நாராயணி சுப்ரமணியன்
உலகத்தைத் தாங்குவது திமிங்கிலங்கள்தான் என்று பண்டைய மக்கள் நம்பினார்கள். “மூன்று திமிங்கிலங்கள் பூமியைத் தங்கள் முதுகில் சுமந்தபடி பிரபஞ்சக் கடலில் நீந்திக்கொண்டிருக்கின்றன” என்பது ஒரு தொல் நம்பிக்கை.
சிரியஸ் நட்சத்திரத்திலிருந்து இறங்கி வந்த முன்னோர்கள், புவியின் வரலாற்றைப் பாதுகாக்கும் ஆவணக்காப்பாளர்களாகத் திமிங்கிலங்களை நியமித்திருக்கிறார்கள் என்று சிவப்பிந்தியத் தொல்குடிகள் நம்புகிறார்கள். “ஒவ்வொரு திமிங்கிலமும் நீந்துகின்ற ஒரு நூலகம்” என்கிறது ஒரு சொலவடை.
ஆதிகாலம் தொட்டு இன்றுவரை பெரிய விலங்குகளின் மீதான மனிதனின் வியப்பும் மரியாதையும் மாறவில்லை. கரையொதுங்குகிற திமிங்கிலங்களுக்காக நீத்தார் சடங்குகளை உணர்வுபூர்வமாக நடத்துகிற பழங்குடிகள் இன்றும் உலகத்தில் இருக்கிறார்கள். பெரிய விலங்குகளுக்கு முன்பு நிற்கும்போது மனிதன் தான் எத்தனை சிறியவன் என்பதை உணர்கிறான், வியப்பில் அமிழ்கிறான். “Whale Watching” என்ற பணம்கொழிக்கும் ஒரு மிகப்பெரிய சுற்றுலாவே இந்த உளவியலின் அடிப்படையில்தான் இயங்குகிறது.
இது வெறும் உணர்வுரீதியான பிணைப்புதானா? நம் உணர்வுகளால் உந்தப்பட்டு, தேவையில்லாமல் திமிங்கிலங்களைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறோமா? திமிங்கிலங்கள் சூழலுக்கு எப்படிப்பட்ட பங்களிப்பைத் தருகின்றன? – கடந்த சில ஆண்டுகளாகவே உலக அளவில் இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவதில் விஞ்ஞானிகள் தீவிரமாக இருக்கிறார்கள்.
சில விளக்கங்கள்
பதில்களை நோக்கிப் பயணிப்பதற்கு முன்பாக சில கருத்துக்களைத் தெளிவுபடுத்தவேண்டியிருக்கிறது. சூழலியலைப் பொறுத்தவரை எல்லா விலங்குமே முக்கியத்துவம் வாய்ந்ததுதான். திமிங்கிலத்தையும் பவளத்திட்டில் வசிக்கும் ஒரு நத்தையும் ஒரு தராசில் வைத்து “இதில் எது முக்கியம்?” என்று கேட்பதை விட அபத்தம் இருக்க முடியாது. ஆனால் துரதிருஷ்டவசமாக, சூழல் சீர்கேடு, சூழல் பாதுகாப்பு என்கிற இரு தளங்களிலும் இதுபோன்ற கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. சூழலைக் கெடுக்காமல் இருக்கவும், சூழலைப் பாதுகாப்பதற்கும் நாம் தனிப்பட்டு முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறது. நிதி ஒதுக்கீடு, அரசுகளின் ஒத்துழைப்பு, உலக நாடுகளின் ஒருங்கிணைப்பு, திட்டங்கள், கொள்கைசார் முடிவுகள், மக்களின் பங்களிப்பு என்று எத்தனையோ தேவைப்படுகிறது. ஆகவே சில நேரங்களில் இந்தக் கேள்வியை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல், அதற்கான பதிலையும் தேடுவது அவசியமாகிறது.
இரண்டாவதாக, “இந்த விலங்கு சூழலுக்கு என்ன பங்களிப்பைத் தருகிறது?” என்று கேட்டு, அதற்கான பதில் திருப்திகரமாக இருந்தால் மட்டுமே அதைப் பாதுகாப்பது என்பது மனிதனை மையப்படுத்திய ஒரு கருத்தாக்கம்தான் (Anthropocentric Ideology). அந்தக் கருத்தாக்கம் இருக்கும்போது, “இந்த விலங்கு இல்லாவிட்டால் சூழல் சீர்குலையும், நானும் பாதிக்கப்படுவேன்” என்பது மட்டுமே அந்த விலங்கைக் காப்பதற்கான உந்துதல் . தனிப்பட்ட ஒரு உயிரியாக இருப்பதாலேயே ஒரு விலங்குக்கு வரும் மதிப்பு (Inherent Value of life) அதற்கு மறுக்கப்படுகிறது. அதுவும் துரதிருஷ்டவசமானதுதான். நியாயமாகப் பார்த்தால், நமக்கு உதவுகிறதோ இல்லையோ, சூழலுக்குப் பங்களிக்கிறதோ இல்லையோ நாம் அந்த விலங்கை அழிக்காமல் பாதுகாக்கவேண்டும். ஆனால் நிதர்சனம் அப்படி இல்லை என்பதாலேயே சூழலியல் பங்களிப்புகளைப் பற்றி விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது.
ஆயிரம் மரங்கள்
“உலகத்தின் காலநிலையை சீர்படுத்தவேண்டுமானால், திமிங்கிலங்களைக் காப்பாற்றினால் போதும். ஒரு திமிங்கிலம் என்பது ஆயிரம் மரங்களுக்கு சமம்” – இது சொலவடை அல்ல, அறிவியல் தகவல்.
இது எப்படி என்று விரிவாகப் பார்க்கலாம். காற்றிலில் அளவுக்கு அதிகமாக சேரும் கரியமில வாயு, புவி வெப்பமடைவதற்கு முக்கிய காரணம் என்பது அனைவரும் அறிந்ததுதான். காற்றிலிருந்து கரிமத்தைப் பிரித்து, அதை பூமியின் ஆழத்தில் எப்படியாவது சேர்த்துவிட்டால், தொடர்ந்த பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என்பது ஒரு லட்சியக் கனவு. இதற்காக முன்வைக்கப்படும் அறிவியல் தொழில்நுட்பங்கள் எல்லாமே சிக்கலானவை. ஆனால் இதற்கு ஒரு எளிய வழி உண்டு என்கிறார்கள் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் – திமிங்கிலங்களைப் பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கைகளை மீட்டெடுத்தால் தானாகக் கரிம சுழற்சி சமநிலைக்கு வந்துவிடும்.
திமிங்கிலங்களின் உடலில் தொடர்ந்து கரிமம் (Carbon) சேர்கிறது. அளவில் பெரிய ஒரு திமிங்கிலம் தன் வாழ்நாளில், காற்றிலிருந்து 33 டன் கரியமில வாயுவின் விளைவுகளை நீக்கி, தன் உடலில் கரிமமாக சேர்த்துக்கொள்கிறது! ஒரு மரம் வெறும் 21 கிலோவை மட்டுமே நீக்குகிறது என்பதோடு நாம் இதை இணைத்துப் புரிந்துகொள்ளலாம். இவ்வாறு காற்றிலிருந்து பிரிக்கப்படும் கரிமம், திமிங்கிலம் இறந்து ஆழ்கடலுக்குள் மூழ்கும்போது, கடலின் அடியாழத்துக்குச் சென்றுவிடுகிறது. அது மீண்டும் கடல்பரப்புக்கு வருவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கும்.
திமிங்கில உரம்
நம்மால் நினைத்தே பார்க்கமுடியாத ஒரு பங்களிப்பு, திமிங்கிலங்களின் கழிவிலிருந்து வருகிறது. கடலின் ஆழத்தில் இருந்து மேற்பரப்புக்கு வருகிற திமிங்கிலங்கள், ஆழ்கடல் உணவுகளிலிருந்து பல உயிர்ச்சத்துக்களைக் கழிவுகளாக வெளியேற்றுகின்றன. நைட்ரஜன், பாஸ்பரஸ், இரும்பு என்று பல நுண்சத்துக்கள் இந்தக் கழிவுகளில் உண்டு. ஆழத்திலிருக்கும் சத்துக்களை மேற்பரப்புக்குத் திமிங்கிலங்கள் இழுத்து வருகின்றன என்பதால் இது Whale Pump என்று அழைக்கப்படுகிறது.
கரையிலிருந்து செல்லச் செல்ல, கடலின் மேற்பரப்பில் இருக்ககூடிய சத்துக்களின் அளவு குறைந்தபடியே இருக்கும். ஆகவே, சூரியன் தகித்துக்கொண்டிருந்தாலும் அந்த சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவு தயாரிப்பதற்கான நுண்பாசிகள் (Phytoplankton) அங்கு வளர்வதில்லை. குறிப்பாக, தென்னாப்பிரிக்காவின் தென்கோடி முனையிலிருந்து அண்டார்ட்டிகா வரை நீண்டிருக்கும் பகுதியை நினைத்துப் பாருங்களேன், நிலமே இல்லாத கடற்பரப்பு அது. இதுபோன்ற கடல் பாலைவனங்களுக்கெல்லாம் உயிர்ப்பை வழங்குவது திமிங்கிலங்களின் கழிவுதான். திமிங்கிலக் கழிவுகளிலிருந்து உயிர்ச்சத்துக்களை எடுத்துக்கொண்டுதான் இங்கு நுண்பாசிகள் பல்கிப் பெருகுகின்றன.
கடல்பரப்பிலேயே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் திமிங்கிலங்கள் வலசை போகும்போதும் அவை நுண்சத்துக்களைப் பரப்புகின்றன. இது Whale Conveyer Belt என்று அழைக்கப்படுகிறது.
நுண்பாசிகளைக் குறைவாக எடைபோட்டுவிடமுடியாது. கரிமத்தை உள்வாங்கிக் காலநிலையை சமன்படுத்துவதில் இவற்றுக்கும் பெரும்பங்கு உண்டு. கடலின் நுண்பாசிகள் சராசரியாக 37 பில்லியன் டன் கரிமத்தை உள்வாங்குகின்றன. நிலத்தின் கணக்குப்படி இது நான்கு அமேசான் காடுகளுக்கு சமம்! ஒரு கடற்பரப்பில், சராசரியாக இருக்கும் நுண்பாசிகளின் அளவை விட 1% கூடுதலாகப் பாசிகள் வளர்ந்தாலே, அது 2 பில்லியன் பெருமரங்களுக்கு சமம்! முன்பு இருந்த அளவுக்கே திமிங்கிலங்களின் எண்ணிக்கை மீண்டு வந்தால், அவற்றால் பெருகும் நுண்பாசிகள் மட்டுமே 17 லட்சம் டன் கரிமத்தை சேகரிக்கும்!
இறந்தும் ஆயிரம் பொன்
இறந்த திமிங்கிலங்களின் உடல்கள், மெல்ல மெல்ல நீரில் மூழ்கி, கடலின் அடியாழத்துக்கு செல்கின்றன. இது Whale fall என்று அழைக்கப்படுகிறது. கடலின் தரையைத் தொட்ட உடனேயே திமிங்கிலத்தின் உடலை உண்பதற்கு விலங்குகள் குவியத் தொடங்கிவிடுகின்றன. நீண்டநாட்களாக உணவில்லாமல் இருந்த ஆழ்கடல் விலங்குகள் இதை ஒரு உணவுத் திருவிழாவாகவே பாவிக்கின்றன. இறந்த ஒரு திமிங்கிலத்தின் உடலைச் சுற்றி மட்டும் சுமார் 400 விலங்குகள் கண்டறியப்பட்டுள்ளன. கணவாய்கள், விலாங்குகளைப் போன்ற மீன்கள், கணுக்காலிகள், பாக்டீரியாக்கள் என்று ஒரு கூட்டத்துக்கே தொடர்ந்து 8 வருடங்களுக்கு உணவளிக்கிறது ஒரேயொரு திமிங்கிலத்தின் உடல்!
மீதமிருக்கும் எலும்புகளும் வீணாவதில்லை. எலும்புகளைச் சுற்றி ஒரு தனி வாழிடமே உருவாகிவிடும். எலும்புகளை உடைத்து உயிர்சத்துக்களாக மாற்றும் பாக்டீரியாக்கள் வந்துவிட்டால் அடுத்தடுத்து பாக்டீரியாக்களை உண்ணும் சிறு விலங்குகள், பெரு விலங்குகள் என்று கூட்டம் கூடிவிடும். அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு இந்தக் கும்பலுக்கு உணவளிப்பது அந்த எலும்புக்கூடுதான் !
மழைக்காடுகளும் திமிங்கிலங்களும்
கடலுக்குள் இருக்கிற திமிங்கிலங்களின் தாக்கம் நீர் உலகத்தோடு முடிந்துவிடுவதில்லை. பல கண்ணுக்குத் தெரியாத பிணைப்புகளால் நிலத்திலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன திமிங்கிலங்கள்.
கலிஃபோர்னியா காண்டோர் என்ற ஒரு பாறுக்கழுகு (Vulture)வகை உண்டு. இந்தப் பறவை இனத்தின் அழிவுக்குக் காரீய நச்சு (Lead Poisoning) ஒரு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. இதற்கும் திமிங்கிலங்களுக்கும் தொடர்பு உண்டு!
இறந்த திமிங்கிலங்களின் உடல்கள் இந்தப் பாறுக்கழுகுகளுக்கு விருப்பமான உணவு. திமிங்கிலங்களின் எண்ணிக்கை குறைந்ததால், உணவு கிடைக்காமல் இந்தக் கழுகுகள் இறந்த நிலவாழ் விலங்குகளை உண்ணத்தொடங்கிவிட்டன. கலிஃபோர்னியா பகுதியில் பல விலங்குகளின் உடலுக்குள் வேட்டைக்காரர்களின் தோட்டாக்கள் இருக்கும். ஆகவே அவற்றை உண்ணும் காண்டோர் கழுகுகளும் நச்சு தாக்கி இறந்துகொண்டிருக்கின்றன.
ஆழ்கடலில் திமிங்கிலங்களின் எண்ணிக்கை குறைந்தால் விண்ணில் பறக்கும் பறவைகள் இறக்கின்றன. இது ஒரு உதாரணம்தான். சூழலியல் என்பது மிகவும் நுணுக்கமாக நெய்யப்பட்ட ஒரு துணியைப் போல. எந்த நூலைப் பிடித்து இழுத்தால் எங்கே சுருக்கம் விழும் என்று சொல்லவே முடியாது.
“யானைகள்தான் இந்தக் காட்டை உருவாக்கின. அவை தங்கள் தந்தங்களால் கீறிய குழிகளில் ஆறுகள் பாய்ந்தோடின, அவை தும்பிக்கைகளால் காற்றை ஊதியபோது இலைகள் விழுந்தன. மலைகள், மரங்கள், மரங்களின்மேல் இருக்கிற பறவைகள், எல்லாவற்றையும் உருவாக்கியது யானைகள்தான்” ஜங்கிள் புக் நாவலில் இப்படி ஒரு வசனம் வரும். ஒரு நீலத்திமிங்கிலத்தின் சராசரி எடை நாற்பது யானைகளுக்கு சமம். ஒரு வேளை மௌக்லி கடலுக்குள் வசித்திருந்தால் அவன் தினமும் திமிங்கிலங்களைத்தான் வணங்கியிருப்பான்.
தரவுகள்
- Nature’s Solution to Climate Change, Ralph Chami et al, International Monetary Fund, 2019.
- The Impact of Whaling on the Ocean Carbon Cycle: Why Bigger was better, A.J.Pershing et al, PLoS One, 2010.
- Global Nutrient Transport in the world of giants, C.E.Doughty, Biological Sciences, 2016.
- Whale Poop pumps up ocean health,Science Daily, 2010.
- Whale Fall Ecosytems: Recent insights into Ecology, Paleoecology and Evolution, C.R.Smith, Annual Reviews of Marine Science, 2015.
- Will Lead Bullets Finally Kill off the California Condor?, Ted Williams, Yale Environment, 2013.
***
நாராயணி சுப்ரமணியன்
கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.”நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற உயிரியல் நூலை எழுதியுள்ளார். தமிழில் கடல்சார், அறிவியல் பொருண்மைகளைக் கவிதைகளில் எழுதி வருபவர். விகடன் தடம், வாசகசாலை, அரூ இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. Email: nans.mythila@gmail.com