பைத்திய எறும்பு
நிலவு முழுதாய்
விரிந்த ஒரு இரவில்
அந்த சின்னஞ்சிறு எறும்பிற்கு
பித்திளகி விட்டது
இதுவரை
ஒரு மலரைக்கூட
முழுதாய் கண்டிராத அது
தேடுகிறது
மேல்நோக்கிய பாதையை
வாழ்வை நொந்து
வழிதொலைந்து அலைகிறது
தான் வசிக்கும் வெண்மலரின்
இதழ்களுக்கிடையில்
***
படுத்தபடிக்கே
வானில் ஏறுகிறது
குழந்தை
முதுகில் பூமியை சுமந்தபடி
வானில் ஏறும் குழந்தை
அதை அத்தனை
விருப்பத்தோடு செய்கிறது
குறுக்கே தனக்குப் பிடித்தமானவர்களின்
தலைகள் தென்படும்போதெல்லாம்
குழந்தைக்கு சிரிப்பாய் வருகிறது
வானில் ஏறி ஏறி
கால் தளர்ந்து
உறங்கிவரும் குழந்தையை
பூமி
தாங்கு தாங்கெனத் தாங்குகிறது
***
மஞ்சள் நிறப் பட்டாம்பூச்சி
ஒரு மலைவாழ் ஸ்தலத்தில்
நான் அந்தச் சிறுமியை சந்தித்தேன்
மழை அரித்த சரிவொன்றில்
நாங்கள் ஏறிக்கொண்டிருக்கையில்
அவள் எழுதிக்கொண்டிருக்கும்
ஒரு கதையை எனக்குச் சொன்னாள்
சிறியவர் உலகில் வந்துபோகும்
பெரியவர்களின் கரங்கள்
அதில் தென்பட்டன
நான் கேட்டேன்
“அவை உங்கள் கால்களை
எப்போதேனும் பற்றிக்கொள்கின்றனவா”
அவள் தனது
பெரிய பற்களை சிரிக்கவைத்து
அதன் மீது வந்துவந்து சொன்னாள்
“அவைகளுக்கு எங்கள் கால்கள்
சிக்கவே சிக்காது..”
அதன்பின் நாங்கள்
பேசாமல் நடந்தோம்
ஒரு மஞ்சள் நிறப் பட்டாம்பூச்சி
ஏற்றத்தில் ஏறுவதுபோல் பாவனை செய்தபடி
எங்களுடன் மேலே வந்துகொண்டிருந்தது
(மிருத்திகாவிற்கு)
***
விரிந்து உதிர்ந்த மலரென
நகர் நடுவில் ஒரு மைதானம்
பொங்கி நிற்கும் நீரை
சுற்றிவரும் எறும்புகள் போல
அதிகாலையில்
அந்த ஆழத்தைப் பார்த்தபடி
எல்லையைச் சுற்றி
நடக்கிறார்கள் பெரியவர்கள்
ஒன்றுமில்லையென
கிடந்த அந்த மலரை
இந்த விடுமுறை நாளில்
தொட்டது யார்
பூவெறும்புகளென உள்ளிருந்து
வெளிவந்துகொண்டே இருக்கிறார்கள்
பிள்ளைகள்
***
ஆனந்த் குமார் – தமிழின் நவீன கவிஞர்களில் ஒருவர். இவரது முதல் தொகுப்பான ‘டிப் டிப் டிப்’ பரவலான கவனத்தைப் பெற்றது. 2022க்கான குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார். குழந்தைகள் புகைப்படக் கலைஞரான இவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். மின்னஞ்சல்: ananskumar@gmail.com