Saturday, November 16, 2024
Homesliderநானும் ராஜா தான்

நானும் ராஜா தான்

மு. வெங்கடேஷ்

“ஓ.. ரியலி? கங்கிராட்ஸ் மேன்”.

நான் அப்படி என்ன சொல்லிவிட்டேன் என்பதற்காக இப்படி வியந்து பாராட்டுகிறான் இந்த விம். அத்தோடு விட்டானா என்ன? அந்தப் பெரிய அறையில் கணிப்பொறித் திரைகளுக்குள் புதைந்து கிடக்கும் எங்கள் அணியினர் அனைவரையும் அழைத்து, என்னுடைய பதிலை டச்சு மொழியில் அவர்களிடம் மொழிபெயர்த்துச் சொன்னான். நிச்சயம் அவன் என்னைக் கிண்டல் செய்கிறான் என்று எனக்குத் தோன்றியது. அவர்களின் முகங்களும் அதை உறுதி செய்வதாக இருந்தது.

இந்தக் கேள்வி இந்தியாவிலும் இதுவரை பலமுறை பலரால் 

என்னிடம் கேட்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் எல்லா  தடவையும் பொய்யான பதிலையே தந்திருக்கிறேன். இந்த விஷயத்தில் உண்மையைச் சொல்வதற்கு எனக்கு எப்போதுமே கொஞ்சம் கூச்சமாக இருக்கும். இந்த முறையும் அதையே செய்திருக்க வேண்டும். பெல்ஜியர்கள் பெரும்பாலும் உடன் பணிபுரிபவர்களின் சொந்த வாழ்க்கைக்குள் மூக்கை நுழைப்பதில்லை என்கிற நம்பிக்கையில் உண்மையைச் சொல்லிவிட்டேன்.

விம் கொஞ்சம் மாறுபட்டவன். பெல்ஜியனாக இருந்தாலும் பழகுவதில் இந்தியர்களையே மிஞ்சிவிடுவான். இந்தியர்கள் யாருடனும் எளிதில் பழகக்கூடியவர்கள் என்ற பொதுவான கருத்து உண்டு. வசீகரமானவன். யாருடனும் உடனே பழகிவிடுவான். நான் இங்கு வந்து ஆறு மாத காலமாகிறது. அவன் மட்டும் இல்லையென்றால் என் கதி அதோகதி தான்.  பல சொந்த விசயங்களை அவனுடன் பகிர்ந்து கொள்ளுமளவுக்குப் பழக்கம். எதையும் எதிர்பார்க்காமல் பழகுபவன். சாப்பாட்டு ராமன். சாப்பாடு என்றால் போதும் உலகையே மறந்துவிடுவான். ஒருவகையில் அவன் அப்படி இருப்பதில் எனக்கு சந்தோசம் தான். மாதம் குறைந்தபட்சம் இரண்டு முறையேனும் ஓசி சாப்பாடு கிடைத்து விடுகிறது. பெரும்பாலும் டச்சுப் பார்ட்டிகளை மட்டுமே விரும்பும் பெல்ஜியர்கள் மத்தியில் அடுத்தவர்களுக்கு வாங்கிக் கொடுக்கவும் அவர்களிடமிருந்து வாங்கிச் சாப்பிடுவதிலும் கில்லாடி. அவனுடைய வெகுநாள் ஆசை “லுவானியம்” சென்று சாப்பிடுவது மட்டும் இன்றுவரை நிறைவேறாமல் இருந்து வந்தது.

இந்த ஒற்றைப் பதிலுக்காக அவன் எல்லோர் முன்பும் என்னை இப்படி அவமானப்படுத்தி இருக்கத் தேவை இல்லை தான். இருந்தாலும் அவன் சொன்னதைக் கேட்டவுடன், அலுவலக நண்பர்கள் அனைவரும் கண்களை அகல விரித்தபடி வாய் பிளந்து  “ஆஹா  ஓஹோ” என்று ஆரவாரம் செய்வதைப் பார்த்தால் இதில் வேறு ஏதோ மர்மம் இருப்பதாகத் தோன்றியது. அதில் சிலர் என்னிடம் கை கொடுத்து வாழ்த்துச் சொல்லவும் தவறவில்லை. இன்னும் சிலர் தங்களுக்குள் ஏதோ பேசிச்சிரித்துக் கொண்டிருந்தார்கள். சில  உண்மைகள் ஏற்படுத்தும் சங்கடங்களுக்கு பொய்யே தேவலை என்று தோன்றியது. இனிமேல் யார் கேட்டாலும் உண்மையைச் சொல்லப் போவதில்லை என்று மனதுக்குள் தீர்மானம் செய்து கொண்டேன்.  

சந்திப்பு ஒன்றுக்காக வெளியே சென்றிருந்த எங்களுடைய அணித்தலைவி சார்லட் லாப்டாப்பைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள். அந்த மரத்தளத்தில் அவளுடைய ஹீல்ஸ் சத்தம் டக் டக் என்று கேட்க, அங்கு நின்று கொண்டிருந்தவர்களைப் பார்க்கையில் அவளுடைய வருகைக்காகவே காத்திருந்தது போல் இருந்தது. நான் நினைத்தது போலவே அவளிடமும் செய்தி தெரிவிக்கப்பட, அவள் கண்களிலும் அதே வியப்பு. பொதுவாக எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் பேசுபவள் சார்லட். அது அவளுடைய குணமா இல்லை அணித்தலைவியாக  இருப்பதால் அவ்வாறு நடந்து கொள்கிறாளா என்று இன்றளவும் எனக்குத் தெரியாத ஒன்றாக இருந்து வருகிறது. அவள் ஆச்சரியப்பட்டு இதுவரை நான் பார்த்ததில்லை.

எதையோ டச்சு மொழியில் சொல்லியபடி என்னருகே வந்து வாழ்த்து தெரிவித்த சார்லட், சற்றுமுன் விம் கேட்ட அதே கேள்வியை மீண்டும் என்னிடம் கேட்டாள்.

“உண்மையாவே நீ ஏழாவதா?”

பெரும் தயக்கத்துடன், வேறு வழியில்லாமல் “ஆமாம், மொத்தம் ஏழு பேர் நான்தான் கடைசி” என்றேன்.

“ஆல் பாய்ஸ்?”.

“எஸ்”.

“தென் யு ஹவ் டு ரியலி ட்ரீட் அஸ் மேன்” என்று கூறியபடியே கூட்டத்தை விலக்கிக் கொண்டு அருகில் வந்த விம் “இன்று மதியம் நாம் அனைவரும் லுவானியம் செல்கிறோம். அது இவனுடைய விருந்தாக இருக்கப்போகிறது” என்று என் கையைப் பிடித்து, உயர்த்திச் சொன்னான். அவன் என் பதிலுக்காகக் காத்திருந்தவனாகத் தெரியவில்லை எனக்கு. இதைக்கேட்டு அங்கிருந்தவர்களின் முகத்தில் மேலும் சந்தோசம். பின் அனைவரும் அவரவர் இடத்திற்குச் சென்று தங்கள் வேலைகளைத் தொடர, வெகுநாள் கனவு நிறைவேறப் போவதை எண்ணி உற்சாகத்தில் குதித்துக் கொண்டிருந்தான் விம். எதுவும் புரியாதவனாய் நான் மட்டும் தலையைச் சொறிந்தவாறு நின்று கொண்டிருந்தேன். 

விருந்து கொடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லைதான். ஆனால் எதற்காகக் கொடுக்கிறோம் என்பது தெரியாமலிருப்பது தான் பிரச்சனை. எப்படியும் விம் இதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. என் மூலம் இன்று லுவானியம் சென்றுவிடலாம் என்று அவன் முடிவுசெய்து விட்டான்.  இதே பதிலை இந்தியாவிலிருந்த போது பலமுறை பலரிடம் கூறியிருக்கிறேன்.  “உண்மையாவா?”, “இந்த காலத்துல ஏழா?”, “உங்க அம்மா பாவம்”, “உங்க அப்பாவுக்கு வேற வேலையே இருந்ததில்லையா?”  இப்படிப் பலமாதிரி கேலி செய்திருக்கிறார்களே தவிர யாரும் விருந்து கேட்டதாக நினைவில்லை. கல்லூரியில் படிக்கும்போது உடன் படித்த சத்யராஜுடன் பிறந்தவர்கள் பதிமூன்று பேர் என்பதால் அவன் பெயரைச் சொல்லித் தப்பித்திருக்கிறேன். அடுத்து வரப்போகும் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக சிலநேரங்களில் நானே கூட இரண்டு அண்ணன்கள் என்று சொல்லியும் இருக்கிறேன். இப்போதும் அதுபோலவே சொல்லி இருக்கலாமோ என்று யோசிக்கவும் தவறவில்லை.

ஒருமுறை பள்ளியில் உடன் படித்தவர்கள் இதைச்சொல்லிக் கேலி செய்ய, கோபத்துடன் அம்மாவிடம் இதுபற்றிக் கேட்டிருக்கிறேன், “நானும் வேண்டாம்னு சொல்லித்தான் கலைக்கப் போனேன், இந்த கம்பத்துக்காரி சும்மா கெடந்தாளா என்ன? பாதவத்தி கடவுளா குடுத்தத ஏன் மைனி வேண்டாம்னு சொல்றீங்க என்று சொல்லித் தடுத்து விட்டாள்” என்றாள். நான் கோபப்படுகின்ற நேரங்களிலெல்லாம் அப்பா சொல்வது இதுவாகத்தான் இருக்கும் “பெரிய தவம் இருந்து பெத்தவரு இவரு, சும்மா கெடடி, வயிறு காஞ்சா தானா வரும் மூதி”. கம்பத்திலிருக்கும் அத்தையை எனக்கு எப்போதும் பிடித்ததில்லை.

இதெல்லாம் ஒருபுறம் மனதில் ஓடிக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருந்த விம்மைப் பார்த்தேன். அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த எந்த வேலையையும் செய்யாமல், ஆன்லைனில் லுவானியத்தின் மெனு-கார்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். “லுவானியம்” இதுவரை அலுவலக ஒன்று கூடுதலுக்கோ, அணியின் ஒன்று கூடுதலுக்கோ செல்லும் இடமாகவே இருந்திருக்கிறது. ஆனால் இன்று காரணமே தெரியாமல் நான் கொடுக்கப்போகும் விருந்துக்குச் செல்லும் இடமாக மாறியிருக்கிறது. விருந்து ஓகே தான். ஆனால் லுவானியம் தான் சற்று இடிக்கிறது. விம்மிடம் கேட்டும் பார்த்துவிட்டேன் “நாம வேணா பிசேரியா போகலாமா” என்று. வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டான். அவன் செய்த ஒரே நல்ல காரியம் வெள்ளிக்கிழமை இதைச் செய்தது. வெள்ளிக்கிழமை பொதுவாகத் தொலைவில் உள்ளவர்கள் வீட்டிலேயே இருந்து வேலை செய்வது வழக்கம்.

மதியம் ஒரு மணி. நான், விம், லிண்டா, லூக் இடத்திலிருக்க, வழக்கம் போல் சார்லட் மட்டும் ஏதோ ஒரு சந்திப்புக்குச் சென்றிருந்தாள். அவள் வருகைக்காகக் நாங்கள் காத்திருந்தோம். விம்மால் இருக்க முடியவில்லை. சார்லட்டைத் திட்டத் தொடங்கி இருந்தான். அரை மணிநேரமாகியும் சார்லட் வராததால் கோபத்தில் ஒரு சிகரெட்டையும் அடிக்கச் சென்றுவிட்டான். இன்னொரு நாள் செல்லலாம் என்று சார்லட் சொல்லி விடுவாளோ என்று விம் பதட்டப்படுவதை என்னால் உணர முடிந்திருந்தது. சிறிது நேரத்தில் அவன் வரவும், சார்லட் வரவும் சரியாக இருந்தது. விம்முக்கு உயிர் திரும்பியிருந்தது. அலுவலகத்திலிருந்து வெளியேறிய நாங்கள் லுவானியம் நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தோம். கோடை என்பதால் வெயில் இதமாக இருந்தது. அனைவரும் கருப்புக்கண்ணாடி அணிந்திருப்பதைக் கண்ட நான், என்னுடைய கண்ணாடியை எடுத்து, துடைத்து பின் அணிந்து கொண்டேன்.

“லுவானியம்” லூவன் நகரிலிருந்து ப்ரசல்ஸ் செல்லும் வழியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும் உணவு விடுதி. அகழி போல் அமைந்த ஓடையின் நடுவே சிறுகுன்றின் மேல் ஒய்யாரமாக அமைத்திருக்கும் ஒரு கண்ணாடி மாளிகை. இன்றைக்கும் பலர் அதை ஒரு மாளிகை என்றே எண்ணிக் கொண்டிருந்தனர். எங்கள் அலுவலகத்தினர் மட்டுமே வந்து செல்வதற்காகக் கட்டப்பட்ட உணவு விடுதியோ என்று எண்ணத் தோன்றுமளவுக்கு வேறு யாரும் வந்து செல்லாத இடமாக இருந்து வந்தது. ஸ்குவாஷ் விளையாட்டு அரங்கமும், டென்னிஸ் விளையாட்டு அரங்கமும் உள்ளேயே அமைத்திருக்கும். சில நேரங்களில் எங்கள் அலுவலகத்தினர் வந்து விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன். குளிர்காலமென்றால் கண்ணாடிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஹீட்டருடன் கதகதப்பாக உள்ளேயே அமர்ந்து, வெளியில் கொட்டும் பனியை ரசித்தவாறே சாப்பிடும் அம்சம் கொண்டதாக இருக்கும். அதுவே கோடைக்காலமென்றால் கண்ணாடிகள் அனைத்தும் திறக்கப்பட்டு, காற்றோட்டமாக உள்ளேயோ அல்லது வெளியேயோ நம் விருப்பம்போல் அமர்ந்து கொள்ளும் வாய்ப்புள்ளதாக அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் அனைவரும் வெளியில் இருக்கும் மேசையில் அமர்ந்து சாப்பிடுவதையே விரும்புவார்கள். அங்கு செய்யப்படும் லசான்யா மற்றும் ஆம்லெட் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவாக இருந்தது. இத்தனை அம்சங்களையும் கொண்ட இடத்தில் விலையைக் குறைவாக எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை தான்.

எல்லாம் சரிதான். என்னை எதற்கு விருந்து கொடுக்கச் சொல்லி அழைத்துச் செல்கிறார்கள். லுவானியம் செல்வதென்றால் ஒருவித சந்தோசம் தானாக மனதில் வந்திருக்கும். ஆனால் இன்று அது இல்லை. லுவானியத்தின் பில்லை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. சாப்பாட்டிற்கான பில்லைக் கேட்டால் மொத்த ஓட்டலை விலைபேசி முடித்ததற்கான பில்லைக் கொடுப்பார்கள். இந்த மாதம் கட்ட வேண்டிய லோனுக்கான தவணை மிஞ்சினாலே பெரிதுதான். அண்ணன் வேறு நேற்றே மெசேஜ் அனுப்பியிருந்தான். “அக்கவுண்ட்ல பணம் இருக்குல்ல? படிக்க வாங்குன லோனுக்கு இந்த மாசம் EMI பிடிப்பான். போன மாசம் மாதிரி மறந்துராத”. என்று. அதற்கு மேலும் பொறுமை இல்லாமல் காரணம் தெரிந்து கொள்ளும் பொருட்டு ஒருவழியாக விம்மிடம் கேட்டுவிட்டேன்.  “ஏழாவது பையன் என்றால் என்ன சிறப்பு?”.

“ஓ உனக்குத் தெரியாதா? சாரி டியூட். பெல்ஜியத்தில் ஏழாவது குழந்தை என்றால் தனிச்சிறப்பு உண்டு. அதற்கு ராஜ மரியாதை தான். ஏழாவதாகப் பிறக்கும் ஆண் குழந்தைக்கு நாட்டின் ராஜா ஞானத்தந்தையாகவும், பெண் குழந்தைக்கு ராணி ஞானத்தாயாகவும் இருப்பார்கள். அப்படி அமைவது ரொம்ப அபூர்வம் என்பார்கள். சாப்பிடும்போது இதுபற்றி இன்னும் விளக்கமாகப் பேசலாம்” என்றான். அவன் கூறியது எனக்குப் புரிந்தும் புரியாமலும் இருந்தது. அவன் பசியில் இருக்கிறான் என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது. வெயில் தெரியாமல் காற்று சிலுசிலுவென்று வீசிக் கொண்டிருக்க, ஏற்கனவே விம் தொலைப்பேசி மூலம் அழைத்துச் சொல்லியதால் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மேசையில் சென்று அமர்ந்த பிறகு ஆர்வத்தோடு இருந்த நான் விம்மிடம் “அப்ரோம்” என்றேன்.

இந்தப் பழக்கம் எப்போதிருந்து நடைமுறையில் இருக்கிறதென்பது தெரியவில்லை, ஆனால் ஆறேழு தலைமுறைகளாக இருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த நாட்டில் ஏழாவது குழந்தையாகப் பிறப்பது அத்தனை சிறப்பு. இதைக் கேட்டுக்கொண்டிருந்த சார்லட் இடைமறித்து “ஏழாவது குழந்தையாக இருந்தால் மட்டும் போதாது, பெண் குழந்தைகளே இல்லாமல் தொடர்ச்சியாக ஏழு ஆண் குழந்தைகள் அல்லது ஆண் குழந்தைகளே இல்லாமல் தொடர்ச்சியாக ஏழு பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். இடையில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ பிறந்திருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது” என்றாள்.  “ஓ அப்படியா இது எனக்குத் தெரியாதே” என்று கேட்டுக் கொண்டான். இது எதையுமே தெரிந்திராத லூக் அதை ஒப்புக் கொள்வதுபோல் நெற்றியைச் சுருக்கி, உதட்டைக் கீழ்நோக்கி வைத்து, பின் தலையை இடது வலமாக அசைத்தான்.

நான் இங்கு வந்தது முதல் தண்ணீரே இல்லாமல் கிடந்த ஓடை இன்று வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதிலிருந்து எழும்பிய குளிர்ந்த ஆவி என்மேல் பட, அது அந்த வெயிலின் சூட்டைத் தணிப்பதுபோல் இருந்தது. வெகுநேரம் காத்திருந்த எங்களுக்கு முதலில் சூப் பரிமாறப்பட்டது. அது சூடாகவும் இருந்தது.

சார்லெட் தொடர்ந்தாள் “அவ்வாறு பிறக்கும் குழந்தையை அரச பரம்பரையின் ஞானக்குழந்தை என்பார்கள். அப்படிப் பிறப்பதே ஒரு தனிச்சிறப்பு தான். அவ்வாறு பிறக்கும் குழந்தையை ராஜாவோ அல்லது ராணியோ சிலநேரங்களில் நேரில் வந்து வாழ்த்துவதும் உண்டு. பிறந்தது முதல் இறக்கும் வரை அவர்களுக்கென தனிச்சலுகைகள் பல உண்டு. உதாரணத்திற்கு அரண்மனையைப் பார்வையிடுதல், இலவசக்கல்வி பெறுதல், ராஜா ராணியிடமிருந்து கிடைக்கும் பரிசுப் பொருட்கள் என இன்னும் பல இருக்கின்றன. ஆனால் இப்போதெல்லாம் அதுபோன்ற ஞானக்குழந்தையைக் காண்பதென்பது மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது. தற்போதைய ராஜா ஃபிலிப்புக்கே ஒரே ஒரு ஞானக்குழந்தை தான். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி ப்ரசல்ஸ் நகரின் மௌண்டாய் தம்பதியருக்குப் பிறந்த இரட்டையர்களில் மூத்தவன் ஹாரூன் மட்டுமே ராஜாவின் ஞானக்குழந்தை. எட்டாவதாகப் பிறந்த இரட்டையர்களின் இரண்டாமவனுக்கு அந்தச் சலுகை கிடையாது.  

பேச்சின் சுவாரஸ்யத்தில் ஆர்டர் என்று கேட்டு வந்தவனைக் கூட மறந்திருந்தோம். பின் சுதாரித்துக்கொண்டு வந்தவனிடம் அவரவருக்குத் தேவையான உணவைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். காலையில் அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருக்கையில் போன் செய்த அம்மா “ஏல இன்னைக்கு அமாவாசை கண்ட கழுதையும் தின்றதா” என்று சொல்லியது நினைவில் வர, எனக்கு ஒரு வெஜிடேரியன் லசான்யா என்று சொல்லி முடித்துக் கொண்டேன். குடித்த சூப் வெஜிடேரியன் என்பதையும் அவனிடம் கேட்டு உறுதி செய்து கொண்டேன். அருகிலிருந்த விம், நாம் இருவரும் இன்று பீர் அருந்தலாம் என்று சொல்லி இரண்டு “லா சோயூஃப்” என்றான். மறுக்காமல் நானும் மேலும் கீழுமாகத் தலையசைத்துக் கொண்டேன்.

லிண்டா தொடர்ந்தாள் “பவுடோயின் 1951-ஆம் ஆண்டு தனது தந்தைக்குப் பிறகு மன்னரானார். 1993-ல் மறைந்தார். அவருக்குக் குழந்தை ஏதும் இல்லை. அவரைத் தொடர்ந்து அவரது சகோதரர் ஆல்பர்ட் மன்னராகப் பதினொரு ஆண்டுகள் இருந்தார். பல வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரிலிருந்து ஒருவர் மறைந்த மன்னர் பவுடோயின் மற்றும் அவரது மனைவி ராணி ஃபேபியோலா ஆகியோரின் ஞானக் குழந்தைகளை ஒன்றிணைக்கும் “ட்ரிப் டு தி எஃப்தலிங்“ என்கிற கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். ஏழாம் எண்ணைக் கருத்தில் கொண்டு அக்கூட்டம் ஏழாம் மாதத்தின் ஏழாம் நாளில் நடந்ததாம். அதில் நூறு பேர் கலந்து கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு வந்தவர்கள் அதற்கு முன்பு ராஜாவின் மறைவின் போது சந்தித்துக் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். ஃபேபியோலா ராணி பல விசித்திரக் கதைகளை எழுதியிருந்தார். அவற்றில் ஒன்று ‘இந்தியன் வாட்டர் லில்லிஸ்’. அதனைப் பெருமைப்படுத்தும் விதமாகப் புகழ்பெற்ற டச்சு வடிவமைப்பாளர் அன்டன் பிக் அவர்களால் வடிவமைக்கப்பட்ட  “எஃப்தலிங்” என்ற பொழுதுபோக்கு பூங்காவில் ஒரு பூங்காவிற்கு “இந்தியன் வாட்டர் லில்லிஸ்” என்று பெயரிடப்பட்டு அது 1966-ல் திறக்கப்பட்டதாம்.  

நாங்கள் ஆர்டர் செய்திருந்த உணவை எடுத்து வந்திருந்தார்கள். எனக்கான லசான்யாவும், லா சோயூஃபும் எனக்கெதிரே வைக்கப்பட்டன. விம் கூடுதலாக ஒரு ஆம்லெட் சொல்லியிருந்தான். லசான்யாவை சுவைத்தவாறே அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். மனதில் ஒருவித பெருமித உணர்வு தோன்றுவதை என்னால் மறுக்க முடியவில்லை.

மீண்டும் விம் தொடர்ந்தான் “இந்தப் பாரம்பரியம் எப்போது தொடங்கப்பட்டது அல்லது ஏன் முதலில் ஒரு பாரம்பரியமாக மாறியது என்பது கூட இங்கு யாருக்கும் தெரியாது. எல்லோரும் இந்தப் பாரம்பரியத்தைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் என்பதே என் கணிப்பு. அதுபோக அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் ராஜாவின் பெயரையோ ராணியின் பெயரையோ சூடிக்கொள்ளலாம். அதுவே இங்கு பலருக்கும் தெரியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. காலம் செல்லச்செல்ல ஞானக்குழந்தைகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. இனிவரும் காலங்களில் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதை என்னால் அடித்துக் கூற முடியும். தப்பித்தவறி ஏதேனும் அதிசயம் நடந்தால்தான் உண்டு. சார்லட்டுக்கு வேண்டுமானால் அந்த எண்ணம் இருக்கலாம்” என்று சொல்லிப் போகிற போக்கில் அவளையும் கிண்டல் செய்துவிட்டுச் சிரித்தான். அனைவரும் அவனைப் பின்தொடர்ந்தனர். நானும் சேர்ந்து கொண்டேன்.

வழக்கத்தைவிட வெயில் சற்று அதிகமாக இருந்த போதிலும், அதன் வெப்பம் தெரியாமல் குளிர்ந்த காற்று அதனை ஈடு செய்து கொண்டிருந்தது. “இந்த வெயிலுக்காக எத்தனை நாட்கள் காத்திருந்தோம்” என்று லிண்டா சொல்ல அதனை ஆமோதிப்பது போல் அனைவரும் தலை அசைத்துக் கொண்டனர். விம்மின் மூளை மட்டும் வேறுவிதமாக யோசித்தது. “வரவரக் குளிர் காலம் கம்மியாவது கூட அதிக பிள்ளைகள் பெற்றுக் கொள்வதற்குத் தடையாக இருக்கும் போல. வீட்ல ஒரே புழுக்கம்” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டான். லசான்யாவின் சூடும், பீரின் குளிர்ச்சியும் நாவில் ஒருவித புதிய சுவையை உணரச் செய்து கொண்டிருந்தது.   

சார்லர்ட் தொடர்ந்தாள் “என்னுடைய கணவரின் தாத்தா கூட ஒரு ஞானக்குழந்தை என்று அவர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர் எங்கு பிறந்தார், எங்கு வாழ்ந்தார், ரோமன் கத்தோலிக்கரா, எந்த தேவாலயத்தில் பெயர் சூட்டிக்கொண்டார், எங்கு திருமணம் செய்து கொண்டார் என்ற எந்த சாட்சியங்களும் எங்களிடம் இப்போது இல்லை. சிலவருடங்களுக்கு முன்பு நாங்கள் அதுபற்றி அரசாங்க ஏட்டில் எங்கேனும் பதிவாகி இருக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். ஒன்றும் கிடைக்கவில்லை. எங்களுக்கு சந்தேகமே, அவர் தன்னை ஒரு ஞானக்குழந்தை என்று பதிவு செய்து கொண்டாரா என்பது தான். அதற்கான விடை கணவரின் குடும்பத்தில் கூட யாருக்கும் தெரிந்திருக்கவில்லை” என்றாள்.

அனைவரும் சாப்பிட்டு முடித்து பில்லுக்காகக் காத்திருந்தோம். விம் மட்டும் இன்னொரு பீர் என்று சொல்ல, சார்லட் “நாம இன்னும் வேலை செய்யணும்” என்று அவனுக்கு ஞாபகப்படுத்தினாள். பீர் கான்சல் செய்யப்பட்டது. வேலை நாட்களில் இரண்டு லெஹர் பீர் அல்லது ஒரு ஸ்ட்ராங் பீர் மட்டும் குடித்துக்கொள்ள அனுமதி இருந்தது. நாங்கள் ஏற்கனவே குடித்திருந்த “லா சோயூஃப்” ஸ்ட்ராங் பீர் வகையைச் சேர்ந்தது. எனக்கு ஒரு பீரே போதுமானதாக இருக்க, அது ஏற்படுத்திய போதை தலைக்கு ஏறி இருந்தது. ப்ரசல்ஸ் வீதியில் ராஜா உடை அணிந்திருந்த நான் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வர, சுற்றி துப்பாக்கி ஏந்திய வீரர்களும், டிரம்ஸ் வாசிப்பவர்களும் கூடியிருந்த மக்கள் மலர் தூவி என்னை வரவேற்றுக் கொண்டிருந்தனர். விம்மும் சார்லட்டும் எனக்கு வணக்கம் வைத்துக் கொண்டிருந்தார்கள். அதை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டிருந்தேன்.

ஓரிரு நிமிடங்களில் சாப்பாட்டிற்கான பில் வந்தது. நினைத்தது போலவே மிக அதிகம்தான். ஆனால் ஒரே ஆறுதல் கட்டியது போக அக்கவுண்டில் உள்ள பணம் இந்த மாதத் தவணைக்குப் போதுமானதாக இருந்தது. அந்த வகையில் ராஜாவுக்கு சந்தோசம் தான்.

***

மு வெங்கடேஷ் – அண்மையில் இவர் எழுதிய கொரங்கி எனும் சிறுகதைத் தொகுப்பு வெளி வந்தது. தொடர்புக்கு -venkat.kjv@gmail.com

RELATED ARTICLES

2 COMMENTS

  1. மிகவும் அருமை.இராஜாவின் செலவில் நானும் லுவானியாவில் லசான்யாவும், லா சோயூஃபும் சாப்பிட்ட உணர்வு…😀 மனம் ‘விம்’மின் முகத்தைக் காண விம்முகிறது..சார்லெட் டின் ஹீல்ஸ் சத்தம் காதின் ஓரத்தில் கேட்கிறது.மொத்தத்தில் மு.வெங்கடேசின் எழுத்தில் மூழ்கி அரை மணி நேரத்தில் பெல்ஜியம் சென்று லுவானியாவில் சாப்பிட்டுக்கொண்டு,இடை இடையே மனம் விமானம் ஏறி கம்பத்திற்கு சென்று வந்தது போல் இருக்கிறது.. அருமை…மென்மேலும் தொடர வாழ்த்துகள்..

  2. மிகவும் அருமை.இராஜாவின் செலவில் நானும் லுவானியாவில் லசான்யாவும், லா சோயூஃபும் சாப்பிட்ட உணர்வு…😀 மனம் ‘விம்’மின் முகத்தைக் காண விம்முகிறது..சார்லெட் டின் ஹீல்ஸ் சத்தம் காதின் ஓரத்தில் கேட்கிறது.மொத்தத்தில் மு.வெங்கடேசின் எழுத்தில் மூழ்கி அரை மணி நேரத்தில் பெல்ஜியம் சென்று லுவானியாவில் சாப்பிட்டுக்கொண்டு,இடை இடையே மனம் விமானம் ஏறி கம்பத்திற்கு சென்று வந்தது போல் இருக்கிறது.. அருமை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular