(1)
அடிப்பீடத்தின் மேற்கோடு
இலேசாக விரிசலுற்று கசிவதை
கைக்குட்டையாலோ
நீள்மேலணித் துணியின்
முனையாலோ ஒற்றியெடுத்தலை
நாசூக்காய் செய்வித்தல் குறித்து:
கறையாகுதலைப் பற்றி
மகா ப்ரக்ஞையுடன்
மிடறு, மிடறாய் தொண்டைச் சதை உருண்டை
மெதுவாய் அசைவதைக் கூர்ந்து
மெலிதாய் முத்தமிட அவா உந்துகிறது
வலக்கையின் சுண்டு விரலில்
நீளமாய் வளர்த்து வைத்திருக்கும்
நகத்தின் மேலாய்
யாரும் பயன்படுத்தா பச்சை வண்ணம் எதன் குறியீடு?
கோப்பையைச் சுரண்டிச் சுட்டுவதால்
என்னிலிருந்து எதை அடைய இயலும்?
உடைந்த கோப்பையின் மீதான
கசிந்தொழுகலாய் கசிந்தழுதலாய் உன்மீதாய்
நான்தான் என்பதை உணர்..
பரிசாரகனுக்கு தெரியாமல்
அதுவாகவே உடைந்திருக்கக் கூடும்
ஊதிக் களைத்துப் போகாதே
அளாவளாவ நானிருக்கையில்
தானே ஆறட்டும், தணி…
ஏதோ ஓர் உந்துதலில் பூமியின் ஓரடி மேல் அவளுடன் தேநீர் அருந்துதல் குறித்ததாய்:
(2)
சில நடக்கின்றன, சில தயங்கி நிற்கின்றன, சில உன்மத்தம் ஏறியது போல் நடனமிடுகின்றன, சில காதலுக்காக காத்திருந்து துவண்டு விடுகின்றன, சில கடவுளைக் காண வரிசையில் நின்று வருந்துகின்றன, சில உறை போட்டு மேலே காலணி மாட்டுகின்றன, சில நகப்பூச்சு ஏற்றி நளினம் காட்டுகின்றன, சில சொத்தை நகங்களோடு காட்சிப்படுகின்றன, சில களிம்பேறி கடுமை காட்டுகின்றன, சில வெடிப்புற்று ரத்தம் கசிகின்றன, சில கரடு முரடாய் ஒழுங்கு குலைந்து கலவரப்படுத்துகின்றன, சிலபோழ்து முயக்கநேரப் போர்வை விலகிய நான்கு பாதங்களைக் காண நேரிடுகிறது. கால்களற்ற கனவானாகிய என்னிலிருந்து நான் விலகி நிற்கையில்
எடையற்ற மீபொருண்மைக் கலயமாய் செந்தீ தகதகக்கும் மூன்றாவது கண்ணின் மீது மந்தகாசத்துடன் சந்தனம் அரைத்து அப்பும் உனக்காய் மீதமிரு விழிகளில் கசிவதை பார்த்தும் பார்க்காததுமாய் இருப்பதில் அல்லவா
இக்காலம் உறைந்து நிற்கிறது.
கனவுகளில் படரும் மேக இரேகைகள் சிறிது சிறிதாய் விலகி இலட்சியக் கொம்பு முட்டி தூக்கியெறியும் டாங்கியை உருவகப்படுத்துகிறது உன் தனங்கள். சிரித்துக்கொள்ளட்டுமா? நடுவிரலைப் பூக்கச்செய்து
முதுகுகாட்டி நிற்கட்டும் இவ்வரிகள் கெட்ட நல்அர்த்தத்தோடு.
(3)
உள்ளுணர்வின் விழிகள் எப்போதும்
ஓய்வெடுக்காமல் தொடர்ந்தபடி இருக்கிறது
வழிகள் நெடுக கொட்டி இருந்துகொண்டிருக்கும்
அன்றலர்ந்த மலர்கள்;
கவிழ்ந்தடியான நம் மனங்களுடன் சமர் புரிவதையும்
பின் பார்த்துக்கொள்ளலாம் என
அவசரமாய் விலகியோடி வந்துவிடுவதிலும்
அற்புதங்களை துண்டித்துக்கொண்ட மனப் பிறழ்வுக்கு
இட்டுச்செல்வதை அடிக்கடி நினைவுறுத்தி
சிட்டுக்கட்டை கலைத்துப் போடுவதே போல் ஆட்டங் காட்டுகிறது வாழ்வு…
(4)
இளகிய தொடுவானத்தின் கீழ்
மங்கிய கண்ணாடியை திருப்பித் திருப்பிப் பார்கிறான்
கம்பீரமான தோற்றத்தில்
இரகசியங்களைப் புதைத்து வைத்துவிட்டுப் போகும்
பெரும் அவசரம் இருந்தது கண்கூடு
எதனைத் திட்டமிட்டும் புலப்படாத விரிசல் வழி
ஏமாற்றும் ஏய்ப்பும் வாழ்ந்துகொண்டிருக்கிறதா வென யோசித்தும்
பேரவா துரத்தும் மணற்பரப்பில் குளிர்தரு நிழல் பரப்பிய ஒற்றை மரத்திற்கு குறி
துவங்கிய இடத்திற்கே நகர்ந்து போவதான பாவனைகள்
பரிதாபத்திற்கு உரியதாக இன்றி
கள்வெறியில் தூக்கிப்போட்டு உடைத்து விடுவதாய்
ஆடிக்கொண்டிருக்கிறது இக்கனிவான ஆயுள்
சொல்வதற்கொன்றும் அவசியப்படவில்லை
ஒட்டகங்கள் மடிந்த பாலையில்
திமிலை அறுத்து நீர் தேடும் யத்தனிப்பில்
குழைநிணக் கவிச்சி நாற்றத்தில்
ஒவ்வாமைக்கு தள்ளப்பட்டு துவண்டு போனபின்
வாழ்தலின் நிராகரிப்பால்
கொண்டாடுதலின் அருகதையை
ஆலிங்கனத்தோடு முத்தமிட்டு சுட்டி வாழ வாய்த்திருக்கிறது
பாதசாரிகளுக்கு மட்டுமே
***
வேதநாயக் –
கவிஞர், எழுத்தாளர். “தேவதா உன் கோப்பை வழிகிறது” கவிதைத்தொகுப்பின் ஆசிரியர்.
இவரது படைப்புகளை வாங்குவதற்கு இங்கே சொடுக்கவும்
யாவரும் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கும் இவர். ஓவியங்கள் மீது மிகவும் ஈடுபாடு கொண்டிருப்பவர். தற்போது திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்.
தொடர்புக்கு :editorialmagazines@gmail.com