1) நடுங்கும் மனதுடன்
அற்ப மலையே
பூமியின் மீது ஒட்டியிருக்கும்
அட்டை பூச்சியே
உன்னைப் பிடிக்கும் பெரிய விரல் மட்டும்
எனக்கிருந்தால்
உன்னை பிய்த்து கடலில் வீசுவேன்
என்று கர்ஜித்தான் அவன்
மலையோ கண்களை இறுக மூடிக்கொண்டு
நடுங்கும் மனதுடன் மௌனமாய்
படுத்துக்கிடந்தது
போய்யா அவனை அந்தப்பக்கம் அழைத்துக்கொண்டு அதியா
மலை பயப்படுகிறதில்லையா
என்றாள் அவ்வழியே வந்த ஔவைப் பாட்டி
2) தொடுதலின் மொழி
தொடுதல் என்பதொரு உரையாடல்
தொடுகையில் தொடுபவை தொட்டவை இரண்டும் பேசிக்கொள்ளும்
பார்வையால் தொடுவது மனதால் தொடுவது என்பதும் புழக்கத்தில் இருந்தாலும்
விரல்களைப் போல தொடுதலின் மொழியை சரளமாக பேசக்கூடிய பிறிதொன்றில்லை
ஆனால் என் விரல்களோ மொழியறியாதவை என்பதை
நாம் முதன் முதலில்
கைகோர்த்துக் கொண்டபோதே
நீ அறிந்திருப்பாய்
நாளடைவில் தொடுதலின் மொழியை இலக்கணப் பிழையின்றி உன் விரல்கள்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தன
தொடுதலின் மொழியிலேயே உன் உடல்மீது கவிதை எழுதுமளவுக்கு இப்போது
என் முரட்டு விரல்கள் தேறிவிட்டன என்று நீயே சொல்கிறாய்
எனக்கு மகிழ்ச்சி தாளவில்லை
3) நெஞ்சப்பறவை
அவன் நெஞ்சு உடையும் சத்தம்
உனக்கு பிடித்திருக்கிறது
எதைச் சொன்னால் அவன் நெஞ்சு உடையும்
என்று உனக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது
உடைந்த நெஞ்சின் கீரல்களில் வலிகள் வழிந்தோடி அபிஷேகச் சிலைபோல அவனிதயம் தோன்றுமொரு காட்சி உன் கண்களை நிறைக்கிறது
அவன் நெஞ்சு உடையும் போது சிலீரென
உன் முகத்தில் தெறிக்கும் அன்பின் குருதி
கெட்டித்து உன் முகம் அழகாகிறது
உடைந்த சில்லுகள் சிவந்த இறகுகளாகி
உன் நினைவின் மீது தத்தித் தத்தி நடந்து போகும் அவன் நெஞ்சப்பறவையை
நீ ரசிப்பது போல் யாராலும் ரசிக்க முடியாது
4) கோவம்
நான் சொன்னது தவறுதான்
ஆனால் நீ
கோவித்துக் கொள்ளவில்லை
நீ கோவித்துக் கொண்டிருந்தால் நான் சமாதானமாகி இருப்பேன்
என் மீதே எனக்கு கோவம் வந்து
அதை தணிக்க முடியாமல் இப்போது
தவித்துக் கொண்டிருக்கிறேன்
என் மேல் எதற்காகவும் நீ கோவப்படாததை நினைத்து உன் மேல் எனக்கு கோவம் கோவமாக வருகிறது
என் மேல் கோவப்படக்கூட ஆளில்லாத அனாதை நான்
நீயும் என்மேல் கோவப்படாவிட்டால் நான் எங்கு போவேன்
5) நகைச்சுவை
வயதுவந்தோருக்கான
நகைச்சுவை சொல்வதில்
நீ வல்லவன்தான்
அதற்காக இப்படியா
என் மௌனத்திற்கு புரையேறி
அதன் ஒளியுடல் குலுங்கக் குலுங்க
வெகு நேரம் இருமிக் கொண்டிருக்கிறது
என் மௌனம் கண்கலங்கி
இப்படிச் சிரிப்பதைப் பார்த்து
எத்தனை நாளாகிறது
***
கார்த்திக் திலகன் – “அந்த வட்டத்தை யாராவது சமாதானப்படுத்துங்கள்” தொகுப்பின் ஆசிரியர்.