Saturday, November 16, 2024
Homeஇதழ்கள்2023 இதழ்கள்வெட்டுக்கூலி

வெட்டுக்கூலி

அபுல் கலாம் ஆசாத்

அங்காடியில் மீன் வெட்டும் பெரியவரைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. இடது காலை விந்தி விந்தி நடந்துவருவார். தன்னுடைய பழைய சைக்கிளை ஓட்டும்போது ஒருபக்கமாக சரிந்தபடிக்கு வலது காலால் அழுந்த மிதித்து இடது காலை பெடலின் மீது பெயருக்காக அழுத்தி ஓட்டுவார்.

நந்தவனபுரம் மீன் அங்காடியில் ஒரு கிலோ மீன் வெட்டினால் பெரியவருக்கு இருபது ரூபாய் கூலி கிடைக்கும், இறால் உறிப்பதற்கு முப்பது ரூபாய். நந்தவனபுரம் புறநகர் குடியிருப்புப் பகுதியின் பஞ்சாயத்துத் தலைவர் போராடிப் பெற்ற மீன் அங்காடி அது. அந்த அங்காடி திறந்த நாளிலிருந்து பெரியவர் அங்கு கூலிக்கு மீன் வெட்ட வருகிறார். ‘ப’ வடிவில் இருக்கும் மீன் கடையின் நடுவில் மேடை போட்டு வெட்டுவதற்கு இடம் கொடுத்திருந்தார்கள். பெரியவருக்கு தன்னுடைய வெட்டு மரத்தை வைக்க ஒரு மேடை கிடைத்தது.

பெரியவரிடம் இருக்கும் வெட்டு மரம், நன்றாக வளர்ந்த வாகை மரத்தின் தண்டுப் பகுதியில் செய்யப்பட்டது. அது பெரியவர் காசு கொடுத்து வாங்கியது அல்ல, காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு அவருக்கு இப்போது வசதி கிடையாது. நல்லக்குப்பத்திலிருந்த அவருடைய கூட்டாளி தான் இறப்பதற்கு முன் அவருக்குக் கொடுத்தது. புறநகரில் இருந்து ஓட்டை சைக்கிளை நல்லக்குப்பம் வரை அழுத்திச் சென்று வெட்டு மரத்தையும் பட்டாக்கத்தியையும் சிறிய கத்தியையும் சைக்கிளில் வைத்துக் கட்டி எடுத்து வந்தார். சாணை பிடிக்க வருபவரிடம் சொல்லிவைத்து இத்துப்போன பழைய கத்தரிக்கோலை வாங்கி மண்ணெண்ணெயில் ஊறவைத்து துரு நீக்கிக் கழுவி, ரிவெட்டுகளைத் தட்டி சரி செய்து மீண்டும் சாணை பிடிக்க வருபவரிடம் கொடுத்து சாணை பிடித்து வைத்தார்.

பழைய சைக்கிள், வெட்டுமரம், பட்டாக்கத்தி, சிறிய கத்தி, உப்புக்கரை படிந்த பிளாஸ்டிக் வாளி, உடைந்த பிளாஸ்டிக் குவளை, இரண்டு சிகரெட் பெட்டிகளை இணைத்த நீட்டலளவுக்கு சாணைக்கல் இவைதான் பெரியவருடைய சொத்து.

முன்பு நந்தவனபுரத்துக் குடியிருப்புப் பகுதி மக்கள் மீன் வாங்கவேண்டுமென்றால் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மார்க்கெட்டுக்குச் செல்லவேண்டும் அல்லது ‘மீனு மீனோய்’ என ஒலிபெருக்கிக்கொண்டே வீதிவீதியாக வரும் டிவியெஸ் வண்டிக்காரரிடம் வாங்கவேண்டும். இருசக்கர வண்டி வைத்திருப்பவர்கள் பைபாஸ் அருகில் சென்று வாங்குவார்கள், இன்னும் சிலர் வானகரம் வரையில்கூடச் சென்று மீன் வாங்குவார்கள். இவை எல்லாமும் இருந்தாலும் நந்தவனபுரத்துக்கெனத் தனியாக மீன் கடை வேண்டும் எனப் பஞ்சாயத்துத் தலைவரின் தொடர் வேண்டுகோளுக்கு ஊராட்சி செவி சாய்த்து, மீன் அங்காடிக்கு இடம் ஒதுக்கியது.

அந்த மீன் அங்காடி வருவதற்கு முன்பு பெரியவர் காலையில் பைபாஸ் சாலை அருகில் போடப்படும் மீன் அங்காடிக்குச் செல்வதை வழமையாக வைத்திருந்தார். அங்கு கிடைக்கும் இடத்தில் வெட்டு மரத்தை வைத்து, வாளியில் தண்ணீரைப் பிடித்து வைத்துக்கொண்டு வாடிக்கையாளர்களுக்குக் காத்திருப்பார். தோற்றத்தைப் பார்த்து சிலரும், தொழில் சுத்தத்தைப் பார்த்து சிலரும், ஒன்றரை கிலோ மீனை ஒரு கிலோவாகச் சொல்லி காசைக் குறைத்துக்கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளும் குணத்துக்கு சிலருமாக வாடிக்கையாளர்கள் அவருக்கு உண்டு.

சில கடைகளில் கடைக்காரர்களே வாடிக்கையாளர்கள் சேவையாக வெட்டித் தரத் துவங்கியதும், பெரியவருக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தனர். ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த மற்ற நாள்களில் காகிதக் கோப்பையில் கிடைக்கும் இரண்டு கோப்பைத் தேநீர், பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்டு தட்டில் வைத்து விற்பனைப் பையன் எடுத்து வரும் நான்கு இட்லிகளுக்கும் தந்தது போக மதியச் சாப்பாட்டுக்கு முப்பது ரூபாய்கூட தேறுவதில்லை. முப்பது ரூபாய் தேறினாலும் தட்டுக்கடைகளில் ஏதாவது ‘வெரைட்டி ரைஸ்’ தின்று மதியப் பொழுதைக் கழிக்கலாம். தட்டுக்கடையில் சோறு சாம்பார் அப்பளம் பொறியல் மோர் சாப்பிட்டால் முப்பது ரூபாயை முழுதாகக் கொடுக்கவேண்டியிருக்கும். அது அவருக்குக் கட்டுப்படியாகாது. ‘வெரைட்டி ரைஸ்’ பதினைந்து ரூபாயுடன் முடிந்துவிடும். அதில் சுவையைக் கூட்ட, தட்டுக்கடை அம்மாள் முறைக்க முறைக்க ஊறுகாயை இரண்டு சொட்டு கூடுதலாக வைக்கச் சொல்வார்.

“பாஞ்சு ரூவாக்கி சோத்த வாங்கினு பத்து ரூவாக்கி ஊறுகா துண்ட்டுப் போறியப்பா யெப்போவ்” – தட்டுக்கடை அம்மாள் முறைத்தாலும் சத்தம் போடாலும் பெரிவருக்கு இரண்டு சொட்டு கூடுதலாக ஊறுகாயை வைக்கத் தவறுவதில்லை. கடைசிக் கவளத்தை உறுகாயில் பிசைந்து சாப்பிடுவார்.

பைபாஸ் சாலைக்கு அருகில் வாடிக்கையாளர் குறைந்ததால், அதிகாலையில் வானகரம் மீன் அங்காடி வரையில் சைக்கிளை மிதித்துச் சென்று வெட்டுக்கடை போட்டார். அங்கும் இடம் கிடைப்பதற்கு எல்லா சண்டைகளையும் போட்டு, இருசக்கர நிறுத்த ஒப்பந்ததாரரிடம் வேலை பார்க்கும் ஒருவர் சிபாரிசில் மூன்றடிக்கு மூன்றடி இடம் கிடைத்தது. அதற்கு பெரியவருக்கு கூடுதல் தளவாடச் சாமானாக மூன்றடிக்கு மூன்றடி தார்ப்பாலின் தேவைப்பட்டது. அதை விரித்து அதில் வெட்டுவதற்கு வரும் மீன்களை வரிசைப்படி போட்டுவைத்து ஒவ்வொன்றாக எடுத்து வெட்டுகிறார்கள். சிலரிடம் கருப்பு பிளாஸ்டிக் பைகளும் கூடுதலாக இருக்கின்றன. மீனின் வாயில் காய்ந்த வாழை நாரை நுழைத்துக் கட்டாகக் கட்டித் தூக்கி வந்து போடும் வாடிக்கையாளர்களுக்கு வெட்டப்பட்ட துண்டுகளை, கருப்பு பிளாஸ்டிக் பையில் இட்டுத் தந்தார்கள்.

இந்தத் தொழில் அணுகுமுறைக்குக் கூடுதல் முதலீடு தேவைப்பட்டது. தார்ப்பாலினை வாங்கிவிட்டார். நந்தவனபுரத்தில் சாலையோரக் கடையாக இருக்கும் பழைய இரும்புச் சாமான்கள், பிளாஸ்டிக் பொருள்கள், அட்டைப் பெட்டிகள் வாங்கி விற்கும் காயலான் கடையில் பேரம் பேசி பழைய அழுக்கு தார்ப்பாலினை வாங்கி மூன்றைக்கு மூன்றடி வெட்டச் சொல்லி, ஊராட்சிக் குழாயில் தண்ணீர் பிடித்து ஊற்றிக் கழுவினார். ஒருவேளை ‘வெரைட்டி ரைஸ்’ சாப்பிடாமல் கருப்பு பிளாஸ்டில் பைகளை வாங்கினார். அடுத்த நாள் எல்லோரையும் போல வானகரத்தில் வெட்டுக்கடை போட்டார். பார்ப்பதற்கு திறந்தவெளித் திடலில் வெற்றாகத் தோன்றும் வெட்டுக்கடைக்குள் அத்தனை தளவாடச் சாமான்கள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்றன.

பெரியவருக்கு புதிய இடத்தின் வழிமுறைகள் முதலில் பிடிபடவில்லை. வெட்டுக்கூலி கிடைத்தாலும் கிடைக்காவிடாலும் சந்தா கட்டச் சொன்னார்கள். தேநீருக்கும் காலைச் சிற்றுண்டிக்கும் அதிகம் செலவானது. வானகரம் வரையில் சைக்கிள் மிதிப்பது அவருடைய உடல் சக்திக்கும் அப்பாற்பட்டதாகத் தோன்றியது. இடையில் ஓய்வெடுத்தால்தான் வானகரம் வந்து வேலையில் இறங்க முடிகிறது. நிற்காமல் வந்தால், கடையில் அசதியாக இருக்கிறது. ஆனால், இவை எல்லாவற்றையும் மறக்கச் செய்யும் அளவுக்கு வருமானம் வந்தது.

இறால் உறிப்பதற்கு யாரையாவது நந்தவனபுரத்திலிருந்து கூட்டி வர நினைத்தார். காலைச் சிற்றுண்டியும் இரண்டு தேநீரும் இறால் உறிக்கும் கூலியில் பாதியும் கொடுத்தாலும் அவர்களுக்கு அது பெரிய வருமானம். நந்தவனபுரத்திலிருந்து ஆளைக்கூட்டி வராமல் வானகரத்தில் மீன் அங்காடி சுற்று வட்டாரத்தில் தன்னைப்போல் ஆதரவில்லாத ஆள்களைத் தேடினார். கிடைத்த ஒரு ஆளும் ஞாயிற்றுக் கிழமைகளில் இறால் உறிக்கும் கூலி முழுவதையும் தான் எடுத்துக்கொண்டு பெரியவருக்கு கிலோவுக்கு இரண்டு ரூபாய்கள் மட்டும் தருவதாகச் சொன்னார். சந்தா, தளவாடச் சாமான்கள் எதுவும் இல்லாமல் கையை வீசிக்கொண்டு வந்து உட்கார்ந்து இறால் உறித்துக்கொடுத்து காசை எண்ணிப் பைக்குள் வைக்கும் ஆளை பெரியவர் வியப்புடன் பார்த்தார்.

வானகரத்திலும் பெரியவரை பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது.
கடைகளுக்குச் சந்தா வசூலிப்பவர் திடீரென ஒருநாள் முதியோர் உதவித்தொகை பெற்றுத் தருவதாகவும் அதற்கு விண்ணப்பம் தரவேண்டுமென்றும் சொன்னார். முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் செலவுக்குப் பணம் ஏற்பாடு செய்யச்சொன்னார். பெரியவர் தனக்கு உதவித் தொகை வேண்டாமென மறுத்துவிட்டார். விடாப்பிடியாக மற்றவர் தொடர பெரியவருக்குக் கோபம் வந்தது. இனியும் தன்னை நச்சரிக்கவேண்டாமெனக் கேட்டுக்கொண்டார். சுற்றி இருப்பவர்களுக்கு ஆச்சரியம். வாசலுக்கு வந்து விண்ணப்பம் வாங்கிச் செல்பவருக்கு ‘கமிஷன்’ கொடுக்க பெரியவருக்கு விருப்பம் இல்லையெனப் பேசிக்கொண்டார்கள்.

வெட்டுக்கடை சந்தா செலுத்துபவர்கள் தங்களுடைய வாக்காளர் அட்டையின் நகலையோ ஆதார் அட்டையின் நகலையோ கண்டிப்பாகத் தரவேண்டுமெனக் கேட்டார்கள். பெரியவர் சாக்கு சொல்லி நாளைக் கடத்தினார். அவருடைய பேச்சுத் தமிழில் சென்னை மீனவப் பகுதிகளின் சாயல் இருக்கும். மீன் பெயர்களைச் சொல்லுவதெல்லாம் அரசக் குப்பம், நல்லக் குப்பம், சீனிவாசபுரத்தில் சொல்லும் பாணியில்தான் சொல்வார். வவ்வாலு, நெத்திலி, நகரெ, பாரெ, கெளுத்தியிலெல்லாம் ஒலிக்கும் சென்னைத் தமிழின் தனித்தன்மை வாழையின் ‘ழ’கரத்தை மட்டும் சிதைக்காது. தெள்ளத் தெளிவாக வா’ழ’மீன் என்றே ஒலிக்கும். இந்த ‘ழ’கர சுத்தம் பெரிவரிடமும் இருக்கும். பேச்சிலிருந்து அவரை மீனவப் பகுதி வாழ் சென்னையரெனக் கண்டுகொள்வதைத் தவிர வேறு எந்த விவரமும் யாருக்கும் கிட்டவில்லை.

சில நாள்களில் இருசக்கர வாகன நிறுத்தத்தின் ஒப்பந்ததாரர் மாறினார். வேலைக்குப் பழைய ஆள்களே இருந்தார்கள். மாறிய சில நாள்களில் பெரியவரை ஒப்பந்ததாரர் அழைப்பதாக வேலையாள் வந்து சொன்னார். தொழில் நடக்கையில் விட்டுவிட்டு வர முடியாதெனப் பெரியவர் மறுத்தார். கடையை மூடிவிட்டுப் போகும்போது வரச் சொன்னார்கள். கடை என்ன பெரிய கடை, மூன்றடிக்கு மூன்றடி சதுர நிலம் அவ்வளவுதான். தளவாடச் சாமான்களைக் குப்பையில் வீசினாலும் யாரும் எடுத்துச் செல்லமாட்டார்கள். பெரியவரின் சைக்கிள் மட்டும் பழைய இரும்புக் கடையில் விலை போகலாம்.

இருசக்கர நிறுத்தத்தின் ஒப்பந்ததாரரைப் பார்க்கச் சென்ற நாளுக்கு அடுத்த நாள் முதல் பெரியவர் வெட்டுக்கடை போடவில்லை. எங்கே போனார்? என்ன ஆனார்? யாருக்கும் தெரியவில்லை. சில நாள்களுக்கு பெரியவர் யார் கண்களிலும் படவில்லை.

நந்தவனபுரம் மீன் அங்காடி திறக்கப்பட்டபோது அங்கு வந்தார். ‘ப’ வடிவில் அமைந்திருந்த மேடைகளில் எண்கள் இட்டுப் பகுதிப் பகுதியாகப் பிரித்துக் கடைகளைக் குத்தைக்குவிட்டார்கள். பதினாறு கடைகள் வந்தன.

ஒட்டுமொத்த சென்னை மக்களும் சென்னையின் புறநகர் மக்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சியோ மீனோ இல்லாமல் உண்ணமாட்டார்கள் போலிருக்கிறது. விடியற்காலையில் நகர்வலமோ புறநகர்வலமோ எது வந்தாலும் எல்லா இறைச்சிக்கடைகளிலும் வழக்கத்தைவிடவும் அதிகமாக இறைச்சி தொங்குகிறது. கோழிக்கடைகளில் ஐந்தாறு கூண்டுகள் அதிகமாக இறங்குகின்றன. ஆறு மணிக்கும் முன்பாகவே வாடிக்கையாளர் வரிசை துவங்குகிறது.

நந்தவனபுரத்து மீன் அங்காடியும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அங்காடியைத் திறந்த நாள் முதல் ஞாயிற்றுக்கிழமை பதினாறு கடைகளிலும் கூட்டம் நிறைந்தது. கெளுத்தி, கெண்டை, சுறா, பால் சுறா, வஞ்சிரம், கோலா, சுதிம்பு, நெத்திலி, பன்னா, செங்கரா, கானாங்கெளுத்தி, காரப்பொடி, வெள்ளை வௌவ்வால், கருப்பு வௌவ்வால், ஊலா, மத்தி, பாறை, வாழை, விலாங்கு, கொடுவா, காலா, கிழங்கான், நகரை, இறால், நண்டு, கணவாய், எல்லாமும் தெர்மோகோல் பனிக்கட்டிப் பெட்டிகளில் வந்து இறங்கின. காசிமேட்டுச் சரக்கு மட்டுமல்லாமல் நேற்று நாகர்கோயிலில் பிடிக்கப்பட்டு இன்று சென்னை வந்த சரக்குகளும் இறங்கின. பதினாறு கடைகளை மட்டும் வைத்துக்கொண்டு நந்தவனபுரத்து மீன் அங்காடி, மார்க்கெட் மீன் அங்காடிக்கு இணையான வியாபாரத்தை முதல் ஞாயிறில் கண்டது.

பைபாஸ் சாலை, வானகரம் இரண்டையும் பார்த்த பெரியவர் நந்தவனபுரத்தில் முதல் நாளிலிருந்தே மீன் வெட்டினார். அதே பழைய வாகை மரத்துண்டு வெட்டுமரம், பட்டாக்கத்தி, கத்தி, கத்தரிக்கோல், சாணைக்கல். பெரியவர் உட்பட வெட்டுக்கடைக்காரர்கள் அனைவரும் திணறினார்கள். பல வாடிக்கையாளர்கள் வீட்டுக்குச் சென்று அவர்களாக்வே வெட்டிக்கொள்வதாகச் சொல்லி மீன்களை எடுத்துச் சென்றார்கள்.

அப்பொழுதும் பெரியவரிடம் யாரும் எந்த விவரங்களையும் கேட்கவில்லை. திறந்த முதல் வாரத்து வியாபாரச் சூடு தணிந்ததும் பெரிவரிடம் மற்றவர்கள் பேச்சுக்கொடுத்தார்கள்.

“இன்னா பெர்சு, எங்கேர்ந்து வர நீ? தலைவர் ஆளா? யாரு சொல்லிவுட்டா இங்க கட வருதுன்னு. சோக்கா எல்லா ஐட்டமும் எட்தாந்துக்குற. கட்ட இன்னா, கத்தி இன்னா, கத்திரி இன்னா. சொல்லு பெர்சு” – ஏழுமலை, கடை எண் ஐந்தைக் குத்தகைக்கு எடுத்திருப்பவன் வம்பு வளர்த்தான்.

“பழமொழி தெர்மா ஏழுமல” சென்னைத் தமிழிலும் மாறாத ‘ழ’கரத்துடன் பெரியவர் கேட்டார்.

“பெர்சு சொன்னா தெர்ஞ்சுக்ரேன்”

“ரிஷி மூலம் நதி மூலம் பாக்கக்கூடாது”

“அப்டீன்னா?”

“நா யாரானா இருந்துட்டுப் போறன், என்னை அப்டியே வுடு”

“தோடா, பெர்சுக்கு இன்னொரு பேருக்குதா? பாஷா! பாஷா! பாஷா! போ பெர்சு போ. நல்லது கெட்டதுக்கு நாலு பேரு வோணுமென்னு கேட்டேன். சொல்லியானா போ, நாளிக்கு தலைவர் வந்து கேட்டா அவராண்டையும் பழமொழி சொல்லி கலாய் இன்னா”

பெரியவர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. வெட்டுமரத்தை மட்டும் கடையிலேயே வைப்பதற்கு அனுமதி கேட்டார். அங்க்கேயே இருக்கட்டும் என்றார்கள்.

எதிர்பார்த்தபடி அங்காடியில் கடை போடுபவர்களை முறைமைப்படுத்தும் வகையில் பெரியவரிடம் வாக்காளர் அட்டையின் நகலைக் கேட்டார்கள். அனைத்தையும் விசாரித்தார்கள். சந்தா, வெட்டுக்கூலியில் பங்கு எல்லாமும் எல்லா இடத்திலும் இருப்பவை, பெரியவருக்கு அதில் எந்தக் குழப்பமும் இல்லை. வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை காட்டுவதில்தான் அவருக்குக் குழப்பம் இருந்தது. வானகரத்தில் செய்தது போலவே நாள்களைக் கடத்தினார், ஒரு எல்லைக்கு மேல் வார்டு உறுப்பினராலும் தாங்க முடியவில்லை, அங்காடியில் வைத்தே பெரியவரை சத்தம் போட்டார். அனைவரும் சேர்ந்து பிடித்துக்கொண்டார்கள்.

“வோட்டர் ஐடி காட்றதுக்கு பெர்சுக்கு இன்னா தவ்லத்து’பா? ரொம்பதான் சத்தாய்க்குது”

பெரியவர் அடுத்த நாள் தனது வாக்காளர் அட்டையின் நகலைத் தயங்கித் தயங்கி வார்டு உறுப்பினரின் அலுவலகத்தில் கொடுத்தார். அதில் அரசக்குப்பத்தின் முகவரி இருந்தது. அரசக்குப்பத்திலிருந்து இங்கு வந்து புறநகரில் இருப்பதன் காரணத்தை பெரியவரால் சரியாக விளக்க முடியவில்லை. அரசக்குப்பத்தில் அவருக்காக யாரும் இல்லை, அதனால் இங்கு புறநகரில் வந்து சாலையோரக் குடிசையில் காலத்தை ஓட்டுகிறார். யாரிடம் இந்தக் கதையைச் சொன்னாலும் நம்பமாட்டார்கள். ஆனால், பெரியவர் அதுதான் உண்மை என சாதித்தார்.

பெரியவரின் பொய் ஒருவாரம்தான் நின்றது.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை காசிமேட்டிலிருந்து வந்த மீன் வண்டியின் ஓட்டுநர் அரசக்குப்பத்து ஆள், பெரியவரைப் பார்த்ததும் பம்மினார். பெரியவருக்குப் பின்னால் நின்றுகொண்டு மீன் கடைக்காரர்களைப் பார்த்து சைகையில் இவர் இங்கு என்ன செய்கிறார் எனக் கேட்டார். அவர்களும் வெட்டுக்கூலி என சைகையில் பதில் சொன்னார்கள். ஒரு மீன் கடைக்காரரைத் தனியாக அழைத்துச் சென்று ஓட்டுநர் பேசினார். அவர் பேசிவிட்டு வந்ததும், ஆளாளுக்கு கைப்பேசியை எடுத்துத் தகவல் பரிமாறிக்கொண்டார்கள்.

பெரியவர் வெட்டு மரத்தில் நீரை ஊற்றி வெட்டுக்கத்தியால் சீவி மீன் துணுக்குகளை அகற்றி சுத்தம் செய்துகொண்டிருந்தார். ஏழுமலை அவரிடம் சென்று தன்னுடைய வழமையான எள்ளலுடன்,

“பெர்சே, இன்னா நீ சொல்லேன்னா எங்களுக்குத் தெரியாதா? யாரையோ போட்டியாமெ? யாரைப் போட்ட? பொருளு தூக்குனதுக்கு எத்தினி வருஷம் புட்சு போட்டானுங்கோ? உன் இஸ்ட்ரி இப்ப எல்லாருக்கும் தெர்ஞ்ச்சுட்சு பெர்சு. நீ உன் வயசு காலத்துல பெரீ ஆளா பெருசு. எப்படிப் போட்ட? தோ மீனு வெட்டப் புடிக்கிறியே இதே கணக்குதானா? அத்தொட்டு உன்னை யாரும் தள்ளி வெக்கப் போறதில்ல. நீ பொத்திப்பொத்தி வெச்சது, வெளில வந்துட்சுன்றேன், அவ்ல்தான்.” – பெரியவர் முதன் முறையாக அதிகாரமான குரலில் பேசினார்.

“ஏழுமல, டீ சொல்லு மொதுல்லொ. இன்னா தெரியும் உனுக்கு இப்பொ? டிரைவர் சொன்னானா? நானு பொருளு தூக்கி யாரைப் போட்டனாம்? வெட்டு வாங்குனவன் பூட்டானா? கீரானா? டிரைவர் பார்த்தானாமா? குர்ரா டீயை. டேய் ஞாயித்திக் கெழமை வியாபாரம் முஞ்சுதா வூட்டுக்குப் போடா. என்னிய ஆராய வண்ட்டானுங்க, ஜேம்சுபாண்டுங்கொ”

சத்தமாகப் பேசிவிட்டுத் தன் தளவாடச் சாமான்களை, வெட்டுமரம் உட்பட, சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பெரியவர் புறப்பட்டார். முதலில் வெட்டுமரத்தை அங்காடிக்குள் கடையிலேயே வைக்க அனுமதி கேட்டவர் வெட்டுமரத்தையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டது அவர் நாளை முதல் நந்தவனபுரத்து அங்காடிக்கு வரப்போவதில்லை என்பதைக் காட்டியது. அதன்படிக்கே அவர் வரவில்லை. அடுத்த நாளும் வரவில்லை.

ஏழுமலை, யார் யாரிடமோ கேட்டு பெரியவரின் குடிசையைச் சென்று பார்த்தான். அது குடிசை இல்லை, கோணிப்பை மூடிய கூண்டுதான். சாலைத் தொழிலாளர்கள், கூலியாள்கள், தற்காலிகமாகத் தங்குவதற்காகப் போட்டுக்கொள்ளும் மறைப்புதான். அதில் ஒரு மறைப்புக்குள் பெரியவர் இருந்திருக்கிறார்.

பெரியவரைப் பற்றி ஏழுமலையோ, காசிமேட்டு ஓட்டுநரோ, வானகர மீன் அங்காடியின் இருசக்கர வாகன நிறுத்த உரிமையாளரோ யாருக்கும் தெரியாத ரகசியங்களை ரகசியமாகவே வைத்துவிட்டுப் பெரியவர் மீண்டும் மாயமாகிவிட்டார்.

சென்னையில் கடற்கரையோரத்தில் மீனவர்களின் மீன்பிடிப்புப் பகுதியை மாற்றுவதை எதிர்த்து அந்நாள்களில் நடந்த போராட்டத்தில் துடிப்புள்ள இளைஞராகக் கலந்துகொண்ட அவரைக் குறிவைத்துக் கைக்கூலிகள் பாய்ந்ததும், அவர் திருப்பித் தாக்கியதும், அதைத் தற்காப்பு என நிரூபித்து வாதாடிய வழக்கறிஞர்களின் வாதம் எடுபடாமல், அவர் சிறை சென்றதும், யாருக்கும் தெரியாது.

இடது காலை விந்தி விந்தி நடந்து நந்தவனபுரத்துப் புறநகரில் வாழ்ந்தது போல, இப்போது வேறு எங்கேனும் அவர் மீன் வாசனையை சுவாசித்து வெட்டுக்கூலியில் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடும்.

***
அபுல் கலாம் ஆசாத் – பணி நிமித்தம் மேற்கொண்ட இவரது அமீரக புலம் பெயர் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட கதைகள் வழி இவரது படைப்புலகம் வெளியே கவனிக்கப்பட்டது என்றாலும், கஸல் குறித்த இவரது கட்டுரைகள் நன்கு பேசப்பட்டத் தொகுப்புகளில் ஒன்று. ஜீரோ டிகிரி நடத்திய நாவல் மற்றும் குறுநாவல் போட்டிகளில் இரண்டு முறை விருதுகள் வென்றிருக்கிறார். சுவாரஸ்யமாகவும், புதிய களங்களிலும், கூர்மையான கதையாடலும் கொண்ட படைப்புகள் இவருடையவை. இவரது படைப்புகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular