ஜீவ கரிகாலன்
ஒளியாண்டு வேகத்தில் பயணித்து எட்டிப்பிடித்த படங்களில் தெரியாத நிகழ்காலத் துகளொன்று, ஊடுருவல் பாதையைத் தெரிந்து குதித்துப் பார்த்தது.. பயணத்தின் மறுமுனையைக் கவ்வுகையில் இடறிச் சிதறிவிழ ஆரம்பித்த இடங்களில்..
- எத்தனை இறைஞ்சிக் கேட்டும் உணவளிக்க மறந்தவனைப் பழிவாங்கச்சொன்ன தனது மரபணுவின் ஆணையை நிறைவேற்ற அவனது சேகரத்தில் இருந்த காமிக்ஸ் ஸ்ட்ரிப்புகளைப் புரட்டிப் பார்த்த அந்த பூனை சன்னலின் வெளியே தெரியும் பச்சை நிற ஒளிக்குமிழைப் பார்த்தது.
- முன்னர் அரச மாளிகையாக இருந்த நட்சத்திர அந்தஸ்து இல்லாத ஆனால் அதற்கு இணையான அறை வாடகை கொண்ட ஒரு ஹெரிட்டேஜ் விடுதியில் நானூற்றைம்பது ஆண்டுகளுக்குப் முன்னால் தான் கொலைசெய்யப்பட்ட மாளிகைக்கு அவள் தன் ஆண் நண்பரோடு வருகையில் அவளுக்கு எந்த ஞாபகமும் இல்லை.. பால் கொட்டியது போல கவிழ்ந்திருந்த மேகமூட்டத்திற்கு மேல், ஊதிவிட்ட பாலாடை போலத் தெரியும் ஓசோன் படலத்தைக் கிழித்துக்கொண்டு கடற்கரையோரம் இறங்கியது சோப்புக்குமிழ் போன்ற ஒன்று அவள் அதைப் பார்க்கையில்.
- சாமத்தில் யாரும் வெளியே போகக்கூடாது என்கிற மலையுச்சி ஆசிரமத்தின் கட்டுப்பாட்டை தன் வயிற்றுப்போக்கை காரணம் காட்டி விலக்கம் பெற்றான். நூறடிக்குள் பேண்டு விடுமாறு சொன்ன காவல்காரத் துறவியை பெயரளவில் ஆமோதித்தாலும், சாணிக்காகித எழுத்தையே வாசிக்குமளவு இருக்கும் நிலவொளியில்கூட நான்கெட்டுகள் போனால் என்னவென்று கடந்துசென்று குத்த வைத்தான். முறுக்கி வைக்கும் ஈயத்தட்டுகள் போல திண்ணமாய் ஒலிக்கும் பாறைகள் மேல் பட்டுத்தெறிக்கும் ஓடையில் கால் நனைத்தால் என்ன என்று கைகளில் கொண்டு சென்ற ஃபேண்டா பாட்டிலை அங்கேயே போட்டுவிட்டு குளிர் எனும் ஆயுதத்தை உணராத அவன், கால் நனைக்கும்போது கத்தியிருக்க வேண்டும். திடீரென தன் சப்தங்களை நிறுத்திக்கொண்ட ஆந்தைகளால் நிசப்தமாகிப்போன காட்டில் மின்மினிப்பூச்சிகளை எதனையோ சுற்றி வட்டமடித்தபடி மேலிருந்து கீழிறங்கியது.
- அகண்ட டயர்களைக் கொண்ட சொகுசு வாகனத்தை ஒரு பாலைவனத்தின் சாலை ஓரத்தில் ஓரங்கட்டிவிட்டு, புதிதாகச் சுற்றிப்பார்க்க வந்திருக்கும் அந்நண்பர்களுக்கு குன்று போன்ற மணல்மேடுகளைக் காண்பித்தான். பருமன் மிக்க அவனை மணல்மேல் ஏற முடியாது என பரிகாசம் செய்ய, ஒன்பதாம் வகுப்பு ஓவிய வாத்தியாரை நினைத்தபடி பற்களைக் கடித்தபடி அங்கிருக்கும் உயரமான மணல்மேட்டில் விருட்டென்று ஏறினான். யாரும் எதிர்பாரா வண்ணம் மணல்மேட்டின் உச்சியை அடைந்ததும், கொண்டாடத் தெம்பில்லாதவன் மூச்சுவாங்கியபடி கைகளை அசைக்க, கீழிருந்த நண்பர்கள் “குதி குதி.. சீக்கிரம் இறங்கு” என்று கத்தினார்கள். அவர்கள் நினைத்த மணற்புயல் போல் இல்லையென்றாலும் விசித்திரமான மணல்களால் மூடிய ராட்சத வெங்காயம் போன்ற ஒன்று அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது
- மேலும்மேலும் கடல்நீர் நகரத்தில் புகுந்துகொண்டிருக்கிறது என்கிற செய்தியைக்கூடப் பேசாத பாடல்களை மட்டுமே கடமையென ஒலிபரப்பும் ரேடியோவை ஒலிக்க விட்டபடி மொட்டைமாடியில் காத்திருந்தது வீண் போகவில்லை. தாழப்பறந்து வந்த ஹெலிகாப்டரொன்று மனித நடமாட்டம் தெரியும் ஒவ்வொரு வீட்டின் மாடிகளிலும் அரச அதிகாரத்தின் ஸ்டிக்கர் ஒட்டிய உணவுப்பொட்டலங்களை போட்டுக்கொண்டிருந்தது. கூடவே பிஸ்கட், பால்பவுடர், கசாயப் பவுடர், கொசுக்கடியிலிருந்து தப்பிக்க உதவும் க்ரீம் கொண்ட பார்சல் என. சிதறவிடாமல் பிடித்துக்கொண்டவர் சாப்பிடும் முன்னர் அதைப்பற்றிய காணொளிப் பதிவை பதிவிட்டால் லைக்ஸ் அள்ளுமென உற்சாகமானார். கேமிராவைப் பொருத்திவிட்டு உணவுப்பொட்டலத்தைத் திறக்கையில் பொட்டலத்தில் சிக்கிக்கொண்டிருந்த ஒரு இங்க் ஃபில்லர் துளிக்கு இணையான அடர்பச்சை வண்ணக்குமிழ் ஒன்று கண்ணுக்கு நேரே வந்தது.
- எதிர்த்து ஓட்டுபோட இருந்த மக்களில் எழுபத்தைந்து சதவீதம் வரை கொன்றுவிட்ட வெற்றிக்கு அடுத்தபடியாக, மீதமிருந்த மக்களால் தடுக்கமுடியாத ஜனநாயகத்தின் சக்தியால் தேர்தலில் வெற்றி பெற்றான் அவன். வெற்றிச் செய்தியோடு சந்திக்க ஓடியது தமது ஆன்மிக குருவும் பயலாஜிகல் தந்தையுமான நாட்டின் மூத்த துறவியின் மாளிகைக்கு. நாட்டின் அதிபரையே தடுக்கும் வல்லமை படைத்த துறவின் நம்பிக்கைக்குரிய காவலாளி தடுத்துவைக்கையிலே சற்று கண் சிமிட்டவும் செய்தான். அவன் ராஜ விசுவாசியும் ஒளிந்துகொண்ட இருபத்தைந்து சதவீதத்தினனும் கூட. அவனது சமிக்ஞைக்கு என்ன அர்த்தம் என்று சாளரம் வழியே அண்ணாந்து பார்த்தபடி இருந்தவனுக்கு உள்ளிருந்து கேட்ட பரிச்சயமிக்க மாற்றுப்பாலினத்தின் குரல் நினைவூட்டிய ரௌத்திரத்தை சட்டென மறக்க வைத்தது உயரமான ஓக் மரத்தின் இலையோடு உதிர்ந்து வந்த மஞ்சள் நிற குமிழின் ஒளி.
- விசாலமான எழுதும் மேசையில் அரதப்பழசான டெம்ப்ளேட் ஸ்க்ரீன் சேவர் ஓடிக்கொண்டிருக்க, எப்படியாவது ஒரு நல்ல கதையை எழுதி சான்றோர்களிடம் பெயர்வாங்கிடத் துடிக்கும் ஒரு புனைப்பெயரற்ற எழுத்தாளனின் குறட்டைக்குத் திறக்கும் வாயில் தலைவெட்டித் தாத்தா பூ அளவிற்கே உள்ள ஒரு ஒளிச்சிதறலொன்று உள்ளே போக… அவனது ஒளிமிகுந்த பிரகாசமான முகத்தில் கதையை வெற்றிகரமாகப் பிடித்துவிட்டதாகத் தெரிந்தது. எழுதத் தொடங்கினான்.
கொடுக்க வேண்டிய லஞ்சங்களை உபரித்தொகையோடு கட்டியதாலும், மாசு அளக்கும் இயந்திரத்தை காற்றின் எதிர்திசைக்கு பொருத்தாமல் மாற்றி அமைத்ததாலும், உயரம் குறைந்த சிம்னியில் வெளியேற்றும் மிகக்குறைந்த அளவே ஆர்ஸனிக் கலந்த மாசு கடல் காற்றில் பறந்துவந்து நகரத்தின் பொலிவைக் குறைக்கவே ஆர்பரிக்கும். அவ்விதமே அந்த டெலஸ்கோப்பில் அப்பிய துகள்களையெல்லாம் கிரகங்களென்றும் விண்வெளிப் படலங்களென்றும் வல்லமை பொருந்திய வல்லாதிக்க நாடுகளோடு போட்டி போட்டுக்கொண்டு செய்திகளாக்க ஆணையிட்ட அரசாங்கத்தின் கட்டளைக்கு கீழ்படிந்தே ஆகவேண்டுமெனக் காத்திருந்த துணை வேந்தர் தன் அழகிய மீன்தொட்டியின் மீன்களை எடுத்து ஒவ்வொன்றாக விழுங்கிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த பங்களாவின் பூர்வ ஜென்மத்தின் ராணி தனது வைராக்கியத்தைத் தீர்க்கும் பொருட்டு சிப்பந்தியிடம் ஆணையிட்டுப் பெறப்பட்ட பழம் வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு அவனது ஆண் நண்பனை நோக்கி நடந்தாள். குளிர்ந்த நீர்பட்டு வயிற்றுப்போக்கு நீங்கிவிடுமென நினைத்தவனின் குதத்திலே சொருகப்பட்ட அந்தக் கூரான கத்தியின் பொருட்டு ஓலமிட்ட அவனது வாயில் மணலை அள்ளிப் போட்டு விளையாடிக்கொண்டிருந்தது கருஞ்சிவப்பிலும் இளஞ்சிவப்பிலும் வட்டவட்டமாக தோல்கொண்ட அழகிய அப்பூனை. மெல்ல மெல்ல அவன் சாவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பூனை, மின்மினிப்பூச்சி, பூர்வஜென்ம நினைவுகளை மீட்ட கம்பீரமான அந்தப்பெண் வரலாற்றில் மறையாத பெரும் வெற்றிகொண்ட அந்த அதிபர், அதிகம் கடன் வாங்கியிருந்த அவனது நண்பர்கள் மற்றும் லட்சியமற்ற எழுத்துகளே தனக்கு எதிரிகளை சம்பாதிக்காது என்று உறுதியோடு விருதுக்கு காத்திருக்கும் எழுத்தாளன் மற்றும் அவனது ப்ரூஃப் ரீடர்.
*
“வந்த வழியே ஏன் இவ்ளோ சீக்கிரமா திரும்புன?” என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தது எனக்குப் புரியாத ஒரு அயல்கிரகத்து பாஷை என்றாலும் அது இப்படித்தான் இருக்க முடியும்.
சுபம்
***
ஜீவ கரிகாலன் – டிரங்கு பெட்டிக் கதைகள், கண்ணம்மா, ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள் என மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கிறது. மின்னஞ்சல்: kaalidossan@gmail.com