Saturday, November 16, 2024

அடிக்குச்சி

சு.சரவணன்

பிஸ்கட் பொட்டலத்துடன் மீனாட்சி வெளியே வந்தார்.

“குழந்தைகளுக்கு கொடுக்க பிஸ்கட் பத்தாது. மார்னிங் வாங்கிட்டு வந்துருங்க. அஞ்சு கிலோ மிச்சர் வாங்கிக்கங்க. இவ்வளவு குழந்தைங்க வருவாங்கனு நினைக்கல. வெரிகுட் சைன். பர்டிகுலர்லி.. பெண் குழந்தைகள்.”

மகிழ்ச்சியாகச் சொன்னார்.

“சரிங்க தோழர்”

அழகு பதில் சொன்னார்.

மீனாட்சி கருப்புதான். ஆனாலும் ரசிக்கும்படியானவர். இருபத்தி எட்டு வயது இருக்கும். அவர் எப்போதும் அணியும் கருப்பு சட்டை அவரை கூடுதல் கம்பீரமாகக் காட்டியது.

“அந்த பொண்ணுதா”

காம்பௌண்ட் சுவர் பக்கம் இருந்து குரல் வந்தது. மீனாட்சி திரும்பி பார்ப்பதற்கும் நான்கு பேர் ஸ்கூல் கேட் வழியாக வருவதற்கும் சரியாக இருந்தது.

“எட்டு மணிக்கு வயசு பொண்ணுங்களும் பசங்களும் எங்க ஊரு ஸ்கூல்ல என்னா பண்றீங்க?”

நான்கு பேரில் ஒருவர் கலாச்சாரத்தைக் காப்பாற்றும் தொனியில் கேட்டார். வேறு இடமாக இருந்தால் இந்த மாதிரியான கேள்விக்கு மீனாட்சி வேறு மாதிரியான பதில் தரக்கூடியவர். கேட்டவர்கள் ஏன் இவர்களைப் பார்த்தோம் என்று நினைக்க வைத்திருப்பார். வந்த வேலையை நினைத்து நிதானமாக பதில் சொல்ல ஆரம்பிப்பதற்குள் “இவரு பேரு மணி. பக்கத்து ஸ்டேஷன்ல போலீஸ்.” என்று பார்ப்பதற்கு நடிகர் அப்பாஸ் போல இருந்தவரைக் காட்டினார்.

“பேர் என்னமா?”

போலீஸ் தொனியில் கேள்வி வந்தது.

“மீனாட்சி”

“இங்க என்ன நடக்குது?”

“நாங்க மெய் கலைக்குழு. பசங்களுக்கு கிராமியக்கலை கத்துக்கொடுக்க சென்னைல இருந்து வந்திருக்கோம்”

மீனாட்சி பதட்டமில்லாமல் பதில் சொன்னார்.

“காலைல இருந்து உங்க வேலைய பாத்துகிட்டு இருக்கோம். உங்கள யாரு கூப்டா இங்க? ஊருக்குள்ள எத்தன வீட்டுல பிரச்சன தெரியுமா?”

நான்குபேரில் ஒருவர் கோபமாகப் பேசினார். மீனாட்சிக்கு ஒன்றும் புரியவில்லை. நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சியின் நண்பர்கள் “தோழர் எனி ப்ரொப்ளெம்” என்றனர்.

“வெயிட்.. ஐ டீல் இட்” என்று சைகை காட்டினார்.

“சார், எங்களால ப்ராப்ளமா?”

மீனாட்சி நிதானமாக கேட்டார்.

“நீங்க எப்படி ஸ்கூல்க்கு வந்தீங்க?” போலீஸ் கேட்டார்.

“தமிழ் டீச்சர் எங்கள அப்ரோச் பண்ணாங்க. சம்மர் லீவில பசங்களுக்கு கிராமியக்கலை கத்துதர கேட்டாங்க. பெர்மிசன் வாங்கிதா பண்றோம்”
மீனாட்சி சொல்லி முடித்தார்.

“சென்னைல இருந்து வந்து கிராமத்து பசங்களுக்கு கிராமிய கலைய சொல்லிக்கொடுக்க போறீங்களா”?

“எத கத்துக்கணும், எத கத்துக்கக்கூடாதுனு எங்களுக்கு தெரியும் .சொல்லிக்கொடுக்க வந்துட்டாங்க வண்டி ஏறிக்கிட்டு”

வந்தவர்களில் ஒருவர் முணுமுணுத்தார்.

“எங்களால என்ன ப்ரொப்ளெம்?”

“இது ஊரு விவகாரம். டீச்சர்தான உங்கள கூட்டிட்டு வந்தாங்க. டீச்சர் வரட்டும் பேசிக்கிறோம்”

“தோழர் டீச்சருக்கு கால் பண்ணுங்க.. நீங்க போய் கரகத்தை ரெடி பண்ணுங்க. மார்னிங் டைம் இருக்காது”

அருகில் இருந்த நண்பர்களிடம் சொல்லி முடிப்பதற்குள் செழியன் டீச்சர்க்கு போன் செய்தார். வெடிகுண்டை ஆராய்வது போல மீனாட்சியை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் போலீஸ்.

மீனாட்சி, “சாப்பாடு ரெடியா இருக்கு. வாங்க சாப்ட்டு போயிடலாம்”
“நான் செழியன். ஸ்கூலுக்கு வாங்க. ஊர் ஆளுங்க போலீஸ் கூட வந்து மீனாட்சி தோழர்கிட்ட பேசிட்டு இருக்காங்க”

செழியன் பேசிக்கொண்டு இருக்கும்போது “டீச்சர் வராங்க. அவங்க கிட்ட பேசி முடிங்க. ரொம்ப வளக்காதீங்க.” என்று அவர்களிடமும் “பிரச்சனை வராம பாத்துக்கோமா” என்று மீனாட்சியிடமும் சொல்லிவிட்டு போலீஸ் கிளம்பினார்.

கேட் வரை போனவர் திரும்பி வந்து நான்கு பேரில் ஒருவரை தனியாக அழைத்துப்போய்..

“நிதானமா, தெளிவா பதில் சொல்றாங்க. பாத்து பேசுங்க.. தினமும் இவங்கள மாதிரி ஆளுங்கள பாக்கறேன். போராட்டம், பேரணினு ரோடுல உக்காந்துகிட்டு தலைவலி. போதாததுக்கு மீடியக்காரனுக வேற, மூஞ்சி முன்னாடி மைக்க நீட்டுவானுக”

கூட இருந்தவர் புரிந்தவர் போல தலையாட்டினார்.

கூட்டமாக இருப்பது டீச்சருக்கு குழப்பமாக இருந்தது. அருகில் வந்தவர், “நடுவில் பேசிக்கொண்டு இருப்பது ஏழாவது படிக்கிற சுரேஷ் அப்பா. மற்றவர்களையும் ஸ்கூலில் பாத்த நியாபகம். வாங்க.. வாங்க” என்றார்.

“நானே காலையில வந்து உங்கள பாக்களானு இருந்தேன்”

பக்கத்தில் வரும்போது டீச்சர் பேசிக்கொண்டு வந்தார்.

“நீங்க இவங்கள கூட்டிட்டு வந்தீங்களா டீச்சர்?”

சுரேஷ் அப்பா கேட்டார்.

“ம்”

“பொண்ணுங்க பசங்களோட உக்காந்து அசிங்கமா பேசிட்டு, சிரிச்சிகிட்டு இருக்காங்கனு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க டீச்சர். நான் வந்து பாத்தேன். அப்படித்தா இருந்துச்சி”

மீனாட்சி உட்பட எல்லோர் முகமும் சுருங்கி விரிந்தது. அடுத்த நொடி அசட்டையாக சிரிப்பும் வந்து போனது.

“என்ன இப்படி பேசுறீங்க? இவங்க எல்லோரும் நல்லா படிச்சவங்க. இவங்க மீனாட்சி. நம்ப பசங்களுக்கு கிராமியக்கலை சொல்லித்தர வந்திருக்காங்க”

“ஒன்னாவா தூங்க போறாங்க?” என்று கேட்டதும் இரண்டு கையை இடுப்பிலும், ஒரு காலை அகட்டியும் வைத்து இந்த மாதிரி கேள்விக்கு இவ்வளவு மரியாதை போதும் என்பது போல அவரை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சியை டீச்சர் கவனிக்காமல் இல்லை. அவர் கேட்ட கேள்வி டீச்சருக்கு கோபத்தை எழுப்பியது.

ஆனாலும் சமாளித்து “இல்ல, இல்ல பொண்ணுங்களுக்கு நடராஜன் சார் வீட்ல ரூம் தந்திருக்காரு. சாப்பாடும் அங்கதா.. நீங்களும் ஏதாவது பண்ணுங்க நம்ப பசங்களுக்காக வந்திருக்காங்க”

“இவங்க வராங்கனு முன்னாடியே சொன்னீங்களா?”

“பரிச்சைக்கு முன்னாடி கிராமியக்கலை சொல்லிக்கொடுக்க ஆளுங்க வராங்க. விருப்பம் இருக்கறவங்க வீட்டுல அப்பா, இல்லனா அம்மாகிட்ட லெட்டர்ல சைன் வாங்கிட்டுவர சொல்லிதான செய்தேன். நீங்களும் சைன்போட்டு இருக்கீங்க. சுரேஷ் கூட பறை கத்துக்க பேர் கொடுத்திருக்கான்”

“தினமும் சைன் கேக்கறான். எதுக்குன்னு படிச்சி பாத்தா போடறோம்?”
“ஊர் தலைவர்கிட்ட சொல்லிட்டீங்களா?”

“ஹெட்மாஸ்டர் மூலமா சிஇஓ கிட்ட பெர்மிஷன் கேட்டேன். நல்ல விஷயம், பண்ணுங்க நானும் வரேன்னு சொன்னாரு. PTA தலைவருகிட்டயும் சொல்லிட்டேன். நிகழ்ச்சி நடக்கறப்ப வந்து பாக்கறேன். உதவி செய்யறன்னு சொன்னாரு”

“கோணிச்சாக்கு கிட்ட சொல்லுவீங்க. ஊர் தலைவர் கிட்ட கேக்க மாட்டீங்க?”

“ஊரு சம்பந்தப்பட்டது. நீங்க செய்யறதுக்கு முன்னாடி ஊர்த்தலைவர் கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கணுமா இல்லையா? தூரத்துல உக்காந்துகிட்டு எல்லாத்துக்கும் தலைய ஆட்டுவானுக. ஊருக்குள்ள நாங்கதான் வாழணும். இல்லாத வழக்கத்தை செஞ்சிகிட்டு. நீங்க ஒரு வார்த்தை தலைவர் கிட்ட கேளுங்க. அவரு ஒத்துக்கிட்டா தாராளமா பண்ணுங்க. நாங்க தடுக்கல”

நடப்பதை மீனாட்சி கவனமாக பார்த்துக்கொண்டு தான் இருந்தார். நடப்பது புரியவில்லை.

“ஹலோ சார், நிகழ்ச்சி சம்பந்தமா உங்கள காலையில வந்து பாக்கணும்னு இருந்தேன்”

“இப்படி செய்யறதுக்கு முன்னாடி ஒரு வார்த்த கேக்கணும் இல்ல? அவங்க வந்ததுல இருந்து உங்க பஞ்சாயத்துதான். பள்ளிக்கூட விஷயத்துல நாங்க தலையிடக் கூடாது. தொந்தரவா இருக்கு. பிரச்சன வராம பாத்துக்கோங்க”

பேசிக்கொண்டு இருக்கும்போது டீச்சர்க்கு ஹெட்மாஸ்டர் அழைப்பு வந்தது.

“சார்”

“ஊருக்குள்ள இருந்து நெறய போன் வருது. நிகழ்ச்சி வேணான்னு சொல்றாங்க”

“சார், உங்ககிட்ட சொல்லிட்டுத்தான..?”

“கிராமியக்கலைனு சொன்னீங்க. பறை கத்துக்கொடுக்க போறத சொல்லவே இல்லையே”

“சார், பறை இசைதான?”

வந்தவர்களின் நோக்கம் இப்பொழுது தான் டீச்சருக்கு முழுமையாகப் புரிந்தது.

“அதெல்லாம் சரிதான்மா.. ஏழாவது படிக்கிற மகேஸ்வரி அப்பா போன் பண்ணாரு. சாயந்திரம் வேலையை முடிச்சுட்டு வரப்ப தப்பு கொட்டு சத்தம் கேட்டுச்சு. ஊர்ல யாரோ செத்துட்டாங்கன்னு பயந்துட்டேன். யாராவது செத்தால் தான் தப்பு அடிப்பாங்க. வீட்ல வந்து கேட்டா, காலையிலிருந்து இப்படித்தான் இருக்குன்னு சொல்றாங்க. பசங்களுக்கு நல்லதை சொல்லி கொடுங்க. எதுக்கு தேவையில்லாத வேலைனு கேக்கறாரு என்ன பதில் சொல்றது? பொண்ணுங்களும் காலையில் பறை அடிச்சாங்களா?”

“ஆமா சார், ஒன்பதாவது பொண்ணுங்க நாலு பேரு ஆர்வமா இருக்காங்க”

“அந்தப் பொண்ணுங்க அப்பா ஒருத்தர் போன் பண்ணி ‘வயசு பொண்ணு தோளுல தப்ப கட்டிவிட்டா எப்படி உருப்புடும்னு?’ கேக்குறாரு. பதில் சொல்ல முடியல. தப்ப தவற எத வேணா கத்துக் கொடுங்கன்னு சொல்றாங்க”

“சரிங்க சார்”

போனை வைத்ததும் பெரிதாக டீச்சர் மூச்சை இழுத்துவிட்டார். காலையில் பறை வாசிக்க, வெயிலில் பறையை காயவைக்க மாணவர்கள் காட்டிய ஆர்வம் கண் முன்னே வந்து போனது. மத்தியான சாப்பாட்டுக்கு போன சதீஷ் ஸ்கெட்ச் எடுத்து வந்து பறையில் அவனுடைய பெயரை எழுதி ‘மூனு நாளைக்கு இந்த பறை’ என்னது என்று சொன்னது மனதுக்குள் நிமிர்ந்து நின்றது.

“ஊரு பசங்களுக்கு எதுக்கு தப்பு அடிக்கிற வேல? கம்பு சுத்த சொல்லி கொடுங்க போதும்” என்று சொன்ன சுரேஷ் அப்பா கிளம்பி போனார். அவருடன் வந்தவர்களும் கூடவே போனார்கள்.

‘உங்களுக்கு புடிக்கலைன்னா உங்க பையன கத்துக்காதன்னு சொல்லுங்க. யாருமே கத்துக்க கூடாதுன்னு சொல்றது என்ன நியாயம்..’ -வாய் வரை வந்ததை சொல்லாமல் டீச்சர் விழுங்கினார்.

“ரெஸ்ட் ரூம் போலாமா மீனா?”

“ம்”

மீனாட்சிக்கு நிறைய கேட்கவும் டீச்சர்க்கு நிறைய சொல்லவும் இருந்ததால் இருவரும் நடக்கத் தொடங்கினர். மீனாட்சி நண்பர்களைப் பார்த்து போய் சாப்பிடுங்க என்று சொன்னார்.

“பற கத்து கொடுக்கிறது தான் அவங்களுக்கு பிரச்சனை”

“ம்..”

பாத்ரூம் இருக்கும் எதிர்திசையில் நடந்து கொண்டிருந்தனர்.

“அது புடிக்காமத்தான் பசங்க பொண்ணுங்கன்னு பேசிட்டு போறாங்க”

“பற இல்லனாலும் அப்படிதான் பேசுவாங்க.. சட்ட போட்ட பொண்ணுங்கள பேசுறது இன்னும் ஈசி. டிபிகல் சொசைட்டி மென்டாலிட்டி”

“பறை ஊர்ல அடிக்க கூடாதாம்”

“ஸ்கூல்ல தானே அடிச்சோம்”

“ஸ்கூலு ஊர்ல தான இருக்கு. அதனால ஸ்கூல்ல அடிக்கக் கூடாதாம்”
“ஏன்?”

“பறை சாவுக்கு அடிக்கிறது. ஊர் பசங்களுக்கு எதுக்குன்னு கேக்கறாங்க?

“பறை தவிர்த்து சிலம்பம், ஒயிலாட்டம், கரகம் கத்துக்கொடுங்கனு ஹெட்மாஸ்டர் சொல்றாரு. வந்தவங்களும் அதேதான் சொல்றாங்க”

“ம்ஹூம்”

”பறை மெய்குழுவின் அல்டிமேட். கண்டிப்பா கத்து தரணும்”

“லோக்கல் டீச்சர்ஸ் வச்சு மூவ் பண்ணுங்க”

“ஈவன்ட் நடக்கறது தெரியும். ஆனா வர மாட்டாங்க. டீச்சர்ஸ் பலருக்கு வந்தவங்க தாட் இருக்கு. சிலருக்கு இப்படி பிரச்சினை வரும்னு ஏற்கனவே தெரியும். நமக்கு எதுக்கு வம்புனு வர மாட்டாங்க”
ஆசிரியர் சமூகத்தை நொந்து கொண்டார்.

“ஸ்கூல் PTAல பேசுங்க”

“ம்” யோசித்தவர்..

“PTA தலைவரை வந்தவங்க மதிக்க மாட்டாங்க. அவரு சொன்னா கேப்பாங்களான்னு தெரியல?”

“ஏன்?”

“ஊர்த் தலைவரா இருந்தப்பவே மதிக்க மாட்டாங்க. மெஜாரிட்டி இவங்க தான். அவர் பேரு கிருஷ்ணசாமி. அவருக்கு சாக்கு வியாபாரம். அதனால அவர கோணிசாக்குன்னு கிண்டல் பண்ணுவாங்க. நீ தான் பார்த்தியே”

“ம்”

“ஸ்கூல்ல கொடியேத்த விடமாட்டாங்க. ஃபங்ஷனுக்கு வந்தா ஓரமா உக்காந்துட்டு போயிடுவாரு. பேசலாம். வேற மாதிரி பிரச்சினை ஆயிடுச்சின்னா?”

“பறை இல்லாம பண்ணலாமா?”

“பறை கத்துக்க ஆசையா வருவாங்களே என்ன பண்றது?”

“ஹெட் மாஸ்டர் சொல்படி பார்த்தா பறை கத்துக்க வருவாங்கன்னு தெரியல”

“ஒரு பையன் ஆசையா வந்தாலும் அவனுக்கு மெய் கற்றுக்கொடுக்கும்”
திடமாகச் சொன்னார் மீனாட்சி.

பேசிக்கொண்டே நடராஜன் சார் வீட்டிற்கு வந்தார்கள். ஊர்சனம், தெருசனம், பயிற்சியில் பார்த்த குழந்தைகள் என சின்ன கூட்டம் நடராஜன் சார் வீட்டின் முன்னால் கூடியிருந்தது. மீனாட்சியின் நண்பர்கள் ஓரமாக நின்று கொண்டிருந்தனர்.

“சாப்படல”

“என்னாச்சு?”

“ஸ்கூலுக்கு வந்தவங்க உள்ள இருக்கிறாங்க. நைட் சாப்பாடு இல்லனு நெனைக்கிறேன்.. செம்பியன் சொன்னார். நான் போய் பாக்கறேன்”
டீச்சர் உள்ளே போனார்.

“ப்ராப்ளமா தோழர்?”

அருள்மொழிவர்மன் கேட்டார்.

“சொல்றேன் தோழர்”

மீனாட்சி முகத்தில் காலையிலிருந்த மகிழ்ச்சி இல்லை என்பதை உணர்ந்தனர். டீச்சர் உட்பட மூன்று பேரும் வெளியே வந்தனர்.
கூட்டத்தில் நின்று கொண்டிருந்த நடராஜனின் பக்கத்து வீட்டுப் பெண் மூன்று பேரையும் பார்த்து..

“அவர் வீட்டுக்குள்ள யாரை விடணும் விட கூடாதுன்னு சொல்றதுக்கு நீங்க யாரு?”

“சும்மா இருக்கா. உனக்கு தெரியாது”

“பொம்பளைங்களை அடக்கி வைக்கிறது தவிர உங்களுக்கு என்ன தெரியும்?”

“அநியாயத்துக்கு தொண போகாத”
பேசிக்கொண்டிருந்த பெண்ணிற்கு துணையாக இன்னொரு பெண்ணும் பேச ஆரம்பித்தார்.

“நான் அநியாயத்துக்கு தொண போறனா?” கோபமாகக் கத்தினார்.

“லீவு விட்டதிலிருந்து சும்மாதான் சுத்துறாங்க. பாங்கா நாலு விஷயம் கத்துக்கணும்னு டீச்சர் கஷ்டப்படுறாங்க. அதை எதுக்கு கெடுக்கிற?”

“படிக்க அனுப்பிச்சா.. தப்பு அடிக்க கத்துக் கொடுப்பாங்க. நான் பாத்துட்டு சும்மா இருக்கணுமா?”

கோபமாகக் கேட்டார்.

“எல்லாருக்குமா சொல்லி கொடுத்தாங்க? ஆசைபடுறவங்க கத்துக்கிறாங்க. உனக்கு என்ன?”

தான் மனதில் நினைத்ததை அந்தப் பெண் சொல்லிவிட்டது டீச்சருக்கு நிறைவைத் தந்தது.

“அதானே”

பக்கத்தில் இருந்த பெண் சொன்னார்.

“காசு கொடுத்து கத்துக்குற எழுத்தா? தலையில எழுதி இருக்கு. இப்படி யாராவது கத்துக் கொடுத்தாதான் உண்டு. அதிலேயும் மண்ண போட வந்துட்டானுங்க. நீங்க மட்டும்தான் ஊரா? கோபமாக அந்தப் பெண் பேசிக் கொண்டிருப்பதை மீனாட்சியும் அவரது நண்பர்களும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ஊரு நல்லதுக்கு தான் சொல்றேன்”

“நீயும் தப்பு அடிக்கிற நானும் தப்பு அடிக்கிறேன். ஒரே வேலதானே செய்றோம். உன் பொண்ண கொடுன்னு கேட்பான். அள்ளி கொடுத்துட்டு போங்க”

சொன்னவர் கோபமாகக் கிளம்பி போனார். அவர்கள் கண்ணில் இருந்த கோபத்தை மீனாட்சி கவனிக்காமலில்லை. வேடிக்கை பார்க்க எதுவும் இல்லாததால் அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டு கூட்டம் கலைந்தது.

சாப்பாட்டின் சுவை கூடுதலாக இருந்தது மீனாட்சிக்கு. சாப்பாட்டின் இடையில் சிரித்துக்கொண்டார். வெளியில் பேசிய பெண்களுக்கு மனதிற்குள் கை தட்டினார். நம்பிக்கையாக உணர்ந்தார்.

“என்ன தோழர்.. இப்படி இருக்கறாங்க”? செம்பியன் கேட்டார்.

“வந்தவங்கள எப்படி தப்பு சொல்ல முடியும்?”

“ம்..ம்…!”

“அவங்களுக்கு பாட்டுன்னா சினிமா பாட்டு. இசை நாதஸ்வரம், தவில் இந்த மாதிரிதான் தெரியும். பறையும் இசைதான். ஒப்பாரியும் பாட்டுன்னு அவங்களுக்கு தெரியாது. சொல்லிக் கொடுக்கல. புதுசா ஒரு வைரஸ் உடம்புக்குள்ள வந்தா நம்ம உடம்பு எதுக்குறது மாதிரி சொல்லிக் கொடுக்காத, வழக்கத்தில் இல்லாதத எதுக்குறாங்க. அதுக்காக அவங்கள நம்ப குத்தம் சொல்ல முடியாது. அவங்களுக்கு பேசிதான் புரிய வைக்கணும்.”

“பறை நமக்கு ஆதி இசை. அவங்களுக்கு சாதி இசை. தொடர்ந்து பேசிதான் புரிய வைக்க முடியும். இக்னோர் பண்ணக்கூடாது”

“ம்”

“நான் முதல்ல பறையை தொட்டப்ப எங்க அம்மா என்ன மூனு நாள் வீட்டுக்குள்ள விடல. தல முழுக சொன்னாங்க”

“…ம்!!”

“சாதி விஷயத்துல நம்ம எல்லாருக்கும் சாதி பாக்குற ஆளுங்க மேல கோபம் வரும். நார்மல். வந்தவங்க மேல உங்களுக்கு கோபம் இருந்துச்சு இல்ல. கோபப்பட வேண்டியது சாதி சித்தாந்தத்து மேல. அத அடிக்காம இவங்கள மாத்த முடியாது. அப்படி மாத்தணும்னு நினைக்கிறது. காத்துல கத்தி வீசுற கத தான்? சாதி ஒழிப்பு. இவங்க இல்லாம எப்படி சாத்தியப்படும்?”

“…………”

“சாப்பிடுங்க”

“ஸ்கூல்ல எத்தனை கிராமிய கலைஞர்கள் மியூசிக் டீச்சரா இருக்கிறாங்க? இருந்தாலும் எத்தனை பேர் பறைய சொல்லி தராங்க? இதுவரை நடக்காதது நடக்கறப்ப கோவம் வருது”

“பறைய விடுங்க. இசைன்னு நம்பிட்டு இருக்கிற.. எந்த இசை பசங்களுக்கு கிடைக்குது? ஏழைகளுக்கு இசை எப்பவுமே தூரம்தான்”
செம்பியன் சொன்னார்.

“பறை இசையை வாரத்துக்கு ஒருமுறை ஸ்கூல்ல சொல்லிக் கொடுத்தா வழக்கத்தில் பொதுவான இசையா மாறிடாது?”
குழந்தை போல கேட்டார் மீனாட்சி.

“வாரத்துக்கு ஒரு முறையா!”

“அட்லீஸ்ட் மாசத்துக்கு ஒரு முறை?”

“நடைமுறைனு ஒன்னு இருக்கு இல்ல”.

“மாறாத நடைமுறை எதுவுமே இல்ல”

மீனாட்சி பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தார். நண்பர்கள் கை கழுவினர்.

2

ள்ளி புது விழாவிற்கு தயாராக இருந்தது. சினிமா வாடை இல்லாமல் ஒயிலாட்டம், பறை, கரகம் என சத்தமும் இரைச்சலும் கூடுதலாக இருந்தது. மாணவர்கள் மகிழ்ச்சியாகத் தென்பட்டனர். வேடிக்கை பார்ப்பதற்காகவே பள்ளியை சுற்றி ஒரு கூட்டம் இருந்தது.

தலைமையாசிரியர் வந்திருந்தார். நடராஜன் சார் வீட்டுக்கு முன்னால் நடந்தது அவரை சற்று ஆசுவாசபடுத்தியது. ‘ஸ்கூல் சரஸ்வதி இருக்கற இடம். அங்க போய் இப்படி அசிங்கம் பண்ணா பசங்களுக்கு எப்படி படிப்பு வரும்?’ என்று ஒருவர் கேட்டதையும் ‘இன்னைக்கு ஈவினிங் அவங்க போயிடுவாங்க இனிமே இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கிறேன்’ என்று ஹெட் மாஸ்டர் சத்தியம் செய்வது போல சொன்னதையும் மீனாட்சி அருகில் இருந்த டீச்சரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

டீச்சருக்கு கோபம் வந்தது. சமாளித்துக் கொண்டார்.

“சார், ரெண்டு நாளு லீவு முடிச்சி வந்தா எவ்வளவு பாட்டில் கெடக்கும். லாஸ்ட் டைம் காலாண்டு லீவு முடிச்சி வந்தப்ப காண்டொம் கூட கெடந்திச்சி. அரையாண்டு பரீட்சை லீவில் தண்ணி பைப் எல்லாத்தையும் உடைச்சி போட்டாங்க. லேடீஸ் ரெஸ்ட் ரூம்ல இருந்த நாப்கின் இன்சினீரடோர் ஒடச்சி போட்டாங்க. சிக்ஸ்த் கிளாஸ் ரூம் பக்கம் போய்ப் பாருங்க. அந்த சைடு இருக்கற காம்பௌண்ட்ல எப்படி நாறுதுன்னு. அப்பலாம் தெரியலையா ஸ்கூல் சரஸ்வதி இருக்கற இடம்னு? அவங்களுக்கு பறை அடிக்க கூடாது. அதுக்கு சாமி ஒரு சாக்கு”
டீச்சரின் இரண்டு நாள் அழுத்தத்திற்கு வழிவிட்டார்.

“பறை எத்தனை பேரு கத்துக்கிறாங்க?” ஹெட் மாஸ்டர் கேட்டார்.

“நாலு பேரு சார்”

“ஊர் பசங்களா?”

“இல்ல சார்.. பறை கத்துக்க பேர் கொடுத்தவங்க சிலம்பம் கத்துக்கிறாங்க”

மீனாட்சி சொன்னார்.

நாலுபேரு தான். பறை அடித்தாலும் சத்தம் மைதானம் முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தது. மைதானத்தில் ஒயிலாட்ட பயிற்சியில் இருந்த மாணவிகளைக் கடந்து ஹெட் மாஸ்டர் அறையை நோக்கி ஒருவர் வந்தார். தடிமனாக இருந்தார்.

“ஊர் சுத்தி இருக்கு. மத்தியானம் வரைக்கும் சத்தம் போடாதீங்க”
வந்து சொன்னவர் கிளம்பி போனார். மீனாவுக்கு புரியவில்லை.

“ஊர் சுத்தி அப்படினா?”

“ஊர் நல்லா இருக்கணும். நோய் வரக்கூடாது. மழை வரணும். காத்து கருப்பு எதும் வரகூடாதுனு.. ஊர் சனி மூலையா பாத்து கெடா வெட்டி பலி கொடுப்பாங்க. வீட்ல அம்மா சுத்தி போடுவாங்கல்ல அது மாதிரிதான். சில நேரத்துல கோழி, மொளகா.., சோறு கூட சுத்தி போடுவாங்க”

டீச்சர் சொன்னார். திடீரென நடக்கும் ஊர்சுத்தி மீனாட்சிக்கு சந்தேகத்தை அதிகரித்தது.

“நாங்க வந்ததனால?” மீனா கேட்டார்.
“தெரியல”

“ஊர் சுத்தி எங்க பண்ணுவாங்க?”

“ஸ்கூலுக்கு முன்னாடி. ஸ்கூல் தான் இந்த ஊரோட சனி மூலை. நான் வந்த புதுசுல ஒருமுறை பண்ணினாங்க”

“அமைதியா இருக்கிறது நல்லது. இதனால நிகழ்ச்சி நடக்காமல் போய்விடக்கூடாது”

மீனாட்சிக்கும் அதுதான் சரி என்று பட்டது.

சட்டென்று பள்ளி மைதானம் அமைதியானது. எந்த பயிற்சியும் செய்யாமல் மாணவர்கள் நேரத்தை வீணடிப்பது நிகழ்ச்சியை பலவீனப்படுத்தும் என்பதால் மைதானத்தின் ஒரு மூலையில் கதை சொல்லல் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார்.

பறை பயிற்சி கொடுக்கப்பட்ட இடத்திற்கு போனார் மீனாட்சி. மாணவர்கள் அமர்ந்திருந்தனர். பறையும் குச்சியும் இருந்தும் அடிக்க முடியாத ஏக்கம் தெரிந்தது. சத்தம் வராமல் பறையை அடித்துப் பார்த்தனர். சத்தம் வந்தது. பறையை ஓரமாக வைத்துவிட்டு தன் முன்னால் வந்து அமரும்படி மீனாட்சி மாணவர்களிடம் சொன்னார்.

“ஒரு வட்டம் போடுங்க”

“இந்த வட்டம் தான் பறை” என்று மீனாட்சி சொன்னதும் நான்கு பேரும் வட்டத்துக்குள் இருந்த மண்ணை வழித்து எடுத்து தூய்மையாக வைத்தனர்.

“நாங்க இன்னிக்கு போயிடுவோம். அதுக்காக நீங்க பயிற்சிய விடக்கூடாது. பயன்படுத்தாத எதுவும் நினைவில் இருக்காது”
மீனாட்சி சொல்லிக் கொண்டிருக்கும் போது..

“எங்க கிட்ட தான் பறை இல்லையே” ஒரு மாணவர் கேட்டார்.

“பறை இல்லாமலும் பயிற்சி செய்யலாம்”

”நம்ப வலது கைல இருக்கறது என்ன குச்சி?” மீனாட்சி கேட்டார்.

“அடிக்குச்சி”

“வெரிகுட்”

“கு சத்தம் வரும்” ஒருவன் பதில் சொன்னான்.

“ம்”

“இடது கைல”

“சுண்டுக்குச்சி”

“ம்ம்”

“த சத்தம் வரும்” என்றான் மற்றொருவன்.

“வெரி குட். வெரி குட்.. நேத்து அழகு தோழர் அடி சொல்லிக்கொடுத்தாரு இல்ல. அடி வாயில சொல்லிகிட்டே”

“த வரப்ப லேபிட்”

“கு வரப்ப?”

“ரைட்”

பையனிடம் இருந்து பதில் வந்தது.

“சூப்புரு ஸ்டார்ட். த கு கு த, த கு கு த, த கு கு த வட்டத்திற்குள் மாணவர்கள் கைகளால் அடித்தனர். கொஞ்ச நேரத்தில் மண்புழுதி அதிகமானது. மாணவர்கள் முகத்தில் இருந்த மண்ணிலும் மகிழ்ச்சி அப்பியிருந்தது.

3

மாலை நான்கு மணி. ஸ்கூல் பெஞ்ச் போட்டு மேடை தயாரானது. நிகழ்ச்சியும் தொடங்கியது. தலைமை ஆசிரியர் உட்பட ஊர் பெரிய மனிதர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். கிருஷ்ணசாமி முதல் வரிசையில் நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார். வந்தவர்களுக்கு கொடுக்க நினைவுப் பரிசு மேடைக்கு பக்கத்தில் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது. பள்ளிக்கு வெளியேயும் உள்ளேயும் சனங்கள் கூடியிருந்தனர். பள்ளி விழா பறை இசையுடன் தொடங்கியது.
கருப்பு சட்டையும் நீல கலர் பேண்டும் போட்ட நான்கு மாணவர்கள் பறை அடித்துக்கொண்டு முன்னால் வர, மீனாட்சியும் அவர்களது நண்பர்களும் பின்னால் பறை அடித்துக்கொண்டு மேடை ஏறினார்கள்.
பத்து நிமிடங்கள் மாணவர்கள் பறை அடித்து ஆடினர். ஃபோட்டோ எடுப்பதும் வீடியோ எடுப்பதுமாக கேமராவின் கண்கள் தூங்கவே இல்லை. பட்டாசு வெடிப்பது போல கைதட்டல் இருந்தது. விசில் பறந்தது. கத்தலும் இரைச்சலுமாக இருந்தது. மாணவர்கள் இறங்கியதும் மீனாட்சி தனி ஆளாக, ஒத்தடியாக.. பத்துநிமிடம் பறை அடித்தார். ஆடாதவர்கள் மைதானத்தில் இல்லை.

கூட்டத்தில் மீனாட்சியின் கண்கள் முதல் நாள் பறை பயிற்சியில் இருந்த பெண்களை தேடியது. அவர்கள் தென்படவே இல்லை.

மீனாட்சி இறங்கியதும் நான்குபுறத்திலும் இருந்தும் சிலம்பத்துடன் நான்கு மாணவர்கள் குதித்து குரு வணக்கம் மேடையில் வைத்தனர். எல்லோர் வாயும் ஊஹ்ஹ்ஹ என்றது.

ரிப்பன் கட்டப்பட்ட சிலம்பம் காற்றில் சுழன்று ஆடிக்கொண்டிருந்தது. ஒயிலாட்டம், கரகம் என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு மாணவர்கள் தயாராய் நின்று கொண்டிருந்தனர். கூட்டத்தை ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்த மீனாட்சியின் கையை பிடித்தார் ஒரு மாணவி.

“அக்கா.. நீங்க அடுத்த வருசமும் வருவீங்களா?”

“வரணுமா?”

“ம்”

“வந்து?”

“உங்கள மாதிரி அடிக்க கத்து தரீங்களா?”

மீனாட்சி அந்த மாணவியின் இரண்டு கன்னத்திலும் தன் இரண்டு கைகளையும் அணைத்துப் பிடித்து பேரன்புடன் நெற்றியோடு நெற்றிவைத்து முட்டிப்போட்டு அமர்ந்தார்.

நிகழ்ச்சி நடந்துகொண்டே இருந்தது. கைத்தட்டல் நிற்கவே இல்லை.

***


சு.சரவணன்
சேலம் மாவட்டம் கவர்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இவர் அம்பேத்கரிய, மார்க்ஸிய பார்வையில் இலக்கியத்தை அணுகுபவர். க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி 2020-ல் இவருடைய சிறுகதையும் பரிசு பெற்றுள்ளது. இவ்விதழில் பிரசுரம் காண்பது இவருடைய இரண்டாவது சிறுகதை. மின்னஞ்சல்: amudhini2017@gmail.com


RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular