கொடுத்திராத முத்தம்

14

சேகர் சக்திவேல்

மூத்த இரண்டு பேருக்கும் கடைசி கட்சிகாரனுக்கும் பதினைந்து வருடங்கள் வித்தியாசம் இருக்கும். வள்ளிக்கு பெண்பிள்ளை என்றால் அதிக பிடித்தம். செக்காரக்குடியும் அதைச் சுற்றிய எட்டு கிராமங்களும் உள்ள அந்த கரிசல் பூமியின் மரபுப்படி பெண்பிள்ளைதான் இறுதிக்காலத்தில் பெற்றவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும். வள்ளியும் வீட்டுக்கு ஒருத்தியாய் ராணி போல குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு தோழியாய், எல்லாவற்றையும் சரிநிகராய்ப் பகிர தன்பால் ஒரு பெண்பிள்ளை வேண்டுமென நினைத்தாள். இதையெல்லாம் அப்படியே திருச்செந்தூர் முருகப்பெருமானிடம் வேண்டி கண் திறக்கும்போது பதினைத்து வருடத்திற்கு பிறகு வடக்கே பார்த்து நிற்கும் அம்மன் உனக்கு வயிற்றில் வாய்க்கப்போகிறாள் என்றப்படி நகர்ந்துவிட்டாள் குறத்தி ஒருத்தி. பெரியளவில் திடமாயிருந்து பதினைந்து வருடத்திற்கு பிறகு நம்பிக்கையின் எதிர்பார்ப்பில் வள்ளி நின்றபோது ஆண் பிள்ளை வந்து இருவரையும் ஏமாற்றியிருக்கிறது. அவனுக்கு செழியன் என்றும் பெயர் வைத்தார்கள்.

***

“செழியன், அவன் அம்மா வள்ளி மாதிரி நல்ல வளத்தியா வந்து நிப்பான்” என்று ஊரில் சொல்லாத ஆள் இல்லை. வள்ளிக்கு அடையாளமே தன் வளர்த்திதான். மெலிந்த உடம்பே அதிகமாய் காட்டிடும் வளர்த்தி, இரண்டுபக்க கல் மூக்குத்தி, பாத்திரம் விளக்கும்போதே அதிகமாய் நெளிந்து போகக்கூடிய வளைவு டிசைன் தங்க வளையல். ஆங்காங்கே தட்டுப்படும் காதோர வெள்ளை மசுருக்கள் அதுவும் செவ்வாய், வெள்ளி மஞ்சள் பூசி வண்ணம் மாறியிருக்கும்.

ஆம்பளப்பிள்ளை நிறைந்த வீடென்பதால் காலையில் நான்கு மணிக்கு வள்ளி எந்திரிச்சாள் என்றால் இரவு பத்து பதினொன்னு வரைக்கும் கால் ஒரு இடத்தில் நிற்காது. மூன்று பிள்ளைகளும் அந்த கால்களை அப்போது கவனித்தது இல்லை.

செழியனின் மழலைப்பருவம் முழுவதும் அவன் அம்மைக்கு பெண் பிள்ளையாகத் தான் பாவிக்கப்பட்டான். செழியனின் முகப்பாவனை மாறும்வரை அவனுக்கு தென்னமரக் கொண்டை, கடுக்கான் தோடு, பட்டு பாவாடைச் சட்டை என்று அலங்கரித்து ஆர்பரித்துக் கொள்வாள் வள்ளி. செழியனுக்கும் தன் அம்மாவின் மீது அன்பையும் தாண்டிய காதலொன்றை ஒளித்து வைத்திருந்தான். மாலைப் பொழுதில் வள்ளியும், தன் தோழிகளும் வீட்டுவாசலில் அமர்ந்து கதை பேசுவார்கள். செழியனுக்கு தன் அம்மாவின் மடியில் அமர்ந்து கதைகளை கேட்டுக்கொண்டே இருப்பதில் அதிக பிடித்தம் இருக்கும். சில நேரத்தில் மடியில் அமர்ந்து ஆடிக்கொண்டு இருக்கும் போது பாவாடை கிழிந்துபோகும்.

“ஓமடியான் என்னா வரத்து வாரான்ப் பாரேன்” என்று தலையில் அடித்துக் கொள்வாள்.  பக்கத்து வீட்டு அக்காக்களுக்கு செழியனென்றால் அதிகமான பாசம் வைப்பார்கள். தாயத்து, பல்லாங்குழி, துண்டு சீட்டில் போலீஸ் திருடன் எழுதி விளையாடுவது என வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுக்கே செழியன் பழக்கப்பட்டிருந்தான்.

பிழைப்புக்கு நகரத்திற்கு வந்து இருபது ஆண்டுகள் ஆகிப்போனாலும் வள்ளிக்கு கூச்சம் மட்டும் விட்டுப்போனதாயில்லை. தன் வீட்டு ஆண்கள் இல்லாத எந்த இடத்திற்கு வள்ளி போகமாட்டாள். எத்தனையோ முறை செழியன் இதுபற்றி பேசினாலும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டாள் வள்ளி. வறுமை வீட்டின் நடுவே கிடந்தாலும், வள்ளியின் பாசம் அதையெல்லாம் வெளியே தள்ளிவிடும். ரேஷன் அரிசிக்கும், கத்தரிக்காய் புளிக் குழம்புக்கும் அப்படி என்னதான் அந்த வீட்டில் பிடிக்குமென்று தெரியாது, தினமும் அவர்கள் வீட்டு அடுப்பறையில் இருந்து கொள்ளும். மதியமே இரவுக்கும் சேர்த்து பொங்கி வைத்துவிடுவாள். தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய், வெள்ளி மட்டும் சாம்பாரும் மதுரை மீனாட்சி அப்பளமும் மதியச்சோறாய் இருக்கும். விரத நாள் என்பதால் ஒரு வேளை மட்டும் சோறு. மீதமுள்ள இரண்டு வேளைகளும் கோதுமை தோசையும் தக்காளி சட்னியும் அடுப்பறையில் இருக்கும்.

தக்காளியின் விலையை பொறுத்து உள்ளியின் அளவு மாறுபடும். நூறு கிராம் நெய்யை சரியாய் ஒரு வருடத்திற்கு இழுத்து கொண்டுப் போவதில் வள்ளியின் சிக்கனத்தை தெரிந்துக்கொள்ளலாம். வருடத்திற்கு ஒருமுறை வடகமும், கூழ்வத்தலும் வீட்டில் தயாரிக்கப்படும். அதுக்கும் குடும்பத்தின் எல்லா கைகளும் வந்திருக்க வேண்டும். சோற்று கூழ் வத்தலை ரேசன் கடை வேட்டியில் விடியபொழுதில் ஊற்றத் தொடங்குவார்கள். வீட்டின் கடைக்குட்டி என்பதற்காக செழியனுக்கு ஐஸ் ஃபேக்டரியில் கலர்பொடி வாங்கி கூழில் கலந்து ஊற்றுவாள் அவன் அம்மை. சாயங்காலம் வீட்டின் திண்ணையில் எல்லோரும் அமர்ந்தபடி பேசிக்கொண்டே வேட்டியில் தண்ணியை தெளித்து உறித்து எடுப்பார்கள். வெளிப்புறம் காய்ந்தும் உட்புறம் வழுக்கும் உணர்ச்சியை தரும் மாவு போலான வத்தல் சுவையாய் இருக்கும். “வெறும் வத்தல திங்காத.. வவுறு வலிக்கும்ல” என்று மண்டையில் அடித்தப்படி இரண்டெடுத்து அவள் உதட்டுக்குள் வள்ளி வைத்துக் கொள்வாள். அவளைச் சொல்லி குத்தமில்லை. அவளின் கஞ்சாமிட்டிதனம்தான் இன்று இந்தளவு கொண்டு வந்திருக்கிறது.

சரியாய் சொல்லப்போனால் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். முந்தைய மூன்று நாளின் ஏதோ ஒரு கிறுக்கு வேலையைச் செய்து வீட்டின் வெளியே இருக்கும் பூசனமரத்து கம்பைக்கொண்டு செழியனை விளாசிவிட்டாள் வள்ளி. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அது அப்போது அவனுக்கு வலிக்கவே இல்லை. ஆனாலும் தன் கோபத்தை சாப்பாட்டு மீதும், எப்படியெல்லாம் தனிமைப்படுத்தி கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் தன்னைத்தானே வைத்துக்கொள்ள நினைத்தான் செழியன். சோற்று விஷயத்தில் அம்மா எந்த அக்கறையும் அவன் மேல் மட்டுமில்லை யார் மீதும் வீட்டில் வைக்கமாட்டாள். செழியனின் அப்பாவுக்கும் இது பொருந்தும். இப்படியான சேட்டைக்கு பின் வாங்கிய பரிசினால் சாப்பிடாமல் கோபத்தோடு போய் படுத்துக் கொண்டான்.

ஒரே ஒரு அறை மட்டுமே இருக்கும் போலீஸ் லைனில்  தின்பது, விளக்கு ஏற்றுவது இறுக்கமாகப் படுத்துக்கொள்வது என அடக்கிக் கொண்டார்கள். இரவு அம்மா சாப்பிடும்போது அவனின் தொடை வரை கால்சட்டையை ஏற்றிவிட்டாள். வாழைத்தண்டு வண்ணத்தில் இருக்கும் தன் தொடையில் ஆட்காட்டிவிரல் நீளத்திற்கு தண்டவாளம் போன்ற இரத்தம் கட்டியிருந்தது. தேங்காய் எண்ணெயை அதன்மேல் பரப்பி தடவி அழுதாள். அவளின் கண்ணீர் துளி தன் தொடை மீது விழுந்த நொடி தன்னையும் மீறி அவன் உடல் சிலிர்த்து போனது. அவள் இறங்கி வந்துட்டாள் என்பதையறிந்த பின்பும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தன் அதிகமான வீம்பையும், மூன்று வேளையும் உண்ணாமலும் தன் வெறுப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் செழியன். நல்லவேளை, நம்பி என்றொரு நண்பன் அவனுக்கு கூடயிருந்தான்.

வள்ளி சைவமாக இருந்ததால் கிறிஸ்துவர்களென்றால் கடலும், மீன் நினைவும் வந்துவிடும். செழியன் அம்மையும் அப்பனும் திருவாசகம் ஓதி வழிபட்டாலும், மூத்த அண்ணனின் வேலைக்காக பனிமய மாதாவையும் நம்பினாள்.  அம்மாவும் செழியனும் தேவாலயத்தின் வாசலில் நிற்கிறார்கள். கூட்டம் எக்கச்சக்கமாய் நிற்கிறது.

“சஷ்டி, விசாகத்த விடவும் கூட்டம் கம்மித்தான்” என்று வள்ளி முடிக்கும் முன்னரே, “அப்போ ஒங்க மூத்தப்புள்ளைக்காக அங்கையே போயீ நிக்கவேண்டிதான?”என்று செழியன் கேலி செய்தான்.

“வாய் வடக்க வரைக்கும் நீளுது, கிழிச்சுருவேன்” வள்ளி.

பனிமயமாதாவையே நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் திடீரென சுற்றியிருப்பவரைப் பார்த்துவிட்டு அவர்கள் வணங்குவது போலவே மண்டியிட்டு கண்ணீர் சிந்திவிட்டாள். விவரமில்லாத வயதிலும் செழியனுக்கு  ஏதோ ஒரு பெரிய பாரமாய் மனதில் ஏறியது. அவனுக்கு வள்ளியை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்பது போல இருந்தது. அப்படியான சமூகம் அப்போது கிடையாது. அம்மையாகட்டும் கூடப் பிறந்தவளாகட்டும் நெருக்கம் என்பது எப்போதும் இருக்காது. பொத்தி வைக்கப்பட்ட அன்பு எல்லா பொழுதுகளிலும் வீட்டுப் பெண்களிடம் பொக்கிஷமாகவே தென்பட்டிருக்கிறது. மாதாவுக்கு உப்பையும், மிளகையும் எறியும் போதே தன் வீம்பையும் சேர்த்து எறிந்து விட்டான். ஆலயத்தைவிட்டு வெளியே வரும்போது அம்மையின் இடக்கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். அவளுக்கு அவன் தெம்பை பரிமாறினான் என தனக்குத்தானே நம்பிக்கொண்டான்.

அன்றிரவு தூக்கம் ஓரு பெரிய அமைதியை கொடுக்கப்போகிறது என்பதை தெளிவாய் தெரிந்து கொண்டு படுக்கைக்கு சென்றான் செழியன். ஆனால் தன் அம்மையின் மண்டியிட்டு சிந்திய கண்ணீர் துளிகள் அவன் கண்ணுக்குள் நின்று கொண்டே இருந்தது. விரிப்பில் இருந்து எழுந்து பொறவாசலில் போய் உட்கார்ந்தான். அம்மை பாத்திரம் விளக்கிவிட்டாள் என்பதை தரையைக் கழுவி விடுவதில் தெரிந்து கொண்டான். வழக்கமாக செய்யும் அதே வேலையைதான் செய்து கொண்டிருக்கிறாள். ஆனால் முதன்முறையாக தன் அம்மையின் மீது இரக்கமோ இல்லை பாவமோ உள்மனதில் கிடந்து உணர்த்துவதாய் உணர்ந்தான்.

“யம்மா, நா கழுவிவிடட்டா”

“ஏம்ல., தூங்காம முழிச்சிட்டு இருக்க, நேரம் தவறுதுலா..”

”இல்லம்மா, நீங்களும் வாங்களேன், ஒன்னா

படுப்போம்”

“செத்தப் பொறு, வாரேன்”

அம்மையின் மீது கால்போட்டு படுத்துத் தூங்கும் பழக்கம் வைத்திருந்தான் செழியன். அம்மையும் மகனின் தலையை கோரிவிட்டாள்.

விடியற்காலை நான்கு மணி இருந்திருக்கும். செழியனுக்கு மூத்திரம் முட்டி நின்று கொண்டிருந்தது. தூக்கத்தில் எழுந்து மூத்திரம் பேய பொறவாசலுக்கு சென்றான். அம்மை தெரு குழாயிலிருந்து தண்ணீர் பிடித்து கொண்டிருந்தாள். ஐந்து நிமிடம் கடந்திருக்கும், படுக்கையில் கிடந்த வள்ளி கையில் செய்கை காட்டினாள். அப்பாவை அழைத்து வருவதற்குள் வாயில் நுரை தள்ளியிருக்கிறது. விடியகாலையில் தண்ணீருக்கு போனவளை முனி பாய்ந்திருக்குமென்று கை நிறைய திருநீறை அள்ளி அம்மையின் நெற்றியில் பூசிவிடுகிறார் அப்பா. மொத்தமுமாக குழம்பி நிற்கிறான் செழியன். அடுத்தடுத்த நொடிகள் வாழ்வில் வந்திருக்க கூடாத நிமிடங்களாய் அமைந்து அம்மையை ஹைக்ரவுண்டு ஆஸ்பத்திரி வரை இழுத்துக் கொண்டு போய்விட்டது.

ஆரஞ்சு ஃப்ளேவர் ஹால்ஸ் மிட்டாய் சந்தைக்கு வந்த நேரமது. மூத்தவன் செழியனுக்கு இரண்டு வாங்கி கொடுத்திருந்தார். திடீரென தாய்மாமன் அத்தையொருத்தி செழியனை இறுக்கக்கட்டிப் பிடித்து அழுகிறாள். எதுவும் புரியாத மனநிலைமையில் நின்று கொண்டிருக்கிறான். வீட்டை ஒதுங்க வைக்கும் பொறுப்பை சித்தி எடுத்துக் கொண்டாள். சாவு வீட்டை தயார் செய்வதிலும் சிக்கல்கள் நிரம்பிக் கிடக்கின்றன. தொலைபேசி வசதியில்லாத காலத்தில் வெளியூர்காரர்களுக்கு சேதியை பரப்புவதில்  தந்தை போராடிக் கொண்டிருந்தார். ஓய்வுபெற்று குடிபெயர்ந்து வந்திருந்த தந்தி ஆபிஸ் தாத்தாவின் வீட்டில் மட்டுமே ஃபோன் உண்டு. செழியனின் அப்பா எவரிடத்திலும் எளிதல் பழகக்கூடிய முதன்மை தலைமை காவலர். இருக்கும் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஃபோனில் அழைத்து தன் மனைவி தவறியதை அந்தந்த வட்டத்துகுட்பட்ட தன் சொந்தங்களிடம் சொல்லச்சொல்லி உதவி கேட்டார். அவர்களும் நடுயிரவில் சைக்கிள் அழுத்தி ஒவ்வொரு வீட்டில் சொன்னார்கள்.

ரொம்ப ஆசையாய் வாங்கி வைத்த ஆரஞ்சு ஹால்ஸ் தன் சட்டைப்பையில் கிடப்பதை செழியன் உணர்ந்திருக்கிறான். செழியனுக்கு நாவுக்கு அடியிலிருந்து எச்சில் சுரக்கிறது. சுற்றியிருக்கும் ஒப்பாரி சத்தத்தில் வாயில் போடுவது சங்கடமாக இருக்கிறது. ஆனாலும் அது அவன் நாவை உறுத்திக்கொண்டே இருக்கிறது. யாருக்கும் தெரியாமல் ஆரென்ஞ் ஹால்ஸை வாயில் போட்டுக்கொண்டான்.

நடுராத்திரியில் ஒருமுறை அம்மையை பார்ப்பதற்கு வீட்டுக்குள் பெண்கள் எல்லோரும் அழைக்கிறார்கள். முக்காலியில் அமர்த்தி மூலையில் உட்கார வைக்கப்பட்டிருந்தவள் தன் அம்மையே இல்லை என்பதாகவே நினைத்திருந்தான். எல்லா நேரங்களிலும்  பாலீஸ்டர் சேலையில் பார்த்தவளை, பச்சை பட்டுப் புடவையில் பார்ப்பது அவனுக்கு அவன் அம்மாவென்று எவ்வித உணர்ச்சியையும் தரவில்லை. பாலீஸ்டர் உருகி உடம்பில் ஒட்டிவிடும் என்று நினைத்திருந்தார்களாம். பெருமையாய் போய் சேர்வதற்காக அக்காள் ஒருத்தியின் நெக்லசை அம்மாவுக்கு அணிந்திருக்கிறார்கள். தோல் சுருங்கிய கழுத்தில் அது எப்படி பொருந்தும். தாய்மாமன் அழுது முட்டுகிறான். செழியனுக்கு அழுகை என்பது வரவில்லை. வெளியே வந்து கரிசல் மண்ணின் சின்னச்சின்ன உருண்டையை உள்ளங்கையில் மேலும்கீழும் ஆட்டிக் கொண்டிருக்கிறான். அந்த இரவு முழுக்கவும் ஒரு பொட்டு தூக்கமில்லாமல் உட்கார்ந்திருக்கிறான். கால்மீது கால்போட்டு தூங்க அவன் அம்மா இப்போது இல்லை. இப்போதுதான் இல்லாமல் இருக்கும் பட்டியல் அவன் வாழ்வில் தொடக்கம் பெறுகிறது.

தேரை விடியத்தொடங்கியது, வெளியூர் தலைகள் அதிகம் நிரம்புகிறது. அதன்படி ஒப்பாரி சத்தமும் கூடுகிறது. காலையில் ஒருபொழுது அம்மையை பார்த்து அழுதிட அழைத்துச்செல்கிறாள் அப்பனின் தங்கை. நாடி கட்டப்பட்டுவிட்டது. இரு கண்களும் சந்தன வில்லையால் அப்பப்பட்டிருக்கிறது. அதுவும் சின்ன சின்ன விரிசல்விட்டிருக்கிறது. பயம் நிறைந்தவனை சித்தி இடுப்போடு அணைத்துக் கொண்டாள். சாமான்கள் அதிகம் நிறைந்த வீடு அம்மாவை வைப்பதற்காகவே வெறிச்சோடி மாற்றப்பட்டிருக்கிறதா இல்லை அவள் இல்லாததால் வெறிச்சோடிப் போக ஆரம்பித்துவிட்டதா என்பது தெரியாமல் முழிக்கிறான். நெஞ்சி முட்டி நிற்கிறான்.  ஆனால் அவனைப் பொருத்தவரையில் அம்மையைக் காணவில்லை. அவ்வளவுதான்.

இறுதிப் பொழுதுக்கும் முந்திய நேரத்தில் சட்டையை கழற்றியப்படி வீட்டுக்குள் வர அழைத்தனர். இப்போது ஒப்பாரியின் சத்தம் காதைக்கிழிக்கிறது. இழுவை அதிகமாக எழும்புகிறது. வார்த்தைகள் புரியவில்லை. இரும்புக்கட்டிலில் கிடத்தப்பட்ட அம்மையின் உதட்டில் வெற்றிலை இடித்து வைக்கப்படிருக்கிறது. விரத சோற்றுக்கு பின் உதட்டில் பரிமாற்றிய வெத்தலையின் ருசி அழுகையை வரவைத்துவிட்டது. கத்திய கத்துக்கு வீட்டுக்குள் கூடியிருந்த ஊர் அமைதியாகிவிட்டது. அப்போதும் அவன் அம்மா எழும்பவில்லை. ஆனாலும் அவன் கால்கள் நகர மறுக்கிறது. பயம் நிரம்பிக் கிடந்தது. மூத்தவர்கள் இரண்டுபேரும் ஆளுக்கொரு பக்கமாய் கட்டிலில் உட்கார்ந்து அம்மையிடம் கதை சொல்லி அழுது கொண்டிருக்கிறார்கள். செழியனுக்கு இப்போதைக்கு இந்த இடத்தைவிட்டு நகரவேண்டும். அண்ணன்கள் இருவரும் அம்மையின் கையைப்பிடித்து முத்தத்தைக் கொடுக்கிறார்கள்.

“பாவிமனுஷி, ஒருத்தன் கல்யாணத்தையாது பாத்துட்டு போயிருக்கலாம்ல”,

“எலும்பும் தோலுமா நிக்கரவனுக்காவது அந்த ஆண்டவன் பாவம் எடுத்துருக்கலாமே”

“அம்மா இனி வரம்மாட்டா, கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுல” ஆச்சி முன்னுக்கு தள்ளுகிறாள். தனக்கு அம்மை இத்தனை தூரம் பயம்காட்டுவாள் என்பது தெரியாமல் போனான் செழியன். அம்மையின் உயிர் போய்விட்டது, உடலும் போகப்போகிறது. இதையெல்லாம் நின்று யோசிக்கக்கூடிய வயதும் அதுவல்ல. சுற்றி பூமாலை கட்டப்பட்ட தேரில் அம்மையை ஏற்றிவிட்டார்கள். தேருக்கு வெளியே ஒரு அடிக்கு நெளிந்த மெட்டியோடு கால்கள் கிடக்கின்றன. வேம்பு சாற்றை ஒவ்வொரு மகனின் உதட்டில் ஏதோ ஒரு விரல் தடவிவிட்டு போகிறது. சுட்டெரிச்சு, காடத்தி சோற்றை தண்ணீர் தெளித்து தின்னு இலையையும் பின்னாலிருந்து திருப்பி போட்டாச்சு.

நாட்கள் நகர்ந்து ஓட அம்மையின் நினைப்பு செழியனுக்குள் தனிமையோடு வளர்ந்து நின்றது. ஆச்சி சொல்லியும் கொடுக்காமல் போன அந்த இறுதி முத்தத்தை நினைத்தே செழியனின் வாழ்வு கலங்கியது. எப்போதும் அடைக்க முடியாத  அன்பின் பெருங்கடனாய், அவனைத் துயர்படுத்தும் ஒரு சொல்லாய்  அம்மைக்கு கொடுத்திராத முத்தம் தொடர்ந்து வந்தது.

***

சேகர் சக்திவேல் -சேகர் சக்திவேல் தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியைச் சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் தனியார் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தொடர்புக்கு :sekarsakthivelblog@gmail.com

14 COMMENTS

  1. வாழ்த்தெல்லாம் சொல்லமுடியாது…வலிக்கும்போது என்னத்த வாழ்த்துசொல்ல உனக்கு?
    எத்தனைபேர் இருந்தாலும்
    வெறுமை தாக்கும்
    அம்மா இல்லாத வீடு…அப்டித்தான்ல,
    சந்தோஷத்த பகிர்ந்துக்க ஆளாலுக்கு இருப்பாங்கதான், ஆனா சோகத்த பகிர்ந்துக்க இந்தமாதிரி ‘எழுத்துகள்’ தான் எப்பவும் துணை, கார்த்திக் புகழேந்தி அண்ணன் சொன்னாப்ல நிறைய்ய வாசி, தொடர்ந்து எழுது, இந்த ‘வலி’களைக்கடந்து சந்தோஷங்களால ஆன உன் எழுத்தையும் வாசிக்க ஆசை. ஹேப்பியா இருக்கு தோழர்.

  2. வாழ்த்துகள் மிகவும் அருமையான கதை மேலும் எழுத வாழ்த்துகள்

  3. வாழ்த்துக்கள். படித்த போது அப்படியே ஊரில் ஒரு கணம் சென்று நான் வந்தேன். நமது ஊர் பெயர்களை சிறக்க மேலும் மேலும் தாங்கள் எழுதவும்.
    மிகவும் அருமை.

  4. அருமை சக்தி. இதேபோல் தொடர்ந்து எழுதுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here