Saturday, November 16, 2024
Homeபுனைவுகவிதைகவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் - 2

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் – 2

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் – 2

விளிம்புகள் உரசும் கணப் புள்ளியில்..
*    
மரபின் ஆழம் துளைத்து நிற்கிற காலத்தை முற்றி
இன்னொரு பாதையின் தவம் கழித்து அசையும் நிர்மூல மௌனம்
உனதல்லாத பிறையின் அறியப்படாத பக்கத்தைப்
பிரதி எடுக்கிறது
காண்
               
அரூபம் இறுகி
கீழிறங்கும்
கனவின் நிழல் பிடித்தாட்டும் பைத்தியச் சொற்கள்
இருப்பை மறுக்கின்றன
 
உள்ளங்கையில் கிளை விரிக்கும் துர்மரணத்தின்
நுனி தொங்கும்
கதவில்
கீறப்பட்டிருக்கும் கடவு எண்
 
ரகசியம் என்றொன்று இல்லை
அது ஒரு தூக்கம்
 
பழைய ஞாபகத்தின் தாழ் துருவேறுதலை
யுக வளைவுகள் மோதும் டேன்ஜன்ட் சந்திப்பில்
உறுதிப்படுத்த
 
ஒளிவேகப் பாய்ச்சலைக் கொண்டிருக்கிற மனம் கற்பிதப்படுத்தும் அர்த்தங்களால்
நிகழ் என்ற சூட்சுமக் கணத்தை கையிலெடுக்கிறது
 
அந்த மௌனம்
அத்தவம்
அப்பிறவி
அக்கடவு எண்
 
எனதல்லாத முழுமையின்
அறியப்படாத இருண்ட பக்கத்தில் கீறப்பட்டிருக்கும்
ஒரு கதவு
 
அடைதலுக்குரிய பாதையொன்றை தேடலின் தொடக்கப் புள்ளியென
கருநீலச் சதுரத்துள்
புதைத்த
தலைகீழ் முக்கோணம்
 
***
 
தனிமைக் கசிவின் மிதவை
 
*
பேச்சு சுவாரஸ்யத்தில் இழந்த ஒன்றை
சுவரொட்டியில் கண்டபோது
அது
காணாமல் போனதின் அறிவிப்பு
என்கிறது மட மனம்
 
அதன் வயது என்னவென தேடியபோது
பெய்த மழையோ கண்ணீர்த்துளியோ கரைத்திருக்கலாம்
வாய்ப்புண்டு
 
மரணத் தூதை
கப்பலாக்கி மிதக்க விடுதலில் தலையெழுத்துக்கள்
பிரிகின்றன
துயரக் கசிவில்
 
இரவல் பெற்ற பசை பிசுபிசுப்பதால்
போஸ்டரை
குறை சொல்வானேன்
 
வாய்த்தது அவ்வளவுதான்
 
***
 
ஆட்சேபத் தர வரிசையில்..
 
*
அவர்கள் வந்துவிட்டதாக தொடர்ந்து சொல்லப்படும் அறிக்கை
நீங்கச் செய்கிறது விருப்பமில்லா மனத்தின் சிறு நிறத்தை
 
அடைவதைப் பற்றி கனா எதற்கு
பரிகசிக்க கையிலிருக்கும் தத்துவத்தின் நிதானம்
வேறெங்கும் பெறப்பட்டதல்ல
 
இந்நிலத்தின் நஞ்சிலிருந்து பிடுங்கி எடுக்கப்பட்டது
 
அதனை
நிகழ்த்திப் பார்த்த
நிகழ்த்த விரும்பிய
 
நிகழ்ந்துவிட்டதால் வருத்தப்பட்ட
முகங்கள்
 
இருளில் காத்திருந்தவை
 
வரலாறு கழுவப்படுகிறது
வரலாறு கழுவில் இருக்கிறது
 
மீண்டும் பரிசீலனை செய்வதற்கரிய முனை
கண்ணுக்கெட்டிய பார்வையைத் தொலைவில் நிறுத்துகிறது
 
அவர்கள்
வந்துவிட்டார்கள்
 
வந்துகொண்டே இருப்பவர்களாகிறார்கள்
 
***
 
புறமல்ல..

ள்
*
தசைநார் சிதைத்து முகத்தைக் கிழி
உட்புறம் வழியும் ரத்தத்தை ருசி அது உன் ஆன்மா
நீ என்கிற பதம் தப்பிப் பிறழ்வாய் அதுவுன் நடனம்

அடையாளம் சுமந்து அடையப் போவது எதை என்பேன்
எனக்கேன் உனது பட்டியல்

உன்மத்தம் உன் பதில் அதை நீ சிதை
பாதையின் போக்கில் காலத்தின்
சுவடு

எதுவோ உன் ஆராய்ச்சி
பெயர்
உடல்
மௌனம்

மூழ்கு மரணத்தில் உன் சுவாசம் தியானம்
தனித்திரு வரம் பெறுவாய்
சமயம் கடந்து தனித்துவிடப்பட்ட அதுவொரு தவம்
அதுவொரு முகமூடி

நதிமூலம் ரிஷிமூலம் ஏன்
துணிந்திடு
பொருந்தும் உன் முகத்திலும்

அதன் செயற்கையிழை பிய்த்து
நசியும் உன்மத்தத்தை ருசி
புறமல்ல உள்

உனக்கேன் எனது பட்டியல்
அனல் பிரிந்து அலையும் நெடுஞ்சாலை தாரில்
அதுவொரு நீண்டக் கனவு அல்லது
நீளும் கனவு
எதுவுன் ஆராய்ச்சி

பயணம் திசை மாயை சுழல்
அனைத்தின் புள்ளி இழுத்துச் செல்லும் வரைபடம்
பட்ட மரச் சட்டம்

நிழல் அழுத்தி துயர் மீளா வேரின் ஈரம்
பாட்டன் சாபம்

கொடிச் சுற்றி நாபி வழியில்
சிரசின் சிக்கல்
நியூரான் வலையில் தப்பும் நினைவில்
மங்கும் நிறமாகி டி.என்.ஏ –வின்
கடைசிப் படி

இடம்
எனக்கோர் இடம் சுயநலம்
ஆறடி
ஈரடி

பிறகு ஓரடி
அடி

***
 
எதிர் இருத்தலின் வாதத்தோடு..
 
*
ஏகமனதாக
ஒத்துக்கொள்வதென்பது

சாதுரியத்தின் கடைசி படிக்கட்டுக்குப் பிறகும்
ஒரு படி இருப்பதென
நம்பும்படி மடங்கி நீள்கிறது

பாதைகளின் கதை தனி
கிளைக் கதையின் பாதை முற்றிலும் தனி

தனிக்கதையின்
கிளைப்பாதையின்படி ஒத்துக்கொள்ளாத
ஏகமனமென்பது

பக்கவாட்டு சாதுரியம்

-இளங்கோ

 

RELATED ARTICLES

1 COMMENT

  1. ஐயா,

    இன்று உங்கள் வளைவு சிறுகதை கல்கி வாரப்பத்திரிக்கையில் படித்தேன்.

    என்னால் அந்த கதையின் நுட்பத்தை உணர முடிந்தது.

    அதுவும் அந்த வரிகள் – காதல் சரியான இடத்தை சென்று அடையலேன்னா அது தன் தகுதியை வேதனையோடு இழக்குது – நல்ல ஜீவனுடன் அந்த வாக்கியத்தை கட்டமைத்து அழகூட்டி இருக்கிறீர்கள்.

    கல்கி பத்திரிக்கை ஓடு எனக்கு 25 வருட தொடர்பு உண்டு. ஆனால் இன்று தான் முதல் முதலாக ஒரு பாராட்டுதலை நேரடியாக பகிர்ந்துகொள்கிறேன்.

    என் வாழ்விலும் அப்படி ஒரு துரதிரிஷ்டம் நடந்ததால் என்னால் அந்த வாக்கியத்தின் ஊடாக உருப்பெரும் மென் சோகங்களை உணர முடிந்தது.

    நன்றி. வாழ்த்துகள்!

    தண்டிரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular