ரூபன் சிவராஜா
‘The family man 2’ இணையத் திரைப்படத்தொடர் (web series) தொடர்பாக நிறையவே சமூக ஊடகங்களில் பேசப்படுகின்றன. அதன் முன்னோட்டம் வெளிவந்தபோதே விமர்சனங்கள் எழத்தொடங்கி விட்டன. ஒன்பது பகுதிகளைக் கொண்டுள்ளது இத்தொடர். இதன் முதல் பாகத்தில் அதாவது Season–1-ல் இஸ்லாமியப் பயங்கரவாதத்தை முறியடிப்பதாய் கதை நகர்வு அமைக்கப்பட்டிருந்தது. Season–2-ல் ஈழத்தின் ஆயுதப் போராட்டம், மோசமான பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ‘இந்தியத் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான அந்தப் பயங்கரவாதத்தினை எந்த விலை கொடுத்தும் அழிக்க வேண்டுமென்று’ இந்திய உளவுப்படை களமிறங்குவதே கதையின் மையம்.
இதுவொரு வரலாற்றுப் புரிதலற்ற அபத்தமான திரைத்தொடர். அதற்காக இது புரிதல் இல்லாதவர்களின் அப்பாவித்தனம் என்பதல்ல. இதுவொரு திட்டமிட்ட சித்தரிப்பு. இந்திய உளவுத்துறையின் நோக்குநிலையில், ‘இந்தியத் தேசிய பாதுகாப்பு’, பிராந்திய அதிகாரத்தை முன்னிறுத்திய திட்டமிட்ட அணுகுமுறை. புனைவு என்ற போர்வையில் யதார்த்தக் களங்களையும் பாத்திரங்களையும் எடுத்தாள்வதனூடு தமக்குச் சாதகமான திரிப்புகளைச் செய்துள்ளனர்.
ஈழப்போராட்ட ஆளுமைகள் பற்றிய சித்தரிப்பு மிக மோசமான முறையில் பிம்பச் சிதைப்புச் செய்யப்பட்டுள்ளது. இங்கு பிம்பம் எனும்போது, தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் மத்தியில் நிலவுகின்ற உணர்ச்சிவசப்பட்ட புனிதப்படுத்தல் பிம்பங்களை நான் குறிப்பிடவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சரிகளுடனும் தவறுகளுடனும் வரலாற்று வகிபாகத்துடனும் அவர்களுக்கென ஒரு விம்பம் உள்ளது. அவர்கள் பற்றிய பொதுவான மதிப்பீடுகள் உள்ளன. அந்த விப்பத்தையும் மதிப்பீடுகளையும் இந்தத் திரைத்தொடர் முழுமையாகச் சிதைத்துள்ளது. அந்த விம்பச்சிதைப்பு என்பது ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு காலகட்டத்தின் கடந்தகால அரசியலை இழிவுபடுத்துவதோடு எதிர்கால அரசியலை மந்தமாக்கும் முனைப்பினைக் கொண்டதாகும்.
இதனை வெறுமனே விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்த இழிவுபடுத்தல் என்பதாக மட்டும் கருத முடியாது. அதன் ஊடாக ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அடிப்படைகளையும் மலினப்படுத்துதாகும். ஈழத்தமிழ் மக்களை மட்டுமல்ல தமிழகத்தையும் தமிழக மக்களையும் கீழ்மையாகச் சித்தரிக்கின்ற காட்சிகள் பல உள்ளன.
இவர்கள் எடுத்துக் கொண்ட களம், பின்-முள்ளிவாய்க்கால் காலம். புலிகள் அமைப்பின் தலைவர் உட்பட்ட சில முக்கியஸ்தர்கள் இறுதிப்போரில் தப்பிச்சென்று ஒரு Exile அரசாங்கத்தை நடாத்துவதாகச் சொல்லப்படுகின்றது. அதில் ஒரு குழு உலக நாடுகளின் அரசியல் அங்கீகாரத்திற்காகச் செயற்படுவதாகவும், முதல்நிலைத் தலைமை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் கூட்டுச் சேர்ந்து, இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் உண்மைத் தன்மை பற்றிய கேள்விகளை விபரிக்கத் தேவையில்லை.
பின்-முள்ளிவாய்க்கால் என்பது விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றிலும் இல்லாத சூழல். இறுதிப்போரின் பின்னர் அவர்களின் தலைமையைச் சேர்ந்த இராணுவ மற்றும் அரசியல் துறையின் எந்தவொரு ஆளுமைகளும் இல்லை என்பதே யதார்த்தம். இந்த நிலையில் இராணுவ மற்றும் அரசியல் அரங்கில் இல்லாத ஒரு இயக்கத்தை இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக முன்னிறுத்துவது முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்ட வெளிப்பாடு. மட்டுமல்லாது இந்தச் சித்தரிப்பு திட்டமிட்டதொரு புரொஜெக்ட். இல்லாத புலிகள் இயக்கம், இலங்கைக்கு வெளியில் ‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுகின்றது’ என்ற வரலாற்றிற்கும் சமகாலத்திற்கும் உண்மைக்கும் புறம்பான சித்தரிப்பு என்பது அபத்தம்மிக்க கற்பனை. இந்திய அரச அதிகாரத்திற்கு மட்டுமல்ல. சிறிலங்கா பேரினவாத அரச நலன்களுக்கும் சேவகம் செய்கின்ற விளைவை இது கொண்டிருக்கின்றது. ஈழத்தில் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அரசியல், சமூக, பண்பாட்டு ரீதியில் பௌத்த சிங்களப் பேரினவாதம் ஒடுக்குவதற்கு புலிகள் இன்னும் இருக்கின்றனர், இயங்குகின்றனர் என்ற கட்டுக்கதை சாதகமானது. தமிழகத்தை இந்திய மத்திய அரசு ஒடுக்குவதற்கு புலிகளுக்குத் தமிழகம் தளம் கொடுக்கின்றது என்ற கட்டுக்கதை சாதகமானது. அந்த அடிப்படையில் இது இந்திய – இலங்கை அதிகார நலன்களுக்கும் ஒடுக்குமுறைக்கும் சாதகமான சித்தரிப்புகளாகும்.
இவற்றைக் கற்பனையாக, புனைவாக முன்னிறுத்துகின்றோம் என அவர்கள் கூறலாம். அப்படித்தான் படத்தின் தொடக்கத்தில் ஒரு பொறுப்புத்துறப்பு அறிவித்தல் செய்திருக்கின்றார்கள். ஆனால் அந்தப் புனைவு இலங்கை அரசு – ஈழப் போராட்டம் – இந்திய அரசு என்ற யதார்த்தங்களை எடுத்துக் கொண்டுள்ளது. கதையின் களம் இத்தகைய யதார்த்தத் தளங்களில் நகரும் போது, அது வரலாற்றுத் திரிப்பின்றி, யதார்த்தத்திற்கு நேர்மையாக இருந்திருக்க வேண்டும். அந்த நேர்மையை எதிர்பார்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பது ஒருபுறமிருக்க கருத்தியல் தளத்தில் இத்தொடர் பற்றிய விவாதங்கள் அவசியமானவை. இறுதிப்போர் நடைபெற்றதாகக் காட்டப்படும் காட்சிகளில் பொதுமக்கள் கொல்லப்பட்ட எந்தத் காட்சிகளோ, தடயங்களோ காண்பிக்கப்படவில்லை. இந்தப் படைப்பாளர்களின் நேர்மையின்மை, மனிதநேயமின்மைமையை, அதிகாரத்திற்கு சாமரம் வீசும் மனநிலையைப் புரிந்துகொள்வதற்கு இதுவே போதுமான சான்று.
*
இந்தியாவின் வெளியுறவு அரசியலில், குறிப்பாக இலங்கை-இந்திய உறவு சார்ந்த முடிவுகளில் ஒரு மாநில அரசாக தமிழக அரச நிர்வாகத்தின் செல்வாக்கு பலவீனமானதாகவே இந்தத் தொடர் சித்தரிக்கின்றது. தமிழகக் காவல்துறையும் அதன் புலனாய்வுப் பிரிவும் மத்திய புலனாய்வுத்துறைக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பினை வழங்குகின்ற காட்சிகள் அதனைச் சொல்கின்றன.
2009-ற்குப் பின்னரான ஈழத்தமிழ் அரசியலை மந்தமாக்கியதில் முதன்மைக் காரணி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடிருக்கின்றார் என்ற பொய்யுரைப்பு. இந்தத் திட்டமிட்டதும் அரசியல் பிறழ்வுக்கு உட்பட்டதுமான பொய்யுரைப்பு ஒரு தொகுதி மக்களை அதனை நம்பவைத்திருந்தது. தற்போது அந்த நம்பிக்கைகள் தளர்ந்துவருகின்றன என்றபோதும் ஆரம்பத்தில் அவர் வீரச்சாவினை மறைத்தவர்கள் மனம் திறந்து இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை. அதேபோல தமிழகத்திலிருந்து படையெடுத்து ஈழம் அமைப்போம் என்ற சீமான் போன்ற தமிழ் இனவாத அரசியலை முன்னெடுப்பவர்களினது வாய்ச்சவடால்களும் தமிழகச் சூழலில் ஈழத்தமிழர் உரிமை அரசியலைப் பின்தள்ளிக் கொண்டிருக்கும் அம்சங்களாகும். மேற்சொன்ன இந்தக் காரணிகளின் சில பிரதிபலிப்பினை அல்லது விளைவுகளை இந்தத் திரைத்தொடரில் அவதானிக்க முடிகிறது. பின்-முள்ளிவாய்க்கால் சூழலில் தலைமைப்பீடத்தைச் சேர்ந்தவர்கள் தப்பி ஐரோப்பாவிற்கும் தமிழகத்திற்கும் செல்வதாகச் சித்தரிப்பது அதன் பிரதிபலிப்பே. பின்-முள்ளிவாய்க்கால் சூழலில் தமிழகத்தைத் தளமாகக் கொண்டு தாக்குதல் திட்டமிடுவதான சித்தரிப்பும் அத்தகையதே.
தமிழகம் போன்ற மாநிலங்கள் மத்திய அரசை நோக்கித் தமது உரிமைகளைக் கோரிவருகின்றன. அதற்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உட்பட்ட இன, மொழி, கல்வி, நிர்வாக உரிமைக் கோரிக்கைகள் என மத்திய அரசை நோக்கிய உரிமை கோரல்களை வலியுறுத்தி வருகின்றது.
இந்தியா என்பது ஒரு இந்துத்துவ, பிராமணீய மேலாதிக்க அரச கட்டமைப்பினைக் கொண்டிருக்கின்ற தேசம். மதரீதியான திணிப்புகளை தமிழ்நாடு உட்பட்ட மாநிலங்களில் மேற்கொண்டு வருகின்றது. திராவிடச் சமூகநீதிப் போராட்டங்களும், எதிர்ப்பரசியல் பண்பாட்டின் வரலாறும் அதற்குச் சான்றாக இருந்து வந்துள்ளது. தமிழகம் மாநில உரிமைகளை வலியுறுத்துகின்ற மாநிலமாக இருந்து வந்திருக்கின்றது. மத்தியில் கொங்கிரஸ், பாரதிய ஜனதா என மாறிமாறிக் கூட்டணிகளை அமைத்துக் கொண்டாலும் ஒப்பீட்டளவில் கலைஞரும் ஜெயலலிதாவும் தமிழகத்தின் உரிமை வலியுறுத்தலைத் தக்கவைத்து வந்துள்ளனர். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னரான தலைமைத்துவ இடைவெளியில் அதிமுக ஆட்சியில் பாரதிய ஜனதா செல்வாக்குச் செலுத்தியதெனினும், ஸ்ராலின் முதல்வராகப் பதவியேற்றதையடுத்து அவரது ஆட்சி நிர்வாகம் செயற்திறனுடனும் தமிழக உரிமைகளை வலியுறுத்தும் வகையிலும் செயற்படத் தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து தமிழகக் கிராம மக்கள் (காவல்நிலையத் தாக்குதல்) இந்திய புலனாய்வு அதிகாரிகளைத் தாக்குவதாக அமைக்கப்பட்ட காட்சி, தமிழக மக்களை இந்திய அரசுக்கு எதிரானவர்களாக, வன்முறையாளர்களாகக் காண்பிக்கும் நோக்கம் கொண்டது.
கிளைடர் விமானத்தினைப் புலிகள் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் வைத்து உருவாக்குவதாகவும் அதில் முழுவதும் வெடிகுண்டு நிரப்பி, சென்னையில் இலங்கை-இந்தியத் தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு உயர்மட்டச் சந்திப்பின் போது விமானம் மூலம் தற்கொலைத் தாக்குதல் நடாத்தத் திட்டமிடுவதாகவும் சொல்லப்படுகின்றது. வரலாற்று ஆதாரத்தினைத் தேடினால் புலிகள் ஆப்பிரிக்க நாடுகளிலிரந்து விமான உதிரிப்பாகங்களைக் கொண்டுசேர்த்து விமானங்களை உருவாக்கினர். விமானத்தின் மூலம் தாக்குதலுக்கு அவர்கள் தெரிவுசெய்த இலக்கு, சிறிலங்கா இராணுவத்தின் இராணுவ பொருளாதாரத் தளங்களாகும் (கட்டுநாயக்கா இராணுவ வான்படைத் தளம், 2007).
ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்ட யுகம் முடிவடைந்துவிட்ட பின்னும் அது இயங்குகின்றது என்பதும் – அதுவும் ஐ.எஸ் உடன் இணைந்து செயற்படுகின்றது என்பதும் – தமிழகத்தைத் தளமாகக் கொண்டு – இந்தியத் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்பதும் மோசமான மிக மோசமான, நேர்மையற்ற சித்தரிப்புகள். எந்தவித குறைந்தபட்ச ஆதாரமும் இல்லாதவை.
*
குடும்ப உறவுச் சிக்கல், குழந்தை வளர்ப்பு, உளவுத்துறை உறுப்பினர்களின் நாட்டுக்கான தியாகம் என்பனவற்றையும் சமாந்தரமாக இந்தத் தொடர் எடுத்துக்கொண்டுள்ளது. பரந்த பார்வையாளர்களை உணர்வு ரீதியாக இணைப்பதற்கு அது அவர்களுக்குக் கைகொடுத்துள்ளது. கணவன், தகப்பன் என்ற குடும்ப உறவுக்கான பொறுப்புகளுக்கும் அரசாங்க புலனாய்வு முகவர் என்ற பொறுப்புகளுக்குமிடையிலான அல்லாடுகின்ற உழல்கின்ற பாத்திரமாக மனோஜ் பாஜ்பாய் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. கணவன்-மனைவி உறவுச் சிக்கல், பாலுறவு, பிள்ளைகளின் பாடசாலை, வீட்டுச்சூழல், பதின்ம வயது மகளைக் காதலிப்பதாக நடித்து கடத்தப்படுகின்ற காட்சிகள், அவை ஏற்படுத்தும் பதட்டம் என்பன இந்தத் தொடர் உணர்வு ரீதியாக பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய அம்சங்களில் கவனம் செலுத்தியுள்ளது.
இத்தனை நெருக்கடிகளுக்குமிடையில் குடும்பத்தைப் பாதுகாக்கின்ற ஒரு பொறுப்பு மிக்க குடும்பத்தலைவனாக அவருடைய பாத்திரம் சித்தரிக்கப்படுகின்றது. தேசத்திற்காகத் தியாக மனநிலையுடனும் அதேவேளை குடும்பத்திற்கான அதீத பொறுப்புணர்வுடனும் இந்த பாத்திரம் கட்டமைக்கப்பட்டுள்ளது தவிர வட இந்திய மனநிலை என்ற ஒன்றும் உள்ளது. அது திராவிட (தமிழக) எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்புணர்வு கொண்ட இந்துத்துவ மனநிலை. இவற்றோடு இந்தப்படத்தில் முதன்மைப்படுத்தப்படும் ‘தேசபக்தி’ என்பதுவும் வட இந்திய மனநிலைக்கு உந்துதல் கொடுக்கக்கூடிய அம்சங்கள்.
*
பெண் போராளி தொடர்பான சித்தரிப்பு என்பது யதார்த்தத்திற்கு மிகவும் மாறானதாகக் காண்பிக்கப்படுகின்றது. தனது இலக்கினை அடைவதற்கும் நெருக்கடிகளிலிருந்து வெளிவருவதற்கும் பெண் போராளி கையாளும் ஒரே தெரிவு, நெருக்கடி கொடுக்கின்ற அதிகாரத்திலுள்ளவரோடு படுக்கைக்கு இணங்குவதாகப் பல காட்சிகளில் காண்பிக்கப்படுகின்றது. அவளை அந்த நெருக்கடிக்கு உள்ளாக்குபவர்கள் அனைவரும் தமிழகத் தமிழ் ஆண் பாத்திரங்கள். பேருந்தில் பாலியல் சுரண்டல், வேலை செய்யுமிடத்தில் முதலாளி, வெடிமருந்து கடத்திச் செல்லும்போது சோதனைச் சாவடி அதிகாரி எனவாக தமிழகத்தின் ஆண்கள், பெண்களைப் படுக்கைக்கு அழைப்பவர்களான சித்தரிப்பு தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது. ஒரு சோதனைச் சாவடியைத் தாண்டிச் செல்வதற்குக்கூட அதிகாரியுடன் தானாகச் சென்று அவனின் பாலியல் இச்சைக்கு இணங்கிவிட்டு வருவதாகக் காண்பிப்பதை எந்த வகையில் சேர்ப்பது. சோதனைச் சாவடியைத் தாண்டுவதற்கு அதிகாரிகளுக்கு ஒரு தொகையைக் கையூட்டாக கொடுத்துவிட்டால் போதுமானது.
‘எல்லோரையும் கொல்லுவேன், அழிப்பேன்’ என்று குரூரமாகச் சூளுரைக்கின்றாள். சத்தியப் பிரமாணம் எடுக்கின்ற காட்சியில் ‘கழுத்தறுப்பேன். உயிர் குடிப்பேன்’ என்பதாக கொலை வெறியை வெளிப்படுத்துவதாக காண்பிக்கப்படுகின்றது. புலிகள் உட்பட்ட விடுதலை இயக்கங்களின் சத்தியப் பிரமாணங்கள் விடுதலைச் செயற்பாட்டிற்கான அர்ப்பணிப்பினை முன்னிறுத்துபவையேயன்றி கொலைவெறியை வெளிப்படுத்துவதாக அதன் உள்ளடக்கமும் மொழிநடையும் இருப்பதில்லை.
*
நேர்மையான படைப்பு என்பது குறைந்தபட்சமாவது வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு உருவாக்கப்பட வேண்டும். ஒரு போராட்டத்தின் அக-புறக் காரணிகளை பாரபட்சமின்றி முன்வைக்க வேண்டும். ஈழப்போராட்டத் தவறுகள், புலிகள் குறித்த நேர்மையான விமர்சனங்களை முன்வைத்திருந்தால் சிக்கலில்லை. ஆனால் விசமத்தனங்களையும் வரவாற்றுத் திரிப்புகளையும், பிம்பச் சிதைப்புகளையும், சமகால உண்மைகளுக்கு மாறான சம்பவங்களையுமே இத்தொடர் ஈழப்போராட்டம் தொடர்பாகவும் அதன் அரசியல் தொடர்பாகவும் சித்தரித்திருக்கின்றது.
இன்னொரு புறம் இத்தகைய சித்தரிப்புகள் பற்றி ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்தியத் தேசியத்தை முன்னிறுத்துகின்ற திரைப்படங்களின் பொதுவான போக்கும் கதைக் கட்டமைப்புகளும் இப்படியாகவே இருந்துவருகின்றன. இஸ்லாமியப் பயங்கரவாதம் என்பதை இவ்வாறான போக்கிலேயே தமிழ்த் திரைப்படங்கள் உட்பட இந்தியத் திரைப்படங்கள் சித்தரித்து வந்துள்ளன.
இந்தத் திரைத்தொடர், இலங்கை மீதான சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கையைச் சாந்தப்படுத்துகின்ற, வழிக்குக் கொண்டு வருகின்ற இந்தியாவின் முனைப்பு, இலங்கையுடன் உறவை வலுப்படுத்துகின்ற நலன், இந்தியத் தேசியப் பாதுகாப்பிற்கு எதிரானதாக ஈழப்போராட்டத்தைச் சித்தரித்தல் என்ற தளங்களில் நகர்கின்றது. இத்தகைய அதிகார நலன்களைப் பிரதிபலிப்பதற்கு ‘இஸ்லாமியப் பயங்கரவாதமும்’, ‘ஈழப் பயங்கரவாதமும்’ கருவிகளாக்கப்படுகின்றமை வியப்பிற்குரியதல்ல.
உலகின் எந்தவொரு விடுதலைப் போராட்ட இயக்கங்களையும் ஒற்றைப் பரிமாணத்தில் அணுகமுடியாது. அது பலஸ்தீனமோ, ஈழமோ, குர்தீஸ் போராட்டமோ, தென் சூடானோ, எரித்திரியாவோ, தென்-சூடானோ, கிழக்குத் தீமோரோ, கொலம்பியாவோ, ஆச்சே விடுதலைப் போராட்டமோ எதுவாகவும் இருக்கலாம். அவற்றை அவற்றுக்குரிய அரசியல், வரலாற்று, பின்னணிகளுடனும் அவை தோற்றம் பெற்றதற்கான அக-புறக் காரணிகளின் அடிப்படைகளிலும்தான் அணுகப்பட வேண்டியவை. கருப்பு வெள்ளையாக பயங்கரவாதம் என்ற அதிகாரம் வரையறுக்கின்ற ஒற்றைத் தன்மைக்குள் நின்று அணுகுவது அபத்தம் நிறைந்தது. அதுவும் அப்படி அணுகுகின்ற படைப்புகள் இழிவான படைப்புகளே.
விமர்சனப் பூர்வமாக இத்தகைய படைப்புகளின் இழிவரசியல் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும். காத்திரமான எதிர்வினைகள், விவாதங்களை முன்வைப்பதன் மூலம் அவற்றுக்கான நிராகரிப்பினை உண்டு பண்ணலாம். அதன் அரசியலுக்கு எதிரான கருத்தியலை வலுப்படுத்தலாம். கருத்தியல் ரீதியாக இவற்றை எதிர்கொள்வது, எதிர்வினையாற்றுவது, அவற்றின் இழிவரசியலைக் கேள்விக்குட்படுத்துவதனூடாக உரிமை அரசியல், விடுதலை அரசியலுக்கு ஆதரவான கருத்தியல் தளத்தினை விரிவுபடுத்த முடியும்.
***
ரூபன் சிவராஜா. நார்வேயில் வசிக்கிறார். கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிறார். அண்மையில் இவரது முதல் நூல் “அதிகார நலனும் அரசியல் நகர்வும்” நூல் வெளிவந்து கவனம் பெற்றுள்ளது. ஆசிரியர் தொடர்புக்கு – svrooban@gmail.com