Saturday, November 16, 2024

அப்பா பூனை

அருணா சிற்றரசு

ன் பெயர் சொல்லிக் கதறிய என் அம்மாவின் குரல் ஏதோ ஒரு மலை உச்சிக்குப் போய்க்கொண்டிருந்தது. நான் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு நேர் எதிராகத் திரும்பி ஓட ஆரம்பித்தேன். ஓடுவதாக நினைத்துக்கொண்டேன் போலும், நீண்டதொரு தொலைவுக்கு பிறகே அம்மா என் கண்களில் பட்டாள்.

ஐந்தே ஐந்து நிமிடங்களுக்கு முன் அம்மாவின் கைக்குள் நான் விட்டுச்சென்ற அப்பா இப்போது அவள் பக்கத்தில் இல்லை.

என் பெயரை அவளால் முடிந்த வரை அடி வயிறு கிழிசல் காணும் அச்சமுறாது கத்தினாள்.

“அப்பா எங்க? உன்கிட்டதான விட்டுட்டு போனேன்!”

அப்பா இல்லாத அம்மாவை எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அவரின் சோடியற்ற அவளின் வடிவு எனக்கு சிறந்ததே இல்லை. எரிச்சலூட்டியது அவளின் தனிமை. அந்த எரிச்சலில் என் காட்சிகள் கருகின. அம்மாவின் கைகள் அந்த அவசரப்பிரிவைக் காட்டியபோது முற்றிலும் உறைந்திருப்பேன் போலும். அக்கணம் நான் உறிய வேண்டிய அந்த ஆக்சிஜன் உள்ளே செல்ல முடியாமல் திணறியது.

அப்பா எங்கே?

அம்மாவை ஒரு கைக்குள் சுருட்டி வைத்துக்கொண்டேன். அவளின் ஓலம் என்னை சிந்திக்க விடாது. அவள் குரலை மெல்லத் தணித்து அமர வைத்தேன்.

இப்படி நான் தனியாய் நின்றதில்லை. என் அப்பன் எனக்கு அந்தக் கலையைக் கற்றுத்தரவே இல்லை. தனியாய் தவிப்பதற்கு என் கால்கள் இதுநாள் வரை பாடம் கண்டதில்லை. அந்த மருத்துவமனையின் சுவர்கள் வெண்ணைக் கொண்டு தடவப்பட்ட பூச்சுகளைக் கொண்டிருந்ததாக இருக்க வேண்டும். பிடிமானத்திற்கு கை வைத்தபோது வழுக்கியது. எனக்கு எட்டும் வரை அந்த சுவரின் வளமையைத் தடவிக்கொண்டிருந்தேன். செவிலிகளும் மருத்துவர்களும் எனைப் பார்த்தவாறே அப்பா இருந்த அறைக்குள் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அன்பிற்குரியவர்கள் என்பவர்கள் பெரும்பாலும் அருகிலேயே இருப்பவர்கள்தான். அவர்களின் இல்லாமை, அவர்களின் இழப்பு பல வருடம் பழக்கப்பட்ட சிறிய அறையைக்கூட புதியதாய் காட்டும். ஆறுதலாய் கனிந்த ஆகாயம் கூட அனலாய் சுடும். பசி, தாகம், தூக்கம் என்பதை நாம் நிகழ்த்தவே முடியாது. அதற்கு உடலே முன்வந்து முயற்சித்துக் கொண்டால் உண்டு. அவர்களின் இருப்பின்றி அடுத்தடுத்து நகரும் ஒவ்வொரு நொடியும் துக்கத்தின் ஆட்சியை விரிவாக்கும்.

சற்றுமுன் தானே என்னுடன் நடந்தாய் அப்பா!

அம்மாடி! அங்கயும், இங்கயும் ஓடாதே கால்வலி கடுக்கும் என்றாயே! உண்மைதான், ஆனாலும் மூன்று நாட்களாய் உனக்காய் ஓடுகிறேன் கால் வலி காணவே இல்லை. இப்போது கால் சுருள்கிறது. கால் குட்டையாகி என் அடிவயிற்றோடு ஒட்டிக் கொண்டுவிட்டது.

நின்ற இடத்திலேயே நான் பொருந்திக்கொண்ட அந்த சுவரினூடே உன்னைத் துழாவிக்கொண்டிருக்கிறேன். அப்பா என்னை ஏமாற்றி விடாதே! நீ இல்லாமல் எனக்கு வாழத் தெரியாது என்று கெவ்விக்கொண்டிருந்தேன்.

அரைமணி நேரத்துக்கு முன் நீ உண்ட அந்த இரண்டுக் கவள தயிர்சோறு உன் வயிற்றில் தானே இருக்கிறது! பத்து நிமிடத்திற்கு முன் நீ சிரித்தபடியே குடித்த ஒரு மடக்கு காபியும் உன் வயிற்றில்தான் இருக்கும். உன் வயிற்றைத் தடவி இன்னும் பசிக்குதாப்பா என கொஞ்ச வேண்டுமாய் உருள்கிறேன் இந்த நடைபாதையில். நான் இப்படிச் செய்வது உனக்குப் பிடிக்காதேப்பா. நான் அழுவது அகோரமாய் தெரியுமே அப்பா.

அம்மா அடித்து நான் அழும்போது அசிங்கமாய் இருக்கிறது அழாதே என்பாயே. நான் அழகில்லாமல் போனதே இல்லையப்பா உனக்கு. நான் அழக்கூடாது உனக்கு. அவ்வளவுதான்.

இதோ என் கண்களில் நீர் பொங்கிப் பொங்கி வருகிறது. பேரூற்று ஒன்று பெருவெடிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. துடைப்பதற்கான தொந்தரவாக அந்தக் கண்ணீர் என்னைப் பிசுக்கவே இல்லை. அந்தக் கண்ணீர் கண்களை மறைத்துத்தான் வழிந்தது. காட்சிகள் என்பதற்கு ஆங்கே ஒன்றுமே இல்லை. சாத்தப்பட்ட உன் அறைக்கதவைத் தவிர.

என் குரல் உனக்கு நிச்சயம் கேட்கும். என் கதறல் கட்டாயம் உன் இதயம் துளைக்கும். ஏற்கனவே உடைபட்ட இதயம் என்பதால் என் குரல் சுளுவாக ஊடுருவும். உன் நெற்றி வியர்த்திருக்குமோ! பதறாமல் படுத்திரு அப்பா, இப்பொழுது எழுந்து விடுவாய். “கழுதை பயந்துட்டியா!” என்று என் தலையைச் செல்லமாகத் தட்டுவாய்.

இந்தச் சுவர் வழுக்குகிறது அப்பா. இப்படியே உட்கார்ந்து கொள்கிறேன். நீ எழுந்ததும் குரல் கொடு. தெம்பற்றவளாய் சரிகிறேனா? இல்லை, வெண்ணைச் சுண்ணாம்பில் சறுக்குகிறேனா? புரிபடவில்லை. தரைக்கு வந்துவிட்டேன். கால்கள் இருக்கின்றன எனக்கு. இப்போதுதான் நீண்டு தெரிந்தன.

அன்று அதிகாலை சிணுங்கிய என் கைபேசி இங்கே வரத்தான் என்பது அன்று எனக்கும் தெரியாது, உனக்கும் தெரியாது. வயிற்றை வலிப்பதாய் என் முப்பத்து மூன்று வயதுக்கும் நீ சொல்லி நான் கேட்டதே இல்லை. அப்பா! என்னப்பா? என நான் பதறிய போதும் நிதானமாய் சொன்னியேப்பா. உனக்கு ஒன்றுமில்லைன்னு.

அம்மாவின் நலிவுற்ற கேவல் இப்போதுதான் எனக்கு கேட்டது. அவளை அப்படியே விட்டுவிட்டேனே! அப்பாவின் இருப்பில் மட்டுமே வீராப்பு பேசியவள் அவள். அப்பாவுக்கான பணிவிடைகளை யாருக்கும் விட்டுக் கொடுக்காதவள் அவள். அப்பா வெற்றுடம்புடன் வாசலில் நின்றால் துண்டுடன் வந்து அவரை மறைப்பவள் அவள். அப்பாவின் அத்தனை அலட்சியங்களுக்கும் நியாயம் கேட்பவள் அவள். என்னுடன் இரு, என்னுடன் பேசு, என்னுடன் படு என்று சண்டையிட்டே வாழ்ந்து வந்தவள் அவள்.

ஒரு வருடம் முன்பு வரை போராடித்தான் பொண்டாட்டியாய் இருந்தாள். போன சண்டையில் முற்றிலும் மாறுதலான முடிவொன்றை எடுத்திருந்தாள். இனி அப்பாவிடம் பேசுவதில்லை, அவர் முகம் காணுவதில்லை என சொடக்கு போட்டுச் சொல்லிவிட்டாள்.

அந்த ஆரவாரமும் ஆக்ரோஷமும் இன்று இல்லை அம்மாவிடம். திகிலுக்குள் விடப்பட்ட இள வயது காதலியாய் உள்ளங்கை வியர்த்திருந்தாள். அவளைப் பற்றிய கவலை இன்றுதான் எனக்குள் ஏறிட்டது.

பளபளத்த பளிங்குத் தரையில் நீந்தியவளாய் நடந்தேன். அம்மா பக்கத்து அறையின் மூளையில் சுருண்டுக் கிடந்தாள்.

அப்பாவைக் கொண்டு வா என்றாள். நான் அவரை இப்பவே பார்க்க வேண்டும் என்றாள். பையில் கொண்டு வந்திருந்த பணக்கட்டுகளை அள்ளி வீசினாள். இதையெல்லாம் வச்சி அப்பாவைக் கொண்டு வா என்றாள். சாம்பலைப் பூசிக்கொண்ட பூசாரி போல் தெரிந்தாள். சாம்பலுடன் கங்குகளும் ஏறியிருக்கக் கூடும். கடுந்தணல் அவளைக் குலுக்கிக் கொண்டிருந்தது. ஆவேசமான பூசாரியாய் தன்னைப் பீடிக்க இருக்கும் பிசாசை ஓட்டுபவளாய் கைகளை எல்லாத் திசையிலும் சுழற்றினாள்.

குளத்துப் படிக்கட்டில் உட்கார வைக்கப்பட்ட சிறுமி நான். குளத்துக்குள் சென்ற அப்பா இன்னும் வெளிவரவில்லை. அப்பா வருவதற்கு நேரம் ஆக ஆக அம்மா இங்கு படித்துறைப் பாறைகளை தலையைக் கொண்டு மோதி மோதிப் பெயர்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகமெல்லாம் இரத்தச் சிவப்பு. அம்மாவின் கேசரி மூக்குத்தி மட்டும் சிவப்பு விரிப்பில் மூடப்படவில்லை. குளத்துக்குள் செல்ல நான் அஞ்சவில்லை. தானே தண்ணீரைத் திறந்துவர வேண்டும் அப்பா. நான் உள்ளே இறங்கும்போது ஒருவேளை அப்பா பந்து போல் மிதந்துவிட்டால்! அசைவற்ற அப்பா பற்றிய எதிர்நோக்கை சமீபத்தில்தான் மனதில் ஏற்றி வைத்து இருந்தேன். தோழி ஒருத்தி அவள் அப்பாவின் அசைவற்ற உடலை உசுப்பி உசுப்பி உயிர்ப்பிக்கப் பார்த்தாள். அப்போ, என் அப்பனும் ஒருநாள் இப்படி கிடத்தப்படுவான் அல்லவா! தொண்டைக்குழியில் பனிக்கட்டி ஒன்று உருண்டை வடிவிலும் குழியின் பாதையை கச்சிதமாக அடைத்தாற் போலவும் உறைந்தது. பெருகி வந்த கண்ணீர்தான் இப்பனிக்கட்டியாய் உருமாறியிருக்க வேண்டும்.

அம்மா இன்னும் வேகமுற மோதுகிறாள். அவளைத் தடுக்க வேண்டும். இன்றிலிருந்து போன மூன்றாவது நாள் வரை அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்ளவே இல்லை. ஓராண்டாக அவர்களுக்குள் பேச்சு நின்று போயிருந்தது.

நேற்று இரவுதான் ஒரே அறையில் நாங்கள் மூவரும் ஒன்றாய் இருந்தோம். ஒரு வருடம் பேசிக்கொள்ளாத நபர்களாய் அவர்கள் அந்நியப்படவே இல்லை. அப்பாவின் கால்களை அம்மா பிடித்துவிட்டுக் கொண்டு இருந்தாள்.

“என்னப்பா! உங்காளு டூட்டில சேர்ந்தாச்சா” என்ற நானும் அப்பாவும் சிரித்தோம்

“நான் பெண்டாட்டியா இப்பவரைக்கும் நிக்குறேன். உன் அப்பன் மாதிரி உதறிவிட மாட்டேன்” என்றாள் அம்மா.

இரண்டு நாட்களுக்கு முன்வரை அம்மா அப்பாவிடம் பேசவே இல்லை.

“அப்பாவுக்கு வயிற்று வலி, என்னுடன் வருகிறாயா?”

“நான் வருவதாக இல்லை. அவனுக்கும் எனக்கும் இழுத்துப் பிடிக்க எந்த மீதமுமில்லை”.

“நான் சொல்கிறேன் நீ வந்தாக வேண்டும்”.

அப்பா அம்மா சண்டை என்பது யுத்தமாக முடிந்தால் கூட சீக்கிரம் முடிவுறும். அதுவே பனிப்போர் எனும் பரிமாணத்தில் பேரப்பிள்ளை காலம் வரையிலும் பணிக்கு இருக்கும்.

அப்பா உண்ணாமல்
அம்மா உண்ண மாட்டாள்
அப்பா வாராமல்
அம்மா உறங்க மாட்டாள்
அப்பாவுக்கு பொய் பிடிக்காது
அப்பாவுக்கு புரட்டு பிடிக்காது
அப்பாவுக்கு இனிப்பு பிடிக்காது
அப்பாவுக்கு அவளையும் பிடிக்காது
என்ற வாய்ப்பாட்டில்தான் எங்களை
வளர்த்தாள்.

நள்ளிரவில் அவள் வீசியெறியும் பாத்திரங்களின் சத்தத்திற்கு நான் பழகியிருந்தேன். என் தூக்கத்தை அம்மாவின் நியாயத்திற்காக நான் கலைத்துக்கொண்டதே இல்லை.

தம்பி ஓடுவான், இருவருக்குமிடையே பரிதவிப்பான். அம்மாவை அடிக்க கை ஓங்கும் அப்பாவின் கால்களைப் பிடித்து தொங்குவான். அந்தச் சிறுவனின் போராட்டம் அவர்களை அமைதி நிலைக்கு கொண்டு வந்ததே இல்லை. எப்போதாவது நான் எழுந்து வேடிக்கைப் பார்ப்பேன். உனக்கு இதயமே இல்லையா! ராட்சசி! சுயதேவைக்காரி! என்றெல்லாம் என் தம்பி எனக்கு மூத்தவன் போல கேட்பான். நான் சிரித்துக்கொண்டே திரும்பவும் தூங்கச் செல்வேன்.

அப்பாவும் அம்மாவும் சிரித்துப் பேசிக்கொள்ளும் அந்த ஒருசில வேளைகளை அவ்வளவாக நான் பொருட்படுத்தியதே இல்லை. அது செடியில் ஒட்ட வைத்த பூ போல, தட்டிவிட்டால் கொட்டிவிடும். அந்தச்செடி பூக்காமலேயே வயதைக் கூட்டிக்கொண்டே இருந்தது.

அம்மா கண்டிப்பானவள். அரச நர்த்தகிகளின் அலங்கரித்த கண்களைப் போன்றது கண்மைக்குப் பழக்கப்படாத அவளது கண்கள். அப்பாவுக்கென்றே சமைக்கப்பட்ட வடிவமவள். நேர்மையானவள். மனிதர்களைக் கணிப்புக்குள் முக்கி எடுத்துக்கொண்டே இருப்பாள். அவளின் குரல் வளம் மட்டுமே அப்பாவுக்கு பிடிக்காது.

அம்மாவுக்குப் பிடித்த குணமாய் எதுவுமே அப்பாவிடம் இல்லை. பெண்கள் என்றால் கூடுதலாய் இறங்கும் அவரின் இளகிய மனம் அவளின் மூளைக்குள் நிரந்தரக் கொப்பளங்களாக சீழ் வடித்தன.

பிள்ளைகள் பெறுவதற்கு அப்பாவும் அம்மாவும் சண்டையிடாமல் இருக்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.

இந்த பிள்ளைகளுக்காகத்தான் நான் உன்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று இந்த வாரம் அம்மா சொன்னால், அடுத்த வாரம் அப்பா சொல்வார்.

தம்பியும் நானும் அவர்களை இழுத்துக் கட்டியிருக்கும் தேங்காய்ப்பிரி.
நாங்கள் வளர வளர அப்பாவின் வீரம் குறைந்தது. அம்மாவின் சோகம் குறையவில்லை. அம்மாவுக்கு மாமியார், நாத்தனார் இல்லாத குறையை நான் தீர்த்துக்கொண்டிருந்தேன்.

எங்கள் மூத்தக்குடி கிழவி ஒருத்தி ஒரு சாவு வீட்டில் எனைப் பார்த்தாள். என் கண்ணில் படாத அந்தக் கிழவியின் கண்ணில் நான் பட்டிருக்கிறேன்.

“எவடி அவ.. மீனாட்சி சாடைல ஒயிலாட்டம் காட்றவ!”

என் தூரத்து அத்தை ஒருத்தி எனைப் பிடித்து கிழவியின் படுக்கையில் அமர வைத்தாள்.

நன்கு பிடித்துப் பார்த்த பருத்திப் புடவைகள் பத்தை அடுக்கி அதன்மேல் படுத்தே கிடந்திருக்கிறாள் கிழவி. உட்கார்ந்த எனக்கே ஒனக்கையாக இருந்தது. புகையிலை நெடி நாசிக்கேறியது.

“மீனாட்சி அம்சம் அவ மவளுக்குக் கூட வாய்க்கலையே நீ அப்படியே அவளை அச்செடுத்துருக்கியேடி சிறுக்கி!, அவ தலையை முழுகி காத்துல உதறுனா பின்னமுடி புட்டமேட்டைத் தாண்டும்” என்றவளை இளக்காரமாய்ப் பார்த்தவளாய் பின்னாலிருந்த என் பின்னலைத் தூக்கி முன்பக்கம் கொண்டு வந்தேன். சுற்றி வரும்போது கிழவியின் மூஞ்சில் பொளிச்சென்று சாத்தியது.

உங்கப்பன் வவுத்துல தரிச்சப்பயே அவங்கப்பன் போய் சேர்ந்துட்டான். வவுத்துல புள்ளையோட தாலி அறுத்தா உன் ஆத்தா மீனாட்சி. புள்ளயப் பெத்து ஒரு வயசு போல வளர்த்திருப்பா என்ன நெனச்சாலோ ஏது நெனச்சாலோ சுருக்கு வச்சிக்கிட்டா.

எந்த இறுதிச் சடங்கிலும் இறுதி வரை நின்றதில்லை அப்பா. தண்ணீர் எடுக்க துறைக்கு கிளம்பினாலே எங்கள் கார் கிளம்பிவிடும்.

அப்பா உன் அப்பாவைப் பார்த்திருக்கிறாயா?

இல்லை.

போட்டோ?

இல்லை.

உன் அம்மாவை?

ம்ம்.

எப்படி இருப்பாங்க?

தெரியாது.

பார்த்திருக்கேன்னு சொன்ன?

கோழிப் பஞ்சாரத்தைக் கவிழ்த்துப் போட்டு அதன் மீதேறி பின் அந்தக் கூடையை உதைத்து விட்டாள். அவள் கால்கள் வெட்டி வெட்டி உதைத்தது. நான் உட்கார்ந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். முகம் நினைவில்லை.

நான் அப்போது தாயாக இல்லை.ஆனால் அப்பா என் கண்களுக்கு என் வயிற்றிலிருந்து வந்தவர் போல தெரிந்தார். குறுக்கெலும்பில் ஏதோ ஓர் குறுகுறுப்பு அவர் அப்படிச் சொன்னதும். அன்றிலிருந்து நான்தான் மீனாட்சி. அம்மாவின் மாமியார்.

அம்மாவின் நியாயங்களுக்கு என்னிடம் ஆதரவு கிடைக்கவே கிடைக்காது. அம்மாவுக்கென்ற ஒரு உலகை நான் அங்கீகரித்ததே இல்லை. அப்பாவுக்கான அழகி நீ! அவரை மகிழ்விப்பதற்கான வனிதை நீ! வாக்குவாதம் செய்யவே கூடாது நீ !

என் மருமகள் லேசுபட்டவள் இல்லை. நான் நானாகத்தான் இயங்குவேன். அவனுக்காக நான் புதைய மாட்டேன். அவன் வழி வேறென்றால் என் வழி வேறு என்று சபதமெடுத்தாள்.

அப்பாவின் வயிற்று வலி அவளை பெரிதாக பயமுறுத்தவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக்கொள்ளும் உடைந்த காதலர்கள் அவர்கள்.
யார் முதலில் பேச்சைத் துவங்குகிறார்கள் என்று கவனித்தேன். அப்பாதான்!

‘அந்த தண்ணியை எடு” என்றார் அம்மாவை.

பேச்சின்றி பேச்சு கொடுத்தாள் அம்மா.

மருத்துவமனையிலிருந்து இருவரையும் தம்பதி சகிதமாய் அழைத்துப் போவேன் என்றிருந்தேன்.

இதுநாள் வரை போட்டிருந்த சண்டையெல்லாம் சாபமாய் நின்றது அம்மாவுக்கு. தான் வெற்றியோடு வாழ்வதாய் நினைத்து வந்த அம்மாவுக்கு அப்பா இல்லாத அந்த நொடி படுதோல்வியாய் இருந்தது.

என் கண்ணை விட்டு அகலாமல் நான் வைத்திருந்த என் மகன் என் கண்முன் சரியவில்லை .என் கண்ணில் மண்ணடித்து அம்மாவிடம் மண்டியிட்டு இருக்கிறான். மண்டியிட்டவனை அம்மா மடியில் ஏந்தியிருக்கிறாள். மேல்நோக்கி நெஞ்சைத்தூக்கி அம்மாவின் முகம் வரைக்கும் அவன் முகம் உயர்த்தி இருக்கிறான்.

“என்ன பண்ணுது? சொல்லுங்க சொல்லுங்க “என்று அம்மா கரிசனையாகக் கேட்டிருக்கிறாள்.

என்ன சொல்ல வந்திருப்பானோ ஒன்றுமே சொல்லாமல் நிலைக்குத்திட்டான் போலும்.

அவள் என்னைத் தேடி ஓடி வந்திருந்த போது அப்பா அவசரப் பிரிவிற்கு தூக்கப்படிருக்க வேண்டும்.

மருத்துவர் வெளியே வந்தார். என் முகம் பார்க்க முடியாதவராய் அவரின் முகம் தொங்கியே இருந்தது. அவரும் எதிர்பார்க்கவில்லைதான் போலும். நடை உடையாய் சாதாரண வயிற்று வலிக்கு வந்த அப்பா இப்படி ஒட்டுமொத்த அடைப்பிற்குள் செயலிழந்தது அவருக்கும் விந்தையாகத்தான் இருந்தது. என்னிடம் அவர் ஏதும் பேசவில்லை. செவிலிப்பெண் ஒருத்தி அம்மாவிடம் நிலையைக் குழைவாக சொல்லியிருந்தாள்.

அம்மா தன் தாலியைப் பிடித்துக் கொண்டு மன்றாட ஆரம்பித்தாள். இத்தனை வருடமாக அவள் சபித்துக் கொண்டிருந்த வாழ்வே தனக்கு மீண்டும் வேண்டும் என்றாள். அப்பா என்றாலே வெறுப்பு என்ற வேடம் இன்று தானாய்க் கலைந்து விட்டது. கோடி முத்தங்கள் வைப்பதாக அப்பாவிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தாள்.

அசைவற்ற அப்பா எனக்கு அருவருப்பாய் இருப்பார். நான் அந்த அறைக்குள் நுழைய யாதொரு பிரயத்தனமும் எடுக்கவில்லை. அப்பாவின் வாயிலிருந்து இரத்தம் வழிந்தோடிய தடம் இருந்ததாக அவரைப் பார்த்த தோழி ஒருத்தி சொன்னாள். மீனாட்சி கொடுத்திருந்த அந்த ஓராண்டு தாய்ப்பால் இப்படி வெளியாகியிருக்க வாய்ப்பில்லை. தாய் தந்தை இல்லாமல் மாடாய் உழைத்த காலத்திலேயே அந்த பாலெல்லாம் ஆவியாகியிருக்கும். இது அப்பனின் இரத்தம். சிறந்த அப்பனாக, சிறந்த தாத்தாவாக, சிறந்த தோழனாக, சிறந்த மனிதனாக தன்னைத்தானே வார்த்தெடுத்துக் கொண்டவனின் சொந்த இரத்தம். நல்ல கணவன் என்ற பெயரெடுக்க முடியாமல் போனவனின் இரத்தம்.

சுற்றமும் நட்பும் ஒருசேர அழுது முடித்திருந்த அந்தி அது. அப்பா இல்லாத அந்தி அது. மழைக்கான அறிகுறிகளே இல்லாமல் அப்பாவின் உடலை நனைத்து சுடுகாட்டிற்கு அனுப்பிய அந்தி அது.

அப்பாவின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாலைகளிலிருந்து வந்த மணம் வீட்டை பரிபூரணமாய் ஆட்கொண்டிருந்தது. அந்த ரோசாப்பூ மாலைகள் மட்டும் தனிரகமாய் கமழ்ந்தன. காற்றில் அப்பா ஒட்டிக்கொண்டிருப்பது போன்ற உத்திரவாதம். தண்ணீரை அள்ளி குடிக்கும் பிஞ்சு கைகள் போல அம்மணத்தை அள்ளி அள்ளி உட்கொண்டேன்.

ஒவ்வொருவராய் விடைபெற்றனர். அப்பாவின் பெருமை பேசும் துக்க விசாரிப்புகள் அம்மாவை உயிருடன் சிதையிலிறக்கின. அப்பாவுடனேயே அவளையும் வைத்தெரிக்கச் சொல்லியிருந்தாள். பன்னெடுங்காலமாய் போராடி நீக்கிய சடங்கல்லவா அது. அம்மாவின் அவசரத்திற்கு அதை செயல்படுத்த முடியாதல்லவா!

யாரும் ஒத்துழைக்கவில்லை அவளின் வேண்டுதலுக்கு.

அன்றிரவு திண்ணையில் ஓர் ஓரமாக தன்னைத்தானே ஒடுக்கிக்கொண்டாள் அம்மா. எவ்வளவு வற்புறுத்தியும் அவளுக்கென்றே அப்பா கட்டிய அந்த பெரிய வீட்டிற்குள் அவள் வரவே இல்லை.

அம்மாவைப் பார்த்து கண்ணீர் விட்டேன். அவளின் இந்த நிலைக்கு நான் என்னை தயார்படுத்தி வைத்திருக்கவில்லை.

தன் வாழ்நாள் மொத்தமும் அப்பாவைப் பற்றியே வசைத்துத் தள்ளியவள், இனி யாரைப் பற்றி பேசுவாள்! இனி யாரைச் சுற்றி அவளின் கொப்பள மூளை பயணிக்கும்!

தான் அவனை எல்லா வகையிலும் இழந்திருப்பதாக வாய்விட்டுச் சொல்லி அழவே இல்லை அவள். அவளின் வரட்டு வைராக்கியம் அவளை அதற்கு வளைந்து கொடுக்க விடவே இல்லை.

ஆனாலும் அழுதாள். மார்பை அடித்து அடித்து அழுதாள். நிச்சயம் இந்நேரம் அந்த மார் கருப்பாகக் கன்றிப் போயிருக்கும்.

அம்மாவை இப்போது தொட்ட போது ஈரமாவு போல நெகிழ்ந்து இருந்தாள். அழுத்தி பிடித்தால் அவளது தோல் கிழிந்துவிடும் போலிருந்தது. தனது கல்யாணப் புடவையைச் சுற்றிக்கொண்டு நத்தை போல கிடந்தாள். முனகலின் வழி மூச்சிழுத்துக்கொண்டிருந்தாள்.

எப்படித்தான் தூங்கிப் போனேனோ நான்! தெரியவே இல்லை. நடுநிசி. வளர்ந்திருந்த ஆண் அல்லவா, தம்பியின் குரல் கரகரவென அசுரன் உசுப்பது போல என்னை எழுப்பியது.

“அப்பா வந்திருக்கிறார் வா “என்றான்.

அந்த கலக்கத்திலும் தெளிவாய் இருந்தேன். அப்பா வர வாய்ப்பே இல்லை. இவன் உளருகிறான்.

நடை வாசலுக்கு வந்து இருட்டிற்குள் கை நீட்டினான். “அதோ பார், அப்பா” என்றான்.

இருட்டு அடர்த்தியாய் இருந்தது. பனியும் சாரலாய் ஊதியது. உற்றுப் பார்த்தேன். இரண்டு பளிங்குகள் ஒரே நேரத்தில் ஒரே அளவாய் உருண்டன. நான் அருகே போக எத்தனித்ததும் மியாவ்.. மியாவ்.. என்றது.

எங்கடா அப்பா? என்றேன் அயர்ச்சியுற்றவளாய்.

இதுதான் அப்பா.

இந்தப் பூனையா?

ஆமாம். அப்பா வெளியே போன பொழுதிருந்து இது இங்கே வந்து சேர்ந்துவிட்டது. அப்பாவின் விருப்பமான இடங்களை மட்டுமே சுற்றி வருகிறது. அப்பா கிடத்தப்பட்ட இடத்தை விட்டு அகலவே இல்லை. அப்பாவின் செருப்புக்குள் புகுந்து புகுந்து வந்தது. அப்பாவேதான் நம்பு என்றான்.

அந்த குட்டிப்பூனை நடந்து வந்து விளக்கின் வெளிச்சத்தில் தன்னைக் காட்டியது. அங்கும் இங்கும் நிதானமாக நடந்தது.

அப்பாவுக்கு பசிக்கிது போலிருக்கு. நான் போய் பால் எடுத்து வருகிறேன் என்று உள்ளே சென்றான்.

பூனைக்கு பழக்கப்பட்டிராத வீடு எங்களுடையது. அப்பாவிற்கு பூனை என்றால் சுத்தமாகப் பிடிக்காது. இந்தப் பூனை நிச்சயமாக அப்பா இல்லை.

பாலை ஒரு சின்னக் கிண்ணியில் ஊற்றினான். அது குடிக்கவே இல்லை. அங்கும் இங்கும் நடந்தது.

நானும் நான்கு மணி நேரமாகப் பார்க்கிறேன். ஒரு இடத்தில் இருக்க மாட்டேங்குது. அம்மாக்கிட்ட அம்மாக்கிட்ட போகுது. அம்மாவைச் சமாதானப்படுத்த அப்பா செய்யும் வேலையான அம்மாவின் தலைமுடியை இழுத்து இழுத்து ஓடுகிறது. அம்மா தள்ளி விரட்டியும் அங்கேதான் போகுது என்றான்.

அவன் சொன்ன மாதிரியே அம்மாவின் தலைப்பக்கமாக அணைசலாய்ப் படுக்கிறது. “சைக்.. தள்ளிப்போ.. நிம்மதியா விடுதா பாரு இந்தப் பூனை” என்று விரட்டியடிக்கிறாள் அம்மா.

“அம்மா அப்பாவை இன்னுமா விரட்டி விட்ற” என்றேன் நமட்டலாக.

“என்னை தனியா தவிக்க விட்டுட்டு போய்ட்டான். இப்ப என்னாத்துக்கு என் பக்கத்துல வாரான்” அம்மா செல்லம் கொஞ்சினாள். அழுத கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தது அந்த பூனை.

அம்மா விரட்ட விரட்ட அம்மாவை விட்டு ஓடியது போல் நகர்கிறதே தவிர பூனையின் குறி அம்மாதான்.

பூனை ஓயவே இல்லை. இம்முறை அம்மா மனமிறங்கினாள். பூனையை புடவைக்குள் அணைத்தவாறு படுக்க வைத்துக்கொண்டாள்.

அப்பாவை மீட்டுக்கொண்டதாய் ஒரு பெருமூச்சுடன் அம்மாவின் உடல் இயல்பிற்குள் சென்றது. கடக்கப்போகும் தனிமைத் துயருக்கு இனி ஒவ்வொன்றிலும் அப்பாவைப் பொருத்த வேண்டும் அவள்.
வேறொரு வடிவு கிடைக்கும் வரை அது அப்பா பூனை.

***
அருணா சிற்றரசு – திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தவர், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று திருவாரூர் மாவட்டம் எடகீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி அசிரியராகப் பணியாற்றி வருகிறார். இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார்.மின்னஞ்சல்: arunachitrarasu@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular