1. அஞ்சலி பற்றிய அகதியின் பாடல்
நினைவு தப்பும் தந்தையின்
வார்த்தைகளில்
அலைந்துழலும்
விரக்தியின் வெம்மை
கையறு நிலையில்
கரையொதுக்கப்பட்டு
காலத்திற்கும் மாறா
வடுவொன்றை
சுமந்தலைபவர்கள்
நாம்.
ரசாயனத்தின் தேக்க விதிகளில்
புதிய சேர்மானமாய்
வகைதொகையற்று
அழிக்கப்பட்டவர்களது
குருதியும் கண்ணீரும்.
மூலக்கூற்றின் அலகில்
உப்பு மிகுந்திருக்கிறது.
எம் உடலங்கள்
கடலின் கரையில்
கூராய்வு செய்யப்பட்டு
ஆகிறது ஒரு தசாப்தம்
கரையொதுங்கும்
அலையின் மீது
மஞ்சள் மலர்களை
தூவி
அஞ்சலி செய்தோம்
அடக்கமாகினோம்.
தாய்த் தமிழகத்தின்
அகதி முகாமிற்குள்.
2. கூழாங்கற்களின் மிதந்தலையும் கனவு
நதியின் மேல்
மிதந்தலையும்
வாழ்விற்காய்
ஏங்குகிறேன்.
நிலம் குருதியாயும்
நீர் கண்ணீராயும்
முள்ளி வாய்க்காலில்
வைகாசி நிலவுடைந்த
கோடை நாளின்
துயரார்ந்த நினைவுகள்
கூழாங்கல்லாய்
அமிழ்த்தி விடுகிறது
என்னை.
நதியின் மேல் மிதந்தலையும்
வாழ்வு
அகதிக்கில்லை என்கிறதோ
இயற்கை.
3.கடல் அல்லது நிலம் அல்லது வேட்கை அல்லது.
1
கடல்மீதும்
சிறுதுண்டு
நிலம் தேடும்
அகதியின் பாதம்.
2
ஒருவன்
அகதி வாழ்வின் எச்சமாய்
பெருங் கடலையும்
சிறு படகையும்
கரித்துண்டால்
கீறிச் சென்றிருக்கும்
பொதுக்கழிப்பறைச்
சுவற்றில்
வெந்து தணியாத நிலத்தின்
பனைகள் அசைந்தன
கண்டேன்.
***
- சுகன்யா ஞானசூரி
soorymicro@gmail.com