சுஷில் குமார்
“தள்ளிப் போங்கல, பெரிய மத்தவனுவோ மாதி நிக்கானுவோ, குண்டியச் சொறிஞ்சிட்டு. விடியாண்டாம், முழுங்கதுக்கு வந்துட்டானுவோ” என்று எல்லோருக்கும் கேட்கும்படி முனகியபடி தன் லோடு-சைக்கிளை உருட்டியபடி வந்து நின்றாள் மாவிசக்கி அக்கா. அவள் குரல் கேட்டதும் அங்கு நின்றிருந்த ஒவ்வொருவரும் ஒருநொடி அதுவரை பேசிக்கொண்டிருந்ததை மறந்தபடி தங்கள் இடத்திலிருந்து அசைந்து முன்னோ, பின்னோ விலகி அவளுக்கு ஒதுங்கி நின்றனர். நான் அருகிருந்த வேப்பமூட்டில் உறக்கக் கலக்கம் தீராமல் கொட்டாவி விட்டபடி உட்கார்ந்திருந்தேன். சுற்றிலும் பீடியும் சிகரட்டும் கலந்த புகை நாற்றம்.
வேப்ப மரத்தின் அருகே வந்து நின்றவள், “தள்ளிப் போல மயிராண்டி, மத்ததப் பாக்கணுமோ?” என்றாள். எனக்கு நடுக்கமே வந்துவிட்டது. சட்டென எழுந்து தள்ளி நின்றேன். அவள் தனது சைக்கிளை வேப்பமூட்டோடு சாய்த்து வைத்தாள். சிவப்புநிறச் சேலை கசங்கியும் சுருங்கியும் அவளைச் சுற்றியிருந்தது. அக்கா எப்போதுமே தன் ஆடையைப் பற்றிய கவனமில்லாததைப் போலவே இருப்பாள். மேலுடம்பில் அந்தச் சேலை மறைத்தும் மறைக்காமலும் ஆடிக்கொண்டிருக்கும். வேலை நேரத்தில் அதைச் சுருட்டி ஒரு கயிற்றைப் போல மார்பின் குறுக்காகக் கட்டியிருப்பாள். இருபுறமும் திமிறிக் கொண்டிருக்கும் அவளது நெஞ்சைப் பார்த்து, அவள் நிமிரும் போது முகத்தை வேறெங்கோ திருப்பியபடி நிற்பவர்கள் தான் பெரும்பாலானவர்கள். எனக்கு அவளை அப்படிப் பார்க்கும் போதெல்லாம் வெட்டிசக்கி அம்மன் நினைவுதான் வரும். அகண்ட கண்களில் நிலை குத்திய பார்வை, வாயோரச் சிங்கப் பற்களுக்கிடையில் கடிபடும் பிண்டத்தின் ரத்தம் முலைகளில் வழிந்தபடியிருக்க, ஒரு கையில் முலை சப்பிக் கொண்டிருக்கும் பிள்ளையும் மறுகையில் தீச்சட்டியும் ஏந்தி நிற்பாள் வெட்டிசக்கி. அக்கா முகமும் கழுத்தும் வயிறும் கைகளும் என, இரத்தமும் தெறித்த சதைத் துணுக்குகளும் கொழுப்புத் திரிகளுமாக நிற்பாள். அவள் பின்னால் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு வந்து அமைதியாக அவள் சொல்லாமலேயே விளக்குமாற்றை எடுத்துக் கடைக்கூரையின் உள்ளே தூத்துப் பெருக்க ஆரம்பித்து விடுவாள் தெய்வகன்னி. அக்காவின் பெண்பிள்ளை. என்னை விட ஒருசில வயது சிறியவளாக இருப்பாள். அவள் என் பள்ளிக்கூடத்தில் தான் படித்தாள். எல்லோரையும் நடத்துவது போலவொன்றும் அவளை யாரும் நடத்தவில்லை. அவளைச் சீண்டுவதும், கையைப் பிடித்து இழுப்பதும், அவள் திமிறிக்கொண்டு ஓடும்போது அக்காவின் பெயரை கெட்ட வார்த்தைகளோடு சேர்த்து விளிப்பதும். எல்லாம் பெரிய ஆண்மைக்காரர்கள்தான். ஆனால் அக்காவின் கடைமுன் வந்து நிற்கும்போது மட்டும் ஒருத்தனுக்கும் குரலிருக்காது.
“அரக்கிலோ, ஒரு கிலோ. ஒன்னரை,” அவ்வளவுதான் அங்கிருக்கும் பேச்சொலி. தெய்வகன்னி தூத்துப் பெருக்கி கடையின் முன் முற்றம் தெளித்து ஒரு சிறு கோலம் போட்ட பிறகு, வேம்போடு நின்று வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கும் அக்கா மெல்ல நகருவாள். வெற்றிலைச் சாற்றை அங்குமிங்கும் காறித் துப்பியபடி சைக்கிளின் பின்னால் கட்டி வைத்திருக்கும் சாக்குச்சுருளைப் அவிழ்த்தெடுப்பாள். அவளது கத்திகளின் சத்தம் பற்களைக் கூசச் செய்யும். கையிடுக்கில் அச்சாக்குச் சுருளைச் சொருகியபடி வேண்டுமென்றே கால்களை அகலமாக எட்டெடுத்து வைத்துக் கடையை நோக்கி வருவாள்.
“கூய்வுள்ளயோ. அவனுக அம்மைக்க… தள்ளிப் போங்கல பொலாடிமவனுவளா.”
கடையின் பின்புறமாகச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் செல்லும் அக்கா சற்று நேரத்தில் அன்றைக்கான மாட்டை இழுத்துக்கொண்டு வந்து கடைக்கூரையின் உள்ளே செல்வாள். அம்மாட்டுடன் மிகப் பாசமாகப் பேசுவதுபோல ஏதோ முனகிக் கொண்டிருப்பாள். அக்காவின் கையசைவைக் கூர்ந்து கவனித்தபடி அசையாது நிற்பாள் தெய்வகன்னி. அக்காவின் கைவிரல் அசைவுகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தமிருக்கும் போல. அவற்றிற்கேற்றபடி அடுத்தடுத்த காரியங்களைச் செய்துமுடித்து தன் இடத்தில் போய் நிற்பாள் தெய்வகன்னி.
மாட்டின் நெற்றியில் தடவிக் கொடுத்தபடி பேசிக்கொண்டிருக்கும் அக்கா சரியாக ஐந்தரை மணியாகும் போது ஒற்றையடியில் அம்மாட்டைச் சரித்துக் கீழே வீழ்த்தி அதன் கழுத்தில் தன் ஒரு காலால் அழுத்தி நிற்பாள். மாட்டின் மூச்சுச் சத்தம் கிரீச்சிட்டபடி காற்றும் சீழுமாகத் தெறிக்கும். தன் இடுப்பைச் சுற்றியிருக்கும் இறுகிப்போய் இரும்பான கனத்த கொச்சங்கயிற்றை உருவி மாட்டின் முன்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கட்டுவாள். மாடு அசைவற்று அவள் சொல்கேட்டுப் படுத்துக் கிடக்கும். பின்னிறங்கி பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கட்டுவாள்.
தெய்வகன்னி அக்காவின் சாக்கை விரித்து வைப்பாள். எழுந்து வெடுவெடுவென தன் கசாப்புக் கத்தியை எடுத்து வெட்டுமரத்தின் கீழாகக் கிடக்கும் சாணைக்கல்லில் அழுத்தித் தீட்டுவாள் அக்கா. அதன் பொறி பறக்க, சுற்றியிருக்கும் அத்தனைக் கண்களும் மாட்டையும் அக்காவையும் மாறிமாறிப் பார்த்து நிற்கும். சில ஆண்கள் அங்கிருக்கப் பிடிக்காமல் விலகிச் செல்வதையும் கவனிக்க முடியும்.
அதன் பிறகு நடக்கும் காட்சிகள் அடிக்கடி என் கனவில் வந்து நான் மிரண்டு விழித்தெழுந்திருக்கிறேன். கசாப்புக் கத்தியை வெட்டுமரத்தின் மீது வைத்துவிட்டுத் தன் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கூரான ஒல்லிக் கத்தியை உருவுவாள் மாவிசக்கி அக்கா. அவளது முனகல் மீண்டும் ஆரம்பிக்கும். “தள்ளையோளி, அவனுக்க….” என்று கேட்கும் சத்தத்தோடு அக்கூரான கத்தி மயங்கிக் கிடக்கும் மாட்டின் குரல்வளையைக் கிழித்துச் சீறும் சத்தம் ஒன்று சேரும்போது எல்லோரும் முகங்களைத் திருப்பிக் கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் அக்காவின் முகத்தில் அந்த கணத்தில் மாத்திரம் அப்படியொரு வெளிச்சம் வந்து மின்னும். பிறகு மிக நுணுக்கமாக, ஒரு கைக்குழந்தையை குளிப்பாட்ட முழங்காலில் படுக்கப்போடுவதைப் போல அம்மாட்டின் உடலைத் தன் கால்களின் இடையே கிடத்துவாள். தனக்குத்தானே புன்னகைத்தபடி வசைச் சொற்களைத் தெறிக்க விட்டபடி அதன் தோலுரித்து, பகுதி பகுதியாக வெட்டியெடுத்து கூரைக் கம்பில் தொங்கும் இரும்புக் கொக்கிகளில் தூக்கிச் சொருகுவாள். கடையைச் சுற்றி மொய்த்துக் கிடக்கும் ஈக்களுக்கும் ஆட்களுக்கும் மத்தியில் யாருமற்றதைப் போல் நின்று கையசைத்து எவ்வளவு எனக் கேட்பாள். ஒவ்வொருவரும் தங்கள் கணக்குகளைச் சொல்ல, தெய்வகன்னி அதைத் திருப்பிச் சொல்ல, வெட்டுமரத்தின் மீது அவள் கைகள் நளினமாக இயங்கும். ஒவ்வொரு வெட்டின் போதும் தவறாமல், “தள்ளையோளி, அவனுக்க..” என்கிற சத்தம் கேட்கும்.
“இந்தாங்க அரக்கிலோ, இந்தாங்க ஒன்னரக் கிலோ,” என்று பயந்தபடிக் கூறுவாள் தெய்வகன்னி. தாமரை இலையில் பொதிந்த இறைச்சியை வாங்கியபடி மாவிசக்கி அக்காவைப் பார்த்து நிற்கும் ஆண்களின் முகம் பார்க்காது கை விரல்களைக் காட்டி விலை சொல்வாள் அக்கா.
ஒருநாள் வேறேதோ கடையில் இறைச்சி வாங்கி வந்தார் அப்பா. அதைக் கழுவக் கொண்டுபோன அம்மா எரிச்சலோடு திரும்பி வந்து, “மாவிசக்கி கட தொறக்கல்லியாப்பா? எதுக்கு வேறெங்கியாம் வாங்குகியோ? பேசாம வர வேண்டியதான? மனுசன் திங்காண்டாமா?” என்றாள்.
“கொஞ்சம் லேட்டா போய்ட்டேன்டீ. எல்லாத்தையும் வழிச்சிட்டு போய்ட்டானுவோ. இனி ராவே போயி கெடக்க வேண்டியதாம் போல!”
நான் இடையில் புகுந்து, “ஏம்மா, வேற கடைல வாங்குனா என்ன? எல்லாம் ஒரே எறச்சி தான?” என்று கேட்டேன்.
வேறேதோ சிந்தனையில் மூழ்கிப் போன அம்மா மீண்டு வந்து தனக்குத்தானே சொல்வதைப் போல, “தெக்க சன் செட் பாத்துட்டு நாட்டாமை கடைல ஏறுக வட நாட்டான்லாம் மட்டன், மட்டன்னு பிளேட்டு பிளேட்டா உள்ளத் தள்ளுகதெல்லாம் அவ கைபட்ட மாடாக்கும். எறச்சின்னா சும்மா இல்ல, அது ஒரு இது… பிச்சிப்பூ தோத்துப் போவும். அதுலயும் எளம் காளைய மட்டுந்தான் அவ வெட்டுவா. பின்ன, என்னெல்லாமோ கத உண்டுல்லா? அப்பிடி ஒருத்தியும் வேணும்.. ஆமா, ஆமா…” என்றவாறு மனமின்றி அந்த இறைச்சியை எடுத்துச் சென்றாள்.
மாவிசக்கி அக்கா கடையில் மட்டும்தான் பெண்கள் வந்து இறைச்சி வாங்குவதைப் பார்க்க முடியும். ஞாயிறு காலை பூசை முடிந்து போகும் வேதக்கார பெண்கள், சுகக்கேடான வீட்டு ஆண்களுக்கு சூப் வைக்க மாட்டு வால் வேண்டி நிற்கும் பெண்கள். அவர்களுக்குப் போடும்போது மட்டும் அள்ளியள்ளிப் போட்டு முகம்பார்த்துக் கொடுப்பாள் அக்கா.
கடை முடிந்ததும் சாக்கின் மீது குவியும் பணத்தைச் சுருட்டி எடுத்துத் தன் சைக்கிளின் பின்னால் கட்டிச்சொருகி, தெய்வகன்னியைத் தூக்கி அதன்மேல் இருத்திச் செல்வாள் மாவிசக்கி அக்கா.
அக்காவிடம் ஒரு முறையாவது பேசிவிட வேண்டும் என ஏனென்று சொல்ல முடியாத ஆசை எனக்கு.
*
சித்திரை மாதக் கடைசிச் செவ்வாய். பத்து நாள் கொடைத் திருவிழாவின் உச்சம். உச்சி வெயிலேயே வந்து ஆலமரத்து மூட்டு ஆதிக்கோயிலைச் சுற்றிப் போர்வைகளையும் சாக்குகளையும் சேலைகளையும் விரித்து இடம்பிடித்துக் காவலுக்கு ஆள்மாற்றி ஆளிருக்கக் செய்து குடும்பம் குடும்பமாய் வந்தபடியிருக்கும். கல்லுப்பட்டி ராசாத்தியின் வில்லுப்பாட்டிலும், மேலாவூர் கணியான் ஆட்டக்காரக் குழுவின் அனல் பறக்கும் ஆட்டத்திலும் ஆதிக்கோவில் முதல் திருவாங்கூர் ராஜா கட்டியெழுப்பிய புதுக்கோவில் வரைக்கும் அதிர்ந்திருக்கும். மாலைக் கருக்கலில் வண்டி வண்டியாக வந்து குவியும் துளசியையும், பச்சையையும், பல வகைப் பூக்களையும் இடம் மாற்றி ஆதிக்கோவிலின் கருவறையின் முன் பத்தடி தூரத்தில் கம்பு கட்டிப் பிரித்து வைத்திருக்கும் குழியில் போட்டு நிறைப்பார்கள். இரவு எழும் நேரத்தில் அக்குழி நிறைந்து குன்றென எழும். ஒருபுறம் இருப்பவர்கள் மறுபுறம் பார்க்க முடியாமல் எழுந்து உயரும் அக்குன்று நள்ளிரவை நெருங்கும் நேரம் ஆதிக்கோவில் ஆலமரத்தின் முன்பகுதியில் நீண்டு செல்லும் பெருங்கிளையை உரசி நிற்கும்.
ஆலமரத்துக் கிளையெங்கும் நிறைவேறிய வேண்டுதல்களுக்காகக் கட்டித் தொங்கவிடப்பட்ட தொட்டில்கள், கண்ணாடி வளையல்கள், காகிதச் சுருள்கள்.
“எப்பிடிப்பா இவ்ளோ கூட்டம் வருகு?”
“அம்மைக்க சக்தி அப்பிடில்லா மக்ளே. துடி உள்ளவளாக்கும். சனங்கோ அம்மைக்கிட்ட உரிமையோட கேக்கும். அவ கண்டிப்பா தருவா, அதுக்கப் பொறவுதான் வந்து தொட்டிலும், பொம்மையும், வளையலும் எல்லாம் கட்டி விடுகது பாத்துக்கோ. இங்க மட்டுந்தான் கேட்டது கெடச்சப் பொறவு வந்து வேண்டுதல செய்யது. பின்ன, ஏதும் பஞ்சாயத்துன்னு வையி, அம்மைக்க முன்னாடி கூட்டிட்டு வந்து சத்தியம் பண்ணச் சொன்னாத் தீந்து. எப்பேர்ப்பட்ட எமகாதகனும் அம்மைக்க கால்ல விழுந்துதான் ஆகணும். ஒனக்க கால் முறிஞ்சி கெடந்தப்போ ஒரு வைத்தியம்மாரும் செரியாக்க முடியலல்லா? ஒங்கம்மக்காரி இங்க வந்து வெட்டிசக்கியம்மைக்கு நேந்து வெரதம் இருந்தா. நாப்பத்தியோரு நாளாக்கும். திடீர் திடீர்னு ஆட்டம் வந்து ஆடிருவா. நம்ம வீட்ல எல்லாருக்கும் பயம்தான். ஆனா, அம்மைக்குன்னு வரும்போ ஒரு சொல்லும் சொல்ல முடியாதுல்லா. அம்ம தான் ஒனக்கக் கால செரியாக்கி விட்டா. அவளுக்கத் திருநீறப் பூசிப் பூசித்தான் நீ எந்திச்சி நடந்த மக்ளே.”
“அம்மயும் சொல்லிருக்கா. பொறவு, இங்க போற வார வண்டியெல்லாம் கவுந்திரும்னு சொல்லுகால்லா? உண்மையாவா?”
“இவனுகளுக்கு வேற வேலயும் சோலியும் இல்ல, சலம்பிப் பயக்கோ. பின்ன, தப்புப் பண்ணவன் வாங்கித்தான ஆகணும் மக்ளே. சொல்லிச் சொல்லி என்ன கதயெல்லாமோ வந்துட்டு. பின்ன, ஊருக்குள்ள பயலுவளுக்க ஆட்டம் கண்ணு மண்ணு தெரியாம போகும்போல்லாம் ‘லேய், நான் இங்க தாம்ல இருக்கேன்னு’ ஒன்னு நடக்கும், அதுதான் கணக்கு. வலிலதான அம்மைக்க ஓர்ம வரும்.”
“அப்போ ஆலமரத்துலருந்து ரத்தம் வந்துன்னு சொன்னாங்கல்லா, அது?”
“ஆமா மக்களு. நூறு வருஷம் முன்னாடியா இருக்கும். நம்ம என்ன கண்டமாக்கும்? எனக்க அப்பா காலத்துலன்னு வையி. அப்போ வெள்ளக்காரனுவல்லா இருந்தானுவோ. இங்கன உள்ள ராசாவ திருவாங்கூர் ராசான்னு சொல்லுவோம். அவரும் ஒரு வெள்ளக்காரத் தொரையுமா சேந்து புத்தனாத்துக் கால்வாய பெருசாக்கி நீட்டலாம்னு பேசிருக்காங்கோ. செரி, மக்களுக்கு வெவசாயம் வேற செத்துக்கெடக்குன்னு எல்லாரும் சேந்து ஊரூரா வெட்டி மாத்திக் கால்வாய் நீண்டு வந்துருக்கு. இங்கன தாலியறுத்தான் சந்தைக்கப் பின்ன வந்து முட்டி நின்னிருக்கு. அப்போ நம்மூருக்கப் பேரு கள்ளிக்காடாக்கும். எங்கப் பாத்தாலும் கள்ளிச்செடியாத்தான் இருக்குமாம். மக்கள்லாம் கஞ்சிக்கு வழியில்லாம செத்துக்கிட்டிருக்காம். சந்தயத் தாண்டிப் போனா கள்ளிக்காட்டுக்குள போக ஒரே வழி ஆலமரத்துப் பாததான். ஆலமரத்த எடுக்காம எப்பிடிக் கால்வாய நீட்டதுன்னு நம்மூரு நாலு வீட்டுக்காராள கூப்பிட்டு பேசிருக்காரு ராசா. ஆனா, அவங்க எப்படி விடுவாங்க? அதுலயும் ஒரு மூத்த கெழவி இருந்தாளாம். அதான் நம்ம எறச்சிக்கட மாவிசக்கி இருக்கால்லா? அவளுக்க ஆச்சியோ, அவளுக்க அம்மையோ. அவளுக்க பேச்ச மீறி ஒன்னும் நடக்காதாம். ‘ராசா எவம்ல ராசா? எனக்க அம்மைக்க கால்ல வந்து விழச் சொல்லுங்கல, தண்ணி தானா வரும்னு’ சொல்லி விட்டாளாம்.”
“ஏம்பா, கால்வாய் வெட்டாம எப்பிடித் தண்ணி வரும்?”
“அது அப்பிடிதான் மக்ளே. அம்மைல்லா இருக்கா. நாலு வீட்டுக்காராளுக்க தெய்வமாட்டு தன்ன வந்து அறிவிச்ச சாமியாக்கும் வெட்டிசக்கியம்ம”
“அப்பிடின்னா?”
“நாலு வீட்டுக்காரா இந்த ஊருக்கு வந்த கதையெல்லாம் யாருக்குமே தெரியாது. என்னெல்லாமோ பேச்சு உண்டு. ஆனா, எசக்கியம்மய கும்புடுக மக்களாம். நம்ம ஆலமரத்தச் சுத்திதான அவுங்க இருந்தது. இப்பல்லா பெரிய பெரிய வீடெல்லாம் வந்தது. அப்போ ஒருநாளு சொல்லிவச்ச மாதி நாலு வீட்டுப் பொம்பளைக கனவுலயும் வந்து, அம்ம வந்துருக்கேம்மா, ஆலமரத்துக்குள்ள இருக்கேன்னு செவப்புச்சேல உடுத்தி கையில கைப்பிள்ளய வச்சிட்டு ஒரு உருவம் சொல்லிருக்கு. என்ன வந்து பாரு, தாகமா இருக்கு, தண்ணி கொண்டா, எனக்குப் படையல் வச்சி பூச பண்ணுன்னு கேட்டுருக்கு. ஓராளு ரெண்டு வேரு கனவுன்னா யோசிக்க மாட்டோம். நாலு வேருக்கு ஒரே மாதி கனவுன்னா சும்மாவா? ஆலமரத்தச் சுத்தி வந்து விழுந்து கும்புட்டு எசக்கியம்மய இருத்தி தேவயான பூசயெல்லாம் நடந்திருக்கு. அந்த மூத்த கெழவி ஆலமரத்த விட்டு நகரவே இல்லையாம். சித்திரச் செவ்வாய் பெரும் கொடை குடுத்தப் பொறவுதான் அவ வீட்டுக்கே போனாளாம். அம்மையே அவளுக்குள்ள ஏறங்கி இருந்துன்னு சொல்லுவாங்கோ.”
“அப்போ, ரத்தம் வந்தது?”
“ம்ம். ராசா கேக்க, இவுங்க, இல்ல ராசா, ஆல மூட்டுல இருக்கது எசக்கியாக்கும். மரத்தத் தொட முடியாதுன்னு சொல்லிருக்காங்கோ. ராசா மாந்த்ரீகம் போட ஆளுவள கூட்டிட்டு வந்து என்னான்னு பாக்கச் சொல்லிருக்காரு. ஒரு மூத்த மந்திரக்காரன், ‘ஏய் எசக்கி, இருக்கேன்னா சத்தங்காட்டு, இருக்கேன்னா சத்தங்காட்டு’ன்னு ஆலமரத்தச் சுத்தி கத்தியிருக்கான். அப்போ மரத்துக்கக் கெழக்கயிருந்து, ‘இருக்கேம் மக்களு, இருக்கேம் மக்களு, இருக்கேம் மக்களு’ன்னு மூனு தடவ சத்தம் வந்ததாட்டு கத. அப்போ, தொரமாருக்க ஆளுங்க எசக்கி இருக்கது கெழக்கதான், மரத்த வெட்டுங்கன்னு சிப்பாய்மாரு கிட்ட சொல்ல, அவனுவோ மரத்த வெட்ட ஆரம்பிச்சானுவளாம். ரெண்டு எறங்கு தான். மரத்துக்குள்ளருந்து செக்கச் செவேல்னு இரத்தமா வடிஞ்சாம் பாத்துக்கோ. நாலு வீட்டுக்காரால்லாம் தரையோடத் தரையா மயங்கிச் சரிஞ்சாங்களாம். கண்ணத் தொறந்து பாத்தா, மூத்த கெழவி மட்டும் மரத்து மூட்டுல அசையாம நின்னிருக்கா, மரத்து மேல கைய வச்ச சிப்பாயிமாரு கையும் காலும் வெட்டிவெட்டி இழுத்து இரத்தம் கக்கிச் சரிஞ்சு விழுந்து செத்துருக்கானுவோ. பொறவு ராசாவே நேரா வந்து அம்மைக்கி பெரிய கோயிலாக் கட்டித் தாரேம்னு வாக்குக் குடுத்தாராம். ராசா கெழவிக்கக் காலத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போனதாவும் அதுக்கப் பொறவு ஜேஜேன்னு இருந்ததாவும் சொல்லுவா. பின்ன, புதுக்கோயில ரொம்ப வருஷம் கழிச்சிதான் கெட்டிருக்கானுவோ. பொறவு ஊரூரா கதை கதையா சொல்லிச் சொல்லி ஒரே மக்க கூட்டம் தான். செவ்வாயும் வெள்ளியும் அம்மையப் பாக்காம ஒரு சோலியும் நடக்காது, சுத்தி உள்ள எல்லா ஊருக்கும் அதுதான்.”
“அப்போ கால்வாய் என்னாச்சிப்பா?”
“அதா? இப்போ நம்ம சந்தைக்க பின்னாடியோடி நரிக்குளம் தாண்டிப் போகுல்லா? அந்தச் சானலுதான் அது. எசக்கியோடைன்னுதான் அப்போல்லாம் சொல்லது. ஆனா, அம்மைக்க அதிசயத்துக்குப் பொறவு கள்ளிக்காட்டுல எல்லாக் கள்ளியும் ஒன்னொன்னா கரிஞ்சி விழுந்தாம் பாத்துக்கோ. மழையும் ஊத்துமா ஊரெல்லாம் பச்சப்பசேல்னு ஆயிட்டாம். இன்னைக்கி வரைக்கும் ஊருக்குள்ள தண்ணிக்கி ஒரு சிக்கல் இல்லல்லா? பத்தடிக்கிப் போர் போட்டாலே தண்ணி வந்திரும்லா மக்களு. எல்லாம் அம்மைக்க காரியந்தான் பாத்துக்கோ.”
*
நாலு வீட்டுக்கார வம்சத்தில் பிறந்தவள் மாவிசக்கி. அழகில் தேவலோகப் பிறவி. பேச்சிலும் குணத்திலும் பாட்டியும் அம்மையும் சேர்ந்தவள். பருவமெய்தி பெருகி நின்ற மாவிசக்கியைப் போகும் வழியெல்லாம் மறித்து நின்றான் கொச்சங்காடன். வேட்டையாடுவதும் ஆடுமாடு வெட்டிப் பங்கு வைத்து விற்றுப் பிழைப்பதுமான குடும்ப வழி. அப்பாமாருக்குத் தெரிந்தால் குழி தோண்டிப் புதைத்து விடுவார்களென பயந்து அவன் பிழைத்துப் போகட்டுமென சமாளித்து வெட்டிசக்கியம்மையை நினைத்துக் கடந்து வந்தாள் மாவிசக்கி. நாட்களும் எண்ணமும் செல்லச்செல்ல பிஞ்சு நெஞ்சம் முரட்டுக்கைகளின் இறுக்கத்தில் இளகிப் போயிருக்கிறது. அவன் அதற்குத் தகுந்த பெரும் ஆணாக, வீரனாகத்தான் இருந்தான். நாலுவீட்டு அடுப்பங்கரைக்குள் உனக்கென்ன வேலை? உன்னைக் குதிரைமீது கூட்டிச் செல்கிறேன், என் வம்சத்துக்கு ராணியாக வாவென அழைத்திருக்கிறான். உன் வெட்டிசக்கி மேல் ஆணை. கண்ணுக்குள் ராசாத்தியாக வைத்துக் காப்பாற்றுவேன் வாவென்று கைபிடித்துக் கூப்பிட்டிருக்கிறான்.
விசயம் தெரிந்த அம்மாமாரெல்லாம் ஒற்றன்மாரை வைத்து மிரட்டியும், விரட்டியும் பார்த்திருக்கிறார்கள். தங்கள் பெண் மனம் என்ன நினைக்கிறதோவென பயந்து சோழி போட்டுப் பார்த்ததில் கொடுந்தீங்கு வரப்போவதாகத் தெரிய என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்திருந்திருக்கிறார்கள். விசாரித்ததில் வந்த சேதிகள் ஒன்றும் சரியில்லை. கொச்சங்காடன் பல பெண்களைப் பார்த்தவன். குடும்ப வழக்கமே அதுதான். நினைத்த ஊரில் சென்று மயக்கிக்கொண்டு வந்து தோப்பிலும் தொழுவங்களிலும் அடைத்து வைப்பான். மீறி எதிர்க்கும் பலதும் உரமாகிக் கிடக்கும். எதிர்க்கவும் ஆளில்லை. சிலர் பொன்னும் பொருளும் கொடுத்து மீட்டுக்கொண்டு கண்காணா தேசத்தில் மாற்றி விடுவதும் உண்டு.
ஆலமரத்துக் கரும்பல்லி மூன்று முறை கவுளியடித்த இரவில், நாலுவீட்டு ஆண்களுக்கு விசயம் தெரிய வருவதற்குள், கொச்சங்காடன் குதிரையேறிக் கிளம்பிவிட்டாள் மாவிசக்கி. ஓருயிராக இல்லாது மற்றோருயிர் தாங்கிச் சென்றாள். கொச்சங்காடன் திமிராகச் சிரித்தபடி ஊரெங்கும் பறையடித்துக் கூட்டிச் சென்றான். வெட்டிசக்கி கருவறை முன்னின்று குடும்பத்தில் எல்லா பெண்களும் காப்புக் கட்டி வேண்டினார்கள். பேத்தி திரும்பாமல் வீட்டிற்குள் நுழைவதில்லை என வெட்டிசக்கி கோயிலேயே காத்திருந்தாள் மூத்த கிழவி.
ராணியாகக் கூட்டி வந்தவன் பத்து நாட்களுக்கு ராணியாகத்தான் நடத்தினான். வயிற்றில் இருப்பதை நிச்சயமெனத் தெரிந்தவள் அதைக் கூறியபோது வாய்விட்டுச் சிரித்தவன், “வேணுமுன்னா வச்சுக்கோ, இல்லன்னா கிழிச்சுப் போடுட்டீ” என்று மிகவும் எளிதாகச் சொன்னான். உறுத்தலாகத் தெரிந்ததெல்லாம் உண்மையென அறிந்தவள் அங்கிருந்து எப்படித் தப்பவென்று யோசித்துக் கிடந்தாள். ராணி தொழுவத்தில் அடைந்து கிடக்க, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழுவத்தில் புகுந்தான் கொச்சங்காடன். மாவிசக்கியிடம் வந்த போதெல்லாம் அவளை விருப்பமின்றி சேர்ந்தான். மீறினால் கட்டிப்போட்டு உடலை வதைத்தான். தனக்கும் கருவுக்கும் தேவையான கஞ்சியின்றி மெலிந்து தள்ளிய வயிற்றுடன் வாடிக்கிடந்தாள் மாவிசக்கி. ஒவ்வொரு தொழுவத்திலிருந்தும் வந்த ஓலங்களுக்கிடையில் வெட்டிசக்கியம்மையை மனதில் இருத்தி வேண்டி அவளுக்கான நேரத்திற்காகக் காத்திருந்தாள்.
சித்திரைக் கடைசிச் செவ்வாய். நிறைமாத வயிற்றோடு அம்மையை நினைத்துக் கிடந்தாள் மாவிசக்கி. உளறிக்கொண்டே தொழுவத்திற்குள் வந்தவன் அவளது தலைமுடியைப் பிடித்திழுத்துத் தள்ளினான்.
“அன்னைக்கு கையப் பிடிச்சி இழுத்ததுக்கு என்னடீ செஞ்ச, கண்டாரோளி? காறித் துப்புகியாக்கும். இரிட்டீ இன்னா வாரேன். ஒனக்கு நம்ம யாருன்னு காட்டணும்லா?”
ஊர்க்காட்டில் தன்னை மறித்துக் கைபிடித்து இழுத்தபோது அவன் முகத்தில் காறித் துப்பி, “உயிரோட ஊரு போகணும்னா ஓடிப்போயிரு நாயே, எனக்க அப்பம்மாருக்குத் தெரிஞ்சா கொள்ளிக்குத் தேற மாட்ட, பாத்துக்கோ,” என்று சொன்னது மாவிசக்கியின் நினைவுக்கு வந்தது. ‘அடச்சண்டாளா, இத்தன நாளும் அத மனசுல வச்சிட்டு எனக்க மனசக் கெடுத்துட்டியே? பாவி மனுசா, நீ நெசமாத்தான் பாசம் வச்சிருக்கேன்னு நம்பில்லா ஒங்கூட ஓடிவந்தேன். இப்பிடி என்ன நாசமாக்கிட்டியே, நீ நாசாமாப் போவ. எனக்க வெட்டிசக்கி ஒன்னச் சும்மா விடமாட்டா பாத்துக்கோ’
சென்றவன், இடுப்பைச் சுற்றிலும் செஞ்சிவப்பு நிறத்தில் இறுகிப் போயிருந்த கொச்சங்கயிற்றைச் சுற்றிவந்து நின்றான். அதை அவிழ்த்து அவளருகே நெருங்கி, “எச்சித் துப்புன நாய, வா, வா. ஒனக்க பிள்ளைக்கும் சேத்துத் தாரம்ட்டீ.. வா..” என்றான். பாதி போதம் கூட இல்லை. மேலே விழுந்து விடாமல் தன் வயிற்றைப் பொத்தியபடி அங்குமிங்கும் அசைந்தாள் மாவிசக்கி. அவள் முகத்தில் ஓங்கி அறைந்தவன், தன் ஒரு காலால் அவளது கழுத்தை மிதித்தபடி அந்தக் கொச்சங்கயிற்றால் அவளது கைகளைக் கட்டினான். கீழிறங்கி அவளது வலக்காலைப் பிடித்து ஒருபக்கத் தொழுவக் கம்பில் கட்டினான். இடக்காலை மறுபுறம் விரித்திழுத்து மற்றொரு கம்பில் கட்டினான். மாவிசக்கி அரை மயக்கத்தில் அம்மையின் பெயரை முனகிக் கொண்டிருந்தாள்.
வெளியே சென்றவன் இன்னும் குடித்துத் தள்ளாடிக்கொண்டு திரும்பி வந்தான். தன் கையிலிருந்த சாராயத்தை மாவிசக்கியின் மீது காறித் துப்பியபடி ஊற்றினான். வசைச் சொற்களைக் கத்தியபடித் தன் ஆடைகளைக் களைந்தவன் தன் மணிக்கட்டில் சுற்றி வைத்திருந்த கொச்சங்கயிற்றை அவிழ்த்தான். அவளைப் பார்த்து வெறிகொண்டு கத்தியபடி அந்தக் கொச்சங்கயிற்றால் தன் ஆண்குறி முழுவதையும் சுற்றிக் கட்டினான்.
*
“மக்ளே, அம்மா கூடவே இரி, வெளிய போப்படாது என்னா? ராப்பூச முடிஞ்சி நானே வாரேன், செரியா?” என்று சொல்லிவிட்டு புதுக்கோயிலை நோக்கிச் சென்றார் அப்பா.
நேரம் நள்ளிரவு. ஆதிக்கோயிலைச் சூழ்ந்திருந்த பெண்கள் அனைவரும் தங்கள் சேலைகளால் தலையோடு சேர்த்து வாய் மூடி அமர்ந்திருந்தனர். குழந்தைகள் பயத்தோடும் ஆர்வத்தோடும் அம்மாக்களின் முகங்களையும் ஆலமரத்து மூட்டையும் பார்த்தவண்ணம் இருந்தனர். தொண்ணூறைக் கடந்த குடி மூத்தோரான பூசாரியைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தனர் அவரது புதல்வர்கள் இருவரும். மூவரும் சிவப்புத் துணியால் வாய்மூடிக் கட்டி ஆதிக்கோயில் கருவறை வாசலில் நின்றனர்.
வில்லுப்பாட்டு உச்சத்தை அடைய கூட்டத்தில் ஆங்காங்கே அலறல் சத்தமும் ஊளையும். இளம் பூசகர் இருவரும் கைகட்டி வெளிநிற்க மூத்தோர் கருவறை நடையில் விழுந்து தரையோடு நெஞ்சுதொட்டு வணங்கிக் கண்ணீர் கொப்பளிக்க எழுந்து உள்ளே சென்றார். உள்ளிருந்து நடைவாசல் பூட்டப்பட்டது. கூட்டத்தில் மெல்லிய சலசலப்பு எழுந்தது. பெண்கள் பலரும் கண்ணீர் பெருக, ‘எனக்க அம்மா, தாயே.. வெட்டிசக்கியம்மா..’ என்று கதறினர். குன்றென நின்ற மலர்க்குவியலின் முன்பாக ஒரு மரப்பீடத்தில் உட்கார்ந்திருந்தாள் மாவிசக்கி அக்கா. அருகே அவளது தொடை மீது கைவைத்துக் கண்மூடி இருந்தாள் தெய்வகன்னி.
மணி பன்னிரண்டை நெருங்க, கூட்டத்தை விலக்கிக்கொண்டு மேளக்காரர்கள் உள்ளே நுழைந்து மெதுவாக அம்மன் விளி வாசிக்க ஆரம்பித்தனர். மேளச் சத்தமும் கூட்டத்தின் அழுகைக் கூக்குரல்களும் சேர்ந்து மொத்த ஆலமரக் கூட்டமும் ஆடிக்கொண்டிருந்தது. புதுக்கோயிலின் வாசல் திறக்கப்பட்டு அங்கிருந்து ஆலமரத்து ஆதிக்கோயில் நடை வரை மக்கள் கூட்டத்தின் நடுவே ஒற்றையடிப் பாதை போல வழி உருவாக்கப்பட்டது. அப்பாதையின் கரையில் உட்கார ஒருவர்மீது ஒருவர் ஏறி விழுந்து அடித்துக் கொண்டனர். மேளச்சத்தம் மெல்ல மெல்ல உச்சத்தை நெருங்க, நாதஸ்வரத்தின் ஒலி ஆலமர விழுதுகளைக் கட்டிக் கோர்த்து ஊஞ்சலாட்டியது. வெளியிருந்த பூசகர் இருவரும் கீழ்விழுந்து வணங்கிப் பின்னகர்ந்து மலர்க்குன்றின் முன்னிருந்த மாவிசக்கி அக்காவின் அருகே வந்து வணங்கி நின்றனர். மெல்லிய புன்னகை வடிய தெய்வகன்னியை எழுந்திருக்கச் செய்து எழுந்து, அம்மலர்க் குன்றிலிருந்து ஒரு கையளவு பூக்களை எடுத்துத் தன் நெஞ்சோடு சேர்த்து அழுத்திப் பிடித்தாள் மாவிசக்கி அக்கா. அவள் பார்வை ஆதிக்கோயில் கருவறையைத் துளைத்து உள்ளே சென்றது. கண்கள் அகல புன்னகை விரிய வாய்விட்டுச் சிரித்தபடி முன்னகர்ந்தாள். மக்கள் கூட்டமெங்கும் குலவையொலி. கருவறை நடையின் முன் நின்று வணங்கி தன் கையசைத்து வாவென அழைத்தாள் மாவிசக்கி அக்கா.
சட்டெனக் கருவறைக் கதவு திறக்கவும், உள்ளிருந்து வெளிவந்த மூத்தோர் சிவப்புத் துணியொன்றால் மூடிமறைத்துத் தன் நெஞ்சோடு சேர்த்து வைத்த ஓர் உருவப் பிண்டத்தைத் தொட்டு வணங்கித் தன் கையிலிருந்த பூக்களைத் தூவினாள் அக்கா. மக்கள் எல்லோரும் தலையிலும் முகத்திலும் மார்பிலும் அடித்துக்கொண்டு கதறினர். இளம் பூசகர் இருவரும் மூத்தோரைக் கைத்தாங்கலாத் தூக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தனர். மக்கள் குலவையொலி எழுப்பி ‘அம்மா, அம்மா’வெனக் கத்திக் கொண்டிருந்தனர். ஓடிய மூவரும் புதுக்கோவில் கருவறைக்குள் சென்று சிவப்புத்துணிப் பிண்டத்தை வைத்து தீபாராதனை காட்டிவிட்டுப் பின் மீண்டும் அதை எடுத்துக்கொண்டு நெஞ்சோடு சேர்த்துப் பிடித்து ஓடி வந்தனர். அவர்கள் கடந்து வந்த பாதை மணலை எடுத்துத் தங்கள் நெற்றியிலும் முகத்திலும் மார்பிலுமாகப் பூசினர் மக்கள். ஓடிவந்த மூத்தோர் நேராக ஆதிக்கோவில் கருவறைக்குள் சென்று அம்மையை வீடு சேர்த்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வெளியே வந்தார். மேளமும் நாதமும் மக்களின் ஓலமும் எல்லாம் உச்சம் தொட்டு விழ, அப்படியே மயங்கிச் சரிந்தார் மூத்தோர். செம்புக் குடத்து நீரை அவர்மீது விட்டு எழுப்பி அழைத்துச் சென்றனர் இளம் பூசகர். தெய்வகன்னியின் கையைப் பிடித்து மெல்ல நடக்க ஆரம்பித்தாள் மாவிசக்கி அக்கா.
*
தப்பிப் பிழைத்துப் பிறந்த தெய்வகன்னி அம்மையை கைவிட்டாகலாது வளர்ந்து காலெடுத்து வைத்து நடந்தாள். தொழுவத்து வாசமும் அம்மையின் நெஞ்சுப்பால் வாசமும் தவிர உலகென்றேதும் அறியாது வளர்ந்த அவளுக்கு வெட்டிசக்கியம்மையின் கதைசொல்லித் தூங்கவைப்பாள் மாவிசக்கி. உள்ளுக்குள் உறைந்திருந்த வன்மம் பெரும் அனல் கொண்டெழுந்து இரைகொள்ளும் நாளுக்காகக் காத்திருந்தாள். கொச்சங்காடன் தொழுவங்கள் பெருக மாட்டிறைச்சி வீச்சத்தில் பணமும் பொருளும் திரண்டு வர குதிரை மீது ராஜாவாக வலம் வந்தான்.
நாற்பத்தோரு நாட்களில் சித்திரைக் கடைசிச் செவ்வாய். ஆதிக்கோவிலிலிருந்து பிடி மண்ணும் சிவப்புக்கயிறும் ஒளித்து வரவைத்துக் காப்புக்கட்டி, இருமுறை குளித்து இருமுறை உண்டு, நாளெல்லாம் வெட்டிசக்கியை நினைத்து விரதமிருந்தாள் மாவிசக்கி. தொழுவம் தொட்டு தொழுவமாக ஒவ்வொரு பெண்ணையும் வெட்டிசக்கிக் கோயில் கொடைக்குச் செல்ல மனம் மாற்றினாள். தன் மொத்தக் குடியும் வெட்டிசக்கிக்கு விரதமிருப்பதை அறியாமலேயே போதையேறிக் கிடந்தான் கொச்சங்காடன். தன் குடிலில் மூடியிருந்த குழியை அவ்வப்போது திறந்து எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொண்டாள் மாவிசக்கி.
சித்திரைச் செவ்வாய். சுற்றியுள்ள எல்லா ஊர்சனமும் திரண்டுவந்து ஆதிக்கோயிலைச் சுற்றி அலையடித்து நின்றது. கொச்சங்காடனின் பெண்களும் பிள்ளைகளும் அத்தனையும் ஒளிந்து வண்டிகட்டி அம்மையைத் தேடி வந்தனர். குன்றென நின்ற மலர்க் குவியலின் முன் மரப்பீடத்தில் உட்கார்ந்து தன் மகளின் வருகைக்காக வேண்டியழுதாள் மாவிசக்கியைப் பெற்றவள். ஆலமரத்து மூத்த கிழவி பேத்தியின் முகத்தைப் பார்த்துவிட்டுச் செல்ல காத்துக் கிடந்தாள். கொச்சங்காடனும் கூட்டுக்காரர்களும் போதையின் உச்சத்தில் தொழுவத்து வாசல்களில் விழுந்து கிடந்தனர். நள்ளிரவு. தொழுவத்து உள்ளிருந்த குழியைத் தோண்டி மறைத்து வைத்தவற்றை வெளியே எடுத்துப் போட்டாள் மாவிசக்கி. தெய்வகன்னியைச் சேலையோடு சுற்றித் தன் மார்போடு சேர்த்துக் கட்டினாள். தொழுவத்து வாசலில் முனகிக் கிடந்த கொச்சங்காடனின் காதருகே குனிந்து, “நாலு வீட்டுக்கார ராணி வந்துருக்கேண்டா, வெட்டியம்மைக்க மவ வந்திருக்கேன். எந்திரி,” என்றாள்.
கொச்சங்காடன் அசைவற்று மல்லாந்து கிடந்தான். அவன் தலைமுடியைப் பற்றியிழுத்து தரையோடு இழுத்துக்கொண்டு உள்ளே வந்தாள் மாவிசக்கி. தன் இடுப்பைச் சுற்றியிருந்த செஞ்சிவப்புக் கொச்சங்கயிற்றை அவிழ்த்தாள். போதமற்றுக் கிடந்த கொச்சங்காடன் மீது அருகிருந்த குடத்துத் தண்ணீரை ஊற்றிக் கொட்டினாள். அவன் ஆடையைக் கிழித்தெறிந்தாள். மெல்ல அசைந்து ஏதோ முனகிக் கிடந்தான் கொச்சங்காடன். அவனருகே வெட்டிசக்கியம்மையை நினைத்துக் கண்மூடி நின்றாள் மாவிசக்கி.
ஆதிக்கோயிலில் மக்கள் கூட்டம் ஓலமிட்டு அழ, மாவிசக்கியைப் பெற்றவள் கருவறை நோக்கி நடந்தாள். வெட்டிசக்கியை வெளியே வரவழைக்கும் நேரம் வந்தது. தொழுவத்து இருளில் அகலக்கண் திறந்து கொச்சங்காடனைப் பார்த்த மாவிசக்கி அவன் கண் திறந்ததைக் கவனித்தாள். பயந்து நடுங்கிய கண்கள். “தள்ளையோளி, அவனுக்க….” என்றபடிப் பாய்ந்து தன் இடக்காலால் அவனது கழுத்தில் மிதித்தேறி நின்றாள். கொச்சங்கயிற்றைக் கொண்டு அவனது கைகளை உடலோடு சேர்த்துக் கட்டினாள். தெய்வகன்னி விழித்து, ‘அம்மா, அம்மா’ என்றழ, “ஒன்னுமில்ல ராசாத்தி, அம்ம இருக்கேன். ஒறங்கு, ஒறங்கு, வாவோ, வாவாவோ..” என்று தாலாட்டு பாடியபடி தன் இடமுலையைத் திறந்து கொடுத்தாள். மெல்லக் கீழிறங்கி கொச்சங்காடனின் கால்களை சேர்த்துக் கட்டினாள். முனகிக் கொண்டிருந்தவன் இப்போது திமிறிக் கொண்டிருந்தான்.
“யாருல கண்டாரோளி? இன்னா வாரம்ல..” என்று சொல்லி அவனது மாடு வெட்டும் கூரையை நோக்கி ஓடினாள் மாவிசக்கி.
சுருட்டி வைத்த சாக்கைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தவள், “தள்ளையோளி, கண்டாரோளி….” என்று கத்திக்கொண்டே உள்ளிருந்து கூரான கத்தியொன்றை உருவினாள். கொச்சங்காடனின் கண்கள் மிரள, தொண்டையிலிருந்து காற்றும் குரலுமாகக் கிரீச்சிட அங்குமிங்கும் உருண்டான். அவனைத் தன் காலால் உந்தித் தள்ளி மல்லாக்கக் கிடத்தினாள்.
“எனக்கம்மோ, எம்மோ, தண்ணி, தண்ணி,” என முனகினான் கொச்சங்காடன்.
மெல்ல நிதானமாக அவனது மேலாக இருபுறமும் தன் கால்களை விரித்து நின்றாள் மாவிசக்கி.
“தண்ணி வேணுமா தண்ணி? ஒனக்கான கடைசித் தண்ணியக் குடில பொட்டப்பயல… பொட்டப்பயல..” என்றவள் ஏதோ யோசித்தவளாய் கத்தியைத் தன் வாயில் கடித்தபடி, தன் மணிக்கட்டில் சுற்றி வைத்திருந்த மற்றொரு கொச்சங்கயிற்றை உருவினாள். உயிரை வெளித்தள்ள விடைத்துக் கொண்டு நின்ற அவனது ஆண்குறியை முழுதாக அக்கொச்சங்கயிற்றால் இறுக்கிக் கட்டினாள். பலம்கொண்டு இழுத்தாள். அவனுள்ளிருந்த மொத்த சத்தமும் தெறித்து சிதைந்து வெளிவந்து ஓயும்வரை இழுத்துக் கொண்டேயிருந்தாள்.
அசைவற்றுக் கிடந்த கொச்சங்காடனின் முகத்தைச் சற்றுநேரம் கூர்ந்து பார்த்தபடி நின்றாள் மாவிசக்கி. அப்படியே அவன் நெஞ்சில் உட்கார்ந்து தலைமுடியைப் பிடித்துத் தூக்கி இழுத்துத் தன்னோடு சேர்த்துக்கொண்டு வாயிலிருந்த கத்தியை எடுத்தாள். மூர்க்கமாக ஓலமிட்டபடி இடம் வலமாக ஆடிக்கொண்டே இருந்தாள்.
*
மீண்டுமொரு சித்திரைக் கொடை விழா முடிந்திருந்தது. அந்த ஞாயிற்றுக் கிழமையும் முதலாக எழுந்தோடி மாவிசக்கி அக்காக் கடையின் வேப்பமூட்டில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தேன் நான். அக்காவிடம் ஒருமுறையாவது பேசிவிட வேண்டும். தெய்வகன்னியிடமாவது…
சுஷில் குமார் – 35-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ள நிலையில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு மூங்கில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பாக “சப்தாவர்ணம்” நூலும் அண்மையில் வெளியானது.
இதுதவிர அவ்வப்போது மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். தன்னறம் வழியாக இவரது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் நூல் “தெருக்களே பள்ளிக்கூடம்”…
மின்னஞ்சல்: sushilkumarbharathi2020@gmail.com