நட்சத்திரம்
*
திரையரங்கிற்குள் நுழைந்துவிட்டது
ஒரு தன்னந்தனி மின்மினி
எல்லோரும் அண்ணாந்து பார்க்க
இருளில்
திரைமூடி விலக்கித்
துவக்கியது
தனது ஒளிக்காட்சிகளை.
ஒவ்வொருமுறை
தோன்றும்போதும்
பெரிய வெண்திரையை
எப்படியோ மறைத்துவிடுகிறது
அந்த சின்னஞ்சிறு மினுக்கம்
சரியாக வை
*
ஐந்தில் வைக்காதே
காற்று
அடித்துவிட்டுப் போய்விடுகிறது,
மூன்றில் வை
அப்போதுதான் அது
ஒரு குழந்தைபோல்
என்மீதேறி அமர்கிறது.
மொத்த உடலும்
பூமியில் வேர்பிடிக்கையில்
ஒரு இசைத்தட்டென
என்னில் பதிந்திருக்கும் பாடல்களை
மென்விரல் தொட்டு கண்டுபிடிக்கிறது
அது
ஓராயிரம் வண்ணத்துப்பூச்சியின்
கொம்புகளென மொத்தமாய்
எனை உரிஞ்சும்முன்
சீக்கிரம்
மீண்டும்
பூஜ்ஜியத்தில் வை
உள்வட்டம்
*
அவர்கள் சொன்னது சரிதான்
மிக அழகான ஒன்றைச் சுற்றித்தான்
ஆபத்து இருந்தது
அழகை நெருங்க நெருங்க
ஆபத்து அதற்கு
வேண்டியதையெல்லாம் எடுத்துக்கொண்டது
கடைசியில் எப்படியோ
நைஸாக நான்
அழகிற்குள் புகுந்துவிட்டேன்
இப்போது அழகுதான்
ஆபத்திடமிருந்து என்னை
எப்போதும் பாதுகாக்கிறது
எஞ்சுவது
*
மலையை
மலையிடுக்கில் மலர்ந்த
மலைப்பூவின் கீழ்
மறைத்து வைத்தவன்
அவன்தான்
பாடலை
பாடலின் இடைகிடந்த
வார்த்தையிலும் வைத்தான்
சுவைக்குமெதனுள்ளும்
சுவைமிகுந்தவொன்றை வைத்த
அவனேதான் என்காதில் சொன்னான்
நீ சுவைப்பதில் சுவைத்தபின்
எஞ்சுவதே விதை
ஆனந்த்குமார் – ஆனந்த்குமார் (மார்ச் 22, 1984) பிறந்தது நாகர்கோயிலில். புகைப்பட நிபுணராக இருக்கும் இவர், ஆவணப்படம் மீதும் ஆர்வம் கொண்டிருக்கிறார். டிப் டிப் டிப் கவிதைத்தொகுப்பு – தன்னறம் வெளியீடு 2021. அண்மையில் தனது முதல் கவிதைத் தொகுப்பிற்கு குமரகுருபரன் – விஷ்ணுபுரம் 2022 விருது அறிவிக்கப்பட்டது. தொடர்புக்கு – ananskumar@gmail.com