நிகழ்
ஒரு காட்சித் திரைச்சீலை விழுந்ததைப்போல்
நாடகத்தின் மறுகணம் பெரும் கடலாகத் ததும்புகிறது.
ஆளுக்கு ஆள் அதன் உடைப்புப் புள்ளியைக் கையகப்படுத்த
நான் கிழிந்த உடையை மறைப்பவனாகப் போராடுகிறேன்.
அழிவை எதிர்கொள்வதில்தான் எல்லோருக்கும்
அப்படி ஒரு தேட்டம்.
திரைச்சீலையின் கயிறு எனக்கு எட்டாத உயரத்தில் நின்று அவர்களை வசீகரப்படுத்தும் உயரமாவது முரணானாலும்
கடலுக்கு நடுவே அசையாத பாறையாக நானே அவர்களைத் தாங்கி நிற்கும் தளமாக இருப்பதாக நாடகத்தில் வரும் ஒரு குழந்தை சிரிக்கிறது. அதற்கு இன்னும் பல்கூட முளைக்கவில்லை.
அது சரி ஒரு பாறையால் எப்படி திரைச்சீலையை மாற்றிவிட முடியும்.
இப்படி வேண்டுமானால் செய்யலாம். தன் மேல் வழுக்கும் பாசியைப் படரவிட்டுக் கொள்ளலாம்.
ததும்பலில் இதற்கான சாத்தியம்
மிக அதிகம்.
தவிரவும் கடல் சறுக்கி விழும் இடமே அதன் நிகழ்.
***
த்வனி
தூக்க ஊஞ்சலில்
கீழிறங்கும்போது
அணைத்திருந்தேன்.
உள் விழிப்பு
மீட்டாதே என்றது
ஒலியாகவும் சந்தூராகவும் பிரிந்திருந்தக் கணங்களை
எப்படித் தனித்தனியாகக் கையாள்வது?
நான் ஒரே சமயத்தில் இரண்டையும் செய்தேன்.
உயர்ந்தெழுந்தது ஊஞ்சல்.
***
அவரவர் வீடு
உன் வீட்டில் நுழையும் அந்நியனொருவன் அதன் மணத்தைச் சொல்கிறான்.
உனக்கு மணமற்றதான
உனது வீட்டின் ரகசியம் நம்பமுடியாததாகத்தானிருக்கும்.
யாரையும் இங்கே நம்பவைக்க முடிவதில்லை.
நம்பிக்கை என்பதே ஒரு தொடரோட்டமான பிறகு பந்தயத்தில் புறாக்களை
ருசி பார்ப்பதே அதன் புதிர்தான்.
கடல் கரையை நெருங்கும்போதுதான் பொங்கி ஆர்ப்பரிக்கிறது. ஆனால் பாருங்கள் யார் வீட்டின் கரையும் எனக்கு வெகு தொலைவுதான். மின்மினிக்களை இரவில்தான் அடையாளம் காணமுடியும். அது அணுக்கத்தின் தீட்சை.
***
வியாபாரம்
கடவுள் தனது தோட்டத்தின் பழக்கூடையில் சேகரிக்கும்போது தவறி விழுந்த ஒன்றை சாவகாசமாகத் துடைத்தெடுத்து சேர்த்துவிடுகிறார்.
அது உண்ணத் தக்கவாறு இருப்பது
கூடையைச் சார்ந்தது.
கூடையும் கடவுளும் தேர்ந்த வியாபாரிகள்.
மிக பெலஹீனமான இருதயத்திடம் கிரயம் செய்யப்பட்ட வியாபாரம்
ஏமாற்றலுக்கு அப்பாற்பட்டு
ஒரு வாஞ்சையணிவித்த நெகிழ்வாகத் தேம்புகிறது.
துரோகத்தின் கூர்மையை அன்பின் தடிமனே வளமையாக்குகிறது.
சன்னமான எதுவுமே வலிமையானது
இதை நம்பித்தான் ஆகவேண்டும்
மிகச் சன்னமாக அன்புடன்.
பழக் கூடையிலிருந்து
அந்தப் பழத்தை அகற்றுவது
முன்னமே ஒத்திகைப் பார்க்கப்பட்டுவிட்டது.
ஆனால் யாருக்கும் அது
அப்படி என்று தெரியாது.
***
சாகிப்கிரான்