1. சுண்ணாம்பு பூசிய தளத்தில் குத்திட்டு நிற்கும் கூர்கள்…
பருவ நிலை மழைபொழியக் கூடாரமிடும்
வனத்தில் இலையுதிர்வுகள் பழுத்து உழல்கின்றன
மயில்கள் நடமாடும் தடங்கள் மறைந்து
வேலியோரங்களில் புதர்களின் வனப்பு
முட்டுயர்ந்திருப்பது காற்றாடக் காண இளமைதான்
உழுது வாரப்பட்ட நிலத்திலிருந்து
நெடுங்கூதல்களை ஊடுருவும் நெற்றியில்
தோல் பதனிட்டு உட்கார்ந்திருக்கிறது
உதடுகள் காயும் வறட்சி
மாறுதலுக்காக இடம் மாறி
உட்கார்ந்திருக்கிறேன்
உடல் மொத்தமும் சுருங்கிய நிலையில்
வெள்ளை பூத்த
ஓர் பழுத்த இலையுதிர்வில்
தலைப்பாகத்தில் கிழிந்திருக்கிறது….
*
2. ஒரு சிறிய கோலத்தை வரைந்து முடித்தவள்
மினாரைப் போன்ற கோபுரமொன்றினை எழுப்புகிறாள்
செதில்களாக முளைக்கின்றன
உடையாத நெல்மணிகளையொத்த
டேபிள்ரோஸ் இலைகள்
கோபுரத்தின் உச்சியில்
பெருநாளைப்போன்ற பண்டிகைக்கோலத்தில்
ஒட்டிக்கொள்கிறது பௌர்ணமி
முழுக்கச் சிவந்துவிட்ட ஒளிப்பிலிருந்து
பிரிகிறது
வேம்பிலையைப் போன்ற
சிறகொன்று
மேலும் அங்கிருந்து கொடியாக நீளும்
கிளைத்துண்டுகளும்
முற்றுப்புள்ளிகளும்
*
இரவு நீள நீள உதிர்கின்ற
மெஹந்திக் கோடுகள்
உளுத்த மரத்தூள்களைப் போல
படுக்கை விரிப்பெங்கும் சிதறிக்கிடக்கின்றன
பொழுது புலரும் வரையும்
உறங்காத விழிகளில் நெளிந்து கொண்டிருக்கிறது
குருட்டுப் பாம்பொன்று…
*
ஒரு சிறிய கோலத்தை வரைந்து முடித்தவள்
அதற்கு வண்ணமிடுகிறாள்
முற்றிலும் சிவப்பு
பண்டிகை வாசல்படிகளில்
ஓரமாக இழுத்துவிட்டிருக்கும்
இரட்டைக்கோடுகளைப் போல
உள்ளங்கை நரம்புகள்…
*
எத்தனை கூறுகளாக்க முடியுமோ
அவ்வளவு கோடுகள்
குறுக்காக மேலும் குறுக்காக
வரையத்தெரியாதவள் கைக்கு
மெஹந்தி கோணல்.
*
3. ஆண்/பெண் முகமூடி
ஆண்/பெண் முகமூடி
உடுத்தும் அத்தனையோடும் முகமூடியொன்று
தவறிப்போயிருப்பது
மறக்கக் கூடாததை மறந்தது போல
போகிற வழியில் வாங்கிக் கொள்ளலாம்
முதலில் வாங்கியது போலவே
அதே நிறமிருந்தால் நல்லது
இல்லாவிட்டாலும்
முகமூடி ஸ்டேண்டில்
முதலாவதாக தொங்கும் கண்ணாடிப் பைக்குள்
முன்பு வாங்கியது போன்ற
மாஸ்க்கின் காதுகள்
அதே நிறமில்லை
விலைகொடுப்பதற்குள்
தட்டுப்பட்டுவிட்ட
முகமூடியின் மையத்தில்
மூக்குவரை இருபக்கங்களையும்
இணைத்துக் கோடு
மூக்கு மட்டும் பிடித்தவாறு
தாடைவரை ஆடுகின்ற பிடிப்பில்லாத இடைவெளி
பழைய மாஸ்க்
உதடுகள் பிதுங்கும் வரை
பிடித்தம்
மையத்தில் கோடு இல்லை.
***
க.சி.அம்பிகாவர்ஷினி – மதுரையில் வசிக்கிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு – தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகக்கூட்டம் எனும் கவிதை நூல் வெளியாகியுள்ளது.