Saturday, November 16, 2024

இடுக்கண்

அசோக்ராஜ்

குளித்துவிட்டு வருவதற்குள் மெத்தையில் இருந்த செல்ஃபோன் அலமாரிக்கு நகர்ந்திருப்பதைப் பார்த்தவுடனேயே புரிந்துவிட்டது அதை பூர்ணிமா எடுத்திருக்கிறாள் என்று. செல்ஃபோனுக்கு எந்தப் பூட்டும் நான் போடுவதில்லை. அப்படியே போட்டாலும் பிரயோஜனம் இல்லை. ரகசியம் என்று ஒன்றுமில்லை. ஆனால் சற்று முன்பு அவள் என் செல்ஃபோனை நோண்டியிருக்கும் பட்சத்தில், இன்னும் கொஞ்ச நேரத்தில் என்னை டென்ஷன்படுத்தப் போகிறாள் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும். அனேகமாக அது சாப்பிடும்போதோ, ஷூ மாட்டும்போதோ இருக்கலாம்.

அண்டர்வியரை துண்டோடு சேர்த்து அணிந்தேன். பிறகு துண்டை உருவி தலையைத் துவட்டிக்கொண்டே செல்ஃபோனை பார்த்தேன். அவள் துருவிய சுவடுகள் எதுவும் தெரிகிறதா என்று பார்த்தேன். அப்படி ஒன்றும் இல்லை. அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் இந்தப் பயல் சிவா அனுப்பியிருந்த செய்திகளை அவள் பார்த்திருப்பாள் என்றே தோன்றியது. இதன் பொருட்டு என்ன மாதிரி அவள் பிரதிபலிப்பாள் என்று யோசித்தேன். இந்நேரம் என் அம்மாவிடமும் அவள் அம்மாவிடமும் கூட இந்த விஷயத்தைப் பேசியிருப்பாள். என்ன கேட்டால் என்ன சொல்லலாம் என்ற யோசனையிலேயே என் அன்றாட வேகம் தடுமாறியது. கைக்கு வந்த சட்டையை அணிந்து கொண்டு, நேற்றுப்போட்ட பேண்ட்டையே மாட்டிக்கொண்டு, ஆஃபிஸ் போய் இன் செய்து கொள்ளலாம் என்ற நினைப்போடு, அசிரத்தையாக தலையை வாரிக்கொண்டு ரூமை விட்டு வெளியே வந்தேன்.

டைனிங் டேபிளில் இருந்த இட்லியையும் அந்த இட்லியையே வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த பூர்ணிமாவையும் பார்த்தபோது அப்படியே நைஸாக நழுவி விடலாமா என்று ஒரு கணம் நினைத்தேன். முடியாது. அவள் இட்லியை வெறிக்கவில்லை. அப்படியான பாவனையில் என் அசைவுகளைத்தான் கவனிப்பாள். நான் இது பற்றியெல்லாம் எதுவுமே தெரியாதவன் போல் காட்டிக்கொள்ளப் பிரயத்தனப்பட்டேன்.

”இன்னைக்கும் காரச்சட்னியா?” என்றேன்.

இதற்கு முன்பு இப்படிக் கேட்டிருக்கிறேனா என்றும் நினைவில்லை. நேற்று காரச்சட்னியா என்றும் நினைவில்லை. அது பூர்ணிமாவுக்கும் ஒரு பொருட்டாக இல்லை. வெற்றிடத்தில் ஏதோ வார்த்தைகளைப் போடுகிறேன் என்பது அவளுக்குப் புரிந்திருந்தது.

எந்த பதிலுமே சொல்லாமல் அடுக்களைக்குச் சென்று பொடி டப்பாவுடன் வந்தாள். பொடியைக் கொட்டி ”குழி பண்ணுங்க” என்றாள். அதில் எண்ணெயை ஊற்றினாள். காரச்சட்னியையும் பொடியையும் கலந்து இட்லியின் முதல் விள்ளல் வாயில் போகும்போது ”அவன் வர்றானா?” என்றாள். தட்டில் இருந்த மூன்று இட்லிகளில் எத்தனை விள்ளல் வரும் என்று யோசனை போனது. எவன் என்று கேட்கலாம் என்று தான் நினைத்தேன். அதன் விளைவு எனக்குத் தெரியும். தெளிவான வசவு வந்து விழும்.

”ஆமா.. மெசேஜ் பார்த்தியா?” என்றேன். இந்தக் கேள்வி அனாவசியம் தான் எனினும் கேட்டுத் தொலைத்தேன்.

”மெசேஜ் ஏன் நான் பார்க்கணும். அதான் கார்த்தால பால்கனில கிசுகிசுனு பேசுனீங்களே.. எல்லாம் எனக்கு கேட்டது” என்றவள் ஃப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து இரண்டு மடக்கு குடித்துவிட்டு எனக்கு வைத்தாள்.

‘’ஒரு மாசத்துல தர்றேன்னு சொல்லி, இந்த மாசத்தோட ஒரு வருசம் ஆகுது’ – வழக்கமாக இப்படித்தான் ஆரம்பிப்பாள். இறுதியில் என்னைப்போல ஒரு இளிச்சவாயன் யாருமில்லை என்பதில் வந்து முடிப்பாள். நான் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

”மூர்த்தி மாமா உங்க மேல ரொம்ப கோபப்படறார். உன் புருஷன் மாதிரி ஒரு ஏமாளிய பார்த்ததில்லைங்கறார்”

பூர்ணிமா சொல்லும்போது எனக்கு சிவா மேல் அடக்கமாட்டாத கோபம் வந்தது. இவனால் யார் யாரிடமோ ஏச்சுப்பேச்சு வாங்குகிறேன் என்று கடுப்பானது. இன்றைக்கு ஆஃபிஸ் வரும் சிவாவின் சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டும் என்று வெறி வந்தது.

அதே வெறியோடு அவளிடம் ”இன்னிக்கு ரெண்டுல ஒன்னு பார்த்துடறேன். இதுக்கு மேல பொறுக்க முடியாதுனு சொல்லிடறேன். அதிகபட்சம் ஒரு வாரம். அதுக்கு மேலே போலீஸ்ட்ட போறேன்னு சிவாட்ட சொல்லிடறேன்” என்றேன். இப்படி நான் பேசுவதைக் கேட்டதும் பூர்ணிமா முகம் சற்றே தெளிந்தது. சிவாவை நினைத்தாலே சிவப்பேறிவிடுகிற அவள் முகம் கொஞ்சம் வெளிறியது. அமைதியாகிறாள் என்பது அவள் குரலின் குழைவில் தெரிந்தது.

”அப்படிப் பேசிட்டு வாங்கங்க.. புண்ணியமாப் போகும். சொந்தக்காரங்கள்லாம் உங்களைப் பத்தி சொல்லும்போது எனக்கு எவ்ளோ கடுப்பாகுது தெரியுமா?” என்றாள்.

நீ சொல்லாமல் அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது என்று நான் கேட்கவில்லை. அப்படியாகப் பார்த்தேன். நிஜமாகவே சிவா விஷயத்தில் நான் ஒரு முடிவோடு தான் இருந்தேன். பூர்ணிமாவும் அவள் சொல்லும் சொந்தக்காரர்களும் நினைப்பது போல நான் என்ன கடைந்தெடுத்த ஏமாளியா? என் நெற்றியில் இணையில்லா இளிச்சவாயன் என்று எழுதியிருக்கிறதா?

இந்த நினைப்போடேயே பைக்கை செலுத்திக் கொண்டிருந்தேன். எப்படி இது நடந்தது என்று சிந்தனை சென்றது. அடிக்கடி சிந்தித்தது தான். ஒரு கட்டத்தில் இனி அதுபற்றி சிந்திக்கவே கூடாது என்று தோன்றும். ஆனாலும் சிவாவை நினைக்கும்போதெல்லாம் மனசு அங்கு போய் நின்றுவிடும். லட்ச ரூபாய்க்கு பத்தாயிரம் ரூபாய் பிரதி மாதம் என்றான். நம்பியது என் பிசகில்லை. அவன் என் நண்பன். ஒன்பதாவதிலிருந்து பனிரெண்டாவது வரை ஒன்றாகப் படித்த பால்ய சினேகிதன். ஒரே காலேஜில் அவன் கணிதம். நான் கணினி. அவன் பி.எஸ்ஸியோடு நிறுத்திவிட்டிருந்தான். நான் எம்.சி.ஏ, ஐ.டி கம்பெனி என்று சென்னையில் செட்டிலானேன்.

கல்லூரி இளநிலை முடிந்ததோடு முடிந்துவிட்டிருந்த தொடர்பு திரும்ப அவன் கல்யாணத்தில் தான் மறுபடி அரும்பியது. தொடர்பு தான் அறுந்து இணைந்ததே தவிர நட்பு அப்படியே இருந்தது. என் நண்பர்களில் மற்ற எல்லோரையும் விடவும் எனக்கு அவனைப் பிடிக்கும். அவன் வீட்டில் நானும் என் வீட்டில் அவனும் ஒன்றாகப் படுத்துத் தூங்கியிருக்கிறோம். அவன் அம்மா எனக்கும் அம்மா, என் அப்பா அவனுக்கும் அப்பா என்று வளர்ந்தவர்கள் நாங்கள்.

“என்ன பிஸினஸ்?” – எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் தான் முதலில் கேட்டேன். எனக்கு இப்போதும் தோன்றும், ஒருவேளை அப்படி நான் கேட்டிருக்கவில்லை என்றால் இந்தச் சுழலில் சிக்கியிருக்க மாட்டேனோ? அவன் கல்யாணத்திற்காக முதல் நாளே மண்டபம் சென்றிருந்தபோது மாப்பிள்ளைத் தோழனாக என்னையும் வெங்கட்டையும் அவன் ரூமில் தங்கச் சொன்னான். விடிந்தால் கல்யாணத்தை வைத்துக் கொண்டிருந்தவன் அதிகாலை மூன்று மணி வரை மழைக்காலத் தவளை போல அரற்றிக் கொண்டிருந்தான். விழுதிலிருந்து விழுதைப் பிடித்துத் தாவும் குரங்கைப் போல எதிலிருந்து எதையோ பிடித்து பேச்சு சென்று கொண்டே இருந்தது. அப்போது தான் அவனுடைய ட்ரேடிங் குறித்து நான் கேட்டேன். அதன் பிறகு பேச்சு வேறு திசை செல்லவில்லை.

ஷேர் மார்க்கெட், வாரன் பஃபெட், ஜுஞ்சுன்வாலா, அம்பானி, லாபம், கோடி என்று அது ஒரு தினுசான கவர்ச்சியில் இருந்தது. கேட்கக்கேட்கச் சலிக்காத பரப்பை அவன் பேச்சோ அல்லது அவன் சார்ந்திருந்த துறையோ ஒளித்து வைத்திருந்தது. அப்போது எனக்கு நேர்ந்து கொண்டிருந்த மாற்றம் அல்லது மயக்கம், ஏன் வெங்கட்டுக்கு ஏற்படவில்லை என்று நான் இன்றும் வியந்து கொண்டிருக்கிறேன். அப்போது வெங்கட் ஒரு தனியார் கல்லூரியில் தற்காலிக விரிவுரையாளராக பதினைந்தாயிரம் சம்பளத்தில் இருந்தான். நான் அப்போதே அவனின் ஆறு மாத சம்பளத்தை ஒரே மாதத்தில் வாங்கினேன். இந்த வித்தியாசம் காரணமாக இருக்கலாம்.

“இப்ப நீ இருக்க.. உனக்கு ட்ரேடிங் தெரிய வேணாம். ஆனா என்கிட்ட இன்வெஸ்ட் பண்ணா மாசாமாசம் ஃபிக்ஸட்டா என்னால பத்து பர்சண்ட் கூட லாபம் எடுத்துக் கொடுக்க முடியும்?”

ஆச்சரியமாக இருந்தது. இது சாத்தியமா? எனில் பத்து மாதத்தில் முதலீடு இரட்டிப்பாகிவிடுமா? பணம் பண்ணுவது அத்தனை எளிதா?

“நஷ்டம் ஆகிட்டா?”

“ஆகாது”

“எல்லாரும் ஆரம்பத்துல இப்படித்தான்டா சொல்வாங்க?”

“நஷ்டம் ஆனா.. நான் பொறுப்பு”

இந்த இடத்தில் நான் யோசித்தேன். இல்லையில்லை. முழுவதுமாக சிவா வசம் விழுந்தேன்.

சுத்தமாக சுவைத்தறியாத ஆனால் சுண்டியிழுக்கும் வாசனையுடன் இருக்கும் ஓர் இரையை அணுகி பொறியில் சிக்கும் எலியைப் போல சிவா வைத்த பொறியில் சிக்கினேன். அதன் பிறகு எவர் செய்த அறிவுரையும் என் மண்டைக்கு ஏறவில்லை. அதெல்லாம் எனக்கு எரிச்சலாக இருந்தது. முன்னேறுவதற்கு ஏன் முட்டுக்கட்டைப் போடுகிறார்கள் என்று கடுப்பு வந்தது. ஜாக்கிரதை என்று எவர் சொன்னாலும் அவர்கள் கண்களில் அக்கறை இருப்பது போல் தெரியவில்லை. பொறாமை இருப்பதாகவேப் பட்டது. பூர்ணிமா சிவாவை அறியாதவள். ஆனால் அவனைப் பற்றி நான் சொல்லும் கதைகளை அறிந்தவள். ஏதோ ஒரு பெரிய பொருளாதார நிபுணர் மாதிரி அவனைப் பற்றி புகழ்ந்து தள்ளினேன். அவனைப் பற்றி, அவன் ஷேர் ட்ரேடிங் பற்றி அவனே சொல்லாததைக்கூட பூர்ணிமாவுக்கு அவன் பொருட்டு நம்பிக்கை வரவேண்டி நான் அளந்துவிட்டேன். அதைத்தான் இப்போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் காட்டி என்னை அவள் அவமானப்படுத்துகிறாள்.

சிவா கல்யாணம் முடிந்த அடுத்த வாரமே அவன் கணக்கிற்கு ஒரு லட்சம் ரூபாயை மாற்றிவிட்டேன். அது மட்டும் தான் துருப்பு. கையெழுத்திட்ட காசோலை தருகிறேன் என்றான். பத்திரம் செய்து கொள்ளலாம் என்றான். நான் சிரிப்பை பதிலாகத் தந்தேன்.

“நல்லபடியா செஞ்சு கொடு.. இது ஆரம்பம் தான்”

எந்த நேரத்தில் அப்படிச் சொன்னேன் என்று தெரியவில்லை. இன்று வரை முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. முதல் மாதம் சொன்னது போல ஐந்தாம் தேதி ரூபாய் பத்தாயிரம் என் பேங்கில் வந்து விழுந்தது. ஒன்றாம் தேதி விழுந்த சம்பளத்தில் பத்தில் ஒரு பகுதிதான் இது என்றாலும், அது கொடுத்த மகிழ்ச்சியை விடவும் இது கொடுத்த மகிழ்ச்சி பத்து மடங்கு ஜாஸ்தி இருந்தது. பூர்ணிமாவிடம் காட்டி குதூகலித்தேன். சிவாவைப் பற்றி என் அலுவலக நண்பர்களிடம் பேச ஆரம்பித்தேன். பூர்ணிமா அவள் பங்கிற்கு மாமா, அத்தை, சித்தி என்று இந்த டிரேடிங் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் என்று பிரயோஜனமே இல்லாமல் இப்போது யோசிப்பதை, அப்போது யோசித்திருந்தால் அடுத்தடுத்து மூன்றே மாதங்களில் சிவாவிடம் மூன்று லட்சத்தை முதலிட்டிருக்க மாட்டேன். அத்தோடு நின்றிருக்கலாம். மூர்த்தி மாமா ஆசைப்படுகிறார் என்று பூர்ணிமா சொல்ல அவரிடமிருந்து இரண்டு லட்சம் வாங்கிக் கொடுத்தேன். அலுவலக நண்பர்கள் சிலரிடமிருந்து ஏறத்தாழ இரண்டு லட்சம் வரை வாங்கிக் கொடுத்தேன். எது செலுத்தியது என்றே தெரியவில்லை. சிவாவின் அசைக்க முடியாத நம்பிக்கை தரும் பேச்சா? எங்களின் பேராசையா? நண்பன் தப்பு செய்யமாட்டான் என்ற தைரியமா? அந்தக் காலங்களில் நான் நானாகவே இல்லை. என் வேலையே எனக்கு வெறுப்பாக இருந்த காலங்கள். பத்து லட்ச ரூபாயை சிவாவிடம் கொடுத்துவிட்டு, ஊர் சுற்றலாம் என்று தோன்றியது. இப்போது நினைத்தால் என் முகத்தில் நானே துப்பிக்கொள்ளத் தோன்றுகிறது.

ஆறு மாதங்கள் கழிந்தன. ஐந்தாம் தேதி சிவாவிடமிருந்து வர வேண்டிய லாபத்தொகை வரவில்லை. இப்படி அதற்கு முன்பு நடந்ததே இல்லை. அதன் பிறகு சிவாவிடமிருந்து இன்று வரை லாபமோ அசலோ எதுவும் வரவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக துருவித்துருவி உள்ளே போகப் போகத்தான் அவன் கிட்டத்தட்ட பத்து லட்சத்துக்கும் மேல் நஷ்டமடைந்திருப்பது தெரிந்தது. ஆரம்பத்தில் ஏதேதோ காரணங்கள் சொன்னான். சீனா – அமெரிக்கா வணிகப் போர் தான் அவன் அடைந்த நஷ்டத்திற்குக் காரணம் என்றான். ஏதோ ஒரு முக்கியமான ட்ரேட் எடுத்திருப்பதாகவும் அது தற்காலிகமாக நஷ்டம் கொடுத்தாலும் சற்று காத்திருந்தால் மும்மடங்கு லாபம் வரும் என்று கணக்குகள் சொன்னான். அவன் சொன்ன விஷயங்கள் எனக்குப் புரியவில்லை என்பதை விடவும், அதை நான் புரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை.

வெட்டு ஒன்று துண்டு இரண்டாக ‘இந்த மாதம் அனுப்ப வேண்டிய லாபத்தொகையை எப்படா அனுப்புவ..?’ என்று கேட்டுவிடவே துடித்தேன் எனினும், அவன் சொன்ன அந்த ‘சற்று காத்திருந்தால்’ என்பது எத்தனைக் காலம் என்று தான் கேட்டேன்.

“குறிப்பா சொல்ல முடியாதுடா.. ரொம்பப் போட்டுக் குழப்பிக்காதே.. ஒரு மாசம் டைம் கொடு.. எல்லாம் சரியாகிடும். ரெண்டு மாச லாபத்தை சேர்த்துக் கொடுத்துடறேன்’ என்றான்.

எந்த பதிலுமே சொல்லாமல், ஆனால் மொத்தமாகக் குழம்பியும், நிம்மதி இழந்தும் ஃபோனை வைத்தேன்.

ஒரு மாதம் முடிவதற்குள்ளாகவே சிவாவின் மனைவியிடமிருந்து ஃபோன் வந்தது. திரையில் ஒளிரும் அவள் பெயரைப் பார்த்தபோதே ஏதோ எனக்கு உவப்பில்லாத விஷயத்தைத்தான் சொல்லப் போகிறாள் என்று தோன்றியது.

நினைத்தது போலவே “இங்கே பயங்கர நஷ்டம்ணா.. என் நகையெல்லாம் வித்து, ட்ரேடிங்ல போட்டு காலி பண்ணிட்டார்… நீங்க கொஞ்சம் என்னான்னு கேளுங்க? நான் ஃபோன் பண்ணிச் சொன்னேன்னு காட்டிக்காதீங்க” என்றாள்.

எனக்கு மயக்கம் வந்தது. அப்படியே வந்து பூர்ணிமாவிடம் சொன்னேன். எனக்கு முற்றிலும் தோன்றாத ஒரு கோணத்தில் பூர்ணிமா சிந்தித்திருந்தாள்.

“சிவா உங்க கிட்ட நேரடியா சொல்றதுக்கு பயந்துகிட்டு, அவர் பொண்டாட்டியை வெச்சு சொல்லச் சொல்லியிருக்கார்… அவளா ஃபோன் பண்ணி உங்க கிட்டச் சொல்லியிருக்க வாய்ப்பில்லைங்க. இது ஒரு டிராமா மாதிரி தெரியுது” என்றாள்.

மேலும் குழம்பினேன் எனினும், நேரே திருச்சிக்கே சென்றுவிட்டேன். ட்ரேடிங் பிரச்சனையைப் பேசுவதற்கு முன்பு, கல்யாணம் முடிந்து இரண்டு மாதத்தில் தனிக்குடித்தனம் வந்தக் கதையைச் சொன்னான். சுவாரஸ்யமின்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். பொறுமையிழந்து ஒரு கட்டத்தில் ‘எதையும் மறைக்காமல் உண்மையைச் சொல்லு’ என்றேன். கடந்த ஆறு மாதமாகவே பெரிய லாபம் இல்லாமலும், எங்களுக்கான லாபப் பகிர்வை முதலீட்டிலிருந்தே எடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்பதையும் சொன்னான்.

அதன் பிறகு முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்ற கதை தான். மொத்தமாக நஷ்டம் என்று கையை விரித்து நின்றான்.

*

பார்க்கிங் பகுதியில் எனக்காகக் காத்திருந்த சிவாவைப் பார்த்துவிட்டு அவனை மோதிவிடுவது போல பைக்கை நிறுத்தினேன். இரண்டு வார தாடியுடன், முந்தைக்கு இப்போது ஆள் மேலும் இளைத்திருந்தான். அல்லது அப்படியாக பாவித்து நிற்கிறானா என்று தெரியவில்லை. பாவமாக இருந்தது. ஆனால் பாவப்படக் கூடாது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். சன்னமாக சிரித்தான். நான் ஹெல்மெட்டை கழட்டிக் கொண்டு கடுகத்தனையும் சிரித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

”பத்து நிமிஷம் வெயிட் பண்ணு. உள்ளே போயிட்டு உடனே வர்றேன்”

அலுவலகத்தில் தலையைக் காட்டிவிட்டு டீமின் அன்றைய வேலையை ஆளாளுக்குச் சாட்டிவிட்டு வரலாம் என்று வந்தேன். வந்தேனே ஒழிய அலுவலில் மனம் லயிக்கவில்லை. வெளியில் நிற்பவனை என்ன செய்வது என்றே யோசித்துக் கொண்டிருந்தேன். குதிரை ராட்டினத்தில் ஒருவர் பின் ஒருவராக சுற்றுவதைப் போல பூர்ணிமாவும் அவள் பின்னே மூர்த்தி மாமாவும் என்னை முறைத்துக் கொண்டே சுற்றுவது போல நினைத்துக் கொண்டேன். சற்றுத்தள்ளி நானும் சிவாவும் நிற்கிறோம். விடாதே அவனை என்று சொல்லிக் கொண்டே அடுத்தச் சுற்றுக்குச் செல்கிறார் மூர்த்தி மாமா. ‘இளிச்சுட்டு நிக்காதீங்க’ என்று கண்களாலேயே பூர்ணிமா சொல்கிறாள்.

நின்ற இடத்திலேயே நகராமல் காத்திருந்த சிவாவை மெயின் கேட் அருகே நின்று கைதட்டி அழைத்தேன். தோளில் ஒரு பேக் மாட்டியிருந்தான். நழுவிக் கொண்டிருந்ததை திரும்ப தோளில் செலுத்திக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்தான்.

”என்னடா பேக்? தங்கப் போறியா?” என்றபடி நடந்தேன்.

”ஆமான்டா.. வேளச்சேரில ஒரு ஃப்ரெண்ட் இருக்கான். ஒரு வேலை விஷயமா அவனைப் பார்த்துட்டு, நாளைக்கு நைட் தான் திருச்சி கிளம்பறேன்”

ஏதோ பயந்து பயந்து பேசுவது போல் சமீபமாக என்னிடமே அவன் செய்து கொண்டிருக்கிறான். அவன் இப்படிப் பேசுபவன் இல்லை. நஷ்டம் கொடுத்த கூச்சமா அல்லது இப்படியெல்லாம் பாவனை செய்தால் தான் பரிதாபத்தில் நான் அவனை எதுவும் பேசிவிடமாட்டேன் என்று செய்கிறானா? நிஜமாகவே அந்த பலத்த அடி இவனை இப்படி மாற்றியிருக்கிறதா? இதே போன்ற உற்சாகமில்லாத சோர்ந்த முகத்துடன் தான் எல்லோரிடமும் பேசுகிறானா? சினிமா பைத்தியமாயிற்றே.. சமீபத்தில் ஏதாவது சினிமா பார்த்திருப்பானா? இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டே பெட்டிக்கடையில் ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்தேன். அவன் அடிக்க மாட்டான்.

”டீ சாப்பிடறியா?”

அவன் வேண்டாம் என்றதை அசட்டை செய்து ”அண்ணன் ரெண்டு டீ” என்றேன். அங்கிருந்த ஒரே ஒரு ப்ளாஸ்டிக் ஸ்டூலில் உட்கார்ந்தேன்.

பண விவகாரத்தை எப்படி ஆரம்பிப்பது என்று எனக்கு குழப்பமாக இருந்தது. அவன் இருந்த தோரணைக்கு அவனிடம் ஏழு லட்சம் இல்லை, எழுநூறு ரூபாய் கூட இருக்க வாய்ப்பில்லை. எந்த தைரியத்தில் இப்படி வந்து நிற்கிறான் என்பதை விடவும், இந்த அளவு நஷ்டமடைந்துவிட வாய்ப்பிருக்கிற ஒரு காரியத்தை, எப்படி அடுத்தவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு செய்தான்?

டீ கிளாசை எடுத்து அவனிடம் நீட்டினேன். காலையில் சாப்பிட்டானா என்று கேட்கவில்லை. இல்லை என்று சொல்லிவிட்டால், என் காசில் ஏதாவது வாங்கித் தரும்படி நேரும். அது அவனுடனான எனக்கு இருக்கும் கோபத்தை, அப்படி நான் காட்டிக் கொண்டிருப்பதைத் தளர்த்தும். இந்த டீயே கூட அவனுக்கு ஜாஸ்தியோ என்று தோன்றியது. நண்பன் அப்படி ஒன்றும் தன் பேரில் கோபத்தில் இல்லை என்று அவன் நினைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நான் நினைத்தக் கணத்தில் ஒரு கோபாவேசம் செய்யத் தோன்றியது.

”சொல்லுடா எதுக்கு நேர்ல பார்க்கணும்னு சொன்னே?”

சற்றே சத்தமாக, முகத்தில் எரிச்சலை வரவழைத்துக் கொண்டு கேட்டேன்.

”மூர்த்தி மாமா வீட்டுக்கு வந்தார்டா..” என்றவன் பள்ளி மாணவன் ஒப்பிக்கும் பாடத்தை மறந்துவிட்டு முழிப்பவன் போல் முழித்தான்.

அவன் சொன்ன சேதி எனக்கும் புதுசு. மூர்த்தி மாமாவுக்கும், அவனுக்கும் இனி தொடர்பில்லை. அவர் முதலீடு செய்திருந்த இரண்டு லட்சத்தை, இவன் திவால் ஆன அடுத்த மாதமே நான் பைசல் செய்திருந்தேன். அது மட்டுமில்லை. அலுவலக நண்பர்களுக்கும் நானே பூர்ணிமாவுக்குத் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து கடனை கிட்டத்தட்ட அடைத்துவிட்டிருந்தேன். இவை எதுவும் இவனுக்குத் தெரியாது. அவர்கள் அனைவரும் என் பொருட்டு இவனை விட்டு வைத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

அவன் சொன்ன விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும் என்பது போல் காட்டிக் கொண்டு, அவனிடமிருந்தே சங்கதிகளைப் பெற முயன்று கொண்டிருந்தேன். ”தெரியும். என்ன சொன்னார்?”

”போலீஸ்ட்ட போறதா சொல்றார்டா.. நான் அவருக்கு எழுதிக் கொடுத்த பத்திரத்தை வெச்சுட்டு போலீஸ்ட்ட போறேன்னு சொல்றார். யாரோ உங்க ரிலேஷன் சப் இன்ஸ்பெக்ட்ரா இருக்காங்களாம்ல..”

சிவா இதைச் சொல்லும் போது படு கேவலமாக முகத்தை வைத்துக் கொண்டு, கிட்டத்தட்ட என் காலில் விழாத குறையாக கெஞ்சுபவன் போல குறுகி நின்றான். விட்டால் அழுதுவிடுவான் போல் இருந்தது. மூர்த்தி மாமாவுக்கு இவன் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தப் பத்திரம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. என்னால் நடந்திருப்பதை சட்டென்று யூகிக்க முடிந்தது. எல்லாம் நிச்சயமாக பூர்ணிமாவின் வேலையாகத்தான் இருக்கும். மூர்த்தி மாமா வந்து சென்றதைப் பற்றித்தான் சிவா பேச வருகிறான் என்பது பூர்ணிமாவுக்கு முன்னமே தெரிந்திருப்பதால் தான் காலையில் அவள் குமைந்திருக்கிறாள்.

அவள் தான் மூர்த்தி மாமாவிடம் பேசி, சிவாவை போலீஸ் பயம் காட்டி மிரட்டியாவது பணத்தை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவர் தஞ்சாவூரில் இருப்பதால் இவனை நெருக்க அவர் தான் சரியான் ஆள் என்பது பூர்ணிமாவின் திடமான நம்பிக்கை. மேலும் சிவா அப்படியே திவால் ஆகியிருக்க வாய்ப்பில்லை என்றும் பூர்ணிமா நம்பினாள். பணத்தை அவன் எங்கோ பதுக்கிவிட்டதாக நினைத்தாள். அவள் சொல்வதெல்லாம் கேட்கும் போது எனக்கே கூட அவ்விதம் தோன்றியிருக்கிறது. ஏன் இதோ இப்போது கூட சிவா என்னிடம் நடிக்கிறானா என்ற சந்தேகம் முதுகில் ஊரும் எறும்பு போல நிரடிக் கொண்டிருக்கிறது.

”எல்லாரும் என்னை மாதிரியே இளிச்சவாயனா இருந்துடுவாங்களா சிவா? எந்த தைரியத்துலடா அவர் கிட்ட பத்திரம்லாம் எழுதிக் கொடுத்தே..? என் கொலீக்ஸ்ட்ட வேற செக் லீஃப் கொடுத்திருக்க.. இப்படி எல்லாம் நஷ்டம் ஆகும்னு உனக்கு ஏற்கனவே தெரியாதா? ஆரம்பத்துல எவ்ளோ பந்தாவா பேசின? நிஜமாக திட்டம் போட்டு கவுத்திருக்கடா நீ..? என் புத்தியத் தான் செருப்பாலேயே அடிக்கணும்”

அவன் மெளனமாக நின்றான். இந்த ஒரு வருடத்தில் ஃபோனிலும் நேரிலும் இதே மாதிரி அவனிடம் நான் நிறைய தடவை பேசியிருக்கிறேன். அவகாசம் கொடுத்துக் கொடுத்து அலுத்துவிட்டது. நாளுக்கு நாள் அவன் கீழே கீழே போய்க் கொண்டிருக்கிறானே ஒழிய தேறி வருவதற்கான, என் பணத்தை பைசல் செய்வதற்கான எந்தச் சுவடும் தெரியவில்லை.

”இந்தப் பார்றா சிவா.. எப்படியாவது ஒரு மாசத்துல தர்றேன்னு சொன்னே.. நீ நிஜமாவே எல்லாத்தையும் லாஸ் பண்ணியிருந்தா அவ்ளோ பெரிய தொகையை யாராலும் ஒரு மாசத்துல கொடுக்க முடியாது. ஆனா நீ அப்படித்தான் சொன்னே.. அப்போதைக்கு தப்பிக்கலாம்னு சொன்னேங்கறது எனக்குத் தெரியும். இருந்தாலும் என்ன தான் பண்றே பார்க்கலாம்னு விட்டேன். அப்படி இப்படி ஒரு வருஷம் ஓடிட்டு.. என்ன தாண்டா பண்றே.. மாசா மாசம் ஒரு அஞ்சாயிரம் கொடுத்திருந்தாக் கூட இப்ப அம்பதாயிரம் கடன் அடைஞ்சிருக்கும். நான் என்ன வட்டியா கேட்கறேன்?”

”அரிசி மில்லுல சூபர்வைசரா இருக்கேண்டா.. மாசம் பன்னெண்டாயிரம். எப்படியுமே மிச்சம் பண்ண முடியலடா.. அவ சைட்லயும் சரி, என் சைட்லயும் சரி யார்ட்டயும் உதவினு நிக்க முடியலைடா..”

”போதும் சிவா. முதல்ல திருப்பிக் கொடுக்கணும்னு மனசுல நினைடா.. அப்பத்தான் கொடுக்க முடியும். சாப்பிடாம இருக்கியா, செல்ஃபோன் இல்லாம இருக்கியா, ரீசார்ஜ் செய்யாம இருக்கியா, செருப்பு போடாம இருக்கியா? அது மாதிரி தான் எனக்கும் கொஞ்சமாவது கொடுக்கணும்னு நினைடா.. எவனாவது உன்னை நம்பி ஒரு பத்தாயிரம் கொடுத்தானா..? நான் மூனு லட்சம் முழுசா கொடுத்துட்டு நிக்கறேன். நான் பத்தாதுனு மத்தவங்க கிட்டயும் வாங்கிக் கொடுத்தேன். உனக்கே உறுத்தலா இல்லை..? எதிர்காலத்துல உன்னால நான் சிக்குவேன்னு உனக்குத் தெரியும். தெரிஞ்சே தான் இதை செஞ்சுருக்கே.. சத்தியமா சொல்றேன், யூ டிஸீவ்ட் மீ”

முன்னெப்போதும் பேசியதை விடவும் இப்போது நான் சிவாவிடம் அதிகம் கோபப்பட்டுக் கொண்டிருப்பது போல எனக்கே தோன்றிக் கொண்டிருந்தது. நிஜமாகவே அவன் மீது ஒருவித சலிப்புத் தட்டிய கோபத்தில் இருந்தேன்.

”அந்த வார்த்தையைச் சொல்லாத.. டா” என்ற சிவாவுக்குத் தொண்டை அடைத்தது. எந்தக் கணத்திலும் அவன் அழுதுவிடக் கூடாது என்பதில் நான் மிக ஜாக்கிரதையாக இருந்தேன். அவன் ஏதாவது கோபமாகப் பேசிவிட்டால் கூட போதும். ‘முடியாது ஆனதைப் பார்த்துக்கோ’ என்றால் கூட ஓங்கி அறைந்துவிட்டு ஒழி என்று நடையைக் கட்டிவிடுவேன். மனதின் மெல்லிய ஓரத்தில் எப்போதும் அவனிடமிருந்து அப்படியொரு பதிலைக் கூட எதிர்பார்த்தே இருந்தேன். எப்போது அப்படிச் சொல்வான் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து அவன் ஒருநாளும் சொல்பவனாக இல்லை. உண்மையில் சிவாவை என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. முடியாது. இந்தக் குற்றத்துக்கு என்ன தண்டனை என்றே தெரியவில்லை. அவனை நம்பி நான் மோசம் போனேன் எனில், ஷேர் மார்க்கெட்டை செய்யத் தெரியாமல் செய்து அவன் மோசம் போனான். அவனுக்குக் கொடுத்தப் பணம், வாய்க்கரிசி போட்டு வறட்டி வைத்து மூடி எரித்துவிட்ட பிணத்துக்குச் சமம். போனது போனது தான்.

”உன்னை மட்டுமில்லைடா.. யாரையுமே ஏமாத்தணும்னு நான் நினைச்சதில்லைடா. என் மெத்தட் சரியானதுனு நினைச்சேன். ஷேர் ட்ரேடிங் முழு ரூபமும் எனக்குத் தெரியாம அதை கொஞ்சம் ஓவரா நம்பிட்டேன். ஒரே ஒரு தவறான ட்ரேட், ஒரே ஒரு டிஸாஸ்டர் போதும், எப்பேர்பட்ட பணக்காரனும் நடுத்தெருவுக்கு வரமுடியும்னு தெரியாமப் போச்சுடா..”

சிவாவின் வார்த்தைகளில் பொய்யிருக்கும் என்று தோன்றவில்லை. அவன் அழுகிறானோ இல்லையோ நான் அழுதுவிடுவேன் என்று நிலைமை தலைகீழாக மாற ஆரம்பித்திருந்தது. இப்போது இப்படி நினைக்கிறவன், வீட்டில் பூர்ணிமா இவனைப் பற்றிச் சொன்னால் அது உண்மையோ என்று நினைக்க ஆரம்பித்துவிடுவேன். வேறு வழியில்லை. நான் உளவியல் நிபுணன் இல்லை. இந்தக் குழப்பம் எப்போதும் இருக்கத்தான் செய்யும். அது என் பாடு. ஆனால் இன்றோடு இவன் பிரச்சனையை முடித்துவிட வேண்டும் என்று மனதில் தோன்றிக் கொண்டிருந்தது. எது உண்மை என்ற ஆராய்ச்சிக்கே இனி போக வேண்டாம் என்று திடீரென்று தோன்றியது. பூர்ணிமா சொன்னது உண்மையாகவும், இவன் என்னை ஏமாற்றிவிட்டதாகவுமே இருந்துவிட்டுப் போகட்டும். அப்படி ஒருவேளை என்னை ஏமாற்றி ஏழை, கோழை நாடகம் நடத்தி அந்தப் பணத்தைப் பதுக்கி என்ன செய்யப் போகிறான்? தன் மனைவிக்கும் குழந்தைக்கும் தானே செய்வான்? செய்துவிட்டுப் போகட்டும்! ஒழிடா சிவா!

சிகரெட்டின் கடைசி புகையை இழுத்துவிட்டு, கீழே போட்டு ஷூவால் நசுக்கினேன். எழுந்து அவன் அருகே சென்று குனிந்திருந்த அவன் முகத்தை நிமிர்த்தி புகையை ஊதினேன். அவன் கண்களை மூடிக்கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

”பார்றா.. பாஸ்ஸிவ் ஸ்மோக்கிங் ஒத்துக்காதோ?”

என் இதழோரத்தில் கசியும் புன்னகையை அவன் கவனிக்கவில்லை.

”அப்படியெல்லாம் ஒன்னுமில்லைடா.. இப்படித்தானே காலேஜ் படிக்கும்போது வேணுமின்னே என் மூஞ்சில ஊதுவே.. எனக்கு சிகரெட் ஒத்துக்கலை.. அதனால தான் பழகலை.. மத்தபடி அந்த வாடை எனக்குப் பிடிக்கும்”

சிவா இப்படிச் சொல்லும் போது கீழுதட்டில் மெலிதாகச் சிரித்தான். நாங்கள் நடந்து கொண்டே திரும்ப அலுவலக வளாகத்தை அடைந்தோம்.

‘நீ எங்கே போகணும்னு சொன்னே.. வேளச்சேரியா.. வா நான் டி.நகர் பஸ் ஸ்டாண்ட்ல வந்து விடறேன்”

பைக்கை எடுத்து அவனை பின்னால் ஏற்றிக் கொண்டேன்.

”டேய் ஆஃபிஸ்?” என்றவனிடம் ”எவன்டா கேட்பான்..?” என்றபடி ஆக்ஸிலேட்டரை முறுக்கினேன்.

சிவாவுக்கு மட்டுமில்லை, கொளுத்திக் கொண்டிருந்த சூரியனை, திடீரென மேகம் மூடி வானம் மப்பாகிவிடுவதைப் போல மாறிக்கொண்டிருந்த என்னை நினைத்து எனக்கே வியப்பாக இருந்தது. சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்தவனை ”விழுந்துறப் போறே.. தள்ளி வாடா.. கேப் விட்டு உட்கார நீ என்ன ஃபிகரா..?” என்றேன். அவன் சிரிப்பதற்கே கூச்சப்பட்டான். பேசுவது நான் தானா என்ற ஆச்சரியம் விலகாமல் சற்று நெருங்கி வந்து என் தோளைத் தொட்டு உட்கார்ந்தான். எப்படியாவது அவனுக்கு சென்னையில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித்தர முயற்சி செய்கிறேன் என்றேன்.

”அப்படி மட்டும் நடந்துட்டா.. உன் கடனைக் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துடறேன்டா” என்றவனின் குரல் நெகிழ்ந்திருந்தது.

”பார்க்கலாம் பார்க்கலாம்..” என்று சிரித்தேன். டி.நகர் பஸ் ஸ்டாண்டில் அவனை இறக்கிவிட்டு சொன்னேன்.

”உன் விஷயத்துல எனக்கு ஒரு ரிலீஃப் தேவைப்படுதுடா.. இனிமேலும் உன்னை, அந்த பணத்தோட தூக்கி சுமக்க என்னால முடியாது. நிஜத்தைச் சொல்லணும்னா.. ரொம்ப வெறுத்துப் போச்சு. இப்பவும் உன்மேல செம்ம கோபத்துல தான் இருக்கேன். ஆனா உன்னை என்ன பண்றதுன்னே எனக்குத் தெரியலை சிவா. மூர்த்தி மாமாவை நான் பார்த்துக்கறேன். இனி இந்த பணம் விஷயமா உன் கிட்ட நான் எதுவுமே கேட்க மாட்டேன். இது உனக்கு நிம்மதியா இருக்கோ இல்லையோ எனக்கு பெரிய நிம்மதியா இருக்கும். நீயா கொடுத்தாக் கொடு. நான் ஃபோன் அடிச்சாலே பணத்துக்குத்தான் அடிக்கிறேன்னு நினைச்சு ஃபோனை எடுக்காம விடாதே.”

இப்படிச் சொன்ன நொடி என் நெஞ்சில் ஒரு வருடமாக தூக்கிச் சுமந்து கொண்டிருந்த பெரும் பாரம் நீங்கியது போல் இருந்தது. எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வந்தது போல ஜிவு ஜிவு என்றிருந்தேன். காற்றில் மிதக்கும் தக்கை மாதிரி உணர்ந்தேன்.

வெம்பி வெதும்பி ஒருவாறு அழுவதற்குத் தயாரான சிவாவை அப்படியே தடுத்து நிறுத்தினேன்.

”இரு, இரு.. இப்ப அழுதுடாதே.. நான் கிளம்பினதுக்கப்புறம் எவ்ளோ வேணாலும் அழுதுக்கோ”

தொண்டை வரை வந்த அழுகை அப்படியே சிரிப்பாக மாற, புறங்கையால் கண்களைத் தேய்த்துக் கொண்டு, என் புஜத்தில் குத்தினான். நீண்ட நாட்களுக்குப் பிறகு என் பழைய சிவாவைப் பார்த்தேன்.

***


அசோக் ராஜ்
‘நிகழ்தகவு’ என்ற சிறுகதைத் தொகுப்பும் ‘மைசூர் சாண்டல் ரவுண்ட் சோப்’ என்ற குறுங்கதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது. கிண்டிலில் ‘பதுமை’ என்ற நாவல் வெளிவந்துள்ளது. மின்னஞ்சல்: asokraj.writer@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular