பறந்து சென்ற பறவைகள் இன்னும் திரும்பவில்லை
காத்திருந்தது கனவு
புரண்டு புரண்டு படுத்தது விழிப்பு
விடியக் காத்திருந்தது இருள்
கனவு மூடக் காத்திருந்தது விடியல்
இருள் அந்தியின் தத்தளிப்பு
நரை வானத்தில் உற்சாகமாய்
சிலம்பிக் கொண்டிருந்தன
பறவைகள்
***
ஓடாத கைக்கடியாரத்தை
அறிந்தே பரிசாய் அளித்து விட்டுச் சென்றான்
நண்பன் சாயல் கொண்ட நண்பன்
வெகு காலத்திற்கு பிறகு
அது துடிக்கத் தொடங்கியது
அந்த நண்பன் இறந்து விட்டதாய்
நான் அனுமானித்துக் கொண்டேன்
ஆம் …
அவன் இறந்துதான் விட்டான்
***
தென்னங்கீற்றீல் ஆடிக் கொண்டிருந்தது கிளி
அவன் மனம் கொண்ட வில்லால்
அதனைக் அடித்துக் கொண்டிருந்தான்
தப்பிப் பறக்கவில்லை
அதே இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தது கிளி
அம்புகள்தான் விலகி விலகிச் சென்று கொண்டிருந்தன
***
அப்பா கிணற்றில் தண்ணீர்
இரைத்துக் கொண்டிருந்தார்
தேங்காய் துருவிக் கொண்டிருந்தது ஒரு குழந்தை
வாசலை பெருக்கிக் கொண்டிருந்தது இன்னொன்று
விளக்கை தேய்த்துக் கொண்டிருந்தாள் அக்கா
அவரைக்காய் ஆய்ந்து கொண்டிருந்தது கடைக்குட்டி
அவர்கள் அம்மாவிற்கு
இன்று சுபம்
***
–T.கண்ணன், பிரம்மாக்ஷஸ் சிற்றிதழை நடத்தியவர். ஸ்ரீரங்கத்தில் வசித்துவருகிறார். “என் நினைவிற்கும் உன் மறதிக்கும்” கவிதைத் தொகுப்பு 2019ல் வெளியானது, “கல்வெட்டுச் சோழன்” எனும் இவரது சிறுகதைத் தொகுப்பும் அண்மையில் மறுபதிப்பு கண்டது