ஹரீஷ் கணபதி
மூர்த்தி மெல்லக் கண்விழித்து திரும்பிப் படுக்காமலேயே தலையை உயர்த்தித் தலைமாட்டிலிருந்த அலாரக் கடிகாரத்தைப் பார்த்தார். இன்று விழிப்பு அரைமணி தாமதம். அவரைக் கேள்வி கேட்க யாருமில்லை என்றாலும் தாமதம் குறித்துச் சஞ்சலமாயிருந்தது.
காலையில் ஒரே ஒரு ஆளுக்குப் பாலைக் காய்ச்சி காபி கலந்து அதை ஆற அமரக் குடித்து முடிப்பதற்குத் தோராயமாக நாற்பது நிமிடங்கள் ஆகின்றன அவருக்கு. வேகமாக வேலைகளைச் செய்ய முடிவதில்லை என்பது ஒருபுறமிருந்தாலும் நிதானமாகச் செய்வதை அவர் மிக விரும்பினார் என்பதுதான் பிரதான காரணம்.
காபியைச் சொட்டுச் சொட்டாய் உறிஞ்சி அதன் அடிநாக்குக் கசப்புச் சுவையை அனுபவித்து மிடறு மிடறாக விழுங்குகையில் தனக்கு வாய்த்த அன்றைய முழுநாளுக்கானப் பரபரப்புகளேதுமற்ற தனிமையையும் சொட்டுச் சொட்டாய் அசைபோட்டு அதன் விளைவாக உள்ளே சுரக்கும் இனம் புரியாத நிதானத்தை உள்வாங்கி ரசித்தபடி தன்னை அந்நாளுக்குத் தயார்படுத்திக் கொள்வது அவர் வழக்கம். ஆனால் இன்றைக்கு அதற்கான நேரம் தாமதமாய் எழுந்ததில் கடந்து விட்டிருந்தது.
மெல்ல எழுந்து வாசலுக்கு வந்து கீழே கிடந்த நாளிதழை எடுத்தவர் கைகளில் ஈரம் பிசுபிசுத்தது. முந்தைய நாள் பெய்த மழையில் வாசலில் தேங்கியிருந்த நீரில் பேப்பரைப் போட்டுவிட்டுப் போயிருந்தான் பையன்.
கையில் எடுத்த பேப்பரை லேசாக நீவினார். கையோடு கிழிந்து வந்தது. அதை அப்படியே அலுங்காமல் எடுத்துக்கொண்டு போய் மேசையின் மீது விரித்து வைத்தார். அறைக்குள் சென்று அயர்ன் பாக்ஸை எடுத்து வந்தார். ப்ளக்கைச் செருகி ஸ்விட்ச்சைத் தட்டப் போனவர் சட்டென்று நின்றார். ஏதோ யோசனை வந்தவராக அயர்ன் பாக்ஸைப் பேப்பரின் நடுவே வைத்தார். மீண்டும் உள்ளே சென்று டேபிள் பேனை எடுத்து வந்து ப்ளக்கில் செருகி அதை ஓட விட்டார். ஈரமாகியிருந்த முனையில் காற்றுப் படுகிறதா என்று சில வினாடிகள் நின்று பார்த்து உறுதி செய்துகொண்ட பின் நகர்ந்தார்.
முகத்தைத் துடைத்தபடியே வந்தவர் பேப்பர் காய்ந்து விட்டதாவெனப் பார்த்தபடியே போனை எடுத்தார். பெயர்ப்பட்டியலில் சென்று பெயரைத் தெரிவு செய்யாமல் நம்பர்களை அழுத்தத் துவங்கினார். எல்லா எண்களும் மொபைலில் சேமித்து வைக்கப்பட்டிருந்தாலும் முக்கியமான எண்களை இப்படி நினைவிலிருந்து அவ்வப்போது எடுத்து உபயோகப்படுத்துவது மனதையும் மூளையையும் துருப்பிடிக்காமல் வைக்க உதவும் முயற்சிகளுள் ஒன்று என்பது அவர் நம்பிக்கை.
“ஹலோ…. நான் தான்…. ஆமா.. இன்னிக்கு கொஞ்சம் லேட்டாயிப் போச்சு. ச்செரி. இதுக்கு மேல நான் கெளம்பி வந்தா வேஸ்ட்டு. நாளைக்கி பாப்போம். இல்ல சாயந்திரம் ஸ்டேஷனுக்கு வந்தின்னா பாப்போம்… சரி வெக்கிறேன் என்றபடி போனை அமர்த்தினார்.
அப்போது தான் போன் திரையில் மணி பார்த்திருந்தாலும் அது மனதில் பதியாமல் கடிகாரத்தைப் பார்த்தார். தூங்கி எழும் நேரம் சற்றே தாமதமானாலும் இது ஒரு தொல்லை. வழக்கமாய் நடைப்பயிற்சிக்குக் கிளம்பும் நேரத்தைவிடத் தாமதம். நடைப்பயிற்சி முடிந்து வீட்டுக்குத் திரும்பி வரும் நேரத்தை விடவும் சற்றே முந்தைய நேரமென்பதால் இது அவருக்குச் சற்றே அசவுகரியமாயிருந்தது.
நாளையிலிருந்து நேரத்துடன் எழுந்திருக்க வேண்டும் என்று தனக்குத்தானே சொல்லியபடி குளிக்கப் போனார். காற்றில் பேப்பர் படபடத்தபடியிருந்தது.
*
வெயில் ஏறத் துவங்கியிருந்தது. அவருடைய கணக்குப்படி வியர்வை பெருகி கழுத்துப் பிசுபிசுப்பில் சட்டைக்காலர் நனையத் துவங்கும் முன் நெசவாளர் காலனி பிள்ளையார் கோவிலை அடைந்துவிட வேண்டும். அதற்கேற்றவாறு வேகத்தில் நடந்து கொண்டிருந்தார்.
வள்ளலார் பள்ளியின் நுழைவாயிலில் நட்டு வைக்கப்பட்டிருந்த கற்களின் நடுவே புகுந்து வெளியேற முயன்றவர் சட்டென்று நின்றார். ஆறுமுகத்தப்பா எதிரே வந்து கொண்டிருந்தார். இவரைப் பார்த்து விட்டிருந்தார். கையாட்டியபடியே மைதானத்தின் மற்றொரு முனையில் ஸ்டேட் வங்கியின் அருகிருந்து இவரை நோக்கி வரத்துவங்கினார். அவரோடு நின்று ஓரிரு வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று நினைக்கும் போதே மூர்த்திக்குச் சலிப்பாக இருந்தது.
தன் நேரம் வேறு லேசாகத் தப்பிப் போவதைத் தவிப்புடன் உணர்ந்தவாறே ஆறுமுகத்தப்பாவின் வருகையை எதிர்கொள்ளும் விதமாய் வேகத்தை மாற்றி நடக்கத் தொடங்கினார். ஆறுமுகத்தப்பா என்ற பெயர் அவர் பையன் ஆறுமுகம் என்பதால் அவருக்கு வாய்த்திருந்தது. அவருக்கு மேலும் இரு மகன்கள் இருந்தாலும் முதல் மகனின் பெயராலேயே அவர் அழைக்கப்பட்டார்.
வருடக்கணக்கில் அழைத்துப் பழக்கமானதால் அவரது உண்மையான பெயர் என்னவென்பது கூட சட்டென்று மூர்த்திக்கு ஞாபகத்தில் வர மறுத்தது. மகனிடம் போனில் பேசும்போது கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் எத்தனையாவதோ முறையாக.
ஆறுமுகத்தப்பா அருகில் வந்து விட்டிருந்தார். “இன்னா சார்? இது வாக்கிங் டைமில்லையே? வெயில்ல எங்க போயினுருக்கீங்க?” என்றார் புன்னகைத்தபடி. அவர் கேள்வி எதார்த்தமாய் இருந்தாலும் மூர்த்திக்கு லேசாகக் குத்திக் காட்டுவது போலிருந்தது.
“ஆமா இன்னிக்கு கொஞ்சம் லேட்டாயிருச்சு எளுந்திருக்க. வாக்கிங்கு போவல. கோயிலுக்கு போயினுருக்கறேன்” என்றார் வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன். பேசிக் கொண்டிருக்கும் போதே சென்னையில் அத்தனை வருடங்கள் இருந்தபோது சுத்தமாய் மறந்து விட்டிருந்த ஊர் பாஷை எப்படி ஊருக்கு வந்தவுடன் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் அப்பாவைக் கண்டதும் ஓடிவந்து மேலேறிக் கொள்ளும் குழந்தை போலத் தன்மீது வந்து ஏறிக்கொண்டது என்னும் ஆச்சரியம் மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
“பசங்க என்ன சொல்றானுக” என்றார் ஆறுமுகத்தப்பா. பேச்சை வளர்ப்பதில் துளியும் விருப்பமில்லை மூர்த்திக்கு. சங்கடமாய்ப் பார்த்தார். எதுவும் சொல்ல முடியவில்லை. “நல்லாகுறானுங்க.” என்றவர் மேலதிகமாகக் கிடைத்த இருநொடி இடைவெளியைப் பயன்படுத்தி “சரி வெயில் ஏறுறதுக்குள்ள நான் போயிட்டு வந்துர்றேன்” என்றுவிட்டு ஆறுமுகத்தப்பாவின் ஆமோதிப்புக்காக அவர் முகத்தைப் பார்த்தார்.
அவர் ஆமோதிப்பாய்த் தலையசைத்தபடி “வெயில் ஏறுதே கொடையாச்சும் எடுத்துனு வரலாமில்ல? சீக்கிரம் போயிட்டு வாங்க” என்றபடி தலையாட்டிக் கொண்டே நகர்ந்தார். சற்றுமுன் அவர் தன்னைக் குத்திக் காட்டுவதாக நினைத்துக் கொண்டதைப் பற்றித் தன்னையே கடிந்து கொண்டபடி நடையில் வேகத்தைக் கூட்டினார் மூர்த்தி.
சாலையைக் கடந்து நெசவாளர் காலனிக்குள் நுழைந்தவர் மேல் சட்டென்று குளிர்ச்சி மூடியது. அந்தச் சாலை எப்போதுமே இருபுறமும் சூழ்ந்த மரங்களால் குளிர்ச்சியாகவே இருக்கும். திரும்ப வரும்போது மரத்தடியில் சிறிது நேரம் நின்றுவிட்டுப் போகலாம் என்று எண்ணிக் கொண்டார்.
மேலும் இரண்டு நிமிடங்கள் நடந்ததும் பிள்ளையார் கோவிலை அடைந்தார். அவருக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்தே அந்தப் பிள்ளையார் கோவிலை அருகிலுள்ள காலியிடத்துடன் சேர்த்துப் பார்த்துப் பழகிவிட்டு திடீரென்று ஒருநாள் அந்தக் காலியிடத்தில் ஒரு சிவன் கோவில் முளைத்ததை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. அது நடந்து பல வருடங்களான பின்னும் இன்னமும் அவர் அந்தக் கோவிலினுள் ஒருமுறை கூட நுழைந்ததில்லை.
மெல்லப் பிள்ளையார் கோவிலில் நுழைந்ததும் கோவிலுக்கே உரிய வாசனை வந்து அவர் மீது கவிந்தது. கூட்டம் அவ்வளவாயில்லை. சற்றுநேரம் சுற்று முற்றும் வேடிக்கை பார்த்துவிட்டு சன்னிதிக்கு முன்நின்று கும்பிட்டு விட்டுத் திரும்பியவர், தன் தெருமுனையில் இருக்கும் பாலாஜி கோவிலுக்குள் நுழைவதைப் பார்த்தார். ஒருநொடி யோசித்தவர் சட்டென்று அங்கிருந்து அகன்று கோவிலின் பக்கவாட்டுக் கதவின் வழியே வெளியேறினார்.
மரத்தடியில் இளைப்பாறி விட்டுப்போகும் திட்டத்தை விடுத்து வேகமாகப் பிரதான சாலைக்கு வந்தார். வள்ளலார் பள்ளி மைதானத்தின் திசையில் சாலையைக் கடக்க எத்தனித்தவர் மனதை மாற்றிக் கொண்டவராக மறுபக்கம் திரும்பி காந்தி நகரை நோக்கி நடக்கத் துவங்கினார். எதிரில் தெரிந்தவர் யாரும் வந்து விடாமலிருக்க வேண்டுமென்ற யோசனையோடு.
*
பால்கனியின் சுவற்றுக் கட்டையில் முன்னோக்கிச் சாய்ந்து நின்று சற்றுத் தொலைவில் வாகனங்கள் பரபரப்பாக விரைந்து கொண்டிருந்த மேம்பாலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவரின் தோளை சுப்ரியா மெல்லத் தொட்டாள். திரும்பியவரிடம் “காபி” என்று கோப்பையை நீட்டிப் புன்னகைத்தாள். “எங்கம்மா அவன்?” என்றார் கோப்பையை வாங்கியபடியே.
“வெளிய போய்ட்டாருப்பா. கோவமா இருக்காரில்லையா? சொல்லல. கோவம் குறைஞ்சதும் வந்துடுவார்” என்றாள்.
“நீ அவனை ரொம்ப செல்லம் குடுத்து கெடுத்து வெச்சிருக்கம்மா”
சிரித்தாள். “அப்பா நான் ஒன்னு கேக்கவா?”
“கேளும்மா. அவன் கேட்டதையே நீயும் கேக்காத. வேற ஏதாவது கேளு”
“இவ்ளோ கோவப்படறாரு. சத்தம் போடறாரு. நீங்க எப்படி இவ்ளோ கூலா இருக்கீங்க?”
சிரித்தார். சமீபத்துல அமேசான் ப்ரைம்ல “a beautiful day in the neighbourhood”-னு ஒரு படம் பாத்தேன்” என்றார்.
பதிலுக்குச் சிரித்தபடி முறைத்தாள். “I am not a perfect person. I have a temper.” சொல்லி நிறுத்தினார். “I choose how to respond to that anger” சுப்ரியா அந்த வாக்கியத்தை நிறைவு செய்ததும் இருவரின் புன்னகைகளும் உரசிக் கொண்டன.
சிறிய அமைதி. பின் சுப்ரியா கேட்டாள். ரியாக்ட் பண்றதும் பண்ணாததும் முழுக்க உங்க சுதந்திரம்ப்பா. பட் அவர் கேக்கறதுல நியாயமில்லன்னு நினைக்கிறீங்களா?”
அமைதியாக தேநீரை ஒரு மிடறு விழுங்கியவர் சொன்னார்.
“அவன் கோவத்துல நியாயம் இருக்கும்மா”
சில வினாடிகள் அமைதி நிலவியது.
“I don’t understand. இதுவரைக்கும் இந்த விஷயத்துல நான் தலையிட்டதில்ல. இப்ப நீங்க சொன்னதால கேக்கறேன். அவர் கோவத்துல நியாயம் இருக்குன்னு நீங்களே ஒத்துக்கறீங்க. அப்புறம் அவர் சொன்னதை செய்யறதுல என்னப்பா பிரச்னை? That ll solve all our problems. வந்துருங்களேம்ப்பா பேசாம இங்கேயே” என்றாள்.
பதில் சொல்லாமல் பார்வையை விலக்கித் தொலைவில் பார்த்தார்.
மீண்டும் அவர் தோளைத் தொட்ட சுப்ரியா திரும்பிய அவர் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தாள்.
வறண்ட புன்னகை ஒன்றை உதிர்த்தவர் “I need my space” மா என்றார். அந்தக் குரலிலும் அவர் கண்களிலும் இதற்கு மேல் இதைப்பற்றிப் பேச வேண்டாமே” என்கிற கெஞ்சல் தொனித்தது. பெருமூச்சொன்றை விடுத்தவள் மௌனமாக அவர் கையிலிருந்த தேநீர்க் கோப்பையை வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்றாள்.
*
அதிகாலை மூன்றரை மணிக்குப் பார்க்கும் தெரு முற்றிலும் மாறுபட்டிருந்தது.
பகலின் துவேஷங்கள், வன்மங்கள், கோபங்கள் அனைத்தையும் துறந்து விட்டுத் தெரு ஒரு சிறுகுழந்தை போல் மலர்ந்த முகத்துடன் உறங்குவதாகத் தோன்றியது. இரவில் பெய்திருந்த லேசான மழையினால் நனைந்திருந்தது தெருவின் அழகை மேலும் கூட்டியது.
வீட்டைப் பூட்டிக்கொண்டார். தன் டிவிஎஸ் எக்ஸெல்லையும் சத்தம் வராமல் ஸ்டாண்டை விடுவித்து மெல்லத் தள்ளிக்கொண்டு தன் தெருவிலிருந்து பிரதான சாலைக்கு வந்தவர் வண்டியை உயிர்ப்பித்து ஏறி அமர்ந்தார்.
அரசு ஆஸ்பத்திரி பேருந்து நிறுத்தத்தை நோக்கி வண்டியைச் செலுத்தினார். “இங்கதான் நாங்க பஸ் ஏறுவோம் காலேஜுக்கு. முக்காவாசி புட் போர்டுதான். பதினெட்டு பத்தொம்பதுன்னு ரெண்டே பஸ் தான். பதினெட்டு ஒட்டப்பட்டி வழியாப் போவும் பத்தொம்பது வெண்ணாம்பட்டி வழியா போவும்.”
முதன்முதலில் சென்னையிலேயே பிறந்து வளர்ந்த சங்கரியை ஊருக்கு அழைத்துக் கொண்டு வந்து சுற்றிக் காட்டியது ஞாபகம் வந்தது. புன்னகைத்துக் கொண்டார். மெல்ல வண்டியை நகர்த்தி பாரதிபுரம் டெப்போ, செந்தில் நகர், என்று நகர நகர ஒவ்வொரு இடத்திலும் சங்கரியை நிறுத்தி நிறுத்தி விவரித்துக் கொண்டே வந்தது ஞாபக அடுக்குகளில் பூக்கப்பூக்க அவரின் புன்னகை பெரிதாகிக் கொண்டே போனது.
ரிட்டயர் ஆனதும் இந்த ஊரிலேயே வீடு கட்டிக்கொண்டோ வாங்கிக்கொண்டோ வந்து இருந்துவிட வேண்டும் என்று சங்கரியிடம் எத்தனையோ முறை பேசியிருக்கிறார். அதைச் செய்தும் காட்டி விட்டார். ஆனால் சங்கரி போன பின்தான் அதைச் செய்ய முடிந்தது என்பது குறித்துச் சின்ன சஞ்சலம் இருந்தாலும், இது மாதிரியான அதிகாலை உலாக்களில் ஊர் அவற்றையெல்லாம் துடைத்தெறிந்து விடும்.
யோசனைகளில் தொலைந்தவாறே அனிச்சை செயலாய்ச் சாலையில் கவனம் வைத்தபடி ஒட்டப்பட்டியை நெருங்கும் சமயம் பாக்கெட்டில் இருந்த மொபைல் அதிர்ந்தது. இந்த நேரத்துல யாரு? என்று புருவம் சுருக்கியபடி மொபைலை எடுத்துக் காதுக்குக் கொடுத்தவர், அடுத்த நிமிடம் முகம் மாற, வண்டியைத் திருப்பி, அரசு ஆஸ்பத்திரியை நோக்கி வண்டியைச் செலுத்தத் துவங்கினார்.
*
மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. வெயிலும் கூடவே இருந்ததால் கிரவுண்டில் மேட்ச் தடையின்றி நடந்து கொண்டிருந்தது.கேலரியில் அமர்ந்து மேட்சைப் பார்த்துக் கொண்டிருந்தார் மூர்த்தி. கிரவுண்டின் மறுமுனையில் மதில் சுவற்றையொட்டி வாக்கிங் போகிறவர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.
அருகில் வைத்த குடை இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்தவர் பார்வையில் சைக்கிள் ஸ்டாண்டில் தன்னுடைய எம்-80 யை நிறுத்திக் கொண்டிருந்த ரகு பட்டார். மொபைலில் அழைத்துக் கேட்கவில்லை. இருந்தும் தான் இங்கிருப்போம் என்று தெரிந்து தான் வந்திருக்கிறார் என்பது மூர்த்திக்குத் தெரிந்தது.
மெல்ல கேலரியின் படியேறி வந்தவர் மூர்த்தி அமர்ந்திருந்த படிக்கு அடுத்த படியில் அமர்ந்தார். எதுவும் பேசாமல் மேட்ச்சைப் பார்க்கத் துவங்கியவர், சற்று நேரம் சென்றதும், “அடச்சை. எப்படி கேட்ச் விடறான் பாரு. அந்த ஒசரமா இருக்கற பையன் நல்லாதான் போடறான். இப்டி பீல்டிங் பண்ணாக்கா அவுனும் இன்னாதான் பண்ணுவான்” என்றார்.
அதற்குள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் விழுந்து கொண்டிருந்த தூறல் வலுத்து மழை பெரிதாக, விளையாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் கேலரியை நோக்கி ஓடிவந்து இவர்கள் அமர்ந்திருந்த மூலைக்கு மறுமூலையில் தஞ்சமானார்கள்.
“மழை வராப்ல இருக்குதுனு தெரியுதில்ல? இன்னாத்துக்கு வண்டிய எடுத்துனு வந்த?” என்றார் ரகுவைப் பார்த்து.
“ப்ச்…” என்பதே பதிலாக வந்தது.
“உடம்பு இப்ப எப்படி இருக்கு? சோறு தின்ன முடியுதா?”
பதிலில்லை.
“ச்செரி… நான் கிளம்பறேன்”
“அட உக்கார்ரா. இவன் வேற இம்சைய கூட்டிகினு”
எழுந்த மூர்த்தி அமர்ந்தார்.
“இந்த வாட்டி ஊருக்கு போனப்பவும் உன் மருமவ உன்னைய அங்கயே வந்துர சொன்னாளாம்ல”
“ஆமா”
“இன்னா முடிவு பண்ணிருக்கற”
“உனுக்கு தெரியாதா?”
“அப்புடி இங்க இன்னாத்தக் கண்டுட்டன்னு இந்த ஊர விட்டு போவ மாட்டேன்னு அடம் புடிக்கிற?”
“………”
“அது சரி. நீ இன்னா என்னைய மாதிரியா”
“இன்னாடா உளர்ற”
“பொண்டாட்டி இல்லாம எப்புடி இருக்கறதுன்னு தெரியாம மருந்த குடிச்சிட்டு போய் சேந்துரலாம்னு நான் பாத்தா, நீ இன்னாடான்னா வாக்கிங் போறதென்ன, வாய்க்கு ருசியா விதவிதமா உனக்கு நீயே சமைச்சுக்கறதென்ன? மொபைல்ல படமா பாத்துத் தள்றதென்ன? புக்கா வாங்கிக் குவிக்கறதென்ன? எனுக்கு இன்னாவோ நீ உன் பொண்டாட்டி போறதுக்காகவே காத்துனு இருந்த மாதிரிதான் தெரிது”
பெருமழை ஓய்ந்து சிறு தூறல் விழுந்தபடி இருக்க, விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மேலும் தொடர முடியுமா என்று பார்ப்பதற்காக மைதானத்தில் இறங்கி பிட்ச்சை நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர்.
மெல்ல எழுந்தார் மூர்த்தி. “அதுசரி. உனக்கு இன்னா தோனுதோ நீ பண்ற. எனுக்கு இன்னா தோனுதோ நான் பண்றேன். மழ திரும்ப பெருசாவறதுக்கு முன்ன வூட்டுக்கு கெளம்பற வழியப்பாரு” என்று நிதானமான குரலில் அழுத்தமாய்ச் சொல்லிவிட்டு மெல்ல ஒவ்வொரு படியாய் இறங்கத் துவங்கினார்.
அவருடைய அமைதி ரகுவை மேலும் உசுப்பியது. “உன்ன மாதிரி மனசாட்சி இல்லாம என்னால எல்லாம் இருக்க முடியாது. உங்கிட்ட போய் கேட்டேன் பாரு. இனிமே வந்தன்னா ஏன்னு கேளு” என்று மூர்த்திக்குக் கேட்பது போல் சத்தமாய்க் கூறினார்.
இறங்கிக் கொண்டிருந்த மூர்த்தி இவர் சொன்னது காதில் விழுந்து விட்டதென்பதை ஆமோதிப்பதாய்த் திரும்பிப் பார்க்காமலே கையை உயர்த்திக் காட்டியபடி இறங்கினார்.
ரகு அங்கேயே அமர்ந்து மூர்த்தியின் உருவம் மெல்லப் படியிறங்கி மறைவதைப் பார்த்தபடி இருந்தார். மீண்டும் மழை வலுக்கத் துவங்கியிருந்தது.
*
காலையில் இந்நேரத்தில் யார்? வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டு இண்டக்ஷன் அடுப்பை நூறில் வைத்துவிட்டுச் சமையலறையிலிருந்து வெளிவந்து பார்த்த மூர்த்தி, மீண்டும் உள்ளே புகுந்து கொண்டார். நூறில் இருந்த அடுப்பைப் பெரிதாக்கி அந்த ஒரு டம்ளர் பாலைக் கொதிக்க விட்டு அணைத்தவர் பிரிட்ஜிலிருந்து இன்னொரு டம்ளர் பாலை எடுத்துக் கொதிக்க வைத்தார்.
இரண்டு டம்ளர்களில் காபியுடன் வெளிவந்தவர் டீபாயில் ஒரு டம்ளரை வைத்து விட்டு இன்னொரு டம்ளரை உறிஞ்சிக் குடிக்கத் துவங்கினார். மற்றொரு டம்ளரை ரகு எடுத்துக் கொண்டார். காபி தீர்ந்ததும் ரகு வாசலில் சென்று காத்திருக்க, மூர்த்தி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் வரவும், இருவரும் சேர்ந்து நடக்கத் துவங்கினர்.
ஒரு மணிநேரம் வார்த்தைகளற்ற நடை. முடிந்து லேசாக வியர்த்து இருவரும் ரயில் நிலைய பிளாட்பாரத்தின் முனையில் நுழைந்து வழக்கமாய் அமரும் பென்ச்சில் அமர்ந்ததும், இரண்டு நிமிடங்கள் தொடர்ந்த மௌனம். எழுந்து போன ரகு, கையில் இரண்டு பேப்பர் கப்புகளுடன் வந்தார். ரயில் நிலையத்தின் வி.எல்.ஆர் ஸ்டாலில் போடப்படும் ஏலக்காய்த் தேநீர். எப்போதெல்லாம் இந்தப் பக்கம் வாக்கிங் அமைகிறதோ அப்போதெல்லாம் பழக்கம்.
தேநீரை மெல்ல உறிஞ்சத் துவங்கிய ரகு “சாரிடா” என்றார்.
“அதெல்லாம் இன்னாத்துக்கு”
“அதுசரி அன்னிக்கி நான் மருந்தக் குடிச்சிட்டு ஆஸ்பத்திரில அட்மிட்டானப்ப என் புள்ள உனக்கு போன் பண்ணி முக்கா மணிநேரம் கழிச்சுதான் வந்தியாமா? உன் வூட்ல இருந்து ஆசுபத்திரிக்கி பத்து நிமிசம் கூட ஆவாதே? அவ்வள காலைல இன்னா பண்ணினு இருந்த?”
“சும்மா வண்டியெடுத்துகினு அப்புடியே ஒட்டப்பட்டி போயி காலேஜாண்ட போயிட்டு, வெண்ணாம்பட்டி வழியா திரும்பி வரலம்னு போனேன்.”
ரகு அமைதியாக இருந்தார். பின்தொடர்ந்தார்.
“சங்கரி ஞாவகம் வந்துருச்சாக்கும்”
இப்போது மூர்த்தி அமைதியாக இருந்தார்.
அவர்கள் இருவருக்கிடையே இருந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு அந்த ஸ்டேஷனில் நிற்காத ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் தடதடத்து மறைந்தது.
மேலும் சில நிமிடங்கள் அமைதிக்குப் பின் சொல்லி வைத்துக் கொண்டாற் போல் இருவரும் ஒன்றாக எழுந்து ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்தனர். மௌனத்தை மூர்த்தி கலைத்தார்.
“இன்னிக்கு பூண்டு குழம்பு வெக்கலாம்னு இருக்கேன். வரியா?”
“வேற என்ன பண்ண போற?”
“உனக்கு என்ன வேணும்?”
“உருளைக்கிழங்கு காரப்பொரியல் செஞ்சு வெய்யி. ஒரு ரெண்டு மணிக்கா வரேன்”
“சரி”.
ரகு மெல்ல ஸ்டேஷனின் பக்கவாட்டிலிருந்த ரயில்வே குடியிருப்புச் சாலையின் மங்கலான வெளிச்சத்தில் திரும்பி நடக்கத் துவங்கினார்.
அவரையே பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி மெல்லக் குடையை விரித்தார்.
மழை மீண்டும் லேசாகத் தூறத் துவங்கியிருந்தது.
***
Inspired by : The Big Bang Theory Season 10 Episode 16 : The Allowance evaporation
ஹரீஷ் கணபதி
தொடர்புக்கு : harishganpat@gmail.com