எஸ்.சண்முகம் கவிதைகள்

0

1

கோணங்களில்லா மடல் அடுக்குகளுக்கு இடையில்
வண்ணங்களின் மெல்லிய வேறுபாடுகளே உள்ளன
அது நம் முன்னேயுள்ள
ரோஜாக்களின் பூரணத்தைக் காட்டிலும்
அதனருகிலும் சற்று அப்பாலும்
நமக்கு புலப்படாத வடிவத்தையே
பிரதிபலிக்கிறது

என்றைக்கும் போல் அல்லாது
நன்னீரில் கழுவி
தனிமலராய் அன்றி விரல்விட்டு எண்ணாமல் கொத்தாய்
அருகில் வைத்த போதும் சரி
தூரத்திலுள்ள பூஜாடியில் செருகிய பின்னரும்
மிச்சப்பட்டதை மேசையில் வைத்து
அதைப் பலமுறை பார்த்தும்

இன்றைய நிகழ்வொன்றின் வன்அவலத்தைத் தவிர
ஏனோ அபூர்வமாய் ஒன்றும் வாய்க்கவில்லை.

2

தயக்கத்துள் அகப்பட்டுக் கொண்டுள்ளது
நெருங்கிவரல்
சகமுகர்தலின் இனிமையும் அகன்றுவிட
தொடுவுணர்வின் சிலிர்த்தலும்
இனி எந்நாளில் வாய்க்குமோ
போகட்டும்

முன்னெப்போதும் போலல்லாது
அடிக்கடி
ஆடியில் தன்னுருவைக் காண்பதைத் துறக்க
எதிர்புறமாய்த் திருப்பி வைத்துவிட வேண்டும்
அப்போதுதான் சமீபத்திய சுயமாறுதல்களைக் காணாதிருக்கலாம்

திறக்கப்படாமல் புழுதியடர்ந்திருக்கும்
அக்கம்பக்கத்து இல்லங்களின் சாளரத் திரைகளில்
உள்ள பூவேலைப்பாடுகள் மாறா நேர்த்தியுடன்
இரவும் பகலும் விலக்கப்படாமல் தொடர
உணர்வினிலசைந்த வண்ணமாய் நானிருக்க
எல்லோரும் அங்கங்கு இருக்கவே செய்கிறார்கள்.

3

தேங்கிய நீரில் நிற்கும்
வெண்நாரையின் கால்
சிறிதே மூழ்கியுள்ளது

அதைச் சுற்றிலுமுள்ளவை எதிலும்
உளம்பதியவில்லை
செல்லும் வாகனத்தின் வேகமும்
பின்னோக்கிப் பாயும் தார்ச்சாலையோட்டமும்
முக்கியத்துவமற்றுவிட்டன

அதன் கண்களின் வட்ட அளவும்
கழுத்தின் வளைநேர்த்தியும்
அவ்வபோது தன்னுடலினை உதறி
எதையோ நீத்துவிட்டு
மோனமுறுவதுபோல இருத்தல்
இன்றளவும் நீங்கா காட்சியாகும்

புதிய நிலங்களையும் பல்லுயிரிகளையும் காணவிழையும் மனோவியம்
இனி வாய்க்க
வாசலருகே ஒற்றைக்காலூன்றி நின்றபடி
தெருமுனையில் ஏதுமில்லாமையை அடைகாக்கும் வாழ்தலானது.

4

கைபேசியின் தொடுதிரை வெளிச்சத்தைத் தவிர
பக்கத்தில் எதுவுமில்லை
ஒளிமுகமாகிவிட கருமையின் எல்லையில் நின்றிருக்கும்
ஒன்றினை காணுவதற்கான விழைவுதான்
இந்நிலை

குழப்பத்தின் பேய்மைச் சுழற்சியிலிருந்து விடுபட
துளியளவு துயில் நிலைத்தலுக்குள் அமிழ்ந்து
கனவு நிறைவுறும் தருவாயில்
விழிக்காமல் தொடரப் பழக வேண்டும்

நாளையின் இருப்பத்துநாலு மணிநேரம்
கால்களில் போர்த்திய போர்வையின்
அலங்கோல மடிப்புகளென கிடக்க

என்னை எல்லோருடனோ அன்றி
ஒற்றையனாகவோ கடந்துவிடுதல்
நிகழப் போகிறதே தவிர
தடுமாறக் கூடுதலாக ஒன்றுமில்லை.

5

காம்போடுள்ள மலரொன்றை
அதன் இதழ்களில் ஒன்றுகூட வீழாமல்
உளத்திலும் விரல்களிலும் சுழற்ற வேண்டும்

திசைகளும் கூடவே சுற்றினாலும்
வாழுமிடம்தான் யாவற்றுக்குமானது என
குரலொன்று ஏதொவொரு திசையிலிருந்து
மிதந்து நெருங்கிவர

எதன் மணமென்று பிரித்தறிய இயலவில்லை
ஆனாலும்
முதல்நுகர்வில் திளைக்கும்போது
வீழத்துவங்கும் இதழ்களால்
அம்மலரைக் ஏந்திய நிறைவு
சிறிதும் என்னுள் மறையவில்லை.

6

இன்னும் சுவைக்க நிறையவே மிச்சமுள்ளது
வழுவவும் தீர்க்கமடையவும் நாட்கள் தேவை
அதுவே ஆண்டுகளாகவும் மாறக்கூடும்

மலைமுகட்டில் தென்படும் மங்கலான அசைவை
அடிவாரத்தில் நின்றுணர்கையில்
கடக்கும் வாகனத்தின் வேகம்
என்னில் பதியாத வண்ணம்

சற்றே பின்வாங்குதலை
பிரயத்தனமின்றி பழக்கிக் கொள்ள
அவகாசம் தேவைதான்

காலருகிலுள்ள பூமியிலுள்ள ஊன்றி நிற்கும்
நாணலொன்றின் ஈரத்தீண்டலைச்
சுயத்துடன் இணைத்துவிட்டால்
மிச்சமென ஏதுமில்லை
இனியும்.

7

ஏதோ ஒன்றை மறந்தே தீரவேண்டும்
எனது இடதில் நினது வலதில்
யார் யார் பக்கத்திலிருந்தோம்

ஒரு தோள்மீது கேசச்சுருளின் தவழல்
மறுதோளின் வெறுமையில் பதியும்
என் அணுக்க கவனம்

நானறியாதுபடும் நின் சுவாச இளகல்
கம்மலான குரலில் வினவியதற்கு
பதிலுரைக்கையில் இருவரும்
உள்வாங்கிக் களித்த நாசிமூச்சினில்
நாம் உருவற்றுப் போனாலும்

அமர்ந்தெழுந்த இருக்கையில்
இருவரது தகிப்பு மட்டும்
ஏனோ விலகாதிருக்கிறது
இன்றளவும்

8

ஒரு செடி அசைந்ததைக் கண்ட
அலாதியான இடமும் காலமும்
மறந்து போய்விட்டாலும்

சற்று அப்பால் நெடிதுயர்ந்த
தருவின் பெருங்கிளையில் சமைந்திருந்த
நீள்அலகு வெண்பறவையின் அசையாமை
எதிர்பாராதபோது கலைந்து மீண்டெழுகையில்

சுருங்கி நீளும் கழுத்தும் குரலும்
இன்றும் உடனிருப்பினும்
அது எந்த ஊரென்று
உடனே சொல்ல இயலவில்லை

அன்று அங்கிருந்ததும்
இன்று இங்கிருப்பதும்
வேறில்லை.

***

ஆசிரியர் தொடர்புக்கு – s.shanmugam65@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here