ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு – 12
ரூபன் சிவராஜா
ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு பற்றிய தொடரில் அடுத்து நாம் பார்க்க இருப்பது செய்தித்தாள் அரங்கு (Newspaper Theatre). இதன் முதன்மையான அடிப்படை அல்லது ஆதாரம் ‘செய்தித்தாள்’ ஆகும். செய்தித்தாள் எனும்போது சமூக மற்றும் நாட்டு நடப்புகள் தொடர்பான புதினங்கள், தகவல்கள், கட்டுரைகள், அறிக்கைகளைக் குறிக்கின்றது.
செய்தி உள்ளடக்கங்கள் மட்டுமல்லாது புத்தகங்கள், உரைகளையும்கூட மூலமாகக் கொண்டு இந்தவகை அரங்குகளை நிகழ்த்தலாம். சமூக ரீதியான பொருத்தப்பாடுடைய பிரச்சினைகளை அரங்க ஆற்றுகைகளின் ஊடாகப் பிரதிபலித்தல் இவ்வடிவத்தின் நோக்கம். செய்தித்தலைப்புகள், அவற்றின் பேசுபொருட்களை மூலாதாரமாகக் கொண்டு ஆற்றுகையாளர்கள் ஒரு குறுகிய காட்சிபூர்வ நிகழ்த்துகையை வடிவமைப்பார்கள். இந்த வடிவத்திலான அரங்க ஆற்றுகைக்குரிய முன்தயாரிப்புப் பணிகள் பல்வேறு உத்திகளைக் கொண்டனவாக அமையும். பேசுபொருளின் தன்மைக்கேற்ற வெவ்வேறு உத்திகள் கையாளப்படும்.
இதன் முதற்படியாக சமூகப் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் செய்தித் தலைப்பினை ஆற்றுகையாளர்கள் தெரிவு செய்வர். அதாவது தாம் முன்னெடுக்க விரும்புகிற ஆற்றுகைக்குரிய சமாலப் பொருத்தமுடைய பேசுபொருள் சார்ந்த செய்தித்தலைப்பினை தெரிவு செய்வர். பின்னர் சிறிய குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு வாசிப்பு முறைமைகளில் அச்செய்தியை வாசித்து பழகுவர். வாசிப்பு முறைமைகளிலும் வெவ்வேறு உத்திகள் கைக்கொள்ளப்படும்.
வாசிப்பு முறைமை உத்திகள்
வாசிப்பு முறைமை உத்திகளில் முதலில் (Simple reading) ‘எளிமையான வாசிப்பு’ இடம்பெறும். அதாவது வேறு கருத்துக்களையோ வார்த்தைகளையோ உள்ளீடு செய்யாமல், உள்ளதை உள்ளபடி எளிமையான முறையில் வாசிப்பதாகும்.
அடுத்ததாக செய்தியின் தலைப்புகள் அல்லது ஒரு பகுதிக்குள் மேலதிக வார்த்தைகளை, தகவல்களை, விபரங்களை, அல்லது கருத்துகளை உள்ளீடு செய்து வாசிக்கின்ற அணுகுமுறை கைக்கொள்ளப்படும். இது (Complementary reading) ‘முழுமைப்படுத்தல் அல்லது நிரப்பு வாசிப்பு’ எனப்படுகிறது. செய்தியில் தவிர்க்கப்பட்ட தகவல்களைச் சேர்ப்பதனூடே அதனை முழுமைப்படுத்தலுக்கு உட்படுத்துதல் இவ்வாசிப்பு முறைமையின் அடிப்படை. பிற மூலாதாரச் செய்திகள், ஆய்வுகள், அல்லது நமது அறிவுத்தேடலின் பார்வையை உள்ளீடு செய்வதன் மூலமும் இந்த நிரப்புவாசிப்பினை முன்னெடுக்கலாம். வாசிப்பிற்குத் தெரிவுசெய்யப்பட்ட செய்தியில் இல்லாத எந்தத் தகவல், எம்வசம் உள்ளது என்பதுவும் உள்ளடக்கத்தின் போதாமை எதுவெனக் கண்டறிதலும் இந்தக்கட்டத்தின் படிநிலையின் முக்கிய அம்சமாகும்.
அசல் தலைப்பு உதாரணம்: ‘Time இதழின் கருத்துப்படி, ஜெர்மனியின் தலைவர் உலகின் அதிக சக்தி வாய்ந்த பெண்மணி’. ‘அவருடைய சொந்த கட்சியைத் தவிர்த்து..’ என்பதை மேலதிகமாக ஆற்றுகையாளர்கள் சேர்க்கும் போது அது வேறொரு பரிமாணத்தைப் பெறுகின்றது. அதற்கூடாக அசல் தலைப்பு வெளிப்படுத்திய தகவல் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது. அசல் தலைப்பு வெளிப்படுத்திய தகவல் கேலியுடன் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது.
மற்றுமொரு வாசிப்பு உத்தி (Connecting/Crossed reading) ‘தொடர்புபடுத்தல்/குறுக்குவெட்டு வாசிப்பு’: ஆற்றுகையாளர்கள் வெவ்வேறு செய்தித்தாள்கள், கட்டுரைகளிலிருந்து செய்திகளை வாசிப்பர். வெளிப்படுத்துகின்ற தகவல்களை ஒன்றுக்கொன்று முரணாக முன்னிறுத்துதல், ஒருவரோடொருவர் முரண்படுதல் என அங்கு ஒரு முரண்பாடு கட்டமைக்கப்படும். இரண்டு முரண்பட்ட அல்லது தொடர்புள்ள கதையை / செய்தியை / தகவலை வாசிப்பதன் ஊடாக மேலும் ஆழமான விளக்கத்தையும் பார்வையும் பெறுவதோடு, எடுத்துக்கொள்ளப்பட்ட பேசுபொருளுக்கு புதிய பரிமாணத்தையும் பெறுகின்றது. வார்த்தைகளைக் குறுக்குவெட்டாக வாசிப்பதானது அரங்கத்துக்கான புதிய சாத்தியங்களையும் வழங்குகின்றது.
‘அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கங்களின் பயனாக கார்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாறி வருகின்றன’
என்பது ஒரு செய்தி என்றால் அதனுடன் தொடர்புடைய இன்னொரு செய்தி இப்படியாக அமைகின்றது:
‘கார்களினால் ஏற்படுத்தப்படும் மாசுபாடு பொது சுகாதாரத்திற்கும் சூழலுக்கும் மென்மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது’.
இங்கே ஒரே பேசுபொருள் குறித்த இரண்டு விதமான செய்திகளில் இருவேறு முரண்பாடுடைய தகவல்களும் விளைவுகளும் வெளிப்படுகின்றன. இதனூடு விவாதத்திற்கும் சிந்தனைக்குமான வெளி உருவாக்கப்படுகின்றது.
(Rhythmical reading) ‘தாள லய வாசிப்பு’. இதனூடாக பன்மைத்துவமான எண்ணங்கள், கற்பனைகள், காட்சிச் சித்தரிப்புகள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக அரசியல் உரை அல்லது அரசியல் அறிக்கையாகவிருந்தால்; அதனைப் பேரணி அல்லது மாநாட்டில் ஓர் அரசியல் உரையை ஆற்றுகின்ற ஒலிப்புமுறை, அதற்குரிய தொனி, ஏற்ற இறக்கங்களுடன் வாசிக்கலாம். தருணங்களில் தாளத்துடன் ஒரு உரையை வாசிக்கும் போது, அல்லது பாடும்போது, இசை சேர்க்கப்படும்போது புதிய அனுபவமும் வெளிப்பாடும் சாத்தியப்படுகின்றது.
(Mimed Reading) – சைகைகளுடனான வாசிப்பு: இந்த உத்தியில் உள்ளடக்கத்திற்கும் வெளிப்பாட்டுக்கும் இடையில் பெரிய ஒரு இடைவெளியை உருவாக்குவதன் மூலம் செய்தியை அல்லது கட்டுரையை ஒரு கேலிச்சித்திரமாக ஆக்கமுடியும். உதாரணமாக நாடு எதிர்கொள்ளும் மிக மோசமான சூழ்நிலை பற்றி ஆட்சியாளர் ஒருவர் மேசை மீது பல்வேறுபட்ட உணவுவகைகளை நிரப்பிவைத்தபடி அமர்ந்திருந்து பேசுகிறார் என்பதான காட்சிச் சித்தரிப்பினைக் கொண்டு வருதல்.
(Historical Reading) வரலாற்று பிரதிபலிப்பைக் கொண்டு வருதல்: ஒரு செய்தியைக் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி வெளிப்படுத்துதல். இந்தச் செயல்முறை வரலாற்று நிகழ்வுகள், தகவல்களை மீட்டுப்பார்ப்பதனூடாக வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. குறித்த செய்தியை வேறு நாடுகளுடைய சமூக, அரசியல் அமைப்பின் சூழலுக்கூடாகப் பிரதிபலிக்கச் செய்வதனூடும் வரலாற்றுப் பிரதிபலிப்பினைக் கொண்டுவர முடியும்.
(Re-definition) மீள் வரையறைப்படுத்துதல்: செய்தித் தலைப்புகள், சொல்லாடல்கள் பெரும்பாலும் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தைக் குறைத்து தகவல்களை மறைபொருளாகக் கொண்டிருப்பன. அத்தகு சொல்லாடல்களின் பின்னால் உள்ள தகவல்களைக் கூர்ந்து பார்க்க வைப்பதோடு அவற்றுக்கு ஒரு மீள்வரையறையை இந்த அரங்க வடிவத்தினூடாகக் கொடுக்கமுடியும். செய்திக்குள் மறைந்துள்ள மற்றும் தேய்வழக்கு அதிகம் காணப்படுகின்ற, அர்த்தம் இழந்த, உண்மைக்குப் புறம்பான சொல்லாடல்கள் அறிக்கையிலோ, செய்தியிலோ உள்ளடக்கப்பட்டிருப்பின் உடல்மொழி மூலம் அவற்றின் உள்ளார்ந்த உண்மையை வெளிக்கொணர முடியும். இதன் மூலம் பன்மைத்துவ எண்ணங்கள் மீட்டெடுக்கப்படுகின்றன.
(Reinforcement/Improvisation) வலுவூட்டல்/மெருகூட்டல்: எடுத்துக்கொண்ட பேசு பொருளை வலுவூட்டும் அம்சங்களாக ஒலி, ஒளி, காட்சிகள், இசைத்துணுக்குகள், விளம்பரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் வாசிப்பிற்கும் நிகழ்த்துகைக்கும் வலுவூட்டலை மேற்கொள்ளலாம். இத்தகைய வலுவூட்டல்கள் அரங்க வெளிப்பாட்டிற்குப் புதிய அழகியல் பரிமாணங்களையும் ஆற்றுகை வாய்ப்புகளையும் வழங்குகின்றன. மெருகூட்டல்களுடன் ஒரு ஆற்றுகை நிகழ்த்தப்படுகின்றது. மெருகூட்டப்பட்ட காட்சிகளை மேடையில் பரீட்சித்துப் பார்த்து அதன் தொடர்ச்சியாக பார்வையாளர்களின் பங்கேற்பிற்கான வெளியை ஏற்படுத்தி, அவர்களுடைய தீர்வுகளைப் பரிந்துரைப்பதற்கான புறச்சூழல் உருவாக்கப்படுகின்றது.
(Contextualizing) சூழ்நிலைப்படுத்தல்: சில போலியான செய்திகள், அறிக்கைகள் குறிப்பிட்ட விவரங்களை மட்டும் தலைப்புச் செய்தியாக பகிர்கின்றன. அவற்றின் உண்மை விவரங்களை வெளிப்படுத்துவதில்லை. இத்தகைய செய்திகளை அரங்க நிகழ்த்துகைகளாகக் காட்சிப்படுத்தும் போது செய்திகளில் குறிப்பிடப்படாத தகவல்கள் பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
(Field interviews) கள நேர்காணல்கள் – கையாளப்படுகின்ற பேசுபொருள் சார்ந்த பாத்திரங்களை மேடையில் நேர்காணல் செய்தலைக் குறிக்கின்றது. இதனூடாக மேடையில் ஒரு நேரடியான விசாரணை, விவாதம், ஊடாட்டம் ஏற்படுத்தப்படுகின்றது.
வாசிப்பு – உத்திகளின் தெரிவு – ஒத்திகை – ஆற்றுகை – பிரதிபலிப்பு
ஆற்றுகையாளர்கள் மேற்குறிப்பிடப்பட்ட உத்திகளில் அடிப்படையில் பொருத்தமான ஒரு அணுகுமுறையை கண்டடைவர். பின்னர் காட்சிகளை உருவாக்கி அதனை ஆற்றுகையாக நிகழ்த்துவர். பேசுபொருளின் தன்மைக்கேற்ப ஆற்றுகையின் நீளம் அமையும்.
அரங்க ஆற்றுகையின் பின்னர் நிகழ்த்தப்பட்ட காட்சிகள் மீதான பல்வேறு பிரதிபலிப்புகளை (Reflections) வெளிப்படுத்துவதற்குரிய நேரம் ஒதுக்கப்படும். ஆற்றுகை மீதான பிரதிபலிப்பு என்பதைப் பின்வருமாறு நோக்கலாம்:
• காட்சிகளினூடு வெளிப்பட் அடிப்படைத் தகவல், செய்தி என்ன? அதனை தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?
• தலைப்புச் செய்தி கட்டுரை அதன் சொல்லாடல், வாக்கியங்கள் மூலம் வெளிப்படுத்திய கருத்திலிருந்து, அரங்க ஆற்றுகையாக நிகழ்த்தப்பட்ட போது எவ்வாறான கருத்தாக-பார்வையாக மாறியது, மாற்றப்பட்டது?
• அல்லது மாற்றமின்றி உள்ளபடியே வெளிப்பட்டதா?
• பார்வையாளர்களிடம் எத்தகைய உணர்வுகள், கருத்துகள், பார்வைகள் கடத்தப்பட்டன?
• ஆற்றுகை செய்யப்பட்ட கருப்பொருளில் எந்த முக்கிய கூறுகள் திரும்பிப் பார்க்கக் கூடியவை, சிந்திக்கக் கூடியவை, மாற்றத்தை கொண்டுவரக் கூடியவை?
போன்ற விடயங்கள் குறித்த பகிர்வுகள் இடம்பெறும்.
செய்தியை, ஆவணத்தை, சிறுகதையை அல்லது எழுத்தில் உள்ள எதுவாகினும் ஒன்றை விமர்சனபூர்வமாக விசாரணைக்கு உட்படுத்தக் கூடிய உத்திகளும் வெளியும் இந்த அரங்க வடிவத்திற்குள் இருக்கின்றது.
செய்தித்தாள் அரங்கு தொடர்பாக இலகுவாக சொல்வதானால் நாளிதழ் செய்தி, தகவல், கட்டுரை, பதிவு, அரசியல் உரை, அறிக்கை, பிரகடனங்கள் அல்லது ஒரு மதநூலின், வாசகம், நாட்டின் அரசியல் அமைப்பு, மனித உரிமை தீர்மானங்கள் என எழுத்தில் உள்ள எதுவாக இருப்பினும் அதனை முதலில் வெவ்வேறு முறைமைகளிலான வாசிப்பிற்கு உட்படுத்துதலும் பின்னர் அரங்கத்தில் ஆற்றுகையாக நிகழ்த்துவதுமாகும். மேடையில் காட்சிபூர்வ ஆற்றுகைக்கூடாக உருவகங்களை வெளிக்கொணர்தல், விமர்சித்தல், விசாரணை செய்தல், உரையாடலை மேற்கொள்ளுதல், கேலிசெய்தல் எனப் பல்வேறு செயற்பாடுகளுக்கும் விளைவுகளுக்கும் தாக்கங்களுக்கும் உட்படுத்த முடியும். எழுத்தினைக் காட்சிபூர்வமாக மாற்றி, விமர்சன பூர்வமான புரிதலுக்கு உட்படுத்தி, சமூக யதார்த்தத்தில் அதனை பிரதிபலிக்க செய்தல் எனவும் கூறலாம்.
செய்தித்தாள் அரங்குதான் உண்மையில் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் முதலாவது வடிவமாக உருவாக்கப்பட்டது. பிரேசில் நாட்டின் சர்வாதிகார ஆட்சியின் போது பல்வேறு நாடக அரங்க ஆற்றுகைக் குழுக்கள் இந்த வடிவத்தினைக் கையாண்டு சர்வாதிகார ஆட்சி பீடத்தினால் வெளியிடப்பட்ட செய்திகளை விமர்சன பூர்வமான வாசிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாக அறியமுடிகிறது. 1971-இல் செய்தித்தாள் அரங்கு பிறந்தது அந்த ஆண்டுதான் Augusto Boal கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார். சர்வதேச அரங்கப் படைப்பாளிகள் பலர் அவரது விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார்கள். மனித உரிமையாளர்களும் அமெரிக்காவின் புகழ்பெற்ற நாடக ஆசிரியரும் எழுத்தாளருமான Arthur Miller உட்பட்ட பலர் அவரது விடுதலைக்காக குரல் கொடுத்தனர். சர்வதேச படைப்பாளிகளின் அழுத்தங்கள் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார் என்பது வரலாறு.
***
ரூபன் சிவராஜா
நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். “அதிகார நலனும் அரசியல் நகர்வும்”, “கலைப்பேச்சு” (திரை-நூல்-அரங்கு) என இரண்டு கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளது.
மின்னஞ்சல் – svrooban@gmail.com