ஒளி மலர்கள்
நாம்
சந்தித்துக் கொள்ளாத
காலத்தில்
பூக்கொண்டிருப்பதை
நிறுத்திவிட்டது
அம் மரம்
இலைகளே தெரியாமல்
மேனி வனப்பை
முழு மஞ்சளுக்குத்
தரித்திருந்த தும் உண்டு
கோடையின்
சிறுபிறை இரவு
பகலின் மேகத்துண்டுகள்
கள்ளமாய்
சிதறிக்கொண்டு விட்டன
பிடாரனின் இசையிலிருந்து
தொலைந்து கொள்ளும்
நிச்சயத்தில்
காதுகளைக் கூர்படுத்தி
நடக்கிறேன்
வந்து போகும்
ஞாபகங்கள்
குறைந்த ஒளியின்
வெளிச்சத்திற்கு
இரவின் மலர்களாகின்றன
எதை எதையோ
பேசித் திரிந்த
எங்கெங்கோ
கடந்து போயிருந்த
நினைவுகள்
ஒளியேறி
கூடி வருகின்றன
இந்த
நற்துவக்கத்தின்
வலசைப் பறவையாகிக்
கொண்டேன்
விரியத் துவங்கும்
சிறகுகளுக்கு
நிறைய பாதைகள்.
*
கண்களை வரைபவனின் தூக்கம்
அவ்வளவு பெரிய ஆகாயம்
இந்த இரவில்
என்னைப்
பார்த்துக் கொண்டேயிருக்கிறது
சூன்யமான பகலை
உதறிக் கொண்டு
போவதில்
அத்தனை மகிழ்ச்சி
நான் போகின்றேன்
எந்த சுவாரசியங்களுமற்ற
வாழ்க்கை ஓட்டம்
என் உணவுப் பாத்திரத்தை
இன்னொருவனிடம்
கைதந்து வைத்திருக்கிறது
பாதைகள் தீர்ந்து கொண்டு
கருப்பு போர்வையாக
நீளும்இப் பெரும் பரப்பிற்கு
இக்கணத்தில்
திசைகள் ஏதுமில்லை
மெல்ல வந்து
ஒட்டிக்கொள்ளும்
நட்சத்திரங்கள்
மேனி ஏறி ஒளிர்கின்றன
பரிசுத்த வெண்மையின்
கண்களை
கைகளில் எடுத்துக்கொண்டு விட்டேன்
பிறிதொரு கரங்களுக்குச்
சேர்ப்பிக்கும் எண்ணம்
நினைவில் அமர்கிறது
வரிசையான
அத்தனை முகங்களுக்கும்
ஒளியேறுவதைக் காண்கிறேன்
கனவுகளில்
விடுத்துக்கொண்டு அவிழ்கிறது
எல்லோருக்குமான
மகிழ்ச்சியின் புலரி.
*
சற்றுநேரச் சித்தம்
மொட்டை மாடியிலொரு
தொட்டிச் செடி
பாந்தமாக நிற்கிறது
தினசரிக்கும் போய்வரும்
தெருவின்
முக்கு வீட்டுப்
பன்னீர் மரத்தை
வெட்டி விட்டார்கள்
கையசைத்து
முத்தம் தரும்
குழந்தையையும் காணவில்லை
மனிதர்களின்
அவசரங்களைப் போல
கொடியது
என்ன இருக்கிறது?
ஊரை
நான்கு துண்டுகளாக்கி
வியாபாரம் செய்யும்
கிழவியோ
வலப்புறத் தட்டை
நன்கு சரிய விடுகிறாள்
நடுக்குறிமுள்
கீழிறங்கிக் கொண்ட
சந்தோசத்தை
சின்ன சிரிப்பாக்கித்
தந்து
தலைச்சுமையை சரி செய்து
நகரத் தொடங்கி விடுகிறாள்.
எதனுள்ளும்
சிடுக்கிக்கொள்ளாத வாழ்வை
பிரமைகளில் தான்
வாழ நேர்கிறது.
*
யுக கசப்பு
உலகின்
கடவுச் சொல்லைக்
கொண்டு வந்த
சிசு
கைகளை இறுக்கி
மூடியிருந்தது
இனிப்புச் சுவையின்
மூன்று சொட்டுகளை
ஒவ்வொருவராக
நாக்கில்
இடத் தொடங்கினர்
நிர்வாண உடம்பில்
பற்றிக் கொண்ட
எல்லாவற்றுக்குமாக
வீறிட்டுக் கொண்டிருக்கிறது.
***
நந்தன் கனகராஜ், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தைச் சேர்ந்தவர். தொடர்புக்கு : skrnandhan@gmail.com