Saturday, November 16, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்தடம் பார்த்து நின்றேன்

தடம் பார்த்து நின்றேன்

மணி எம் கே மணி

நமக்கு காஸ்டிங் டைரக்டர் பழக்கம் எல்லாம் இன்னும் வந்து படியவில்லை. அலுவலகத்தில் ஆர்டிஸ்டுகளை அழைக்கிற விஷயத்தில் யார் வேண்டுமானாலும் போன் போடுவார்கள். நல்லவேளையாக மிதுன் குமாரின் புகைப்படம் என்னுடைய கண்ணில் பட்டு, நான்தான் அவரிடம் பேசினேன். நான்கு வரி உள்ள வசனத்தை வெகுநேரம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். சொல்லச்சொல்லி கேட்டபோது அவரின் குரலில் அவ்வளவு தடிமனை எதிர்பார்க்கவில்லை. அது அவ்வளவு ஆழம் போயிற்று. நான் பிரம்மிக்கிறேன் என்று கண்டுகொண்டதும் ஒருவகையாக எனக்குள் ஒண்டிக் கொண்டார் என்று சொல்லலாம்.

அவருக்குத் தெரியும். யாரையாவது கெட்டியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் எங்கிருந்தாவது ஒருவன் தோன்றி வந்து காரியத்தைக் கெடுப்பான். சினிமா இல்லையா சினிமா?

சென்னையில் இருந்து இங்கே வந்த அன்று நாலுமணி வாக்கில் மழை. படபிடிப்பு நின்றது. இயக்குனர் உட்பட குழுவினர் மொத்தமும் மைதானத்தில் இருந்து கல்லூரிக்குள் ஓடினோம். குன்றின் மீதிருந்து மழையைப் பார்ப்பது ஜிலுஜிலுப்பாக இருந்தது. சிகரெட் கையிருப்பில்லை. டைரக்ஷன் டிப்பார்ட்மெண்டை சேர்ந்த ஒருத்தனையும் காணோம். மழை நனைத்து விடாத கூரைகளுக்கு கீழே நகர்ந்து முன்னேறி அவர்களைத் தேடியவாறு கல்லூரியின் பக்கவாட்டுப் பகுதிக்கு வந்தபோது அங்கே மிதுன் புகைத்துக் கொண்டு நின்றார். என்னைப் பார்த்ததும் மறைக்க முயன்றார். நான் ஒன்றைக் கேட்டதும் சற்றே வெட்கப்பட்டுக் கொண்டு ஒன்றை நீட்டினார். பற்ற வைத்துக் கொடுத்தார்.

மழை சீறியது. உடம்பின் பல பகுதிகளும் நனையத்தான் செய்தன. ஆனால் புகை நெஞ்சுக்கு தங்கும் கணங்கள் சரியான சிக்சாக். இருவரும் உற்சாகத்துடன் சிரித்துக் கொண்டோம்.

மழை விட்ட பிறகு நான்கு ஷாட்டுகள் எடுக்க முடிந்தது.

அதில் மிதுனுக்கு இருந்தது சில துண்டுகள் தான்.

நாளைய படபிடிப்பு சம்மந்தப்பட்ட ஆலோசனைகள் முடிந்ததும் நான் தண்ணியடிக்கப் புறப்பட்டேன். எப்போதாவது அமருதல் இருந்தாலும், பையன்களுடன் உட்காருவது உசிதமல்ல. கல்யாண் ஒரு பெக்கு போட்டதும் எனது மாரைப் பார்க்க ஆரம்பித்து விடுவான். அதை எல்லோரும் செய்வதில்லை என்றாலும், அவர்கள் சுதந்திரமாக வளைய வராமல், எனக்காக அமுக்குவார்கள். நான் உங்களுடைய கழுதைக் கதைகளைப் பொருட்படுத்த மாட்டேன், ஐ டோன்ட் கேர் என்று எவ்வளவு சொன்னாலும் அவர்களுக்கு முகம் தெளியாது. மேலும் ஏதாவது ஏடாகூடம் நடந்து விடுமோ என்கிற பிரமை இருந்தவாறிருப்பதை நான் விரும்பவில்லை. அப்புறம் கேரளாவில் நுழையும் போதே நான் ஷீயிடம் சொல்லி விட்டேன். அவள் என் தோழி. முடிந்தவரை தினமும் சியர்ஸ் பண்ணிக் கொள்வதாக பேச்சு. குன்று இறங்கும்போது, எதிரே வந்த மிதுனைப் பார்த்ததும் ஒரு ஐடியா. தனியாகப் போக வேண்டாமே?

“மிதுன், சரக்கு அடிப்பீங்களா?”

“வீட்ல இருக்கும்போது அடிக்க முடியாது. பெரிய பொண்ணு திட்டும். இப்டி வெளியூருக்கு வந்தா லைட்டா போடுவேன்.”

“போட்டீங்களா?”

“மேனேஜர் இன்னும் பேட்டா குடுக்கல!”

ஷீ சொன்ன பார் வடகரை என்கிற ஜங்கஷனில் இருந்தது. அதாவது பெண்கள் வந்து அமர்ந்துகொள்ளக் கூடிய அந்தஸ்து அதற்கு உண்டு. ஆரம்ப அறிமுகங்களுக்குப் பின்னர் மிதுனை நல்ல நடிகர் என்பதாக ஷீயிடம் சொன்னது அவருக்கு மிகவும் பிடித்தது. இல்லையென்பது போல தோள்களைக் குலுக்கினார். பெண்களை அவ்வளவாக ஏறிட்டுப் பார்க்கிற ஆர்வம் அவரிடமில்லை என்பதை கவனித்தேன். ஒரு குடும்பஸ்தன் அப்படி இருக்க வேண்டி வருவதால் பல ஆண் தன்மைகளை இழக்கிறான் என்பது எனக்குத் தெரியும். உதாரணம், என் அப்பாவே தான். அவருக்கே கேட்காமல் அவ்வளவு கண்ணியமாக பேசுவார். “சத்தமா பேசுங்கப்பா”. ஒரு புன்னகை, அவ்வளவு தான். ஒருவேளை நானே கூட மிதுனிடம் ஒட்டிக்கொண்டது இந்த அப்பா டிசைன் அவரிடம் கரை தொடுவதாலா?

திரும்பி வரும்போது டாக்சியில் நாள் ஆட்டம் இங்கே பாடிக்கொண்டு வந்ததை அசட்டுச் சிரிப்புடன் சகித்துக்கொண்ட வந்தார்.

அவர் தன்னைச் செய்து காட்டிய அந்த நாள் வந்தது.

கோபமும் சமூக அக்கறையும் உள்ள ஒரு பெரு நெருப்பு உதயா. அவன் ஒரு பெண்ணைப் பார்த்து அவளைக் காதலித்து, ஒரு பாட்டெல்லாம் முடிந்த பிறகு அவன் கொள்ள வேண்டிய அந்தச் சமூக அக்கறை தொடங்கும். அவன் பல்வேறு அநீதியாளர்களைக் கண்டடைந்து அவர்களுக்கு நீதி புகட்டத் தலைப்படுகையில் தான் மிதுனைச் சந்திக்கிறார். மன்னிக்க வேண்டும், அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் வேலுசாமி. அநீதியாளர்களின் பேராசையில் விற்கப்பட்ட மருந்தைச் சாப்பிட்டு வேல்சாமியின் குழந்தை இறந்துவிட்டிருக்கிறது. அதைக் கண்ணீர் உகுத்து கதறியவாறு அவர் உதயாவிடம் சொல்ல வேண்டும். அதற்கு அப்புறம் உதயா ஆவேசம் கொள்ள வேண்டியிருக்கிறது. இயக்குனர் அதை முடிந்தவரை ஒரு விறைப்பில் இருந்து விளக்கி முடித்தார். வேலுசாமி கண்களில் கிளிசரின் போடும்படி கல்யாண் உத்தரவும் போட்டாயிற்று.

மிதுன் இயக்குனரிடம் விவரித்துச் சொல்ல முடியாத பணிவுடன் ஒரு விஷயம் என்றார்.

இயக்குனர் சரியென்று தலையசைத்தார்.

‘டையலாக் நல்லா தெரியும் சார்!’

“சரி?”

“சொல்லிகிட்டே வரேன். அழ வேண்டி வருதுல்ல, அங்க அழுதுடறேன்!”

இயக்குனர் பார்க்கிறார்.

“கிளிசரின் எல்லாம் போட வேணா!”

“ஓ, கமலகாசன் மாதிரியா?”

இயக்குனர் சொன்னது ஜோக் போல பட்டதால் கொஞ்சம் பேர் சிரித்தார்கள்.

சம்பிரதாயங்கள் நடந்து கொண்டிருக்கும்போது மிதுன் வழக்கம் போல சிந்தனை வசப்பட்டு தான் நின்று கொண்டிருந்தார். பின்னர் அவர் தனது குழந்தையைப் பற்றி சொன்னார். அன்றாடம் அது கள்ளம் கபடமில்லாமல் சுற்றி வந்து விளையாடும் அழகைப் பார்த்திருப்பதில் தான்னுடைய கவலைகள் பஞ்சாக பறப்பதைச் சொன்னார்.

கடுமையான அமைதி நிலவியது.

நான் அவருடைய கண்களைத்தான் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். அதில் ஒரு துளி கண்ணீர் இல்லை. பதட்டமாக இருந்தது.

மருந்து கொடுத்து அக்குழந்தையைத் தூங்கவைக்கும் போது தோன்றின நிம்மதியைச் சொன்னார். சிறிது நேரத்தில் ஒரு சந்தேகம் தோன்றி, தட்டிப் பார்த்தபோது அது செத்து விட்டதையும் சொன்னார்.

அவர் இப்போது மெளனமாக நின்றபோது எனக்கு ஒரு நடுக்கமேற்பட்டது.
ஒருநாள் ஒழைக்கலேன்னா எங்களுக்கு சோறு கெடையாது. இந்த ஒலகத்தில் நாங்கள் கண்கொண்டு பார்க்கிற எந்த சுகங்களும் கிடையாது. வேறு என்ன எங்களுக்கு இருந்தது? பொக்கிஷம் போல வைத்துப் பார்த்த குழந்தையை சிதைத்துப் போட்டு விட்டார்களே, எங்களுக்கு உயிர் பிழைத்துப் போகவும் உரிமையில்லையா?

நான் மறைவாகச் சென்று அழுதேன். நான் அவ்வளவு உணர்ச்சி வசப்பட்டதற்கு அவைகள் நான் எழுதிக் கொடுத்த வசனம் என்பதாலும் இருக்கலாம். இல்லை, அப்படியில்லை. நான் அங்கே அசலான ஒரு தகப்பனையல்லவா பார்த்தேன்? என் அப்பாவே கூட அழுதது மாதிரி தான் இருந்தது. அன்று ஷீ வரவில்லை என்ற போதும் நாங்கள் போனோம்.

நான் நிறையக் குடித்தது பார்த்து அவரும் செமத்தியாக போட்டார். ஓசியில் கிடைக்கும்போது அதிகமாகக் குடிப்பதுண்டு என்கிற ரகசியத்தையும் சொன்னார். நான் வேண்டுமா வேண்டாமா என்று அலைபாய்ந்து அவருடைய குடும்பம் பற்றி கேட்டபோது பல கஷ்டங்களைச் சொன்னார். அவைகளைக் கடந்தது பற்றியும் சொன்னார்.

உருப்படியான ஒரு வேலையை, தொழிலைச் செய்யாமல் சினிமா பின்னால் சுற்றுகிற புருஷனுடன் அவரது மனைவி சண்டை போட்டுக் கொண்டே இருந்திருக்கிறாள். ஆனால் அது ஒருநாள் நின்று விட்டிருக்கிறது. அதற்குப் பிறகு அவருடைய மனைவி அவரைக் காயப்படுத்துவதில்லை. என்னென்னவோ வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள் என்றார். சினிமாவைப் பொறுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாள். நானுமே கிடைக்கிற பணத்தை ஒரு காசு எடுக்காமல் அவளிடம் கொடுத்து விடுவேன் என்றார்.

அன்றைய நாள், அது ஒரு திங்கள் கிழமை. யாரோ ஒரு பெண்மணி வட்டிக்குத் தருவதாக சொல்லியிருந்த பணத்தை வாங்குவதற்கு அவருடைய மனைவி செங்கல்பட்டு போயிருக்கிறாள். என்ன சொல்லுவது? அது நடக்கவில்லை. பணம் இல்லாமல் திரும்பிப் போகவே முடியாது. அவ்வளவு அவமானம். இடிந்து போனவளாக ஒரு பாலத்தில் உட்கார்ந்து கொண்டு மிதுனுக்கு போன் செய்திருக்கிறாள். எப்போதோ படப்பிடிப்பு முடிந்து விட்ட ஒரு படத்தின் பாக்கியை கிடைக்குமா என்று பார்க்க ஒரு கம்பனியின் வாயிலில் காத்திருந்த மிதுன் தனது நிலையைச் சொல்லும்போது அவளுக்கு எதுவும் கேட்கவில்லை. அழுதுகொண்டே சினிமாவிற்கு சாபம் கொடுக்க ஆரம்பித்தாள். போகப்போக ஆவேசம் கூடி அது வெறியாக மாறியது.

நான் சாகத்தான் வேண்டும் என்றார் அவர். நீ எதற்கு சாகாமல் இருக்கிறாய் என்றாள் அவள். அவர் தன்னையறியாமல் விதும்பி விட, நீ சாக வேண்டாம், நான் பாலத்தில் தான் உட்கார்ந்திருக்கிறேன், குதித்து விடுகிறேன் என்று செல்லை அணைத்து விட்டிருக்கிறாள். மிதுன் மூர்ச்சையடைந்து விட்டார். மயக்கம் தெளிவிக்கப்பட்டவுடன் அவருடைய பகுதியில் புழங்கிய ஒரு எஜெண்டைப் பார்த்து அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்ல, அங்கே குழந்தைகளை அணைத்துக் கொண்டு தூங்கியவாறு இருந்திருக்கிறாள் மனைவி. பணத்தை வீசிவிட்டு அந்த ஆஸ்பிட்டலுக்கு சென்று அட்மிட் ஆகியிருக்கிறார்.

சில நிமிடங்கள் என்னையறியாமல் கிட்னி விற்ற ஆபரேஷன் தடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தப் படம் முடிந்த பிறகு நான் எனது திரைக்கதையை எழுத ஆரம்பித்தேன். பெரிய புரட்சி எல்லாம் செய்ய முடியாது என்ற போதிலும் நியாயமான ஒரு பெண் தரப்பு கதை அது. எனக்கு உதவி செய்வதாக வந்த கல்யாண் அவ்வப்போது முத்தம் கேட்பதும், சத்தம் போடுவதும், மாரை வெறிப்பதும் செய்வான். மிதுனின் மனைவி பையன்கள் இருக்கிற பகுதியில் தண்ணீர் எடுத்துக் கொடுப்பாள் என்றும், மலிவான ஒரு தொகையைக் கொடுத்து விட்டு பையன்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா என்றும் அவன் ஒருமுறை கேட்டிருக்கிறான்.

நான் அதைக் கேட்க விரும்பவில்லை. இறுதியாக எனக்கு அவனைக் காதலிக்க முடியாது என்று பட்டது. சொன்னதும் கோபித்துக் கொண்டு ஓடிவிட்டான். என் கதையைக் கேட்டு பலரும் தலை சொறிந்தாலும், இறுதியில் ஒரு கம்பனி ஓகே என்பதாக தலையை ஆட்டியது. உங்களுக்கு நான் சொல்ல வருவது என்ன என்று புரிகிறது அல்லவா? ஆமாம், நான் என்னுடைய மிதுனைத் தேடி அடைந்தேன்.

மிதுனுடைய மனைவி இஞ்சி டீ கொடுத்தாள்.

ஒரு சத்துணவு பள்ளியில் இருந்து அரசு சம்பளம் வாங்குவதாகச் சந்தோஷப்பட்டாள்.

கதை சொன்னேன்.

“செம்ம கதம்மா. நீ எல்லாம் தான் இத செய்ய முடியும். ஆமா, அந்த கமிஷனர் வேஷத்துல யார் நடிக்கப் போறா? அமிதாப் பக்சனா? “

“அதுக்கு நான் மும்பைக்கு இல்லப் போவணும்? எதுக்கு இங்க வந்தேன்?”

அவர் பெரிய அதிர்ச்சி எல்லாம் கொள்ளவில்லை. நான் ஏதாவது செய்வேன் என்று எதிர்பார்த்தே இருந்தாராம். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியானதும் உத்தேசப்படியே அவர் மீது வெளிச்சம் விழுந்தது. ஒன்றின் மீது ஒருவேளை யாராவது தடுக்கி விழுந்தாலும் கூட, அதைப் பின்தொடர்ந்து மொத்த ஜனமும் சென்று விழுவதாயிற்றே இண்டஸ்டரி மரபு. சினிமா அல்லவா சினிமா? மிதுன் தனது பெயரை மாற்றிக்கொண்டு விட்டார். தமிழ் நட்சத்திரமோ, தென்னிந்திய நட்சத்திரமோ என்று பகுத்து சொல்லுவதும் இனிமேல் முடியாது. இந்திய நட்சத்திரமாகத் தெளிந்து கொண்டு வருகிறார்.

நீங்கள் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்.


மணி எம் கே மணி இதுவரை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள் உள்ளிட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் வெளியான சிறுகதைத் தொகுப்பு “டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஹோட்டல்” மின்னஞ்சல்: mkmani1964@gmail.com


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular