( சேகரிப்பிலிருந்து : வெளியான தேதி – அக்டோபர் – 3, 2013)
நவீனக்கவிதையின் கை நிலம்..
*
Most people ignore most poetry because most poetry ignores most people.
– Adrian Mitchell.
(பெரும்பாலும் மக்கள் அதிகக் கவிதைகளை நிராகரித்துவிடுகிறார்கள் ஏனென்றால் அதிகக் கவிதைகள் பெரும்பாலுமான மக்களை நிராகரித்துவிடுகிறது.)
கவிதை மீதான பயணத்தில் ஆட்ரியன் மிச்செல்லின் மேற்சொன்ன கூற்றை எவ்வகையிலாவது கடக்காதவர்கள் இருப்பது அரிதே.
கவிதை என்னும் நுழைவாயிலில் இருந்து இரண்டு பாதைகள் பிரிகின்றன. ஒன்று அதனிலிருந்து கிளம்பி வெளியேறும் கவிஞனுக்கானது. இன்னொன்று அதனை நோக்கிப் பயணப்பட்டு நுழையும் வாசகனுக்கானது. கவிதைகள் மீதான காதல் கொண்ட வாசகனின் விருப்பம் அதை ரசித்தல் மட்டுமே போதுமானது என்னும்போது அவன் சென்ற பாதை வழியே திரும்பிவிடுகிறான்.
ஆனால் –
அவனே அதீதக் காதல் கொண்டவனாய் இருந்தால் அதனுள்ளே தங்கி நுணுக்கமாய் அணுகி துய்க்கும் ரசனையுணர்ச்சியின் மிகுதியில் தானே ஒரு கவிஞனாகவும் பரிணமித்து, கவிப்பாதையில் வெளியேறுகிறான்.
இந்த ரசவாதம் ஒன்றும் மாய வினோதமல்ல. ஒரு கலை தன்னகத்தே கொண்டிருக்கும் இயல்பு அது. அந்த இயல்பை புரிந்துக்கொள்வதற்கான, புரிந்துக்கொண்டதைப் பகிர்ந்துக்கொள்வதற்கான சிறு முயற்சி தான் இந்தக் கட்டுரை.
முதலில் கவிதை –
இதை எப்படி விளங்கிக் கொள்வது? அதற்கான தேவை எப்படி உருவாகியிருக்கலாம்?
ஒரு மனிதனாக பரிணமிப்பதற்கு உதவிய அறிவை ஆறாம் அறிவு என்று வகுத்து வைத்தாயிற்று.
சிறு சிறு செயல்கள் மனிதனுக்குரிய இயக்கம் எனக் கொண்டால், செயல்களில் எத்தனை எத்தனை வகைகள் அமையப் பெற்றோம். அடிப்படை இயக்கங்கள் உயிர் பிழைப்பு சம்பந்தப்பட்டது.
அடுத்துத் தொழில் சம்பந்தப்பட்டது. அதற்கடுத்து வேட்டை சம்பந்தப்பட்டது. அதன் பிறகு பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இவை அனைத்திலும் மனிதனுக்கு இயற்கையான உடல் மொழிகள் உண்டு.
மொத்த இயக்கங்களும் அனுபவங்களை ஈட்டித் தருவதாகவோ ஒன்றைச் சார்ந்து மற்றொன்றாக உருமாற்றம் பெறுகிற புது அனுபவங்களாகவோ சேகரமாகத் தொடங்கியது. இவற்றைப் பகிர்ந்துக் கொள்வதற்கும் புதிய உத்திகளைக் கற்று கொடுப்பதற்கும் சக மனிதனுடனான தொடர்புக்கான ஓசைகள் தேவைப்பட்டது.
ஓசை மொழியாயிற்று.
மொழி சைகையோடு தான் வளர்ந்தது. சைகைகள் உடல் இயக்கங்களை குறிப்பிட்டு உணர்த்த முயன்றன. சைகைக்கு ஒத்திசைவாக ஓசைகள் எழுப்பினான் மனிதன். அனுபவங்களைப் பகிரத்தான் இவை யாவும். கண்ணால் கண்டவற்றையெல்லாம், செவியால் கேட்டவற்றையெல்லாம், தொடு உணர்வில் அறிந்தவற்றையெல்லாம் செய்தியாகக் கடத்துவதே முக்கிய நோக்கமாயிற்று.
வேட்டைக்குப் போய்த் திரும்பும் இரவுகளில் நெருப்பு மூட்டி சுற்றியமர்ந்து எல்லாவற்றையும் தங்களுக்குள் பகிர்ந்துக் கொண்டார்கள். கதைகள் உருவாயின. நிஜ அனுபவங்களை விவரிக்கத் தொடங்கிய மனிதப் பழக்கம். இளந்தலைமுறையைக் கட்டுக்குள் வைக்க நிஜங்களோடு கற்பனைகளையும் சேர்த்துச் சொல்லிப் பழக்கினார்கள்.
கொண்டாட்டத் தருணங்களில் பாடல்கள் பாடி, பாடும் பாடல்களுக்குள் பெற்ற அனுபவங்களைப் பொதிந்து வைத்தார்கள்.
ஆதி மனிதனுக்கு அவன் சந்ததி முக்கியம். அது பெற்றுத் தரப்போகும் உழைப்பு முக்கியம். மிருகங்களுக்கு எதிராக தன் இனவிருத்தியைப் பெருக்கிக் கொள்ளவும் பாதுகாக்கவும் புத்திக்கூர்மையும் கிரகிப்புத்தன்மையும் (Observation) அவசியமாயிற்று.
எண்ணற்ற வேட்டை உத்திகள். புதிய புதிய ஆயுதங்கள். அதன் உபயோகங்கள். அதன் செயல்முறைகள். யாவையும் புதிதாக உருவாக்குவதும். உருவாக்கியவற்றைக் கற்றுத் தருவதும். கற்றுக் கொண்டத்தைப் பழக்கப் படுத்தி, பழகியதை செயல்படுத்தவும். அச்செயல் உருவாக்கும் அனுபவத்தைப் பகிரவும்..
ஒரு சுழற்சி முறையை உண்டுப் பண்ணிக் கொண்ட மனிதன், தன் எண்ணங்களை, தன் அனுபவங்களை, தான் கற்றுக் கொண்டதை குகை ஓவியங்களாக்கினான்.
முதல் கலை, உருவாயிற்று.
இதிலிருந்து நாம் படிநிலைகளாக பிற அனைத்துக் கலைகளையும் அதன் நதிமூலத்தையும் ஊற்றுக்கண்ணையும் யோசித்துக் கொள்ள முடியும். யாவற்றுக்கும் அனைத்துக்கும் – ஒன்றோடு ஒன்று தொடர்பு உண்டு.
அந்த அடிப்படையில் ஒரு மொழி வளர்ந்தோங்கி அதற்கொரு எழுத்து வடிவத்தையும் உண்டுபண்ணிய பிறகு. எழுத்து வடிவிலும் தன் சிந்தனையைப் பதிவு செய்யத் தொடங்கினான்.
அதே சுழற்சி தான் இங்கும். அனுபவத் தொகுப்பு. அதுவே பிரதானம்.
உலகம் முழுவதும். மன்னிக்கவும் பிரபஞ்சம் முழுவதுமே இயக்கங்கள் தான். அவ்வியக்கங்கள் விளைவை உண்டு பண்ணும். இது அறிவியல். மனிதனும் அப்பேரியக்கத்தின் ஒரு சிறு துணுக்குத் தான். அங்கம் தான் என்றதாலும். ஆறறிவு அவனைத் துளைத்து தூண்டிக் கொண்டே இருக்கிறது.
முதன்முதலில் அவன் இயற்கையைக் கண்டு அஞ்சினான். பிறகு வணங்கினான். மெல்ல அதனை அறிந்துக்கொள்ள முயன்றான். அதன் பிறகே அதனை வியந்தான்.
அஞ்சியபோது மிருகம். வணங்கியபோது மனிதன். அறிந்துக்கொள்ள முயன்றபோது அறிஞன். வியக்கத் தொடங்கியபோது கலைஞன்.
வியப்பு இன்னும் ஓயவில்லை. இனி இவ்வினம் அழியும் வரை இயற்கையின் மீதான வியப்பே அதன் விஸ்தீரணம்.
இன்று அறிந்துக்கொள்ளுதலுக்கு அடிப்படையாக, வியப்பு ஒரு சுழற்சி மாற்றம் கொண்டுவிட்டது.
அதாவது அறிவியலுக்கு, ‘வியக்கும்’ கலைஞன் முக்கியமானவன். கலைஞன் கற்பனையை மேம்படுத்துபவன். அவனுடைய Fiction அறிவியலுக்கு அத்தியாவசியம்.
அதனால் தான் Science is an Art.
வியக்கும் இயற்கையோடு அதன் சிறு சிறு அசைவுகளை உள்வாங்கிக் கொண்டு அதனோடு பரிபாலனைச் செய்துப் பழகினான். இயற்கையும் அவனோடு தொடர்பு கொள்கிறது என்கிற அவனது சிந்தனையின் மீதான நம்பிக்கை வலுக்க ஆரம்பித்த கணத்தில் கையிலிருந்த மொழி அவற்றைப் பதிவு செய்யப் பயன்பட்டது.
இப்பூமியின் மீது எண்ணற்ற மனித இனங்கள் உண்டு. நிலம் சார்ந்தும், சூழல் சார்ந்தும் அமைந்துவிட்ட வாழ்வின் ஊடே எல்லாவற்றுக்கும் மொழியுண்டு. அவ்வாறன மொழிகளுள் இலக்கணம் உள்ளவை, அல்லாதவை என்று இரண்டு வகை. இப்படி மொழியின் துணைக்கொண்டு ஒவ்வொரு சிந்தனையும் உருவாகிப் பதிவாயிற்று.
எழுத்து, புறத்திலிருந்து அகத்துக்குத் திரும்பியத் தருணம், சிந்தனையைச் செம்மைப்படுத்தியதோடு மொழியையும் செம்மைப்படுத்திற்று.
இலக்கணம் உருவாக மனிதனின் வாழ்நிலையே காரணம். அதனுள் இயக்கம் கொள்ளும் அவனுடைய செயல் காரணம். அவன் உண்டு பண்ணிய காரணங்களும் ஒரு காரணம். எல்லாம் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு வளர்ந்தது.
இதன்வழியே உருவான ஒரு வடிவம், கவிதை.
தமிழ் மொழி, இலக்கணத்தோடு வலம் வந்த காலம் ஒன்று உண்டு. அதில் ஓர் அலகு இருந்தது. அவ்வாறாக அதன் அலகு விலகாத கவிதைகள், மரபுக்கவிதை எனவும். அதிலிருந்து அடுத்த நிலைக்கு உருமாறிய வகை, புதுமைக்கவிதை எனவும் (புதுக்கவிதை) ஏற்றுக் கொள்ளப்பட்டவை.
புதுக்கவிதைகளின் முக்கிய அம்சமே, அதுவரை மரபுக்கவிதைகளில் இருந்த சீரிய இலக்கண அலகு தன்னைத் தளர்த்திக்கொண்ட விதம் தான். சொல்லப்போனால் கிட்டத்தட்ட அந்த அலகு புதுக்கவிதைக்குள் மெல்லியச்சரடு போல ஓர் ஊடுருவலை மட்டுமே கொண்டிருந்தது எனலாம்.
தமிழ் மொழியை, அதன் அர்த்த சாத்தியப்பாடுகளும் அதற்கான உழைப்புச் செறிவும் கொண்ட ஒருவரால், மகாகவி பாரதியின் புதுக்கவிதைகளை எட்டிப்பிடித்துவிட முடியும். பாரதியை வாசித்து லயிக்க, ஓர் எளிய தமிழார்வம் கூடிய வாசகனுக்கு, தமிழ் மொழியின் பாரம்பரிய இலக்கண அறிவு அவசியமில்லை. தொல்காப்பியனின் ஏடுகளை அவன் தேடிப்பிடித்து புரட்டிக்கொண்டிருக்க வேண்டாம். அவனுடைய புதுக்கவிதை வாசிப்பனுபவ வழித்துணைக்கு, நேர்மையான ஒரு தமிழ் அகராதி மட்டுமே போதுமானது. இதையெல்லாம் உணர்ந்ததால் தான் பாரதி புதுக்கவிதை வடிவத்தைக் கையிலெடுத்துக் கொண்டார் எனலாம்.
பாரதியைத் தொடர்ந்து பாரதியிலிருந்து இன்னும் எளிய வடிவுக்கு முன்னகர்ந்தார் பாரதிதாசன். அந்தவகையிலும் அது ஒரு புரட்சித்தான். பிற்பாடு பாரதிதாசனிலிருந்து ஒரு சந்ததியாகப் பிறந்த புதுக்கவிதை உலகின், மைல்கற்கள் நிறைந்த நெடுஞ்சாலையை இன்று நாம் அடைய முடியும். சிக்கலின்றி அதில் பயணிக்கவும் முடியும்.
உருமாற்றம்.
அதுவே இங்கே முக்கியம் என்று சொல்ல வருகிறேன். பாரதி அந்த உருமாற்றத்துக்கான கனவைக் காணவில்லை என்று சொல்ல முடியாது. அவன் ஒரு தீர்க்கதரிசி. பன்மொழியின் மீதும் தன்னுடைய கலை ஆளுமையை அடையாளங்காணத் துணிந்தவன். அதன் எண்ணற்ற வடிவ நோக்குகளின் மீது தனக்கிருந்த பிரியத்தை கையிலெடுத்துக் கொஞ்சத் தெரிந்தவன்.
அதன் நீட்சியாக இன்று –
ஒரு மனிதன், தான் காண நேர்ந்ததை. தான் உணர்ந்து தவித்ததை. அனைத்தின் வழியாகவும், தான் கேள்விப்பட்டதை. அப்படி யாவற்றிலும் தான் தரிசிக்கும் ஓர் உணர்ச்சியைப் பிடித்துக் கொண்டு, தன்னால் சட்டென்று எழுதிட முடியாத நெஞ்சுத் தவிப்போடு ஒரு கவிதை நெடுக பயணிக்க எத்தனிக்கிறான்.
உவமைகளும் உருவகங்களும், கவிஞன் சொல்ல வரும் உணர்ச்சியின் மீது சவாரி செய்த காலக்கட்டத்தின் தொடர்ச்சியில் இன்றும் நாமிருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. கவிதைகளில் உவமைகள் என்பது செய்து முடித்த இனிப்புப்பண்டத்தின் மீது விரிக்கப்படும் மெல்லிய வெள்ளிச்சரிகைப் போல வெறும் அலங்காரமாக மட்டும்தான் தோன்றுகிறதா..?
இல்லை.
கவிதைகள் – காலந்தோறும் மரபுக் கவிதை, புதுக் கவிதை, நவீனக் கவிதை, பின்நவீனக் கவிதை என பல உருவ மாற்றங்களை அடைந்து வந்திருப்பதை ஓரளவு புரிந்துக்கொண்ட அடிப்படையிலும்..
ஒரு மொழி, தன்னை நிகழ் சமூகப் போக்கோடு பொருத்திக் கொள்வதற்கான எத்தனிப்புத்தான் அந்தந்த வடிவங்கள் என்ற அடிப்படையிலும்..
ஒரு மீள் பார்வையாக –
1. மரபுக் கவிதைகள் தூய இலக்கணங்களை உள்ளடக்கிய வடிவம்.
2. புதுக்கவிதை இலக்கணத்தை பெரும்பாலும் தளர்த்திக்கொண்ட வடிவம்.
3. அதனிலிருந்து பிரிந்த நவீனக் கவிதை அந்தக் குறைந்தபட்ச இலக்கணத்தையும் முற்றிலும் உதிர்த்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
அப்படி புதுக் கவிதைகள் சற்றே திகட்டத் தொடங்கியபோது, கவிதை உலகம் எதிர்க்கொண்ட அடுத்த வடிவம் ‘ நவீனம்.’
சரி.
‘நவீனக்கவிதை என்றால் என்ன ?’ – மேலும், அதை எப்படி வாசிப்பது ? எப்படி விளங்கிக் கொள்வது? எப்படி எழுதுவது ?-இவை யாவும் அதனுள் புதைந்துக் கிடக்கும் துணைக் கேள்விகள் அல்லவா?
இத்தனை வருட என் வாசிப்புப் பயணத்தில் நான் அந்த வடிவத்தை அணுகிய வழியையும், அதனுள் நுழைந்து சஞ்சரித்த விதத்தையும் அது இன்று வரை எனக்குள் கிளைப்பரத்தும் அதன் அனுபவ நிலையையும் இந்த கட்டுரையின் வழியே உங்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் மேலே குறிப்பிட்ட ஆதாரக் கேள்விக்கு உங்கள் மனமொரு விடையைக் கண்டு கொள்ளக் கூடும்.
மேலும், அடுத்தடுத்து நான் எழுதிப் போகப்போவது ஒரு கோட்பாடோ, இலக்கியச் சிகரத்தின் அடுக்குகளில் ஒன்றான, நவீன உச்சியைத் தொடுவதற்கான வரைபடமோ அல்ல. மற்றபடி அதன் அடிவாரத்திலிருக்கும் பெயரற்ற மரமொன்றின் நிழலில் இளைப்பாற இட்டுச் செல்லும் ஒற்றையடிப் பாதை. அவ்வளவே.
நவீனக் கவிதை குறித்துப் பேசுவதற்கு முன் ‘நவீனம்’ என்ற சொல்லின் பாரம்பரியத்திலிருந்து வந்தால் என்ன! வேறு வழியில்லை நண்பர்களே விரிவாகப் பேசித்தான் ஆகவேண்டும்.
MODERN –இது ஆங்கிலச் சொல்.
நவீனம் – என்பது அதன் தமிழ்ப்பதம்.
சரி.
Modern என்கிற ஆங்கிலச்சொல் என்ன அர்த்தத்தை நமக்குக் கொடுக்கிறது ? அதை ஓர் ஆங்கில அகராதி சொல்லிவிடும் தான். ஆனால் நம் புரிந்துணர்வுக்கு அது ஒரு கைவிளக்கு மட்டுமே. அதுவும் போதாது. ஆகவே அதன் பூர்விகத்துக்கும் போனால் என்ன..!
லத்தீன் மொழியில் ‘ Modo ‘ என்கிற மூலச் சொல்லிலிருந்து ஆங்கிலம் வளர்த்தெடுத்துக் கொண்ட சொல் தான் Modern.
Modo என்பது Just Now – என்கிற அர்த்தத்தில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதனை ஆங்கிலச் சொல்லான Modern – Being at this time, now existing. என்று அகராதியில் ஆவணப்படுத்தி தொடர்ந்து அது உபயோகத்துக்கும் வந்திருக்கும். அகராதியில் ஒரு சொல், கூடுதலாக சேர்ந்துக்கொள்வது என்பது வெறும் சொற்களஞ்சிய வேலை மட்டும் அல்ல அது.
சமூகத்தில் பயன்பாட்டால் மனிதர்களிடையே அது ஆற்றும் செயல் முக்கியம். விளைவு முக்கியம்.
அப்படி மனிதச் சிந்தனையின் அர்த்தப் பரிமாணங்களுக்கு Modern – ஆல் ஒரு புதிய பதம் கிடைத்தது. அது நேரிடையாக வாழ்வியலைத் தொட்டுப்பார்க்கும் இயல்பை வெகு விரைவாக எட்டியது. அனைத்து அம்சங்களையும் ஊடுருவும் ஒன்றாக அது உருமாற கலைகள் தான் பயன்பட்டன.
எப்போதும் எந்தவொரு புதிய சிந்தனைகளையும் , அவை கோட்பாடுகளாகப் பரிணமிக்கும் வகையில் சுவீகரித்து பயன்பாட்டில் கொண்டு வருவது முதலில் ஓவியர்கள் தான்.
(இன்றையக் காலக்கட்டத்தைப் பொருத்தவரை நிறைய இயல்கள் இருப்பதால் இந்த Theory -ல் சின்னச் சின்ன Adjustment நடந்திருக்கிறது. எந்தவொரு புது சிந்தனையையும் கையகப்படுத்தி அதைப் பயன்பாட்டுக்கான நுகர்வாக மாற்றிவிடும் ஊடக வல்லமையைச் சொல்லுகிறேன்.)
என்றாலும் கூட கலைஞன் இன்றியமையானவன்.
Modern art அப்படித்தான் உருவாயிற்று. ஓவியர்களின் பொற்காலம் அது. தருணங்களை ஓவியமாக்கிட வர்ணங்களும் கோடுகளும் எல்லைக் கட்டுபாடுகளற்று காகிதங்களிலும் கான்வாஸ்களிலும் சுவர்களிலும் தீற்றின. தருணங்களுக்குள் இழைப் பிரியும் கணங்களை, மௌன மனத்துக்குள் பித்தேறி அலைபாயும் சிதறல்களை, அக்கணத்துக்குரிய வர்ணக்கலவையாக ஓவியனை அவனுக்குள்ளிருந்து அவனையே வெளியே இழுத்து வந்தது இந்த Just Now (or) Being at this time (or) now existing என்ற நவீனம்.
பிக்காஸோ என்று ஓவிய உலகால் அன்போடு அழைக்கப்பட்ட Pablo Picasso முக்கியமான மாடர்ன் ஆர்ட் பிதாவாக போற்றப்பட்டது அப்படித்தான். ஓவியங்கள் மட்டுமின்றி..
Material Arrangements -லும் அவர் தன் நவீனச் சிந்தையைப் பிரயோகப்படுத்தினார். அதனால் தான் அக்கலைஞனின் கண்களுக்கு, ஒரு சாதாரண சைக்கிள் சீட்டையும், அதன் ஹான்ட்பாரையும் மாற்றி வைப்பதின் மூலம் அதை ஓர் எருதின் தலையாக்கி மக்கள் பார்வைக்கு கொண்டு வர முடிந்தது. அவருடைய Bull’s Head – ஐ, ஓவிய உலகமும் சரி, எந்தவொரு கலை உலகமும் சரி நிராகரித்துவிட முடியாது. தான் உள்ள காலமட்டும் ஏற்று நிலைத்து நின்றுவிட்ட ஒரு Modern Creation அது.
அப்படி ஓவியர்களிடமிருந்து நவீனம் எழுத்தாளர்கள் கவனத்துக்கு உடனே ஈர்க்கப்பட்டு படைப்புகள் உருவாகத் தொடங்கியது. ஒரு பக்கம் கவிதை. மறுபக்கம் சிறுகதைகள் / நாவல்கள். அதுகுறித்த எண்ணற்ற கட்டுரைகள். கருத்தரங்குகள். இவை மொத்தத்தையும் கருத்தாக்க விவாதங்களாக வளர்த்தெடுப்பவர்கள் தத்துவவாதிகள் மற்றும் கோட்பாட்டாளர்கள்.
ஏன் இதனை இத்தனை நீட்டிச் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் அது ஒரு பாரம்பரியம்.
எழுத்துக்கான சிந்தனையின் பிரதான நேர்க்கோட்டு வழி. மட்டுமில்லாமல் இவை யாவும் கலை மீதான புரிதலையும் அது சார்ந்த உழைப்பையும் முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்து உதவும்.
ஆக..
* Just Now
* Being at this time, now existing.
இதன் அர்த்தங்களை உங்கள் மனம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். இதை ஓர் அடித்தளமாக உள்ளுக்குள் கிடத்தி வையுங்கள். அதன் மீது தான் உங்கள் சிந்தனையை வடித்தெழுப்ப போகிறீர்கள்.
பொதுவாக, ஒரு கவிதையை எழுதும்போது ஒரு கருப்பொருளை மனம் யோசிக்கும்.
யோசித்ததை அதன் சார்ந்த பிற பொருட்களோடு போட்டு உள்ளுக்குள் உருட்டிக் கொண்டே இருக்கும். அவைகளைச் சீர்ப்படுத்திக் கொள்வதற்கான சொற்களஞ்சியத்தை ஒரு மொழி கையகப்படுத்தி வைத்திருக்கிறது. அது ஒரு பக்கம்.
இப்படி மனம் உருப்போட்டுக் கொண்டிருக்கும் கருப்பொருளின் கனம் குறைந்திடாமல் ஏற்கனவே நம் கையிலிருந்து உதவும் சொற்கள் நமக்கு போதுமானதாக இருக்கிறது. இது ஒரு பக்கம்.
இந்த இருமுனை அடிப்படையில் அவையே ஒரு கவிதையை நிறைவு செய்வதாக நம்பி விடுவது ஒரு விபத்து.
பிறகு என்னத்தான் செய்ய வேண்டும் ?
வாழ்வு ஒவ்வொரு கணமும் நகர்ந்துக் கொண்டே நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது. அது எண்ணற்ற செய்திகளை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கடத்துகிறது.
ஓர் உணர்ச்சியின் ஆதார நிலையை நாம் யோசித்துவிடுவோம். அந்த யோசனை மட்டுமே அவ்வுணர்ச்சிக்கு போதுமானதா என்றால், இல்லை. உணர்வைப் பல கூறுகளாக உடையுங்கள். அல்லது பிரியுங்கள்.
உடைப்பதென்றால் சுக்கல் சுக்கலாக. பிரிப்பதென்றால் இழை இழையாக. அல்லது – இரண்டுமே சாத்தியமென்றால் இரண்டுமே.
Segmentation & Fragmentation
இது கிட்டத்தட்ட ஒரு கணிதச் சூத்திரம் போலத்தான். நுட்பங்களையும் மெல்லிய நுணுக்கங்களையும் வாழ்வின் ஆதார இயக்கங்களில் கவிதை மனம் கொண்டு ஆராய்ந்தால் கிடைப்பவை எண்ணிக்கையில் அடங்கா.
ஒரு வட்டம் வரைய வேண்டுமென்றால் அதற்கொரு மையப்புள்ளி வேண்டும் தானே..? அதே போல் தான் நவீனக் கவிதையும். ஒரு மையத்தை வைத்துத் தான் வட்டமென அது சுழலும்.
ஆனால் மையம் அப்பட்டமாக வெளித் தெரியாது. அப்படித் தெரிந்தால் அது தன் நவீனத்தை இழந்துவிடும்.
ஒரு விஷயத்தின் மீதான பார்வையை நீங்கள் ஆழப்படுத்த சாதாரணத்திலிருந்து அசாதாரணத்துக்குள் நுழைய வேண்டும்.
அதற்கு அதீதச் சிந்தனை தேவை. ஒரு Normal கோணத்திலிருந்து மனம் மேலெழும்பி இன்னொரு கோணத்தைக் கவனித்தல். இதெல்லாம் சாத்தியமா என்கிற பொதுக்கேள்விகள் உள்ளுக்குள் புகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
ஆதியில் மனிதன் தன்னை ஒரு விஷயத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டானல்லவா !
அதை நாம் இனியாவது முழுமையாகச் செய்ய வேண்டும். நம்மைச் சுற்றி நிகழும் ஒவ்வொன்றின் கணமும் நமக்கானவை. அதில் நாம் இருக்கிறோம். அது நம்மில் இருக்கிறது.
இதற்கு மெனெக்கெடல் அவசியம். அதற்கு ஒரு கைவிளக்காக கவிதைக் குறித்த கோட்பாடுகள் பயன்படுகின்றன.
ஒரு நவீனக் கவிதைக்குள் கவிஞன் எண்ணற்ற புள்ளிகளை தாறுமாறாக கிடத்தி வைத்து விடுகிறான். அப்புள்ளிகளை இணைக்கும் திறன் வாசிப்பவரைப் பொறுத்தது. ஆள் ஆளுக்கு அதன் இறுதி வடிவம் வெவ்வேறானதாக இருக்கலாம். ஆனால் அதற்கான சாத்தியங்களை கவிஞன் கவிதைக்குள் செய்து வைத்தல் அவசியம்.
அப்போது வாசகனுக்கு அது வாசிப்பதற்கான வாசலாக அமைவதோடு, அதனுள் நுழைந்து யோசிப்பதற்கான அமைப்பாகி, ஓர் எழுத்தாளனாய் பரிணமித்து அதிலிருந்து வெளியேறவும் உதவும்.
நாம் எல்லாரும் நவீனக் கவிதைக்கான Attempt -ல் கொஞ்ச தூரம் பயனித்துவிட்டோம் தான். சிலர் தனக்குத் தெரிந்தும். சிலர் தனக்கே தெரியாமலேயும்.
இன்றையச் சூழலில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கவிதை என்ற வடிவம் நீண்ட பயணத்தின் பின் பலரின் கையில் வந்து சேர்ந்திருக்கிறது.
அதை எத்தனைப் பேர் உணர்ந்து அதைக் கையாள்கிறார்கள் என்பது தெரியாது. எல்லோருக்கும் சொல்லுவதற்கு ஏதோ ஒன்று இருக்கிறது. அதை வெளிப்படுத்த எடுத்து பயன்படுத்தும் ஓர் எளிய கருவியாக கவிதை மாறியிருப்பதும் ஒரு விபத்து தான்.
இன்றைய நவீனமயமான வாழ்வுமுறை மற்றும் உபயோகத்துக்கு வந்துவிட்ட தொடர்பு ஊடக நவீனங்கள், எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தும் வகையில் மொழியையும் அது சார்ந்த சிந்தனைச் சுதந்திரத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் பாதையை எண்ணற்ற திசைகளிலும் திறந்து வைத்திருக்கிறது.
இப்படியொருச் சூழலில் நவீனக்கவிதைகள் குறித்து பேசுவதற்கு விஷயங்கள் இருப்பதாக நம்பத் தோன்றுகிறது. இதில் இரண்டு இயங்குத் தளங்கள் உண்டு.
ஒன்று கவிதைகளைப் படைக்கும் கவிஞன்
இன்னொன்று அதனை அணுகி வாசிக்கும் வாசகன்.
என் வாசிப்பு பயணத்தில், என்னளவில் எனக்கு இந்தக் குழப்பங்களை உண்டு பண்ணும் காலக்கட்டம் எனது வாசிப்பைத் தடுக்கும் வேலையை மும்முரமாக எனக்குள் நடத்திக் கொண்டே இருந்தது. புதுக்கவிதைக்கும் நவீனக்கவிதைக்கும் வித்தியாசம் உணரத் தெரியாக் காலத்தில் அதை விடாமல் நெருங்கிப் புரிந்துக்கொள்ள முயன்றுத் தோற்ற நிமிடங்கள் கணக்கில் அடங்காதவை.
வெறும் ஆர்வம் மட்டுமே உள்ள எந்தவொரு வாசகனும் ஒரு நவீனக்கவிதையை வெகுச் சுலபமாக புறக்கணித்துவிடுகிற வாய்ப்பு அதிகம்.
கட்டுரையின் தொடக்கத்தில் ஆட்ரியன் மிச்சலின் கூற்று அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.
அந்தப் புறக்கணிப்பை வாசகன் செய்கிறானா அல்லது அந்தக் கவிதை அவனை நிராகரிக்கிறதா..? இரண்டு கோணத்திலிருந்தும் உருவாகும் இந்தக்கேள்வி இரண்டுவிதமான பதில்களைக் கொண்டுள்ளது.
ஆம் / இல்லை என்ற இரண்டு பதில்களுமே சாத்தியம்.
என்னைப் பொருத்தவரையில் அதுதான் இதிலிருக்கும் புதிர்த்தன்மையும் சவாலும் ஆகும்.
இதெல்லாம் என்ன?
எந்தவொரு நவீனக்கவிதைக்குள்ளும் ஆதாரமாக சஞ்சாரிக்கும் ஓர் உணர்வை ஒத்திசைக்க, ஒரு வார்த்தையிலிருந்து அடுத்த வார்த்தைக்குப் பரிமாற்றம் பெய்யும்போது இரண்டு வார்த்தைகளுக்கும் இடைப்பட்ட வெளியில் இன்னும்கூட சொல்லுவதற்கு இருக்கக் கூடிய சொற்களை அப்படியே புதைத்துப் பழகுதல் அவசியம்.
எல்லாவற்றையும் எப்போதும் கவிதைக்குள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் நவீனக் கவிதையில் இல்லை.
எதையுமே சுருங்கச் சொல்லுவதும், சொன்னச் சொற்களை மீண்டும் மீண்டும் (Cliche) ஒரு கவிதைக்குள் பயன்படுத்தப்படாமல் தவிர்த்தலும் முக்கியம். பல கவிஞர்கள், எழுதியது எங்கே வாசகனுக்குப் புரியாமல் போய் விடுமோ என்று கவிதைக்குள் தேவையில்லாத ஒரு கவலையை தானே உருவகித்துக்கொண்டு ஓர் உறுத்தல் போல, தானே கவிதையை Justify பண்ணுவதை பரவலாய் காண முடிகிறது. அது நிச்சயமாய் அவசியமில்லாத ஒன்று. கவிதையின் ஆதார வடிவமான நவீனத்தை அது சிதைத்துவிடும்.
அதே போல இன்னொன்று, கவிதைக்குள் கவிதையைத் துருத்திக்கொண்டு கவிஞன் ஒரு Suggestion சொல்லுவது. அல்லது அதுபோன்ற ஒன்றைக் கவனமாக சொல்ல முயல்வது. அதுவும் தேவையற்ற ஓர் Extra செயல்.
நம் வாசகனை நாம் நம்பவேண்டும். அப்போது தான் பரஸ்பரம் அனுபவம் விரியும்.
வெவ்வேறு கோணங்கள் அர்த்தப்படும். அது ஒரு Relay Race போலத்தான். நம் சிந்தனைக்குள் ஓடிக் களைத்து ஓரிடத்தை அடைந்ததும் வெளிப்படும் கவிதை, வாசகனின் கைக்கு பரிமாற்றம் கொண்டு, அங்கிருந்து அவனுடைய சொந்தக் கற்பனை வெளிக்குள் அவன் ஓடத் தொடங்குவான்.
அவனுடைய வாசிப்பனுபவத்தை அது பாவும் கவிதையின் எல்லையை அப்படியொரு Justify அல்லது Suggestion மூலம் அதனை எழுதிய கவிஞனே ஏன் குறுக்க வேண்டும்?
வாசகனுக்கோ, அவனுள் விரியக்கூடிய வெவ்வேறு அனுபவ சாத்தியப்பாடுகளுக்கோ நாமே ஒரு வேலியை எதற்கு எழுதியக் கவிதையைச் சுற்றிலும் நட வேண்டும்?
அவசியமில்லை.
குழந்தைகள் இந்த உலகைப் பார்வையால் புரிந்துக்கொள்வதில் தம் வாழ்வைத் தொடங்குகின்றன.
ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு பொருளும் அதன் வடிவங்களும் நிறங்களும் அசைவுகளும் அசைவற்றத் தன்மைகளும் காட்சியாக புலனுக்குப் போய்ச் சேர்வதில் தொடங்குவதாக இருக்கிறது மனிதக் கணக்கு.
அதன்பிறகு தொடர்ச்சியாகக் காணும் ஒவ்வொன்றிற்கும் ஓர் அர்த்தத்தை விளங்கிக்கொள்வதில் ஓர் ஒருமித்த புரிதலுக்கு, கற்றல் தொடங்குகிறது. ஒவ்வொருவரும் தத்தம் அறிவுக்கொண்டு நமக்குத் தெரிந்தவற்றை செய்கைகளாகக் கற்பிக்கிறோம்.
எழுதப்பட்ட ஒரு கவிதை ஏற்கனவே உருவாக்கப்பட்ட வஸ்து போல காத்துக்கிடக்கிறது. அதை அணுகிப் புரிந்துக் கொள்வதில் நமக்கிருக்கும் இடர்பாடுகள் ஏராளம்.
முதலில் அதன் கருப்பொருள். The Concept
பெரும்பாலும் கவிதைகளின் கருப்பொருளை, அதன் தலைப்பே சொல்லிவிடும். அது ஒரு சிறிய வாசல். ஒரு மொழியைக்கொண்டு எந்தவொரு கவிதையும் வாசிக்கத் தடையில்லை. எந்த மொழியில் கவிதை எழுதப்பட்டிருக்கிறதோ அந்த மொழி ஏற்கனவே தெரிந்திருந்தால் போதும். ஆனால் அதன் கருப்பொருளைப் புரிந்துக்கொள்ள ஏற்கனவே கொஞ்சம் அறிந்திருத்தல் முக்கியமாகிறது. அறிந்திருத்தல் என்பது ஒவ்வொரு வாழ்வுப்பின்னணி பொறுத்தும் வித்தியாசப்படும். தன்னைச் சுற்றி இருப்பதையெல்லாம் அறிதல்.
நிலவியல், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனைச் சுதந்திரம் (அ) கட்டுப்பாடு இவற்றைப் பொறுத்தும்கூட மாறுபடும்.
அதன்பிறகே கருப்பொருளின் உள்ளடக்கத்துக்குள் மனம் இறங்கவும், லயிக்கவும் – புதிய தரிசனங்களைச் சிந்தனை வழியே கவிதையின் நிலைத்தன்மையையும் மீறிக் கண்டடையவும் முடியும்.
இதற்கெல்லாம், மனித இயல்பின் அடிப்படை உந்துசக்தியான காண் அறிவே (Observation) துணை செய்யும். Observing each and everything is a key point to understand an Art. இது கவிதைக்கு நூறு சதவீதம் பொருந்தும். நம்மைச் சுற்றி இறைந்துக் கிடக்கும் ஒவ்வொரு பொருளும் அதன் தன்மைகளும் அசைவற்றுக் கிடந்தாலும் அவைத் தொடர்ந்து நம் மீது வினையாற்றுகின்றன. இது ஓர் உளவியல் பாங்கான நிதர்சனம்.
அக்றிணைப் பொருட்கள் கூட உயர்திணை மனோபாவத்துக்கு வாசிப்பவனை இட்டுச்செல்லும் மாயத்தன்மை கவிதைகளுக்கு உண்டு.
ஏனெனில் இங்கு நம்மைச் சுற்றி இடம்பெற்றிருக்கும் பெரும்பாலும் பொருட்கள், நாம் நமக்காக நம் வசதிக்காக வடிவமைத்துக் கொண்டவை. அது நம் வாழ்வு நகரும் ஒவ்வொரு கணத்தின் மீதும் தம்மளவில் ஓர் எளியப் பங்கைச் செலுத்தும் வல்லமைப் படைத்தவை.
பொருட்களுக்கான மேலோட்ட அர்த்தங்களை நாம் அடிப்படைப் புரிதலுக்காக உற்பத்தி செய்து அகராதிகளில் புதைத்து வைத்திருக்கிறோம். அதனையெல்லாம் மீறி அவை வேறு வேறு அர்த்தங்களை உண்டு பண்ணக்கூடியவை.
ஒரு கவனித்தல். அதைத் தொட்டு ஒரு புரிதல். இதற்குத்தான் அந்த Observing தேவையாகிறது.
அது எல்லாவற்றையும் கடந்து வேறொன்றை நமக்குக் கடத்துவதற்காக முயல்கின்றது. அதைப் பிரதானப்படுத்துவதற்கென்றே சம்பவங்கள் நிகழ்கின்றன.
ஒரு சம்பவம் ஏனைய விஷயங்களை உள்ளடக்கி நம்மை எதிர்கொள்ளவும் அல்லது வெறுமனே கடந்துச் செல்லவும் கூடும். அப்படி எதிர்கொள்வதற்கும் வெறுமனே கடந்துப் போவதற்குமான வித்தியாசம் என்பது நம்முடைய கவனித்தலின் கூடுதல் ஆற்றலைப் பொறுத்த விஷயம்.
அதற்குள்ளே ஒரு செய்தி இருக்கும். அது வேறொன்றை நினைவில் மீட்டும். அந்த நினைவு முற்றிலும் வேறொன்றை சம்பந்தப்படுத்தி ஒரு புது அர்த்தத்தை மனத்தில் உருமாற்றம் செய்யும்.
இன்றுக்கும் அன்றுக்குமான, இப்போதைக்கும் அப்போதைக்குமான, இக்கணத்துக்கும் அக்கணத்துக்குமான ஓர் இணைப்புப் பாலத்தை பாதி நிமிடத்துக்கும் குறைவான நேரத்துக்குள் நம் மூளைக்குள் இருக்கும் நியூரான்கள் (மனம்) கட்டிமுடித்து விடும்.
அது ஓர் ஒப்புமை (Simile) – Simply a Comparison
ஒரு Observation- ம் அதற்கு ஈடான ஒரு Comparison -ம் எந்தவொரு கவிதைக்கும் இன்றியமையாத விஷயம். அவற்றைத் திறம்பட செய்பவை உருவகங்கள் மற்றும் படிமங்கள் ஆகும்.
அவ்வகை உருவகங்கள் மற்றும் படிமங்கள் ஒரு கவிதையின் கருப்பொருளையும் அதன் உள்ளடுக்குகளையும் படிப்படியாக மனத்தில் வளர்த்தெடுக்க உதவுகின்றன. இந்த வழிமுறையில் ஒரு நவீனக்கவிதையை அணுகும் வாசகன், அதனைவிட்டு எளிதில் வெளியே வருவதில்லை.
அது அவனுக்குள் எண்ணிலடங்கா வாசல்களைத் திறந்துவிட்டு கட்டற்று பயணிக்கத் தூண்டும்.
சரி.
காட்சி எனப்படும் Visual -க்கும் படிமம் எனப்படும் Image – க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு Visual என்பது வெறுமனே ஒன்றைக் காண்பது மட்டுமே, அதற்கு எந்தவோர் அர்த்தமும் கிடையாது. அங்கே எந்தவோர் அர்த்தமோ, அர்த்தத்தின் தேவையோ இல்லை. குழந்தைகள் காண்பது வெறுமனே ஒரு காட்சி மட்டுமே.
ஆனால் போதிய அறிவை, கற்றல் மூலம் அடைந்துவிட்ட (Adults) நமக்கு ஒரு Image என்பது அப்படியல்ல. வெறுமனே காணும் ஒரு காட்சியல்ல. அது சில அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. அந்த Image –க்குள் அடங்கி இருக்கும் ஒவ்வொரு விதமான வடிவுக்கும் ஒரு பெயருண்டு. அது உள்ளடக்கிப் பிரதிபலிக்கும் ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு பெயருண்டு. இப்படி, புரிதலுக்கான அர்த்தங்களைக் கொண்டு தாங்கி நிற்பது Image. அதாவது நாமரிந்திருக்கும் படிமம் என்னும் பிரதிமை.
அதனால் தான் Photography -யில் Image என்கிற ஆங்கிலச்சொல் அர்த்தம் பொதிந்து பயன்படுத்தப்படுகிறது. அதையே நாம் இன்னொரு சொல்வழக்கைக் கொண்டு நவீனமாக Visual Beauty என்று சொல்கிறோம். கவனியுங்கள் வெறும் Visual அல்ல கூடவே Beauty என்ற இணைப்புச்சொல் அவசியமாகிறது. அப்படித்தான் அது Image வகையைச் சார்ந்தது ஆகிறது.
ஆனால் அதையும் இன்று இன்னும் சுருக்கி..
‘ என்ன விஷூவல்டா..! ‘ -என்றொரு வியப்பைப் பகிர்ந்துக் கொள்கிறோம். சொல்லப்போனால் புழக்கத்தில் ஒரு Default Understanding -ல் அதனை அனுசரித்துப் பழகிவிட்டோம்.
ஆனால் மகாகவியான பாரதிக்கு, அதிலிருக்கும் வித்தியாசங்களின் மீதான துல்லியத்தில் ஏதொரு சந்தேகமோ குழப்பமோ கிடையாது. இந்த இயற்கையைக் கண்டு, தன் கவிதைக்குள் மிக அழகாகக் கேட்டார்.
‘ வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம் கானலினீரோ?- வெறுங் காட்சிப் பிழை தானோ? ‘-என்று
அதனால் தான் அவன் மகாகவி. நமக்குக் கற்றுத்தந்த ஞானகுரு. அறிவியல் கண்கொண்டு இயற்கையைத் தரிசித்துக்கொண்டே, அதை கவிதைப் படிமமாக உயர்த்தத் தெரிந்த ஓர் இனிய கலாரசிகன் அவன்.
பிரதிமை எனப்படும் படிமம் வெறுமனே காணும் பொருட்களின் அர்த்தங்களை மட்டும் தாங்கி நின்றால் அது, Photography -க்கு சரி. ஆனால் கவிதைக்கு?
அதற்குத்தான் ஏற்கனவே நம்மிடம் இருக்கும் உருவகம் என்ற பதம் பயன்படுகிறது.
Metaphor, என்று இதனைத்தான் ஆங்கில நவீனக் கவிதைகளில் கையாள்கிறார்கள். உருவகம்.
(அதைப் பற்றி விரிவாக வேறொரு கட்டுரையில் அலசுவோம். இப்போதைக்கு இந்தக் கட்டுரைக்கு ஏற்றவாறு சுருக்கமாக)
இந்த Metaphor ( உருவகம்) என்பது, ஓர் உருவம் (படிமம் / பிரதிமை) ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுதல் கொள்ளும் தன்மையையும், அப்படி மாறும் கணத்தில் கருக்கொள்ளும் வித்தியாசத்தையும் கவிதைக்குள் அடையாளப்படுத்த உதவுகிறது.
அவ்வகையான உருவகம் (Metaphor)ஒரு பிரதிமையோடு ரசவாதம் ஆகும்போது அந்தப் பிரதிமை, ஒரே பொருளின் (அல்லது) தன்மையின் சாயல்கொண்ட வெவ்வேறு அர்த்த சாத்தியங்களை ஓரிடத்தில் குவித்து முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை நம் மனத்தில் கடத்த முயல்கின்றன.
இந்தக் கவித்துவக் கலவையை ஒன்றுப்படுத்தி பயன்படுத்தும் விதமாகத்தான் இன்றைய நவீனக்கவிதைப் புழக்கத்தில் படிமம் என்றோ Metaphor என்றோ அவரவர் புரிதல் வசதிக்கேற்ப நாம் சொல்லியும், பிறரைப் பயமுறுத்தியும் பழகுகிறோம்.
அகராதியைப் புரட்டிப்பார்த்து அதனதன் (Metaphor &படிமம்) சொற்களுக்கான தனித்தனி அர்த்தங்களை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு, ஒரு நவீனக்கவிதையை வாசகன் ஒருவன் நெருங்குவானென்றால் குழப்பமும், முற்றிலும் வேறொரு அர்த்தப் புரிதலையும் மட்டும் தான் அவன் அக்கவிதையிலிருந்து பெற இயலும்.
இது, சொற்களுடனான கவிதைப்பயணத்தை திசைத் தொலைந்த ஒரு படகு, பெயரற்ற ஒரு தீவில் ஒதுங்கியோ அல்லது பாறைச்சூழ் கரை ஒன்றில் மோதி உடைந்தோ, மேற்கொண்டு முடியாமல் தன் பயணத்தை முடித்துக்கொள்ளும் விபத்துக்கு ஆட்பட்டது போலாகிவிடும்.
இவ்வகையான சொற்களின் மெல்லிய வித்தியாசத்தில்தான் ஒரு நவீனக்கவிதை தன் அடிப்படை அர்த்தத்திலேயே வாசகனுக்கும் தனக்குமான இடைவெளிகளோடு காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஒருவர் புரிந்தது என்பதும். இன்னொருவர் தனக்குப் புரியவில்லை என்பதும் இந்த வித்தியாசங்களிலிருந்து தொடங்குவதாகவே நான் நம்புகிறேன்.
அப்பேற்பட்ட இடைவெளிகளை ஒரு வாசகன் எளிதாகக் கடக்கவே கவிதைக்குள் கையாளப்படும் ஒவ்வொரு உத்திகளும் புரிதலோடு பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும். அதற்கான கலந்துரையாடலாக இந்தக் கட்டுரை அமையவேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட புரிதலுணர்வை உண்டு பண்ணவே தொடர்ந்து நவீனக் கவிதைத் தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எண்ணற்ற கோட்பாடுகள், தொடர்ந்து வெவ்வேறு காலக்கட்ட நிலைகளில் கருத்தாய்வு செய்யப்பட்டு அவைகளின் சிக்கலான வடிவங்கள் எளிமையாக விவாதிக்கப்பட்டு அவைகள் முறையாகத் தொகுக்கப்படுகின்றன.
நவீனக் கவிதைகள் மீதான அதீத ஆர்வமுள்ளவர்கள் அவற்றைத் தேடிப்பிடித்து, அதிலுள்ளவற்றை தம் தொடர்ந்த வாசிப்பனுபவத்தினூடே அடையாளப்படுத்தி, தன் புரிதலுணர்வின் நிலைத்தத் தன்மையிலிருந்து அடுத்த அடுக்குக்கு நகர்ந்துக் கொள்ள முடிகிறது.
அதுபோன்ற முயற்சிகளிலும் அக்கறையான உழைப்பிலும் தொடக்கத்தில் சொன்ன அந்த அடிப்படை Observing என்பது ஒரு கவிமனத்துக்குள் கூர்மையாக வேறொரு தளத்துக்கு Update ஆகிறது. அது ஒரு கலாரசிகனுக்கு அத்தியாவசியமான ஒன்று.
Observe செய்தவற்றை என்ன செய்வது?
அவற்றை அப்படியப்படியே எழுதி அதை ஒரு படைப்பாகக் காட்டிக்கொள்ள முடியாது. Observing ஒரு அடிப்படைக் கருவி மட்டுமே.
To utilize an Observed mind in a Poetic Space என்பதே கவிஞனுக்கான முக்கியத்துவம். Of course, கூர்மை அவதானிப்பு விரும்பும் வாசகனுக்கும்.
நிகழ் சம்பவங்களும் அவை நம் மூளைக்குள் கடத்த முயலும் செய்தியின் பரிவர்த்தனையும் சீர்ப்படுத்தாத ஆவணக் குறிப்புகள் போல தொடர்ந்து மனத்துக்குள் முண்டும்போது உவமானத்துக்கான (Simile) வெற்றிடம் ஒன்று உருவாகும் நினைவின் தளத்தில் ஒரு Inspiration உண்டாகிறது.
அவை பழைய தகவல்களின் தொகுப்பிலிருந்தோ நினைவுகளின் அடுக்குகளிலிருந்தோ துருத்திக்கொண்டு கவனம் ஈர்ப்பவை. அந்த ஒத்த சாயலின் நிறமே, கவி மனத்தின் மெல்லிய தூண்டலாக ஒரு தொடக்கத்தை உண்டு பண்ணுகிறது.
அப்படி மனத்தின் தூண்டுதல் பெற்ற நிலையை கையகப்படுத்திக் கொள்ள கவிதையின் பழகு வடிவம் தயாராகிவிடும்.
பழகு வடிவம் நவீனக் கவிதையாக இருக்கும்பட்சத்தில். அப்படிப் பழகும் வடிவத்துக்குள் சிறு சிறு உத்திகள் தத்தம் கோட்பாடுகள் சார்ந்து ஒரு ரசவாதத்தை உண்டுபண்ணும் போது கவிஞனின் மொழி, தன் கூர்மையை இழந்துவிடாமல் இருக்கத் தயாராகிவிடுகிறது.
கவிதைக்கான கருப்பொருளின் சூல் (Conceptual genesis) அனைத்தையும் தன் மையத்தை நோக்கி உள்ளிழுக்க ஆரம்பிக்கிறது. மையம் நோக்கிக் குவியும் துணைப் பொருட்கள் உருவகங்களாக, பிரதிமைகளாக ஒன்றைச் சுற்றி மற்றொன்றாக வளர்கிறது.
இந்தக் கட்டுமானத்தின் அடர்த்தியில் கவிதையின் மையம் சட்டென்று கண்ணுக்குப் புலப்படாத அளவுக்கு ஓர் அணுவை விடவும் சிறுத்து கவிதைக்குள் மறைந்துவிடுகிறது.
Just Now (or) Being at this time (or) now existing என்ற நவீனம் கவிதைக்கான Visual Image -ஐ, ஸ்தூலப் பொருளாக மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து சொற்களின் அர்த்தச் செறிவுக்கான இயங்குதளமாகவும் மாற்றிவிடுகிறது.
[இங்கே, மனம் குழம்பும் விதம் / அல்லது குழம்பியது போன்றத் தோற்ற மயக்கம் ஏற்படுத்தும் நனவிலித்தன்மை (Sub Consciousness) பற்றிச் சொல்லவில்லை. அது சர்ரியலிஸம் (Surrealism) குறித்த விளக்கமாகிவிடும். சர்ரியலிஸம் முற்றிலும் வேறொரு வடிவக் கோட்பாடு.
அதைப் பற்றி விரிவாக வேறொரு கட்டுரையில் பேசலாம். ஆனால் – நவீனக் கவிதைக்குள் சர்ரியலிஸத்தின் குணப் பண்புகள் படிமங்களின் சிக்கலான வடிவ மயக்கத்தோடு கலந்துவிடும் வாய்ப்பு அநேகருக்கு எழுதும்போது அறியாமலே ஏற்படும். அது ஒரு கோட்பாடு அவசியப்படாத சிந்தனையின் விபத்து. ]
சொற்களின் அர்த்தச் செறிவுக்கான இயங்குதளம் என்பது தன்னிலிருந்து மேலெழும்பச் செய்யும் படிமங்களை வகைப் பிரிக்க முயலாமல், அப்படியே கவிதையின் கருப்பொருள் சுமந்து கவிதையின் மீது மிதக்க விடுவது. பின் அதுவே கவிதையாகவும் மிதப்பது.
அடுத்து –
என்னோடு இணையத்திலும், சிறு சிறு ஊடக வாய்ப்புகளிலும் எழுதியபடி தொடர்ந்து பயணிக்கும் ஏனைய சக பயணிகளில் இருவரின் இரண்டு கவிதைகளையும், அதனை உள்வாங்கிக் கொண்ட எனது அனுபவப் பார்வையையும் இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.
கட்டுரையில் இதுவரை சொன்னவற்றின் சாரம் / சாயல்களை அந்தக் கவிதைகளுக்குள் அணுகி உங்களால் கண்டுக்கொள்ள முடிந்தால் உங்களைப் போலவே நானும் மகிழ்வேன்.
முதல் கவிதை அவனி அரவிந்தனுடையது.
இந்தக் கவிதை இயற்கையின் உயிரியக்கத்தை, கவிஞனால் துல்லியமாக அவதானிக்க முடிந்த தருணத்தை எனக்கு உணர்த்தியது. நான் அதை வாசித்தது ஓர் இரவில். என் இரவின் அந்த அகாலத்தை இதனுள் இருக்கும் இசையின் ஒவ்வொரு அசைவும் நுண்ணிய அதிர்வோடு மீட்டிக் கொண்டே இருந்தது.
1. எனதிசையின் மரணம்
பழுப்பு நிறப் புழுக்கள்
புசித்து மிஞ்சிய சடலத்திலிருந்து
மிக மெல்லிய இசை துளிர்க்கிறது
அவை மழைத்துளிகள் ஓரிலை நுனியினின்று
தெப்பத்திற் தெறிப்பதற்கு முன்பான
மிகச் சன்னமான இசையை ஒத்திருக்கிறது
எடையற்ற அவ்விசைக்குறிப்புகள்
காற்றுக்கும் மணல்வெளிக்குமிடையில் ஓவியமாகி
சிற்றோடைக்கும் சிறுபாறைகளுக்குமிடையில் ரகசியமாகி
அடங்கா ஆறுகளுக்கும் தடுப்பணைகளுக்குமிடையில் ஏக்கம் பெருகி
நீலக்கடலுக்கும் நீளும் கரைகளுக்குமிடையான
மாரடிப்பில் மரித்துப் போகிறது
இவ்வாறாக எனதிசையின் மரணம் இனிதே நிகழ்கிறது
*****
–அவனி அரவிந்தன்
இனி, கவிதைக் குறித்து எனது பார்வை.
பழுப்பு நிறப் புழுக்கள்..
சடலத்திலிருந்து உருவாகி அந்தச் சடலத்தையே மீண்டும் புசித்து, பிறகு மிஞ்சும் சடலத்திலிருந்து மிக மெல்லிய இசை ஒன்று துளிர்க்கிறது.. ஒரு சடலம், சடலமாவதற்கு முன்பு உடலாக இருந்திருக்கும்..
உயிர்த்தன்மை உள்ளது உடல். உயிரற்றது சடலம்.
சடலத்திலிருந்து இன்னொரு உயிர் உருப்பெறுகிறது, அவை புழுக்கள்.. அது சடலத்தைப் புசிக்கிறது. புசித்தது போக மிஞ்சும் சடலத்திலிருந்து இன்னொரு உயிர்ப்பு துளிர்க்கிறது.
அது மெல்லிய இசை –
இசையின் அரூபத்துக்கு உயிர்க் கொடுக்க விழைகிறது கவி மனம்.
புழு – சடலம் – மெல்லிய இசை. இம்மூன்றும் வெவ்வேறு அல்ல… ஒற்றை உயிர்த்தன்மையின் மூன்று பரிமாணங்கள். அப்படி மிஞ்சும் அச்சடலத்திலிருந்து துளிர்க்கும் அம்மெல்லிய இசையை, நுட்பமாய் ஒப்புமைப்படுத்த கவிதைக்குள் மேலும் துளிர்க்கிறது இன்னொரு படிமம்…
//அவை மழைத்துளிகள் ஓரிலை நுனியினின்று
தெப்பத்திற் தெறிப்பதற்கு முன்பான
மிகச் சன்னமான இசையை ஒத்திருக்கிறது //
வியந்துபோக வைக்கும் துல்லியத்தை ஒப்புமைப்படுத்தும்போதே அதற்குள்ளும் மிகச் சன்னமான இசையொன்றை முன் வைக்கிறான் கவிஞன்.
( இவ்விடம் சர்ரியலிஸத்தின் விளிம்பை மையத்துக்கு இழுக்கிறது.)
******
‘ மழைத்துளிகள் ஓரிலை நுனியினின்று தெப்பத்திற் தெறிப்பதற்கு முன்பான..‘
அதிநுட்பமான படிமத்தை மனம் எட்டிப்பிடிக்க வேண்டியுள்ளது.வாசிப்பவனின் ரசனைக்கு வரைப்படமொன்று எழுதும் வாய்ப்பைத் தரும் கவிதைக் கணம் அது.
எடையற்ற அவ்விசைக்குறிப்புகள்.
காற்றுக்கும் மணல்வெளிக்குமிடையில் ஓவியமாகின்றன. சிற்றோடைக்கும் சிறுபாறைகளுக்குமிடையில் ரகசியமாகின்றன.அடங்கா ஆறுகளுக்கும் தடுப்பணைகளுக்குமிடையில் ஏக்கம் பெருகி நீலக்கடலுக்கும், நீளும் கரைகளுக்குமிடையான மாரடிப்பில் மரித்தும் போகின்றன.
ஓர் ஒப்புமை –
இலைநுனி மழைத்துளியாக வீழ்தலில் தொடங்கும் சன்னமான இசைக்குறிப்பு..காற்றுக்கும் மணல்வெளிக்குமிடையில் ஓவியமாகும்போது நெளிநெளியாய் விரிவதும்..சிற்றோடைக்கும் சிறுபாறைகளுக்குமிடையில் கூழாங்கற்களைப் போல ரகசியமாவதும்..அடங்கா ஆறு – தடுப்பணை – இவைகளுக்கிடையில் ஏக்கம் பெருகுவதோடு – நீலக்கடலுக்கும் நீளும் கரைகளுக்குமிடையான மாரடிப்பில்..
அத்தனை வேகமெடுத்து..
அதன் பரிணாமப் பெருகுதலை வளர்த்தெடுத்துச் சென்று மரித்த இடத்தில், அவ்விசையின் மரணம் இனிதே நிகழ்ந்துவிடுகிறது.
புழுத் தின்று மிஞ்சிய சடலத்தில் துளிர்த்த இசையை, ஒப்புமைப் பயணத்தில் வளர்த்தெடுத்து நிகழும் இறுதி மரணம்..
மீண்டுமொரு உயிர்ப்பின் சுழற்சியாக கவிதையின் உருவெடுத்துவிடுகிறது.
( குறிப்பாக சடலம் என்பது, இக்கவிதையில் மனிதச் சடலமாகவும் இருக்கலாம் வேறு விலங்கோ அல்லது பறவையின் சடலமாகவும் இருக்கலாம் என்கிற தேர்ந்தெடுத்தலையும் வாசகனின் வாய்ப்புக்காக விடப்பட்டிருக்கிறது.. ) – அது ஒரு தோற்றத் தேர்வு (Perspective Choice).
இந்த Perspective மாறுதல் மற்றுமொரு கோணத்திலிருந்தும் இக்கவிதையை வேறு விதமாக வாசிக்கும்படி அழைத்துத் தூண்டுகிறது.
கூர்மையான லயிப்பு ரசனையுணர்வு உள்ள வாசகனுக்கு கூடுதல் மகிழ்ச்சிக்கான வாசக அனுபவமாகவும் அது உயரக் கூடும்.
(Because, அது ஒரு Universal Thought -க்கான அனுமதியும் கூட)
*****
இரண்டாவது கவிதை அண்ணல் எழுதியது.
சமூகம் – என்ற எளிய தலைப்பின் மூலமாக கவிஞன், தன் வாசகனை அழைத்துப் போய் நிறுத்தும் சூழல் வேறாக இருக்கிறது. புற இருப்பிலிருந்து அகத் தூண்டலுக்குள் பிடித்துத் தள்ளுகிறது கவிதை.
கவிதைக்குள் அடுக்கப்பட்டிருக்கும் Metaphor -ன் தன்மை இந்தக் கட்டுரைக்குள் பகிரப்பட்டிருக்கும் உருவகம் (Metaphor) / பிரதிமை (படிமம்) குறித்தத் தரவுகளை நினைவில் மீட்டு அசைப்போட பெரிதும் உதவுகிறது.
2. சமூகம்
*
நான் மூழ்கும் போது
என் தலைக்கு மேலே கடந்துப் போகிறது
யாரோ ஒருவனின் எலும்புக்கூடு
நான் மிதக்கும் போது
என் காலுக்குக் கீழே ஆழப் புதைகிறது
யாரோ ஒருவனின் சதைக்குவியல்
கிளையிலிருந்து கூடு நழுவும் அதிர்ச்சியில்
முட்டைகள் பறவையாகிப் பறந்ததை
நான் என் கண்களால் பார்த்ததைப் போன்றே
யாரோ ஒருவன் என் குரலால் அழைப்பதெல்லாம்
கையளவு நீருக்கான கருணையால் நிகழும்
*****
–அண்ணல்
இனி, கவிதைக் குறித்த என் பார்வை.
// நான் மூழ்கும் போது
என் தலைக்கு மேலே கடந்துப் போகிறது
யாரோ ஒருவனின் எலும்புக்கூடு //
மூழ்க நேரும் கணத்துக்கு முன்பே மிதந்து வந்திருக்கக் கூடிய எலும்புக் கூடுகள், மூழ்கும்போது தான் தலைக்கு மேலே கடந்துப் போவதைக் கவனிக்க முடிகிறது.
அதுவும் –
ஒரு சுயநலச் சூழ் விளைவு தானே.
மூழ்கும்போது நிமிரும் தலை, பிழைத்தலுக்கான வாய்ப்புக்காக அண்ணாந்து ஏங்குதல் அல்லவா அந்த சுயநலச் சூழ்.
// நான் மிதக்கும் போது
என் காலுக்குக் கீழே ஆழப் புதைகிறது
யாரோ ஒருவனின் சதைக்குவியல் //
மூழ்குதலின் பின் மிதத்தல் –
ஆனால் காலுக்குக் கீழே புதைகிறது யாரோ ஒருவனின் சதைக்குவியல். தலைக்கு மேலே கடந்தது எலும்புக்கூடு.
காலுக்குக் கீழே புதைவது – அதுவும் – ஆழப் புதைவது சதைக்குவியல்.
இதில் கவிதை உட்பொருள் வடிவத்துக்கான Formation -ஐ ஏற்றி இறக்கி வைப்பதன் மூலம், Realism -ஐ முறுக்க முடிகிறது. அங்கே அது நவீனமாகிறது. காரணம் மிதத்தலுக்கும் புதைதலுக்குமான படிமத் திருகல் இதில் நிறைவேறுகிறது. புதைத்தல் உறைந்துபோதலின் / கெட்டித்துப் போதலின் (Solidify Base) அடிப்படையைக் கோரும் படிமமாகவும், மிதத்தல் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு உயரும் நீர்மைத் தன்மையைக் (Liquid Being ) கொண்ட படிமமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இக்கவிதையின் தொடர்ச்சியும், அதனை நூலிழுத்த நேர் அர்த்தமிகு எளிமைத் தலைப்பும், வாசிக்கும்போது மனத்தைத் தத்தளிக்கச் செய்கிறது.
அதன்வழியே வாசிப்பு மனம் வேறொரு படிமத்தைக் கோரும் கவி விளைவைப் பகிராமல் இருக்க முடியவில்லை. இப்படியொரு அகத்தூண்டல் நிகழ்த்த முடிகிற கவிஞனின் வரிகளின் சிறகுகள், இச்சமூக நீர்மைக்குள் மூழ்கிப் பறக்க, முதல் இரண்டுப் பத்திகள் மூலமாக ரசவாதம் ஒன்றை எண்ணச் சிடுக்குக்குள் நிறைவேற்றுகிறது.
பின்வரும் பத்திகளை – என் மன நாவு, துண்டித்து உச்சரிக்கச் சொல்லி என்னை அதட்டுகிறது. எப்போதும் என் மன நாவு என்னும் பைத்தியக்காரனுடன் நான் பகை வளர்ப்பதில்லை.
ஒரு விவாத மேஜையை அர்த்தமற்ற தளமாக்கும் சூட்சும வரைப்படம் ஒன்று எப்போதும் வாசக முரண் எழும்பிய பக்கச் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும். என்னுடைய வாசிப்புக்கான மௌன நிலவறையின் ரகசிய படிக்கட்டுகளின் வழியே இறங்கிச் செல்லும் இருளைப் போலிருக்கிறது.. பின்வரும் பத்தி..
// கிளையிலிருந்து கூடு நழுவும் அதிர்ச்சியில்
முட்டைகள் பறவையாகிப் பறந்ததை
நான் என் கண்களால் பார்த்ததைப் போன்றே //
நிலத்தின் மீது நிறுவப்பட்டிருக்கும் ஆகாயத்தை நிராகரிக்கிறது, இந்தப் பாதாள அறையின் முட்டைகள். மேலே இருந்தால் அவை கிளைகள்.
இங்கே, அது வேரின் கிளைகளாக ஒரு மனச்சித்திரம் தோன்றி, அதிலிருந்து நழுவும் கூடு, முட்டைகளைப் பறவைகளாக்கி எங்கே துரத்தும்? அதிர்ச்சி…!
// யாரோ ஒருவன் என் குரலால் அழைப்பதெல்லாம்
கையளவு நீருக்கான கருணையால் நிகழும் //
உருமாற்றம் பெற்றுவிடுகிற அழைப்பு, கையளவு நீருக்கான கருணையாலா நிகழ்கிறது?
முட்டையின் ஓடு – கடக்கும் எலும்புக்கூடு
அதன் கலங்கும் கரு – ஆழப் புதைந்த சதைக்குவியல்.
மிதத்தலுக்கும் மூழ்குதலுக்குமான சிறகுகளின் அதிர்வு, வான் நோக்கி அண்ணாந்து, பிழைப்புக்கென சீறுகிறது. அதனை உந்துகிறது ஒரு குரல். யாரோ ஒருவனின் என் குரல்.
******
அவனி அரவிந்தனின் ‘எனதிசையின் மரணம்’ கவிதையில் இருக்கும் Visual Image -ம், அது வாசிப்பவரை உள்ளிழுத்துக் கொண்டு போய் நிறுத்தும் கவி மனத்துக்குரிய சுய மதிப்பீட்டுக்கான (Self Conscience ) பயணமும், அதன் அர்த்தச் செறிவின் உள்ளடக்கத்திலிருந்து விரியும் அந்த Universal தன்மையும் மேலும் அலசலுக்குரியது. இங்கிருந்து உங்களின் சொந்த Perspective -ல் அதை அணுகியும் பார்க்கலாம்.
அண்ணலின் ‘சமூகம்’ கவிதை, இயல் வாழ்வைப் பிரதி செய்யும்போது (Mimes ), அதன் ஓட்டத்தில் கவிதைக்கான கருப்பொருளின் (Conceptual ) மையம் அதன் உள்ளடுக்கில் புள்ளியாகி மறைவதையும், கவிஞனின் Observed Materials -ன் புறத்தோற்றம், அக வயப்படும் ரசவாதம் ஒரு Inspiration -னாக செயல்பட்டிருப்பதையும், கவிதை தன் தலைப்பிலிருந்து விலகிப் போய்விடாதபடி மனிதக் குரலாக ஒலிப்பதையும் ஏகக் காலத்தில் எதிர்க்கொள்ள முடிகிறது. அதே கணத்தில் அது அனைத்துக்குமான குரலாகவும் உளவியல் உருமாற்றம் (Psychic Transition) கொள்கிறது.
******
இது எல்லாமே வாசிப்பவர் / எழுதுபவர் இருவரின் பிரச்சனைப்பாடுகள் தான். ஊர் கூடித் தேர் இழுக்கும் கதை தான் இது.
தேரின் முகப்போடு பிணைந்திருக்கும் இரண்டுப் பக்க வடங்களையும் இருவரும் (கவிஞன் / வாசகன்) சேர்ந்தே இழுக்க வேண்டிய கட்டாயம், எந்த வடிவத்துக்கான கவிதை முயற்சியாக இருந்தாலும் பொருந்தும்.
ஊர் ஊருக்கு ஒரு தேர் உண்டு.
அது நவீனம் / பின் – நவீனம் / பின் – பின் – நவீனம் / சர்ரியலிஸம், என்று வெவ்வேறு வடிவத் தோற்றங்கள் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு தேரும் அது வலம் வர விரும்பும் தெருக்களை நம்பித்தான் கட்டுமானம் செய்யப்படுகிறது. தேரின் வருகைக்காக அகாலங்களில் எதிர்பார்த்து வீதிகளை சுத்தப்படுத்தி, கோலமிட்டு பரவசத்தோடு காத்திருப்பது, பூஜிப்பது எல்லாம் பிரார்த்தனையின் தேவையைப் பொருத்தும் தேரின் வசீகரம் பொருத்தும் தான்.
இல்லையேல் கவனிப்பாரற்று சிதிலமடைந்து ஏதோ ஒரு முட்டுச் சந்தில், ஒரு பிரம்மாண்ட கட்டுமானக் குவியலாக தன் மீதிருக்கும் கலைத்தன்மைகளின் காலக்கறைகளைக் கனவு கண்டுக்கொண்டே ஒதுங்கி நின்றுவிடும் எந்தத் தேரும்.
இந்தக் கட்டுரையின் இந்த வரி வரையிலும் அசைந்து வந்து நிற்கும் நவீனக் கவிதைத் தேரின் வடம் இப்போது, உங்கள் கையிலும் இருப்பதை உணர்ந்துக் கொள்ள முடியுமென்றால்..
மேலும் ஓர் அடி இந்தக் கை நிலத்தின் மேல் அத்தேர் நகர்ந்ததாகிறது.
(இதெல்லாம் கவிதைக்குரிய காலக்கட்டங்களின் (Poetic Era) பிரதி பிம்பங்கள். இந்தப் பகிர்வின் நிஜ பயன்பாட்டை அறிந்துக்கொள்ள உவகையோடு காத்திருக்கிறேன்)
ப்ரியங்களுடன்
இளங்கோ
***
———————————————————————
இவரது வலைப்பூ: http://kavithaikarandiary.blogspot.in
இவரது மின்னஞ்சல் : elangomib@gmail.com
மூச்சு வாங்க படித்தேன் …
ஆசிரியர் நீங்கள் . உங்களிடம் பாடம் படிக்கிற சிறுபிள்ளை நான் . கற்றுக்கொள்வது பெருஞ்சுகம் . அதை ஆயுள் முழுக்க செய்து கொண்டிருப்பேன் . உங்கள் இந்த பதிவுக்குப் பின் எனக்கு தெரிகிறது நான் இன்னும் கவிதை எழுதவே இல்லை என்று . நல்ல கவிதையை எழுதும் வரை பழகிக் கொண்டே இருப்பேன் . ஆசிரியர் மெச்சும்படியான கவிதை ஒன்று கைவரும் வரை தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கும் . உங்கள் துணையிருந்தால் யாவும் வசப்படும் .
அருமையான பதிவுக்கு நன்றிகள் அண்ணா !!!
கவிதைக்காரன் டைரியிடமிருந்து(இளங்கோ ) ..யாவரும்.காம்-ல் தொடராக வந்திருக்கும் ” நவீனக் கவிதையின் கை நிலம்”முழுமையாக வாசித்தேன்.ரொம்ப நீளமான கட்டுரையாக இருப்பினும் எந்தவொரு கணமும் என்னை அழுப்படைய செய்யவில்லை ,ஒவ்வொரு வரியும் எதோ ஒன்றை எதோ ஒருவிதத்தில் எனக்கு கற்றுக்கொடுத்தது . என்னைப் போன்று எழுத ஆர்வமுள்ள ,எழுத துடிக்கும் அனைவரின் மன நிலத்திலும் விதைக்கப்பட வேண்டிய விதைகளாக இவரது பதிவுகள் அமைந்திருக்கிறது . கட்டுரையின் வரி அசைந்து வந்து நிற்கும் நவீன கவிதைத் தேரின் வடம் என் கையில் இருப்பதையும் உணர்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்…தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பதிவுகள் என் மன நூலகத்தில் எப்போதும் ஓர் இடமுண்டு.
இளங்கோ, இப்பொழுது தான் இந்தக் கட்டுரையை வாசிக்கும் மனோநிலை வாய்த்தது.
// ஒரு வட்டம் வரைய வேண்டுமென்றால் அதற்கொரு மையப்புள்ளி வேண்டும் தானே..? அதே போல் தான் நவீனக் கவிதையும். ஒரு மையத்தை வைத்துத் தான் வட்டமென அது சுழலும்.
ஆனால் மையம் அப்பட்டமாக வெளித் தெரியாது. அப்படித் தெரிந்தால் அது தன் நவீனத்தை இழந்துவிடும்.
ஒரு விஷயத்தின் மீதான பார்வையை நீங்கள் ஆழப்படுத்த சாதாரணத்திலிருந்து அசாதாரணத்துக்குள் நுழைய வேண்டும்.
அதற்கு அதீதச் சிந்தனை தேவை. ஒரு Normal கோணத்திலிருந்து மனம் மேலெழும்பி இன்னொரு கோணத்தைக் கவனித்தல். இதெல்லாம் சாத்தியமா என்கிற பொதுக்கேள்விகள் உள்ளுக்குள் புகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் //
கவிதையியலைப் பற்றித் தெளிவான கட்டுரையைத் துவங்கியிருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. நேரடி உரையாடலுக்கும், எழுத்துப் பிரதிக்கும் உள்ள துல்லியமான வேறுபாட்டை தெளிவாக உணரமுடிகிறது. கவிதைகளை அணுக நல்லதொரு திறப்பாக உங்களது கட்டுரை.
“ பாஷை என்பது வேட்டை நாயின் கால்தடம் “ சுந்தர ராமசாமியின் கூற்றுபோல்.. அர்த்தபுஷ்டி நிறைந்த இந்தக் கட்டுரையின் வாயிலாக இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும். வாசகர்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும்
வாழ்த்துகள் இளங்கோ.