பாலைவன லாந்தர்
*
சன் ஆஃப் பிட்ச் மற்றும் சன் ஆஃப் காட்
செப்புப் பட்டயங்களில் சித்திர எழுத்துக்களை
கூர்மையான எழுதுகோலால் சிரத்தையுடன்
செதுக்கும் தேர்ந்த கலைஞனின்
கண்களும் விரல்களும் பரிபாஷிக்கும் மொழியால்
உன்னை அழைப்பேன்
கத்திகளைப் போன்று
நாக்கும் நகங்களும் கொண்ட பெண்ணே
எரியும் சிம்னியின் ஒளியைச் சிறிதாக்கு
ஒளியாண்டுக்குள் நுழையும் மலையாடுகளின் கண்களும்
சினை முட்டைகளை உமிழும் மீன்களும்
புணர்ச்சிக்கு பிந்தைய வார்த்தைகளும்
ஊடுபாவெனச் சொல்
உறங்கும் போதும் விழித்துக் கொண்டிருக்கும்
நரம்பின் பற்களை வருடி
மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து புறப்படும்
யூகலிப்டஸ் இலைகளின் ஊசிமுனைகளை
குறித்து விசனப்படுகிற
இந்த வனமெங்கிலும் குரங்குகளால் ஆனது
அவைகளுக்கு நீ தீனியிடலாம்
அவைகளுடன் நீ விளையாடலாம்
அவற்றை கொன்றும் விடலாம்
முழுமையாக குரங்காக பரிணாமிப்பதிலிருந்து
உன்னை காத்துக்கொள்வது உனக்கான சாமர்த்தியம்
துரதிர்ஷ்டம் நிறைந்த இரவில்
உடுக்கையின் மேலொலி கீழொலியைப் பிரித்து
கடிகாரம் இசைக்கிற போது
துளைகளால் ஆகிவிட்ட எனது குடுவையில்
உன்னை ஊற்றிக் கொடுக்கிறாய்
வடகோடியில் சாய்த்து வைக்கப்பட்ட யாழ்
தனது நரம்பை பிடிமானத்திலிருந்து பிடுங்கிக்கொள்கிறது
ஈக்கள் மொய்க்கும் மாம்பழத்தினுள்
வண்டுகள் பேசுகின்றன
”தூரப்போ தூரப்போ”
நாபித்துளையின் வழியே கேட்கின்றனவா
“தூரப்போ தூரப்போ”
கடல் பற்றிய நம் பேச்சு ஓய்ந்ததேயில்லை
நீயும் கடலும் காய்ந்துப் போகாத ஈரப்பதங்கள்
எந்தத் துளியில்
எந்தத் துளியாக
வேண்டுமென தீர்மானிக்கிறாய்
இரவுதோறும் “சன் ஆஃப் பிட்ச்” என்றும்
சூரியன் உச்சந்தலைக்கு மேல் நேர்க்குத்தி நிற்கும்போது
“சன் ஆஃப் காட்” என்றும் அழைக்கும்
உன்னைக் குறித்து எழுதுவதற்கு இன்னமும் தயங்குகிறேன்
*
2
இறந்த காலத்து காதலன்
வானதி இறந்துவிட்டாள்
நான் அவளுடைய முந்நாள் காதலன்
அவளை வழியனுப்ப வந்திருக்கிறேன்
அவளுடலின் மீது எனது மாலையைச் சாத்திவிட்டு
ஓர் ஓரமாக நின்றுக் கொண்டேன்
சாவுக்கென மலர்ந்திருக்கும் மலர்களில் இன்று
வானதியே மிக அழகிய மலராகக் கிடந்தாள்
முதன் முதலாக ஒரு மழைப் பொழுதில் சந்தித்தோம்
குளிருக்கு நெருப்பூட்டிய மக்காச்சோளம் வாட்டும் வண்டியினருகே
மின்மினிப் பூச்சிகளைப் போல் தீப்பூக்கள் பறந்தன
பொய் அச்சத்தில் கண்களை மூடிக்கொண்டாள்
அவளை தீக்கிரையாக்க ஏன் அவசரப்படுகிறார்கள்
வானதி
அழகான மஞ்சள் நிறப் புடவையில் சுருட்டிக் கிடத்தப்பட்டிருந்தாள்
முகமெல்லாம் மஞ்சள் பூசப்பட்டிருந்தது
கைகளில் கண்ணாடி வளையல்கள்
கால் கொலுசுகள் எதுவுமே அசையவில்லை
மூக்குத்தியைத் தவிர
இரு பெருவிரலும் கட்டப்பட்டிருந்தன
விறைத்துக் கிடந்தாள்
என்னுடைய என்ஃபீல்ட் வண்டியைத் தவிர
எந்த இருசக்கர வாகனத்திலும் அவள் பயணித்ததில்லை
அவளுக்கு போக்குவரத்து நெரிசலும் வேகப் பயணமும் பிடிக்காது
பேசிக்கொண்டே நாற்பது கி.மீ வேகத்தில் போக வேண்டும்
எப்படி சட்டென விண்ணுக்குப் பறந்துச் சென்றாள்
அதுவும் பேசாமல்
தோல்வியடைந்த காதலர்கள் மீண்டும் இவ்வாறு
சந்தித்திருக்க கூடாது
எல்லோரும் எங்களைக் குறித்து கிசுகிசுக்கிறார்கள்
நாங்கள் பேச மறுத்ததை
நாங்கள் பேச மறந்ததை
சம்பிரதாயங்களைக் கடந்து அவளிடம் நெருங்க நினைக்கிறேன்
சம்பிரதாயங்களைக் கடந்து அவளை முத்தமிட நினைக்கிறேன்
ஆனால் எதுவோ தடுத்தது
எதுவோ நகரவிடவில்லை
எதுவோ நெஞ்சின் மீது பாதங்களை அழுத்தியது
எதுவோ காட்சிகளைப் புரட்டியது
எதுவோ எதுவோ
அந்த எதுவோவின் பக்கமாக சாய்ந்துக் கொண்டேன்
முற்றிலுமாக சாய்ந்தே விட்டேன்
“வானதி எழுந்திரு போகலாம்’ என்று அவள் புதிய காதலன் அழைக்கும் வரை
வானதி என்னுடலை தாண்டிப் போகும் வரை
என் உடல் வானதியின் சாயலிலிருந்து நீங்கும் வரை
***
பாலைவன லாந்தர் –
இயற்பெயர் நலிஜத், பிறந்தது காயல்பட்டிணம் தூத்துக்குடி மாவட்டம் வளர்ந்தது சென்னை. . உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள், லாடம்,ஓநாய் என மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஊரடங்கு காலத்தில் ஆவணப்படம் ஒன்றை இணையம் வாயிலாக இயக்கியவர். விரைவில் இவரது கவிதைகள் ஆங்கிலத்தில் வர இருக்கின்றன.
மின்னஞ்சல் – palaivanam999@gmail.com