ஆண்ட்ராய்ட் வெர்ஷன்

5

லட்சுமிஹர்

முதல் கதை

டிக்கடி அடிக்கும் டெலிபோன் ரிங்கை இந்தமுறை கண்டுபிடிக்க வேண்டுமென ஆவேசமாக ஓடத் தொடங்கினேன்…

இருள் சிதறிக் கிடக்கும் அறைகளில் இருந்து வரும் சத்தத்தை மட்டும் வைத்துத் தேடுவது அவ்வளவு எளிதில் அமையுமா என்ன?

இது பல முயற்சிகளில் ஒன்று என்ற கணக்கில் மட்டுமே சேர்ந்துவிடும்.

அடிக்கும் ரிங்டோனின் ஓசை கேட்டு ஓடும் நான், மோதிக் கீழே விழுவதும் இயல்பே. ஆனால் என் வேகம் மட்டும் ஒவ்வொரு முறையும் குறைந்ததாகத் தெரியவில்லை. இந்தமுறை எங்கும் விழாமல் முன்பு சென்றதை விடவும் முன்னேறிவிட்டேன். மேலும் சத்தமாகக் கத்திக்கொண்டு ஓடிய எனக்கு இருள் ஒரு பொருட்டாகத் தெரிய ஆரம்பித்ததே அந்த ரிங்டோன் சத்தம் அமைதியான பின்புதான்.

என் பார்வை வெளியில் தெரியும் இருளை எனதாக்கிக் கொண்டுள்ளேன். பார்வையற்ற என்னை நித்தம் சுமந்தலைகிறது இந்த இருள்…

சப்தம் தன் பரப்பளவை குறைக்கக் குறைக்க அதை நெருங்கும் முனைப்பில் இருந்த எனக்கு ஒரு கட்டத்தில் கத்தியும் சப்தம் வெளியே கேட்கவில்லை என்பதைப் புரியத் தொடங்கினேன். இருளை அணைத்துக் கொள்ளப் பழகியிருந்தவனாகிய நான் இன்று குரல் எழுப்ப நாலைந்துமுறை முயற்சி செய்து தோற்றுவிட்டேன்.

கைகளால் குரல்வளையை நெரிக்கத் தொடங்கினேன் கையில் புழுக்கள் தென்பட்டன. அதை எடுக்க முற்பட்டபோது, அது எங்கு செல்கின்றன என்பதை உணர முடியவில்லை. அவை எங்கு சென்றிருக்கும் என்பது பற்றியதான ஆராய்ச்சிகளை விடுத்து கையைத் தரையில் ஊன்றி இளமைப்பருவ நினைப்பில் தவழத் தொடங்கினேன். ஒரே நிழல்!

மனதில், இனி அந்த ரிங்டோன் வந்தால் அதைத் தேடக்கூடாது என நினைத்துக் கொள்ளும் முன், கீழே வந்து விழுந்தேன்.

அது சாத்தியப்படாது என்பதால்கூட இருக்கலாம். இனி பூனையின் வாசம் பிடித்தே, வந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். அப்பூனை பலநாள் எங்களைச் சுற்றி வந்துகொண்டிருந்தது. அது தூங்கும் இடம் போல. தூங்கிக்கொண்டும் சுற்றிக்கொண்டும் மட்டுமே இருந்த பூனை, அதன் மேனியின் வாசம் இத்தனை அறைகளிலும் நிரம்பி அடிக்க இதில் வந்து தூங்கியது என்பதை எப்படி உணர முடியும்…

இப்போது பேச முயன்று தோற்றுப் போனேன்… பூனையின் வாசம் சுத்தமாகத் தெரியவில்லை… இத்தனை அறைகளைக் கட்டிவிட்டு இருள்தான் குடிகொண்டுள்ளது.

“இவ்வளவு வேகமாக ஃபோனை எடுத்துவிட்டாயா?” என்றது இருள்.

“போகும் முன் நின்றுவிட்டது”

எதில் இருக்கிறது என்று இன்னும் தெரிந்துகொள்ள முடியவில்லை எனப் பதில் அளித்தபோதுதான் தோன்றியது:

“நீயும் என்னுடன்தான் ஓடி வந்தாய். என்னுடன்தான் தேடினாய்; கண்டிப்பாக ரிங் சத்தம் வரும் இடத்திலும் நீதான் இருக்கக்கூடும்.”  

என்னோடு பேசிக்கொண்டிருந்த இருளைக் கேட்க முற்பட்டபோது பூனையின் வாசம் திடீரென அதிகமாக அடிக்க ஆரம்பித்தது. அது என்னை அதனுள் இழுத்து அதிலிருந்து விடுவித்துக்கொள்ள என்னை மன்றாடச் செய்திட வேண்டும் என்ற திட்டமிடலில் ஒரே நெடி.!

“உன்னால அந்த வாசத்தை நுகர முடியவில்லையா?” என இருளிடம் கேட்க…

“இல்லை என்னால் பேச மட்டுமே முடியும்” என சலித்துக் கொண்டது.

“ஏன் பேச மட்டும்?” என்ற கேள்விக்கு இருள் தனது நாக்கை பத்திரப்படுத்திக் கொண்டது.

வாசனை வந்த திசையை நோக்கிச் செல்ல முயன்றால் அது ஒரு திசையில் இல்லாமல் இருள் எங்கும் பரவி இருப்பது போல்தான் வீசுகிறது.

உன்னால் என்னைப் பார்க்க முடிகிறதா என்று கேட்கையில், இருளுக்கான வடிவத்தை எங்ஙனம் கண்டுபிடிப்பது என பதிலுக்கு சலித்துக்கொண்டேன் இருளை.

ஆமாம் இருளை, புழு என்றாக்கிய எனக்கு எல்லாம் கேலிதான். நெளிவதால் அப்படிச் சொல்லிவிட்டேன், இது ஊர்கின்ற மற்றவையாகக்கூட இருக்கலாம் இருளைப் போல…

பூனையின் துர்நாற்றம் மூக்கில் ஏற, மூக்கை மூடினேன். மீண்டும் திடீரென ஒலி கேட்கத் தொடங்கியது. அது அந்தப் பூனை செத்துக்கிடந்த அலுமினிய மேடையின் பட்டைய ஒலி. அதை யாரோ ஓங்கி அடிப்பது போல் அதன் திசை நோக்கி ஓடத் தொடங்கினேன். வேகம் அதிகமாக, சத்தமாகக் கத்திக்கொண்டே ஓடினேன்…

இருள் எதுவும் பேசாமல் என்னுடைய வேகத்துக்கு இணையாக ஓடி வந்து கொண்டிருந்தது. அதை நெருங்க நெருங்க எப்போதும் போல அமைதியாகிக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் நின்றுவிட்டது. ஏமாந்துவிட்டதாகப் புலம்பிக் கொண்டேன். தானும் ஏமாந்து விட்டதாகப் புலம்பியது இருள்.

“நடிக்காதே”

“உண்மையைத்தான் சொல்கிறேன்.”

அதை ஏற்காத நான் எதிர்த்து வாதம் செய்யத் தயாரானேன். என்ன சொன்னாலும், தான் அப்படி இல்லை என்பதிலேயே குறியாக இருந்தது இருள். ஒரு கட்டத்தில் நானாகவே நிறுத்திக் கொண்டேன்.

கொஞ்சநேர அமைதிக்குப் பிறகு:

ஏன் அந்தப் பூனை சுற்றி வந்தது? என்று யோசித்துக் கொண்டிருக்கையில்தான், ஒருநாள் எப்போதும் இல்லாமல் தூங்கும் இடத்தில் குதித்தது ஞாபகம் வர, அப்போது கேட்டதுதான் இந்த அலுமினிய தகடு சத்தம். அது ஏதோ ஒன்றை அதன் வாயில் போட்டு பிய்த்துக் கொண்டிருக்கலாம் என யூகிக்கப்பட்டிருந்தது.

ஏனென்றால் அதன் கண்கள் இருளில் அப்படியே மேலும் கீழுமாய் அசைவின்மையை வெறுத்தன. அது எப்போதும் நாங்கள் இருக்கும் திசையை நோக்கித்தான் படுத்திருப்பதாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். இறப்பதற்கு முன்புதான் எதிர்திசையைப் பார்த்து திரும்பிக்கொண்டது. துர்நாற்றத்தில்தான் அது செத்துவிட்டது என யோசித்த நாங்கள், அருகில் செல்லவில்லை. வாசனையைக் கொண்டு தரம் பிரிக்கும் எண்ணம் போய் மனிதப் பிணத்தின் செயல் அறிந்து வாசனையைப் பிரித்தறிந்து வகைமைக்குள் கொண்டு பூட்டிவிடுவதாக, ஒருநாள் நானும் பூனையும் பேசிக்கொண்டிருந்தோம்.

பாவம்! இனிமையான மரணம்!

“இன்னும் கோவமாத்தான் இருக்கிறாயா?” இருள்.

அமைதியாக இருந்த என்னிடம் ஒரே மாதிரியான கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருந்தது. கோபப்படாமல் சமாளித்து பலமுறை ஜெயித்தும்விட்டேன்.

கடைசியாகத் தன்னுடைய உருவத்தைப் பற்றிக் கூறுவதாகச் சொன்னதும்…

பீதியுற்றேன்! 

ஒருவித நுகரும் தன்மையும் கேட்கும் திராணியும் சற்று விலகி நின்று கேலி செய்வதாக உணர்ந்தேன்! அத்தனையும் பிழை என்ற எண்ணமும்!

“உனக்கு மட்டும் காட்டுகிறேன்.”

“கோபம் மாறிப் போனதை என்னுடைய முகத்தில் இருந்து பார்த்தாயா?” என்றேன்.

எனக்கு அதைவிட அதனுடைய உருவத்தைத் தெரிந்து கொள்வதிலேயே ஆர்வமாக இருந்தது. (அதன் உருவம் என்னை எப்படி எடுத்துக்கொண்டது! எதை என்னுள் இருந்து பிரித்தது! மனிதன்தானா நான் இப்போது! வாசனை, துர்நாற்றம் வகை மாறிப்போகுமோ! எப்படி!)

“ஆனால் ஒரு கண்டிஷன்.”

என்னவென்று கேட்ட என்னிடம்:

“இப்போது நான் என் நிறத்தை மட்டும்தான் கூறுவேன்.”

சரியெனத் தலையாட்டிய என்னிடம், அது என் அருகில் ஒரு டப்பா இருப்பதாகவும் அதனுள் இருப்பதே என்னுடைய நிறம், என்றது. அதை, நான் தேட முற்பட்டபோது டப்பாவில் பட்டு அது சிதறிப் போய்விட்டது.

நகர்ந்து அதன் அருகில் சென்ற நான் அது கருப்பு நிறம் என்று உணர்ந்தேன். சிதறிக்கிடந்த அந்தப் பிசுபிசுப்பான பெய்ண்டில் மேலும் கீழுமாகப் புரளத் தொடங்கினேன்…

என்னைப் பார்த்துச் சிரித்தது.

“உன்னுடைய வாசம் எனக்குப் பிடித்திருக்கிறது”

“என்னுடைய நிறம் மட்டுமே அது. வாசம் இல்லை.”

இன்னொரு பக்கமாக உடம்பைத் திருப்பி அருகில் இன்னும் சில டப்பாக்கள் இருப்பதைத் தொட்டுத் தெரிந்துகொண்டு அதையும் தட்டிவிட்டேன். ஆனால் டப்பா விழுந்ததாகத் தெரியவில்லை.

“வாசம் இல்லாமல் எப்படி இருக்க முடியும்?”

பதிலேதும் இல்லை.

“அந்தப் பூனையின் வாசமும், ஃபோன் ரிங்டோனும் உன்னுடையது இல்லையா?”

“இல்லை” என்ற பதில் அதனிடமிருந்து கோபமாக வந்ததை உணர்ந்து கொண்டேன்.

அதன் பிறகு அது என்னுடன் பேசியதாக ஞாபகம் இல்லை. நான் மெதுவாக நடந்துகொண்டு இருக்கிறேன். எல்லாம் ஒன்றாக அறியும் வளைவுகளும், படிக்கட்டுகளும் எங்ஙனம் உள்ளது என்பதை எப்படிக் கூற முடியும், வாசத்தின் நீட்சி தொடுதலில் முடிகிறது. நடுவே பாதையாகிப் போகிறது அந்த ஒலி. ஒவ்வொருமுறை முயன்றபோதும் தோற்றுப் போயிருக்கிறேன்.

பதிலேதும் இல்லை. 

நான் இருளிடம் கடிந்து பேசியது நினைவில் இல்லை. இருந்தால்கூட மன்னிப்புக் கேட்கலாம். இல்லை, எங்கும் பேரமைதியின் பாசாங்கு. நான் மட்டும் கத்துவதும் நடப்பதுவுமாக பிதற்றிக்கொண்டு அலைகிறேன். இருந்தும் ஒரு கேள்வி என்னுடன் ஒட்டிக்கொள்ள புது வெளிப்பாடு.! என்னவென்றால், என்னுடைய வாசத்தைப் பலமுறை நுகர நினைத்துத் தோற்றுப் போனதுதான் உண்மை. இறுதிவரை அது பிடிபடவே இல்லை.

அமைதியின் ஊடாக உள் புகுந்து அறிய எண்ணினேன். இறுதியில் கேட்கவும் இல்லையோ? என்ற அச்சம் தொற்றிக்கொண்டது. அதனால் அடிக்கடிச் சத்தம் போட்டுக்கொள்கிறேன். சிலநேரம் கம்மியாக, சிலநேரம் அதைவிடக் கம்மியாக. ஆனால் கத்துவது என்பது நான் எடுத்த முடிவுதான். என்னுடன் இருந்த சிலரையும் தொலைத்துவிட்டேன். அதற்கு என்ன? அடுத்தமுறை அவர்களை சந்தித்தால் உருவமாக உள்ளீர்களா? இல்லை, நிறமாக உள்ளீர்களா? என்று கேட்க வேண்டும் போல் உள்ளது.

பிரித்தறியும் பித்தின் இறுதியும் நானே!

இதுவரை அவர்கள் பேசியதாகத் தெரியவில்லை. மறுபடி அடிக்கும் அந்த ரிங்டோனுக்காகக் காத்திருப்பது என முடிவுசெய்து நடப்பதை நிறுத்திக்கொண்டு உட்கார்ந்தேன். கொட்டிவிட்ட பெயிண்ட்டில் அமர்ந்துவிட்டேன். இவ்வளவு தூரம் வரும் அளவுக்கு டப்பாவில் நிறைய இருந்திருக்கிறது, யூகம்!

கொட்டிய வாசனையில் மேலும் உருண்டு புரள்கிறேன். சரி, இருள் சொன்னது சரிதான், உண்மைதான் எனத் தெரிந்துகொண்ட பின்…

“இருக்கிறாயா?” என்றேன்.

இருக்கிறேன் என்ற இருளின் பதில் அதன் அகண்ட வாயின் உதறல்!

புணர்ந்த நாக்கின் எச்சில் என் முகத்தில் பத்திரப்படுத்தியதை அடிக்கடி மீட்டுக்கொள்கிறது. அதன் குரலின் சத்தம் என்னுள் நெருங்கி ஊடுருவப் பூனையின் துர்நாற்றம் அடிப்பதை உணர்ந்தேன். அது, பூனைக்கும் எனக்கும் நடந்த மனிதப் பிணத்தின் வகைப்பாட்டின் பேச்சை மறுபடி மூளைக்குள் தட்டிவிட்டது…

சட்டென, “உனக்கு அந்த அலுமினியத் தகடு இருக்கும் இடம் தெரியுமா?” என்றேன். 

“இல்லை”

“பொய் சொல்லாதே. உனக்குத் தெரியும்.”

“இல்லை” என அது சத்தமாகக் கத்திச் சொல்ல, நான் மேலும் காதை அதன் அருகில் கொண்டுபோனேன்.

அதைத்தான் கேட்கிறேன். மேலும் சொல். மீண்டும் இல்லை என்கிறாய் எனக் கேட்ட எனக்குப் பூனையின் துர்நாற்றம் மேலும் அடித்தது. அதற்குள் நான் வந்ததை மறந்துவிட்டேன். அந்தப் பூனை ஒருநாள் என் மூக்கைச் சாப்பிட்டுவிட்டது. அதிலிருந்து என் மூக்கு எதற்கும் பயன்படாமல் போய்விட்டது. இப்போதுகூட பூனையின் துர்நாற்றம் என்பது என்னுடைய யூகம்தான். ஆனால் பூனை இருப்பது நிஜம்.

இருள் எனக்கு உருவம் இருக்கிறது என்று கூறியதால், நான் வாசமென துர்நாற்றமெனக் கூறி உளறிக்கொண்டிருந்தேன். கடைசியில், என்னைப் போல, என் நண்பனைப் போல, அதற்கும் பார்வை கிடையாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே இவ்வளவு பெரிய வார்த்தை யுத்தம். இருந்தும் என் நண்பனின் ஓவியம் ஆகச் சிறந்தது…

எல்லாக் கதவுகளும் பூட்டப்பட்டுள்ளன…  

போனமுறை ரிங்டோன் கேட்டு ஓடும்பொழுது தலையில் முட்டி கீழே விழுந்துவிட்டேன்… வலி தெரியவில்லை.

எப்போதும் இல்லாமல் புது மாதிரியான ஒலி வடிவம் அது.

ஆனால் கதவைத் திறந்து இழுக்க முயன்றபோதுதான் என்னுடைய கை அதில் மாட்டிக்கொண்டது. ரத்தம் வழிந்ததா எனத் தெரியவில்லை. மறுபடியும் ஒடத் தொடங்கியிருந்தேன்…

வடிவ ஒலியாகிய அதை, ஏன் பின்தொடர வேண்டும்? என்ற கேள்வி.

என் பாதை அதுவாக இருக்கையில், எப்படி அதில் கேள்வி எழுப்புவது?

அதே ரிங்டோன் கண்டிப்பாக மறுபடியும் அடிக்கும். அடுத்தமுறை அதை விடக்கூடாது என்று தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தேன்.

பலமுறை அந்தக் கதவைக் கண்டுபிடிக்க நடந்துசென்று கால் வலித்ததுதான் மிச்சம்.

மேலும் நாங்கள் இருந்த இடத்தின் அடையாளமாய் அந்தப் பூனையுடன், பல்லியின் ஒலியும் சேர்ந்து கொண்டது. இரண்டும் மாற்றி மாற்றி விவாதம் பண்ணிக்கொண்டிருக்கும். அதை வேடிக்கையாகக் கேட்க ஆரம்பித்து பலமுறை சுற்றி வந்துள்ளேன். ஒருகையில் தடவிப் பார்த்தேன். இது, அந்தச் சுவர் மாதிரி இல்லை. ஆனால் இரண்டும் தன் விவாதத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஒருவேளை இப்போது அந்த பல்லியின் ஒலி கேட்டால் அந்த இடத்தைக் கன்டுபிடிக்கலாம்… ஏனென்றால், பூனை இல்லாத சமயங்களிலும் அது சத்தமிடுவது அதனுடைய இயல்பு போலும். இதைப் பூனை தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். இல்லை எனக்கு அப்படித் தோன்றியிருக்கலாம்.

ஏன் பழைய இடத்திற்குச் செல்ல விரும்புகிறேன்… அதில் குஷனோடு ஒரு பழைய சேர் இருக்கிறது. ஏனோ இப்போது அது இல்லாமல் வேறெங்கோ உட்கார்ந்திருக்கிறேன். ஏதோ குத்துவது போல் இருக்கிறது. ஏன் என்று தெரியவில்லை.. அதனாலேயே அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் எனப் பலமுறை யோசித்துக்கொண்டே இருக்கிறேன்…

அருகில் வாசனையால் சிதறிக்கிடந்த பெயிண்டில் இரண்டு, மூன்றுமுறை மறுபடியும் உருண்டு புரண்டால் நன்றாக இருக்கும்.

அதற்குள் மறுபடியும் ரிங்டோன் தன்னை வெளிப்படுத்த, ஓடத் தொடங்கினேன். இந்தமுறை அதன் அருகில் வந்துவிட்டதாகக் கேட்டது. ஏனோ எப்போதும் நெருங்க நெருங்க, அமைதியாக மாறுவது இப்போது இல்லை. பலமுறை முயன்று தோற்றது இந்தமுறை வேகத்தைப் பலமடங்கு கூட்டியிருந்தது. திடீரென சுவரில் மோதிக் கீழே விழுந்தேன்.

அது என்னுடைய கை மாட்டிய கதவுள்ள சுவரா எனத் தேடினேன். அப்படி எதையும் உணரவில்லை. மறுபடியும் ஏமாந்துவிட்ட சோகம். பல்லியின் விவாதம் சத்தமாக மாறியிருந்ததை அறிந்த நான் அதுமட்டுமே ஒரேவழி எனப் புரிந்துகொண்டேன். ஒருவேளை, அது வண்ணங்களாகக்கூட இருக்கலாம். இதற்கும் முன்பே, பேசும் வண்ணங்களை  என்  நண்பன் வரைந்திருந்தான்.

உட்கார்ந்திருந்த எனக்கு அதற்கு மேல் ஓடமுடியாது என்ற முடிவில்தான் இங்கு வந்தேன். திடீரென பல்லியின் சத்தம் கேட்டு எழுந்திருக்க முயன்ற என்னால் ஓட முடியவில்லை, என்னுடைய இடுப்புப் பகுதிக்கு மேல் தனியாக வந்துவிட்டதாகப் பலதடவை உறுதிப்படுத்திவிட்டுதான் சொல்கிறேன்.

விழுந்த இடத்தில் வாயை வைத்துப் பார்த்தேன். அது என்னுடைய கால் மூட்டு. நான் இப்போது வெறும் எலும்பாக மட்டும்தான் இருக்கிறேன் என்று தெரிந்தது. அதனால்தான், அந்தக் குஷனை விரும்பி உள்ளேன்.

அழுகையில் சத்தம் அதிகமாகக் கேட்கும்படி கத்தினேன். என்னால் இப்போது ஓட முடியவில்லை.

என்ன செய்ய, இப்போதுதான் ரிங்டோன் சத்தமாக அடிக்கத் தொடங்கியது, அது குறைவதாகத் தெரியவில்லை. விளைவாக, மூட்டில் பலமுறை மோதிவிட்டு அமைதியானேன்.

இப்போதுதான் புரிய வருகிறது.! அந்தப் பூனை எப்படிச் செத்திருக்கும் என்று.

எப்போதும் அது வெளியே போய்வருகிற கதவில் என்னுடைய கை மாட்டிக்கொண்டதால், கதவைத் திறக்க அதனால் முடியவில்லை. என்னவென்று புரியாத பூனை அதனை எடுக்க முயன்று அதைக் கடிக்க முற்பட்டபோது, அதிலிருந்த எலும்பு தொண்டையில் சிக்கிச் செத்துப்போய் இருக்கிறது.

எப்போதும் என் கையில் வைத்திருக்கும் தடியின் ஞாபகம் வந்தது. கையில் வைத்திருக்கும் தடியைத் தேட எண்ணினேன், அது கதவோடு மாட்டியிருந்த கையுடன்தான் இருக்க வேண்டும்.

அதன் ஓசையே ரிங்டோனாகக் கேட்டதோ என்ற கேள்வி எழுந்தது. வழியறிய பயன்படுத்தும் தடியின் ஓசை இப்போது கேட்டது:

டக், டக், ரிங்டோனாக. 

இறுதியில் இருளுடன் பேசும் முடிவுக்கு வந்தேன்.

“என்னுடனே இருந்துகொண்டு என்னையே நீ இப்படி அலையவிட்டதுல உனக்கு என்ன சந்தோஷம் (ரிங்டோன் ஓசையை போன்றே இருந்த இருளின் சிரிப்பு எதிர்வினையாக) உன்னோட சிரிப்ப என்னால கேட்க முடியாது (மீண்டும் நிசப்தம்) டக்குனு சிரிப்ப நிப்பாட்டி மாட்டிக்காத அசிங்கமா இருக்கு. இப்பயும், நீ என்கூடதான் எப்பயும் இருப்பேனு தெரியும்”

“கண்டுபுடிச்சிட்டியே, நான் நீ வெவ்வேறாக இல்ல, அது தெரியுமா?” என டக்கென பதில் வந்தது இருளிடமிருந்து.

“தெரியும் ஆனா உனக்கும் எனக்கும் உண்டான உடல் ஒன்னு இல்ல. நான் கையில எப்பயும் வச்சிருக்கும் ஸ்டிக் கதவுல மாட்டிகிட்டப்பயும் நீ என்னோடதான் இருந்த, அப்போ அது புரியல. அது புரிஞ்சதுக்குப் அப்பறம் தான் பேசலாம்னு கூப்பிட்டேன். நீ என்னுடைய வெளியாத்தான் இருக்க, அதுதான் இன்னும் எனக்கு புரியல”

“நீ மறுபடியும் உளறத் தொடங்கிட்ட”

“இல்ல… சரி விடு.. முன்னாடி நான் உன்கிட்ட நடந்ததுக்கு சாரி கேட்கலாம்னு நெனைக்கறேன். உன்ன கோவப்படுத்திட்டேனோன்னு தோனுது. அத மறந்துட்டியா? சாரி, நான் அதை பண்ணிருக்கக்கூடாது” 

 என்ன பண்ணேன்?! இருக்கட்டும்: மறந்துட்டேன்.

“நீ பேசமாட்டேன்னுதான் நெனச்சேன்” என்றது இருள்.

“அப்படி இருக்க முடியாது. என்னோட கூடவே இருக்குற, உன்கிட்ட எப்படி பேசாம இருக்க முடியும்?  உன்கிட்ட ஒன்னு சொல்லணும், என்னால ஓட முடியல.”

“அதனால் தான் ஒரே இடத்துல இருந்து ஒரே நெடி வருதா…”

“நான் எப்படி இருக்கேனு தெரிஞ்சுகிட்டேன், அதுதான் இப்படி என்னப் பேச வைக்குதோ! அந்த சத்தத்தை மறுபடி முழுங்கிட்டேன்”

“மறுபடி ஆரம்பிக்காத.”

“உண்மையாவே அத நான் கண்டுபுடிக்கல.”

“அப்பறம் எப்படி.”

“எலும்பா இருக்கேன். என்னால அத உணர முடுஞ்சது… அது எனக்கு ஒரு புரிதல கொடுத்தது எப்பயும் போல”

“எனக்கு தெரியாதே. அப்படினா… நீ மனுஷன் இல்லையா?”

“இத சொன்னா எப்படி நீ ஏத்துப்பேனு தெரில. ஆனா இதுதான் உண்ம… இப்பயும் மனுஷன்தான்… ஆனா எலும்பா…”

“எலும்புல மூளை இருக்குமா.?”

“இருக்காது, ஆனா இருந்துச்சி”

“சரி. இருந்தப்போ உனக்கு என்ன ஞாபகம் இருக்கு…”

“எனக்கு வரிசையா சொல்ல முடியுமான்னு தெரியல, மூக்க வச்சு நல்லா உறிஞ்சேன். கொஞ்சம் நிறையத்தான் இருந்துச்சு, அப்போ ஒரு சத்தம். கதவுல மாட்டியிருந்த என்னோட White cane கீழ விழுந்துருச்சின்னு நெனைக்கிறேன். ஆமா விழுந்துருச்சிதான், மூக்குல இழுத்ததும் ஒரு கோணலான நெளிப்பு! அது ஒருவிதமான புது ஃப்ளேவர் weed, என் ஃபிரண்டு வந்து கொடுத்ததா ஞாபகம்…”

மியாவ் மியாவ்…

***

லட்சுமிஹர்

5 COMMENTS

  1. ஆண்ட்ராய்ட் வெர்ஷன் சிறுகதை புதுவகை முயற்சி.உயிரற்ற ஜடப்பொருள்களை கதா பாத்திரங்களாக்கி கதை சொல்வது என்பது நமது நீண்ட நெடிய வழமையில் உள்ளது .அதைப் போலவும் வேறுபட்டும் இருள், போன்று நாம் பெயரிட்டு அழைக்கும் அருவுருவப் பெயரைக் கதாபாத்திரமாக்கி உரையாட வைத்திருப்பது நன்று.மனசாட்சியோடு தனக்குத்தானே பேசிக் கொள்ளும் கதாபாத்திரங்களைப் போல இருளையும் தனியான கதாபாத்திரமாக்கி எழுதி இருப்பது நன்று.இச்சிறுகதை ஆசிரியரின் இது போன்ற முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்… சுந்தரசோமன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here