Saturday, November 16, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்சாவின் பிரதி

சாவின் பிரதி

ஜீவ கரிகாலன்

ந்த நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறையின் தலைநகரம் என்று அறிந்த அந்நகரம் தீநுண்மியின் பெருந்தொற்றால் ஏற்பட்ட ஊரடங்குத் தளர்வு காலத்தில், தன் சிறப்பை இழந்து வெறிச்சோடிக் கிடந்தது. வாகனநெரிசலுக்குப் பெயர் போன, அதே சமயம் நவநாகரிகத்தின் பிரதிநிதிகளாய் திரியும் யுவதிகளின் மிகுந்த எண்ணிக்கையால் எப்போதும் சோர்ந்து போகாத அம்மாநகரத்தின் தூசு படியாத மதிய வேளையில் கருப்பு நிற டூரிஸ்டர் ஒன்று கவலையற்றுப் பறந்தது. இருவரில் ஒருவன் ஓட்டிக்கொண்டிருந்தான்.

ஜீன்ஸ் அணியும் காலத்திற்கு முன்னே பிறந்த ஒரு காரணத்தாலும் செல்வக்குடி ஓவியனாக இருந்ததாலும், காலத்தால் அழியாத புகழுடைய கதைகளை அல்லது புராணங்களை அதன் மாந்தர்களை தான் வாழ்ந்த காலத்து மாந்தர்களாக பாவித்து அவர் வரைந்த ஓவியங்களின் அச்சுக்களையும் அல்லது சுண்ணாம்புக் கற்களையும் கூடவே சில ஓவியங்களையும் கடத்திக் கொண்டிருந்த ஐரோப்பியக் கொள்ளைக் கும்பலுடன் ஒப்பந்தத்தில் இணைந்த அந்நாட்டின் அரசியல்வாதிகளுக்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்ற கொள்ளைக்கும்பலில் எக்கு தப்பாய் செயல்பாட்டாளனாக  அல்லது அங்கத்தினராகப் பொறுப்பேற்ற கிறுக்குத் திருடன், தன் முன்னே இருக்கும் கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொக்கிஷங்களைப் பார்த்தால் வந்த போதையில் இருந்தான். எதன்மீதும் பற்றற்றவன் என்பதாலேயே இத்துறையில் குறுகிய காலத்தில் அவனுக்கு கிடைத்த வளர்ச்சி அது, ஆனால் அவன் ஒரு கலாரசிகன் என்பதாலேயே இத் துறையில்.

ஐரோப்பிய கொள்ளைக்காரர்களுக்கு அவ்வோவியன் வரைந்த படங்கள் எதுவும் தேவைப்படவில்லை என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தாலும் பாரத குலத்து மன்னன் ஒருவனும் அப்ஸரஸ் ஒருத்தியும் சல்லாபித்த கதையில் வரும் ஓவியம் ஒன்றை தன் வீட்டுப் படுக்கை அறைக்குள் வைப்பதற்காகவும் வேறு சிலவும் ஒப்பந்தத்தை மீறி கருவூலத்திலிருந்து கழட்டி வைத்திருந்தான் அந்த கிறுக்குத் திருடன்.

தலைமைக்கு வேண்டுவதெல்லாம் பதப்படுத்திப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த அந்த லித்தோகிராஃபி கற்கள் தான் என்றபோதும் வேலை அவ்வளவு சுலபமானது அல்ல. அவற்றை அவர்கள் சொன்ன தேதியில் ஏஜெண்ட்டுகள் மூலம் எமிரேத்திய நாடுகளில் உள்ள தளர்வுகளற்ற வணிகத் துறைமுகத்திற்கு ஏற்றுமதி செய்யவேண்டும். அதற்கு, ஊடகங்களில் அடுத்த தலைப்பு செய்தியாக மாறுவதற்குள் சுங்க அதிகாரிகளால் அனுமதி வாங்கி துறைமுகத்தில் கொண்டு செல்ல முடியும் என்று அவனது திட்ட அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். அதன்படி அவர்கள் அதற்கான புரோக்கர்களிடமும் ஊடகங்களிடம் ஏற்கனவே பேசி வைத்திருந்த நேரப்படி தான் எல்லாம் போய்க்கொண்டிருந்தது.

அரசின் உளவுத்துறையால் வெளியிடப்பட்டு வைரலாகிக் கொண்டிருந்த, நாட்டின் மூட அமைதியை தக்க வைப்பதற்கு ஏதுவான அதற்காகவே பிரபலப்படுத்தப்பட்ட ஒரு புள்ளியின் சல்லாபக் காணொலியும், ஓர் இளம்பெண்ணின் வன்முறை மிக்க க்ரூரமான செயல்களைப் பதிவு செய்த காணொளியும் சமூக ஊடகங்களில் பரவியதால் கடத்தல் வாகனத்தை தடை போட்டு சோதனை செய்ய வேண்டிய சாவடியிலெல்லாம் எளிதாகத் தப்பித்து முன்னேறியது அந்த டூரிஸ்டர்.

அந்நகரத்திலிருந்து கடவுளின் தேசத்திலுள்ள ஒரு முக்கிய துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஒரு கிடங்கில் பொருட்கள் பத்திரமாக இறக்கி வைக்கப்பட்டிருந்தன. இணையத்தில் கிடைத்த காணொளி வாயிலாக பழைய அச்சு முறைகளின் ஒன்றான அந்த நுட்பத்தைப் பார்த்து வந்த கிறுக்குத் திருடன் கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த இயந்திரத்தை வெளியில் எடுத்தான்.

அந்த ஊடகத்தில் பொதிந்திருக்கும் ஓவியம் என்னவாக இருக்கும் என்று ஐரோப்பியனிடம் போனில் பேசுகையில் கிடைத்தச் செய்தி அவனுக்கு அத்தனை ஆர்வம் தந்தது. அவனது ஆர்வத்தை கவனித்த மாஃபியாக்காரன் அவனை எச்சரிக்கத் தவறவில்லை.

நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வின்ஸ்டோன் & சன்ஸ் லித்தோ அச்சு இயந்திரமும், சிவப்பு நிற எண்களால் குறியிடப்பட்டிருந்த சில சுண்ணாம்புக் கற்களும் இருந்தன. நூற்றாண்டுகள் பழமை மிக்க அந்தச் சாதனங்களை தயக்கமில்லாமல் பயன்படுத்துவதற்கு தான் கல்தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து வந்தவனின் பாரம்பரியம் என்கிற பெருமை இருக்கலாம். இல்லை திருடனென்றாலும் அநாதை விடுதியில் இருந்து வந்து வரலாற்றில் இளம் முனைவர் பட்டம் பெற்றவன் என்கிற பரிதாபம் ஐரோப்பிய மாஃபியாக்களுக்கு இருக்கும் என அவன் தப்புக்கணக்கும் போட்டிருக்கலாம். எண்ணெய் போன்ற இந்திய நீலச்சாயத்தை கனமான கண்ணாடி ஒன்றில் ஊற்றி அதனை உருளையில் உருட்டி உருட்டித் தேய்த்தான்.

பார்சலைத் திறந்த காரணத்தாலும், ஐரோப்பிய மாஃபியா மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீதிருந்த அச்சத்தாலும் “தாயோளி என்ன காரியம் பண்ணுற” என்று கூப்பாடு போட்ட தன் சகாவை, தன் தாயைத் திட்டிய காரணத்தால் அல்ல தன் தாயைக் கொல்ல முடியாத காரணத்தாலேயே கையில் வைத்திருந்த நீலச்சாயம் ஒட்டிய உலோகத்தால் ஆன உருளையைக் கொண்டு அடித்தே கொல்ல ஆரம்பித்தான்.

அலறியபடி செத்துக்கொண்டிருந்த அவன் மேலும் மேலும் “அம்மா, அம்மா” என்று சொல்லும்போது அவன் இன்னும் வேகமாய் அடிக்க தலையில் வழிந்து கொண்டிருந்த ரத்தம், நீலம் கலந்தச் சிவப்பு சாயமென அவனுக்கு தோன்றியது. பின்னர் கூடுதல் பலத்துடன் ஓங்கியடித்துக் கொன்று அவனுக்கு திடீரெனத் தோன்றிய யோசனையை நடைமுறைப்படுத்தினான்.

கவின்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றுவிட்டு அவன் சாதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரின் அழைப்பின் பேரில் அவரது காரியதரிசியாகச் சேர்ந்த தன் நண்பனிடம் போனில் பேசி சில சந்தேகங்களை நிவர்த்தி செய்துவிட, அந்தச் சுண்ணாம்புக் கற்களில் மேலும் சில வண்ணங்களைச் சேர்த்தால் வெவ்வேறு அடுக்குகள் கிடைக்குமென்று நம்பி, மேலும் சில சாயங்களை வாங்க தொலைவிலிருக்கும் கடைக்குச் சென்றான்.

நாடு முழுவதும் வைரலாகிக் கொண்டிருக்கும் காணொளியில் வரும் பெண் வசிப்பது அவ்வூர் என்பதால் அவளைக் கைது செய்யப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதே சமயம் பெண்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு உண்டியலில் நிதி கேட்ட பெண்ணின் முகத்தைக் கூட பார்க்காது சாயம் படிந்திருந்த நோட்டுகளை உண்டியலில் திணித்தான். இத்தனை அமளி துமளியில் அவனுக்கு வரும் அழைப்புகளைப் பொருட்படுத்தவேயில்லை.

கிடங்கிற்கு வந்தவுடன் ஏற்கனவே வாங்கி வந்திருந்த, பாலிதீன் பையில் தன் சகாவினைக் கிடத்திவிட்டு பார்சல் செய்துவிட்டான். குற்றம் நடந்த தடம் தெரியா வண்ணம் இடத்தைச் சுத்தப்படுத்தினான்.

ஓவிய அச்சில் இருப்பதாக அவன் தெரிந்து கொண்டது, அவன் பால்யத்திலிருந்து அவனைத் தொந்தரவு செய்த கதாபாத்திரம் அது. அதை வாசிக்கையில், பார்க்கையில், கேட்கையிலெல்லாம் அவனுக்கு அவனை அநாதையாக்கிய அம்மாவின் மீதே ஆத்திரம் வரும். அவளைக் கொல்ல முடியாத இந்த வாழ்வில்தான் தம்மால் எத்தனை கொலைகளையும் எளிதாகச் செய்ய முடிகிறது என்கிற வியப்பு அவ்வப்போது வரும். மற்றபடி செய்வது குற்றம் என்பது அவன் மனதார ஒத்துக்கொள்ளாத ஒன்று.

ஒருவேளை அவளைக் கண்டுபிடித்துக் கொன்றுவிட்டால் தான் அதுவரை செய்தது பாவம் என்று தோன்றலாம். அதுவரை தனக்கு எந்தக் குற்றவுணர்வும் வராது என்று நம்பியிருந்தான். உலகப் புகழ்பெற்ற மாஃபியா இவனைத் தொடர்பு கொள்கையில், அந்த நிழலுலகத்தில் அவன் மீது பெரிய அச்சமும், ஆச்சரியமும் உருவாகியிருந்தது. மது, மாது, சூது என எதிலும் அகப்படாத குற்றம் ஒன்றே கர்மமாய் கொண்ட கர்ணன் என்று அவனை அழைப்பார்கள்.

மீண்டும் தயார் செய்யப்பட்ட அந்த சுண்ணாம்புக் கல்லை, சரியாக இயந்திரத்தில் பொருத்திவிட்டு அதன் கைப்பிடியை நகர்த்தி காகிதத்தில் அழுத்தம் கொடுத்தான்.

அந்த ஓவியனின் பாணி என்றே சொல்ல முடியாத கோட்டுச் சித்திரமாக அது இருந்தது, விந்திய மலையின் ஏதோ ஒரு புள்ளியிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் சிற்றாறு ஒன்றில் வெப்பமெனத் தன் இயல்பில் தகிக்கும் சூரியனின் உஷ்ணம் அங்கே முதலைகள் இருப்பதைக் கண்டும் நீரருந்தும் மான்களையும் ஓர் ஓரத்தில் காட்சிப்படுத்தியிருந்தது. மரணத்தை அருகில் வைத்துக்கொண்டு தான் தண்ணீரைக் கூட குடிக்க வேண்டியிருக்கிறது என்று அது சொன்னது. கரையின் மறுபுறத்திலிருந்து காட்சியைச் சொல்லும் அவ்வோவியத்தில் தன் குழந்தையைக் கூடையில் வைத்து நீரில் விடும் சிறுமியின் தவிப்பை மையமாகக் கொண்டிருந்தது அது. தலைப்பக்கம் பிடித்தபடி ஆற்றில் தன் சிசுவை விடும் அவளுக்கு, ஆயுள் முழுக்க தண்டனை தருவதற்காக அச்சிசுவின் முகத்தை மீண்டும் காட்டிட கூடையைச் சுழற்றத் தயாராக இருந்த அந்த கோரமான சிறிய நீர்ச்சுழல்கள் விதியை விட மூர்க்கமானவை. ஒரு கொலை கூட பண்ணத் தெரியாத சிறுமியென அவளை நினைத்து கண்ணீர் விட்ட போதுதான் தன் நினைவில் வந்தது உண்டியல் பணத்திற்காய் தன் கையில் திணித்த அந்தப் பெண்ணின் துண்டறிக்கை.

பெரிதாக செய்திக்குள் வராத அக்கலப்புத் திருமணத்தினால் ஏற்பட்ட பல அழுத்தங்களுக்கு மத்தியில் பிரசவம் செய்த postnatal care வழங்கப்படாத அந்த இளம்பெண்ணினை பாலியல் அவதூறு செய்யும் நெட்டிஸன்களை, கட்சிக்காரர்களை வசைபாடி எப்படியும் கல்லடிக்குக் காத்திருக்கும் அந்த முகம் நினைவற்ற பெண் அவன் மனதில் சலனத்தை ஏற்படுத்தினாள்.

தன்னை ‘தேவ்டியா பையன்’ என்று சொன்ன பள்ளி நண்பன் தான் தனது முதல் கொலைக்கான காரணம். ஆனாலும் அவன் சொன்னது உண்மை தானோ என்று குடையாத நாளில்லை. பின்னொரு நாள் அவன் அம்மாவையும் கொன்றேன்.

மீண்டும் சுன்னாம்புக்கல்லில் சிவப்பு நிற சாயத்தைப் போட்டு சிலிண்டரால் உருட்டி, அதனை இயந்திரத்தில் பொருத்திப் படியெடுத்தான். கிணற்றுக்கருகே ஆறு குழந்தைகளை நிற்க வைத்து தன் முதலாவது கைக்குழந்தையைத் தூக்கி எறிந்தவளின் தீமுகம். இதற்கடுத்ததாய் கிடைக்கும் நிம்மதியும் நிதானமும் மற்ற குழந்தைகளைக் கொல்லும்போது வரப்போவதில்லை, ஏன் சில குழந்தைகள் தாமாகக் கூட விழுந்திருக்கும். முதலாவதாகத் தேர்ந்தெடுத்த அக்குழந்தை தானே மற்ற ஆறு மரணத்திற்கும் அதன் தாய் மரணத்திற்கும் காரணம் என்று தோன்றியது. தன்னை வீசியெறிந்தவள் சிறுமியா? பெண்ணா? தமது எண் என்ன? தன     க்கு ஏன் தந்தை என்பவன் மேல் கோபம் வரவில்லை? என்றெல்லாம் எண்ணம் உதித்தன.

மீண்டும் ஒரு படியெடுத்தான், ஹெக்டாரின் மரணத்தைக் காட்டும் பதினேழாம் நூற்றாண்டு ஓவியர் ரூபன்ஸின் படைப்பில் தெரியும் ஹெகாபா மகாராணியின் முகம், மீண்டும் படியெடுத்தான் இருபதாம் நூற்றாண்டின் அந்திமக் காலத்தில் கடன் தொல்லையால் தனது மக்களையே பாதாளத் தொட்டியில் போட்டு மூடிய முகங்கள், இருபத்தி ஒன்னாம் நூற்றாண்டில் வீசியெறிந்த, கருவிலேயே அழித்த, கழுத்தை நெறித்த, மாஸ்க் அணிவித்த, தடுப்பூசிக்கு தடுத்த, தன் மாற்று உறவுக்கு தடையாய் இருந்த உயிரைக் கொன்ற என ஏராளமான thumbnail முகங்கள் கொண்ட கொலாஜ் படியொன்றை எடுத்து முடிக்கும்போது முதன்முறையாக அல்லது முதல் கொலைக்கு பின்னர் முதன் முறையாக அவனது கைகள் நடுங்கின.

பாலிதீன் பையால் லேமினேட் செய்திருந்த தன் சகாவின் பிரேதத்தை, மீண்டும் அந்த பார்சலில் இருந்து எடுத்து தன் மடியில் கிடத்தினான். இதற்கெல்லாமாடா கொலை செய்வார்கள் என்கிற ஆச்சரியப் புன்னகை இருந்தது.

“ஐயோ அம்மா….. அம்மா..” என்று கதறியபடி அந்தப் பிரேதத்தை மடியில் கிடத்தி முத்தமிடத் தொடங்கினான்.

***

ஜீவ கரிகாலன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular