Saturday, November 16, 2024
Homeslider"நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்"

“நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”


நாராயணி சுப்ரமணியன்

மெய்யியலில் ஒரு பிரபலமான எண்ணப் பரிசோதனை (Thought experiment) உண்டு. அதிவேகத்தில் ஒரு ரயில் தண்டவாளத்தில் ஓடிக்கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். சற்று தொலைவில், தண்டவாளத்தின் மேல் ஐந்து பேர் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள், ரயில் வந்து கொண்டிருக்கிற வேகத்தில் அவர்களால் உடனடியாக நகர்ந்து தப்பித்துவிட முடியாது. ரயில் இதே பாதையில் தொடர்ந்தால் நிச்சயம் ஐவரும் ரயிலில் அடிப்பட்டு இறந்து விடுவார்கள். ஆனால் தண்டவாளத்தின் அருகே ஒரு விசை இருக்கிறது. விசையை அழுத்தினால் ரயில் வேறு ஒரு தண்டவாளத்தில் பயணிக்கத் தொடங்கும். ஆனால் அங்கேயும் ஒருவர் வேலை செய்து கொண்டிருக்ககிறார். நீங்கள் விசையை அழுத்துவீர்களா இல்லையா? பெரும்பாலானோர் “விசையை அழுத்துவோம்” என்று உடனடியாக பதில் சொன்னார்கள். ஐந்து பேரைக் காப்பாற்றுவதற்காக ஒருவரை இழந்தாலும் பரவாயில்லை என்பது அவர்களின் வாதம்.

பிறகு கற்பனையான இந்தப் பரிசோதனையில் சின்ன ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அதே ரயில், அதே தண்டவாளம், அதே ஐவர், ஆனால் வேற்று தண்டவாளத்தில் இருக்கிற அந்த ஒருவர் உங்கள் அன்புக்குரியவராகவோ நண்பராகவோ இருக்கிறார், ஏன் அவர் உங்கள் குடும்ப உறுப்பினராகக் கூட இருக்கலாம். இப்போது உங்கள் பதில் என்ன? முதன்முறை உடனே பதில் அளித்த பலரும் குழம்பிப் போனார்கள்.

பரிச்சயமானவர்கள்/தெரிந்தவர்கள்/அன்புக்குரியவர்கள் என்று வரும்போது மனித மனம் துல்லியமான, தெளிவான முடிவுகளிலிருந்து தடுமாறுகிறது. தன்னைச் சுற்றிய எல்லாவற்றையும் இதே கோணத்தில்தான் மனிதன் அணுகுகிறான் என்றே சொல்ல வேண்டும். அந்தப் பட்டியலில் இயற்கையும் உண்டு.

நாம் எதன்மீது அன்பு காட்டுகிறோமோ, அதை மட்டும்தான் பாதுகாப்போம்; எது நமக்குப் புரிகிறதோ அதன்மீது மட்டும்தான் அன்பு செலுத்துவோம்; எது நமக்குக் கற்றுத் தரப்பட்டிருக்கிறதோ அது மட்டும்தான் நமக்குப் புரியும்” என்றார் சூழலியலாளர் பாபா டியோம். சூழலியல் சார்ந்த விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது. அதேநேரம், நமக்குப் பிடித்த விலங்குகளின் மீதுதான் நாம் அதிக அக்கறை காட்டுகிறோம் என்பதும் உண்மை. அதனால் பல சிக்கல்கள் வருகின்றன. விலங்குகளுக்கும் இயற்கைக்கும் சட்டரீதியான பாதுகாப்பு இருந்தால் இந்த சிக்கல் இருக்காது, இல்லையா? ஆராயலாம்.

ஈக்வடார், பொலிவியா, நியூசிலாந்து – முன்னோடிகள்

இயற்கைக்கும் மனிதனுக்குமான நுண் உறவின் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு 2008-ல் நடந்தது. ஈக்வடார் நாட்டில் “இயற்கைக்கும் உரிமைகள் உண்டு” என்பதாக அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு பிரிவு இயற்றப்பட்டது! உலகிலேயே இயற்கையின் உரிமைகளை அங்கீகரித்த முதல் நாடு என்கிற பெருமை ஈக்வடாருக்கு உண்டு. “இருப்பதற்கும், இயங்குவதற்கும், தனது சுழற்சி முறைகளைத் தொடர்ந்து நடத்திக் கொள்வதற்கும் தன்னை மீட்டெடுத்துக் கொள்வதற்கும் இயற்கைக்கு முழு உரிமை உண்டு” என்றும் “இயற்கையின் இந்த உரிமைகள் மீறப்பட்டால் அதற்காகக் குரல் எழுப்புவதற்கு எல்லா மனிதர்களுக்கும் இனக்குழுக்களுக்கும் உரிமை உண்டு” எனவும் தனது அரசியலமைப்புச் சட்டத்திலேயே ஒரு விதியை ஈக்வடார் சேர்த்தது. மனிதர்களுக்கு இயற்கை உதவுகிறதோ இல்லையோ, மனிதனுக்கு இதனால் ஆதாயம் இருக்கிறதோ இல்லையோ, இயற்கை தன்னியல்பிலேயே இருந்தால்கூட அதற்கு ஒரு உரிமை உண்டு என்பதாக அந்த சட்டம் அங்கீகரித்தது.

பொலிவியா நாட்டில் 2010-ல் அமலுக்கு வந்த ஒரு சட்டம் “இயற்கை அன்னைக்கு உரிமைகள் உண்டு. நீதித்துறையைப் பொறுத்தவரை பொதுநலன் சார்ந்த விஷயம்” என்று அறிவிக்கிறது. 2010-ல் ஐக்கிய நாடுகள் சபை “இயற்கையின் உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு” (Universal declaration of the rights of nature) ஒன்றை இயற்றியபோது அந்தக் குழுவில் பொலிவியாவும் ஒரு முக்கியப் பங்கு வகித்தது.

ஈக்வடாரிலும் பொலிவியாவிலும் கொண்டுவரப்பட்ட முக்கியமான இந்தச் சட்டங்களுக்குத் தொல்குடியினரின் அரசியல் பிரவேசம் ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. போர்னியோவின் இபான் பழங்குடியினர் ஒராங்குட்டான் குரங்குகளைத் தங்களது மூதாதையர்களாகக் கருதுகின்றனர். பல தொல்குடி மரபுகளில் இயற்கையும் இனக்குழுவின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது. அந்தப் பார்வையின் நீட்சியாகவே இந்தச் சட்டங்கள் அமைந்திருக்கின்றன என்கிறார்கள் வல்லுநர்கள்.

கொலராடோ நதி என் உடலின் ஒரு அங்கம்.
நான் ஒரு நதியை சுமந்து கொண்டிருக்கிறேன்.
இது உருவகம் அல்ல.
என் உடலின் மத்தியில் நதி ஓடுகிறது

என்ற நடாலி டியாஸின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன. இவர் ஒரு சிவப்பிந்தியர் எனும் பின்னணியோடு சேர்த்துப் படித்தால் இந்தக் கவிதை வரிகளின் ஆழம் புரியும்.

நியூசிலாந்தில் பல மவோரி பழங்குடியினருக்கு மலைகளும் நதியும் மூதாதையர்களாக இருக்கின்றன. குடும்ப மூதாதையர்களைப் போற்றி வழிபடுவது போலவே அவர்கள் மலைகளையும் ஆறுகளையும் வழிபடுகிறார்கள். “அந்த நதி நானே தான்; நான் தான் அந்த நதி” என்கிறது ஒரு மவோரி சொலவடை. இதையும் மனதில் வைத்துக்கொண்டே 2014-ல் நியூசிலாந்து அரசு டே உரவாரா காட்டுக்கு உரிமைகளை வழங்கியது. 2017-ல் வாங்காமி நதிக்கும் உரிமைகள் வழங்கப்பட்டன.

பொலிவியா, ஈக்வடாரின் சட்டங்களுக்கும் நியூசிலாந்தின் இந்த முடிவுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு : டே உவாரா காட்டையும் வாங்காமி நதியையும் “நபர்” (Person) என்பதாக அங்கீகரித்து நியூசிலாந்து இந்த உரிமைகளை வழங்கியிருந்தது! அதாவது, ஒரு மனிதனுக்கு உள்ள எல்லா உரிமைகளும் இந்த நதிக்கும் காட்டுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதை Personhood என்று அழைக்கிறார்கள்.

இதுபோன்ற “நபர்” அங்கீகாரங்கள் வாலில்லாக் குரங்குகளுக்கும் பல கடல்வாழ் பாலூட்டிகளுக்கும் ஆங்காங்கே தரப்பட்டிருக்கின்றன. மனிதனை மையப்படுத்திய பார்வையிலிருந்து இயற்கையை மையப்படுத்திய பார்வைக்கு ஒருசில நாடுகள் மாறத் தொடங்கியிருப்பதற்கான அறிகுறி இது.

இந்திய சூழல்

இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2013-ல் ஓங்கில்(டால்ஃபின்), திமிங்கிலம் முதலிய கடல் பாலூட்டிகளை மனிதர்களல்லாத நபர்கள் (Non human persons) என்று வகைப்படுத்தியது. இந்த அடிப்படையில் ஓங்கில் காட்சி சாலைகள் மூடப்பட்டன.

2017-ல் உச்சநீதிமன்றம் கங்கை, யமுனை முதலிய நதிகளுக்கும் “மனிதர்களல்லாத நபர்கள்” என்ற அங்கீகாரத்தை வழங்கியது. பிறகு உத்தரகாண்ட்டில் இருக்கும் அருவிகள், சிற்றோடைகள், காடுகள் உட்பட எல்லா இயற்கைக் கூறுகளுக்கும் இதே அங்கீகாரம் வழங்கப்பட்டது.

வரலாற்றுப் பின்னணி

பல்வேறு தொல்குடிகளால் இயற்கையும் நதிகளும் விலங்குகளும் மனிதர்களாகவே பாவிக்கப்படுகின்றன என்றாலும் எழுத்துரீதியான முதல் ஆவணமாக இருப்பது க்றிஸ்டோஃபர் ஸ்டோன் 1972-ல் எழுதிய “Should trees have standing? Towards legal rights for natural objects” என்ற கட்டுரை தான். இயற்கையால் பேசமுடியாது என்கிற ஒரே காரணத்துக்காக இயற்கைக்கான உரிமைகளை நாம் மறுத்துவிட முடியாது என்று வாதிடும் அவர், சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாவலர்கள் (Legal Guardians) இயற்கையின் சார்பாக வழக்காட முடியும் என்கிறார். இப்போது மனிதர்களல்லாத நபர்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் பல இயற்கைக் கூறுகளுக்கும் இதே விதிமுறையே சொல்லப்படுகிறது – சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில பாதுகாவலர்களோ அல்லது எந்த மனிதனோ இனக்குழுவோ இயற்கையின் சார்பில் வழக்காடலாம். இது அந்தந்த நாட்டின் சட்டத்தைப் பொறுத்து மாறுகிறது.

நடைமுறை சிக்கல்கள்

சட்டங்களின் தெளிவின்மை

கங்கை நதிக்கும் யமுனை நதிக்கும் “மனிதர்களல்லாத நபர்கள்” என்ற அங்கீகாரம் தரப்பட்ட செய்தி வெளிவந்த போது அதற்குக் கிடைத்த நெகிழ்வான வரவேற்பு பலருக்கு நினைவிருக்கலாம். நதிகளை வழிபடுகிற ஒரு தேசம் என்பதால் நமக்கு அந்த உளவியல் புரியும். அதேசமயம் இயற்கை சார்ந்த சட்டங்களின் வரலாற்றிலும் இது ஒரு முக்கியமான மைல்கல் என்பதில் ஐயமில்லை. அடுத்தடுத்து பல சட்டங்களுக்கும் விவாதங்களுக்கும் இது முன்னுதாரணமாக அமையும்.

“இது ஒரு முக்கியமான முன்னெடுப்பு என்றாலும் கங்கை, யமுனை ஆகிய நதிகளின் உரிமைகள் என்னென்ன என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை, இது சிக்கல்களுக்கே வழிவகுக்கும்” என்கின்றனர் இந்தத் தீர்ப்பை விரிவாக ஆராய்ந்த வல்லுநர்களான அக்‌ஷிதா ஜா மற்றும் அத்ரிஜா கோஷ் ஆகியோர். “நதிகளை பாதிக்கிற, ஆனால் மனிதர்களுக்கு அவசியமாகப் படுகிற திட்டங்களை என்ன செய்யலாம்?” என்று நாளை ஒரு விவாதம் வந்தால், இந்த அறிவிப்பின் தெளிவின்மையால் பல குழப்பங்கள் விளையும் என்று இவர்கள் எச்சரிக்கிறார்கள்.

உரிமைகளும் கடமைகளும்

உரிமைகளை வகுப்பதற்கு “மனிதர்களல்லாத நபர்கள்” என்ற அங்கீகாரம் தேவைதானா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த அங்கீகாரம் தேவையற்ற குழப்பங்களை, புதிய சிக்கல்களைக் கொண்டு வரலாம். ஒரு நபர் என்றால் அவருக்கு உரிமை இருப்பது போலவே கடமையும் இருக்கும். கடமையை நிறைவேற்றாமல் உரிமையைக் கோர முடியாது.
சகமனிதர்களின் உரிமையில் குறுக்கிடக் கூடாது என்பது மனிதனின் கடமை என்றால், இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிற இயற்கைக்கும் இந்த விதி பொருந்துமா? உதாரணமாக, ஒரு அணை என்பது மனிதனின் மேம்பாட்டுக்கான உரிமை என்று யாராவது வாதிட்டால், இந்த விதியின்படி, நதியைக் காரணமாகக் காட்டி அதைத் தடுக்க முடியாது இல்லையா?

யாருடைய உரிமை முக்கியமானது?

“இதுபோன்ற சட்டங்களில் இயற்கைக்கான உரிமைகளை மட்டுமே வகுத்துவிட்டு நாம் பின்வாங்கிக் கொள்ள முடியாது” என்கிறார்கள் சட்டவியல் நிபுணர்கள். “உரிமைகளை மட்டும் முன்வைக்கும் போது, பெருநிறுவனங்கள் இயற்கையை ஒரு போட்டியாகத்தான் பார்க்கும். யாருடைய உரிமை பெரியது, இயற்கையின் உரிமை எப்படிப்பட்டது, மனிதனுக்குத் தேவை என்றால் இயற்கையின் உரிமையை நசுக்கலாமா என்றெல்லாம் கேள்விகள் எழலாம்” என்று வாதிடுகிறார்கள் சட்டவியல் வல்லுநர்களாக சிந்தியா மற்றும் ஹவார்ட். முன்னோடி நாடாகக் கருதப்படும் ஈக்வடாரில் நடந்த ஒரு வழக்கையே உதாரணமாகவும் சுட்டுகிறார்கள். பொதுநலன் (மக்கள் நலன் என்று இதைப் புரிந்து கொள்ளலாம்) என்று வரும்போது அங்கே இயற்கையின் உரிமைகள் மீறப்பட்டன, அங்கே மனித உரிமைக்கே முன்னுரிமை கொடுத்தார்கள் என்பதை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

மெய்யியல் சிக்கல்கள்

மனிதர்களல்லாத விலங்குகளுக்கும் இயற்கைக்கும்கூட இந்த அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று பேசும் மெய்யியலாளர்கள் ஒருபுறம் என்றால், “அது எப்படி, மனிதன் மட்டும் தான் மனிதன், பூச்சி புழு எல்லாம் மனிதனாகிடுமா?” என்றும் பலர் கேள்வி கேட்கிறார்கள்.

சமூகப் பங்களிப்பு

“மனிதன் என்றால் அவன் சமூகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் பங்களிக்க வேண்டும். அப்படி இல்லாத விலங்குகளையும் இயற்கையையும் அங்கீகரிக்க முடியாது.” என்பது பலரின் வாதம்.

“எந்த வகையிலும் சமூகத்துக்குப் பங்களிக்காத மனிதர்களும் உலகெங்கிலும் இருக்கிறார்கள், ஆனாலும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை நாம் மறுப்பதில்லை. அப்படியிருக்க, இயற்கைக்கு இந்த உரிமைகளைத் தருவதில் என்ன தவறு?” என்பது அதற்கான எதிர்வாதமாக வைக்கப்படுகிறது.

புலனறிவாற்றல்

அங்கீகாரத்தை மறுக்கிறவர்கள் பேசுகிற முக்கியமான ஒரு விஷயம் புலனறிவாற்றல் (Sentience) சார்ந்தது. சுற்றியுள்ள சூழலைப் புலன்களால் உணர்ந்து, அதை உணர்வுகளாக மாற்றும் தன்மை புலனறிவாற்றல் எனப்படுகிறது. புலன்களால் சூழலை உணரும் திறன் மட்டுமே போதாது, இதற்கு ஒரு தனி உணர்திறன் தேவை, அது மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது என்கிறார்கள் இவர்கள்.

பல விலங்குகளில் இந்தப் புலனறிவாற்றல் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கொடைத்தன்மை, பிறர் வலியைத் தன்வலியாக உணரும் தன்மை, எதிர்மறை எண்ணங்கள் என்று பல விஷயங்கள் விலங்குகளிலும் உண்டு. ஆனால் இந்த ஆராய்ச்சிகள் பலவும் பாலூட்டிகளிலேயே அதிகம் நடத்தப்படுகின்றன, தவிர, ஒரு விலங்குக்குப் புலனறிவாற்றல் இருக்கிறதா இல்லையா என்று சரியாக அளக்கும் பரிசோதனைகள் இன்னும் வடிவமைக்கப்படவில்லை, இதுவரை நிகழ்ந்தவை எல்லாமே தோராயமான மதிப்பீடுகள்தான். இந்த ஆராய்ச்சியின் நெகிழ்தன்மை, உரிமைகளுக்கு எதிராக வாதிடுபவர்களுக்கு சாதகமாகப் போய்விடுகிறது.

“பிடித்த” விலங்குகள்

ஒரு சூழலியலாளராக எனக்கு இன்னொரு கேள்வியும் இருக்கிறது – இதுபோன்ற கடுமையான விதிமுறைகளை வைத்துக்கொண்டே நாம் விலங்குகளின் உரிமைகளை அங்கீகரிப்போம் என்றால், மனிதர்களுக்குப் பிடிக்காத விலங்குகளின் நிலை என்னவாகும்? எந்த வகையிலும் மனிதர்களைப் போலத் தோற்றமளிக்காத, மனிதர்களை இம்சிக்கிற விலங்குகளுக்கு உரிமை உண்டா? சட்டரீதியாகவும் அறம் சார்ந்தும் இதற்கு என்ன பதில்?

“சிரித்த முகம் கொண்ட” ஓங்கில்களை, அழகான நாய்க்குட்டிகளை, மனிதர்களைப் போலவே இருகால்களில் நடக்கும் குரங்குகளை, பாண்டா கரடியை, கண்கவர் பறவைகளைப் பாதுகாக்கவேண்டும் என்றால் அனைவரும் ஒத்துழைக்கலாம். ஆனால் ஒரு ஆந்தையை, ஓணானை, அருவருப்பான, கொழகொழப்பான ஒரு ஆழ்கடல் மீனை, விஷமுள்ள ஒரு பூச்சியை, புழுவைப் பாதுக்காப்பதில் நமக்கு ஆர்வம் இருக்குமா? மனிதர்கள்தான் சட்டங்களை இயற்றுகிறார்கள் என்பதால் விருப்பத்தின் அடிப்படையில் அவர்கள் பாரபட்சமாகத்தான் முடிவெடுப்பார்கள், இல்லையா?

உரிமைசார் அரசியல்

துரதிருஷ்டவசமாக, இதுவரை விலங்குகளுக்கான் உரிமைகள் குறித்த பெரும்பாலான விவாதங்கள், மனிதர்களின் உணவுத்தட்டில் கைவைப்பவையாக மட்டுமே இருக்கின்றன. இது ஒருபுறம் என்றால், வாழிடப் பாதுகாப்பு என்ற பெயரில் தொல்குடிகளை வெளியேற்றவும் இந்த விலங்குசார் உரிமைக்குரல்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. மனிதர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவே போராட வேண்டியிருக்கும் சூழலில் விலங்குகளுக்கான உரிமைகள் எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் சிக்கல்தான்.

இயற்கைக்கு சட்டரீதியான உரிமைகள் தரப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. “முன்னேற்றம்” என்ற பெயரில் சூழல் தேவையில்லாமல் சுரண்டப்படும் போது அந்த சட்டம் ஒரு பாதுகாப்பாக அமையும். ஆனால் மனித உரிமைகளை இயற்கைக்கு வழங்கி அங்கீகரிப்பதில் பெரிய அளவில் குழப்பங்கள் நிலவுகின்றன. மனிதனல்லாத வேறு ஒன்றை ஏற்றுக்கொள்வதில் மனித இனத்துக்கே இருக்கிற சிக்கலின் பிரதிபலிப்பு இது.

இந்த விவாதங்கள் இப்போதுதான் உலக அளவில் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கியிருக்கின்றன. தொல்குடிகளின் இயற்கை சார்ந்த நம்பிக்கை, ரோபாட் இயந்திர மனிதர்களின் உரிமைகள் என்று கடந்த காலத்திலிருந்தும் எதிர்காலக் கணிப்புகளிலிருந்தும் மாறிமாறிப் பாடம் கற்றுக்கொண்டு தான் இது ஒரு சமநிலைக்கு வரும். “மனிதன் என்றால் யார்? எப்படியெல்லாம் இருந்தால் மனிதன் என்று ஏற்றுக்கொள்வது?” என்கிற, நடுங்க வைக்கிற ஒரு கேள்வி இது. இகாரஸின் மெழுகுச் சிறகுகளோடு மனித இனம் பறக்கத் தொடங்கியிருக்கிறது, கேள்விக்கான பதில் சூரியனாக எரிக்குமா நிலவாக இருக்குமா என்பது போகப்போகத் தான் தெரியும்.

தரவுகள்

  • Environmental Personhood (2018 ) – Gwendolyn J.Gordon – Columbia Journal of Environmental Law.
  • Should Trees have standing? – Toward Legal Rights for Natural Objects (1972). Christopher Stone. Southern California Law Review.
  • Is being a “Person” Essential for the Environment to hold rights? Assessing the Legitimacy of Environmental Personhood and Alternative Approaches (2018). Akshita Jha and Adrija Ghosh, NUJS Law Review.
  • Law Reform or World Re-form: The problem of Environmental Rights (1990). Cynthia G and Howard G, McGill Law Journal.

***

நாராயணி சுப்ரமணியன்
nans.mythila@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular