பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
இரு வருடங்களுக்கு முன்பு சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்க நேர்ந்த துரதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன். அதன் வடபுறத்தில் அடையாறு ஆறு, கடலைச் சேர்வதற்கு இன்னும் சில நூறு மீட்டர்களே மீதமிருக்கும் தூரத்தில் பயணிக்கும். கிழக்கே பக்கிங்ஹாம் கால்வாய், தெற்கே கிண்டி காட்டில் இருக்கும் ஐஐடி, மேற்கே அண்ணா பல்கலைக்கழகமும், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமும். ஆறும், அறிவும், காடும் கால்வாயுமான பகுதியில் வசிப்பதற்கு உண்மையில் ஒருவர் மகிழ்ச்சி அடையத்தான் வேண்டும். ஆனால் இரண்டு காட்சிகள் ஒரு சாபக்கேட்டின் பயனை அனுபவிப்பவனாக என்னை எண்ணச் செய்தன. ஒன்று, கிண்டி காட்டிலிருந்து வெளியேறும் புள்ளிமான்கள் நாய்களோடு சேர்ந்து குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தது. இரண்டு, பக்கிங்ஹாம் கால்வாயில் கோட்டூர்புரம் பறக்கும் இரயில் நிலையத்தின் கீழே ஒரு சாக்கு மூட்டையின் மேல் முழுக்க திடக்கழிவில் மூழ்கிய நிலையில் கழிவுநீரிலிருந்து வெளியேறத் தடுமாறிக் கொண்டிருந்த ஓர் ஆமை. ஒரு குழந்தை இயந்திரத்தால் சிதைக்கப்படுவதற்கு ஒப்பான காட்சிகள் இவை.
மாலை நேரங்களில் திரு.வி.க பாலத்திலிருந்து வானைப் பார்த்தால் கிழக்கு வானில் ஒளிரும் வெளிச்சப் புள்ளிகள் தலைக்கு மேலே பறக்கும் போது விமானங்களாய் மாறும் மாயத்தையும், கடலோடு கலக்க விழையும் அடையாறு ஆற்றின் விரிவும், அனைத்தின் மீதும் அஸ்தமனச் சூரியனின் ஆரஞ்சு வண்ணம் தீட்டும் ஓவியத்தையும் காண்பவர்கள், சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தின் மேல் நின்று பார்த்தால் அதே ஆற்றில் ஓடும் கரிய நீர், மென் சூரியனின் ஓவியக் கதிர்களையும் கலங்கடிக்கும் அடர்த்தியில் தேங்கி நிற்பதைப் பார்க்க வேதனை கொள்ளத்தான் செய்வார்கள்.
நிச்சயமாக அடையாறு ஆறு சென்னையின் வரலாற்றுக்கு முன்பிருந்தே இருக்கிறது. உலகின் பல ஆறுகள் மனிதனின் வரலாற்றுக்கு முன்பிருந்தே இருப்பவையாக இருக்கக் கூடும். முன்னூற்றி எழுபத்தைந்து வருட வரலாறுள்ள நகரத்தில் ஏறக்குறைய முன்னூற்றி இருபத்தைந்து ஆண்டுகள் ஓர் ஆற்றின் அத்தனை அடையாளங்களோடும் திகழ்ந்த அடையாறு ஆறு சில பத்தாண்டுகளாக சந்தித்த துயரம் சென்னை நகரம் அடையாற்றின் வரலாற்றுக்கு இழைத்த துரோகமாகும்.
மழைக்காலத்தில் நீரைச் சுமந்தும், கோடையில் உடலை உலர்த்தியும் கிடக்கும் அடையாறு ஆற்றில் சென்னை நகரம் எக்காலத்திலும் வற்றாத கழிவு நீரை நிறைத்து வைத்தது. அதே கோட்டூர்புரத்தில் ஆற்றின் கரையில் குதிரைகளை குளிப்பாட்டினர் என்றும், திரைப்படங்களுக்காக பாத்திரங்கள் ஆற்றில் உலவும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன என்றும் ஞாபகத்தில் மறதியின் திரை விழாதவர்கள் சொல்வதுண்டு. இன்றைக்கு அதே ஆறு மா. அரங்கநாதனின் சிறுகதையொன்றில் சொல்லப்படுவதைப் போல ஒரு “மகத்தான ஜலதாரையாக” மாறியுள்ளது. சென்னையின் பெரும் பணக்காரர்கள் அடையாற்றின் வடகரையில் படகுக் குழாம் அமைத்திருக்கிறார்கள். மாலை நேரங்களில் அந்த மகத்தான ஜலதாரையின் மீது படகோட்டும் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். சென்னை அதன் பெரும் பணக்காரர்களுக்கும் கழிவுநீரின் மீது படகோட்டும் வாழ்வைத்தான் பரிசளித்திருக்கிறது.
பக்கிங்ஹாம் கால்வாயின் மீது பறக்கும் இரயில் பாதையை நிர்மாணித்தவர்கள் இன்றைக்கு நீர்வழிப் பாதை அமைக்க அதனை சீரமைக்கும் வாய்ப்பை பரிசீலிக்கிறார்கள். உலகின் நீளமான நன்னீர் கால்வாய் கோட்டூர்புரத்தின் கிழக்கே ஓடிய நினைவே இல்லாமல் ஒவ்வொரு நாளும் பறக்கும் இரயிலில் இருந்து அதன் மீது குப்பைகள் விழுகின்றன. அடையாற்றின் உபரி நீர் வெளியேறவும், மகாபலிபுரத்திற்கு படகுப் பயணம் செய்யவும் ஒரே ஒரு தலைமுறையின் ஆயுட்காலத்திற்கு முன்பு வரை நீர்வழிப் பாதையாக இருந்த கால்வாயின் மீது பறக்கும் இரயில்களுக்கான தூண்கள் அமைத்தும், கழிவுநீர்ப் பாதையாக அதனை மாற்றியும் தூர்ந்து போகச் செய்தவர்களும் இவர்கள்தான். ஏற்கனவே இருந்த ஓர் அமைப்பை சிதைத்து மீண்டும் அதனை மறுசீரமைக்கும் அரும்பணியை பல கோடி மூதலீட்டில் செய்யும் இவர்களது அறிவை நிச்சயம் அண்ணா பலகலைகழகமும், நூலகமும் தந்துவிட முடியாது.
வேளச்சேரியும், பள்ளிக்கரணையும், பழைய மகாபலிபுரம் சாலைப் பகுதிகளும் சதுப்பு நிலமும், நீர்த்தேக்கங்களும் நிறைந்தவை. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மிஞ்சியிருக்கும் பகுதியைத் தேடி வரும் வலசைப் பறவைகள் உயர எழும்பிப் பறக்கும் பேரழகைக் காண்பவர்கள் அந்தச் சதுப்புநிலத்தை அழித்து அதனை சென்னையின் குப்பைக் கிடங்காக மாற்றியதின் காரணமாக எழும் துர்நாற்றத்திற்கு மூக்கைப் பொத்தித்தான் ஆக வேண்டும். நல்லவேளை கண்களால் முகர முடியாது. உலகின் எந்த நகரத்திலாவது சதுப்பு நிலத்தை குப்பைக்கிடங்காக மாற்றியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். அத்தனை நீர்நிலைகளைச் சுற்றிலும் எலும்புக் கூடுகளாக உயர்ந்திருக்கின்றன தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும். இப்படி ஒரு கலவையான காட்சியை, இயற்கையின் பேரழகின் மீது குப்பைகள் கொட்டும் இடத்திற்கு வெகு அருகிலேயே வளமையின் குறியீடுகளான கண்ணாடிக் கட்டிடங்கள் எழுந்து நிற்பதை இங்கே மட்டும்தான் காண முடியும். அதனை அவலம் என்று அழைக்கத் தயங்குபவர்கள் நிச்சயம் கண்ணற்றவர்கள் தான். குறிப்பாக மனதின் கண்கள்.
இன்றைக்கு நீரும், ஆறும் அவற்றின் குணத்தை திரும்பப் பெற்றன. தற்காலிகமாகவேனும் அடையாறு தன்னை ஓர் ஆறென்று நிரூபித்து விட்டது. அதன் சீற்றத்தை ஒரிரு நாட்கள் கூட தாங்க முடியாத கோட்டூர்புரம், சைதாப்பேட்டை வாசிகளை மீட்க வானிலிருந்து உதவிகள் தேவைப்படுகின்றன. மழை நின்றதும் கூட வானிலிருந்து வந்த உதவிதான்.
எவ்வித கூச்சமும் இல்லாமல் சொல்கிறேன், நான் அடையாற்றின் வெள்ளத்தைக் காண முடியாத, அதன் எக்காளத்தைக் கேட்க முடியாத தூரத்தில் வாழும் துர்பாக்கியசாலியாக இருக்கிறேன். மனிதர்களின் வேதனை தற்காலிகமானது. ஆற்றின் வேதனையோ திரும்பக் கொடுக்க முடியாத வாழ்வின் இழப்பு. நாம் ஆற்றைக் கொன்றோம். அதன் வாழ்வின் மீது கருப்புச் சாயத்தை பூசினோம். கால்வாய்களை அழித்தோம். பறவைகளின் உணவின் மீது குப்பைக் கூளங்களைக் கொட்டினோம். புள்ளி மான்களை குப்பைகளை மேய விட்டோம். இன்றைக்கு அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் தெருவில் நிற்கிறார்கள். உதவிக்காக வானத்தையும், படகுகளையும் எதிர்ப்பார்த்திருக்கிறார்கள்.
அந்த இடங்களில் சில வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமை தற்காலிகமாக திரும்ப வந்தது. அங்கே படகுப் பயணம் மட்டுமே சாத்தியமாக இருந்த காலகட்டத்தின், சூழலின் மறுவருகை அது. சென்னை அதன் ஞாபகத்தில் குறித்து வைக்க வேண்டிய மறுவருகையின் செய்திதான் இந்த பேரழிவு. ஆறோ, நீரோ காரணமல்ல, நாம் தான் இந்த பேரழிவின் வாக்கியங்களை எழுதியவர்கள்.
கருணை மிக்க அடையாறு ஆறு இனி மெள்ள அடங்கிவிடும். மிகுந்த பொறுமையோடு அதன் உடலில் சென்னை நகரத்தின் கழிவுநீர் தேங்குவதை அனுமதிக்கும். எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அடிவானத்திற்கும் அதற்கும் இடையில் நிற்கும் கடலின் உடைக்க முடியாத நீர்ச்சுவரைக் கடக்க முயலும். விமானங்கள் அதன் மீது நிழல் விழ பழையபடி பறக்கும். ஆனால் இன்றைய சென்னையோ திடக்கழிவில் சிக்கிக் கொண்ட ஆமையைப் போல வெளியேற வழியின்றி சில நாட்கள் தவிக்கத்தான் வேண்டியிருக்கும்.
துயரமும், அழிவும், வேதனையும் மனிதர்களுக்கு மட்டுமே நேர்பவையல்ல. அவை பறவைகளுக்கும், ஆற்றிற்கும், சதுப்பு நிலங்களுக்கும் கூட நேரும். பெரும்பாலானவர்கள் மனிதர்களின் பிரதிநிதிகளாக இருந்து அவர்களது துயரத்தையும், அழிவையும் போக்கும் நடவடிக்கையில் ஈடுபட நான் மனிதர்கள் அல்லாதவற்றின் அழிவின் மீது வேதனை கொள்கிறேன். சில நாட்களாக அடையாறு ஆற்றின் எக்காளம் ஒலித்ததை, பார்க்க (ஊடகங்களில்) மட்டுமே முடிகிற தொலைவிலிருந்து மகிழ்ச்சியோடு கேட்கிறேன். ஒரு நகரத்தை விடவும், அதில் வசிக்கும் மனிதர்களை விடவும் பழைமையான வரலாறும், போற்றுதலுக்கான வாழ்வும் உள்ளவற்றின் எக்காளம் அது.
– பாலசுப்ரமணியன் பொன்ராஜ்