Saturday, November 16, 2024

சிராய்ப்பு

அகராதி

முதல் நாப்கின் அத்தையிடமிருந்துதான் வந்தது. அப்போது ஹோலி கிராஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டு சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்து 26-BHEL பஸ் பிடிக்கும் வரையில் ஒன்றும் இல்லை. பேருந்தில் ஏறி உட்கார்ந்த பிறகுதான் ஒரு மாதிரியாக இருந்தது. வீட்டிற்கு வரும்வரை தாக்குப் பிடித்ததே பெரிது. உடன் வந்த மாதேஷ் தவிர யாரிடமும் சொல்லவில்லை. இயல்பாக இருக்க முடியவில்லை சங்கடமாயிருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் ஓடிப்போய் ரத்னா அத்தையிடம்தான் நின்றேன். அன்று இரண்டு பெரும் சேர்ந்து விடியவிடிய அத்தை பழைய புத்தகக் கடையில் இருந்து வாங்கி வந்திருந்த லயன் காமிக்ஸின் எதிரிக்கு எதிரி புத்தகத்தைப் பற்றிக் கதை பேசினோம். நான் அந்தச் சங்கடத்தை மறந்திருந்தேன்.

விடிந்து மஞ்சள்நிற ஸ்கர்ட்டில் திட்டுத்திட்டாகப் படர்ந்திருந்தக் கறையைப் பார்த்துப் பதறி அம்மா விவரம் கேட்டுவிட்டுத் திட்டினாள். உடனே ஏன் சொல்லவில்லையென, சத்தம் கேட்டு வந்த அத்தைதான் “இதில் என்ன இருக்கு? இட்ஸ் நேச்சர்” என்று சொல்லி என் முதுகை மென்மையாகத் தட்டிக்கொடுத்து நகர்ந்து விட்டாள். என்ன நினைத்தாளோ அம்மாகூட ஏதும் பேசவில்லை.

“இதோடயே திருச்சி முழுசும் சுத்திருவா போல” என்று முணுமுணுத்ததோடு சரி.

அத்தை அப்படித்தான். எல்லோரும் பெரிய மலை, பெரிய விஷயம் என்று சொல்வதை ஒன்றுமேயில்லை என்று தட்டிவிட்டுச் செல்வாள். அத்தை என்று சொல்கிறேனே தவிர அவளுக்கும் எனக்கும் மூன்று வயதுதான் வித்தியாசம். அவள் என் அப்பாவின் சித்தப்பா பையனின் தங்கை. எனக்கு அத்தை முறை. அது என்னவோ சிறிய வயதிலிருந்தே எங்கள் சித்தப்பா வீட்டைவிட எங்களுடன்தான் நெருக்கம் அதிகம், பக்கத்து பக்கத்து வீடு வேறு.

நான் கல்லூரிக்கும் அவள் மேற்படிப்பிற்கும் போக ஆரம்பித்தோம். அடிக்கடி புடவை உடுத்திச் சென்றாள். போடும் பிளவுஸ் அத்தனைப் பாங்காய் பொருந்திப் போகும் அவளுக்கு. சில வித்தியாசமான டிஸைன்களில் தைக்கச் சொல்லி அணிந்து கொள்வாள். அம்மா போடுவதிலெல்லாம் முதுகுப்பக்கம் சுருக்கம் தெரியும். அத்தை போடும் ‘V’ நெக் பிளவுஸில் சுருக்கமே இருக்காது. இத்தனைக்கும் டைட்டாகவெல்லாம் போடமாட்டாள். சிலர் போடுவது பார்த்தால் தசை பிதுங்கித் தெரியும். நமக்கு பார்க்கையிலேயே மூச்சு முட்டும். இவள் போடுவது பார்த்து புடவையே பிடிக்காத என் தோழிகள் கூட புடவை அணியும் ஆசைக்கு ஆளாகி இருந்தனர்.

டைலர் கடைக்கு அவளுடன் நானும் சென்றிருக்கிறேன். கறாராகப் பேச மாட்டாள். இந்த மாதிரி தைங்க, இந்த தேதிக்கு கொடுங்க இல்லையா, இவ்வளவு நாளுக்குள் கொடுங்க அவ்வளவுதான். தையற்கடையில் நின்று குறித்த தேதி தாண்டியும் தரவில்லை என்று கூச்சல் போடும் பெண்களைக் கண்டிருக்கிறேன். இவள் முகம் ஒரு தனிக்கவர்ச்சி கொண்டது. அதனால்தானோ என்னவோ டைலர் தானாகவே கச்சிதமாகத் தைத்துக் கொடுத்து விடுவார். அத்தை சுவாரசியம் மிக்கவளாகவே எப்போதுமிருந்தாள். எந்த ஒரு செய்திக்கும் அவள் என்ன ரியாக்ட் செய்வாள் என்று ஆர்வமாகவே இருக்கும். ஒருமுறை பங்காளிகளுக்குள் பெரிய சண்டை நடந்தது. சித்தப்பாவும் பெரியப்பாவும் ஒரேவீட்டுப் பெண்களைத் திருமணம் செய்தவர்கள். இதில் சித்தப்பா லவ் மேரேஜ். இரண்டு குடும்பமும் அவ்வளவு ஒற்றுமையாக விருந்து, கேளிக்கை என்று கும்மாளமாக இருக்கும். அவர்களைப் பார்த்து நானும் இப்படிக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்ததுண்டு.

சித்தப்பா வீட்டு கிரகப்பிரதேசத்தில் மொய் கணக்கு, மரியாதை என்று ஆரம்பித்த சச்சரவு பெரிதாகிக் கொண்டே போனது. சினிமாவிற்குப் போகையில் வாங்கிக் கொடுத்த ஜிகர்தண்டா முதற்கொண்டு பேசி சண்டை வலுத்தது. சித்தப்பா அவர் வீட்டில் எல்லோருக்கும் ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தார் இனி யாரும் அவர்களுடன் பழகக் கூடாதென்று. இருவீடுகளுக்கும் மாறிமாறி போய் குலவிக் கொண்டிருக்கும் டாமியைக்கூட கட்டிப்போட்டு விட்டார். ரத்னா அத்தை மட்டும் அலட்டிக் கொள்ளவில்லை. தெருவில் நடக்கையில் இரண்டு வீட்டுக்காரர்களில் யார் எதிர்பட்டாலும் எப்போதும் போல் பேசினாள், சிரித்தாள். அரண்டுபோய் இதுபற்றி பேசிய என்னிடம் ‘இதுபற்றி நீ அதிகம் யோசிக்காதே, எல்லாம் சரியாகி விடும் எப்போதும் போல் எல்லோரிடமும் பேசு’ என்றாள். செத்தாலும் முகத்தில் முழிக்காதே என்று புருவங்கள் நெறிக்கப் பேசிய பெரியப்பாவின் முகம் கண்களருகில் பெரிதாக விரிந்தது. பயத்தில் அவள் சொன்னது போல் இருக்க முடியவில்லை. எதிரில் கண்டால் ஒன்றிரண்டு வார்த்தைகளோடு நிறுத்திக் கொண்டேன். அத்தை சொன்னதுதான் நிஜம்.

மெதுவாக இருவீட்டுப் பெண்களும் பிள்ளைகளுக்குப் ‘பிடிக்குமேனு எடுத்து வந்தேன்’ என்று பொரியல், ரசம், குழம்பு என்று கொடுத்துக கொள்ள ஆரம்பித்து, பின்னர் வழமை போல் நெருக்கமாகிக் கொண்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சமாதானப்படுத்த முயன்ற எங்கள் வீட்டைப் பார்த்து கண்பட்டு விட்டதாகப் பேசி திருஷ்டி சுற்றிக் கொண்டதுதான்.

பின்வீட்டில் புகைந்து கொண்டிருந்த கணவன் மனைவி பிரச்சினை ஒருநாள் பொது ஆட்கள் முன் பஞ்சாயத்து வரை சென்றது. திருமணமாகி பத்து வருடங்களுக்கு மேல் கடந்து விட்டிருந்தது. பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனாலும் டிவோர்ஸ் என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர். பஞ்சாயத்திற்கு வந்த ஆட்கள் கூட இருவரின் வார்த்தைகளை வைத்து அதுதான் சரி என்னும் முடிவிற்கு வந்து விட்டிருந்தனர். அந்த அளவிற்கு இருவரும் தெளிவாக உறுதியாக நின்றனர். ஆனால் ரத்னா அத்தையோ காதோடு சொன்னாள் ‘எழுதி வச்சிக்கோ.. விவாகரத்து ஆகாது’ பூட்டியிருந்த வீடு ஒருமாதம் கழித்து திறந்தது. அத்தை கூறியது நடந்தது. இதற்காவது பதில் சொல்லு என்று கட்டாயப்படுத்தியதில் காரணம் ‘பணம்’ என்றாள். பல நாட்கள் அவள் கூறியதை அசைபோட்டு ஒவ்வொரு குறிப்பாக முன்வைத்து யோசித்தப் பிறகுதான் புரிந்தது. அவள் கூறியது சரி.

இப்போதும் நாம் பெரியதாக நினைத்து அலட்டிக் கொண்டிருக்கும் விஷயத்தை எல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிட்டு புக்கிற்குள் ஆழ்ந்து விடுகிறாள். அவளிடம் இருந்ததுதான் எனக்கு இந்த காமிக்ஸ் படிக்கும் பழக்கம் வந்தது. ஆனாலும் அவள் அளவிற்கு இல்லை. எனக்கு காமிக்ஸ் புத்தகத்திற்குள் வரும் ஹீரோ, ஹீரோயின்ஸ் எல்லாம் மிகைப்படுத்திய வடிவங்களோடும் சிறிய அளவிலான உடைகளோடும். க்ளிவேஜும் தொடையும் தெரிந்தவண்ணமாக வருவது கிளர்ச்சியைக் கொடுக்கும். கதை இரண்டாம் பட்சம்தான். பக்கம் விடாமல் புரட்டிப் புரட்டிப் பார்த்துவிட்டு வைத்து விடுவேன். எப்போதாவது வாசிப்பேன்.

ரத்னா அத்தை அந்தக் கதைகளை எல்லாம் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது வரிவிடாமல் சொல்வாள். அவள் கதை சொல்லும்போது யாரும் தடை செய்யக் கூடாது. புருவங்கள் எல்லாம் ஏறி ஏறி இறங்கும், நெளியும், சட்டென நேர்க்கோடாக நிற்கும். குரல் மட்டும் மெதுவாக ஒலிக்கும். கண்கள் காட்சிக்கேற்ப மாறும். அவள் ரூமில் இங்கிலீஷ் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் ரேக் ரேக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒருநாள் பொழுது போகாமல் புதியதாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வரிசையைத் துழாவிக் கொண்டிருந்தபோது புத்தகங்களுக்கு நடுவில் சிவப்பு நிற பென் டிரைவ் ஒன்று இருந்தது. அதை நான் எடுத்ததைப் பார்த்து ‘உஷ்…..’ என்று மெல்லிய குரல் கொடுத்து ஜாக்கிரதையாக வாங்கிக் கொண்டாள். நான் எதுவும் பேசாமல் நின்றேன். முகத்தைப் படித்தவள் “சரி… சரி.. வா” எனக் கதவைச் சாத்திவிட்டு வந்து லேப்டாப்பில் செருகிப் போட்டுக் காட்டினாள். அதில் அவள் லவ்வர் முதல் நாளில் கொடுத்த கிப்ஃடிலிருந்து இன்றுவரை வந்த மெசேஜ் வரை டாக்குமெண்டாகச் சேர்த்து வைக்கப்பட்டிருந்தது.

ரத்னா அத்தையின் காதல் எனக்குத் தெரியும். இருவரும் அளித்துக் கொள்ளும் கிஃப்ட்ஸ், தியேட்டர், பிக்னிக் போன்ற அத்தனையும் சொல்லி விடுவாள். கல்லூரி விட்டு வந்ததும் எனக்கும் அவளுக்கும் இதுதான் வேலை. அவ்வளவு அழகு அவளின் காதல்.

அதற்குப் பிறகு இன்னும் நெருக்கமானோம். பிரதீப் அதுதான் அத்தையின் ஆள். அப்படித்தான் நான் சொல்வது வழக்கம். பலமுறை இருவரும் போனில் பேசிக் கொள்கையிலும் மெஸேஜ் செய்து கொள்ளும் போதும் கூடவே இருந்திருக்கிறேன்.

“அத்தை உன் ஆள் இன்னைக்கு என்ன கொடுத்தார் கிஸ்ஸா, கிஃப்டா?” என்று வம்பிழுப்பேன். வேண்டுமென்றே சண்டை போட்டுவிட்டு வந்து இப்பப்பாரு கால் வந்துட்டே இருக்கும் நான்ஸ்டாப்பாக என்பாள்.

”இது விளையாட்டுச் சண்டையா? அப்போ உனக்கு அவர்மேல் கோபமே வராதா?” என்றால் சிரிப்பாள்.

என் தோழிகள் எல்லாம் அவரவர் ஆள் வாங்கிக் கொடுத்த ரோஸ், சாக்லேட் பேப்பர் எல்லாம் காய்ந்து சருகானாலும் பாதுகாத்து வைத்திருப்பார்கள். பார்த்திருக்கிறேன். ஆனால் ரத்னா அத்தை அது எதையும் செய்ய மாட்டாள். சாக்லேட்ஸும் ரோஸும் கிடைத்துக் கொண்டேயிருந்தாலும் ஒருநாளும் அதுபோல செய்ய நினைக்கவே மாட்டாள். ப்ரதீப்பிற்கு அடிக்கடி கால் செய்து தொணதொணவென்று பேசி தொல்லையெல்லாம் கொடுக்க மாட்டாள். பொழுதிற்கும் மெஸேஜ் கால்ஸ் என்று இல்லாமல் அவரே தேடித்தேடிப் பேசும் வகையிலும் பழக்கப்படுத்தியிருந்தாள். ஆர்வம் அளிப்பவளாகவும் இருந்தாள்.

டெலிபதி உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ரத்னா அத்தை விஷயத்தில் அப்படி அப்படியே நடந்திருக்கிறது நூற்றுக்கு தொண்ணூறு உண்மை. ஒருமுறை ப்ரதீப் ஏதோ அப்செட்டில் இருக்கிறார் என்று இவளே நினைத்துக் கொண்டு கண்கலங்கினாள். அவர் அவுட் ஆஃப் ஸ்டேஷன். இரவு பேசுகையில் இவள் கண்கலங்கிய அதே நேரத்தில் அவர் வொர்க் ப்ரஷரில் கதிகலங்க நின்றிருக்கிறார். காலை எழுந்தவுடன் முதல் வேலையாக ஊரிலிருந்து வந்திருந்த அவரை நேரில் சந்தித்துவிட்டு வந்தாள். இது போன்று நிறைய சொல்லலாம். ஃபோனில் அவர் போட்டோக்கு முத்தம் கொடுத்தாலே அவர் ‘உன் முத்த ஞாபகம் உன்மத்தம் ஆகுதடி’ என்று ஏதாவது அனுப்பி விடுவார். ஒருநாள் தூக்கத்தில் இருந்து எழுந்து நினைத்துக் கொண்டு தவித்ததை போன் செய்து அவரிடம் நேரப் பிரகாரம் சொன்னாள். “சரி உன் மெசேஜ் பாக்ஸை ஓப்பன் செய்து பார்” என்று சொல்லிவிட்டு வைத்து விட்டார். எடுத்துப் பார்த்தால் அதே நேரத்தில் அவர் மெஸேஜ் செய்திருந்தார்!!

இருவரும் நேரகாலம் பார்த்துதான் பேசுவார்கள். அவர் அவரது நண்பர்களுடன் சுற்ற, அலுவலைப் பார்க்க எல்லாவற்றுக்கும் நேரம் இருக்கும். ஸ்பேஸ் இருக்கும். அதுவே அவர்களை இன்னும், இன்னும் நெருக்கமாக்கியது என்று நினைக்கிறேன். அவளே சொல்வாள், “என் எல்லா சண்டைக்கும், ஏன்.. விளையாட்டா போடற சண்டைக்கும் காரணம் எப்பவும் அவனுக்குள்ள முத இடத்துல கடைசி ப்ரியமா நான் இருக்கணும். எனக்கு அவன் அப்படித்தான். அவன் இத புரிஞ்சிக்கிட்டான். அதனால்தான் சண்டை போட்டாலும் கோபிக்கவே மாட்டேங்கிறான்.”

கல்யாணமாகி வேறு ஏதேனும் காரணமாகச் சண்டை வந்தால் என்ன செய்வாள் என்று ‘வேறு ஏதேனும்’ என்பதை அழுத்தம் கொடுத்து இழுத்துக் கேட்டதற்கு ஆச்சரியப்படுத்தினாள். அவன் வேறு யாரிடம் வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக் கொள்ளட்டும் அந்த யாரோவுடைய முகமும் உடலும் நானாகவே இருப்பேன். நான் அதற்கென சண்டையிட மாட்டேன் என்றாள். நான் ஆணாக இருந்து ப்ரதீப் பெண்ணாக இருந்தாலும் இதுவேதான் என்றாள். எல்லாக் காதலர்களும் இப்படியே இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

நான் ஆணாகப் பிறந்திருந்தால் ரத்னா அத்தை எத்தனைப் பெரியவளாக இருந்திருந்தாலும் அவளைத்தான் கட்டியிருப்பேன். ப்ரதீப் அதிர்ஷ்டம் மிக்கவர்.

மதியம் மொபைல் சார்ஜர் சரியாக வேலை செய்யவில்லை என்று சரிபார்க்க கடையில் கொடுக்கப் போனபோது ப்ரதீப்பின் ஃப்ரண்டை தற்செயலாகப் பார்த்துப் பேசியிருக்கிறாள். பைக் ஸ்டேண்டிடும் போது சமநிலையில்லாத தரையில் தடுமாறிக் கீழே விழுந்து ப்ரதீப் கையில் கொஞ்சம் பெரிய சிராய்ப்பு ஆகியிருக்கிறது. கையில் வலி இருக்கவும் இரண்டு நாட்கள் மட்டும் எல்போவில் கட்டுப் போட்டால் சரியாகும் என்று மருத்துவர் ஆலோசனைப்படி கட்டுப் போட்டிருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது.

உடனே வீடு திரும்பி என்னிடம் மட்டும் அவசரமாகச் செய்தியைப் சொல்லிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு அவரைப் பார்க்க ஓடினாள். முகத்தில் அத்தனை வருத்தம். பெருகிய கண்ணீரை மறைக்க முயற்சித்து கண் சிவந்திருந்தது. கைவிரல்கள் காற்றில் படபடக்கும் திறந்த புத்தகத்தின் தாளைப் போன்று படபடத்தன. எவ்வளவு அன்புமிக்கவள் இந்த அத்தை! காதலுக்கு அழகு என் ரத்னா அத்தை. ப்ரதீப் கொடுத்து வைத்தவர்.

அவரைப் போய் பார்த்து வந்த சாயங்காலத்திலிருந்து அவள் முகம் இறுகிப் போயிருந்தது. நேற்றுக்கூட இனிக்க இனிக்கப் பேசிக்கொண்டிருந்தோம் அவள் காதலைப் பற்றி, ஆனால் இன்று… ப்ரதீப் பற்றிப் பேசுகையில் செழித்து வளர்ந்த நெற்பயிர்கள் அசைவதைக் காண்பதைப் போல் ஒரு திருப்தியும் சந்தோஷமும் அவள் முகத்தைக் காண்கையில் வரும். அப்படிப்பட்ட முகம் இன்று கறுத்துப் போயிருந்தது. எதற்கும் பதில் கூறவில்லை. எங்கள் வீட்டிற்குப் போய் நீண்ட நேரம் கழித்து வந்தேன். அவளிடம் மாற்றம் இல்லை. சிரமம் கொடுக்கக் கூடாதென்று அருகிலேயே அமைதியாக இருந்தேன். இந்தப் பழக்கம் கூட அத்தை சொல்லிக் கொடுத்ததுதான். தொடர்ந்து அவளது கறுத்த முகத்தைக் காணச் சகியாமல் கூட்டிலிருந்து முதல் நாள் எட்டிப் பார்க்கும் குருவிக்குஞ்சைப் போல் மெலிதாக ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினேன்.

நீண்ட அமைதிக்குப் பிறகு வெடித்தது அவள் குரல்.

“நான் அப்போ செக்க்ஷூவல் பார்ட்னரா? ஸோல் மேட் இல்ல அப்படித்தானே? கேட்டா ரொம்ப வருத்தப்படுவேனு சொல்லலனு கூட பொய் சொல்லலாம். ஆனா, அது பொய்தானே? நல்லவேளை அப்படி ஒரு பொய்ய சொல்லல.. அதுவரைக்கும் சந்தோஷம்.”

என்ன நடந்தது, ஏன் இப்படிக் குமுறுகிறாள் ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொன்னேன். தண்ணீர் கொண்டு வந்து குடிக்கச் செய்தேன். நாளை பேசலாம் என்றேன். பரவாயில்லை என்று சொல்லிவிட்டு, நிதானமாக அவள் என்னிடம் கேட்டாள், “முந்தாநாள் நிலைப்படில இடிச்சிக்கிட்டப்ப, ரெண்டு வாரம் முன்னாடி கணுக்கால் சுளுக்கிக்கிட்டப்ப என்ன செஞ்சேன்?”

இவள் என்ன செய்தாள்.. பெரிதாக யோசித்து விட்டு, “இதுபோல நடக்கற எல்லா சமயமும் என்ன ஏதுன்னு தைலக் கையோட ப்ரதீப்பிடம் சொல்லிக்கிட்டு இருந்த.. இப்ப எதுக்கு இது?”

திட்டுவது போல் வேகமாகக் கூறினேன். அவள் முகம் மாறியது. கண்கள் சிவந்தன. எப்பொழுதும் நான் அப்படித்தான் இருந்திருக்கிறேன். போனவாரம் நன்றாக எடுத்து பாராட்டு வாங்கின செமினார் முதல் நமக்குத் திடீரென வரும் சிறுவலியும் வேதனையும் கூட நமக்குப் பிடித்தவர்களிடம் பகிர்வதற்கு மனது ஓடும். வலியில் அம்மாவென்று கத்திய அடுத்த நொடி மனது நாம் உயிராய்க் காதலிக்கும் ஜீவனைத் தேடும். வலியைத் தாங்கும் மனோபலம் கூடும். ஆனால் இரண்டு நாட்களாகக் கட்டுப்போட்டு ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருப்பவனுக்கு எப்படி என்னிடம் சொல்லத் தோன்றவில்லை. ஏன் உடனடியாகச் சொல்லவில்லை என்று கேட்டாள்.

எப்படி வலித்திருக்கும், விழுந்தவுடன் ஒரு நடுக்கம் வரும், எப்படிச் சமாளித்திருப்பான் என்று நூறு முறை நினைத்திருப்பேன் எனக் கலங்கினாள். அப்படியிருந்தும் போய் பார்த்து சீக்கிரம் சரியாக வேண்டுமென ஆறுதலும் நம்பிக்கையும் கொடுத்து வந்தது பாதிக்கப்பட்டவன் சரியாக வேண்டும் என்றுதான் மற்றபடி ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு, “அவ்வளவுதான் எல்லாம் இனி அவ்வளவுதான்” என்றாள்.

அவள் கூறியதன் அர்த்தம் தாமதமாகப் புரிந்து பழைய நிகழ்வுகள், போட்டோஸ் என்று எதெதுவோ சமாதானம் செய்தேன். ப்ரதீப் மேல் சீரியஸான கோபமே வராது என்று நினைத்தேன். சிறிய சிராய்ப்புதானே இதில் என்ன இருக்கிறது என்று சமாதானம் செய்தேன். நான் ரசித்த இந்தக் காதல் உதிர்ந்து போவதைக் காண முடியாதவளாகப் பிதற்றினேன். நேரம் நடுநிசியைத் தாண்டி இருந்தது. எனக்கே இப்படி என்றால் அவளுக்கு அதிகமாக வலிக்குமே என்று மனது அங்காலாய்த்தது. எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இந்தக் காதல் கருமம் என்னவெல்லாம் செய்கிறது. தொடர்ந்து பேசியப் பிறகு மெளனம் கலைந்து திடமாகக் கூறினாள்.

“இப்பவும் எனக்கு அவன்மேல கோபம் இல்ல. வருத்தம்தான். தீராத வருத்தம். இந்தச் சிராய்ப்பு இனி ஆறாது. மருந்து இல்ல இதுக்கு”

அன்றிலிருந்து பேச்சுக் குறைந்தது. பழைய அத்தையைப் பார்க்க முடியவில்லை. மெளனமும் வருத்தமுமாக இறுகிக் கொண்டாள்.

***

அகராதி – aharathi26@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular