Sunday, November 17, 2024
Homeநூல் விமர்சனம்"என்று தானே சொன்னார்கள்"- வாசகப் பார்வை

“என்று தானே சொன்னார்கள்”- வாசகப் பார்வை

வலிகளின் வழி பயணம் – மகிழ்ச்சி

அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கணமும் வலியோடு தான். வலை போல் நம்மைச் சுற்றிப் பின்னி பிணைந்துள்ளது. அந்த உணரப்பட்ட வலிகளை தான் நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார் சாம்ராஜ். ஒரு கால்பந்தின் முழுமை என்கிற கவிதை -‘குப்பை பொறுக்கும் சிறுவர்களின் / வசவுகளுக்கும் தொடுதல்களுக்கும் ஏங்குவதுண்டு’, படிக்கும் பொழுது, பந்துக்கும் உயிர் கொடுக்கும் கற்பனை -அழகு. முதல் கவிதை, கால்பந்து பற்றி சொன்னாலும் , நமக்கு என்னவோ வாழ்ந்து கெட்ட ஒரு மாமனிதன் பற்றி சொல்வது போல் உள்ளது. ஏக்கமுடன் வாழும் அவனுக்கு தென்றல் போல் யாராவது வந்து நம்முடன் உரையாட வர மாட்டார்களா? என்ற ஏக்கம் உள்ளதாகவே படுகின்றது.

சாம்பல் வடிவில் உள்ள பிதுர்க்கள் கரைய, நீர் பகுதிகளோ அன்றாட வாழ்வின் நவீன மோஸ்தர்களில் வாழ்ந்து கொண்டு உள்ளது. நாயும் மனிதனும் இணைந்து, காலை நடை பயிற்சி மேற்கொள்வது தினசரி காலை நாட்காட்டி கிழிப்பது போல்தான், நாயோ மனிதனோ யார் குணங்களை யார் கொண்டு வாழ்கின்றனர் என்பது புதிர். இதை நன்றாகவே பகடி செய்து உள்ளார். போலி பொதுவுடமைவாதிகள் பற்றி தோழர் தயாளன் வழியாக தெளிவு படுதிகின்றார். உலகமயமாக்கல் விதிகள் எப்படி நம்மை சிதைகின்றது என்பது பற்றி, ‘மேற்கின்..’என்று ஆரம்பிக்கும் கவிதையும், ‘சங்கறுப் …’ என்று ஆரம்பிக்கும் கவிதையும் அப்பட்டமாக சொல்கின்றது.

பெண்களின் அவல நிலை பற்றி, ‘கறை, ‘சித்ரா..’, ‘அவள் நைட்டி..’ போன்ற கவிதைகள் செப்பும் பொழுது நம் மனமும் சேர்ந்து வலிக்கின்றது. ஆண் பூனைகள் கவிதை தீவிரவாதிகளின் சோகத்தை சொல்கின்றது. அதே சமயம் ஜனநாயக வழியாக இயங்கினால் இத்தொல்லை இருக்காதே என்ற சிந்தனையும் எழுகின்றது. நாதள்ள தொங்கும் புளியமரங்கள், ‘இப்பொழுது தங்கநாற்கரசாலை.. / தூத்துக்குடி வழி கொழும்பிற்கு’ என வாசிக்கும் பொழுது உலகமயமாக்கல்.  சரித்திர து(தூ)க்கத்துடன் கட்டபொம்மனின் தூக்கு கொழும்புடன் உள்ள வியாபார தொடர்பு என நம் பார்வைகள் சுதேசி உலகில் இருந்து விலகி செல்லும் நடைமுறை பாதை,  மனதில் வலியை அன்றைய கட்டபொம்மன் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தூக்கில் இடப்பட்டான். ஆனால் இன்று அவன் நினைவிடமோ பாலத்துக்கு கீழ். மேலே, ஆங்கில எழுத்துகளுடன் கன்டைனர்கள் விரைகின்றன. பாவம் கட்டபொம்மன்”, “நாதள்ளத்…” என்ற கவிதை இக்காட்சியை படம் பிடிகின்றது. அனைத்தையும் தீர்மானித்த கீதாசாரமும் உலகமயமாக்கலும்,  மனிதனின் மதியத்தை எப்படி கடப்பது என்பதை தீர்மானிக்க இயலவில்லை. மூட்டுவலிக்கு ஆறுதலாக இருக்கும் பீங்கான் காளான்கள் வழியாக சங்கறுபவர்கள் அருகிவருகிறார்கள். இவர் கவிதை வரிகள் நமக்கு மேலே கூறிய கருத்தை தெளிவாகவே காட்டுகின்றது. அனந்தசயனபுரியும் மன்னருக்கு குறி காட்டுபவர்களும் கவிதைகள் அன்றைய நிலையையும் இன்றைய நிலைமையும் சித்திரமாக சொல்கின்றது.

குறுக்கு வழியில் கடப்பவர்களால் நதிபுராணம்,  தண்ணீர் வற்றியதை சொல்கின்றது. நம் மனமும் கண்ணீரால் கரைகின்றது. நியூட்டனின் மூன்றாவது விதி, வரவேற்பறையில் மார்க்ஸ்சிய../பூஜை…என்று படிக்கும் பொழுது இன்றைய நவ பொது உடமை தோழர்களின் குழப்பம். இருப்பினும், பொதுவுடைமை நோக்கி நகர்தல் என்பது சரிதான். பின் மெல்ல, மெல்ல வாழ்வின் ஒவ்வொரு கணமும் துயரப்படும்போது மகிழ்ச்சி எப்படி? துயரத்தின் காரணத்தை சிந்தித்தால் மகிழ்ச்சியின் வெளிச்ச கீற்று நம்மை வருட ஆரம்பிக்கும். ஒவ்வொருவரும் வாழ்க்கை துயரம் “என்று தானே சொன்னார்கள்” ஆனால் சாம்ராஜின் கவிதைகள் நமக்கு வாழ்க்கை என்ற பாடத்தை மகிழ்ச்சிக்கு அல்லவா இட்டு செல்கிறது .

புத்தகத்தின் தலைப்பு : என்றுதானே சொன்னார்கள்
எழுதியவர் : கவிஞர் சாம்ராஜ்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
விலை : ரூபாய் நாற்பது

 

—பொன்னம்பலம் காளிதாஸ் அசோக்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular