நாச்சியாள் சுகந்தி
மருத மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்தாள் பூங்குழலி. கையில் அப்போதுதான் குளத்திலிருந்து பறித்து வந்த தாமரைப்பூ இருந்தது. முற்றிலுமாக மலராத, மொக்காகவும் இல்லாத பூ. பூங்குழலி அதன் தலையை தடவிக்கொடுத்துக்கொண்டே மேயவிட்ட ஆடுகளை நோட்டமிட்டாள். அவை கண்ணுக்கெட்டும் தூரத்தில் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. புதுமழைக்கு முளைத்த பசும்புற்களை சாப்பிடுவதில் பூங்குழலியின் ஆடுகளுக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சிதான். அதில் பிரச்சனை என்னவென்றால் பொழுது சாய்ந்ததும் ஆடுகளைப் பட்டிக்கு அழைத்துச்செல்ல பூங்குழலி ஆடுகளிடம் மன்றாட வேண்டும். அவை அத்துனை சீக்கிரம் பச்சைப்புல்லின் வாசனை கிறக்கத்திலிருந்து வராது. அதற்காகவே பூங்குழலி சில பாடல்களைப் பாடுவாள். அந்த பாடல்கள் குதூகலமான தாளக்கட்டில் இருக்கும். அந்த தாளக்கட்டுக்கோ அல்லது பூங்குழலியின் குரலுக்கோ மயங்கி அவை நடையைக் கட்ட ஆரம்பிக்கும்.
அந்த வனாந்தரத்தில் இப்படி பூங்குழலி ஒரு பின்மதிய வேளையில் பாடிக்கொண்டிருந்தபோதுதான் அரும்பொறையன் தன்னையும் மறந்து அவள் பின்னால் நின்று கேட்டுக்கொண்டிருந்தான். பாடலை பாடி முடித்து எதேச்சையாக பூங்குழலி திரும்புகையில் கண்களை மூடிய நிலையிலேயே அமர்ந்திருந்தான். திடுக்கிட்ட பூங்குழலி சட்டென அந்த இடத்திலிருந்து நகர்ந்து தள்ளிப் போனாள். அவளது காலடி சத்தம் கேட்டு விழித்த அரும்பொறையன் பூங்குழலியின் மருண்ட கண்களைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்தவாறே,’’உங்கள் பாட்டும் குரலும் தேனில் ஊறவைத்த கனியைப் போல இருந்தது’’ என்றான். முன்பின் தெரியாதவன் தன்னை பாராட்டுவது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் அதை அவள் முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை.
‘’நீங்கள் யார், எங்கள் அகரம்புதூருக்கு புதியவராக இருக்கிறீர்கள்? ஊர்த்தலைவருக்கு உங்கள் வருகை தெரியுமா?’’ என முகத்தைக் கடினமாக வைத்துக்கொண்டு கேட்டாள். அவனும் அதே முகபாவத்துடன்,’’உங்கள் ஊரின் தெற்கில் அரசர் ஆணைப்படி புதிய கோவிலை கட்டுகிறார்கள் தெரியுமா… அந்த கோவில் பணிக்கு வந்திருக்கும் நாற்பது சிற்பிகளில் நானும் ஒருவன். அரும்பொறையன் என் பெயர்’’ என்று சொன்னவன் சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு, முகத்தின் கடினத்தை அந்த நொடிகளில் மாற்றி பூங்குழலியின் கண்களை உற்றுநோக்கி ’’நீங்கள் இனிமையாகப் பாடுகிறீர்கள். உங்கள் குரலில் யாரையும் மயக்கும் ஒரு சக்தி இருக்கிறது’’ என்று ஒரு பாடலைப் போலவே சொல்லிவிட்டு அவள் பதிலுக்கும் எதிர்வினைக்கும் காத்திராமல் நடந்தான்.
பத்து எட்டு நடந்தவன் திரும்பிப் பார்த்தான்; பூங்குழலி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். உயரமாக, நீண்ட கூந்தலைப் பின்னி அதில் சிவப்பு நிற மலரொன்றை சூடியிருந்தான். இடுப்பில் கட்டியிருந்த அரையுடுப்புத் துணி அவனது வலுவான கால்களையும் தொடையையும் காண்பித்தது. அவை கரும்பாறையில் வரைந்து செதுக்கியது போல இருந்தன. தோள்களிரண்டும் பாறையின் சிறுபகுதியை வெட்டி ஒட்டி வைத்த சிறுகுன்றென இருந்தன. அவனது கண்களின் ஒளி யாரையும் சட்டென தடுமாற வைக்கக் கூடிய சக்தியுடையதாக இருந்தது. அவன் போன பின்பும் ,’’உங்கள் குரல் தேனில் ஊறவைத்த கனியென இருக்கிறது’’ என்ற குரல் அவளுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது.
எங்கிருந்தோ வந்த நீர் நாய்கள் ஆடுகளைத் துரத்த அவற்றின் அலறல் பூங்குழலியை உலகத்துக்குக் கொண்டு வந்தது. ஆடுகளின் அலறலில் அனிச்சையாக எழுந்து ஓடினாள். புயலென ஓடிவரும் மனித உருவைக் கண்டதும் நீர்நாய்கள் திசைக்கொன்றாக ஓடின.
“என்னைக் காண வருவது குறித்து உன் தோழிகள் எதுவும் கேட்பதில்லையா பூங்குழலி”
“அவர்கள் ஏன் கேட்கப்போகிறார்கள். அவர்களுக்கு இதைவிட முக்கியமான வேலை இருக்கிறதல்லவா”
“அப்படி என்ன இதைவிட முக்கியமான வேலை”
“ம்ம்ம்… உங்களுக்கு ஆணவம் தான். அவளவள் நாற்றுநட ஓடிக்கொண்டிருக்கிறாள். இப்போது நட்டால் தானே ஆறு திங்கள் கழித்து அறுவடை நடக்கும். ஊரே பட்டினி இல்லாமல் பசியாறலாம்.”
“அப்படியென்றால் நீ ஏன் போகவில்லை”
“என்ன செய்வது, உங்கள் மீதிருக்கும் பித்து தெளிந்திருந்தால் நானும் கருக்கலிலேயே போயிருப்பேன். பல பௌர்ணமிகள் ஓடிவிட்டன. ஆனால் உங்கள் மீதான பித்து தெளிந்தபாடில்லை”
“சரி…இந்த பித்து தெளிய நான் என்ன உதவி செய்ய வேண்டும் சொல்; செய்கிறேன்”
“என் மண்டையின் கனம் ஏறி போதையில் குதிக்காமல் இருக்கும் வகையில் பேசாதிருங்கள். உங்கள் கண்களின் ஒளியை என் நெஞ்சுக் கூட்டுக்குள் பாய்ச்சாதிருங்கள். என் விலா எலும்புகள் நொறுங்கிப்போவது போல் என்னை அணைக்காமல் இருங்கள். மிகக் குறிப்பாக என் தலையைத் தடவி உங்கள் மடியில் வாகாக சாய்த்து முன் நெற்றியில் முத்தமிடாதிருங்கள். பூனையைப் போல் நடந்துவந்து என்னைப் பின்னால் இருந்து இறுக்காதீர்கள். எங்கிருந்தோ கொண்டு வரும் வாசனை திரவியத்தை என் மார்மீது பூசாதிருங்கள். நான் எதோ ஒரு துன்பத்தை சொல்லி அழும்போது என் கைகளை அழுந்தப்பற்றி நெருக்கமாக உட்கார்ந்து உங்கள் உடல் வெம்மையை ஆறுதலாகத் தராதீர்கள்”
“சரி…அப்படியே ஆகட்டும். இப்போது கால்களில் மட்டும் முத்தமிட்டுக்கொள்ளட்டுமா”
*
பூங்குழலிலுக்கு உடல் சூடு ஏறிக்கொண்டே இருந்தது. அந்த சூட்டைத் தாங்க முடியாமல் அரற்றினாள். அவளுடைய அரற்றல் பூங்குழலியின் தகப்பன் நெல்மணியான் வயிற்றில் நெருப்பைக் கூட்டியது. இப்படித்தான் போன மார்கழியில் மகனுக்கு உடல் சூடேறியது. ஏழு நாட்கள் ஆகியும் அந்த சூடு குறையவே இல்லை. ஊரின் நாவிதர் என்னென்னமோ மருந்து அரைத்துக்கொடுத்தார். ஆனால் எந்த மருந்துக்கும் அவன் உடல் சூடு அடங்காமல் பின்னிரவில் உயிரை விட்டான். அதேபோல் பூங்குழலிக்கும் ஆகிவிடுமோ என பயந்தான் நெல்மணியான். இருட்டில் கையில் மூங்கில் தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டு ஊர் நாவிதர் வீட்டுக்குப் போய் நிலமையை சொல்லியழுது சூரணத்தை வாங்கி வந்து தேனில் குழைத்து அவள் உள்நாக்கில் தடவிவிட்டார்.
மகளின் அருகிலேயே அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். சூரியன் வீட்டு முற்றத்துக்கே வந்த போது தான் விடிந்தது தெரிந்தது பூழங்குழலிக்கு. அவள் அப்பா, அவள் கைகளைப் பிடித்தவாறே மருதமர தூணில் சாய்ந்து இருந்ததைக் கண்டதும் பயந்து போனாள். கைகளை அப்பாவிடமிருந்து மெதுவாக விடுவித்து, இடதுகையை ஊன்றி எழுந்து உட்கார்ந்து அப்பாவையே உற்றுப்பார்த்தாள். அப்பனின் கன்னங்களிரண்டிலும் கண்ணீர் தாரையின் தடம் காயாமல் இருந்தது. அந்தக் கன்னங்களைத் தடவியவள் அவன் மடியிலேயே சாய்ந்துகொண்டாள். யாரோ வரும் அரவம் கேட்க கழுத்தை மெதுவாகத் திருப்பிப் பார்த்தாள். அறவல்லி சிறு மண் கலயத்தில் எதோ கொண்டு வந்துகொண்டிருந்தாள். அந்தக் கலயத்திலிருந்து ஆவி பறந்து வந்தது; அது மார்கழிப் பனியை மீறியும் தெரிந்தது.
*
“என்னைப் பார்த்து பத்து, பதினைந்து திங்கள் ஆகியிருக்குமல்லவா…இன்னும் நீ ஏன் என்னைப் பற்றி எதையும் கேட்கவில்லை பூ”
“உங்களுக்கே சொல்ல வேண்டும் என்கிற உந்துதல் வரும் நாள் வரும் என காத்திருந்தேன்”
ஒருவேளை நாளைக்கே கோவில் பணிகள் அனைத்தும் முடிந்து நான் என் ஊர் நோக்கி சென்றுவிட்டால் என்ன செய்வாய் பூ”
“திரும்பி வரும் வரை இதே ஊரில் இருப்பேன்”
“நான் திரும்பி வருவேன் என்று எந்த அடிப்படையில் நம்புகிறாய் பூ. நான் ஊர் ஊராக சுற்றும் ஒரு சாதாரண சிற்பி. என் பயணத்தில் எத்தனையோ பெண்கள். காலநீரோட்டத்தில் என்னுடன் சக பயணியாக உன்னைப் போல் வருவார்கள். பயணம் முடிந்துவிடும். பிறகு வேறொரு பயணம். வேறொரு பயணி”
அறவல்லி, பூங்குழலியின் அருகில் வந்தமர்ந்து அவள் உடலைத் தொட்டுப் பார்த்தாள். நேற்று இரவு இருந்த அளவுக்கு உடல் சூடு இல்லை. கையில் வைத்திருந்த கலயத்தில் இருந்த மருந்து நீரை ஒரு கொட்டாங்குச்சியில் ஊற்றிக்கொடுத்தாள். பூங்குழலி மெதுவாக எழுந்துபோய் பானையில் இருந்த நீரெடுத்து வாய் கொப்பளித்தாள். முகம் கழுவினாள். சைகையில் ’இங்கு வா’ என்பது போல அழைத்தாள். மார்கழியின் அதிகாலை பனிக்கு, உடலுக்கு வெம்மை வேண்டும் போலிருந்ததால் செம்மண்ணால் குழைத்துப் பூசப்பட்டிருந்த மண் மேட்டின் மீது இருவரும் அமர்ந்தார்கள். அவர்களுக்கு சற்று தள்ளி முக்கல் அடுப்பு இருந்தது. மண் சட்டியில் நெல் சோறு இருந்தது.
அறவல்லிக்கு காய்ச்சலில் வாடிய பூங்குழலியின் முகத்தைப் பார்க்க அழுகை வந்தது. தன் உடன் பிறந்தவர்களில் உயிரோடு இருக்கும் ஒரேயொரு மரிக்கொழுந்து தான் பூங்குழலி. ஐம்பது பௌர்ணமிக்கு முன்பு வந்த காட்டு வெள்ளத்தில் சிக்கி அம்மாவும் இறந்து போனாள். ’இவளாவது உயிருடன் இருக்கிறாளே’ என்கிற நிம்மதியில் தான் அறவல்லி நாட்களைக் கடத்துகிறாள். அந்த பதைபதைப்பில், ’’பூ நீ இன்னும் அந்த சிற்பியை நம்பி உயிரைக் கெடுத்துக்கொண்டிருக்காதே. அவன் நம் ஊரை விட்டுப் போய் ஏழு பௌர்ணமிகள் போய்விட்டன. அவன் நினைவில் நீ இருக்கிறாயோ என்னவோ? எந்த ஊரில் எந்த அரண்மனையில் அல்லது கோவிலில் உட்கார்ந்து கொண்டு கிடைத்த நெல் சோற்றுக்கும் வெள்ளிக் காசுக்கும் யானையையோ, பெண்ணையோ சிலைவடித்துக் கொண்டிருக்கிறானோ…தெரியாது. உண்மையில் அவனுக்கு உன் மேல் ஆசையும் அன்பும் இருந்திருந்தால் அவன் நம் ஊரை விட்டுப் போகும்போது உன்னையும் கையோடு சேர்த்துக் கூட்டிக்கொண்டு போயிருப்பான். அல்லது உன்னோடு இங்கேயே தங்கியிருப்பான். கொஞ்சமாவது உண்மையை புரிந்துகொள் பூ. பிழைப்புக்காக அலைகிற நாடோடி, வெள்ளாண்மையை செய்பவனைப் போல குடும்பம் வைத்துக்கொள்ள மாட்டான். புரிந்துகொள். நம் நெல் வயலை பார்த்துக்கொள்ள, ஆடு மாடுகளைப் பார்த்துக்கொள்ள என்னோடு வந்துவிடு. அடுத்த பௌர்ணமியில் நீ மாமாவையே கட்டிக்கொள். நாம் எல்லாரும் ஒன்றாக இருக்கலாம். அப்பன் இன்னும் எத்தனை பௌர்ணமிக்கு இருப்பான்…புரிந்துகொள் பூ’’ அறவல்லி மூச்சு விடாமல் பேசினாள்.
கண்கள் மூடி அறவல்லி சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பூங்குழலி அறவல்லியின் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள். பார்த்துக்கொண்டேயிருந்தாள்.
*
“பூ… என்னிடம் உனக்கு அப்படி என்னதான் பிடித்திருக்கிறது”
“எல்லாம் தான்”
“இப்படி சொன்னால் எப்படி…. குறிப்பிட்டு சொல்லேன்”
“உன்னிடம் இருக்கும் உண்மை. ஆமாம்…. உண்மை. உன் முன்னாள் காதலிகளைப் பற்றி சொல்லும்போது கூட அவர்களை எத்துனை மரியாதையாகக் குறிப்பிடுகிறாய். அவர்கள் செய்த சின்ன சின்ன காரியங்களைக் கூட மறக்காமல் வைத்திருக்கிறாய்”
” ஐயோ…. நான் கள் அருந்தியிருந்தபோது உளறிவிட்டேனா”
” இல்லை… நல்நினைவுடன் இருக்கும்போதும் சொல்லியிருக்கிறீர்கள். ஆற்றில் ஒருத்தி உங்கள் கூந்தலை வாசனைப்பொருட்கள் போட்டு அலசி விட்டு, கூந்தலை அழகுபடுத்திய நிகழ்வை எத்தனை முறை சிலாகித்து உங்களுக்கே தெரியாமல் சொல்லியிருக்கிறீர்கள் தெரியுமா…அப்போதெல்லாம் உங்கள் கண்களில் எதோவொரு புதுவொளி வீசும்; முகம் பூக்கும்; மனதிலிருக்கும் இன்பம் வார்த்தைகளில் வழிந்தொழுகும்’’
“உனக்கு பொறாமையாக இருக்காதா பூ”
“அட…நான் ஏன் பொறாமைப்பட வேண்டும். அந்த காலகட்டத்தில் நீ யார் என்று கூட தெரியாது. நான் அந்த பெண்ணை முன்பின் பார்த்தது கூட இல்லை. யார் என தெரியாதவள் மீது நான் ஏன் பொறாமைப்பட வேண்டும்?”
“வேறென்ன என்னிடம் பிடிக்கும் பூ”
“குறைவாகப் பேசுகிறாய். அந்தப் பேச்சில் எந்த அலங்காரங்களும் இல்லை. எப்போதும் இயல்பாக இருக்கிறாய். சில நேரம் ஒரு ஞானியைப் போல நடந்துகொள்கிறாய். கோவிலுக்கு யானை சிலையையும் யாளி சிலையையும் தனி ஒருவனாக நீ வடித்தாய் என உன் தலைமைச் சிற்பி பாராட்டியபோது உன் முகத்தில் மகிழ்ச்சியும் இல்லை; கர்வமும் இல்லை. அந்த ஞானித்தன்மை இந்த வயதில் சாத்தியமான விஷயம் இல்லை அல்லவா. அது எனக்கு எப்போதும் ஆச்சர்யமூட்டும் விஷயம். ம்ம்ம்…. எனக்கு காலில் அடிபட்டு நான் வலியில் துடித்த அந்த மூன்று நாட்களும் நீயும் என் அப்பனைப் போலவே என் அருகேயே இருந்தாய். என் அம்மாவைப் போலவே உணவூட்டி, நீர் அருந்த வைத்து, என் உடலை முழுதும் நீரால் கழுவி….. அந்த மூன்று நாட்களும் நீ எனக்கு ஒரு தாயாக மாறியிருந்தாய் அல்லவா. அந்த மனம் இந்த உலகில் அரிதான மனம்”
“ம்ம்ம்…. ஒரு முறை நீ கள் அருந்தியிருந்தாய். அன்று மூன்றாம் பிறை என்று நினைக்கிறேன். குளத்தருகில் வட்டப்பாறையில் தனியாக அமர்ந்திருந்தாய். நான் உனக்கு உணவெடுத்து வந்தேன். அருகில் வந்து பார்த்தபோது உன் கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது. எனைப் பார்த்ததும் நீ அழுகையை நிறுத்தவில்லை. ‘அவள் என்னைக் கள்ளன் என்பாள்….உன் கள்ளத்தனம் அத்தனையும் அறிந்தவள் நான் என்பாள்’ என்று சொல்லிக்கொண்டே கண்களைத் துடைத்தாய். அந்த கண்ணீரில் உன் காதலின் உன்னதத்தைப் பார்த்தேன். உன்னால் யாருக்கும் தீங்கிழைக்க முடியாது. தீங்கிழைப்பவனால் இத்தனை உணர்வுப்பூர்வமாகவும் எந்த பாசாங்கில்லாமலும் அழ முடியாது”
*
“அறவல்லி ஒரு யோசனை சொன்னாளாம். நீ பதிலொன்றும் சொல்லவில்லையாமே குழலி. அப்பன் இன்னும் எத்தனை பௌர்ணமிக்கு இருப்பேன் என்று நினைக்கிறாய் குழலி’’ நெல்மணியான் கெஞ்சும் குரலில் கொஞ்சும் தொனியில் கேட்டான். பூங்குழலி சலனமில்லாமல் இருந்தாள்.
கொஞ்சநேரம் இருவருக்குமிடையில் அமைதி நிலவியது. மீண்டும் நெல்மணியானே ஆரம்பித்தான். ‘’குழலி, அப்பன் சொல்வதைக் கேள். நீ காத்திருக்கலாம் மகளே. காலம் எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்காது. காலம் தப்பி எடுக்கிற முடிவால் யாருக்கும் ஒரு நன்மையும் இல்லை’’ என்பதை நிறுத்தி நிதானமாகச் சொல்லிவிட்டு மெதுவாக அங்கிருந்து நடந்தபோது பருவமழையில் நெகிழ்ந்திருந்த மண்ணில் நெல்மணியான் பாதங்கள் அச்சுப்போல் பதிந்தன. காஞ்சி மரத்தில் அதுவரை உட்கார்ந்திருந்த மஞ்சள் நிற பறவைகள் பறந்தோடின. பறந்தோடும் அந்தப் பறவைகளையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள்.
அப்போது அறவல்லி மேலாடை துணியில் எதையோ முடிந்துகொண்டு வந்தாள். பூங்குழலியின் கோலத்தைப் பார்த்து புரிந்துகொண்டவளாக, சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்று சத்தத்தைக் கூட்டினாள். அவள் சத்தத்தைக் கேட்டு காஞ்சி மரத்திலிருந்த ஒற்றை மஞ்சள் பறவையும் பறந்துபோனது. பின் மதியம் என்பதால் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ஆண்களும் பெண்களும் தங்கள் கிடைகளுடன் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார்கள். நீலவானத்தில் நிறம் மங்கி அவ்விடத்தில் கருமையேறிக்கொண்டிருந்தது.
அந்தக் கருமையை அந்த நிமிடம் பூங்குழலி மனம் விரும்பியது. இந்தக் கருமையெல்லாம் நீங்கி என் வாழ்விலும் பௌர்ணமி வரும் என்று முதன்முறையாக தன் மனதிலிருந்த நம்பிக்கையை அதே மனத்துள் புகுத்தினாள். இதையெல்லாம் அறிந்தவள் போல,’’பூ உனக்கு பிடிக்குமென இந்த பழங்களை எடுத்து வந்தேன். பொழுதுக்குள் தின்றுவிடு. விடிந்தால் கனிந்துவிடும்’’ என்றாள். பூங்குழலியின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அறவல்லி பழங்களை அங்கேயே வைத்துவிட்டு கிளம்பினாள். கிளம்பும் முன்,’’பூ என்ன நம்பிக்கையில் நீ இத்துனை தூரம் உறுதியாக இருக்கிறாய் என்று தெரியவில்லை என்று சொன்னவள் பூங்குழலியின் தோள்களைப் பிடித்து உலுக்கினாள்.
அக்காவின் கைகளை உதறிவிட்டு, ’’அவன் பழைய ரணங்களை நான் ஆற்றியிருக்கிறேன். புது உலகத்தை நாங்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கியிருக்கிறோம். அதில் நாங்கள் வாழ்க்கையின் அத்துனை மகிழ்ச்சியையும் கண்டுகொண்டோம். அந்த உலகத்திலிருந்து அவனாலும் விலக முடியாது. என்னாலும் விலக முடியாது. அவன் வருவான். அவனால் நான் இல்லாத ஒரு இரவையோ, பகலையோ சகித்துக்கொள்ள முடியாது. சகித்துக்கொள்ளவே முடியாது. அவனுடைய ஒவ்வொரு நினைவிலும் செயலிலும் நான் இருப்பேன். அந்த நினைவின் கனம் தாங்காது அவன் வருவான். என் பெயரை எங்கேனும் கேட்க நேரிட்டால் அவன் முகம், மனம் பூக்கும். அவை பூக்கும் அந்த நொடியில் என் முகம் பார்க்க வருவான். ஆமாம்….அவன் பழைய ரணங்களை நான் ஆற்றியிருக்கிறேன். புதிய உலகத்தைக் காட்டியிருக்கிறேன்’’ என்று உரக்கச் சொல்லி ஊருக்கே கேட்கும்படி சொல்ல வேண்டும் என நினைத்தவள் சட்டென அமைதியானாள். அறவல்லியின் கைகளை தோளிலிருந்து மெதுவாகத் தட்டிவிட்டாள். அவள் கண்களை உற்றுப் பார்த்தாள். அறவல்லி சொல்லக் கூடாத வார்த்தைகளை சொல்லி விட்டு வேகமாக போனாள்.
*
“இன்று உன்னை மிகவும் சிரமப்படுத்திவிட்டேனோ பூ”
“இல்லையே….ஏன் அப்படி கேட்கிறாய்”
“இல்லை, வழக்கமாக நீ ஒருமுறைக்கே தளர்ந்துவிடுவாய். இன்று ஏதோ ஒரு மகிழ்ச்சியில் இரண்டு முறை கூடிவிட்டோம். உன்னை சிரமப்படுத்திவிட்டேன் என்று குற்றவுணர்ச்சியாக உள்ளது”
“ஆகா…. அது கூடும்போது தெரியவில்லையா. எல்லாம் முடிந்ததும் கேட்கிறாய். உண்மையைச் சொன்னால் இன்று தான் நான் பூரண மகிழ்ச்சியில் இருக்கிறேன். கர்வமாக இருக்கிறேன்”
“அப்படியா… பூ இப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் துக்கமாக இருந்தாலும் உன்னிடம் சொல்லவே ஆசைப்படுகிறேன். அதற்காகவே உனக்காக காத்திருக்கிறேன். நான் நல்ல சிற்பியாக இருக்கலாம். ஆனால் என் வேலையில் கவனத்தை ஊன்றி செய்வதற்கு காரணம் நீதான். என்னை நீ மகிழ்ச்சியாக வைத்திருக்கிறாய். மிக முக்கியமாக என்னை மதிக்கிறாய். என் பயணம் எப்போதும் உன்னோடு இருக்கவே விரும்புகிறேன். இதை நான் கள் அருத்திவிட்டு சொல்லவில்லை. சுய நினைவுடன் தான் சொல்கிறேன் பூ”
“அரும்பொறையன் காலில் கருங்கல் விழுந்துவிட்டது. ரத்தம் கொப்பளிக்கிறதே” பதற்றத்துடன் கத்தினாள். சிற்பிகளுக்கு உணவு கொடுக்கும் பணிப்பெண்.
அவள் குரலைக் கேட்டு ஓடிவந்த தலைமைச் சிற்பி அரும்பொறையன் காலைப் பார்த்தான். காலில் கல் இல்லை; உளி இருந்தது. கூர்மையான அந்த உளி தான் அரும்பொறையன் கால்களை பதம் பார்த்திருந்தது. ரத்தம் வழியுமிடத்தில் சோறு கொடுக்கும் பணிப்பெண் எதோ தழையை கைகளாலேயே கசக்கி சாற்றை விட்டாள். ரத்தம் வெளியேறுவது கொஞ்சமாக நின்றது. அரும்பொறையன் கண்கள் நிறைந்து வழியக் காத்திருக்கும் குளம்போல இருந்தது.
தலைமைச் சிற்பி, ஒரு தந்தையின் தாய்மையையுடன் அரும்பொறையன் தலையைத் தடவி,’’இப்படி ஒருமுறை கூட நிகழ்ந்தது இல்லையே. மனம் உன்னிடம் இல்லை. மனம் உன்னிடம் இருந்தால் மட்டுமே கவனம் இருக்கும். கவனம் இருக்கும் இடத்தில் தானே கலை உயிரோடு இருக்கும் என்று தெரியாதா?’’ என கேட்டபோது, அரும்பொறையன் கண்களின் குளம் உடைந்து வழிந்தது.
தலைமைச் சிற்பியிடம் உள்ள பக்தியில் அதிகம் பேசவே பேசாத அரும்பொறையன்,’’நான் அகரம்புதூர் செல்ல வேண்டும். என் கவனத்தை , அங்கேயே விட்டுவிட்டேனோ என்று மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. முதன்முறையாக உளி என் கை நழுவியிருக்கிறது. சிந்தை முழுதும் வேறேதோ இருக்கிறது. அது இயல்பாக இயங்க விட மறுக்கிறது. மனமும் உடலும் புத்தியும் எதையோ தேடுகிறது. இது என் வாழ்நாளில் இதுவரை ஏற்படாத அனுபவமாக இருக்கிறது. ஒரு கலைஞனுக்கு மனம், உடல், புத்தி இது மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டுமல்லவா. எனக்கு இப்போது அப்படி இல்லை. என்னை ஏதோ துயர் சூழ்ந்திருக்கிறது.
முதன்முறையாக தனிமையின் கனம் தாளமுடியவில்லை. வெடித்து அழ வேண்டும் போலிருக்கிறது. நான் அகரம்புதூர் செல்ல வேண்டும்” சொல்லிக்கொண்டே தலைமைச் சிற்பியின் தோள் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுதான். தலைமைச் சிற்பிக்கும் அந்த அழுகையின் கனம் தாங்காமல் அழுகை வந்தது.
“திரும்பி வரும் வரை இதே ஊரில் இருப்பேன்” – மயங்கிய கண்களும் மிகத் தீர்க்கமான குரலிலும் பூங்குழலி சொன்ன வார்த்தைகள் உயிர்பெற்றுக்கொண்டிருந்தன.
“திரும்பி வரும் வரை இதே ஊரில் இருப்பேன்”
“நான் சிற்பி. என் கலையை தவிர எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு அழகான வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை பூ. எப்போதும் நீ வேண்டும் எனக்கு…நிரந்தரமாக.”
“புரிகிறது…உனக்கு நான் வேண்டும் என்பது புரிகிறது. கூடலின் மகிழ்ச்சி உச்சத்தில் இப்போதெல்லாம் என் பெயரை நீ உச்சரிக்கிறாய். உன் பழைய ரணங்களை நான் ஆற்றியிருக்கிறேன் என்பதில் எனக்கு கர்வமே. காதலென்பது பழைய காயங்களை ஆற்றுவதும் புதுக்காயங்களை உருவாக்காமல் இருப்பதும் தான்”
முதன்முறையாக பூங்குழலி மனதில் தோன்றியதை அப்படியே சொல்லாமல் வெறும் சிரிப்புடன் அவன் தலைகோதி முத்தமிட்டாள்.
***
நாச்சியாள் சுகந்தி -இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளன. அரசியல், சினிமா, இதழியல் என இவர் பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறார். இவரது படைப்புகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்
Dear Suganthi,
This story connects with the soul,very well written, looking forward for many more series😊
– Karthika