இரா.முருகவேள்
ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வரும்போது லியோவோடு பக்காவும் காத்துக் கொண்டிருந்தான். மறுநாள் அந்த நகரத்தின் செஷன்ஸ் கோர்ட்டில் லியோவின் வழக்கு விசாரணைக்கு வர இருந்தது. பக்கா லியோவை துளைத்து எடுத்திருக்க வேண்டும் என்பது லியோவின் முகச்சுழிப்பிலிருந்து தெரிந்தது.
எனக்கு பக்கா மீது பயம் இருந்தாலும் அவனைப் பார்க்கும் ஆவலும் இருந்து கொண்டுதான் இருந்தது. மறக்க முடியாததாக மாறிவிட்ட காலங்களின் மிக முக்கியமான பாத்திரம் அல்லவா? லியோ என்னிடம் மிகுந்த மரியாதையுடன் கைகுலுக்கினார்.
இன்றைய ஹியரிங்குக்கு நான் நேரில் வரவேண்டுமென்பது அவரது விருப்பம். எனவே மிகுந்த கவலையுடன் தொடர்ந்து அழைத்து என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.
பக்கா ஓடிவந்து என்னை அணைத்துக் கொண்டான். இந்தப் பதினைந்து ஆண்டுகளில் குண்டாகியிருந்தான். ஆச்சரியமாக அவனுக்கு இன்னும் வழுக்கை விழவில்லை. கண்கள் அடர்ந்த புருவங்களின் கீழ் அதே கிறுக்குத்தனத்துடன் பளிச்சிட்டன. பக்கா எப்போதும் துணி எடுத்துத்தான் தைப்பான். அவனது எல்லா ஆடைகளிலும் ஒரு சிமெண்ட் வண்ணம் வீசும். இப்போதும் இன்றும் அதே போல சாம்பல் நிறத்தில் கால் சட்டையும் வெள்ளைக் கட்டம் போட்ட முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தான். அரசு ஊழியரை எங்கிருந்தாலும் காட்டிக்கொடுக்கும் ஆடை அது. ஆனால் இது என்ன முழங்கால் பக்கம் அழுக்கு திட்டாகப் படிந்திருந்தது.
“என்னையா அழுக்கு?”
“இருட்ல தெரிலப்பா. சரி விடு. வீட்டுக்குப் போலாம்”
“சாருக்கு ரூம் போட்டிருக்கு” லியோ வெடுக்கென்று கூறினார்.
“சார் எங்கூடத்தான் வருவார். என்னப்பா நீ இங்க வந்துட்டுட்டு வீட்டுக்கு வரலேன்னா எப்படி? வா போலாம்”
“உங்கூட நைட் தங்கறதா? நான் கடகடவென்று சிரித்தேன். பக்காவுடன் இரவு தங்குவது எப்படிப்பட்டதென்பது எனக்கும் அவனோடு தங்கியவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.
“அதெல்லாம் அப்பப்பா. நீ அப்ப எப்படி இருந்த. இப்படி எப்படி இருக்க. நான் மட்டும் மாறக்கூடாதா? நீ வா சொல்றேன்”
“வைஃப்?”
‘அட வாப்பா”
நான் ஒப்புக் கொண்டேன். ஏன் என்று இன்றுவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் மனதுக்குள் என்ன நடந்திருக்கும்?
***
இப்போது முற்பிறவி போலத் தோன்றிய அந்த காலத்தில் எங்கள் கட்சிக் காரர்களுக்கும் போலீசுக்கும் ஒரு சிறிய கண்ணாமூச்சி விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. இரவு வீட்டில் துங்கினால் மேற்படி நபர்கள் தூக்கிக் கொண்டு போய்விடும் ஆபத்து இருந்தது. எனவே அன்று இரவு ரகசிய தங்குமிடத்துக்குப் போக பஸ் ஏறச்சென்று கொண்டிருந்த போது பக்கா எதிர்ப்பட்டான்.
“எங்க வீட்டுக்கு வா மச்சி” என்றான். நிலமை தெரிந்தே அவன் அழைத்தது எனக்கு வியப்பளித்தது.
பக்கா இவ்வளவு வீரனா? அப்படியானால் அவன் இருக்க வேண்டிய இடம் நமது கட்சி அல்லவா? நான் ஒரு முடிவோடு ஒப்புக்கொண்டேன். பக்காவின் வீடு அந்த கவர்ன்மெட் குவார்ட்டர்ஸில் இருந்தது. குவார்ட்டர்ஸ் என்றால் என்னவோ என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். சுமார் பதினைந்து ஏக்கருக்கு அந்த வளாகத்தில் காடு மண்டிக் கிடக்கும். சில கைவிடப்பட்ட கட்டடங்களும் ஒரு டிராக்டர் வொர்க்ஷாப்பும் ஒரு சில டிரைவர்களின் வீடுகளும் ஆங்காங்க காட்டுக்கு நடுவே இருந்தன. உள்ளே போய்விட்டால் நகரத்தில் இரைச்சல் சுத்தமாக மறைந்து ஏதோ ஊட்டி, குன்னூர் பக்கம் வந்து விட்டதைப் போலிருக்கும்.
பக்காவின் வீட்டு வாயில் வரை முட்புதர்களும் பெயர்தெரியாத மரங்களும் அடர்ந்திருந்தன. தொலைவில் யூகலிப்டஸ் மரங்கள் வானத்துக்கு ஏணி அமைத்திருந்தன. பக்காவின் அப்பா டிரைவர். எப்போதும் பயணத்திலேயே இருப்பார். அவனுக்கு அம்மா இல்லை. அக்காக்கள் திருமணமாகிச் சென்று விட்டனர். எனவே வீட்டில் அவன் மட்டும்தான்.
வீட்டுக்குள் நுழைந்ததும் வெளியே இருந்த குளிர்ச்சிக்கு கதகதகப்பாக இருந்தது. ஜெர்கினைக் கழற்றி எங்கே மாட்டுவது என்று கேட்கத் திரும்பியவன் துணுக்குற்றேன். பக்கா கதவைப் பூட்டித் தாளிட்டதோடு சோபாவை கதவை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தான்.
நான் பதறிப் போய் “டே என்ன பண்றே?” என்றேன். என் நிலைமையை யோசித்துப் பாருங்கள். நானே தலைமறைவாக இருக்க இங்கே வந்திருக்கிறேன். வீட்டை உள்ளே பூட்டி, கதைவைத் திறக்க முடியாமல் சோபாவையும் நகர்த்தி கதவை மறைத்து வைத்தால் கருக்கென்று இருக்குமா இருக்காதா?
பக்கா கச்சிதமாக வாயிற்கதவுக்கு முன்னால் சோபாவை செட் செய்து விட்டு என்னைப் பார்த்து மந்தகாசமாகச் சிரித்தான்.
“வெளியிருந்து ஒரு தட்டுத் தட்டினா கதவு திறந்துக்கும். அதனால எப்பவும் சோபாவை அதுக்கு முன்னாடி இழுத்து வெச்சிடுவேன்”
ஓ.. இது எனக்காக இல்லையா? நான் நிம்மதியடைந்தேன்.
பக்கா பின்புறக் கதவருகே சென்று தையல் மெஷினை இழுத்து வைத்தான். பின்பு அதன் மீது ஒரு காலியான அண்டாவை எடுத்துக் கவிழ்த்து வைத்தான். ”யாராவது கதவத் தெறக்க முயற்சி பண்னா அண்டா கீழ விழுந்து சத்தம் போட்டுடும் இல்லையா? போலீஸ் கூட அதான் அட்வைஸ் செய்யுது”
“இந்த அளவுக்கு என்ன பிரச்சினை?” நாலு கேட்லையும் வாட்ச்மென் இருக்காங்க இல்ல?”
“அவங்க அங்க இருக்காங்க. இங்க ஏதாவது நடந்தா அவங்களுக்கு எபப்டித் தெரியும்?”
“என்ன நடந்துடும்?”
“யாராவது அட்டாக் பண்ணிட்டா”
“அட்டாக்கா?” தினமும் மாவோவின் ராணுவப் படைப்புகளில் தாக்குதல், தற்காப்பு, தற்காப்பில் தாக்குதல், தாக்கும்போது தற்காப்பு, சுற்றி வளைப்பு, எதிரியின் ஒரு விரலை வெட்டியெறிவது, என்பது பற்றியெல்லாம் முப்பது பக்கமாவது படிக்கும் எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
இதற்குள் வீட்டில் இருந்த கதகதப்பு மறந்து ஒருவிதமான அடைபட்ட வாசம் வீசத் தொடங்கியது. பின்புதான் கூரை ஓட்டைகள் எல்லாம் பெட்ஷீட்டுகளைக் கொண்டு அடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. எனக்கு மூச்சுத் திணறத் தொடங்கியது.
ஒரு ஜன்னலையாவது திறக்கச் சொல்லலாமென்று வாயெடுத்த போது பக்கா ஒரு ஸ்வெட்டரை எடுத்து அணிந்து கொண்டான்.
“மச்சி, உனக்கும் ஸ்வெட்டர் வேணுமா?”
ஸ்வெட்டரா.. ஜட்டி கூடப் போட முடியாத உப்புசத்தில் ஸ்வெட்டரா?
இவனோடு ஒரு முழு இரவும் எப்படிக் கழிப்பது? முடியவே முடியாது என்று வெளியேறி விடலாமா? இப்போது வெளியேறினால் பிளாட்பாரத்தில்தான் படுக்க வேண்டும்.
பக்கா இருளில் மூழ்கியிருந்த பெட்ரூமில் மறைந்தான். இதுதான் கடைசி வாய்ப்பு. ஓடி விடு என்று மனம் சொன்னது. உடல் ஏதோ ஒரு இடம் கிடைத்தால் போதும் என்று கெஞ்சியது. பக்கா இருளிலிருந்து வெளியே வந்த போது அவன் கையில் ஏதோவொன்று பளிச் பளிச்சென்று மின்னியது.
இரண்டு பளபளக்கும் கத்திகள்.
இன்னிக்கு இந்தப் பைத்தியத்தின் கையில் நாம் கைமா தான். உடலெல்லாம் பதற தலையணையை எடுத்துக் கொண்டு பக்கா மீது பாய்ந்து விடுவது என்று முடிவு செய்து தலையணையைத் தொட்ட அந்த கணத்தில் அவன் கூலாக “இந்தக் கத்தியை தலயணிக்கு அடியில் வெச்சுக்கோ” என்றான்.
எனக்கு இன்னும் உடல் பதறிக் கொண்டிருந்தது.
***
எனது அனுபவங்களை கட்சி ஆழ்ந்து பரிசீலித்தது. பக்காவுடனான உறவைப் பேணுவது அந்தக் காலத்தில் கட்சிக்கு இருந்த ஷெல்டர் (ரகசிய தங்குமிடங்கள்) பிரச்சினையத் தீர்க்க உதவியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் தனியாக அங்கே செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டது.
“நாடே மனநிலை பாதிக்கப்பட்ட நிலைலதான் தோழர் இருக்கு. எல்லோருக்கும் ஒரு இன்செக்யூரிட்டி, அன்சர்ட்டெனிட்டி இருக்கு. அரசியல் படுத்தினா சரியாப் போயிடும்” என்ன விவகாரமாக இருந்தாலும் மார்க்சீய அடிப்படியில் ஒரு விளக்கு விளக்கினால் முற்றிலும் இயல்பானதாக மாறிவிடுகிறது.
பக்கா படுபயங்கரமான சாய்பாபா பக்தன் என்றாலும் கட்சிக்காரர்களோடு ஒட்டிக் கொண்டான். தோழர்கள் புகைபிடிக்க எதிரே இருந்த பாழடைந்த கட்டடத்தின் ஒரு மூலையையும் ஏற்பாடு செய்திருந்தான். கட்சிக்கு பக்கா, பக்காவுக்கு துணை கிடைத்ததில் அவனது அப்பா என்று எல்லோரும் இந்த ஏற்பாட்டால் மகிழ்ச்சியடைந்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது நான் தான்.
***
பக்கா ஒரு ஆட்டோ பிடித்தான். ஆட்டோ உலுக்கலுடன் கிளம்பியதும் “அப்புறம் லவ்வெல்லாம் எப்படி இருக்கு?”
“லவ்வா எனக்கா?’
“அதாம்பா அந்த லைப்ரெரி”
“நாயே என் லவ்வ ஒழிச்சவனே நீதானே?’ பக்காவை இன்று கொன்று விட்டால் சாட்சியமே இருக்காதே என்ற எண்ணம் என் மனதில் ஓடியது.
***
புரட்சிகரமாக வாழ்ந்து வந்த அந்தக் காலங்களில், காலை நேரத்தில் படிப்பது, மாலையில் அரசியல் வேலைகளைப் பார்ப்பது என்பது எனது வழக்கம். வேலைக்குப் போவதுபோல காலை பத்து மணிக்கு மத்திய நூலகம் சென்று விடுவேன்.
அங்கே நான் வழக்கமாகப் படிக்க உட்காரும் பிரிவின் பொறுப்பாளராக இருந்த அந்த அழகான பெண் மீது எனக்கு காதல் வந்து கொண்டிருந்தது. அவருக்கும் அப்படி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிந்து கொண்டிருந்தன. ஒரு அழகியலான கதை எழுதுவது எனது நோக்கம் இல்லை என்பதால் இந்த விவகாரத்தை அவரவர் கற்பனைக்கு விட்டு விட்டு மேலே செல்கிறேன்.
ஒருநாள் நூலகத்தினுள் நுழையும் போது பக்கா பதட்டத்துடன் வாயிலில் நின்றிருந்தான்.
“மச்சி என்னை நாலு பேர் பாலோ பண்றாங்க”
“எங்க மச்சி எங்க?”
“ஒளிஞ்சிருக்காங்க.”
“காணோமே.. .. நான் தேடிக் கொண்டிருந்த போது பக்கா என்கையில் ஒரு சைக்கிள் செய்னைத் திணித்தான். அப்போது கோவையில் ரவுடிகள் வைத்திருப்பதைப் போன்ற கைப்பிடி வைத்த சைக்கிள் செய்ன்.
“வெச்சுக்கோ. ஒரு செக்யூரிட்டிக்கு”
என் போதாத காலம். அதை அப்போதைய பேஷனான பேகி பேண்டுக்குள் போட்டுக் கொண்டு பக்காவையும் தைரியம் சொல்லி நூலகத்துக்குள் அழைத்துச் சென்று உட்கார்ந்து ஜேசப் கான்ராட்டின் ஹார்ட் ஆப்ஃ டார்க்னெஸ்ஸை விரித்து வைத்து அந்த அம்மையாரை நோக்கிக் காதல் ததும்பப் புன்னகைத்த போது சரசரவென்ற சத்தத்துடன் சைக்கிள் செய்ன் வெளியே சரிந்தது.
ஆயுதந்தாங்கிய அன்றே பாபு என்ற அந்தப் போராளியின் காதல் கருகிச் சாம்பலானது.
***
எனது எண்ண ஓட்டத்தைப் போலவே ஆட்டோவும் தாவித் தாவிச் சென்று கொண்டிருந்தது. ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டமில்லாத வெட்ட வெளியில் பக்காவின் வீடு இருந்தது. இருளோடிக் கிடந்தது. திறந்ததும் ஒரே குப்பை.
“ஏன்?’ என் முகத்தில் தெரிந்த கேள்வியைப் பார்த்து “வைப் குழந்தைகள் எல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க” என்றான்.
***
இரவு என்மீது கூரை இடிந்து விழுந்து விட்டது போன்ற அதிர்ச்சி ஏற்பட்டு திடுக்கிட்டு எழுந்தேன். பக்கா ஒரு கையில் டார்ச்சையும் இன்னொரு கையில் கத்தியையும் வைத்துக் கொண்டு நின்றிருந்தான். எனவே என்னை எட்டி உதைத்திருக்க வேண்டும்.
“வெளிய ஆளுக உலாவறாங்க”
நான் துள்ளி எழுந்தேன்.
“டாய்” என் குரலில் வீடு அதிர்ந்தது. கதவை மூடி வைத்திருந்த சோபாவை சந்திரமுகி ஜோதிகா போலத் தூக்கி வீசினேன். கதவை விரியத் திறந்து வெளியே பாய்ந்தேன்.
பக்கா திக்பிரமையடைந்து நிற்பது தெரிந்தது.
“டாய்” நான் திரும்பவும் அலறினேன்.
“யார்ரா எங்க பக்காவ ராத்திரி ராத்திரி வந்து பயமுறுத்தறது?”
நூறடி தூரத்தில் ஒரு வீட்டில் லைட் எரிந்தது. “டாய் நீதானா”
வாயிலில் கட்டையாக, குட்டையாக, சொட்டையாக ஒரு உருவம் தோன்றியது. “டேய் மெண்டல் பயலுகளா, தூங்க விடமாட்டீங்க?”
நான் தொண்டை நரம்பு புடைக்க யுத்த கோஷம் எழுப்பியபடி அந்த வீட்டை நோக்கிப் பாய்ந்தேன். ஒருவிநாடி பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு குனிந்து பார்த்த போது பக்கா என்னைத் தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான். ”வேண்டா மச்சி போயிரலாம்” என்று அவன் வாய் இரைப்புக்கு நடுநடுவே முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
நான் புரூஸ்லி போல அவன் மண்டையில் ஓங்கிக் குத்தினேன். பக்கா நிலை தடுமாறி விழுந்ததும் பாய்ந்து திரும்பவும் அந்த வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினேன்.
“டேய் நீதான லைரெரிக்காரம்மா புருசன்?”
கட்டை, குட்டை, சொட்டை உருவம் துள்ளிப் பாய்ந்து எதிர்த்திசையில் ஓடியது. நான் கற்களை எடுத்து அவனை நோக்கி வீசத் தொடங்கினேன்.
பக்கா திரும்பவும் என்னைத் தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான். நான் ஒரு அசுர முயற்சி செய்து என்னை விடுவித்துக் கொண்டு எதிரே இருந்த காலியிடத்தில் கொட்டப்பட்டிருந்த மணலில் குட்டிக்கரணம் அடித்தேன். வானில் நிலவு ஒளிவீசிக் கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. மெல்லிய வெதுவெதுப்பான காற்று வருடிச் சென்றது. ஒரு கணத்தில் எனது உக்கிரம் மறந்து ஒரு துயரம் தோய்ந்த மனநிலை ஆட்கொண்டது.
“பக்கா I am sad”
”ஏன் மச்சி?” பக்கா என்னை விடத் துயரத்துடன் கேட்டான்.
“இருவர் படுத்திருந்தார்
ஒருவர் ஒளிந்திருந்தார்
யாரடா என்றது நிலவு”
இந்த அடியைப் பாடும் போது எனக்கு குரல் கம்மியது. துயரம் தொண்டையை அடைத்துக் கொண்டது. சமாளித்துக் கொண்டு திரும்பவும் பெருங்குரலெடுத்துப் பாடத் தொடங்கினேன்.
“அம்மா . . ..
அம்மா . . ..
நான் மனிதன்”
பக்கா தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அங்கே கொட்டப்பட்டிருந்த கட்டுமானப் பொருட்களுக்கு வாட்ச்மேன் ஒரு பீடி பற்ற வைத்துக் கொண்டு அவனருகே வந்து உட்கார்ந்தார்.
“என்ன பக்கா தண்ணி போட்டுட்டாரா?”
“போட்டிருந்தா பரவாலியே”
“அடப்பாவி தண்ணி போடாமலேயே இந்த லோலாயா? ஏதாவது பிரச்சினையா?’ அவர் லூசா என்று கேட்டார்.
“தெரியலையே?” பக்கா இன்னும் பீதியிலிருந்து மீளவில்லை.
நான் எழுந்து மணலைத் தட்டிவிட்டுக் கொண்டு வாட்ச்மேன் அருகே சென்று அமர்ந்தேன். “அண்ணா நான் லூசு இல்ல. தண்ணியும் போடல. எனக்கு ஒரு லவ் பெயிலியர். அதனாலதான் தினமும் சிகரெட் சூடு வெச்சுக்கறேன்”
“யாருன்னு சொல்லு கண்ணு. நான் கல்யாணம் பண்ணீ வெக்கறேன்”
”அண்ணே வாங்க. இதோ இவந்தான் லைப்ரெரிகாரம்மாவை கல்யாணம் பண்ணியிருக்கான். இவனைக் கொன்னுட்டு நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” நான் வாட்ச்மேனின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் செல்லத் தொடங்கினேன். பக்கா வெறி கொண்டு என் மேல் பாய்ந்தான். எனக்கும் பக்காவுக்கும் வாட்ச்மேனுக்கும் கடும் போராட்டம் அந்த மணலில் நடந்தது.
பக்காவும் வாட்ச்மேனும் என்னை வீட்டுக்கு இழுத்து வந்து உள்ளே தள்ளி விட்டார்கள். பக்கா வீட்டை உள்ளிருந்து பூட்ட முயன்றபோது நான் ஜெட்லீ போல டைவ் அடித்துத் தடுத்தேன். எங்கள் இருவருக்கும் இடையே மீண்டும் துவந்த யுத்தம் நடந்தது. அண்டா உருண்டது.
காலையில் நான் தும்பைப்பூ போன்ற வெள்ளுடை அணீந்து கோர்ட்டுக்குத் தயாராகி வந்த போது பக்கா செம்பருத்திப் பூச்செடி ஓரம் லுங்கியை இழுத்துப் போர்த்தியபடி தூங்கிக் கொண்டிருந்தான்.
- தோழர் இரா. முருகவேள் – கோவையில் வசிக்கிறார். இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு கட்டுரை தொகுப்புகள் மற்றும் இரண்டு மொழிபெயர்ப்புகள் ஆகியன வெளிவந்துள்ளன. தொடர்புக்கு – iramurugavel@gmail.com
மாற்றங்கள்…
அருமை… கதை சொன்ன விதம் சூப்பர்…
நல்ல எழுத்து…
இரா. முருகவேள் அய்யாவின் சிறுகதை வாசிக்கக் கிடைத்ததற்கு நன்றி.