(தொடரின் முந்தைய பகுதி மற்றும் முழு இணைப்புக்கு இங்கே சொடுக்கவும்)
கட்புலனாகா அரங்கு (Invisible Theatre) – சமூக மாற்றத்திற்கான கருவி!
யதார்த்தத்திற்கும் நாடகத்திற்கும் இடைப்பட்ட புள்ளி
ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின் இன்னொரு வடிவமான, கட்புலனாகா ஆற்றுகை வடிவத்தினை, நாடகம் என்று வரையறுப்பதா, யதார்த்தமென்று வரையறுப்பதா என்பது கடினமான கேள்வி. இது யதார்த்தத்திற்கும் நாடகத்திற்கும் இடைப்பட்ட ஒரு புள்ளியில் சேர்க்கக்கூடிய ஒரு கலைவடிவம். இது மேடையில் நிகழ்த்தப்படுவதற்கு பதிலாக, மக்கள் கூடுகின்ற, நடமாடுகின்ற பொதுத்தளங்களில் நிகழ்த்தப்படுவதாகும். ஏதேனுமொரு ஒடுக்குமுறை மீது கேள்வியெழுப்பும் வகையிலும் நிகழ்த்தப்பட வேண்டும். ஒடுக்குமுறைக்குரிய தீர்வினை நோக்கிய உரையாடலை, விவாதத்தை, சிந்தனையை நோக்கி நகர்த்துவதாகவும் அமையும்.
இங்கு பார்வையாளர்கள் என்ற நேரடி வரையறை பொருந்தாது. நாடகம் நிகழ்த்தப்படும் இடத்தில், அந்த நேரத்தில் இயல்பாகவும், தத்தமது அலுவல்கள் நிமித்தமும் கூடியிருக்கின்ற¸ நடமாட்டத்திலிருக்கின்ற மக்கள்தான் இதன் பார்வையாளர்கள். நாடகம் என அங்குள்ளவர்கள் அறியாதபடி இது நிகழ்த்தப்படும். அந்தச் சூழலில் இயல்பாக நிகழும் ஒரு சம்பவம் போல மக்கள் இதனைக் காண்பார்கள்.
ஒடுக்குறைக்கெதிரான பேசுபொருள்
யதார்த்த சூழலில் நிகழக்கூடிய, எதிர்கொள்ளக்கூடிய, சமூகத்தில் நிலவக்கூடிய ஒரு ஒடுக்குமுறையைப் பேசுபொருளாகக் கையாள்கின்றது. அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார, இன, பால், நிற, குடும்பம் என ஒட்டுமொத்தாக மானிட சமுதாயம் எதிர்கொள்ளக்கூடிய ஒடுக்குமுறைகள், பாரபட்சங்களை இதன் பேசுபொருளாகத் தெரிவு செய்ய முடியும்.
ஒரு தனிநபர் இன்னொரு தனிநபரை நோக்கி, குழுவொன்று தனிநபர் மீது, அதிகாரம் மிக்க தனிநபர் குழு ஒன்றின் மீது என ஒடுக்குமுறை எந்த வகையினதாகவும், வடிவத்திலும் இருக்கலாம். என்ன நடைபெறுகின்றது என்பதைத் பார்வையாளர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் நாடகத்தின் சித்தரிப்பும் காட்சிகளும் கட்டமைக்கப்படுதல் வேண்டும்.
நிகழ்த்தப்படும் இடம் ஒரு சந்தையாக, வணிக வளாகமாக, உணவகமாக, நேநீர் சாலையாக, பாடசாலைக் கன்ரீனாக, வேலைத்தளமாக, பொதுச்சேவையிடமாக, போக்குவரத்து நிலையமாக என மக்கள் கூடுகின்ற இன்னபிற இடங்களாகத் தெரிவு செய்யப்படும்.
இதனை நம்மில் பலர் தெரு நாடகம் என நினைக்கக்கூடும். தெரு நாடகம் வேறு. இந்தக் கட்புலனாகா அரங்கம் வேறு. இதனை நாடகமென இதன் பிரதியை ஆக்கியவரும் நெறியாளரும் நடிகர்களும் இதன் உருவாக்கக் குழுவினரும் மட்டுமே அறிந்திருப்பர். துல்லியமாகத் திட்டமிடப்பட்ட நாடகமொன்றைத் தாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை அங்கிருப்பவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். நிகழ்த்தப்படும் இடத்தில் நிகழும் ஒரு சம்பவமாகவோ, முரண்பாடாகவோ, ஒடுக்குமுறையாகவோ தான் கூடியிருக்கும் மக்களுக்கு (பார்வையாளர்கட்கு) தோன்றும். அந்த அடிப்படையிலிருந்து தான் மக்களின் தலையீடும் பங்கேற்பும் எதிர்வினையும் அமையும்.
நுணுக்கமான முன்தயாரிப்பு – எழுத்துரு – ஒத்திகை
ஆயினும் எந்தவொரு வழமையான நாடகவடிவங்களை உருவாக்குவதற்குரியது போன்ற திட்டமிடலும், முன்தயாரிப்பும் இந்த வடிவத்திற்கும் அவசியம். நாடகம் நிகழும் போது அங்குள்ள மக்களை அதற்குள் உள்ளிளுத்து பங்கேற்கச் செய்தல் – நிகழ்ந்து முடிந்த பின்னர் நாடகம் கையிலெடுத்திருந்த பேசுபொருள் பற்றி மக்களைத் தமக்குள் உரையாடச் செய்தல் – விவாதிக்கச் செய்தல் என்பன இதன் முக்கிய நோக்கம். அதனூடாக மக்களின் மனநிலை, கருத்து நிலையில் ஒடுக்குமுறை அநீதிகளுக்கு எதிரான மாற்றங்களைத் தூண்டுவதாகும்.
இதன் பிரதி (Script work) காட்சி விபரிப்புகளோடு இயல்புத்தன்மையைப் (Realism) பிரதிபலிக்கும் வகையில் ஆக்கப்பட வேண்டும். பாத்திரங்கள் உருவகப்படுத்தப்பட்டு, அதற்குப் பொருத்தமான நடிகர்கள் தெரிவு, போதிய ஒத்திகைகளினூடாக நெறிப்படுத்தப்படும். வழமையான ஒரு நாடகமோ, அரங்க ஆற்றுகையோ எப்படி எழுதப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டு நெறிப்படுத்தப்படுகின்றதோ, அதேபோன்ற முன்தயாரிப்பு இதற்கும் அவசியம். இன்னும் சொல்லப்போனால் அவற்றில் நுணுக்கமும், திட்டமிடலும், போதிய நேரமும் இதற்கு மேலதிகமாக அவசியப்படுகின்றது.
சமூக மாற்றம்
ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் இலக்கு மாற்றம் என்பதாகும். முற்போக்கான சமூக மாற்றத்தைக் கோருவதுதான் இந்தக்கலையின் முக்கிய நோக்கம். ஒடுக்குமுறைக்கெதிரான சிந்தனை, செயற்பாடு என்பதாக மாற்றமென்பது இங்கு அர்த்தப்படுகின்றது. பிரக்ஞையற்ற பார்வையாளர்களை பிரக்ஞை பூர்வமானவர்களாக்குதல். செயற்துணிவும் செயலூக்கமும் உள்ள மனிதர்களாக மாற்றுவதற்குரிய கருவியாக இந்த வடிவம் Boal-இனால் வளர்த்தெடுக்கப்பட்டது.
இதனை நிகழ்த்துவதற்கு பிரத்யேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட மண்டபம் தேவையில்லை. பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுத்து நாடகம் பார்க்க அழைக்க வேண்டியதில்லை. மக்களை நாடி நாடகத்தைக் கொண்டு செல்வதோடு, நாடகம் என்று மக்கள் அறியதபடி மக்கள் மத்தியில் அதனை நிகழ்த்துவதாகும். அந்த வகையில் நாடகம் தொடர்பான ஈடுபாடு அற்ற, அது தொடர்பான கருத்துமந்தம் கொண்டவர்களின் கவனத்தினையும் இந்த வடிவத்தின் மூலம் ஈர்க்க முடியும்.
மரபார்ந்த நாடகமும் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கமும்
மரபார்ந்த நாடகத்திற்கு ஒரு மேடை இருக்கும். ஆங்கு நிகழ்வது நாடகம் என்ற முன்னறிவிப்பிற்கு அமைய அதற்கான பார்வையாளர்கள் இருப்பார்கள். இங்கு வித்தியாசம் என்னவெனில், மண்டப மேடையில் நடாத்தப்படுவதற்கு மாறாக நடைமுறையில் அத்தகைய நிகழ்வு ஒன்று சம்பவிக்கக்கூடிய பொது இடங்களில் நிகழ்த்தப்படுகிறது.
பொதுவாகவே மரபார்ந்த நாடகத்திற்கும், ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கத்தின் அனைத்து வடிவங்களுக்குமான முக்கிய வேறுபாடு தொடர்பாடல் வெளியும் பங்கேற்பு வெளியும் சார்ந்தது. மரபார்ந்த நாடகம் என்பது பார்வையாளர்களை நோக்கிய ஒரு வழித்தொடர்பாடலைக் கொண்டது. ஆற்றுகையாளர்கள் அதிகாரம் மிக்கவர்களாகவும் பார்வையாளர்கள் வெறுமனே நாடகத்தின் கருத்தினையும் கலைத்தன்மையையும் நுகர்பவர்களாக மட்டும் உள்ளனர். நாடகத்தின் கட்டமைப்பிற்கும் நிகழ்வடிவத்திற்கும் கட்டுப்பட்டவர்களாக பார்வையாளர்கள் உள்ளனர். Boal-ன் கூற்றுப்படி, நாடகத்தின் சடங்குகளால் அவர்கள் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.
மரபார்ந்த நாடகத்தில் பார்வையாளர்கள் தமது விருப்பப்படி சுதந்திரமாகக் கருத்துகளை வெளிப்படுத்தவோ அன்றி நாடகத்தின் அங்கமாகப் பங்கேற்கவோ முடியாது. பார்வையாளர்கள் தம்மை வெளிப்படுத்தும் அதிகாரமற்றவர்களாக, ஒடுக்கப்படும் தரப்பினராக வைத்திருக்கப்படுகின்றனர் என்பது Boal-ன் பார்வை.
பார்வையாளர்களுக்கு அதிகாரம் – சமூக மாற்றத்திற்கான கருவி
ஒட்டுமொத்தமாக ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கம் என்பது பார்வையாளர்களை நேரடியாகப் பங்கேற்க வைப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரத்தினை வழங்குதல், அந்தப் பார்வையிலிருந்து தான் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கக்கூறுகளை Boal தோற்றுவித்தார். மேடைக்கும் மண்டபத்திற்கும் இடையிலான இடைவெளியைத் தகர்ப்பது, நடிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவது என்பது அவருடைய இலக்கு. சமூக மாற்றத்திற்கான கருவியாக அரங்கியலைக் கைக்கொள்ளும் சிந்தனையில் பரந்துபட்ட மக்களின் நேரடிப் பங்கேற்பினைக் கோருகின்ற நிலையிலிருந்தே Boalன் இந்த அணுகுமுறையை விளங்கமுடியும்
அனைவருமாக இணைந்து சிந்தித்தல், செயற்படுதல், பிரச்சினைகளுக்கான தீர்வினைக் கண்டடைதல் என்பது இந்த அரங்கச் செயற்பாட்டின் இலக்கு.
‘முழு உலகமும் ஒரு நாடக மேடை’
‘முழு உலகமும் ஒரு நாடக மேடை’ என்றார் சேக்ஸ்பியர். கட்புலனாகா அரங்கம் பற்றிய சிந்தனை அப்பொழுது அவரிடம் இருந்திருக்கா விட்டாலும், அந்தக்கூற்று முற்றுமுழுதாக கட்புலனாகா அரங்கத்திற்கும் பொருந்துகிறது. ‘Theater can be done everywhere. Even in a theater – நாடகத்தினை எங்கு வேண்டுமானாலும் நிகழ்த்தலாம். சில சந்தர்ப்பங்களில் மேடையிலும் அதனை நிகழ்த்தலாம்’ என்பது Boal-ன் பிரசித்திபெற்ற கூற்று.
ஒத்திகை பார்க்கப்பட்ட ஒரு அரங்கப்பிரதி அமைய மேடையில்லாத ஒரு இடத்தில் நிகழ்த்தப்படுவதாயினும், நிகழ்த்தப்படும்போது, கட்புலனாக நாடகம் மரபார்ந்த நாடகத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றது.
கட்புலனாகா நாடகத்தின் ஏதோவொரு கட்டத்தில், அல்லது முடிவில் மக்களின் பங்கேற்பு நிகழ்வதற்கான வாய்ப்புள்ளது. நிகழ்த்தப்படும் சம்பவத்தில் முரண்பாடு கூர்மையடையும் போது மக்களின் ஊடாட்டம் (interaction) நிகழும். நாடகம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, பார்வையாளர்களாகிய மக்கள் எந்தக்கட்டத்தில் வேண்டுமானாலும் குறுக்கிடலாம். அல்லது தலையிடாமல் சம்பவத்தை முழுமையாகப் பார்த்துவிட்டுக் கலைந்து செல்லலாம். அல்லது சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது அந்த இடத்தில் நிற்காமல் விலகியும் செல்லலாம். எனவே பார்வையாளராகிய மக்களுக்கு எல்லாவிதமான தெரிவுச்சுதந்திரமும் இதில் உள்ளது.
கட்புலனாக நாடகத்தில் கவனிக்க வேண்டியவை
கட்புலனாக நாடகத்தை வெற்றிகரமாக நிகழ்த்துவதென்பது மக்களை அதில் தலையிடச் செய்வது, கருத்துகூற வைப்பது, தீர்வு பற்றிச் சிந்திக்க வைப்பதில் தங்கியுள்ளது.
அதனை உறுதிப்படுத்துவதற்கு நாடகத்தில்:
- கூர்மையானதொரு ஒடுக்குமுறை, முரண்பாட்டினைக் கொண்ட சம்பவம் பேசுபொருளாக்கப்படுதல் வேண்டும்.
- பதற்ற சூழல் தோற்றுவிக்கப்படவேண்டும்.
- மக்களை ஈடுபட வைப்பதற்குரிய வகையில் அந்தப் பதற்றம் படிப்படியாக அதிகரிக்கப்பட வேண்டும்
- நிகழ்த்தப்படும் இடம் கணிசமான மக்கள் கூடுகின்ற இடமாகத் தெரிவுசெய்ய வேண்டும். அந்த இடத்திற்குப் பொருத்தமான பேசுபொருள் அமைதல் வேண்டும்
- நாடகத்தின் கட்டமைப்பு வடிவம், வளர்த்தெடுக்கப்படும் முறையிலும் கவனம் கொள்ள வேண்டும். நாடகத்திற்குரிய தன்மைகள், தரம், களம் சார்ந்த நாடகத்தின் நீளம் துல்லியமாகத் திட்டமிடப்படுதல் முக்கியமானது.
(தொடரும்)
***
ரூபன் சிவராஜா
தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.