்டி, களை பறண்டி எனக் கிடக்கும். கூரையின் பனங்கையில் இருந்து உமிக்கரிப்பட்டை தொங்கும். சற்று நீங்கி திருநீற்றுப்பட்டை தொங்கும். ஒரு வேறுபாடு – பல் துலக்கும் உமிக்கரிப்பட்டை பனையோலையில் முடைந்தது. திருநீற்றுப்பட்டை கமுகம் பாளையில் செய்தது. கமுகம்பாளை என நான் சொல்வது பாக்குமட்டை. சில வீடுகளில் திருநீறு போட்டு வைக்க என பெரிய ஆண்முறிச் சிரட்டையில் எதிரெதிரே விளிம்பில் தமிர் போட்டு மணிக்கொச்சக் கயிற்றில் கட்டி எரவாணத்தில் தொங்க விட்டிருப்பார்கள். திருநீற்றுப் பட்டையை விபூதிப்பட்டை எனவும் சொல்வார்.
நடுவில் முற்றம் கொண்ட, இரு பகுதிகளிலான தென்னை ஓலைக் கூரை வீடே ஆனாலும் அரங்கு எனப்படும் முறியொன்று உண்டு. முறி என்றால் என்னவென்று கேட்டால் மேலும் சில சொல்வேன் கிடைமுறி, பேற்று முறி, அடுக்களை முறி, குளிமுறி என. அரங்கு முறியில்தான் அரிசிப்பானை, புளிப்பானை, உப்புப்பானை, கருப்பட்டிப் பானை, ஊறுகாய்ப் பானை, அவல் பானை, வத்தல்மிளகாய், உளுந்து, பயிறு, பருப்பு, வற்றல், வடகம் எனப் போட்டு அடைந்து வைக்கும் மண்பானைகள் வெவ்வேறு தரத்தில் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். பால், தயிர், வெண்ணெய்க் கலயங்கள் அடுக்களை முறியில் உறியில் தொங்கிக் கிடக்கும். அரங்கில் இரண்டு பெரிய மண்பானைகளில் தனித்தனியாக ஆடவர் பெண்டிரின் துவைத்துக் காயவைத்த துணிகள் மடித்துத் திணிக்கப்பட்டிருக்கும். இரண்டடி நீளத்தில் ஒன்றரையடி அகலத்தில் இரண்டரையடி உயரத்தில் கால் வைத்த மரப்பெட்டி ஒன்றும் நின்றிருக்கும். தாத்தா காலத்துப் பெட்டகம். தோதகத்தி மரப்பணி.
அந்தப் பெட்டியினுள் மூன்றரை சென்ட் நிலத்தின் பிரமாணம் கிடக்கும். மூன்றரை சென்ட் நிலத்தினுள் மாட்டுத் தொழுவம், கூரை வீடு, இரண்டு தென்னை மரங்கள், ஒரு முருங்கை, ஒரு கறிவேப்பிலை, மாடுகள் தண்ணீர் குடிக்கும் மூன்றடி விட்டமும் மூன்றடி உயரமும் கொண்ட வட்டமான கல்தொட்டியும் மூன்று எருமை மாடுகளுமான தாவர சங்கம சொத்துக்கள். வீட்டுப் பிரமாணம் என்ற மனைப்பத்திரம் மலையாளத்தில் எழுதிப் பதியப்பெற்றவை. அதல்லாமல் பனையோலையில் எழுதப்பெற்ற சாதக நறுக்குகள். மேலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்து மன்னர் தலையும் சங்கு முத்திரையும் இருபுறமும் கொண்ட ஒரு சக்கரம், அரைச்சக்கரம், கால் சக்கரம், செப்புக்காசு நாணயங்கள். செல்லாமற்போன செப்புக் காலணா, ஓட்டைக் காலணா, பித்தளை அரையணா நாணயங்கள். இவை யாவும் கொண்ட அப்பாவின் சொத்தான பெட்டகத்தை அம்மை ஒழுக்கறைப் பெட்டி எனக் கேலி பேசுவாள்.
கோட்டைக் கடன் வாங்கும், முன்னறுப்புக்கு நெல்வாங்கும், ரூபாய்க்கு ஓரணாப் பலிசைக்கு கடன் வாங்கும் ஓர்நேர் சம்சாரி வீட்டில் என்ன முதல் இருக்கும் வேறு? அம்மா கையில் கண்ணாடி வளையல்கள் அன்றி தங்கக்காப்பு கண்ட ஓர்மை இல்லை எனக்கு. காது மூளியாகாமல் கல் வைத்த கம்மல்கள் நிரந்தரம். தாலி கோர்த்திருந்த நான்கு கழஞ்சு பொற்கொடி கிடக்கும் கழுத்தில். அது எல்லாப் பூவிலும் உரம்போடக் களைபறிக்க என்று பணயம் போய் மீளும். இருபத்தாறாம் வயதில் அப்பாவும் பதினெட்டு வயதில் அம்மாவும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்த இருபத்தொன்பது ஆண்டு காலத்தில் ஐம்பத்தெட்டு பருவப் பூக்கள் பயிர் செய்திருப்பார்கள். அப்பா ஐம்பதுக்கும் குறையாத தவணைகள் அம்மாவின் தாலிக்கொடியைப் பணயம் வைத்திருப்பார்.
பணயம் பிடிக்க என உள்ளூரில் ஆட்கள் இருந்தனர். நம்பிக்கையின் அடிப்படையில் சங்கிலியின் மாற்றுப் பார்க்க அவர்கள் உரைத்துப் பார்ப்பதில்லை. வங்கிகளில் அடமானம் வைத்திருந்தால், ஐம்பதுக்கும் குறையாத முறை உரைத்துப் பார்த்திருந்தால் தங்கச் சங்கிலியில் ஒரு கழஞ்சு தேய்ந்திருக்கும்.
எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் – உழவன் கணக்குப் பார்த்தால் உழவு கம்புதான் மிஞ்சும் என்பதற்காக.
சரி! நெடுந்தூரம் விலகி நடந்துவிட்டுப் பொலிக்குத் திரும்புகிறோம் இப்போது! அரங்கில் அப்பாவின் பெட்டகத்தின் பக்கம் இரண்டு மரக்கால்கள் கிடக்கும். அதன் உள்ளே பக்கா, நாழி, உரி, உழக்கு, ஆழாக்கு முகத்தல் அளவுக் கருவிகள். இரும்புத் தகட்டில் செய்தவை. இரு விளிம்புகளிலும் பித்தளைத் தகட்டுப் பூண் போடப்பட்டிருக்கும். முகத்தல் அளவு என்பது அன்று கூம்பாரமாகக் கோரி அளப்பது. உடனே எண்ணெய் எப்படி அளப்பீர்கள் என்று கேளாதீர்! மலையாளத்தில் நெல்லளக்கும் உபகரணம் பறை. நாழி, இடங்கழி சிறு அளவைகள். நாஞ்சில் நாட்டில் நெல்லின் அளவைக் கோட்டை, பதக்கு, குறுணி எனும்போது, மலையாளத்தில் பறை. பறை என்ற தாள வாத்தியக் கருவி வேறு. பறையை இன்றைய லிட்டர் போல் அளப்பார்கள். மரக்காலைக் கூம்பாரமாகவும்.
எனக்குப் பன்னிரண்டு வயதிருக்கும். நாங்கள் பாட்டம் பயிர்செய்த நான்கு வயல்களில் ஒன்றான நந்தவனத்தடி வயல் அறுத்துக்கட்டி, சூடடித்து, படப்புக் கட்டி, முதற்பொலி விட்டு, இரண்டாம் பொலியும் தூற்றி, களத்தின் நடுவில் கூம்பாரமாக – இராட்சத அளவிலான கூம்பு போன்று – கிடந்தது பொலி. நந்தவனத்தடி வயல் பதினெட்டு மரக்கால் விதைப்பாடு. முழுமேனி காணும் பொலி. அப்பா பொலியளக்க, என்னிடம் ‘‘வீட்டுக்கு ஓடிப்போயி மரக்கால் எடுத்துக்கிட்டு வா மக்கா” என்றார். ஒன்பது பேரில் வைசூரிக்கு வாரிக் கொடுத்த இருவர் நீங்கலாக, ஏழு பேரில் நான் மூத்தவன். அப்பாவின் அப்பா பெயர்தான் எனக்கு. இன்றும் துலங்குகிறது. நான் மரக்காலைத் தூக்கிக்கொண்டு களத்துக்கு வந்தேன். எட்டாக மடித்த கோணிச்சாக்கை குண்டிக்குத் தாங்கல் கொடுத்து, வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டி, ஈரிழை வடசேரித் துவர்த்தைத் தலையில் வட்டக் கட்டாகக் கட்டி, அப்பா பொலியளக்க அமர்ந்திருந்தார்.
மரக்காலைக் கொண்டு நீட்டினேன். கையில் வாங்காமலேயே, “எலே! கிறுக்குப் பயலே! இது கொத்து மரக்கால்லா! இதை அங்கிண ஓரமா வச்சுக்கிட்டு, பொலியளவு மரக்கா இருக்கும், அதை எடுத்துக்கிட்டு ஓடியா” என்றார். எனக்கு ஒன்றும் அர்த்தமாகவில்லை அன்று. என்றாலும் மறுக்கவும் வீட்டுக்கு ஓடினேன்.
பொலியளவு மரக்கால் என்றால் என்ன, கொத்து மரக்கால் என்றால் என்னவென்று அறிய, நான் முன்பு பேசிய ‘வாய் கசந்தது’ சிறுகதை வாசியுங்கள். அல்லது மார்க்சீய அறிஞர், பேரறிஞர் எவரிடமேனும் கேளுங்கள். பொலியளவு மரக்காலால் பொலியளக்கத் துவங்கிய அப்பா, கை கூப்பிப் பொலியைத் தொழுது, முதல் மரக்கால் அள்ளிக் கோரித் தூக்கி, நார்ப்பெட்டியைச் சாய்த்துப் பிடித்தபடி நின்ற கூறுவடி பெட்டியில் ‘லாபம்’ என்று சொல்லிக் கவிழ்த்தார். இரண்டாம் மரக்காலைக் கவிழ்க்கும்போது இரண்டு என்றார்.
அன்றைய கணக்கு, இருபத்தோரு மரக்கால் ஒரு கோட்டை. இருபத்தோரு மரக்கால் விதை நெல் விதைக்கப்படும் நிலத்தை ஒரு கோட்டை விதைப்பாடு என்றனர். உத்தேசமாக ஒரு கோட்டை விதைப்பாடு என்பது ஒரு ஏக்கர் பரப்பளவு, அதாவது 100 சென்ட். ஒரு கோட்டை விதைப்பாடு நிலத்தில் இருபத்தோரு கோட்டை நெல் விளைந்தால் பொலி, முழுமேனி. பொலி அரைமேனி, முக்கால்மேனி, அரையே அரைக்கால் மேனி என்றால் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். நெல் அளவுக்குக் கலம் எனும் கணக்கு என்றுமே நாஞ்சில் நாட்டில் இருந்ததில்லை.
பொலியளக்கும்போது, பொலி அளப்பவரை நோக்கி ஒருவர் குத்தவைத்து அமர்ந்து நெல்லைத் தள்ளிக் கொடுப்பார். அவர் பொலி தள்ளுபவர். அறுத்தடிப்புக் களத்தில், சூடடித்த நெற்குவியலை சண்டு சாவி போகக் காற்றில் தூற்றுவார்கள், இரண்டு முறை. முதற் பொலி விடுதல், இரண்டாம் பொலி விடுதல் என்பார்கள். நெல் அல்லாதவற்றை நாங்கள் சண்டு என்போம். சண்டு சாவி என்பர். பதர் என்பர். செட்டி நாட்டில் ஒரு ஊரின் பெயர் ‘நெற்குப்பை’.
பாரதி பாடல்களில் ‘மழை’ என்ற தலைப்பில் பாடல் ஒன்றுண்டு. 12.07.1917-ல் சுதேசமித்திரனில் வெளியானது. காளிதாசன் எனும் புனைபெயரில் பாரதி எழுதிய பாடல் அது. அந்தப் பாடலில் மூன்றாம் பத்தியில் பாரதி பாடுகிறார் –
‘அண்டங் குலுங்குது தம்பி – தலை
ஆயிரம் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான் – திசை
வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடுகின்றார்’
என்று சில வரிகள். இந்தப்பாடல் முழுவதையும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் காவிய முகாமில், 2013-ல் நான் எனது கம்பன் ஆசிரியர் ரா.பத்மநாபன் பாடுவதுபோல் பாடிக் காண்பித்தேன். இதில் ‘வானத்துத் தேவர் செண்டு புடைத்திடுகின்றார்’ எனும் வரியிலுள்ள ‘செண்டு’ எனும் சொல்லை நான் ‘சண்டு’ எனப் பொருள் கொண்டேன்.
அறுவடை முடித்த களத்தில், பொலி வீசியபின் தலைவனை வாழ்த்தும் உழவர் பாட்டுக்குப் பொலிப்பாட்டு என்று பெயர். கடும் நிந்தனை எனும் பொருளில் பொலிப்பாட்டு என்ற சொல்லை விறலிவிடு தூது ஆள்கிறது. களத்தில் நெற்கதிர்களைச் சூடடிக்கும்போது உழவர் பாடும் பாட்டு பொலி பாடுதல் என வழக்கம் பெற்றிருக்கிறது. சூடடிக்கும்போது, பிணையல் மாடுகளை ஓட்டும் உழவர் ‘பொலி, பொலி’ என ஒலியெழுப்புவார்களாம்.
பதினான்கு வயதில் அரையாள் கொத்துக்கு பிணையல் அடிக்கும் பையனாக என்னை இரவு இரண்டு மணிக்கு எழுப்பிக் கொண்டுபோய் ஒரு பிணையலின் பின்னால் வட்டத்தில் நிறுத்தினார்கள். அன்று நான் உழவர் பாட்டு, ‘பொலி, பொலி’ ஓசை, ‘பொலியோ பொலி, பொலியோ பொலி’ எனும் வாழ்த்தொலி எதுவும் கேட்டதில்லை. அது 1960 காலகட்டம். என்றாலும் பொலி எனும் சொல் மனதில் வேர்விட்டு அறுபதாண்டுகள் ஆயின.
கொத்துக்குப் பொலி அளந்து தருகிறவர்கள் இருந்தனர். ‘சொள்ளையாண்டி களத்திலே பொலியளந்து குடுத்திட்டு, வீட்டிலே போயிக் கஞ்சி குடிச்சிட்டு இப்பம் கொரங்கு சுப்பையா களத்துக்குப் பொலியளக்கப் போறேன்” என்பார்கள். விலைக்கு நெல் அளக்கவரும் நெல் வியாபாரிகள் அவர்களே மரக்கால் கொண்டு வருவார்கள். நெல்லளந்து கட்ட சுமட்டுக்காரனும், வண்டிமாடும், நெல் அளக்கிறவருமாக வருவார்கள். அது நெல்லளவு, பொலியளவு அல்ல.
நல்ல காரியங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, தற்குத்தறமாக எவனும் குறுக்குச்சால் ஓட்டுவான். உடனே பெரியவர்கள் சொல்வார்கள், “யாருலே இவன்? நிறை பொலியிலே மாடு வாய்வெச்ச மாதிரி!” என்று.
பொலி எனும் சொல்லுக்குப் பேரகராதி தரும் பொருள்கள் தூற்றா நெற்குவியல், தூற்றிய நெல், விளைச்சலின் அளவு, தானியமாகக் கொடுக்கும் வட்டி, களத்தில் நெல்லளக்கும்போது முதல் மரக்காலுக்கு மங்கலமாக வழங்கும் பெயர், கொங்கு வேளாளரில் இறந்தவர் எலும்பை மூன்றாம் நாள் நீரில் இட்டபின் பசுமரத்தில் பால் வார்க்கும்போது நாவிதன் வழங்கும் நற்சொல், Covering as of animals – அதாவது விலங்குகளின் புணர்ச்சி.
நாவிதர் ஒரு குலத்தவருக்குச் செய்யும் ஈமச்சடங்கின்போது, பொலி எனும் சொல்லை நற்சொல்லாக வழங்கினர் என்பதோர் செய்தி, முப்பதாண்டு காலமாகக் கொங்கு நாட்டில் வாழும் எனக்கு. பெரிய காரியம் என்று வழங்கப்படுகிற மரணச் சடங்குகளுக்குப் பிறகு ‘நல்ல வார்த்தை பேசுதல்’ என்றொரு முறை உண்டு என்பது அறிவேன். பொலி எனும் சொல்லின் பொருள் தேடியபோது இரண்டாவது ஆச்சரியமான தகவல் பசு, எருமை, குதிரை, ஆடு போன்ற விலங்கினத்தின் புணர்ச்சி, பொலி என வழங்கப்பட்டது என்பது. Covering of animals எனும் சொற்றொடரே புதியதாக அறிமுகம் ஆயிற்று.
சென்னைப் பல்கலைக்கழகம் 1963-ல் ஆங்கிலம் – தமிழ் சொற்களஞ்சியம் ஒன்று வெளியிட்டது. பல்கலைக்கழகங்கள் ஊழல்மயப்படாதிருந்த காலம். கல்விக்கும் தமிழுக்கும் அருஞ்சேவை ஆற்றிய காலம். சொற்களஞ்சியம் Dr. அ. சிதம்பரநாதன் செட்டியார் தொகுத்தது. அதில் Covering எனும் ஆங்கிலச் சொல்லுக்குப் பொருள் தேடிப் போனேன். நமக்கு Sexual intercourse, Copulation தெரியும். Covering கேள்விப்பட்டதில்லை. ‘பொலி குதிரை வகையில் குதிரைப் பெடையுடன் கூடி இணைதல்’ என்று பொருள் தரப்பட்டுள்ளது Covering என்ற சொல்லுக்கு. சென்னைப் பல்கலைக்கழகத்துப் பேரகராதி (1922), பொலிச்சல் எனும் சொல்லுக்கு – Covering especially among animals, புணர்ச்சி என்று பொருள் தந்துள்ளது.
எனவே பொலி எனும் சொல்லுக்கு விலங்குகள் தம்மிலான புணர்ச்சி என்பது பொருள் தமிழில். ஆங்கிலம் அதனைக் Covering என்கிறது என்பது நம் தெளிவு. வழக்கமாக நமது உரையாடலில் ‘பொலி கடா’ எனும் சொல் புதியதல்ல. மனம் போல் திரியும் தடியனைப் பொலிகடா என்பார்கள். ஆனால் பொலி கடா எனும் சொல்லின் நேரான பொருள் அதுவல்ல. பொலி கடா, பொலி காளை, பொலி எருது, பொலிச்சக்காளை எனும் சொற்கள் குறிப்பது Animals kept for covering என்பதாகும். அதாவது பசுமாட்டைச் சினையாக்க வளர்க்கப்படும் காளை. வித்துக்காளை என்பர் நாஞ்சில் நாட்டில். அதாவது விந்துக்காளை.
பொலிகடா செய்த வேலையை இன்று அரசு கால்நடை மருத்துவமனைகளில் கால்நடை மருத்துவ உதவியாளர் செய்கிறார். நீங்கள் குதர்க்கமாகப் புரிந்துகொண்டால் நாமதற்குப் பொறுப்பில்லை. மாவட்டக் கால்நடை மருத்துவமனைகளில் இருந்து வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் தெர்மாஸ் பிளாஸ்க்குகளில் கொண்டுவரப்படும் காளையின் அல்லது எருமைக்கடாவின் விந்தினை பசு அல்லது எருமைக்கு நாம் மேற்சொன்ன உதவியாளரே ஏற்றுவார். முன்னும் பின்னும் தடுப்பு உருளைக் கம்பிகள் போட்டுப் பசுமாட்டைக் கூண்டினுள் ஏற்றியபிறகு, மாட்டு உரிமையாளர் வாலை ஒதுக்கிப் பிடிப்பார்.
கூம்பு போல் முனையுள்ள உபகரணம் ஒன்றினை பசுவின் அறையினுள் இடது கையால் நுழைத்து, உபகரணத்தின் கைப்பிடியில் இருக்கும் லிவரை அழுத்தினால், பசுவின் குறியினுள் நுழைத்த கூம்பு வடிவக் கருவி வாய் திறந்து கொள்ளும். அடுத்து அவருடைய உதவியாளர் பழைய காலத்து இங்க் ஃபில்லர் போன்ற அமைப்பில் – ஓரடி நீளமிருக்கும் – காளையின் விந்து எடுத்து, ஏற்கனவே செருகப்பட்டிருக்கும் உபகரணம் வழியாகப் பசுவின் கருப்பையினுள் நேரடியாகச் செலுத்துவார். முடிந்தது சோலி. இன்றைய செயற்கைக் கருத்தரிப்பு மையங்களும் அதைத்தான் செய்யும் போலும்.
கொண்டுவந்த பசுவை வீட்டுக்குப் பத்திரமாகக் கொண்டு போவார் உரிமையாளர். அந்தப் பசுக்களை எருமைகளை எண்ண இரக்கமாக இருக்கிறது இன்று. கிராமத்தில் நாங்கள் பொலிகாளை ஏறுவதையும் பார்த்திருக்கிறோம், விந்து ஊசி போடுவதையும் பார்த்திருக்கிறோம். இன்று எந்தக் கிராமத்திலேனும் பொலிகாளை உண்டா எனத் தெரியவில்லை. எல்லாம் ஆன்-லைன் புணர்ச்சியாகி விட்டது.
மந்தைக்கு இரண்டு மூன்று என வளர்க்கப்படும் செம்மறி அல்லது வெள்ளாட்டுக் கிடாக்களின் காயடிக்காத விதைப்பைகள் கனத்துத் தொங்கி ஆண்வாசனை வீசத் தெம்புடன் நடக்கும் அவை. அவையும் பொலி கடாதான். பொலிகடா எனும் சொல்லை நாம் பலிகடா எனும் சொல்லுடன் குழப்பிக் கொள்ளலாகாது.
பொலிப்புக் கடா எனும் சொல்லைப் பொலிகடா என்ற பொருளில் விறலிவிடு தூது பயன்படுத்துகிறது. பொலிப்பு என்றொரு சொல் காணக் கிடைக்கிறது அகராதிகளில். பொருள் புணர்ச்சி, Act of covering, especially by a bull என்பார்கள். அதாவது Intercourse, copulation எனும் ஆங்கிலச் சொற்களால் குறிக்கப்படும் வினையை நாம் கலவி, முயக்கம், புணர்ச்சி, உவப்பு என்கிறோம். உடலுறவு எனும் சொல்லை நான் அறிந்தே தவிர்க்கிறேன். ஏனெனில் அச்சொல் செயற்கையானது. யாந்திரீகத்தனமானது என்பது என் எண்ணம். சம்போகம் என்பது வடசொல். கலவி என்பது உடல் மட்டுமே சம்மந்தப்பட்டதல்ல. மனமும் ஈடுபடுவது. மேலும் பேரகராதியில் உடலுறவு என்ற சொல்லே இல்லை. அது நூறாண்டு காலத்திற்குள் எவரோ தமிழறிஞர், பேராசிரியர் உருவாக்கிய சொல்லாக இருத்தல் வேண்டும். அல்லது கற்பழிப்பு எனும் சொல்லைப்போல பிரபல நாளிதழ் எதுவும் உருவாக்கி உலவ விட்டிருக்கலாம்.
எனவே நாம் இவ்வாறு கொள்ளலாம்! மாடு, ஆடு, குதிரை போன்ற விலங்குகளின் புணர்ச்சிக்கான சொல் பொலி என. பொலிகாளை எனும் பொருளில் பொலி நடையன் என்ற சொல்லும் புழங்கி இருக்கிறது. பொலி என்ற சொல்லுக்கு ஏழு பொருள்கள் சொன்ன பேரகராதி, பொலிதல் எனும் சொல்லுக்கு எட்டுப் பொருள் தருகிறது. எவையெனக் காணலாம்!
பொலிதல் –
1. To flourish, prosper, thrive, செழித்தல்.
- To be enlarged, to appear grand as form of dress, to swell in size as rice in
boiling, to grow full, பெருகுதல். - To abound, increase, மிகுதல்.
தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடுகிறார் மாங்குடி மருதனார், மதுரைக்காஞ்சி எனும் நூலில். ‘கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கை’ எனும் ஓர் வரி ஆங்கு.
செங்கழுநீர் மலர்களால் பொலிந்திருந்த இடம் அகன்ற நீர்நிலை என்று பொருள். இங்கு பொலிந்த எனும் சொல் மிகுந்திருந்த எனும் பொருளில் ஆளப்பெற்றுள்ளது. - To bloom as the countenance, to shine, விளங்குதல்.
பதிற்றுப் பத்தில் ஒன்பதாம் பத்து பாடும் புலவர் பெருங்குன்றூர்க்கிழார், ‘புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு’ என்பார். இங்கு பொலிந்த எனும் சொல்லுக்கு விளங்கும் என்று பொருள் சொல்கிறார்கள். - To be high, great or celebrated, சிறத்தல்.
சங்க இலக்கியம் புறநானூற்றின் முதற்பாடல், கடவுள் வாழ்த்து, பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியது. பதின்மூன்று அடிகள் கொண்ட பாடலின் கடைசி அடி, ‘தாழ் சடைப் பொலிந்த அருந்தவத்தோற்கே’ என்பது. தாழ்ந்து சிறந்த சடையைக் கொண்டவன், அருந்தவம் உடையவன் என்பது பொருள். இங்கு ‘அருந்தவத்தோற்கே’ என்பது சொற்றொடர். அண்மையில் இளைய பாடகர் ஒருவர் ‘நற்றவத்தவர்’ என்ற சொல்லை உச்சரிக்கப்பட்ட பாடு நம்மை அச்சுறுத்தியது. - To be auspicious or fortunate, மங்கலமாதல்.
- To live long and prosperously used as a benedication, நீடு வாழ்தல்.
தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில், புறநிலை வாழ்த்தாக
‘வழிபடு தெய்வம் நின்புறம் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து
பொலிமின்’
என்றொரு நூற்பா. வழிபடு தெய்வம் உன்னைக் காக்கட்டும். குற்றமிலாச் செல்வத்துடன் வழிவழியாகச் சிறந்து நீடு வாழ்க என்பது பொருள். - To occur, சம்பவித்தல்.
கம்பன் யுத்த காண்டத்தில் இராவணன் வானரத்தானை காண் படலத்தின் இரண்டாவது பாடலில், பொலிந்ததாம் இனிது போர் எனலோடும்’ எனும் பாடல் வரியில் பொலிந்ததாம் எனும் சொல்லை சம்பவித்ததாம் எனும் பொருளில் ஆள்கிறார். - To cover, as bull or ram. To copulate, புணர்தல். எடுத்துக்காட்டு –
பொலிகாளை.
ஆக பொலிதல் என்றால் செழித்தல், பெருகுதல், மிகுதல், விளங்குதல், சிறத்தல், மங்கலமாதல், நீடுவாழ்தல், சம்பவித்தல், புணர்தல் என்பன. இந்த மொழியைத்தான் தமிழ் சினிமா, ‘வச்சு செய்கிறது’.
மேற்சொன்ன பொருள்களில் மங்கலமாதல் எனும் பொருளில் ‘பொலிக பொலிக பொலிக’ என்று வாழ்த்தினர். ‘பொலி பொலி பொலி’ என வாழ்த்தியதைப் போன்று.
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியில் ஐந்தாம் பத்தின் இரண்டாம் பகுதி ‘பொலிக’ என்பது. அடியார் திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்துவது. சீகாமரப்பண், இடையொத்து தாளம். அல்லது கல்யாணி இராகம், திரிபுடை தாளம். திருமாலின் அடியாரை நம்மாழ்வார் கடல்வண்ணன் பூதங்கள் என்பார். நமக்கு இந்திய சினிமாக்கள் பூதம் எனும் சொல்லை அர்த்தப்படுத்திய விதம் வேறு. ஆனால் நம்மிடமும் சிலப்பதிகாரத்தில் சதுக்கப் பூதம் உண்டு. இன்று சதுக்கங்களில் பூதங்கள் சிலையாக நிற்கின்றன. இனி நம்மாழ்வாரின் முழுப்பாடல்.
‘பொலிக! பொலிக! பொலிக!
போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த;
நமனுக்கிங்கு யாதொன்றும் இல்லை;
கலியும் கெடும் கண்டு கொண்மின்;
கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசைபாடி
ஆடி உழிதரக் கண்டோம்’
என்பது இசையும் மொழிச்செறிவும் கொண்ட பாடல்.
‘மங்கலம் உண்டாகட்டும்! மங்கலம் உண்டாகட்டும்! மங்கலம் உண்டாகட்டும்! வல்லுயிர்ச் சாபங்கள் யாவும் போயின! நலியும்படியான நரகம் எய்துவோம் என்பதும் நைந்து போயிற்று! நமக்கு இனி இங்கு எந்தத் தீங்கும் இல்லை. கலியும் கெடும் எனக் கண்டுகொள்வீர்! கடல்வண்ணனின் அடியார் மண்மேல் நிறையப் புகுந்து இசை பாடி ஆடி அலைந்து திரிதல் கண்டோம்’ என்பது பாடலின் பொருள்.
அடுத்த பாடலும் அற்புதமானது.
‘கண்டோம், கண்டோம், கண்டோம்;
கண்ணுக் கினியன கண்டோம்;
தொண்டீர்! எல்லீரும் வாரீர்;
தொழுது தொழுது நின்றார்த்தும்
வண்டார் தண்ணத் துழாயன்
மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தான் பாடி நின்றாடிப்
பரந்து திரிகின் றனவே!’
என்பதந்தப்பாடல். பொலிக, பொலிக, பொலிக என்றது போல, கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் என்கிறார் நம்மாழ்வார். தொண்டர்களே எல்லோரும் வாருங்கள்! வண்டுகள் ஆர்க்கின்ற குளிர்ச்சியான துளசிமாலை அணிந்த மாதவனுடைய திருவடிகளைத் தொழுது தொழுது நின்று ஆரவாரிக்கும் அடியார்கள் மண்மேல் பண்கள் பாடி நின்று ஆடிப்பரந்து திரிகின்றனர் என்பது பொருள். மராத்திய அடியார்கள் கூட்டம் கூட்டமாக நாம்தேவ், துக்காராம், தியானேஷ்வர் அபங்க் பாடல்களைப் பாடிக்கொண்டு பண்டர்பூர் நோக்கி விட்டல, விட்டல, விட்டல எனப் பயணமாவது நினைவுக்கு வருகிறது.
சமகால அரசியல் கட்சிகளின் கூலித் தொழிலாளர்கள் ‘வாள்க, வாள்க, வாள்க’ என்று கொடி தாங்கிக் கூக்குரல் இட்டு நடப்பதையும் விருந்துண்ணும் நேரத்தில் மலம் நினைவுக்கு வருவதைப்போல மனம் கொண்டு நிறுத்துகிறது.
பொலிகை என்றொரு சொல்லும் அகராதிகளில் உண்டு. பொலிதல் என்பதுதான் பொருள். பொலிப்பாய் என்றொரு சொல் தரும் பொருள் Gently, மெதுவாக என்பதாகும்.
இன்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொல் பொலிவு. அதுவும் பொலி, பொலிதல் எனும் சொற்களுடன் தொடர்புடையதே! ‘அவ மொகம் நல்ல பொலிவாட்டு இருக்கு என்னா!’ என்பர் மகளிர். ‘பொன்னெனப் பொலிந்த பூவை’ என்று எங்கோ வாசித்ததும் ஓர்மையில் உண்டு. பேரகராதி பொலிவு என்ற சொல்லுக்கும் பல பொருள் தருகிறது. முகமலர்ச்சி, தோற்றப் பொலிவு, அழகு, செழிப்பு, பருமை (Largeness), மிகுதி (Abeundance), எழுச்சி (Height, Loftiness), பொன், வெளித் தோற்றம், புணர்ச்சி (Covering among animals).
இவற்றுள் பொலிவுக்குப் பொன் என்றும் ஒரு பொருள் உண்டென அறிய மகிழ்ச்சி ஏற்படுகிறது. மற்றுமோர் வியப்பு, பொலி – பொலிதல் – பொலிவு எனும் மூன்று சொற்களின் இறுதிப்பொருள் விலங்குகளின் புணர்ச்சி என்பது.
தோற்றப் பொலிவு என்ற பொருளில் திருவாசகம் பொலிவு எனும் சொல்லைப் பயன்படுத்துகிறது. கீர்த்தித் திருஅகவல் பாடும்போது மாணிக்கவாசகர், ‘கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்’ என்பார். இங்கு பொலிவு எனும் சொல் தரும் பொருள் தோற்றப்பொலிவே!
கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில், நகர் நீங்கு படலத்தில், வனம் புகுவான் வேண்டி இராமன் வசிட்ட மாமுனிவரிடம் யாத்திரை பறையான் போகும்பொழுது, இராமனின் தோற்றம் கண்ட வசிட்டரின் கூற்றாகக் கம்பன் மொழிவது, ‘பொன்னரைச் சீரையின் பொலிவு நோக்கினான்’ என்று. சீரை எனில் சீலை, இங்கு மரவுரி. இராமன் பொன்போலத் துலங்கும் மரவுரியை இடையில் சுற்றியதன் அழகையும் நோக்கினான் வசிட்டன் என்று பொருள் எழுதுகிறார்கள். எனவே இங்கு பொலிவு என்றால் அழகு.
பொலி எனும் சொல்லை, பொலிக எனும் சொல்லை, பொலி தந்து, பொலிந்த, பொலியும், பொலிபு, பொலிய, பொலியர், பொலியா, பொலிவன, பொலிந்து, பொலிவு, பொலிவோடு எனும் சொற்களை சங்க இலக்கியங்கள் நெடுக ஆண்டுள்ளன. மேற்கோள் காட்டப் போனால் கட்டுரை மேலும் வளர்ந்துவிடும் அபாயம் உள்ளது.
பெருமிதமாக இருக்கிறது! எத்தனை பொலிவான மொழி! எத்தனை பொலிதல் சொற்களில்! எத்தனை அனுபவப் பொலி! பொலிக, பொலிக, பொலிக என நம்மாழ்வாரைப் போல உரத்து ஒலிக்கத் தோன்றுகிறது.
‘விதச்சது கொய்யும்’ என்பார்கள் மலையாளிகள். ‘விதைத்ததை அறுப்பான்’ என்பர் தமிழில். இத்தனை சொற்களை மொழிப்புலத்தில் விதைத்துள்ளனர் முன்னவர்கள். அறுவடை செய்வது நம் பணி! சோம்பிக் கிடப்பவரை, அறியாமையில் முடங்கியவரை, கற்க மறுப்பவரை அவரவர் தெய்வம் காக்கட்டும்!
புறநானூற்றில் கோப்பெருஞ்சோழன் பாடல் வரி,
‘யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;’
என்று நீளும். யானை வேட்டைக்குப் போனவன் யானையை எளிதாகப் பெற்றுவிடக் கூடும். சிறு பறவைகளை வேட்டையாடச் செல்கின்றவன் வெறுங்கையுடன் வரவும் கூடும்!
நாம் யானை வேட்டைக்குத்தான் போவேமே!’
நாஞ்சில் நாடன்
28.06.2020
நாஞ்சில் நாடன் அய்யா அவர்கள்’ “பொலி போட்டிருவேன் ” என சாதாரணமாக கிராமங்களில் சொல்லக்கூடிய “பொலி”வார்த்தையை ஆய்வு செய்து அந்த வார்த்தைக்கான பல்வேறு விதமான அர்த்தங்களை தெரிவித்துள்ளார். மிகவும் சிறப்பு. நன்றி