கவிதைக்காரன் இளங்கோ
“ஸார் என்னைக்காவது ட்ரை பண்ணியிருக்கீங்களா?”
கம்மனாட்டி பையன் விடமாட்டான் போலிருக்கே என்றுதான் முதலில் தோன்றியது. கோபம் வந்தது. ஒவ்வொருத்தனுக்கும் அடுத்தவன் விஷயத்துக்குள்ளே மூக்கை நுழைத்து மோந்து பார்ப்பதில் அப்படியென்ன லயிப்பு மயிரு? மாதக் கடைசிக்கும் மாத தொடக்கத்துக்கும் நடுவே என்ன வித்தியாசம் இருந்துவிட முடியும். தேதி என்பது ஓர் எழவெடுத்த நம்பர். காலக் கணக்குத்தானே சம்பளக் கணக்கும். உத்தியோகம் என்பது புருஷ..
அடச்சே.
“என்னமோ சொன்னீங்கதானே ஸார்? சரியா காதுல விழல. இன்னொருவாட்டி சொல்லுங்க ஸார்”
அவனைத் திரும்பிப் பார்த்தேன். இந்தக் கண்களை இத்தனை வருடமாக தன்னுடனே சுமந்து திரியும் இவனைப் போன்ற ஜன்மமெல்லாம் இரவு நிம்மதியாக தூங்கத் தெரிந்திருக்கிற அயோக்கியன்கள். வீட்டில் தினம் பெண்டாட்டிகளிடம் வம்பளப்பதற்கு விஷயங்கள் இல்லாமல் வெறும் பையோடு போய்ச் சேர்ந்தால் அன்றைய சம்போகத்தில் குறைவிழும் போல.
“ரொம்ப மன அழுத்தமா இருந்துச்சுன்னா இன்னைக்கு வேணா ஸார். நாளைக்கு சொல்லுங்களேன். வாய் எதுவோ முணுமுணுத்துச்சு. எனக்குத்தான் சரியா கேட்கலை. இன்னைக்கு காத்து வேற ஓவரா இருக்கு ஸார்”
பன்னாடை.
“என்னங்க ஸார்?”
“ஒன்னுமில்ல”
“ஸார். உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லணும்னு ரொம்ப நாளா யோசனையாவே இருக்கறேன். எப்படி சொல்லுறது எப்போ சொல்லுறதுன்னு ஒரு இது”
இன்னுமொரு அடுத்தவன் கதை. வீண் அலப்பறை. ஓர் அந்தரங்க கிளுகிளுப்பு. அக்மார்க் எச்சக்கலத்தனம். யாருக்குத்தான் பிரச்சனைகள் இல்லை. எங்குதான் மனக்கசப்பு இல்லை. எதிரெதிர் துருவங்கள் அருகருகே உட்கார்ந்தபடி காலம் தள்ள வேண்டிய கட்டாயம் தான் திரும்பும் பக்கமெல்லாம் கதையாக விரிந்து கிடக்கிறது. இதில் புதுசா என்னத்தை சொல்லிவிடப் போகிறேன் என தூக்கிக்கொண்டு வந்துவிட்டான். சரியான தகவல் பொறுக்கி. இதுவொரு கொடுத்தல் வாங்கல் பேரம். டபுள் என்ட்ரி சிஸ்டத்தின் மண்டைக்கனம் பழகிய தடியன். Debit what comes in Credit what goes out.
அய்யோ.. ங்கோத்தா..! எனக்கெதுக்குடா அடுத்தவன் விஷயம். நானே நாறிக்கொண்டு நசிந்துகொண்டு இருக்கும்போது, பழகின நொள்ளைக்கு இதெல்லாம் தேவைத்தான்.
“எதுவா இருந்தாலும் இப்போ வேணாம் மூர்த்தி. ஏற்கனவே மண்டை ரொம்பி கிடக்குது”
நாகரீகமாக மறுத்துவிட்டதை அரைமனதோடு ஏற்றுக் கொண்டவனாக தொலைவில் தெரியும் கடலைப் பார்த்து மெதுவாக முகத்தைத் திருப்பிக் கொண்டான். வாக்கிங் போகிறவர்கள், பார்வைக்கு குறுக்கே இடது வலதாக போய்க் கொண்டிருந்தார்கள். கடல் தன் நிறத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றிக் கொண்டே வந்தது. சாம்பல் நிறம் கருமை ஏறி, மன இருளை நோக்கி இட்டுச் செல்வதைப் போல தோற்றம் அளித்தது. நான், வலதுபக்கமாகத் திரும்பி கலங்கரை விளக்கத்தைப் பார்த்தேன். அதன் உச்சியில் சுழன்று கொண்டிருந்த விளக்கு வெளிச்சம் கண்களுக்கு புலன்படத் தொடங்கிவிட்டிருந்தது. அருகே இருந்த மின்கம்பத்தின் கொண்டையில் சட்டிவடிவத்தில் கமிழ்ந்திருந்த விளக்குக் குடுவையின் மீது வந்தமர்ந்த காகம் ஒன்று எங்கள் இருவரையும் தலைசாய்த்து ஒற்றைப் பார்வை பார்த்துவிட்டு சிறகுகளை அலகுகொண்டு கோதிவிட்டுக் கொண்டது. கடற்கரையின் குறிப்பிட்ட மணற்பகுதி முழுவதும் பரவி வெளிச்சம் பாய்ச்ச நிறுவப்பட்டிருந்த உயரமான கூட்டுவிளக்கு மின்கம்பத்தின் தலையில் கூடுகட்டி தஞ்சம் அடையும் பருந்துகள், அதற்கும் சற்றே உயரத்தில் வட்டமடித்தபடியே இருந்தன. திடுமென விளக்குகள் எரிந்ததில் காகம் அசரவில்லை. பருந்தும் மருளவில்லை. இயக்கமும் இருப்பும் தொந்தரவாகவில்லை.
“எல்லாமே ஒரு பழக்கம்தான்”
அவன் கவனம் கலைந்து மீண்டும் என்னைப் பார்த்தான். மேற்கொண்டு நான் பேசப்போவதைக் கேட்பதற்குத் தயாராவதை அவனுடைய கண்கள் மின்னி அடையாளப்படுத்தின. பார்க்கும் பார்வையை கடைவிரிக்கும் கண்களின் வழியே யார் வேண்டுமானாலும் யாருக்குள்ளும் நுழைந்துகொண்டு உளவு பார்க்கலாம். தந்திரங்கள் மலிந்து கிடக்கும் மனத்தின் இருளுக்குள் புரளும் யோசனை குப்பைகளுக்கு ஒரு சிறிய சலாம் வைத்தால் போதும். இவ்வாறாக, அவனுடைய ஆவலைத் தூண்டுகிறேனா? காத்திருக்க வைத்து இன்பம் துய்க்க எத்தனிக்கிறேனா? ஆனால் எனக்கது நோக்கமல்ல. அதுதான் நோக்கமோ என அவன் நினைக்கக்கூடும். ஒரு மனநிலையின் பகுதிகளை கொஞ்சமாய் விண்டு எடுத்து இதனை இப்படிப் பார்க்க கூடாது. இதற்கு வேறொரு அர்த்தம் இருக்கிறது என மன்றாடுவது மோசமான பழக்கமாகி விட்டது.
அவனுக்கு என்ன தலையெழுத்து? என்னைச் சரியாகப் புரிந்து கொள்வதற்காகவே எவரோ பெற்று வளர்ந்து இப்படி எருமை கடா வயதில் இங்கே பக்கத்தில் உட்கார்ந்து என் வாயைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நானாக நினைத்துக் கொள்ள வேண்டுமா என்ன?
அயோக்கியத்தனம்.
“ஸார் ப்ளீஸ் சொல்லுங்க. என்னைக்காவது ட்ரை பண்ணியிருக்கீங்களா?”
பேசிவிடுவது என நினைக்கும் நொடியில் மீண்டும் அதே கேள்வியைத் தொடங்கி வைக்கிறான் பொறுமையற்ற அகௌண்ட்ஸ் தடியன்.
“டூ பர்சனலா கேட்கறீங்க மூர்த்தி. அதான் யோசிக்கிறேன்”
இப்போது அவன் சட்டென அமைதியாகி விட்டான். குனிந்து தன்னுடைய மணிக்கட்டு கடிகாரத்தின் கண்ணாடி மீது கட்டைவிரல் கொண்டு வட்டங்கள் வரையத் தொடங்கினான். மனித மௌனங்களுக்குள் சுழலும் கசடுகள் அதனோடு சம்பந்தப்பட்ட வேறொன்றின் மீது கவனம் குவிக்கும் உளவியலைப் பற்றி கொஞ்சமாக அறிந்திருந்தேன். அது எனக்குமே அதிகம் நடப்பதால் இப்போதெல்லாம் அவை சலிப்பூட்டுவதோ எரிச்சல் ஏற்படுத்துவதோ கிடையாது. இப்படியான கோளாறு செயல்கள் எல்லாம் ஒரு டைம்லெஸ் மொமெண்ட்.
எங்கள் இருவரிடமும் நிறைய நேரம் இருப்பதை உணர்த்தும் தருணமாகவும் அது இருந்தது. அல்லது நான் அப்படி எடுத்துக் கொண்டேன்.
இதொரு சௌகரியம்.
கடிகாரத்தின் பட்டை பக்கிளை நிமிண்டி அதன் துளையிலிருந்து விடுவித்து கழற்றி சட்டைப் பையில் போட்டுக்கொண்டான். சதுரமான அடையாளத்தோடு தோல் நிறத்தின் அசல் வெண்மை நிறம் படர்ந்திருந்த மணிக்கட்டின் உட்பக்கம் ஓடிய உயிர்நாடி நரம்பின் புடைப்பை தடவிவிட்டுக் கொண்டே என்னை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு குனிந்து கொண்டான்.
“என்னோட ரகசியத்தை உங்ககிட்ட மட்டும் சொல்லணும்னு ஒரு இது ஸார்”
“டூ பர்சனல்னா வேணாம் மூர்த்தி. விட்ருங்க. எனக்கும் மூட் இல்ல”
“இல்ல ஸார். கேட்டுக்கிட்டீங்கன்னா எதுனாச்சும் சொல்லுவீங்களா இருக்கும்”
“வாஸ்தவம் தான். அப்டி பார்த்தாலும், ஆஃபீஸ்ல நான் உங்களுக்கு அவ்ளோ க்ளோஸ் இல்லையே. ரத்னம் தானே உங்க தோஸ்த்?”
“புரியுது ஸார். ஆனாலும் நீங்க ஒரு தனி பர்சனாலிட்டி”
மனத்துக்குள் ‘டேய்’ என ஒரு குரல் மூண்டு அடங்கியது.
“போன வாரம், என்னோட பர்சனல் விஷயம்தான் மொத்த ஆஃபீஸுக்கும் நொறுக்கு தீனி. இல்லையா மூர்த்தி? இப்ப ஏழுநாளா அது ஜீரணம் ஆகற வரைக்கும் வெயிட் பண்ணீட்டிருந்தீங்களா என்ன?”
“ஸாரி ஸார். நான் ஒரு சராசரி மரமண்டை. ஆனா, இந்த ஒரு வாரமா எனக்கு சரியான தூக்கம் இல்ல. உண்மைய சொல்லணும்னா உங்க விஷயம்தான் உள்ளே கலந்துகட்டி ஓடிக்கிட்டே இருக்கு”
“என்ன வேணும் மூர்த்தி உங்களுக்கு?”
“சாவு ஸார்”
நான் அதிர்ச்சியெல்லாம் அடையவில்லை. இம்முறை கடல் நோக்கி என் முகத்தை திருப்பிக் கொண்டேன். பரந்து அலையும் இந்தக் கடற்காற்றை வடிகட்டி காலங்காலமாக தம்முள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறதே வெண்சங்கு! அது ஏன்? எனச் சம்பந்தமில்லாமல் ஒரு கேள்வி எழும்பியது. இப்படித்தான் முன்பு கன்யாகுமரி போயிருந்தபோது..
“என் மனைவிக்கு நான் ரெண்டாவது புருஷன் ஸார்”
நம்பமுடியாத விஷயமாக இருக்கிறது. நிஜமாகவே இவனிடம் இதனை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இதில் நம்புவதற்கும் நம்பாமல் போவதற்கும் என்ன இருக்கிறது? இதுமாதிரியான ரெண்டுங்கெட்டான் நினைப்பு எல்லாமே, நாம் பரிணமித்துவிட்ட கணந்தொட்டே தனிப்பட்ட முறையில் வரையறை செய்து பழகிக்கொண்ட கற்பிதங்கள் அல்லவா. இவற்றுக்கிடையே, ஒரு மனதைப் பிளந்து எடுத்துப் பரிமாறும் எந்த அசலுமே ரத்தமும் சதையுமாக கவுச்சி வாடையோடு இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
அட மூர்த்தி.
“காதல் செய்துதான் பண்ணிக்கிட்டோம். அவ, ஒரு டிவோர்ஸி. முந்தின வாழ்க்கைல அவளுக்கு குழந்தை எதுவும் இல்லை. எங்களோட இந்த முப்பத்து ரெண்டு மாசத்துல, மூனு வாரத்துக்கு முன்னாடி எங்களுக்குள்ள ஒரு கடும் வாக்குவாதம் முத்திச்சு. எங்கேயோ எப்பயோ அவளுக்கு என்மேல இருக்கிற பிடிப்பு போயிருச்சு. அன்னைக்கு அவ பேசப்பேச அதை என்னால உணர மட்டும் முடிஞ்சது. ஆனா, நிறுவ முடியலை. அப்பப்போ, வார்த்தையால உரசிக்கிட்டு இருந்திருக்கோம். என்னைவிட அந்தாளு பெட்டரோன்னு அவளுக்குத் தோனிருச்சு போல. ஒரு லெவெல்ல அதை வார்த்தையாவே கொட்டிட்டா. என்னால அதுக்கு மேல ஒன்னும் பேச முடியலை. பேசி என்ன பிரயோஜனம் சொல்லுங்க? கொட்டினதை அள்ளி எடுத்தா கையை விட்டு மாயமா மறைஞ்சுடுதா என்ன? அப்புறம் ரொம்ப அசிங்கமா ஒரு அமைதி. அந்த நொடி என்னோட பெட்ரூம் சாவு விழுந்த எடம் மாதிரி மாறிடுச்சி ஸார். இதுக்காக ரெடியா இருந்த மாதிரி மறுநாளே கிளம்பி போயிட்டா. நான் தடுக்கலை. தடுக்கவும் தோனலை. எப்படி கணக்குப் போட்டு பார்த்தாலும் டேலி ஆகலை. இதுல உங்களைப் பத்தின விஷயமும் சேர்ந்துக்கிச்சா.. கடவுளே, இந்த ஒரு வாரமும் ரியலி ஹாரிபில்”
துக்கம் ஒரு மகா இம்சை. காய்ச்சின இரும்பு குண்டு ஒன்று சல்லென்று தொண்டை வழியாக இறங்குகிற சனியன். யாரும் யாரையும் பார்த்து கொஞ்சநேரம் அதை நான் வாங்கிக் கொள்கிறேன், இப்படி என்னிடம் கொடு, நீ கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள் என சொல்லிவிட முடிவதில்லை. பரிமாற்றத்துக்கு உரிய வஸ்துவாக எப்போதுமே அது இல்லை. ஆனால், அதற்காகத்தானே இவன் என்னை மடக்கிப் பிடித்திருக்கிறான்.
நான் இப்போது என்ன செய்துவிடக்கூடாது என்பதைப் பற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தேன்.
“முழுகாம இருக்கா ஸார்”
அவனைத் திரும்பிப் பார்த்தேன். இன்னும் குனிந்தபடியே தான் இருந்தான். இவனுக்கு என்னதான் வேண்டும் என்னிடம்? இத்தனை அந்தரங்கமான விஷயத்தை சொல்ல என்னைத் தேர்ந்தெடுத்த அவசியம் என்ன? நானும் ஒரு டிவோர்ஸி என்பதால் மட்டும்தானா? ஆனால் இவனுடைய பிரச்சனை வெறும் நேர்க்கோடாக இல்லையே. குறுக்கே ஒரு பழைய கோடு உள்ளது. இப்போது இன்னொரு சிறிய கோடும் உருவாகியுள்ளது. சமீபமாக பரிதாபப்படும் மனநிலை என்னைவிட்டு தூர போய்க்கொண்டே இருக்கிறது. பச்சாதாபங்களுக்கோ எப்போதும் விலை கிடையாது. அவை இனாம்.
“நீங்க வருத்தப்படறீங்களா மூர்த்தி? அவங்களை மிஸ் பண்றீங்களா?”
“இந்நேரம் கலைச்சிருப்பா”
அடச்சை! அவ அவளை அவ அவளாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே என்று ஏன் மனதளவிலே கூட விடமுடியவில்லை. என்ன நடந்தது? ஏன் நடந்தது? எனத் துருவித்துருவிக் கேட்பதில் இருக்கும் சுவாரஸ்யத்தைப் பழகிய தடியன்கள். டேய்! இதெல்லாம் தனியே கிடந்து மருகிக்கொள்வதற்கான நிர்ப்பந்தங்கள். அவற்றை நான் தெரிந்து என்ன ஆகப்போகிறது. இப்போ இங்கே, இவன் நெஞ்சு கனமேறி உட்கார்ந்திருக்கிறான். நான் இவனுக்கு என்ன செய்துவிடக் கூடாது என்பதையே என்னுடைய மூளை ரிப்பீட் அடித்துக் கொண்டிருக்கிறது.
“இத்தனை வருஷத்துல உங்களை எனக்கு முழுசா தெரிஞ்சிக்க சந்தர்ப்பம் இல்லவே இல்ல மூர்த்தி. ஜஸ்ட் ஒன்னா வேலை பார்க்கறோம் அவ்ளோதானே. இதில, திடீர்னு உங்க மனைவி பத்தி நீங்க வாசிக்கிற குற்றப்பத்திரிகையை அப்படியே ஏத்துக்க முடியலை. ஆனா, அது உங்க வெர்ஷன். உங்க வலி. அந்த அடிப்படை புரிதல்ல இருந்து மட்டும் ஒன்னு கேட்கவா? கேட்கலாமா?”
அவன், திருதிருவென்று முழித்தபடியே மெதுவாக அனுமதி கொடுத்தான்.
“கேளுங்க ஸார்”
“நீங்க சொன்னீங்க இல்லையா, என் மனைவிக்கு நான் ரெண்டாவது புருஷன் அப்டின்னு?”
“ஆமா ஸார்”
“அப்படி சொன்னதுக்கு பதிலா, என் மனைவி ஏற்கனவே கல்யாணம் ஆனவங்க அப்டின்னும்கூட நீங்க என்கிட்டே சொல்லியிருக்கலாம் இல்லையா? ஏன் மூர்த்தி! உங்களுக்கு ரெண்டாவதுங்கற அந்த எண்ணிக்கை முக்கியம்னு பட்டுச்சோ?”
பேச்சில்லை. யோசிக்கிறான். யோசிக்கட்டும். நிறைய நேரம் இருக்கிறது. ஒரு நுட்பத்தை கூராய்வு செய்ய மூளை போதிய நேரத்தைக் கோருகிறது. நாம் கொடுக்க மறுத்து விடுகிறோம். அப்படியொரு மூர்க்கம் நம் சுபாவத்தில் இருக்கவே செய்கிறது. அதுவோ, என்னத்தையாவது கிறுக்கித் தள்ளிவிட்டு, சர்தான் போடா என்றுவிடும். பத்து நிமிடங்களாவது கடந்துவிட்டிருக்கும். தரையிலிருந்து பார்வையைப் பெயர்த்தவன் குழப்பத்தோடு நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.
“ஆமால்ல.. ஏன் ஸார் அப்படி சொல்லிட்டேன்!?”
எவ்வளவு தூரத்துக்கு இந்தப் பேச்சை எடுத்துப்போவது என்கிற அறிகுறியே என்னிடம் இல்லை. ஒரு சுழலுக்குள் என்னை மெதுவாக இழுக்க ஆரம்பித்து விட்டான் இந்தப் பயல் என்பது மட்டும் துல்லியமாகிக் கொண்டே வந்தது.
“பிடித்தங்களைத் தாண்டி தொடக்கத்திலிருந்தே உங்க மனைவி மீதான ஒரு பரிதாபத்தை உங்களோடவே சுமந்துகிட்டே ஒரு வாழ்க்கையை நீங்க வாழ்ந்திருப்பீங்களா இருக்கும். உங்களை விட அந்தாளு பெட்டர்ன்னு அவங்க சொல்லிடும்போதே நீங்க ரெண்டாவது புருஷன்ங்கற உங்களோட பர்சனல் நினைப்பு காயப்பட்டிருக்கும். அப்புறம் முப்பது மாசம் வாழ்ந்திருந்தா என்ன? முன்னூறு மாசம் வாழ்ந்திருந்தா என்ன? எல்லாம் ஒன்னுதான் மூர்த்தி. இதுல கோளாறுன்னு பார்த்தா, யாரோட லிஸ்ட்ல நீங்க எத்தனையாவதா இருக்கறீங்கன்ற உங்களோட பர்சனல் பரிதவிப்பாவும் அது இருக்கலாம். உங்க ஸ்தானத்தை நீங்க எப்பயோ தீர்மானிச்சிக்கிட்டீங்களோ என்னவோ”
“அப்படின்னா.. குற்ற உணர்வுக்கு ஆளாகறேனோ ஸார்?”
“நோ ஹார்ட் ஃபீலிங்ஸ் மூர்த்தி. உங்க வெர்ஷன் எனக்கு இதைத்தான் வெளிப்படுத்துது. வேற யார்கிட்டயாவது டிஸ்கஸ் பண்ணீங்கன்னா வேற மாதிரி சொல்லுவாங்களா இருக்கும். தட்ஸ் மே பீ”
“திரும்பி வரமாட்டான்னு தோனிருச்சி ஸார்”
“அப்டியா! திரும்பி வரமாட்டாங்கன்னு மட்டும் தோனிச்சா? இல்ல, வரவேண்டாம்னு தோனிச்சா?”
“ரெண்டும் தான் ஸார்”
பதில் தீர்க்கமாக இருக்கிறது. ஒருவார காலம் தனிமையில் உழன்றதின் நீட்சிதான் இதுவும்.
“ஏன்? உங்களுக்கு தேடி போய் கூப்பிடணும்னு தோனலையா?”
“உடைஞ்ச பாத்திரம்.. ஒட்ட…”
அவனை முடிக்கவிடாமல் இடைவெட்டினேன்.
“இந்த புல்ஷிட்லாம் நம்மகிட்ட நிறையவே இருக்குல்ல மூர்த்தி?”
தேடிப்போய் கூப்பிடணும்னு தோனலையான்னு கேட்டா அவரவர் வழி அவரவர்க்குன்னு சொல்லும்படியா ஏன் மண்டைக்குள்ளே வர மாட்டேங்குது தடியனுக்கு. அதான் அப்பவே சொன்னானே, மரமண்டைன்னு. சரியான மரமண்டைதான். இந்த கேடுகளையெல்லாம் நான் ஏன் நொந்துக்கணும்? இப்படியான ஆட்கள் சிலசமயம் அழுது தொலைத்துவிடுவான்கள். அப்படித் தயாராகிறானோ எனப் பார்த்தேன். முகத்தில் அதற்கான அறிகுறியே இல்லை. வாய் மட்டும் கோணிக்கோணி மீசைக்குள் ஒதுங்குவதும் வெளிப்படுவதுமாக இருந்தது. ஏதும் தனக்குள் பேசிக்கொண்டிருக்கிறானா? பேசட்டும். பேசட்டும். நேரம் கிடக்கிறது.
“சாவு பத்தின யோசனையாவே வருது ஸார்”
“ம்ம். யேன்? செத்துடறது பெட்டர்ன்னு தோனுதுங்கறீங்களா?”
“அப்படியும் தோனுது ஸார்”
வேறு என்னவெல்லாம் தோன்றுகிறது எனக்கேட்க விருப்பமில்லை எனக்கு. சுழல் முறையாக இவையெல்லாம் ஒன்றுபோலவே மீண்டும் மீண்டும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காரணங்களை முன்னிறுத்தி நடப்பவைதான். என்னுடைய தனிப்பட்ட உளக்குமுறல்களோ இம்மாதிரி சமயங்களில் தானாகவே மேலெழும்பி ‘நானுமிருக்கிறேன் பார்’ என்று குமிழ்விட்டு வெடிக்கக் காத்திருப்பவை தான். அவற்றின் மீது பத்து பதினைந்து மாற்றுப் பழக்கங்களை கனமாக போட்டு அமிழ்த்தி அடக்கி வைத்திருக்கிறேன். ஒன்றை மீறினாலும் மற்றது பார்த்துக் கொள்ளும். அவற்றில் குடியோ கஞ்சாவோ சமயங்களில் கை கொடுத்திருக்கிறது.
இதையெல்லாம் பரிந்துரை செய்யவா முடியும். நெவர்.
தனிமனித அபத்தங்களுக்கு எதிரான மாற்று நடவடிக்கைகள் குறித்து தனிமனிதனுக்கு கிளாஸ் எடுப்பது போன்ற போரடிக்கும் செயல் வேறு என்ன உண்டு? குடிப்பதற்கு துணையாக குறைந்தபட்ச ஊறுகாய் கூட கிடைக்காத சமயத்தில் யோசிக்காமல் பக்கத்திலிருக்கும் சுவரையாவது நக்கிக்கொள்ளும் சுய சுரணை இருந்தாக வேண்டும்.
“ஸார் என்னைக்காவது ட்ரை பண்ணியிருக்கீங்களா?”
தன்னைப் பற்றி சொல்லி என்னைப் பற்றிக் கேட்கிறான். எத்தனை இக்கட்டிலும் சூட்சுமம் அறிந்தவர்களாக இருக்கிற மனிதர்கள் அநேகர் உண்டு என்பதற்கு, இதோ இப்போது இவனுமே ஒரு நல்ல உதாரணம் தான். நானுமே ஒருமாதிரி ட்யூன் ஆகிவிட்டிருந்தேன்.
“ட்ரை பண்ணியிருக்கேன் மூர்த்தி”
“ப்ளீஸ். சொல்லுங்க ஸார்”
“தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க?”
நான் சிரித்தபடியேதான் கேட்டேன். ஆனால், நான் இவனுக்கு என்ன செய்துவிடக் கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள அரும்பாடுபட்டேன்.
“எனக்கு யூஸ் ஆகும் ஸார்”
“நோ! நிச்சயமா யூஸ் ஆகாது மூர்த்தி. ஆனா, பகிர்ந்துக்கறேன். முன்னே ரொம்ப தொடக்கத்துல, என்னோட மனப்பிளவின் ஆரம்பத்துல, ஒரு தனிமை வேகத்துல அப்படி தோனிச்சு. ஒரு நேர்க்கோட்டு யோசனை. அவளைத் தண்டிச்சிடணும். அதெப்படி? பெட்ரூம் ஃபேன்ல தூக்குப் போட்டு தொங்கிடணும்னு யோசிச்சிட்டேன். ரொம்ப தோதா, அவளோட துப்பட்டாவத்தான் தேர்ந்தெடுத்தேன். அது ஒரு கில்லிங் எலிமெண்ட்னு நினைச்சுக்கிட்டேன். ஃபேன் றெக்கைல முடிச்சு போட்டுட்டு ஸ்டூல் மேல நின்னுக்கிட்டு இருந்தேன். சுருக்கு ரெடி பண்ணி கழுத்துலயும் மாட்டிட்டேன். எதிர்ப்பக்கம் மூடியிருந்த ஜன்னல் கண்ணாடி வழியா பரவி இருந்த வெளிச்சத்தையே கொஞ்சநேரம் பார்த்துக்கிட்டே நின்னேன். ஏன்னு கேட்டா பதில் இல்ல. திடீர்னு அந்தப் பக்கமா ஒரு பல்லி எங்கிருந்தோ வந்து அந்த வெளிச்சத்து மேலே நிழலா நின்னுருச்சு. வந்த வேகத்துல அப்படியே நின்னுருச்சு. ஏன் டக்குன்னு நின்னுருச்சு? அதுக்கப்புறம் அதுகிட்ட எந்த அசைவும் இல்ல. ஒரு பரந்த வெளிச்சத்தின் மேல ஒரு சிறிய உயிரின் நிழல். எனக்கோ மனசுக்குள்ள அதுவரை நடந்ததெல்லாம் கன்னாபின்னான்னு முன்னேயும் பின்னேயுமா ஓடுது. குனிஞ்சு என் பாதங்களைப் பார்க்கிறேன். ஸ்டூல் மேல நிக்கிற கால்கள் முழுசும் க்ளியரா இல்லாம ஒரே வெளிச்சமாவும் சின்னச்சின்னக் கோடுகளாவும் தெரியுது. நினைவு தடுமாறினா கூட ஸ்டூல் மேல இருக்கிற பிடிப்பிலருந்து கால் தானாவே விடுபட்டிரும்ன்னு தோனுது. இப்படி செத்துட்டா தண்டிச்சதா ஆகிடுமான்னு கூடவே ஒரு கேள்வி வருது. ஆமா அப்படித்தான்னு ஒத்துக்கற மாதிரி ஒரு பதிலே மண்டைக்குள்ள இல்ல. அப்பத் தெரிஞ்சுக்கிட்டேன், ஆக்சுவலி சாகவெல்லாம் தயாரா இல்ல. அது என்னனு தெரிஞ்சுக்கணும்ன்னு எனக்கு ஒரு மூளைக்கெட்ட வெறித்தனம். கிட்டத்தட்ட இருக்கறதுக்கும் இல்லாம போறதுக்குமான விளிம்பு. நிமிர்ந்து பார்த்தப்ப அப்பவும் அந்த பல்லி அங்கேயே நிக்குது. மெதுவா சுருக்கிலருந்து மீண்டு கீழே இறங்கிட்டேன். அன்னைக்கு ராத்திரி பெட்ல படுத்துக்கிட்டே அந்தச் சுருக்கு முடிச்சைப் பார்த்துக்கிட்டே இருந்தேன். எப்போ தூங்கினேன்னு தெரியல. காலையில கண்ணு முழிச்சப்போ தொங்கிட்டிருந்த அந்தத் துப்பட்டா மேல எனக்கு எந்த ஒரு அர்த்தமும் தோனலை. ஆனா, எவ்ளோ மனப் புலம்பல் கொண்டிருக்கோம்ன்னு அப்படி ஒன்னை ட்ரை பண்ணும்போது தெரிஞ்சிடுது. அது ஒரு முடிவெடுத்தல் மட்டுந்தான். அதுக்கு மேல பெரிசா நத்திங் இம்ப்பார்ட்டன்ஸ். செத்து போயிட்டா இந்த உலகத்துக்கு நான் யாரு? ஜஸ்ட் ஒரு மெமரி. அவ்ளோதான் இல்லயா?”
சட்டி விளக்கின் மீது உட்கார்ந்திருந்த காகம் ஒரு முறை ‘கர்ர்ர்’ என்றது. அதைத் திரும்பிப் பார்த்தேன். அவனும் பார்த்தான். அது அசரவில்லை. எங்களை உற்று நோக்கிவிட்டு தலையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டுவிட்டது.
செத்துப் போவதைப் பற்றி எத்தனையோ பேசலாம். நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. காரணங்கள் மட்டுமே வெவ்வேறானவை. அந்தந்த காலத்தை அவைத் தின்று செரித்துக் காத்திருப்பவை. தானே தன் வாழ்வை முடித்துக்கொள்ள நினைக்கும்போது ஒருமுறைக்குப் பல முறை யோசித்துப் பார்ப்பதற்கான அவகாசத்தையும் தாண்டி, யோசித்துப் பார்ப்பதே பெரும் அவகாசமாகவும் இருக்கிறது. இதெல்லாம் இவனுக்கு எப்படிப் புரிந்துவிடக் கூடும்? அவன் வலி அவனுக்கு. அவன் காரணம் அவனுக்கு. அவனுடைய தனிமை அவனை என்ன வேண்டுமானாலும் செய்யும். அதைப் புறக்கணிக்கவோ புறந்தள்ளவோ முடியாது. அதனுள்ளிருந்து வெளியேறிட ஈர்க்கும் விஷயங்களை கண்டுபிடித்துக் கொள்ளத் தெரியவேண்டும். இவனைப் போன்றவர்கள் கணக்குப் போட்டு சமன்படுத்த முயல்பவர்கள். பேலன்ஸ் ஷீட் டேலி ஆகும்வரை போராடத் தெரிந்தவர்கள். குறைகளை ஈடுகட்ட பொய்யாகவேணும் ஒரு என்ட்ரியை உண்டுபண்ணத் தெரிந்த கெட்டிக்காரர்கள். ட்ரையல் பேலன்ஸில், வரவும் பற்றும் பண்டங்களாகத் தான் இருக்க வேண்டும் என்றோ பணமாக மட்டுமே மதிப்பிடப்பட வேண்டும் என்றோ நிர்ப்பந்தம் இல்லை. அது ஓர் ஏற்பாடு. உலகம் தழுவிய பொதுவில் ஒத்துக்கொள்ள பழகி வைத்திருக்கும் பொருளாதார அமைப்பின் எளிய கோட்பாடு. தனிமனித மனம் செய்கின்ற அயோக்கியத்தனங்களுக்கு பொருள் கூட்டத் தெரிந்த பயன்மதிப்பைச் சுயமாய் சம்பாதித்துக் கொள்ள அனுபவம் என்கிற பெயரில் கொஞ்சமாவது அவமானத்தைப் பெற்றிருக்க வேண்டும். அது கோடு கிழித்துக் காட்டும் வழித்தடத்தில் எல்லையற்ற இருளின் அடர்த்தியைத் தீண்டிப் பார்க்கும் வலுவுள்ள சொற்களை உற்பத்திச் செய்ய மனித நாக்குக்குத் தெரிந்திருக்கிறது.
அது ஒரு வித்தை மட்டுமே. ஆனால் சபை ஏறத் தெரிந்த வித்தை.
“என்ன சொல்லுறதுன்னு தெரியலை. ஆனா, நீங்க இவ்ளோ அழுத்தங்களை தாண்டித்தான் எங்க முன்னாடி நடமாடிக்கிட்டு இருக்கீங்கங்கறதை நினைச்சு பார்த்தாலே மலைப்பா இருக்கு ஸார்”
இவனுக்கு நான் எதைச் செய்துவிடக் கூடாதோ அதை செய்துவிட்டேனா!
“உங்களை மறக்க மாட்டேன் ஸார்”
அவன் எழுந்து கொண்டான். அவ்வளவுதான் பேச்சு முடிந்தது. வந்த வேலை முடிந்தது. என்னை மடக்கிப் பிடித்து பேச வைத்து, பதிலுக்கு பதில் வேண்டியதை வாங்கிக் கொண்டவனாக நிற்கிறான். ஆனால், என்னைப் பொறுத்தவரை என்னிடமிருந்து இன்னும் ஒரு ஸ்மார்ட் மூவ் தேவைப்படுகிறது.
“என்னை நினைச்சுக்கிட்டே இருக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு கிடையாது மூர்த்தி. வேலைங்கற பேர்ல ஒரு கூரைக்கு கீழே வீ ஆர் ஜஸ்ட் மேட்ஸ். எவனுக்கோ உழைச்சுக் கொடுத்து கூலி வாங்கி அதைக் கொண்டு பிழைக்க மட்டுமே தெரிஞ்சு வச்சிருக்கிற ஜஸ்ட் ஸம் இடியட்ஸ்”
“அப்போ, பர்சனலுக்கும் அதுக்கும் இருக்கிற பாலம்?”
“குட். ஆஃபீஸ் நேரத்தையும் முடிச்சுட்டு வந்து இப்படி உட்கார்ந்துகிட்டு பேசிட்டிருக்கோம்ல! இதோ இந்தப் பறவைகளுக்கு நம் பாஷை புரியாது. அந்த நாய், இந்த கடல் சத்தம், கலங்கரை விளக்கம், பின்னால இருக்கிற ஐ.ஜி. ஆஃபீஸ். இது எதுக்குமே நம்ம பாஷை புரியாது. எல்லாமே ஒரு கூகிள் மேப்பில் இருக்கிற சில புள்ளிகள். இப்போ இன்னைக்கு இந்த நிமிஷம் நாம இங்க இருக்கிறோம், நாளைய கணக்குல நேத்து இங்க இருந்தோம்ங்கறதுக்கான அடையாளங்கள்”
“ஒரு மெமரி”
“ம்”
“அவ்ளோதான்ல ஸார்?”
“கிட்டத்தட்ட ஆமா”
விர்ரென்று அந்த காகம் சிறகு உதறி பறந்து போயிற்று.
“எனக்கு என்ன வேணும்னு தெளிவா புரிஞ்சிருச்சு ஸார்”
“அப்படியா? ஆனா, நம்மளோட இன்றைய பேச்சுக்கு ஒரு பேரு இருக்கு மூர்த்தி. அது ஒரு வகையறா”
கொக்கி போட்டாகிவிட்டது. அவன் என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். காற்றில் ஈரம் கலந்த உப்புச்சுவை கூடியிருந்தது.
“இதெல்லாம், காலகாலமா எல்லாரும் பண்றதுதானே ஸார்? இன்னும் எத்தனையோ ரெண்டு ரெண்டு பேரு இதோ இப்போ இந்த பீச்ல உக்காந்திருக்காங்களே.. அவங்களும் கூடத்தானே ஸார்? டிஸ்கஷன்ஸ் எங்கேயும் எப்பவும் இருக்குல்ல? சிலது அற்பத்தனமா. சிலது இன்டலக்ச்சுவலா..”
பரவாயில்லையே. மரமண்டையில் அக்கௌண்ட்ஸையும் தாண்டி நிறைய கீறல்கள் இருக்கிறது போலவே.
“ய்யா.. யூ ஆர் ரைட்”
“ஆனா.. நீங்க சொல்ல வந்தது என்னன்னு சொல்லுங்க ஸார்”
மிக நிதானமாய் இடவலதாக தலையை அசைத்துக் கொண்டேன்.
“நாளைக்கு ஆஃபீஸ்ல காஃபி பிரேக்ல சொல்லுறேன் மூர்த்தி”
நானும் எழுந்து கொண்டேன். நம்ப முடியாதவன் போல என்னையே பார்த்திருந்தான். போட்ட கொக்கி மண்டையோட்டை துளைத்து சதக்கென்று பொருந்திக் கொண்டுவிட்டது. அவனுடைய முகம் இறுகிப் போயிருந்தது. அப்பாடா!
பாறாங்கல் கனத்திற்கு நெஞ்சில் ஏறி அமர்ந்திருக்கும் துயரத்துக்கு ஈடாக வாய்வழி தத்துவங்கள் சமன் ஆவதில்லை. ஆகக்கூடாது. இருந்தாலும், இவனுக்கு நான் என்ன செய்துவிடக் கூடாது என்பது என்னுடைய குறைந்தபட்ச அகங்காரம்.
கை குலுக்கினான். அதில் உயிர்ப்பில்லை. உறுதியில்லை. வெரிகுட் என நினைத்துக் கொண்டேன். அவன் தன் கடிகாரத்தை மீண்டும் கட்டிக்கொள்ளவில்லை. அந்த மணிக்கட்டின் நரம்புகள் ரத்தத் துடிப்புடன் புடைத்திருந்தன.
இன்றைய இரவை நீ தாண்டிவிடாமல் வெற்றிகரமாக செத்துவிடு மூர்த்தி. அட்லீஸ்ட் நீயாவது.
*
காலையில், முதல் ஆளாக அலுவலகம் போயிருந்தேன். ஒவ்வொருவராக வந்து சேர்ந்துவிட்டார்கள். மூர்த்தி வரவில்லை. அலுவலக நேரம் கடந்து போய்க்கொண்டே இருந்தது. என்னுடைய அறையிலிருந்து பார்த்தபோது மூர்த்தியின் இருக்கை காலியாகவே இருந்தது. ஆள் வரவில்லை என்றால், இந்நேரம் செய்தி வந்திருக்க வேண்டுமே. சுவாரசியம் மேலோங்கச் சற்றே சரிந்து உட்கார்ந்து முதுகைப் பின்னுக்குத் தள்ளி வாகாக என்னுடைய கால்களை மேஜைக்கு கீழே நீட்டியபடி, கைகளைத் தலைக்குப் பின்னால் கோர்த்துக் கட்டிக்கொண்டேன். எக்ஸிகியூட்டிவ் நாற்காலியின் வசதியே வசதி..
திடீரென எனது அறைக்கதவைத் தள்ளி மூர்த்தி உள்ளே நுழைந்தான். தலைமை அக்கௌண்ட்டன்ட் என்றாலும் அரிதாக, அவனுக்கு அந்த உரிமை உண்டு. புரிந்து கொண்டேன். ரெஜிஸ்டரில் கையெழுத்து போட்ட வேகத்தில் நேரே என்னிடம் வந்திருக்கிறான். இடது மணிக்கட்டில் துணி பேண்டஜ் சுற்றியிருந்தது. அதில் மருந்தின் எண்ணெய்த்தன்மைப் படர்ந்து மஞ்சள் நிறம் துருத்தியபடி சிறியதாக அடர்த்தியாய் வட்டமிட்டிருந்தது.
“ஐ ட்ரைட் அண்ட் ஃபெயில்ட். நேத்து அவ்ளோ சொன்னீங்களே. ப்ச், ஆனாலும் முடியலை. ஸாரி ஸார்”
“யூ ஆர் வெல்கம்”
என்னைத் தோற்கடித்து விட்டான் பாவி.
“ஸார். ஒரு காஃபி சாப்பிடலாமா?”
காத்திருந்தேன் அல்லவா. புன்னகையுடன் எழுந்து கொண்டேன். அதிகார பீடத்தை பிருஷ்டத்துக்கு பின்னே அறையோடு விட்டு வெளியேறினேன். எங்களை நிமிர்ந்து பார்த்துவிட்டு குனிந்து கொண்டார்கள். கேண்டீனை நோக்கி நடையைக் கட்டினோம். காரிடார் வெறிச்சோடிக் கிடந்தது.
“நாளைக்கு சொல்றேன்னு சொன்னீங்களே. ஒரே மண்டைக்குடைச்சல். அதுவொன்னுதான் என்னை என் தனிமையிலிருந்து இழுத்து வெளியேத்தி கொண்டு வந்து இங்க உங்க முன்னாடி விட்டிருக்கு. இப்போ சொல்லுங்க ஸார். எனக்கு அதைத் தெரிஞ்சுக்கணும்”
“ஹ..! இதுவுமே கூட ஒரு பகிர்வுதான் இல்லையா? நேரா கேண்டீன் போயிருவோமே மூர்த்தி. நிக்காம வாங்க”
நடையை மெதுவாக்கினேன். இணையாக வந்து கொண்டிருந்தவன் என்னையே கவனித்துக் கொண்டிருந்தான். அவனுடைய மனம் முந்தைய இரவிலிருந்து பொறுமையின் விளிம்பில் தொக்கியபடி முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டே இருக்கிறது.
அப்போது நான் என்னுடைய முழுக்கைச் சட்டையின் இடது மணிக்கட்டு பட்டனை அவிழ்த்து சட்டென முழங்கை வரை சட்டையை சுருட்டிக் காட்டினேன். எனது மணிக்கட்டின் உட்பக்க உயிர்நாடியில் தொடங்கி மேல்நோக்கிய விதமாய் கோடு கோடாக எண்ணற்ற தழும்புகள், பார்-கோட் போல ஒன்றையடுத்து ஒன்று என நெருக்கிப்பிடித்து நின்றிருந்தன. ஆழமான கத்திக்காயத்தினால் உண்டான அவை இப்போது ஊட்டமான நரம்பினூடே புடைத்துப்போய் அடையாளமாகியிருந்தன.
எவற்றின் அடையாளங்கள் அவை? எவ்வெவ்வற்றின் அடையாளங்கள் அவை? விளக்கி விவரித்தால் அவையெல்லாம் விரிந்து கொண்டே போகும் வல்லமை வாய்ந்தவை. இதோ இவனுடைய கண்பார்வையைப் போல ஒரே திக்கில் நிலைகுத்தி உறைந்து போகச் செய்பவை.
அடேய்! என்ன நடந்துவிட்டது? உனக்குப் புரியவில்லையா? இது ஒரு நெருப்பாறு. நீந்தத் தொடங்கும்போதே கால்கள் மாயமாகிவிடும். கரையேறும் மிச்சமும் வெந்துபோய் மீந்திருக்கும்.
நீ உன்னிடமுள்ள ஒரு காயத்தைக் காட்டினாய். பதிலுக்கு நான் பல தழும்புகளைக் காட்டிவிட்டேன். வக்கிரமாகச் சொல்ல வேண்டும் என்றால் அது ரகசியங்களின் பண்டமாற்று. பரஸ்பர பயன்மதிப்பை ஆர்ப்பாட்டமின்றி கூட்டிக்கொள்ள முடிகிற ஒற்றை ஜர்னல் என்ட்ரி.
அத்தழும்புகளைக் கண்டதிலிருந்து அவனுடைய முகத்திலிருந்த தீவிரத்தன்மை இனி எந்தத் திசை நோக்கிப் பாயவேண்டும் எனத் தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறது.
கேண்டீனில் ஆளுக்கொன்றாக வாங்கிக்கொண்ட இரண்டு கோப்பை காஃபிகளோடு ஒரு நீண்ட டேபிளில் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டோம். அந்த அகன்ற ஹாலில் கேட்பாரற்றுக் கிடக்கும் டேபிள்களுக்கு மேலே சப்தமிட்டபடியே வீணாக ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறிகளை ஒருமுறை பார்த்துக் கொண்டேன்.
முதல் சிப் காஃபியின் மிடறை விழுங்கி அதன் கசப்பை ருசித்து அனுபவித்தபடி எனது கோப்பையை உயர்த்திப் பிடித்து நான் அவனிடம் சொன்னேன்.
“இதுக்கு பேரு Trading the Insults”
***
கவிதைக்காரன் இளங்கோ
சென்னை
ஆசிரியரின் படைப்புகள்:
பனிகுல்லா, மோகன். – சிறுகதைத் தொகுப்பு
ப்ரைலியில் உறையும் நகரம், 360 டிகிரி, கோமாளிகளின் நரகம். – கவிதைத் தொகுப்புகள்
ஏழு பூட்டுக்கள். – நாவல்
திரைமொழிப் பார்வை – கட்டுரை
மிகச் சிறப்பான எழுத்து. கணிதத்தை துணைக்கு அழைத்துக் கொண்டது மிக அழகு. ஜர்னல், double entry, debit credit , trading the insult சிலருக்குப் புரியும்.. சிலருக்குப் புரியாது. ஆனால் சிலருக்கு.. பலருக்கு என்று நாம் எழுதிக் கொண்டிருக்க முடியாதாகையால் பொதுவில் சிறப்பான கதை. ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கும் உங்களின் வாசகப் பார்வைக்கும் நன்றி.