லட்சுமிஹர்
தவசியைத் தேடி ஊர் முழுவதும் சுற்றிக்கொண்டிருந்த மாயன் காளை குளத்துக்கரையில் எந்தவித அசைவும் இன்றி அமர்ந்திருந்தது.
*
1
அந்த டவுன் பஸ் மெதுவாக இருபக்கம் இருக்கும் வயல்வெளிகளை பார்த்துக்கொண்டு போவதாகப் பட்டது ரங்கத்துக்கு. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தவர் சத்தமாக, “நிப்பாட்டிருடா.. எறங்கி நின்னு பாத்துட்டே போவோம்” என்றார் டிரைவரை பார்த்து.
சட்டெனெ அவன் திரும்பி ஒரு மொறப்பை தூவிவிட்டு எந்தவித மாறுதலும் இல்லாமல் வண்டியை மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். ரங்கம் அந்தியூர் போய்விட்டு பாப்பநாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார். ரங்கத்தை பாப்பநாட்டுக்காரர்கள் ‘அந்தியூர் ரங்கம்’ என்று தான் கூப்பிடுவர். அந்தியூரின் உறவை முறித்துக்கொண்டு பல வருடங்கள் ஆயினும் அம்மாவுக்காக அங்கு போய்விட்டு வருவார். அம்மா இறந்தபோது ரங்கத்திற்கு சின்ன வயசுதான். அதன் பிறகு பல இழப்புகள். பாப்பநாட்டிற்கு கருப்பு மண்டையோடு வந்தவர் இப்போது நரைத்து விட்டது. வண்டியில் ஓடும் பாட்டுச் சத்தம் அவருக்கு பிடித்து இருந்தது. கையில் வைத்திருந்த பைகளை ஒருமுறை பார்த்துக் கொண்டவர் பத்திரமாக இருக்கிறது என்பதை உறுதி செய்துவிட்டு மீண்டும் பாட்டு கேட்க ஆரம்பித்தார். இன்னும் பாப்பநாடு வர அரைமணி நேரம் ஆகும் என்பதால் தூங்க முற்பட்டார்.
ரங்கம் மாடு வளர்ப்பவர்கள் மத்தியில் படு பிரபலம். சினிமா ஸ்டார் போல. அவரின் நடையை அதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அவரின் நடை ஓர் ஓட்டத்தைக் கொண்டிருக்கும். பையில் வைத்திருக்கும் பொருட்களுக்குள் இருந்து வரும் சத்தமே ரங்கம் வந்துவிட்டார் என்று அங்கு எல்லோரும் அறிந்திட உதவும்.
ரங்கத்தின் கிராக்கி அங்குள்ளவர்களுக்குத் தெரியும். அவர் வைத்திருக்கும் அலங்காரப் பொருட்களில் எது சிறந்தது? அதை நம்ம மாட்டுக்கு எடுத்துடணும் என்று ஒரு போட்டி இருக்கும். பெரும்பாலும் விலை சொல்லி வாங்குவதை விட உறவைச் சொல்லி வாங்கிச் செல்பவர்களே அங்கு அதிகம். ரங்கம் வைத்திருக்கும் அலங்காரப் பொருட்களுக்கு என்று சந்தையில் தனிக்கூட்டம் வரும்.
வாரத்திற்கு ஒருமுறை கூடும் மாட்டுச் சந்தையில் ரங்கத்தைப் பார்க்கலாம். ஒரு பையுடன் தான் வருவார். வேட்டிக்குள் மடித்து வைத்திருக்கும் நியூஸ் பேப்பரை எடுத்து விரித்து மாட்டின் அலங்காரத்திற்குத் தேவையான ஒவ்வொரு பொருளாக எடுத்து வைப்பார். அதற்குள் அங்கொரு கூட்டம் கூடிவிடும். ரங்கம் பேரம் எதுவும் பேசுவதில்லை. அவருக்குச் சரி என்று படுவதைச் செய்வார். சலங்கை, திருகாணி, மணி, கொம்புக்கான கலர் பேப்பர் என்று வியாபாரம் போய்க்கொண்டே தான் இருக்கும்.
ரங்கம் ஆள் கொஞ்சம் பருத்த தேகம் கொண்டவர் தான். முன்பு மாதிரி இப்போது அவரால் நடக்கவும் முடியவில்லை. அது அவருக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.
கடை விரித்து அலங்காரப் பொருட்கள் விற்றல் ஒரு ரகம் என்றால் சில சமயம் புதிய காளையை வாங்கி இருப்பவர்களின் வீட்டுக்கே போய் அலங்காரம் செய்துவிட்டு வருவார். அதற்கு தனி காசெல்லாம் இல்லை. அது பழக்க வழக்கத்துக்காகச் செய்வது. அலங்காரப் பொருளுக்கு மட்டும் காசை வாங்கிக் கொள்வார்.
ரங்கம் அந்தியூரில் இருந்து பாப்பநாட்டுக்கு வந்தபோது அவருக்கு எந்தவித தொடர்பும் இல்லை. தவசி என்கிற ஒருவரின் நட்பு அவரை வேத்து ஆளு என்கிற பார்வையை மாற்றி, வெறும் பேரில் மட்டும் அவரின் சொந்த ஊர் இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தது.
தவசிக்கும் அவருக்குமான முதல் சந்திப்பு எப்படி என்பதெல்லாம் மறந்து இருந்தார் ரங்கம். ஆனால் தவசியும் அவரின் காளை மாயனும் நடந்துவரும் அந்த கம்பீரத் தோற்றம் அவருக்குள் இன்னும் மறையாமல் இருக்கிறது.
எப்போதும் அந்தியூர் சாட்டைனா தனி மௌசு. மூங்கிலை வட்டமா நெருப்பில் வாட்டி, நேராக்கி, அதுல மஞ்சள், எண்ணெய் தடவி தயார் பண்ணிக் கொடுப்பாங்க. கயிறு தயாரிச்சு சாட்டையா செய்யுறதுல அந்தியூர் சாட்டைக்கு எப்பயும் தனிச்செல்வாக்கு. அப்படி ஒருநாள் தஞ்சாவூர் சந்தைக்கு வந்திருந்தப்போ ஏற்பட்ட உறவுதான் இந்த பாப்பநாட்டில் நிலைகொள்ள வைத்தது. அந்தியூரில் இருந்து நகர எந்தவிதக் காரணமும் இல்லாமல் தான் இங்கு வரநேர்ந்தது. அப்பா அம்மாவை இழந்த பிறகு ரங்கத்திற்கு அந்த ஊர் அந்நியப்பட்டு போய் விட்டது. அங்கிருந்து இங்கு மாட்டின் அலங்கார வியாபாரியாக வந்தவர் இங்கேயே தங்கி விட்டார். அவருக்கு பாப்பநாடு பிடித்திருந்தது. எந்தவித பாசாங்கும் இல்லாமல் திரியும் மனிதக் கூட்டம்.
“ஐயா எறங்கலயா?” என்று தூங்கிக் கொண்டிருந்தவரைப் பார்த்துக் கேட்ட அருகில் இருந்த பையனிடம் “பாப்பநாடா” என்றார் பதட்டத்துடன்.
“ஆமா”
அங்கிருந்து பையை எடுத்துக்கொண்டு ஆமா என்றதற்கு பதில் சொல்லாமல் கீழிறங்கினார். கீழே இறங்கியவரைக் கடந்து பேருந்து சென்று கொண்டிருந்தது. கையில் பையுடன் நின்று கொண்டிருந்தவர் அங்கிருந்து நடக்கத் தொடங்கினார். பையில் இருந்த பொருட்கள் தாங்கள் சரியாக உள்ளோம் என்பது போல ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது. முதல் வேலையாக கன்னியன் வீட்டுக்குப் போக வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டு நடக்கத் தொடங்கியிருந்தார்.
ஒவ்வொரு முறை புது அலங்காரப் பொருட்களுடன் இறங்கும்போது, முன்பே சில ஆட்கள் கேட்ட அலங்காரப் பொருட்களை வாங்கிவந்து அதை முதலில் கொடுத்துவிடுவார். போனமுறை கன்னியன் கேட்ட கொம்புக் கயிறு அதுவும் அவன் கேட்ட அரசியல் கட்சி கலரில் வாங்கி வந்திருந்தார். பையுடன் அவர் வந்து கொண்டிருப்பதைப் பார்த்த ஊரான் ஒருத்தன், “தாத்தா நான் பைய தூக்கியாறென்” என்றதற்கு..
“கைய விட்றா பொடி பயலே, அப்படியே உதவி பண்றேனு அங்க போறதுக்குள்ள பாதிய இவனே களவாண்டுப்புடுவான் எடு கைய”
அவனை அதட்டி விட்டார்.
நடையில் வேகம் கூடியது. கன்னியன் வீடு திறந்து தான் இருந்தது. வீட்டின் முன்னே இருந்த தொழுவத்தில் சீரான இடைவெளியில் மாடுகள் கட்டப்பட்டிருந்தது. வெயில் மாடுகளுக்கு இறங்கக்கூடாது என்று ஆஸ்பெட்டாஸ் சீட் மீது தென்னை மற்றும் பனை ஓலைகள் பரப்பி வைத்திருந்ததைப் பார்த்தார்.
உள்ளே நுழைந்ததும் இவரின் வாசத்தை உணர்ந்த கன்னியனின் காங்கேயம் காளை ‘மெல்லன்’ ஒரமுறை மூச்சை இழுத்து விட்டது. எப்பா இவ்ளோ தூரமா இருக்குறப்பவே பயமா இருக்கே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
“கன்னியா..! கன்னியா..!”
கூப்பிட்டு விட்டு வாசல் படிக்கட்டில் உட்கார்ந்துக் கொண்டார். கன்னியன் பார்க்க மொரட்டுத்தனமா இருந்தாலும் மாடு வளர்ப்பதில் ‘கில்லாடி’. படிச்சவன் அப்படிதான் என்று நினைத்துக் கொண்டார். ஆனால் கன்னியன் அத ஏத்துக்க மாட்டான், “எனக்கு எங்க அப்பன் தான் சொல்லி தந்தாரு, அவரு என்ன படுச்சாரு, உங்க கூட தான சுத்திட்டு இருந்தாரு” என்று பேசுவான்.
கன்னியன் ஊரில் இருக்கும் இளசுகளுக்கு எல்லாம் மூத்தவன். இவர் வீடே கதி என்று சுற்றித்திரியும் இளசுகள். மாடு வளக்குறத சொல்லியா கொடுக்க முடியும்? கூட இருந்து பாத்துக்குறது தான். கன்னியன் உள்ளிருந்து ‘வரேணா’ என்றதும் பையில் கன்னியனுக்கு கொடுக்க வேண்டிய கொம்பு, கயிறை எடுத்து கீழே வைத்துவிட்டு அருகிலிருந்த தொட்டிக்குள் கிடந்த டப்பாவில் தண்ணியை எடுத்து வந்து அந்த ஆஸ்பெட்டாஸ் ஷீட்டின் மேல் ஊற்றத் தொடங்கினார்.
‘வெயிலுக்கு வாடி போயிருதுங்க, போன முறை கோடைக்கு எத்தன மாடு கன்னு செத்துபோச்சு, எங்க கேக்குறாங்க மத்தியான மொட்ட வெயில்ல மேக்க விடாதீங்கடான்னா…’ என்று மேலும் தண்ணியை ஆஸ்பெட்டாஸ் ஷீட்டின் எல்லா பக்கமும் சமமாக ஊற்றினார்.
“அண்ணே சொன்ன மாதிரியே டக்கரா வாங்கிட்டு வந்துருக்கியே”
கன்னியனின் குரல்கேட்டு டப்பாவை தொட்டிக்குள் போட்டுவிட்டு வாசலில் உட்கார்ந்திருந்த கன்னியன் பக்கத்தில் வந்துவிட்டார் ரங்கம். ஒரு சிரிப்பு மட்டும் தான் ரங்கத்திடம் இருந்து. கன்னியன் அவனுக்கான கொம்பு கயிறை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ரங்கம், அதற்குள் பையில் வைத்திருந்த பொருட்களை எடுத்து காட்டத் தொடங்கினார். அதில் கயிறு ஐட்டம் தான் நிறைய இருந்தது. மாட்டிற்கு தேவையான ‘தலை கயிறு, கொம்புக் கயிறு, மூக்கணாங் கயிறு, முகரச்செண்டு, பாறைக் கயிறு’ என எடுத்துக் காட்டிக்கொண்டே இருந்தார். கன்னியன் அவனுக்கு தேவையானது ஏதும் இருக்குமா என்று பார்த்துக் கொண்டான். கையில் வைத்திருந்த கயிற்றுக்கு விலையைக் கேட்டு வாங்கிக்கொண்டான் கன்னியன். அவனது ‘மெல்லன்’ காளைக்கு அது சரியாக இருக்கும் என்று சொன்னது ரங்கத்திற்கு பெரும் நிம்மதி. காசை வாங்கி பத்திரமாக பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். தரையில் எடுத்துக் காட்டிய அனைத்தையும் மீண்டும் பைக்குள் எடுத்துவைத்துக் கொண்டார்.
“புதுசா வண்டி மாடு வாங்கிருக்கே” என்றான் கன்னியன்.
“பாப்போம்” என்றார் ரங்கம் சிரித்துக் கொண்டே.
வண்டிமாடு கட்டியிருக்கும் பின்பக்க வீட்டிற்கு அழைத்துப் போனான். அவனது தொழுவம் சுத்தமாக இருந்தது. மாட்டை காட்டி என்ன ரகம் என்று கன்னியன் சொல்வதற்குள் ரங்கம் “மணப்பாறை காளையா?” என்றார்.
ஆச்சரியப்பட்டு “எப்படி?” என்றான்.
என்ன கன்னியா.. வளக்குறவனுக்கு மட்டும் தான் தெரியணுமா என்ன?”
“இல்லணே அப்படி சொல்லல எப்படி மணப்பாறைனு..” என்று நிறுத்திக் கொண்டான்.
“திமில பாத்தாலே தெரியுதே, மணப்பாறை காளைங்க திமிலு தான் இவ்வளவு பெருசா இருக்கும். வண்டி மாட்டுக்கு சரியான ரகம்யா”
கன்னியனுக்கு ஒருவித சந்தோசம்.
ரங்கம், காளை இன்னும் கம்பீரமாக இருக்கும் என்று அந்த மாட்டிற்கான அலங்காரப் பொருட்களை மனதிற்குள் நினைத்துக்கொண்டார். ஆனால் அவர் கன்னியனிடம் அதை சொல்லிக்கொள்ளவில்லை. தேவைக்கு தான் வியாபாரம், அது அவரின் கொள்கை. கன்னியனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி நடக்கத் தொடங்கினார்.
மழை பேஞ்சு சொதசொதவென்று இருந்த காவேரி ஆத்துக்கரையில் தான் தவசியை கடைசியாகப் பார்த்தது. அவ்வளவு உற்சாகத்தோடு தான் இருந்தான் தவசி. எப்போதும் முன்நின்று அடிக்கும் வலிமை கொண்டவனாகவே இருந்தான். அவன் வளர்த்த மாயனும் அப்படியே தான். களத்தில் ஒருத்தனையும் நெருங்க விட்டது கிடையாது. அலங்காரமே தேவையில்லாத புலிசாரை ரகக்காளை மாயன்.
ரங்கத்திற்கு ஏதோ போல இருந்தது. நடக்க முடியவில்லை. கைப்பை சட்டென எடை கூடிவிட்டது போல இருந்தது. இன்னும் கொஞ்சதூரம் தான் என்று வேக நடையை இன்னும் வேகப்படுத்தினார்.
தவசி இறந்து விட்டானா என்று தெரியவில்லை. அவன் காணாமல் போன பின் இங்கு ஒரு பெரும் அமைதி நிலவியது. அந்த அமைதி காணாமல் போன தவசியின் மரணத்திற்கு கூட எடுத்துக்கொள்ளலாம். பகை இல்லாத களம் என்று இங்கு எதுவும் இல்லை. அதுவும் வாடியின் பகை கெளரவத்தால் மூடப்பட்டிருக்கிறது. திறந்து அடங்கும் பட்சத்தில் இங்கு இருக்கும் நிலம் அறிய விழும் ரத்தம் மறைக்கப்படுகிறது. அதில் ஒருவன் தான் தவசியும். மாயனை அதன் பிறகு ஒரு பிடிக்குள்ளும் வைக்க முடியவில்லை. வாடியில் அவன் புகழை நெருங்க முடியாது என்ற கூற்றின் நிழல் அவனின் ரத்தத்திற்கு விடையாக ஆகிப்போனது. அலங்காரம் அற்ற அவனின் பழக்கம் ரங்கத்திற்கு அவன் இருப்பை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.
வேகமாக நடந்த ரங்கம் வந்து நின்ற இடம் குளத்துக்கரை மாயன் கோயில். தவசியின் ஞாபகத்தில் மூழ்கியிருந்த ரங்கத்தின் கண்களில் ஈரம் கட்டி இருந்தது. பையில் இருந்து சில அலங்காரப் பொருட்களை எடுத்து அருகில் வைத்துவிட்டு, மெதுவாக துணி கொண்டு மாயன் காளையின் சிலையைத் துடைக்கத் தொடங்கினார். இன்னும் தவசியின் ஞாபகம் அவரை விடுவதாக இல்லை. அலங்காரப் பொருட்களை ஒவ்வொன்றாக அணிவிக்கத் தொடங்கினார்.
“ரங்கம்… நம்ம மாயன் தான் உன் அலங்காரம் இல்லாம ஜம்முனு இருக்கானு”
கேலியாக தவசி சொல்வது ஞாபகம் வர அவரால் அங்கு அதற்கு மேல் நிற்க முடியவில்லை. தன் பையை எடுத்துக்கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினார். மாயன், வாடிக்கு தயாரான காளை போல இருந்தது. தூரத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ரங்கத்தால் அதன் மூச்சை உணர முடிந்தது.
திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டிருந்தார்.
1.1
‘அன்றிரவு குளத்துக்கரைக்கு ஏன் நான் போகவில்லை?’ ரங்கம்.
2
மாரியப்பன் தன்னுடைய டெம்போவை தயார் செய்து கொண்டிருந்தார். இன்று மதுரை மாட்டுத்தாவணி வரை போய்வர வேண்டியிருந்தது. கன்னியனும் இன்னும் நாலு பேரும் மாரியப்பனிடம் வண்டிக்கு சொல்லி இருந்தனர். ஒரே வண்டி வாடகை தான். ஐந்து மாடுகளை ஏற்றும் அளவு இடம் இருந்தது. வேதன்யம் மலையிலிருந்து நேற்று இறக்கிய காளைகளை மணியப்பனின் சொற்படியே இரவே சந்தையில் விற்றுவிட்டார்கள். ஆனாலும் மணியப்பன் தான் சோர்வாக இருந்தார். வயதான அயர்ச்சி அப்படியே தெரிந்தது.
“என்னப்பா மூஞ்சியே சரியில்ல?” என்றதற்கு..
“மூஞ்சி இல்லடே” என்று மட்டும் சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டார்.
அவருடைய கிராமத்தில் அவரை இறக்கிவிட்டு சந்தைக்கு போனார்கள்.
மணியப்பன் இருக்கும் கிராமத்தில் இருந்து வரும் காளைகள் எப்போதும் வாடியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தக் கூடியது.
அப்போது மாரியப்பனுக்கு சின்ன வயசு. வேதன்யம் மலை கிராமத்து மாடு என்றால் வாடியில் பிடி வீரர்கள் குறைந்து போவார்கள். அவர்களின் வளர்ப்புக் காளைகள் வாடியில் அப்படி ஒரு இருப்பைக் கொண்டிருக்கும். களத்தில் வந்து தான்தோன்றித்தனமாக சுத்தும் காளைகள் இல்லை, ஆள் பார்த்து நின்று சுத்தும் காளைகள் அவை. காளைகளின் வேகத்தை விட வளர்ப்பவர்களின் வேகம் இரண்டு மடங்காகக்கூட இருக்கலாம். அப்படித்தான் மணியப்பனின் காளைகள் வாடியில் நின்று சுத்தும் காளைகள். அப்படி நின்று சுத்தும் காளைகள் மனிதக்குடலை எடுக்காமல் நகராது.
இப்போது மணியப்பனின் தளர்ந்த நடையைப் பார்க்கும்போது கஷ்டமாக இருந்தாலும், வயது அப்படிதான் என்று விட்டுப்போக முடியவில்லை. அவர் சொன்னது போல, கவலை மூஞ்சியில் இல்லை. இருபது வருடங்கள் கடந்தாலும் தவசி காணாமல் போன ஏக்கம் அப்படியே இருந்தது.
மணியப்பன் தானாக வந்து காளைகளை வாடியில் அவிழ்ப்பது கிடையாது. அவருக்கு என்று தனி அழைப்பு இருக்க வேண்டும். அவ்வளவு தாட்டியமாக இருக்கக் கூடியவர். ‘வித்த தெரிஞ்சவனுக்கு இறுமாப்பு இருக்கத்தான் செய்யும்’ என்பது அவருக்கு காதில் விழுந்தாலும் அவர் ‘இன்னும் சத்தமா கேக்கணும்’ என்பார். இந்த இறுமாப்பு இங்கு மாடு வளர்க்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அப்போதிருந்து இப்போதுவரை இருக்கிறது.
வாடியில் ஒரு சுத்து சுத்தி நின்னு விளையாடும் காளை பிடிபடாது, களத்தில் காளையின் ஆட்டத்தை விட இப்போது வெளியில் மணியப்பனின் ஆட்டம் பலமாக இருக்கும். தன் ஒற்றைக்காலை எடுத்து இன்னொரு கால்மேல் போட்டு கையை மேல்தூக்கி வேட்டியின் ஒற்றை நுனியை பல்லில் கடித்துக்கொண்டு போடும் குதியாட்டம் ஒரு ரகம்தான். ‘களத்துல மணியப்பன் மாடு நின்னு தூக்குச்சுனா இங்க இவன் காலு தரைல இல்லையே’ என்பார்கள். மாரியப்பனுக்கு மணியப்பன் நடனம் ஆடுவது சிரிப்பாக இருந்தாலும் அவன் ஜெயித்தது போல ஒருவித பூரிப்பு இருக்கும்.
தவசி ஒருநாள் ரங்கம் என்ற ஆளை மாட்டுச்சந்தையில் பார்த்துதான் தெரிந்து கொண்டதாகவும், மணியப்பனின் காளை ஜெயித்ததற்கு அதை அலங்காரம் செய்யும் பொருட்டுதான் ரங்கத்தை தவசி மணியப்பனின் கிராமத்திற்கு கூட்டி போனார். மாரியப்பன் மணியப்பனின் வீட்டின் முன் உட்கார்ந்து கொண்டான். சந்தையில் தேடிப்பிடித்துக் காளைக்குத் தேவையானவற்றை வாங்கத் தவசி அலைக்கழித்ததால் மாரியப்பனுக்கு நிற்க முடியாத அளவுக்கு கால் வலித்தது. உட்கார்ந்து கொண்டான். தவசி அப்போது எங்கே திரிந்தாலும் மாரியப்பனை தூக்கிக்கொண்டு போவார்.
மாரியப்பன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ஜெயித்த காளைக்கு, ரங்கம் அலங்காரம் செய்து கொண்டிருந்தார். மணியப்பனின் அதே நடனம் அவருடன் சேர்ந்துகொண்டு தவசியும் ஆடுவதைப் பார்ப்பதற்கு ஒன்றுபோல இல்லை. இருவரும் ஒருவித மகிழ்ச்சியில் இருந்தனர். ஆட்டம் முடிந்தது.
அன்று மணியப்பனின் பசு ஈன்ற காளையை இருவரும் பார்த்தனர். மாரியப்பன் அதன் அருகில் போய் தொட்டுத்தொட்டு பார்த்துக் கொண்டான். அந்த காளையே மாயன். அன்று அங்கிருந்து கிளம்பும்போது மணியப்பன் அந்தக் காளையை தவசிக்குக் கொடுத்தார். அதை வீடுவந்து சேரும்வரை தொட்டுப் பார்த்துக் கொண்டே வந்தான் மாரியப்பன்.
அலங்கரித்த பொருட்களோடு அன்றிலிருந்து இங்கேயே தங்கிவிட்டார் ரங்கம். இங்கேயே பெண்ணெடுத்து குழந்தையும் பிறந்தது.
மாரியப்பனுக்கு இளம் வயதில் தவசியுடன் இன்னும் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தவசி காணாமல் போவதற்கு முன்னிரவு மாரியப்பனை குளத்துக்கரைக்கு வரச்சொல்லி இருந்தார். ஏன் என்று எல்லாம் கேட்கவில்லை. சரி என்று தலையாட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தான். ‘என்ன சேதினு கேட்டிருக்கலாமோ’ என்று இப்போது யோசிக்கிறான்.
அன்று பேசும்போது தவசியிடம் சிறு பதட்டம் இருந்தது. அவருடன் ரங்கம்தான் உடன் இருந்தார்.
அந்த ஆண்டு நடந்த வாடியில் பிரச்சனை ஏற்பட்டது என்று நினைவு இருக்கிறது. அப்போது அதில் கலந்து கொண்டவர்கள் பாதி பேர் இப்போது உயிருடன் இல்லை.
தவசி மாரியப்பனுக்கு பெரியப்பா முறை. பக்கத்து வீடு.
2.1
ஒத்த ஆளாக என்னை வளர்த்த அம்மாவுக்கு தவசி பெரியப்பா தான் காவல். அப்போதெல்லாம் தவசி பெரியப்பாவுக்கும் வனம் அத்தைக்கும் குழந்தை இல்லை என்பதால் சண்டை வந்துகொண்டே இருக்கும். அப்போது அவர் நிரம்ப குடித்துவிட்டு உளறத் தொடங்குவார். இறுதியில் காளையை அணைத்துக் கொஞ்சிக்கொண்டு இருப்பார். என் அம்மா என்னை அடிக்கும் போதெல்லாம் நான் ‘தவசி பெரியப்பாவிடம் சொல்லிவிடுவேன்’ என்றுதான் சொல்வேன்.
மாடு வளர்ப்பு பற்றிய புரிதல் தவசி பெரியப்பாவுக்கு நிரம்ப இருந்தது. அதை அவருடன் இருந்த காலங்களில் நானும் கற்றுக்கொண்டேன்.
குளத்துக்கரையின் இரவுக்கு பிறகு எல்லாம் மாறி போனது. அந்த இரவு எப்படியானது என்பதை என்னால் விவரிக்கவே முடியவில்லை
பெரியப்பா சொன்ன நேரத்தில் குளத்துக்கரையில் இருந்தேன். நிலா மறைந்திருந்தது. எதற்கும் சூழலை சமாளிக்க ஒரு கத்தி மட்டும் வைத்திருந்தேன்.
நேரம் போய்க்கொண்டே தான் இருந்தது. பெரியப்பா வர்ற மாதிரி தெரியலை. இங்கிருந்து நகர்ந்து விடுவோமா என்று கூட தோன்றியது.. ஆனால் பெரியப்பா சொன்னது நினைவில் வர, வேறு எந்த சிந்தனையும் இன்றி குளத்துக்கரையிலேயே நின்றிருந்தேன்.
கரையில் நிலவிய அமைதி என் பொறுமையைச் சோதித்தது. ஒரு துளி வெளிச்சம் வந்தாலும் கண்டுபிடித்து விடும் அளவு இருள் அப்பி இருந்தது.
இப்போதும் வனம் பெரியம்மா கேட்கும்..
“அன்னைக்கு உன்கிட்ட பெரியப்பா என்ன சொன்னாரு?”
“கரைக்கு வந்துருனு சொன்னாரு பெரியம்மா”
“கூட யாரு இருந்தா? எப்போ சொன்னாரு? கோவமா இருந்தாரா? வேற எதுவும் சொல்லலையா..?”
நான் பெரியம்மாவின் பேச்சை நிறுத்த சத்தமாக..
“பெரியம்மா..!” என்பேன்.
சொல்லு மாரியப்பா.. உங்க பெரியப்பன கொன்னுட்டாங்கடா” என்று அழுவும்.
பெரியம்மா என்னிடம் கேள்வி கேட்பதை இன்னும் நிறுத்தவில்லை. ஒருவரின் மறைவு இப்படி பாதிக்குமா என்று இருக்கும். தவசி இங்கு பலருக்கு முக்கியமானவராக இருந்தார்.
“நீ அன்னைக்கு குளத்துக்கரையில எப்போ வரைக்கும் இருந்த? சீக்கிரம் வந்துட்டயா? நல்லா பாத்தியா யாரும் இல்லையா..?” என்கிற கேள்விகள் இந்த இருபது ஆண்டுகளில் என்னைச் சுற்றி வந்துகொண்டே இருக்கும்.
“நான் விடியற வர இருந்தேன் பெரியம்மா, பெரியப்பா வரவே இல்ல”
“நீ ஒழுங்கா பாத்துருக்கமாட்ட” என அழ ஆரம்பிக்கும்.
எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் நின்று கொண்டிருப்பேன்.
“பெரியம்மா நான் ராத்திரி முழுக்க அங்கதான் இருந்தேன். பெரியப்பா வரவே இல்ல”
அழுகை மட்டுமே பதிலாக இருக்கும்.
நான் ரங்கத்திடம் “எதுக்காவ அன்னைக்கு பெரியப்பா குளத்துக்கரைக்கு வர சொல்லியிருந்தாரு.. நீங்களும் கூடதான இருந்தீங்க?” என்று கேட்டால்..
“நீ கெளம்புனப்பையே நானும் கிளம்பிட்டேன்” என்று மட்டுமே சொன்னார்.
அதன் பிறகு அவரிடமும் அதைப் பற்றி கேட்கவில்லை.
ஒவ்வொரு இரவும் கண்விழித்து இருக்கும்போதும்..
“மாரியப்பா.. ஒன்னும் இல்லடா, புது சரக்கு நம்ம மிலிட்டரி பெருசு கிட்ட வாங்கியார சொல்லிருந்தேன் அதான் காத்தாட குளத்து பக்கம் உக்காந்து குடிக்கலாம்னு தான் வர சொன்னே”
என தவசி பெரியப்பாவின் குரல் கேக்காதா என்று இருக்கும். சரக்கை குளத்துக்கரையில் உக்காந்து குடித்துவிட்டு தவசி மாமா ஆடியிருக்க மாட்டாரா.. கண்டிப்பாக நானும் அவருடன் சேர்ந்து ஆடியிருப்பேன்..
டெம்போ லாரியை மாயன் கோயிலில் நிறுத்தி.. வாங்கி வந்த மாலையை சாத்திவிட்டு டெம்போவை எடுத்தேன்.
தூரத்தில் வேதன்யம் காடு தெரிந்தது. அங்கிருந்த மணல்மேடான கொண்டக்குடிகல் திமிலாகத் தெரிய.. வேதன்யம் காடு காளையின் வடிவை ஒத்திருந்தது.
***
லட்சுமிஹர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தவர் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரி. திரைப்படத் துறையில் Visual Editor ஆக பணி புரிந்து வருகிறார். ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் என்னும் முதல் சிறுகதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகம் வாயிலாக வெளிவந்திருக்கிறது.
மின்னஞ்சல்: lakshmihar.malai@gmail.com