கன்னடத்தில்: கனகராஜ் பாலசுப்பிரமணியம்
தமிழில்: கே.நல்லதம்பி
(Bronze Medal in short story competition – By Gulbarga University, Karnataka)
எம்பைர் பில்டிங் திரும்பத் திரும்ப கண்முன் வருவது ஏனென்று தெரியாமல் ஸ்மிதா எழுந்து உட்கார்ந்தாள். நான்காம் மாடியின் சன்னலிலிருந்து வீசிய நியூயார்க்கின் குளிர்காற்று அவள் முகத்தைத் தீண்டிக் கடந்துபோனது. ஒருநொடி கண்மூடி வெகுநாளைய தன் கனவுகளை நினைத்துக் கொண்டாள். ஆம்… என்ன என்று நினைத்தேன்…? அமெரிக்கா சென்றடைந்ததும் “நூறு ஜன்மத்திற்கும்…” என்ற சினிமாப் பாடலைப் பாடவேண்டுமன்றல்லவா – என்று மெல்லப் பாடத் தொடங்கினாள்.
அது ஒரு காதல் கீதம். இந்தப் பாட்டில் வருவது போலத்தானே அவன் சொன்னது…. திருமணத்திற்கு முன்பு!
திருமணம் முடிந்ததும் அனைத்தும் கரைந்து விட்டதா? அன்பு – காதல் என்று அவன் எவ்வளவு கதை அளந்தான் அப்போது!? ஆனால் இன்று…!? எப்படிப்பட்ட சிரமங்களைக் கொடுக்கிறான்! இல்லை… இனி என்றும் அவனோடு வாழமுடியாது… டிவோர்ஸ் ஒன்றுதான் தீர்வு. என்மீது அன்பு செலுத்துபவர்கள் உலகில் யாருமில்லையா!? கிஷோரி அமோன்கர் இருக்கிறாரே… அவர் பாடல்களைக் கேட்டுக்கொண்டே வாழ்ந்து விடுவோம்….. பிள்ளைகள்!? அவனே வளர்க்கட்டும், நான் எதற்காக வளர்க்க வேண்டும்? வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் பாழாய்ப் போனவர்கள் என் பெயரையா சொல்வார்கள்!? கண்டிப்பாக இல்லை… பிறகு நான் எதற்கு அவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும்? அப்படிப் பார்க்கப் போனால் இந்த உலகத்தில் யாரும் யார்மீதும் அன்பு செலுத்துவதில்லை…. தங்கள் மீது தாங்களே அன்பு செலுத்திக் கொள்கிறார்கள்! ஆம் நான் சுதந்திரமாக இருக்க வேண்டும்…. நான் விரும்பியபடி வாழவேண்டும்…. யாரோ விரும்புகிறார்கள் என்று நான் எதற்கு அவர்களது ஆசை விருப்பங்களுக்கு பலியாக வேண்டும்….!?
ஸ்மிதா கைபேசியை எடுத்தாள். அவளுடன் வேலை செய்யும் அம்ருதாவின் அழைப்பு அது. அன்று சனிக்கிழமையானலால் மார்க்கெட்டிற்குப் போகத் தேவையில்லை. ஸ்மிதா வேலை செய்யும் டி.கே.எஸ். சாஃப்ட்வேர் சல்யூஷன்ஸ் கம்பனி பத்துப்பேர் குழுவை அமெரிக்காவுக்கு இரண்டு வாரங்களுக்கு மட்டும் அனுப்பியிருந்தது. நியூஜெர்சியில் தங்கியிருந்த ஸ்மிதாவுடன் பணி செய்பவர்கள் எல்லோரும் அன்று நியூயார்க்கைச் சுற்றிப் பார்க்கப் போவதாக இருந்தது. அவர்களுடன் தங்காமல் தனியாக லியாட்டின்னோக்கள் வசிக்கும் நியூயார்க்கின் பிராங்க்ஸ் பகுதியில் தங்கியிருந்த ஸ்மிதாவுக்கு அவர்களுடன் போக விருப்பமில்லை. அலுவலகம் கொடுத்த பணத்தை மிச்சம் பிடிக்கவும் இந்திய உணவகங்களுக்காகவும் அவர்கள் நியூஜெர்சியில் தங்கினால் இவள் மார்டின் ஸ்கார்செஸியின் சினிமாக்களில் வரும் பகுதியிலேயே தங்கவேண்டுமென்று லிட்டில் இத்தாலியில் தங்க முயன்று தோற்றுப்போய் முடிவில் ஸ்பானிஷ் மொழியைக் கேட்கும் ஈர்ப்பில் பெங்களூரில் இருக்கும்போதே ஏர்பியென் இல் அறையொன்றை பதிவு செய்திருந்தாள். அவளுடன் வேலை செய்பவர்களுக்கு இருந்த நியூயார்க்கின் புகழ்பெற்ற இடங்களைப் பார்க்கும் இச்சை இவளுக்கு இல்லை. மாறாக, நியூயார்க்கின் வெளிப்புறக் காடுகளையும், நகரத்தின் வெளிபகுதியில் ஓடும் நதியின் நிலப்பகுதியையும், முக்கியமாக மார்டின் ஸ்கார்செஸி காட்டும் உண்மையான நியூயார்க்கைப் பார்க்கவேண்டும் என்பதே இவளின் தீவிரத் துடிப்பு.
“ஐ ஹேவ் ஸம் அதர் பிளான்ஸ் மிஸ் அம்ருதா… யூ கைஸ் கேரி ஆன்” என்று கைபேசி அழைப்பைத் துண்டித்து குளிக்க எழுந்தாள். எழும்போது ஏனோ மனம் குழம்பியது. எங்கே போவது என்ற உறுதியான திட்டங்கள் எதுவும் இவளுக்கு இருக்கவில்லை. எங்கே போவது என்று கூகுள் செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. இந்த வீட்டு எசமானி லியாட்டினோ; அவளைக் கேட்கலாமா என்று தோன்றியது. அமெரிக்கர்களைப் போல அல்ல அவள், தன்னுடைய எல்லா விஷயங்களைப் பற்றியும் அக்கறையுடன் கேட்கிறாள். இந்த நான்கு நாட்களிலேயே அவள் எனக்கு நெருங்கிய தோழியானாள். ஏர்பியென் இல் பதிவு செய்யும்போது ஸ்மிதா மிகவும் எச்சரிக்கையுடன் ஹோஸ்ட்டைத் தேர்ந்தெடுத்திருந்தாள். அந்த லியாட்டினோ திட்டவட்டமாகச் சொல்லியிருந்தாள் பெண்களுக்கு மட்டுமே அறையை வாடகைக்குக் கொடுப்பது என்று. அதனால்தான் இவளுடைய இந்த அபார்ட்மென்டைத் தேர்ந்தெடுத்தது. எவ்வளவு அன்புடன் கவனித்துக் கொள்கிறாள்….. அவளே காலையில் பலகாரம் செய்து கொடுக்கிறாள்….. அது ஏதோ ல்யாட்டின் உணவு…. இரவு சோறு சமைத்து வைக்கிறாள்….. ல்யாட்டினியர்கள் சோறு உண்பார்கள் என்பது தனக்குத் தெரிந்ததே இங்கே வந்த பிறகுதான்! கஞ்சிபோல இருந்தாலும் ஒரு மாதிரி நன்றாக இருக்கும். ஆம் இவள் திருமணம் செய்து கொள்ளவில்லையா!? கேட்க வேண்டும்….. அல்லது லெஸ்பியனா!? அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கை, திருமணங்களுக்கு தடை இல்லையே…. ச்சே… அது எப்படி பெண்ணும் பெண்ணும் படுப்பது…. ஓ…. எத்தனை ஸ்பானிஷ் படங்களில் பார்த்ததில்லை….. பெண்ணும் பெண்ணும் இணைவது, வினோதமான இன்பத்தில் திளைப்பது! ச்சீ அதுவும் ஒரு வாழ்க்கையா! ஆனாலும் இவள் தனியாகத்தானே இருக்கிறாள்! அல்லது டிவோர்சியா? நான் ஏன் இவளைப் போல வாழக்கூடாது…. தனியாக?!
கிஷோரி ஆமோன்கரின் இந்துஸ்தானி வீடியோ ஒன்றை யூ-ட்யூப் போட்டுக் குளிக்கப் போனாள். கிஷோரி தோடி ராகத்தில் பாடிக்கொண்டிருந்தார். கைபேசிக்குள்….. ஸ்மிதாவின் மெய் மனதைக் குளிரவைத்துக் கொண்டிருந்த பாட்டு அது. தங்கள் மகள் பெரிய இந்துஸ்தானி சங்கீதக்காரியாக வேண்டுமென்று ஸ்மிதாவின் தாய் தந்தையர் அவளை இசைப்பள்ளியில் சேர்த்து இருந்தார்கள். தாரவாடத்து அந்த இசை ஆசிரியருக்கு இந்துஸ்தானி இசை என்றால் உயிர். அதிலும் மராட்டாவாடா இசைக் கலைஞர்கள் என்றால் மிகவும் விருப்பம். அவர் வழியாகவே ஸ்மிதாவுக்கு கிஷோரியின் பாட்டுக்கள் அறிமுகமானது. கல்லூரிக்கு வந்த பிறகு இசையை முறைப்படிக் கற்பதை விட்டிருந்தாலும் அவளுக்கு இசை என்றால் ஏதோ ஈர்ப்பு! அதிலும் கிஷோரி அமோன்கர் பாட்டுக்களைக் கேட்பதென்றால் அபரிமிதமான உற்சாகம்; அவர் வாழ்க்கையைப் பற்றி கேட்டு, படித்து தெரிந்துகொண்ட பிறகு ஸ்மிதாவுக்கு அவர் என்றால் உயிரானது. இந்திய மரபு இசை, நாட்டியம் தேவதாசியர்களின் பங்களிப்புத்தானே என்று தோன்றியிருந்தது. அதைக் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற அவள் விருப்பம் இ அண்ட் இ பொறியியல் முடித்து எம்.பி.ஏ படிப்பில் முடிந்தது. அப்படி இருந்தும் கிஷோரியின் குரல் அவளை விட்டுப்போகவில்லை. வருத்தத்தில் இருக்கும்போதோ அல்லது சும்மா இருக்கும்போதோ அவர் பாட்டுக்களைக் கேட்டுக் கொண்டிருப்பாள். மகிழ்ச்சியாக இருக்கும்போது மட்டும் ஹாலிவுட் சினிமாக்கள்! அந்த சினிமாவில் வரும் “சீன்” களால் ஊக்கமடைந்து சிலசமயம் கணவனைக் கீழே தள்ளி ஏறி உட்கார்ந்ததும் உண்டு. அவன் “என்னால் முடியாது எழுந்திரிடி” எனனும் அளவுக்கு உணர்ச்சிகரமாக ஈடுபடுவாள். ஆனால் தற்போது அவள் அவனைத் தொட்டு வருடமாயிருக்க கூடும்! அந்த இச்சையும் இப்போது வருவதில்லை. திருமணமாகி பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மூன்று பிள்ளைகள்…. இந்த ஒன்றரை ஆண்டில் இதுதான் முதல்முறை, இப்படி நாங்கள் இருவரும் சேராமல் மாதங்களைக் கடந்தது. தகராறுகள் வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் இருக்கும். ஆனால் அவை ஒரு நல்ல மதியம் அல்லது இனிமையான மாலை நேரத்தின் ஒரு அழகான சேர்க்கையில் முடிவு காணும். அந்த சேர்க்கை எப்படி இருக்குமென்றால், இவ்வளவு தீவிரமாக இதுதான் முதல்முறை” என்று இருவரும் மல்லாக்காகப் படுத்து பெருமூச்சு விடுமளவுக்கு!
ஸ்மிதா மெட்ரோவில் உட்கார்ந்திருந்தாள். லிட்டில் இத்தாலியின் :”காட் ஃபாதர்” ரெஸ்டாரண்டுக்குப் போய் ஒரு காஃபி அருந்தி பிறகு யோசிக்கலாம். எங்கே போவதென்று பிறகு யோசிக்கலாம் என்று மெட்ரோ ஏறினாள். உட்கார்ந்த முதல் கண்ணுக்குள் எம்பையர் கட்டிடம் மீள மீள வந்தது….. எதற்கு இப்படி!? புதியதாக நியூயார்க் வருபவர்கள் பார்க்க விரும்பும் அந்த மாபெரும் கட்டிடத்தைப் பார்க்க என் உள்மனது விரும்புகிறதா!? போய் விடலாமா….. நம் நாட்டைப் போலவே இங்கேயும் ரயிலுக்குள் பிச்சை கேட்டு வருகிறார்கள். யார் சொன்னது அமெரிக்காவில் பிச்சை எடுப்பவர்களே இல்லையென்று! அமெரிக்காவைப் பற்றி நமக்கு எத்தனை பிரமைகள்! ஸ்பீக்கரில் பாட்டைப்போட்டு ஆடிக்கொண்டே காசு கேட்பவர்களும் இருக்கிறார்களே இங்கேயும் என்று நினைத்து வியப்படைந்தாள். கருப்பு இனத்தவர்களே அதில் அதிகம். ஏன் இப்படி! அமெரிக்கா ஒரு பணக்கார நாடல்லவா! வானுயரக் கட்டிடங்கள், அலறும் கார்கள்…. ஹாலிவுட் படங்களைப் பார்த்து நாம் எவ்வளவு ஏமாந்து போயிருக்கிறோம்…. மார்டின் ஸ்காரெஸ்ஸியின் படங்கள் காட்டுவது இந்தவகை மனிதர்களைத்தானே!? அவனுடைய அதிகப் படங்களில் பக்கா லோகல் மக்களின் இன்ப துன்பங்கள்….. ஆனால் எத்தனை பொய்யான கதைகள் ஹாலிவுட் முழுதும்! அந்தக் காரணகளுக்காவே தனக்கு ஸ்கார்ஸேஸ்ஸி விருப்பமாகிறானோ…. ஸ்கார்ஸேஸியை எனக்கு அறிமுகப் படுத்தியது ரஷ்மி. அவன் படங்கள் என்றால் அவளுக்கு உயிர். சினிமா டைரக்டர் ஆகவேண்டும் என்று நினைத்தாள்….. பாவம்! திருமணமாகி தன்னைப் போலவே ஏதோ கம்பனியில் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறாள். அட, இந்தக் கிழவனைப் பாருங்கள்….. அச்சுப்போல நம் நாட்டு பிச்சைக்காரக் கிழவனைப் போலவே தெரிகிறான்! அட, இவன் வெள்ளை அமெரிக்கன்! என்ன சிரமமோ என்னமோ! பிள்ளைகள் யாரும் இவனைப் பார்த்துக் கொள்வதில்லையா! சுமார் 70 வயதிருக்கலாமோ!? சுருக்கம் விழுந்த முகம். ஆங்கிலத்தில் பாட்டொன்றைப் பாடுவதைப் போலவே எதையோ சொல்லிப் பிச்சை எடுக்கிறானே! கிஷோரி அம்மையின் ஒரு ராகத்தைப் போலவே கேட்கிறது… எதைக் கேட்டாலும் எனக்கு அவர் பாடுவதைப் போலவே தோன்றுகிறது… ஆங்கிலத்தை இப்படி ஸ்ருதியில் கேட்பது இது தான் முதன்முறை… என்ன சொல்கிறான் இந்த வெள்ளைக் கிழவன் ?
“என் மனைவியை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். அவளுக்கு பிரெஸ்ட் கியான்சர். எங்களுக்குப் பிள்ளைகள் இல்லை. நான் ஒரு ஏழை பிளம்பர். வேலை செய்ய முடியவில்லை….. எனக்கு உதவுங்கள். என் மனைவியைக் காப்பாற்ற உதவி செய்யுங்கள், தயவு செய்து”
ஸ்மிதா பத்து டாலர் நோட் ஒன்றை எடுத்துக் அவனிடம் கொடுத்தாள். அவன் ஸ்மிதாவின் தலையைக் கோதி ”காட் ப்லஸ் யூ மை சைல்ட்” என சொல்லி முன்னே சென்றான். அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் ஸ்மிதா. அங்கிருந்தவர்களைத் தள்ளிக் கொண்டு முன்னால் நுழைந்து கொண்டிருந்தான். மனைவி மீது எத்தனை அன்பு இந்தக் கிழவனுக்கு?! பிச்சை எடுத்தாவது தன் மனைவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற தீவிரமான தவிப்பு அவனுக்கு…… ஆஹா!
அவனது இன்னிசைக் குரல் ஸ்மிதாவின் மனதில் ஆழமாகப் பதிந்தது போல இருந்தது. அவனுடைய துயரக்குரலுக்கு இளகியவர்களில் ஸ்மிதாவையும் சேர்த்து அங்கு நான்கு பேர் அவ்வளவுதான்! ஸ்மிதாவுக்குக் கோபம், வருத்தம் எல்லாம் மொத்தமாக வந்து பல்லைக் கடித்துக்கொண்டு தொடைகளை இறுக்கி அமர்ந்தாள். அப்படி அமர்ந்ததும் இன்றைக்குத் தேதி என்ன என்ற ஆதங்கம் தொற்றி கைபேசியை எடுத்துப் பார்த்தாள். நவம்பர் 13…. மூன்று நாள் இருக்கிறது….. ஆனால் இந்த மாதம் விரைவில் ஆகிவிட்டால்! ஷிட்… நியாப்கின் போட்டுக்கொண்டு வந்திருக்க வேண்டும். இறங்கியதும் மருந்து கடைக்குப் போய் நியாப்கின் வாங்கி ஸ்டேஷன் வாஷ் ரூமுக்குப் போய் போட்டுக்கொள்ள வேண்டும். வெள்ளை ஜீன்ஸ் வேற போட்டிருக்கிறேன்……
கிராண்ட் சென்ட்ரல் டெர்மினலில் இறங்கி மருந்து கடையைத் தேடி நியாப்கின் வாங்கி வாஷ் ரூமுக்குப் போய் அதைப் போட்டுக்கொண்டு வந்தாள். டெர்மினல் நிறையக் கூட்டம்! அற்புதமான கட்டிடம். கலைநயமான டெர்மினல்! சுவர்களில் ஆங்காங்கே ஓவியங்கள்! அற்புதமான ஓவியங்கள்…. அவளுக்கு அங்கேயே இருந்து விடலாம் என்று தோன்றியது. லிட்டில் இத்தாலி, எம்பையர் கட்டிடம் மறைந்து இப்போது அவள் கண்களில் கிராண்ட் சென்ட்ரல் ஜ்வலிக்கிறது! அங்கே வகைவகையான மக்கள்! அவர்களுடைய சிறிய பெரிய நடைகள், பூட்ஸ் சத்தங்கள், சிரிப்புப் பேச்சுகள், மணம்….. நியூயார்க் நகரமே அங்கே மிதக்கிறதோ…. உறங்காத நகரமாம் இந்த நியூயார்க்…. ஏ…யெஸ்… இரவு முழுவதும் இந்த நகரத்தை மனம்போன போக்கில் சுற்ற வேண்டும்…. மெட்ரோ ஏறி இறங்கித் திரிய வேண்டும்…. இரவின் நியூயார்க்கைப் காண வேண்டும்! எப்படி இருந்தாலும் நாளை ஞாயிற்றுக்கிழமை! நாளை மறுநாள்தானே எக்ஸ்போ போகவேண்டும்…. அங்கே போய் என்னதான் செய்வது? நம் கம்பனி ஆஃபர்களை அமெரிக்கக் கம்பனிகளுக்குச் சேர்க்க ஏதேதோ சர்க்கஸ் செய்ய வேண்டும்…. அந்தக் கம்பனி பிரதிநிதிகள் திருப்பும் நாக்கு தோல்களைப் பார்த்துக்கொண்டு வணிகம் செய்ய வேண்டும். அதே அலுவலகம், அதே வேலை…. அதே வீடு, அதே பிள்ளைகள்! இவைகளைப் பற்றி எல்லாம் வெறுப்பு ஏற்படக் காரணமான கணவன்! எவ்வளவு கட்டினாலும் முடியாத வங்கிக்கடன், திருமணங்கள், பண்டிகை, திதிகள்…. இவைகளுக்குத்தான் வாழ்க்கை கரைந்து போகிறது. இது போதாதென்று கணவனின் சொகுசு வாழ்க்கை…. போதும்போதும் என்றாகி விட்டது…… இந்தியாவுக்குத் திரும்பாமல் இங்கேயே தங்கிவிட்டால்….? பத்து ஆண்டுகளுக்கான பி 1 விசா இருக்கிறதே! ஆறு மாதத்திற்கொரு முறை இந்தியா போய்வந்தால் போதும்….. அல்லது திருட்டுத்தனமாக இங்கேயே தங்கிவிடலாமா…!? தன் படிப்பிற்கு கண்டிப்பாக இங்கே வேலை கிடைக்கும்….. சட்டத்திற்கு உட்பட்ட பணி கிடைக்காமல் போனால் என்னவாம், சட்டத்திற்கு புறம்பாக நியூஜெர்சியில் இந்தியர்களுடன் தலைமறைவாக வாழ்ந்துகொண்டு இருந்து விடலாமா…!? இந்தியா ஒரு அழுக்கு பிடித்த நாடு, அங்கே போகவே கூடாது!
வாஹ்! எவ்வளவு அழகு இந்த அமெரிக்கா….. இரவிலும் இந்த நாடு எப்படி ஜொலிக்கிறது. குளிர்காலம் இப்போதுதான் தொடங்குகிறது. டிசம்பரில் பனி கொட்டுமாம்! உடம்பைக் குடையும் குளிராம்! இருந்து பார்த்து விடுவோமா!?
மெட்ரோவில் தனக்குத் பிடிக்கும் நிலையங்களில் இறங்கி வெளியே போய் சுற்றிய ஸ்மிதா கே.எஃப்.சி-யில் ஃபிரைட் சிக்கன் தின்று கோலா குடித்து நியூயார்க்கை மனம்போல ரசித்தாள். இந்த இருளில் எம்பையர் கட்டிடத்தின் 63 வது மாடியில் நின்று பார்க்கும்போது இருட்டில் இந்த நகரம் எப்படித் தெரியும் என்று அங்கே போனவள் வாடிய முகத்துடன் டைம் ஸ்கௌயருக்குப் போய் அங்கே ஜொலிஜொலிக்கும் ஒளித்திரைகளைப் பார்த்து அசந்து போனாள். டிசம்பர் 31 ஆம் இரவு இந்த இடம் பூமியின் மீதான சொர்க்கம் என்று அவளுக்கு எங்கேயோ படித்த நினைவு! இப்போது நேரம் என்ன என்று பார்த்தாள். 12.45 நடு இரவு! வாஹ்…. எவ்வளவு இதமாக இருக்கிறது இந்த நேரம்! இந்தியாவில் இப்படித் தனியாக ஒரு பெண் நடுஇரவில் விருப்பம்போல கண்ட இடத்தில் அலைய முடியுமா!? அப்படித் திரிந்தால் அவளை நாம் வேறு பெயரில் அழைப்போம். பெண்களுக்கு ஆசையே இருக்கக் கூடாதா!? குளிர்ச்சியான மௌன இருளில் ஊரைப் பார்க்க வேண்டுமென்று நம் பெண் ஒருத்தி வெளியே சென்றால் என்னவாகும்? பெண் தேகம் இருப்பதே அனுபவிக்க என்று நினைக்கும் நம் இந்திய ஆண்களுக்கு இப்படி நடுஇரவில் பெண்ணொருத்தி தனியாகக் கிடைத்தால், முடிந்தது கதை….. “வர்றயா?” என்று கேட்டு சும்மாவா இருப்பார்கள்?! இழுத்துக்கொண்டு போய் கொன்றே விடுவார்கள்!
எந்தத் துணிச்சலில் விலைமாதுகள் நடுஇரவில் தெருவில் நிற்கிறார்களோ? பாவம்… பணத்திற்காக உடம்பை விற்கும் இழிவு நிலையில் வாழ்கிறார்கள்! ஆண்களின் காமவெறிக்கு தங்கள் மெய் மனங்களைக் கிடத்தும் அவர்கள் நம்மைப் போன்ற பெண்களை அபாயத்திலிருந்து காப்பாற்றுகிறார்கள்! அவர்களும் இல்லாமல் போனால் இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் பத்துக் கற்பழிப்புகள் வாடிக்கையாகிவிடுமோ! விலைமாதுகள் இல்லாத இந்திய வரலாறு உண்டோ!? தேவதாசி வழக்கம் பிறந்ததே ஆண்களின் விருப்பங்களைத் தணிக்கத்தானே!? ஆண்டவன் பெயரில் பெண்களை நியமித்து தேவைப்படும் போதெல்லாம் அவர்களை அனுபவித்த பணக்காரக்கள், கோயில் பூசாரிகள், ஊரின் காமுகர்கள் அந்தப் பெண்களுக்கு எத்தனை சிரமத்தைக் கொடுத்திருக்கலாம்! ஆண்கள் முன் தேவதாசியர்கள் பாடவேண்டும், நாட்டியமாட வேண்டும்…. அவர்கள் ஆடல்தானே இன்றைய பரத நாட்டியம்! தமிழ்நாட்டின் ஏதோ ஒரு கோவிலில் தேவதாசியர்கள் நடனமாடிய நாட்டியத்தை சிலர் ஹைஜாக் செய்து “பரதநாட்டியம்” என்று முறைப்படுத்தினார்களாம்….. இசையும் அப்படித்தானே இல்லையா…. ஓ! கிஷோரி அமோன்கர் அம்மையைப் பற்றி எத்தனை ஏளனச் சிரிப்பு, கதைகள்…. புல்ஷிட் இண்டியன் கல்சர்….. சீப் மிடில் கிளாஸ் வேல்யூஸ்! கிஷோரி அமோன்கர் எப்படிப்பட்ட அற்புதமான பாடகி! இந்திய இந்துஸ்தானி இசையில் அழிக்க முடியாத பெயர்! அவருடைய மூலமும் தேவதாசி என்றுதானே சிலர் பேசிக்கொள்கிறார்கள்….. ச்சே, இருக்காது…. சரி, அப்படி இருந்தால்தான் என்னவாம்!?
வாஹ்… உண்மையாகவும் டைம்ஸ்கௌயர் ஒரு சொர்க்கம்தான்! இரவையே வெட்கப்பட வைக்கும் மினுக்கு அவளுக்கு…. இதுதான் நியூயார்க் விலைமாதுகளின் மைய இடம் என்று எங்கேயோ படித்திருந்தேன்!? மார்டின் ஸ்காரஸ்ஸியின் “டேக்ஸி டிரைவர்” சினிமாவில் ராபர்ட் டி நீரோ இங்கேதானே செக்ஸ் வர்கர்ஸ்களை பிக்கப் செய்வது….. இவ்விடத்தில் தானே ஒருவன் பிராஸ்டிட்யூட் ஒருத்தியை தூக்கிப் போட்டுக்கொண்டு டெக்ஸிக்குள் தாவுவது…!? இந்த நேரத்தில் அந்த ராபர்ட் டீ நீரோ ஏன் வரக்கூடாது? வந்து என்னை அழைத்துக்கொண்டு போகக்கூடாது? நியூயார்க் முழுவதையும் தன் டேக்ஸியில் சுற்றிக்காட்டக் கூடாது!? வாடா ராபர்ட்…. ப்ளீஸ்….. உன் கதாநாயகியை ஏதோ “டர்டி சினிமா”வொன்றுக்கு அழைத்துப் போனாயே, அப்படி என்னையும் அழைத்துப்போ…… வா ராபர்ட்….. பிராட்வே தியேட்டர் ஒன்றுக்குப் போகலாம் வா….
ச்சே….. இதென்ன தவறான சிந்தனை!? நான் குடும்பப் பெண்! இப்படி தவறான பெண்களைப்போல யோசிக்கலாமா!? நோ, நெவர்…..
கணவனைத் தவிர யாரும் என் மனதில் வந்து போனதில்லையா!? அப்படி நடந்திருந்தால்தான் என்ன!? சமுதாயம் சொல்லும் எல்லைகளுக்குள் தான் ஒரு பெண் வாழ வேண்டுமா? தம் மனதுக்குப் பிடித்தவர்களுடன் போனால் என்ன தவறு? ஆண்கள் போவதில்லையா!? இந்த ஆண்கள் கோவாவுக்கு அடிக்கடி போவது எதற்கு என்று எங்களுக்குத் தெரியாதா என்ன!? பெண்களுக்கும் ஆசை, மனம் என்பது இருக்கின்றன…… பெண்களின் இச்சைகளுக்கு மட்டும் கடிவானம் போடும் இந்த சமுதாயம் ஆண்களுக்குப் போடுவதில்லை….. ஆண்களின் விருப்பங்களுக்கு எங்கே வேண்டுமென்றாலும் அங்கே பிராஸ்டிட்யூட்கள் கிடைக்கிறார்கள்…. புஷ்பா செய்வதுதான் சரி…. சலிப்பாக இருக்கும் போதெல்லாம் ஃபோன் போட்டு மசாஜ் செய்யும் பையன்களை வரவழைத்துக் கொள்கிறாள். ஸ்யாண்ட்விச் மசாஜ்களை எல்லாம் செய்துகொள்கிறாளாம்….. த்தூ…. அசிங்கமானவள்! எவ்வளவு நாள்தான் வீட்டுச் சாப்பாட்டையே சாப்பிடுவது….. சில நேரம் ரெஸ்டாரண்டுக்குப் போவதில்லையா. அப்படித்தான் என்கிறாள்…. பாழாப்போனவ….
“கென் யு டேக் மீ டு எல்லீஸ் ஐலேண்ட்?”
“தேர் வோண்ட் பி எனி ஷிப்ஸ் பை திஸ் டைம், மேம்….”
”ஐ ஜஸ்ட் வாண்ட் டு கோ தேர் அண்ட் வெயிட் தேர் டில் தே ஸ்டார்ட் ஷிப்ஸ்…”
”ஓகே… கெட் இன் தென்”
டேக்ஸி போய்க்கொண்டிருந்தது. எல்லீஸ் தீவுப் பக்கமாக… அந்தத் தீவில்தான் உலகப்புகழ் பெற்ற லிபர்ட்டி ஸ்டேட்யூ இருப்பது! கையில் தீப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டு நின்றிருக்கும் துணிவான பெண்! சுதந்திர ஆதிதேவதை! ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரமடைய நடத்திய போரில் அமெரிக்கா வென்று, சுதந்திர நாடான பேரடையாளத்திற்காக ஃபிரான்ஸ் அளித்த அன்பளிப்பு! அதன் முழு வரலாறையும் அங்கே போய்த்தான் தெரிந்துகொள்ள வேண்டும்…. விகிபீடியாவில் பார்க்கக் கூடாது….
ஸ்மிதாவுக்கு களை கூடியது! டேக்ஸிக்காரனைப் பார்த்தாள்….. மீண்டும் அவன் ஸ்காரஸ்ஸி யின் டீ நீரோவைப்போலவே தெரிந்தான். அவனைக் கேட்டுவிடலாமா!? இந்த நகரம் முழுவதையும் உன் டேக்ஸியில் சுற்றிக் காட்டுவாயா? உன் தோள் மீது தலைவைத்து நான் ஒரு நொடி கண் மூடலாமா!?
அவன் “ஐ ஆம் சாரி மேம்” என்று திரும்பிப் பார்க்காமலேயே போய்விட்டான். அப்படி நான் என்னதான் கேட்டு விட்டேன்!? விடியும்வரை என்னுடன் இங்கேயே இருக்க முடியுமா என்றல்லவா!? காலை படகுகள் தொடங்கும்வரை என்னுடன் இங்கே இருப்பாயா, மணிக்கணக்குப் பார்த்து டேக்ஸி பணத்தைத் கொடுக்கிறேன் என்றுதானே சொன்னேன்!? இதற்கு அவன் சம்மதிக்கவில்லையே….. ச்சே……. இந்தியாவாக இருந்தால் யாருக்காவது ஃபோன் செய்திருக்கலாம். இங்கே யாரை அழைப்பது…? என்னுடன் அமெரிக்காவுக்கு வந்திருக்கும் அலுவலக்காரர்களை அழைக்க விருப்பமில்லை…. டைம் பார்த்தாள்….. மூன்றே முக்கால்!
தொலைவில் தெரியும் சுதந்திர தேவதையை பார்த்துக்கொண்டே நின்றாள்…. மிகச்சிறப்பாகத் தெரிகிறாள்! அவளைச் சுற்றி மெல்லப் பறக்கத் தொடங்கிய பறவைகள்…. இரவு – பகல், குளிர் – வெயில் பாராமல் துணிவாக நின்றிருக்கும் இவள் தன்னைப்போல எண்ணற்ற பெண்களுக்கு எவ்வளவு நம்பிக்கையையும் , துணிவையும் அளித்திருப்பாளோ! அமெரிக்காவின் முழு ஸ்பிரிட் இவள்…. இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் எதை விரும்புகிறார்களோ அதைச்செய்ய முழுமையான சுதந்திரம் உள்ளவர்கள்! அறுபது வயதுக் கிழவனும் இங்கே கல்லூரியில் சேரலாம், குடும்பம், பிள்ளை குட்டிகள் என்ற பொறுப்புகள் இல்லாமல் நாம் விரும்பும்படி வாழலாம்… இந்த ஸ்டேட்யூ ஆஃப் லிபர்ட்டிக்குக் குளிராதா!? தன்னைப்போல ஆயிரமாயிரம் மக்களின் ஆசை விருப்பங்களை சுமந்து நின்றிருக்கும் அவளுக்குள் ஜீவன் ஒன்று கண்டிப்பாக இருக்கக்கூடும்! கண் சிமிட்டாமல், தலை அசைக்காமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்மிதா! சுதந்திரப் பெண்ணின் கண்களைப் பார்க்க தவித்துத் திண்டாடிக் கொண்டிருந்தாள்.
கதிரவன் சிகப்பைச் சிந்தி வானம் முழுதும் சுதந்திர தேவதையை பரப்பிக்கொண்டிருக்கும் தருணத்தில் அவளுடைய நியாப்கினும் சிவப்பாவது அவள் அறிவுக்கு எட்டியது. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வயிறு கலங்கியது. காலையில் கிராண்ட் சென்ட்ரலில் நியாப்கின் போடாமல் இருந்திருந்தால்!?…. ஒரு நொடி நடுங்கினாள்.
தூங்கியே ஞாயிற்றுக் கிழமையைக் கழித்து மறுநாள் “எக்ஸ்போ” வுக்குப் போய் உட்கார்ந்திருந்தாள். தன்னுடன் வேலை செய்பவர்கள் கேட்ட, சொல்லிய கேள்வி பதில்களுக்கு சுவராக இருந்தவள் உடனே எழுந்து நின்று சன்னலைப் பார்த்தாள். எதிரிலிருந்த ஏழுமாடிக் கட்டிடத்தின் மேல் ஒருவன் நின்றுகொண்டு கீழே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சாகத் தயாராகிக் கொண்டிருந்ததுபோலத் தோன்றியது. உன்னிப்பாக அவன் பக்கம் ஸ்மிதா பார்வையை நட்டாள். அது அவன்தான்! விழுந்தான்…. விழுந்தான்…. அட விழுந்துவிட்டான். ஸ்மிதா குனிந்து பார்த்தாள். தெருவில் அவன் உடல் விழுந்திருந்தது. போலீஸ்கார்கள் வேகமாக வந்து மக்களை விலக்கி ஆம்புலன்சில் அவன் உடலை எடுத்துச் சென்றார்கள். நெஞ்சம் படபட என்று அடித்துக்கொள்ளத் தொடங்கியது ஸ்மிதாவுக்கு. அங்கே இருந்தவர்கள் எல்லாம் ஒருநொடி சன்னலில் நின்று பார்த்துவிட்டு திரும்பி வேலைக்குப் போனார்கள். ஆனால் ஸ்மிதாவுக்கு அவன் முகம் கண்முன் வந்துகொண்டே இருந்தது. தான் ஒருமுறை தற்கொலை செய்துகொள்ள முயன்றது நினைவுக்கு வந்தது. பயத்தால் உள்ளுக்குள்ளேயே கதறி அதிலிருந்து தப்பித்துக்கொள்ள பணிக்குள் கவனம் செலுத்தினாள். எந்த அளவுக்கென்றால், எதிர் கட்டிடத்திலிருந்து ஒருவன் விழுந்த நிகழ்வு நடக்கவே இல்லை என்பது போல்!
அப் டௌனிலிருந்து டௌன்க்குப் போகும் மெட்ரோ ஏறும்போதே அவன் நினைவுக்கு வந்திருந்தான். பிராங்க்ஸ் போக 25 நிமிடம் தேவை….. என்ன செய்வது! அந்த நினைவிலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி! அந்த நிகழ்வை விடவும் அது சுமந்துகொண்டு வரும் நினைவுகளை நினைத்தாலே பயம்! கணவனின் கூரிய பேச்சு, அசிங்கமான நடத்தை, நோயால் அவதிப்படும் அத்தையின் முகம்…. பிள்ளைகளின் கத்தல்…. நிறைவேறாத தன் இசைக்கனவு….. தான் வாழ்க்கையில் தோற்றுவிட்டேனோ!? தன் வாழ்க்கையை பாதுகாக்கும் இசையின் பின்னால் போயிருக்கவேண்டுமா!? எவ்வளவு சிரமமாக இருந்தாலும் தனக்கு விருப்பமானதின் பின்னால் போயிருந்தால் கண்டிப்பாக இந்நேரம் சாதித்திருப்பேன். கிஷோரி அம்மா சாதிக்கவில்லையா?! தனிப்பெண்ணாக முன்னேறவில்லையா?! அதிகார சக்திகளுக்கு எதிர் நின்று இந்துஸ்தானி இசையின் அரசியாகவில்லையா!? விருப்பமில்லாமல் இருந்தாலும் இப்படி பணத்திற்காக வாழவேண்டுமா? யாருடையதோ தயாரிப்புகளை விற்க இப்படி நாடுகளைச் சுற்ற வேண்டுமா!? நானும் வாழ்ந்தேன் என்று பிள்ளைகளை உதிர்த்து நகை அணிந்து திரிந்து முடிவில் ஒன்றும் இல்லாமல் மண் சேரவேண்டுமா!? விருப்பமில்லாத வாழக்கையொன்றை வாழ்ந்து முடிவில் எல்லோரைப்போல இறந்து என்ன பலன்!? தனக்கு விருப்பமானதுபோல வாழ முடியவே முடியாதா?
மீண்டும் அதே இன்னிசை ஆங்கில சத்தம் கேட்கிறது…….. அதே கிழவன்?!
“என் பிள்ளைகளுக்கு பிரைன் ட்யூமர்…. இருவர் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். என் மனைவி இறந்து மூன்று ஆண்டுகளானது…. எனக்கு யாருமில்லை….. தயைகூர்ந்து உதவுங்கள்…… ஜஸ்ட் ஒன் டாலர்….. ப்ளீஸ்”
ஆம், அந்தக் குரல் கிழவனுடையதுதான்….. முந்தாநாள் என்ன சொன்னாய்?! என் மனைவிக்கு மார்ப்பு கியான்சர் என்று தானே!? இப்போது பார்த்தால் மனைவி இறந்து மூன்று ஆண்டுகள் ஆனது, தன் பிள்ளைகளுக்கு பிரைன் ட்யூமர் என்கிறாய், திருட்டுக் கிழவனே…. வா… நான் பத்து டாலர் கொடுத்தேனே… வரட்டும் கேட்டு விடுகிறேன்… வருகிறான்… வருகிறான்…… அட…! இன்று காலையில்தான் அந்தக் கட்டிடத்தின் மேலிருந்து இந்தக் கிழவன் விழுந்து இறந்ததை பார்த்தேனே!? இப்பொழுது இங்கு வரும் ஆள் யார்? இறந்த கிழவன் வேரொருவனோ!? பார்த்தே விடுவோம்… டிரைன் நிற்கிறது….. ஏதோ ஸ்டாப் வந்தது…. இறங்கப் போகிறான், விடக்கூடாது….. திருட்டுக்கிழவன்! பத்து டாலரை திரும்பப் பெறவேண்டும்…. இப்படிபட்ட ஒரு கில்லாடிக் கிழவன் இந்தியாவில் போன மாதம் தன்னை ஏமாற்றியிருந்தான். வாழ்க்கையில் ஏமாந்தது போதும். இனி ரொம்பவும் உசாராயிருக்க வேண்டும்… டிவோர்ஸ் எடுத்து தனியாக வாழ நேர்ந்தால்…!?
டிரைன் கதவு மூடப்போகிறது அப்போது ஸ்மிதா வெளியே குதித்தாள். கிழவனின் சட்டையைப் பிடித்துத் தள்ளினாள். அவன் குப்புற விழுந்தான். விழுந்ததும் அவன் முதுகு மீது ஏறி ஸ்மிதா உட்கார்ந்தாள். எழுந்து அவனைத் திருப்பி மீண்டும் அவன் மேல் உட்கார்ந்தாள். அவன் முகத்தைப் பார்த்தாள், அதே கிழவன்! அட அதே முகம்…. இன்று அந்த ஏழுமாடிக் கட்டிடத்திலிருந்து விழுந்த அதே மனிதன்! சாகவில்லையா இவன்! அல்லது இது என் பிரமையா? கிழவனின் பிரேதமா!? சுற்றிலும் பார்த்தாள். மக்கள் இவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஓ! இது உண்மை! அவன் முகத்தை மற்றொரு முறை பார்த்து தன்னைக் கவனித்தாள்.
அவன் இடுப்பின் மீது உட்கார்ந்திருக்கிறேன்! அசல் இங்கிலீஷ் படங்களின் அந்த “சீன்”களைப் போல. உடம்பு சில்லிட்டது. அடிவயிறு இறுக்கியது. நியாப்கின் ஈரமானதுபோலத் தோன்றுகிறது.
அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு எழுந்தாள். வெட்கப்பட்டாள்.
ஒரு அமெரிக்க ஆணின் இடுப்புக்கு மேல் கால்களை அகட்டி உட்கார்ந்து விட்டேனே….. ச்சீ…..
“மன்னித்து விடுங்கள்” என்று கூறி ஸ்மிதா அவனுக்கு கைநீட்டினாள். அவன் படுத்துக்கொண்டே இவளைப் பார்த்தான்; இவள் உதவியால் அவன் எழுந்து நின்றான்.
ஸ்மிதாவைப் பார்த்து “ஆர் யூ அன் இண்டியன்?” கேட்டான்.
ஸ்மிதா ஆம் என்பதைப்போல தலையசைத்தாள்.
அவன் உதட்டை விரித்து “உங்களுக்கு கிஷோரி அமௌன்க தெரியுமா?” ஆங்கிலத்தில் கேட்டான்.
ஸ்மிதா ஸ்தம்பித்து நின்றாள்.
சிறிது நொடிகளே தேவைப்பட்டது, அந்த அதிர்ச்சியிலிருந்து அவள் வெளிய வர.
அந்த அமெரிக்க கிழவன் மௌண்ட் ஏடன் மெட்ரோ நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தான். ஸ்மிதா அவனிடம் ஓடினாள்.
அவன் படிகளில் ஏறிக்கொண்டிருந்தான்.
”இக்ஸ்க்யூஸ்மி, கிஷோரி அமௌன்கர் உங்களுக்கு எப்படித் தெரியும்?” மூன்றாம் படியில் நின்றிருந்தாள் ஸ்மிதா, இதை கேட்கும் பொழுது.
ஆறாம் படியில் நின்றிருந்த அந்தக் கிழவன் புன்னகைத்தப்படி “அவர் என்னுடைய சொந்தக்காரர்” என்றான்.
ஸ்மிதா பல்லிளித்தாள்.
அந்த அமெரிக்கக் கிழவனுக்கு சற்று கோபம் வந்தது. ஸ்மிதாவை முறைத்தபபடி “ஆம்… அவர் என் சொந்தக்காரர்தான். என் தாய் ஒரு அமெரிக்கா டேவ்டாசி” என்று கூறி திரும்பி படிகளை மிதித்து மேல் செல்லத் தொடங்கினான்.
ஸ்மிதா கல்லாய் நின்றாள்.
***
கனகராஜ் பாலசுப்பிரமணியம்