சுஷில் குமார்
“இதுவரை எழுதப்பட்ட எல்லாவற்றிலும், ஒருவன் தன் இரத்தத்தில் எழுதியதையே நான் விரும்புகிறேன். இரத்தத்தில் எழுதுங்கள், இரத்தம்தான் ஆன்மா என்பதைக் கண்டடைவீர்கள்”
- –ஜரதுஷ்ட்ரா
என் அப்பா என் வயிற்றில் கைவைத்துத் தடவியது ஏனென எனக்கு முதலில் விளங்கவில்லை. ஆனால், என் சடங்கு முடிந்த, என் தோழிகள் என்னைப் பற்றிப் பலவும் சொல்லிச் சிரித்த நாட்களில் என் அப்பாவிடமிருந்து நான் விலக ஆரம்பித்தேன். அவர் வீட்டில் நுழைந்த நொடியில் நான் அரங்கிற்குள் சென்று ஒளிந்துகொள்வேன். சித்தியிடம் பேசுவதற்கு எனக்கு ஒன்றுமில்லை. சிலமாதங்கள் சமாளித்திருந்தாலும் என்னை மறந்து உறங்கிய இரவுகளில் என்ன நடந்திருக்கும் என்று அடுத்த பகல்களில் யோசித்தபடி இருப்பேன். ஏனென்று அக்கறையுடன் கேட்பதற்கு ஆளில்லாததால் என்னால் எளிதாக அங்கிருந்து தப்பி தொலைதூரத்து மலைப்பிரதேசத்தின் உண்டு, உறைவிடப் பள்ளியில் தஞ்சமடைய முடிந்தது. எவரையும் ஏறிட்டுப் பார்த்துப் பேசக்கூட எனக்கு பயமாகத்தான் இருக்கும். குறிப்பாக ஆண்களிடம். அவர்கள் ஆசிரியர்களோ, வகுப்பு நண்பர்களோ, யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு இயல்பாக பேசிப் பழகினாலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் குமுறல்களை வேறுதிசையில் திருப்பிவிட கடவுளின்மீது கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையும், நாள் தவறாத வேண்டுதலும் உதவியது. ஆண்டவரைத் தவிர மற்றெல்லா ஆண்களும் குறுகிய பார்வை கொண்டவர்கள்தான் என்பதில் மிக உறுதியாக இருந்தேன். அவரைப்போல அப்பழுக்கற்று இருப்பது எவருக்குமே சாத்தியமில்லை. அவர் அழுக்குப் படிந்த இந்த மனங்களையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாமல்தான் சிலுவையை வேண்டி ஏற்றுக்கொண்டார். ஆண்டவரின் கால்களை இறுக்கப் பிடித்திருந்த என் கைகளை மெல்லத்தொட்டு, கோர்த்து நடந்து, என் முகத்தை மெல்ல நிமிரச்செய்து, என் முன்னிருந்த உலகைப் பார்க்கச் செய்தவர் மதர். மதர் அவராகவே என்னைத் தேடிவந்து அறிமுகம் செய்த அந்த நாளில் பாரபாஸின் கதைப் புத்தகத்தைக் கொடுத்து படித்துவிட்டு வரச்சொன்னார். அப்புத்தகத்தை அழகிய வண்ணக் காகிதத்தில் அட்டையிட்டுப் பாதுகாப்பாக வைத்திருந்தார். அதன் ஓரங்கள் சிறிதும் உடைந்திருக்கவில்லை. அதன் பக்கங்களில் நறுமணம் வீசியது. அடுத்த சிலநாட்களில் அக்கதையினூடே வாழ்ந்திருந்தேன். பாரபாஸின் குற்றவுணர்ச்சியும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான அவனது நீண்ட வாழ்வின் முயற்சிகளும் எனக்குள் பல கேள்விகளை எழுப்பின. எல்லா கேள்விகளையும் மதரிடம் விட்டுவிடுவேன். ஒவ்வொரு கேள்விக்கும் அடுத்த புத்தகத்தில் பதில் கிடைக்கும் என்பார் மதர். ஒன்றிலிருந்து மற்றொன்று, அதிலிருந்து இன்னொன்று. இப்படித் தொடர்ந்த அச்சங்கிலியில் எனக்குள்ளிருந்த பயத்தையும் நடுக்கத்தையும் கட்டிப்போட்டு விட்டு மெல்லமெல்ல நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தேன். மதரும் புத்தகங்களும் எங்கள் விவாதங்களுமென அந்த நாட்களில் என் சிறகுகளை உணர்ந்துகொண்டேன்.
ஒரு கிறிஸ்துமஸ் நாளில் அவன் வந்தான். ஆண்டவரை ஆழ்ந்து வேண்டி முடித்து எழுந்தவன் திரும்பி என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். அவனை ஒரு சிறு நடுக்கமுமின்றி என்னால் நேரிட்டுப் பார்க்க முடிந்தது. அவன் என் கண்களைப் பார்த்து ஊடுருவிப் பேசினான்.
அவனே தான் நேற்றிரவு கேட்கச் சகிக்காத வார்த்தைகளை திரும்பத்திரும்ப, நூறு முறை என் முகத்தில் காரித் துப்பியபடி கத்திக்கொண்டேயிருந்தான்.
“வாசிக்கிறேன் எழுதுறேன்னு சொல்லிட்டு நீ தனியா இருந்து என்ன பண்ணுறன்னு எனக்குத் தெரியாதா? பொண்டாட்டியா மாப்ளய கவனிக்க வக்கில்ல, வீட்டப் பாக்க நேரமில்ல, எப்பப் பாத்தாலும் கைல புக்கு. என்ன மயித்துக்கு பொறவு எம்பின்னால ஓடி வந்த? இதுல பெரிய கவர்ன்மென்டு வேல இருக்குனு தலக்கனம் வேற? சோத்துக்கு வழியில்லாம இருந்தப்போ எவன் வந்து நின்னான்னு நெனப்பு வேணும். கையப் புடிச்சிட்டு ரோடு ரோடா சுத்துனப்போ என்ன நெலம இருந்துன்னு மறந்துராத. ஒலகமே நீதான், ஒனக்காக என்ன வேணா செய்வேன்னு.. சீ நாயே. என் குடும்பத்த மீறி ஒன்னக் கட்டுனேன்லா, அதுக்கு நல்லா செய்றம்மா.. நல்லா செய்ற.”
“இங்கப் பாரு. ஒனக்கு பிரச்சின என்னன்னு மொதல்ல தெளிவா சொல்லு. எதையாம் எதுகூடயாம் சேத்து வச்சி பேசாத. ஒனக்கு என்மேல இன்டரஸ்ட் இல்ல, ஃபிசிக்கலா எதுவும் தோணலன்னு சொல்லுற. அதான பிரச்சின? அதுக்கு என்ன பண்ணணும்னு யோசிக்காம சும்மா என்ன நோண்டிக்கிட்டே இருந்தா எப்படி? இப்ப எதுவும் இன்டரஸ்ட் இல்லன்னு சொல்ற, ஆனா, டிகிரி படிச்சப்போ நான் எவ்ளோ அழுதும் கேக்காம என்ன எவ்ளோ கட்டாயப்படுத்தி என்னெல்லாம் பண்ணுன? ஒன்னால மதர் மூஞ்சில கூட முழிக்க முடியாம ஆயிட்டு. எவ்ளோ கெஞ்சிக் கேட்டாங்க தெரியுமா? திமிரா வெட்டிக்கிட்டு வந்தேன். அந்த வயசுல அபார்ஷன், அந்தக் கொடுமையெல்லாம் தாண்டியும் ஒன் பின்னாடி வந்தேன்னா ஏன்னு யோசிக்கணும். எனக்குக் கெடைக்காத அப்பாவா இருப்பேன்னு சொன்னியே, இப்ப என்ன மாதிரி கேள்வியெல்லாம் கேக்குற நீ?”
“ஏதோ நா ஒன்ன ஏமாத்திக் கூட்டிட்டு வந்த மாதில்லா பேசுக? ஒனக்கும் எல்லாம் தேவையாதான இருந்து? ஒனக்கு என்ன தெரியும் அப்போ? நா இல்லாட்டி நீ என்னவா ஆயிருப்ப? எல்லாத்தயும் நெனச்சு பாக்கணும் மேடம்.”
“நீ பேச்ச மாத்தாத. எனக்கு வாசிக்க புடிச்சிருக்கு, எழுத்து அதுவா வருது. ஒனக்கு இதுலெல்லாம் இன்டரஸ்ட் இல்லன்னா நானும் பண்ணக்கூடாதா? என்ன நியாயம் இது? சரி, மொத மொதல்ல எனக்கு என்ன கிஃப்ட் வாங்கி குடுத்தன்னு ஞாபகம் இருக்கா ஒனக்கு? எங்க, யோசிச்சாவது சொல்லு பாப்போம்? ஒனக்கு அதெல்லாம் எங்க ஞாபகம் இருக்கும்? Thus spake Zarathusthra-ன்னு ஒரு புக்கு. நான் அத எப்படா வாங்கலாம்னு ஏங்கிட்டு இருந்த சமயம் என்னையே ஆச்சரியப்படுத்துற மாதிரி அத வாங்கிட்டு வந்து நின்ன. இப்ப அந்த புக் எங்க இருக்குன்னாது ஒனக்குத் தெரியுமா? லவ்ல மொதல்ல இருக்க வேண்டியது மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங். அப்போ மட்டும் எனக்குப் பிடிச்சத மாங்கு மாங்குன்னு செஞ்சிட்டு இப்போ வந்து நான் ஆம்பள ஆம்பளன்னு காட்டுற! அப்போ நான் பாத்த எல்லா ஆம்பளைங்களுக்கும் ஒனக்கும் என்ன வித்தியாசம்? எனக்குப் பிடிச்சத செய்ய கூடாதுன்னு இவ்ளோ கொதிக்கிற, எங்க போச்சு ஒன்னோட லவ்?”
“நீ ஏன் பேசமாட்ட? சம்பாதிக்கிற திமிரு. இதுலகூட ஒரு கூட்டம். இவனுகளுக்கெல்லாம் வேற சோலி மயிரே கெடயாதா? எவன் பொழப்பு எப்படிப் போனா இவனுகளுக்கு என்ன? கத, மயிருன்னு வந்துருவானுக. எனக்குத் தெரியாத கதையா, எவவன் எவவள வச்சிருக்கான், யாருக்கு யாரு அப்பன், ஊருல எல்லாவனும் எப்படி ஏமாத்திட்டு சுத்துரானுகோ, இதத்தான ஒங்காளுக சுத்திச்சுத்தி எழுதுரானுக. கல்யாணம் பண்ணமா, குடும்பமா சீரா இருந்தமான்னு இருக்கணும். ஒங்க ஸ்கூல்ல ஒன்ன கன்னியாஸ்திரி ஆக்கிருப்பாளுக. அந்த மதர மாதியே நாலு பிள்ளைங்கள பிரெயின் வாஷ் பண்ணிட்டு இருந்திருப்ப. சனியன் எப்பிடியாம் போகட்டும்னு விட்டுருக்கணும். அத விட்டுட்டு ஒன்ன எப்பிடியெல்லாம் தாங்கினேன்? ஒனக்கு எல்லாம் சலிச்சி போய்ட்டு. அதான் புதுசு புதுசா கதையும், ஆளுகளும் கேக்குது. ஒரு பொண்டாட்டியா இங்க நீ என்ன செஞ்சிருக்க சொல்லு பாப்போம்?”
“நீ கேக்குறது ஒனக்கே சிரிப்பா வரல? நா என்ன பொழைக்க வழி இல்லாம பிச்ச எடுத்துட்டா திரிஞ்சேன். என் ஸ்கூல்ல எப்பவுமே நான்தான் ஃபர்ஸ்ட்டு. காலேஜ்ல டாப்பர் தெரியும்லா? அதவிடு, நீ அசால்ட்டா அபார்ஷன் பண்ணுன்னு சொன்னியே, அப்போ நா ஒரு டீம் லீடர், என் சம்பளம் அம்பதாயிரம். ஞாபகம் இருக்குல்ல? அதெல்லாம் சேத்து சேத்து வச்சேன், எதுக்குன்னு சொல்லு பாப்போம். ஒனக்காக, எனக்கிருந்த ஒரே உயிருக்காக. ஒருத்தன் கொற சொல்ற மாதிரி ஒன் கல்யாணம் ஆயிடக்கூடாதுன்னு எத்தன பவுனு சேத்தேன் தெரியுமா? இதெல்லாம் நீதான செஞ்சிருக்கணும்? யார் சம்மதிச்சாலும் சம்மதிக்காட்டாலும் ஊரறிய கல்யாணம் பண்ணணும்னு எவ்ளோ ஆச எனக்கு! நீ என்ன பண்ண? ஒரு இடிஞ்சு போன ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல நாலுபேரக் கூட்டிட்டு வந்து ஏதோ பண்ண. அதையும் ஏத்துக்கிட்டேன். கவர்ன்மென்ட் வேல பாருன்னு நீ சொன்ன ஒரே காரணத்துக்காக பிடிச்ச வேலய விட்டுட்டு எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சேன். இன்னிக்கி இந்த வேலைல வந்து இருக்கேன்னா எதுக்காக? ஒனக்காக மட்டும்தான? ஆனா, நீ என்ன வேல பாக்குற? வேலன்னு ஒன்னு இருக்கா, இல்லையா? ஏதாவது என்கிட்ட தெளிவா சொல்லுறியா? ரியல் எஸ்டேட்டுன்னு சொல்ற, ஃபைனான்ஸ்ன்னு சொல்ற? ஒனக்கு வருமானம்னு ஒன்னு இருக்கா மொதல்ல? எத்தன வாட்டி கேட்டிருப்பேன், அத சொல்லக்கூட ஒனக்கு ஈகோ எடம் குடுக்கல்ல. ஒடனே எதையாம் சொல்லிட்டு, எதையாம் தூக்கிப்போட்டு ஒடச்சிட்டு வெளில போயிர வேண்டியது. சரி, அத விடு? என்னோட ஏ.டி.எம் கார்ட எதார்த்தமா வாங்குன மாதிரி வாங்குன. ரெண்டு வருசமாச்சு. நான் ஒரு வார்த்த கேட்டிருப்பனா? நீயே வச்சி செலவு பண்ணுறதுல எனக்கு அப்பிடி ஒரு சந்தோஷம். ஆனா, நீ நடந்துக்கற விதத்த பாத்தா என்ன நல்லா யூஸ் பண்ணுற மாதிரி தோனுது. இதுல பொண்டாட்டியா என்ன பண்ணேன்னு வேற கேக்குற? ஒனக்கு சமச்சிப்போட்டு, ஒனக்கான எல்லா தேவையும் கவனிச்ச பிறகு வேலைக்கும் போய்ட்டு வரேன். இதவிட என்ன வேணும் ஒனக்கு? நீ என்ன பண்ணுற? காலைல பஸ் ஸ்டாப்ல கொண்டு விடுற, சாய்ங்காலம் திரும்ப கூட்டிட்டு வர்ற, ஒருமணி நேரம் அப்பிடியே டீவி, ஃபோனுன்னு நோண்டிட்டு இருப்ப, பொறவு கெளம்பி போயிருவ, எங்க போற, என்ன பண்ணுற? ஏதாவது என்கிட்ட சொல்லிருக்கியா? ராத்திரி நான் தூங்குனப்புறம்தான் வர்ற, தனியாதான் தூங்குற, கேட்டா, எனக்கு எதுவும் தோனலன்னு சொல்லுற. சரி, எதாம் டாக்டர்கிட்ட போலாம்னு நானும் பல வருஷமா கூப்பிடுறேன். அதுக்கும் வரமாட்டேன்கிற. இதுக்கு மேல நான் என்னதான் பண்ண முடியும்? தனியா இருக்கும்போதும் எனக்குப் பிடிச்சத நான் செய்யக்கூடாதுன்னு சொல்ற, என்ன மாதிரி எண்ணம் இது? என் கதையப் படிச்சிட்டு யார் யாரெல்லாமோ ஃபோன் பண்ணி பேசுறாங்க, ஓங்கிட்ட வந்து மொத கதை வந்திருக்குன்னு சொன்னப்போ நீ என்ன சொன்ன ஞாபகம் இருக்கா? என்ன பேர்ல போட்டிருக்க? எம்பேரையும் சேத்தா போட்டிருக்க? ஊர்ல போறவன் வாரவன்லாம் என்னப் பாத்து கேவலமா சிரிக்கதுக்கான்னு கேட்ட. ரொம்ப நெறஞ்சுப் போச்சு சார். சூப்பர்.”
“நிறுத்துடி, பேசத்தெரியும்னு ரொம்ப வாயடிக்காத. வாய அடிச்சி ஒடச்சிருவம் பாத்துக்க.”
“அதான, அடுத்தது அதான? வேற என்ன பண்ண முடியும்? நீ ஒன்னு பண்ணு, ஒரேயடியா அடிச்சிக் கொன்னுரு, கேக்கதுக்கும் யாரும் இல்ல. ஒனக்கு எங்கூட ஒழுங்கா இருக்க முடியல, அதுதான் ப்ராப்ளம்னு ஒத்துக்கோ மொதல்ல, அத விட்டுட்டு நான் வாசிக்கிறேன், எழுதுறேன்னு சில்லியா கொற சொல்லாத. பொண்டாட்டி படிக்கிறா, எழுதுறா, நாலுபேரு புகழ்ந்து பேசுறாங்கன்னு நீ பெருமல்லா படணும்? ஆனா, நீ எரிச்சல்தான் ஆகுற. ஏதாவது சண்டைல ஆரம்பிப்ப, கடைசில புக்கு, எழுத்துன்னு வந்து நிப்ப. நான் தலைய மட்டும் ஆட்டிக்கிட்டு இருக்கணும், என்ன? நீதான என்ன பேசவே வச்ச? ஒலகத்தையே காட்டுன? இப்ப எல்லாம் சரியில்லன்னு சொன்னா? நா எதாவது கேள்வி கேட்டா மட்டும் பதில்பேச முடியாது, ஒடனே வாய அடிச்சி ஒடச்சிரணும். நீ அடிக்கிற வலியெல்லாம் பெரிய வலியா?”
“நிறுத்து டி. இங்க இருக்கணும்னா நான் சொல்ற மாதிரிதான் இருக்கணும். அவ்ளோதான். இல்லாட்டி வெளிய போ மொதல்ல.”
“ஆமா, இப்போ இதுவும் சேந்திருக்குல்லா? வெளிய போயிரு, வெளிய போயிரு. நான் நேராவே கேக்குறேன். நீ டைவர்ஸ் வாங்குற ஐடியால இருக்கியா? அப்படின்னா ஓபனா சொல்லிரு. சும்மா சும்மா வெளிய போன்னு சொன்னா… ஒரு நாதியும் இல்லாம இருக்கான்னு தெரிஞ்சுதான அப்பிடி சொல்லத் தோனுது. நல்ல லவ். ஆனா, எப்போவும் ஒரே மாதிரி இருக்காது, பாத்துக்கோ.”
“ஆமா, அப்பிடிதான். ஒழுங்கா இருக்க முடியாட்டி வெளிய போடி.”
“கடைசில அப்பிடிதான் ஆகும்னு நெனைக்கேன். ஆனா, சீரழிஞ்சு போயிருவேன்னு மட்டும் நெனைக்காத. என்கிட்ட வேல இருக்கு, தைரியம் இருக்கு, எல்லாத்துக்கும் மேல என்கிட்ட எழுத்து இருக்கு. ட்ரான்ஸ்வர் கேக்கும்போதே நீ என்ன சொன்ன? எங்கயாம் தூரத்து எடமா பாத்து போ, தனியா இருந்தாகூட பரவால்ல, இங்க லோக்கல்ல வேண்டாம்னு. என்ன மாதிரி ஆளுயா நீ? பொண்டாட்டியோட காசு வேணும், பொசிஷன் வேணும். ஆனா அவள தூரமா போகச்சொல்ற. என்ன லாஜிக் இது? நான் நம்மூர் பக்கம் போஸ்டிங் வாங்குனதே ஒன்கூட இருந்து ஒன்னப் பாத்துக்கணும்னுதான். நீ என்ன தூரமா போங்கிற. ஆமா, ஒனக்கென்ன வேற யார் கூடயாம் தொடுப்பு இருக்கா? அதயாவது சொல்லு. எதுக்கு பின்ன என் லைஃப்ல வந்த? எதுக்கு என்ன வெளிய கூட்டிட்டு வந்த? நான் இருந்த ஒலகமே கதின்னு ஆண்டவருக்கிட்டயாவது இருந்திருப்பேன்லா? நான் பாத்த ஒரே ஆம்பளன்னு ஒன்ன பெருமையா வச்சிருந்தேன்லா? எல்லாத்தயும் இப்பிடி… நீயெல்லாம் என்ன……?”
“இத்தோட நிறுத்திக்கோ. ஒரு வார்த்த பேசின…”
அவ்வளவுதான்… கையில் கிடைத்த எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு உடைத்தான். வழக்கம்போல கதவை ஓங்கிச் சாத்திவிட்டுக் கிளம்பிவிட்டான். மிக கவனமாக ஏ.டி.எம் கார்டை எடுத்துதான் சென்றிருப்பான்.
‘நீ கடவுளின் குழந்தை. யாருமற்ற ஒவ்வொருவருக்கும் நானிருக்கிறேன் என்று உறுதியளித்தவர் ஆண்டவர். அவரது சொல்லே உனக்கான மந்திரம். அவரது வியர்வையே உனக்கான உத்வேகம். அவரது இரத்தமே உனக்கான முக்தி. நீ அவரது குழந்தையேதான். இதை முழுமையாக நம்பு. உன்னால் என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்து பார். நன்றாகப் படி. தினமும் ஆண்டவரை நினைத்து உருகி வேண்டு. நீ நினைப்பதெல்லாம் நடக்கும். ஆண்டவரின் பாதையில் உனக்கான ஒரு சிறு வழித்தடம் இருக்கும். அதைக் கண்டுகொள்ள உன்னை நீயே தயார்படுத்திக்கொள். சபலங்களிலிருந்து விலகியிரு. மனித உணர்ச்சிகளை வெறும் காட்சிகளாகப் பார்க்கக் கற்றுக்கொள். எல்லோரையும் போல உன் உணர்ச்சிகளை வீணடிக்காதே. அந்த சக்தியை சேமித்து வை. பின்னால், ஆண்டவரின் வழியில் நீ பல மடங்கு பெரும் புகழ் பெறுவாய். நீ கடவுளின் குழந்தை.’
மதர் கூறிய இவ்வார்த்தைகள் ஒவ்வொரு நாளும் என் மனதில் வராமலில்லை. மதர் மட்டும் என் கை பிடித்து உடன் நின்று வழி காட்டியிருக்காவிட்டால் நான் எப்போதோ என்னை மாய்த்துக்கொண்டிருப்பேன். யாரிடமும் சொல்ல முடியா விசயங்களை அவர்மீது சாய்ந்து சொல்லி அழுவேன். எல்லாவற்றையும் கேட்டு முடித்து அறிவுரை எதுவும் சொல்லமாட்டார். தன் புத்தக அலமாரியிலிருந்து ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்து வருவார். என்னை முகம் கழுவிவந்து உட்காரச்சொல்வார். என் கண்களிலிருந்து தொடர்ந்து கண்ணீர் வழிந்துகொண்டிருக்க, அந்தப் புத்தகத்தைப் பிரித்துச் சத்தமாக வாசிப்பார். அவரது குரலில், அப்புத்தகங்களில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வு என் முன்னால் காட்சியாக விரியும். சற்று நேரத்தில் என் கண்ணீர் நின்று அந்த வாழ்வில் நானும் ஓர் அங்கமாக உருகிப் போவேன். மதரும் நானும் சேர்ந்து வாசித்த புத்தகங்கள் ஒவ்வொன்றும், அவற்றின் அட்டைப்படங்களும், அந்த கதாப்பாத்திரங்களும், அவர்களின் மீள முடியாத சூழ்நிலைகளும், மீண்டு வந்த சூழ்நிலைகளும் என்னை வேறு ஒருத்தியாக மாற்றிக்கொண்டிருந்தன.
ஆனாலும், ஓர் இளம் தென்றல், மென்மணம், கலங்கமற்ற புன்னகை, நீடித்த தியானம், கடற்கரை நடை, கை கோர்ப்பின் வெதுவெதுப்பு, உள்ளன்போடு ஊட்டும் கை விரல்கள், தலை கோதும் அரவணைப்பு, இன்னும் பலவாக என்னை ஆண்டவரின் ஆட்சியிலிருந்து, மதரின் அரவணைப்பிலிருந்து பறித்துப் பிடுங்கி எங்கெங்கோ கொண்டுசென்று இன்று இப்படி நிற்க வைத்திருக்கிறான். நின்று யோசித்துப் பார்க்கையில் அவன் ஒன்றும் எனக்கான வாழ்வைத் தந்திருப்பதாகத் தோன்றவில்லை, அவனுக்கான ஒரு நல்வாழ்வைத்தான் நான் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். அவன் அதில் சுகமாக திளைத்திருந்திருக்கிறான். நானும் வாசிப்பும் எழுத்துமாக இதைப் பெரிதுபடுத்தாமல் இருந்திருக்கிறேன். வஞ்சகம் எவ்வளவுதான் போலியுடை தரித்திருந்தாலும் ஒருநாள் தன் உருவத்தைக் காட்டித்தானே தீரும். ஆனால், எப்படி தொடர்ந்து பாசம் இருப்பதாகக் காட்டிக்கொண்டிருக்க முடியும்? உள்ளன்போடு எப்படி ஒரு பிடி சோற்றை ஊட்டிவிட முடியும்?
ஒருநாள் தன் நண்பர் ஒருவரிடம் பேசுமாறு போனைக் கொடுத்தான். அவர் ஏதோ பெரிய பண்ணையார். அவருக்கு ஏற்றபடி, சட்டத்திற்குப் புறம்பாக ஒரு கையெழுத்து போட வேண்டுமாம். என் கணவனுக்கு என்ன வேண்டுமென்றாலும் அவர் பார்த்துக்கொள்வாராம். போனில் எதுவும் சொல்லாமல் அவனை தீர்க்கமாக உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். ‘சரி சொல்லு, சரி சொல்லு’ என்று தலையாட்டிக் கொண்டிருந்தான். நான் என்ன பொம்மையா? அப்போது அவன் சிரித்த ஒரு கேவலமான சிரிப்பு. அன்றைக்கே நான் வெளியேறியிருக்க வேண்டும்.
“என்னடி, அவரு எவ்ளோ பெரிய ஆளு? ஒரு மரியாத கெடயாதா? பெரிய இவ மாதிரி பேசாம இருக்க? இந்த மாதிரி நாலு பேரு இல்லன்னா ஒன்னுமே நடக்காது, பாத்துக்கோ.”
“நீ எல்லாம் தெரிஞ்சேதான் என்கிட்ட பேசச்சொன்னியா?”
“என்ன எல்லாம் தெரிஞ்சு? ஒரு உதவி கேட்டா, செஞ்சிக் குடுக்கணும். நீ என்ன பெரிய அரிச்சந்திரன் பரம்பரையா? ஒங்கப்பன் அம்மைல்லாம் செஞ்ச காரியத்தவிட இதெல்லாம் ஒன்னும் பெருசுல்ல, பாத்துக்கோ. நாயக் குளுப்பாட்டி நடு வீட்ல வச்சா இப்டிதான்..”
‘எனக்கு நேர்மையை விட விலைமதிப்பற்றதும் அரிதானதும் எதுவுமேயில்லை’ என்கிறான் ஜரதுஸ்த்ரா. அச்சொற்கள் திரும்பத்திரும்ப எனக்குள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தன. நான் வாசித்த கதாபாத்திரங்கள் என்னைச் சுற்றிநின்று கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தன. கூர் நாக்குகளை தன் கொடும் பார்வையால் எரித்த ஒருத்தி, இரயில் தண்டவாளத்தில் சிதைந்து கிடந்த ஒருத்தி, சோர்பாவுக்காக காத்துக் கிடந்த ஒருத்தி, யுகம்யுகமாக பழிவாங்கத் துடித்துக கொண்டிருந்த ஒருத்தி, மொத்த உலகையும் தன் உடலால் தொட்டு உணர்ந்துவிடத் துடித்த ஒருத்தி, விபச்சாரி என்றழைத்தவனுக்கு அம்மையாக நின்ற ஒருத்தி, கொண்ட செயலை கடிவாளமாக இறுக்கிக்கொண்ட ஒருத்தி, பாரபாஸ் பெயர் சொல்லி அழுது நின்ற ஒருத்தி…. நான் என்ன செய்யப்போகிறேன் என ஒவ்வொரு முகத்திலும் எதிர்பார்ப்பு. கெஞ்சல். கட்டளை. சரிதான் என்கிற தைரியமூட்டல்.
“லிசன், திஸ் இஸ் த லிமிட். ஒன்னோட நிஜ முகத்த கொஞ்சம் கொஞ்சமா காட்டி நீ கீழ போய்க்கிட்டே இருக்க பாரு. பொண்டாட்டி கிட்ட வந்து நேர்மையா இருக்காத, லஞ்சம் வாங்குன்னு சொல்லுற. எங்கப்பன் கிட்ட, என் மொத்த குடும்பத்து கிட்ட பாக்காத ஒரு ஆம்பளய ஒன்கிட்ட பாத்துதான ஒன் கைய பிடிச்சேன். நீ என்ன என்ன பண்ண சொல்ற, புரிஞ்சுதான் செய்றியா? இத செய்யச் சொல்றவன் வேற என்ன வேணாலும் செய்யச் சொல்லுவியோ? என்ன ஆம்பள நீ? இதுக்கு தான் என் ஆசையெல்லாம் விட்டுட்டு இந்த கவர்ன்மென்ட் வேலக்கி வந்தனா? நீ என்ன ப்ரோக்கரா? கொஞ்சம் கூட கூசலயா ஒனக்கு?”
“முட்டாள் மாதிரி பேசாத. நா ஒன்னும் எவங்கிட்டயும் புடுங்கி சாப்பிட சொல்லலயே. இருக்கவன் அள்ளிக் கொடுக்கான். அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாங்கிக்கோ. யாருக்கு என்ன ஆகப்போகுது? அவவன் பொண்டாட்டிய…..”
‘ஆண்டவர் தன்னிடமிருந்த ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் வைத்து ஐயாயிரம் மக்களுக்கு உணவளித்தார். அவர் கொடுத்த உணவில் ஒவ்வொருவரும் நிறைவடைந்தனர். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சுகம் கொடுத்தார். பார்வையில் கசடுகளை நீக்கினார். அவர் பாதம் பட்ட மண்ணை மிதித்தவர்கள் நிமிர்ந்து நடந்தனர். நேர்கொண்ட பார்வை கிடைக்கப்பெற்றனர். அவர்களுக்கு நேர்மையான வாழ்வும் ஆண்டவரின் கருணையும் மட்டுமே போதுமானதாக இருந்தது. அவர்கள் அனைவரும் பரிசுத்த ஜீவன்களாக வாழ்ந்து நிறைந்தனர்.’
சற்று நேரத்திற்கு நான் அங்கே இல்லாமல் ஆகிவிட்டேன். மதரின் கைகளுக்குள்ளேயே, அந்த வெதுவெதுப்பிலேயே… அவர் கொடுத்ததை மட்டுமே வாங்கிக்கொண்டு, அறிவின் பாதையில், ஆண்டவரின் பாதையில்..
“ஒன்ட்ட தான் பேசிட்டுருக்கேன். முடியுமா முடியாதா சொல்லு?”
“முடியவே முடியாது. என்ன வச்சி இப்படி சம்பாதிக்கிற எண்ணத்த இன்னையோட மாத்திக்கோ. நா உன்ட்ட இதெல்லாம் எதிர்பார்க்கல. இன்னும் என்னெல்லாம் வச்சிருக்கியோ பாக்கலாம். அதையும் மீறி ஒனக்கு பணம்தான் வேணும்னா, உழைக்கணும், என்ன?”
முகத்தில் அறைந்தான், அறைந்துகொண்டேயிருந்தான். தையல் போட்டு வந்தபோது சொன்னான், “நீ இருக்க வேலைக்குதான் இந்த ஊர்ல ஒனக்கு மரியாத பாத்துக்கோ. இவன் பொண்டாட்டி இவன்னுதான் ஊர்ல எவனும் சொல்லணும். இவ மாப்ள இவன்னு எவனாம் சொன்னான்னு வையி. அன்னிக்கி இருக்கு ஒனக்கு. பெரிய எழுத்தாளராகி, இந்த கவர்ன்மென்டு ஒனக்கு அவார்டு குடுத்து தலமேல தூக்கிவச்சி கொண்டாடும்னு நெனச்சிட்டு சுத்தாத. பிச்ச எடுக்க விட்டுருவானுகோ பாத்துக்கோ நாய…”
அன்று இன்னொரு விஷயம் தெளிவாகியது. நான் அவனுடன் இருப்பதால் அவனுக்கு ஒரு சமூக அந்தஸ்து கிடைக்கிறது. அதை என்ன ஆனாலும் அவன் விட்டுக்கொடுக்க மாட்டான். என் சம்பளம் ஒரு பக்கம். இப்படி ஒரு பெரிய பொறுப்பில் இருக்கும் பெண் அவனது பொண்டாட்டியாக இருப்பது அவனுக்கு ஒரு பெரிய இடத்தைக் கொடுத்திருக்கிறது. அதை சற்று உடைத்துப் போட்டால்தான் என்ன? அதன் பிறகு சிறிதேனும் ஆணாக எஞ்சி நிற்கிறானா பார்க்கலாம்.
‘உன்னுடைய சுயம் என்று ஒன்று இருப்பதைக் கண்டுகொள்ளும் வரை இந்த அலைக்கழிப்புகளும் சோர்வுகளும் துரத்திக்கொண்டுதான் இருக்கும். கண்டுகொண்ட அந்த சுயத்தை ஆண்டவரின் இருப்பில் நீட்டித்து வைப்பதொன்றே இனிமைக்கான வழி. அவரது சொற்களும் அவர் சுட்டிக்காட்டிய வழியும் மாத்திரமே நமக்கானவை.’ ஆனால், இவனுடனான இத்தனை வருடங்களில் என் அசலை இழந்து நான் வேறு ஏதோவாக இருந்திருக்கிறேன். இந்த உடலோ, மனமோ நானில்லை என்னும் அளவிற்கு. இதை முழுக்க உதறித்தள்ளும் அளவிற்கு ஓர் அருவருப்பு. என்னைத் தூக்கி எறியும் அப்படியான ஒரு ஸ்லிங் ஷாட் வருவதற்காக காத்துக்கொண்டு இருந்திருக்கிறேன் போல. எழுத்து எனக்கான தினசரி உயிர்த்தெழுதலைப் போல இருந்திருக்கிறது. என் புத்தகங்களின் வெம்மையில் ஆண்டவரின் சொல் பிடித்து மதரின் குரல்கேட்டு என்னை நான் நீடித்து வைத்திருப்பதன் காரணம் ஒன்று கண்டிப்பாக இருக்கும் என்று நம்பினேன். அது இன்று தெரிந்தது.
இன்று காலை எழுந்ததும் நேராக என்னிடம் வந்து, “நீ வேலைக்குப் போகாண்டாம்.” என்றான்.
“என்ன? எதுக்கு?”
“இனி நீ வேலைக்குப் போக வேண்டாம்னு சொன்னேன். மாப்பிளயா நான் என்ன சம்பாதிக்கேனோ அத வச்சி நீ வாழ்ந்தா போதும்.”
“ஓ, ஏன் போகக் கூடாது?”
“நீ வேலைக்கிப் போயி நான் ஒக்காந்து சாப்பிடுறேன்னு சொன்னேல்லா? அந்தத் திமிரு.. திமிருலதான நீ ஆட்டம் போடுற.”
“இங்கப் பாரு. வேற எதுவும் கெடைக்கலன்னு நீ இப்போ இதத் தூக்கிட்டு வந்திருக்கியா? இதென்ன லஞ்சம் கொடுத்து வாங்குன வேலையா? இதுக்காக எப்படி படிச்சேன்னு ஒனக்குத் தெரியுமா? இந்த பொசிஷனோட பவர் என்னன்னு தெரியுமா? ஒனக்கு என்ன தான் பிரச்சின? சேர்ந்து வாழற ஐடியா இருக்கா இல்லையா? இல்லைன்னா இல்லைன்னு சொல்லித் தொலையேன். நான் எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கேன்.”
“அப்பிடி வா டி. ஓஹோ.. நீ எல்லாத்துக்கும் ரெடியாதான் இருப்ப? எனக்கு நல்லாவே தெரியும்.. அப்போ வேற எவன்கூடயாம்….”
“ஸ்டாப் இட். இதுக்கும் கீழ போகாத. ஒம்மேல இருந்த… ஒம்மேல இருக்க கொஞ்சம் பாசமும்….”
“நீ நிறுத்து டி தேவிடியா.. படிச்ச திமிரு. எல்லாம் தெரியுமுங்குற தலக்கனம். ஒன்ன….”
நான் உறைந்து நிற்க, என் புத்தக அலமாரியைத் திறந்து புத்தகங்களை எடுத்து வீசியெறிந்தான். எனக்குப் பிடித்த புத்தகங்களை சரியாகக் கண்டுகொண்டு அவற்றை எடுத்துக் கிழித்து என் கால்மாட்டில் எறிந்தான். அடுக்களைக்குள் ஓடிச்சென்றான். தேடியது கிடைக்காமல் உறுமியபடி வந்தவன், புத்தக அலமாரியைப் பிடித்துக் கீழே தள்ளினான். எங்கள் இருவருக்கும் இடையில் வந்து விழுந்தது Thus spake Zarathusthra. நான் அதை உற்றுப்பார்த்து கண்கலங்கியபடி பதறி நின்றேன். அதை கவனித்த அவன் வெறி பிடித்தபடி சிரித்தான். அந்த புத்தகத்தின் முன்வந்து நின்றான். அதன்மீது ஓங்கி ஓங்கி மிதித்தான். நான் கதறி அழுவது அவனுக்குப் போதுமானதாக இல்லை. அதன் பக்கங்களைக் கிழிக்கப் போனவன் ஒரு நொடி அதன் முதல் பக்கத்தைத் திறந்தான்.
“என் செல்ல ராசாத்திக்கு…” என எழுதியிருந்தான்.
அதை மீண்டும் கீழே போட்டு என்னை உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வை என் அப்பாவின் முகத்தைச் சட்டெனக் காட்டியது. தனக்குத்தானே ஏதோ முனகியபடி, மிக நிதானமாக அந்தப் புத்தகத்தின் மீது சிறுநீர் கழிக்க ஆரம்பித்தான். ‘என்னுடைய ராஜ்ஜியத்தில் எவருக்கும் துன்பம் வந்து சேராது, எனது குகை ஒரு நல்ல புகலிடம். துன்பப்படும் ஒவ்வொரு உயிரையும் மீண்டும் நான் உறுதியான ஒரு நிலத்தில் உறுதியான கால்களுடன் நிற்க வைப்பேன்’ என்கிற ஜரதுஸ்த்ராவின் வார்த்தைகள் மெல்ல அப்புத்தகத்திலிருந்து வடிந்து வெளியேறி என் காலடியைச் சேர்ந்தன.
நான் அந்த நொடியில் வெளியேறினேன்.
இப்போது இந்தப் பேருந்து ஏதோ ஓர் ஊரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அவனிடமிருந்து எத்தனையோ கிலோ மீட்டர்கள் விலகி வந்துவிட்டேன். என் கையில் காசேதும் இல்லை. நன்றாகப் பசிக்கவும் செய்கிறது. பசி, பசி… பாரபாஸ் கடைசியில் என்ன ஆனான்? மதர் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்? எல்லாம் தெரிந்தும் எதற்காக ஜரதுஸ்த்ரா தன் மலையிலிருந்து இறங்கினான்? அதுசரி, நிழல் துரத்தும் ஒருத்தியின் கதையை எழுதிப் பாதியிலேயே விட்டிருந்தேனே, அதை எப்படி முடிக்கலாம்?
***
சுஷில் குமார் – 35-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ள நிலையில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு மூங்கில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பாக “சப்தாவர்ணம்” நூலும் அண்மையில் வெளியானது. இதுதவிர அவ்வப்போது மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். தன்னறம் வழியாக இவரது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் நூல் “தெருக்களே பள்ளிக்கூடம்”… மின்னஞ்சல்: sushilkumarbharathi2020@gmail.com