சித்துராஜ்பொன்ராஜ்
யாவரும் ஊரடங்கு கதைகள் வரிசையில் இன்று எனது ‘நூற்றைம்பது கோட்டைகள்’ என்ற கதை வெளிவந்திருக்கிறது.
14ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் மன்னனாக இருந்த நான்காவது ஹென்றியை ஷேக்ஸ்பியரின் நாடகத்தின் வழியாகவேனும் பல நண்பர்கள் அறிந்திருப்பார்கள்.
இந்த இங்கிலாந்தின் ஹென்றிக்கு சரியாக ஒரு நூற்றாண்டுக்குக் பிறகு பிரான்சு நாட்டை ஆண்ட நான்காவது ஹென்றி முன்னவனைப் போலவே சுவாரசியமானவன்.
தனக்கு முன்னாலிருந்த கத்தோலிக்க மன்னன் வாரிசில்லாமல் செத்துவிட உறவுமுறையின் வழியாக அரசுரிமை பிராடஸ்டண்டு மதத்தவனான இவனுக்கு வந்து சேர்கிறது.
மதச்சண்டைகள் முற்றிப்போய் மனிதர்கள் ஒருவரை ஒருவர் பாரீஸ் நகரத்துத் தெருக்களில் வெட்டிக்கொண்டு செத்த நேரத்தில் ஹென்றி, நாட்டின் பாதுகாப்புக்காக பிராடஸ்டண்டு மதத்திலிருந்து கத்தோலிக்க மதத்துக்கு மாறுகிறான். மாறிய பின்னால் ஐரோப்பியாவிலேயே முதன்முறையாகப் பிராடஸ்டண்டுகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் Edict of Nantes என்ற அரசாணையை அறிவிக்கிறான்.
இதனாலேயே இரு சாரராலும் சந்தர்ப்பவாதி என்று பிரான்சின் நான்காவது ஹென்றி முத்திரை குத்தப்படுகிறான்.
ஹென்றிக்குச் சல்லி என்ற சிறுவயதுத் தோழன் இருந்தான். ஹென்றிக்கு அமைச்சனாகவும் சேவகனாகவும் இருந்த சல்லி கடைசிவரை தனது பிராடஸ்டண்டு மதத்தைவிட்டு மாறவில்லை.
பிரான்சின் மிக இக்கட்டான சூழ்நிலையில் ஹென்றி, சல்லி என்ற இருவரின் உறவும் எப்படி இருந்திருக்கும் என்று எழுத நினைத்தேன்.
‘நூற்றைம்பது கோட்டைகள்’ இவர்கள் இருவரின் கதை.
– சித்துராஜ் பொன்ராஜ்
நூற்றைம்பது கோட்டைகள்
“அவர்களை நாளை காலை வரச் சொல்லி விடலாமா?” அறையின் நடுப்பகுதியில் கொழுத்த மீன்களாய் நீந்திக் கொண்டிருந்த இருட்டுக்குள் வெள்ளை வெளேரென்ற தனது முகத்தை நீட்டியபடி மாக்ஸிமில்லியன் கேட்டார்.
பம்பரத்தின் வடிவத்தில் கபாலம் பெருத்தும் தாடை சிறுத்தும் போயிருந்த உணர்ச்சிகளற்ற முகம். முனையில் சதுர வடிவமாகத் திருத்தப்பட்டிருந்த தாடி. முப்பத்து எட்டு வயதிலேயே தோன்ற ஆரம்பித்திருந்த முன்வழுக்கைக்கு அடியில் ஆழமான சிந்தனைகளின் அடையாளமாக அமைந்திருந்த விசாலமான நெற்றி. எந்நேரமும் தன்னையும் தன்னைச் சார்ந்து இருப்பவர்களையும் மிகுந்த உக்கிரத்துடன் தாக்கிச் சின்னாபின்னமாக்கக் கூடிய வன்முறையை எதிர்பார்த்து சுற்றும் முற்றும் பார்த்தபடியே இருக்கும் சிறிய கூர்மையான மஞ்சள் நிறக் கண்கள். இப்போது அந்தக் கண்கள் அறையின் நடுவே போடப்பட்டிருந்த சிறிய கறுப்பு நிற மேசையின் மீது அமர்ந்து அரசாங்க முத்திரை குத்திய தாள்களை வாசித்துக் கொண்டிருந்த மனிதரின் முகத்தின்மேல் அசையாமல் நிலைகுத்தி இருந்தன.
மேசைமீது எரிந்து கொண்டிருந்த கனமான மெழுகுவர்த்திகளின் தீபமிருக்கும் திசையில் தாள்களைக் காட்டிக் கொண்டு தாழ்வான நாற்காலியில் மன்னர் நான்காம் ஹென்றி அமர்ந்திருந்தார். வாசித்துக் கொண்டிருந்த தாளை நகர்த்தி அதற்கடியிலிருந்த தாளில் உள்ள வரிகளை மிகவும் கவனத்துடன் வாசிப்பவரைப் போல் சில நிமிடங்கள் பாவனை செய்தார். சீற்றமுள்ள ஆண் சிங்கத்தின் கம்பீரமான நெற்றியைப் போன்று கொடுமையும் அகலமும் நிறைந்திருந்த ஹென்றியின் நெற்றிப்பரப்பில் மூன்று வரிகளாய் சுருக்கங்கள் தோன்றி மறைந்தன. பின்பு தனது ஆவலைக் கட்டுப்படுத்த முடியாதவராக தன் கையிலிருந்த தாள்களை மேசைமீது விசிறி எறிந்துவிட்டு மெல்லிய பெருமூச்சோடு முன்னால் நின்றிருந்த தனது அமைச்சரிடம் தனது கவனத்தை ஹென்றி திருப்பினார்.
அப்படி அவர் திரும்பியபோது அறைக்குள் கூடியிருந்த இருட்டின் நடுவே ஹென்றியின் அகன்ற வெள்ளை வெளேரென்ற நெற்றியும் நீள்வட்ட முகமும் சிவப்பேறி மேடேறியிருந்த கன்னங்களும் பெரிய கருநீல நிறக் கண்களும் மெழுகுவர்த்தியின் பொன்னிறமான வெளிச்சத்தில் ஜொலித்துக் கிடந்தன.
மார்ச்சு மாதம் இருபத்திரண்டாம் தேதி பாரீஸின் நோத்ரு தாம் தேவாலயத்தில் ஈஸ்டர் ஆராதனைகள் கொண்டாடப்பட்டு கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் முடிந்து ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரம் தொடங்கவிருந்த போதும்கூட மாலை ஐந்து ஐந்தரை மணிக்கே இருள் கவிய ஆரம்பித்துவிடுகிறது. மேற்குத்திசையில் முதலாம் ஜேம்ஸ் மன்னன் ஆட்சி செய்யும் இங்கிலாந்திற்கும் பிரெஞ்சு தேசத்திற்கும் இடையில் கொந்தளித்துக் கிடக்கும் சாம்பல் நிறக் கடலிலிருந்து எழும் காற்றும் சிறுமழையும் கோதுமையும் பார்லியும் விளையும் மேற்கு பிரான்சின் பிரித்தானியப் பிரதேசத்தின் பெருவெளிகளைக் கடந்து இந்த நாந்த்ஸ் நகருக்குள் புகும்போது கம்பளி ஆடைக்குள்ளும் குளிர் பின்னி எடுக்கிறது. ஏப்ரல் மாதம் பன்னிரண்டாம் தேதியாகியும்கூட இன்னமும் கடும்பனிக் காலம் மறைந்து வசந்தகாலம் வரவில்லை.
‘வசந்தகாலம் வரத்தானே வேண்டும்’ என்று வாய்க்குள் அடைபட்டிருந்த சூடான காற்றை உதடு குவித்து மெல்ல வெளியே ஊதியபடியே வெல்வெட்டுக் கையுறைகளை அணிந்திருந்த கைகளை சத்தமெழாமல் தட்டிக் கொண்டிருந்த மாக்ஸிமில்லியன் யோசித்தார். கொஞ்சம் முன்பின் ஆனாலும் வசந்தகாலம் வந்தே தீரும். அதுதான் இதுவரைக்கும் நடந்திருக்கிறது. இந்த ஆயிரத்து ஐநூற்று தொண்ணூற்று எட்டாம் வருடம் மட்டும் விதிவிலக்கா என்ன?
ஹென்றி அமர்ந்திருந்த மேசை மீதிருந்த மெழுகுவர்த்திகள் பலவிதமான வேலைப்பாடுகள் அமைந்த பித்தளைத் தண்டுகளுக்குள் செருகப்பட்டிருந்தன. கரைந்து குள்ளமாகிப் போயிருந்த மெழுகுவர்த்திகளின் ஓரங்களில் மெழுகு வெளிப்புறமாய் ஒழுகி உறைந்து அவற்றுக்கு இதழ்விரிந்திருக்கும் வெள்ளைநிற குண்டுப்பூக்களின் தோற்றத்தைத் தந்து கொண்டிருந்தது.
“மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் மன்னரின் கணங்கள் மேலும் சிவப்பேறி அவருடைய உதடுகள் குளிரில் துடித்துக் கொண்டிருப்பதை கவனித்த மாக்ஸிமில்லியனுக்குக் கவலை ஏற்பட்டது.”
மாக்ஸிமில்லியனைவிட மன்னர், வயதில் ஏழு வருடங்கள்தான் பெரியவர் என்ற போதிலும் அவர் பிரான்சின் உஷ்ணமான தெற்கு எல்லைப்புறத்தை ஆண்டுவந்த நவாரா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். நாட்டின் வடக்குப் பகுதியில் பிறந்த தன்னைப்போல் அவரால் இந்த கடுங்குளிரைத் தாங்க முடியுமா என்று மாக்ஸிமில்லியனுக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது. சாத்திய கதவுகளுக்கு வெளியே காவலுக்கு நின்றிருக்கும் பியர்-லூயியை அழைத்து மன்னருக்கு இன்னும் கனமான போர்வைகளை எடுத்துவரச் சொல்லலாமா என்று மாக்ஸிமில்லியன் யோசித்தார். ஆனால் கரிய நிற மேசைமீது ஹென்றி ஊன்றி வைத்திருந்த வலது கை விரல்களின் நீளமும் திடமும் அவற்றின் நகங்களிலிருந்து சிதறிய முத்துப்போன்ற வெளிச்சமும் மேசைமீது ஊன்றியிருந்த வலது கை மணிக்கட்டின் பருமனும் அவரை எதுவும் பேசவிடாமல் செய்தன.
ஹென்றி தனது இடது கையை இடுப்பில் வைத்தபடியே நாற்காலியில் ஒரு பக்கமாக சாய்ந்தபடி அமர்ந்து மாக்ஸிமில்லியனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வையில் நவாரா பிரதேசத்தின் பிரெனி மலைப்பாறைகளின் கடுமையும் உஷ்ணமும் அப்பாறைகளினூடே ஓடும் வெளிச்சம் மிகுந்த சிற்றருவிகளின் மிக லேசாய் சப்திக்கும் சிரிப்பொலியும் நிறைந்திருந்தது. அத்தகைய கடுமையையும் மற்றவர்களுக்கு எளிதில் கேட்காத இடையறாத சிரிப்பொலியையும் ஒரே நேரத்தில் தனக்குள் அடக்கி வைத்திருக்கும் மனிதனை யாரும் வெல்வது கடினம் என்று மாக்ஸிமில்லியனுக்குத் தெரிந்தது.
அதிலும் பத்தொன்பது வயதிலேயே நோத்ரு தாம் தேவாலயத்தின் வளாகத்தில் நடந்தேறிய மார்க்கரெட் டி மெடிசியுடனான தனது திருமணத்தைக் காண வந்த பிராடஸ்டண்டு ஹூயூக்நோட் திருச்சபையைச் சேர்ந்த தனது உறவினர்களும் நண்பர்களும் பிரான்சின் மிகப் பிரசித்தமான பிராடஸ்டண்டு பிரபுக்களும் மார்க்கரெட்டின் அக்காளான ராணி கேத்தரீனால் தூண்டிவிடப்பட்ட கத்தோலிக்கர்களின் கும்பலால் பாரீஸ் வீதிகளில் நாய்களைப் போல் துரத்தப்பட்டு நின்ற இடத்திலேயே வெட்டிச் சாய்க்கப்பட்டதைக் கண்டவன் அப்படித்தான் காலம் முழுவதும் பசித்த ஓநாயாய், முகத்தில் கடுமையுடனும் அடக்கமான சிரிப்புடன் அலைந்து திரிவான்.
அன்று மட்டும் பாரீஸில் மூவாயிரம் பிராடஸ்டண்டுகள் தெருவில் சாகடிக்கப்பட்டு செத்துப் போனார்கள். புனித பார்த்தோலமியூ நாளுக்கு முந்திய தினத்தில் அந்த வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதால் அந்த சம்பவம் அந்த நாளின் பேராலேயே அழைக்கப்பட்டது. அரசாங்கத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட வன்முறை என்பதால் காவலர்களும் படைவீரர்களும் தெருவோரமாய் நின்றபடி பிராடஸ்டண்டுகள் தெருக்களில் வெட்டிச் சாய்க்கப்படுவதைக் கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தார்கள். பலர் கும்பலோடு கும்பலாகப் பல பிராடஸ்டண்டுகளைக் கொன்று குவித்தார்கள். பிராடஸ்டண்டுகள் சுதாரித்துக் கொண்டு திருப்பித் தாக்கியதில் வன்முறையில் கலந்து கொள்ளாத பல நூறு அப்பாவி கத்தோலிக்கர்களும் பரிதாபமாகச் செத்துப் போனார்கள்.
அவருக்கு முன்னிருந்த மன்னர் கடைசியில் காலமான பிறகு கடந்த பத்தாண்டுகளாக பிரான்சு தேசத்தைச் சூழ்ந்திருக்கும் மாபெரும் கத்தோலிக்க ஹாப்ஸ்பர்க் பேரரசோடு இடையறாது போர் நடத்தி – வென்று, தோற்று, வென்று – ஹென்றி சர்வ ராஜ அலங்காரங்கள் சார்த்தியிருந்தாலும் தன் உயிருக்குப் பயந்த வெறும் நாடோடியாகத்தான் வாழ்ந்திருக்கிறார். ஆறு வருடங்களுக்கு முன்னால் தனது மூப்பர்கள், உறவினர்கள், சகாக்கள் அனைவரையும் இரக்கமே இன்றி தெருநாய்களைப்போல் சாகடித்தவர்களின் மதமான கத்தோலிக்க மதத்துக்கு மாறினால்தான் பாரீஸ் நகரம் தனக்கு வசமாகும் என்று அறிந்தபோது ‘பாரீஸ் நகரத்துக்காக சந்தேகமே இல்லாமல் ஒரு கத்தோலிக்கத் திருப்பலி ஆராதனையைக் கொடுக்கலாம்’ என்று சொல்லி மாபெரும் பாரீஸ் நகரத்தை உள்ளங்கை அளவே உள்ள கோதுமைப் பணியாரம்போல் லபக்கென்று விழுங்கிய நான்காவது ஹென்றிக்கு இந்தக் குளிரெல்லாம் ஒரு பொருட்டாகாது என்று மாக்ஸி மில்லியனுக்குத் தோன்றியது.
“என்ன சல்லிப் பெருமகனாரே, சிந்தனை பலமாகத்தான் இருக்கிறது போல?”
ஹென்றியின் குரலோசை அறையில் கூடியிருக்கும் இருளில் தெற்குப் பிரஞ்சுப் பிரதேசங்களில் வளரும் அடர்த்தி மிக்க மால்பெக் திராட்சைகளினால் உருவாகிய மதுவைப்போல் மிகுந்த நிதானத்துடனும் கனத்துடனும் பரவி ஆரோகணித்தது.
எஜமானன் தனது அதிகாரப்பூர்வமான பட்டப்பெயரால் தன்னை அழைப்பதைக் கேட்டு மாக்ஸிமில்லியன் வெட்கப்பட்டார். தன் வெட்கத்தை மறைப்பதற்காக உதடுகளை விரித்துப் பற்கள் தெரிய மன்னரைப் பார்த்துச் சிரித்தார். மாக்ஸிமில்லியனின் பற்கள் ஏதோ இரவு பெருச்சாளியின் பற்களைப்போன்று சிறியவையாகவும் நெருக்கமானவையாகவும் மெழுகுவர்த்திகளின் மங்கிய வெளிச்சத்தில் முத்துக்களின் நிறத்தில் சுடர்விடுபவையாகவும் இருந்தன.
“இல்லை மன்னர் பெருமானே. நமது பழைய காலங்களைக் கொஞ்சம் நினைத்துப் பார்த்துக் கொண்டேன்,” என்று சொன்னார் மாக்ஸிமில்லியன் என்ற இயற்பெயருடைய சல்லிப் பெருமகனார்.
“அதைப்பற்றி யோசித்து என்ன லாபம்? நமது இறந்த காலமும் எதிர்காலமும்தான் நம் வாசலுக்கு வெளியே ஒன்றை ஒன்று முறைத்துப் பார்த்தபடி நான் சாவேனா நீ சாவாயா என்று மல்லுகட்டிக் கொண்டு நிற்கின்றனவே.”
நான்காவது ஹென்றி இருட்டில் கரைந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியைப் போல் தன்னைச் சுற்றி நீந்திக் கொண்டிருந்த நிழல்களுக்குள் அமிழ்ந்து போயிருந்தார். பிரான்சின் வட பகுதியினரோடு ஒப்பிட பிரஞ்சு தகப்பனுக்கும் நாவாராவின் ராணிக்கும் பிறந்த நான்காவது ஹென்றி உருவத்தில் குள்ளமானவராய் இருந்தார். மெழுகுவர்த்திகளின் வெளிச்சம் அறையின் சுவர்களின்மீது வீசிக் கொண்டிருந்த பெரிய நிழல்களின் மத்தியில் ஹென்றியின் உருவம் மேலும் சிறுத்துப்போய் அவர் எப்போதும் அணியும் கறுப்பு ஆடைகளிலிருந்து அறையின் ஜன்னலை நோக்கி நீட்டப்பட்டிருந்த அவருடைய விரலும் கையும் ஜன்னலைப் பார்த்துத் திரும்பியிருந்த முகமும் தீப்பற்றியதுபோல் பிரம்மாண்டமாக ஜொலித்தன.
“கத்தோலிக்கப் பிரபுக்கள் எல்லோரும் பிராடஸ்டண்டுகளோடு நான் செய்து கொள்ளப் போகும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வார்களா?”
“பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றுதான் தோன்றுகிறது. பிரெஞ்சு ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரே ஆண்வழி வாரிசு நீங்கள்தானே. ஆண்வழி வாரிசு மட்டும்தானே பிரஞ்சு அரியணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பல காலத்திற்கு முன்பிருந்த நடப்பில் உள்ள சாலிக் சட்டம் எல்லோருக்கும் நினைவிலிருக்கிறது. இந்தச் சட்டத்தை மாற்றி மதத்தின் பெயரால் கத்தோலிக்கர்கள் என்பதாலேயே பெண்வழி வாரிசுகளையோ வேற்று நாட்டவர்களையோ அரியணையில் ஏற்றினால் இங்கிலாந்து பிரெஞ்சு அரியணைக்குத் தனக்குள்ள பாத்தியதையைத் தூக்கிக் கொண்டு வந்துவிடும் என்று பாரீஸ் பாராளுமன்றம் எட்டு வருடங்களுக்கு முன்னால் எச்சரித்தது எல்லோருக்கும் நன்றாகவே நினைவிலிருக்கிறது.”
“ஆனாலும் எதிர்ப்பு வரும்.”
“வரும்,” என்றார் மாக்ஸிமில்லியன்.
ஹென்றி நாற்காலியிலிருந்து எழுந்து நின்றார். அவருடைய நீளமான கைவிரல்கள் அவர் கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த ரிப்பனில் தொங்கிக் கொண்டிருந்த மூன்று இஞ்சுக்கள் அகலமுள்ள நூரம்பர்க் கடிகாரத்தின் தங்க மூடியை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தன.
“யாரிடமிருந்து?”
“கீஸ் பிரபுக்களுக்களிடமிருந்தும் அவர்களை ஆதரிப்பவர்களிடமிருந்தும்.”
“என் மூதாதை பன்னிரண்டாம் லூயி மன்னரின் இளைய மகளிடமிருந்து இத்தாலிய தந்தையின் வழியாகத் தோன்றியவர்கள்தானே, நான் பிராடஸ்டண்டு மதத்தவனாக வளர்ந்தது இப்போது அவர்களுக்கு நல்ல சாக்காகக் கிடைத்தது. எனக்குத் தெரிந்தவரை கத்தோலிக்க தேவாலயத்தின் போதனைகளோ, பிராடஸ்டண்டு தேவாலயத்தின் கோட்பாடுகளோ மதத்தின் பேரால் யாரையும் கொன்று போடு என்று சொன்னதே இல்லை. அரசியலுக்காக இவர்கள் மதத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.”
காறி உமிழ்வதுபோல் வார்த்தைகளைத் துப்பிவிட்டு நான்காவது ஹென்றி மாக்ஸிமில்லியனை வெறுப்பு கலந்த பார்வையோடு உற்றுப் பார்த்தார். சல்லிப் பெருமகன் அருகிலிருந்த நாற்காலியின் வெல்வெட்டு பதித்த பின்புறத்தை கைகளால் இறுகப் பற்றிக்கொண்டு தன் முகத்தை வெடுக்கென மன்னரிடமிருந்து திருப்பிக் கொண்டார். அவருக்கு ஏற்பட்டிருந்த உணர்ச்சி வேகத்தில் நாற்காலியை மிகப் பலமாகப் பற்றியதில் அவர் முஷ்டிகள் மேலும் வெளிறிப் போனது மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது.
“அது சரி. கீஸ் பிரபுக்களுக்கு உதவி செய்ய மதத்தின் பேரால் ஆஸ்திரியப் பேரரசும், ஸ்பானிய மன்னன் பிலிப்பும், ஏன் ரோம் நகரமும்கூட கச்சை கட்டிக் கொண்டு நிற்கும். அவர்களைப் பொறுத்தவரை நான் பதவிக்காக மதத்தையே விட்டுக் கொடுக்கக்கூடிய ஒரு பச்சைத் துரோகி. என்னை நம்புவதைவிட கைகளில் சுற்றியிருக்கும் விஷப்பாம்பை நம்பலாம். உங்கள் எண்ணமும் அதுதானே சல்லிப் பெருமகனாரே?”
நான்காவது ஹென்றியின் குரல் பிரெனி மலைத்தொடர்களில் தாவித் தாவி மேலேறிச் செல்லும் நீண்ட ரோமமுடைய ஆடுகளின் கால்கள் இடற சரசரவென்று மலையிலிருந்து உருண்டு வரும் உஷ்ணமான கூழாங்கற்கள்
ஒன்றுமீது ஒன்று அடுக்கி வைத்ததுபோல் நீலநிற வானத்தை நோக்கி எழும்பியபடி கிடக்கும் பழுப்பு நிற நவாரா தேசத்துப் பாறைகளுக்கிடையே அனைத்தையும் இரக்கமின்றி வறள வைக்கும் உக்கிரத்துடன் மெல்ல முனகி அலையும் காற்று.
மாக்ஸிமில்லியன் நாற்காலியின் பின்புறத்தை இறுகப் பிடித்திருந்த கைகளை விடுவித்து தனது மன்னரின் முகத்தை உற்றுப் பார்த்தார்.
“அப்போது பிரான்சைக் கூறுபோட ஆஸ்திரியா, ஸ்பெயின் என்று பல நாடுகள் ஆர்வத்தோடு காத்திருந்தன. அரசியல் ஆதாயத்துக்காகத் தம்மைத் தாமே கத்தோலிக்க கூட்டணி நாடுகள் என்று அறிவித்துக் கொண்டன. ஸ்பெயின் மன்னன் ஃபிலிப் தான் அதிகம் துள்ளினான். பிரான்சைத் தனது அகண்ட ராஜ்ஜியத்துக்குள் சேர்த்துக் கொள்ள அவனுக்குத் தீராத ஆசை. அவர்களின் பிடியிலிருந்து பிரான்சின் சுதந்திரத்தைத் தற்காத்துக் கொள்ள ஒற்றை ஆளாய்ப் படைத்திரட்டி அதில் சேர வருபவர் கத்தோலிக்கரா அல்லது பிராடஸ்டண்ட் ஹ்யூக்நோட்டா என்று பார்க்காமல் ஒரு காலத்தில் சளைக்காமல் போரிட்டீர்கள். அந்த நேரத்தில் பிரான்சு தேசத்து நகரங்களின் பிரதான சதுக்கங்களிலும், சந்தைகளிலும் மதுபான விடுதிகளிலும் உங்களைப் பல தலைகளையுடைய விஷநாகத்தின் பிடியிலிருந்து பிரான்சைக் காப்பாற்றப் போகும் ஹெர்குலீஸாகச் சித்தரித்துப் பொதுமக்கள் புகழ்ந்து பேசியது உங்கள் நினைவில் இருக்கும்.”
ஹென்றியின் பெரிய கருநீலக் கண்கள் தமக்குள் கவிழ்ந்து எல்லையில்லா ஆழங்களைப் பார்த்துக் கொண்டிருப்பவை போல் கருஞ்சாம்பல் நிறமாக மாறியிருந்தன. மாக்ஸிமில்லியனின் முகத்தில் முழுவதுமாகப் பதித்திருந்த கண்களை சிறிதும் அகற்றாமல் நான்காவது ஹென்றி சின்னச் சீறலுடன் அவரைப் பார்த்துப் பேசினார்.
“எனது பழைய மதமான பிராடஸ்டண்டு மதத்தை எப்போது மிகப் பகிரங்கமாக நிராகரித்துவிட்டுப் பிரான்சின் மன்னனாக முடிசூடிக் கொள்ளும் ஆசையில் போர்ஜஸ் நகரத்துப் பேராயரின் முன்னால் கத்தோலிக்க மதத்தை ஏற்றேனோ அப்போதே நானும் பல தலைகளையுடைய விஷப்பாம்பு ஆகிவிட்டேன் அல்லவா?”
மாக்ஸிமில்லியன் பதில் பேசாது நின்றிருந்தார்.
நான்காவது ஹென்றி மீண்டும் நாற்காலியில் ஒரு சிறிய பெருமூச்சோடு அமர்ந்தார்.
“நாளை பிரான்சில் வாழும் பிராடஸ்டண்டுகளுடன் கையெழுத்தாகப் போகும் ஒப்பந்தத்தின் ஷரத்துகளை வாசியுங்கள் அமைச்சரே.”
மாக்ஸிமில்லியன் தனது கையில் சுருட்டி வைத்திருந்த தாளை விரித்து மங்கிவரும் மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தின் பக்கமாய் அதைச் சாய்த்தபடி நடுங்கும் குரலில் வாசிக்க ஆரம்பித்தார்.
“நமது ரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் கருணையின் வருடம் ஆயிரத்து ஐநூற்றி தொண்ணூற்று எட்டு, ஏப்ரல் பதின்மூன்றாம் நாள். நமது ராஜ்ஜியத்தில் வாழும் அனைத்துப் பிராடஸ்டண்டு பிரபுக்களுக்கும் குடிமக்களுக்கும் – எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் தங்கள் மதச் சட்டங்களின்படியும் கோட்பாடுகளின்படியும் இறைவனை வணங்கும் உரிமை வழங்கப்படுகிறது. 1597க்கு முன்னால் பிராடஸ்டண்டு தேவாலயங்களாக இருந்த இடங்கள் எந்தவிதமான இடையூறும் இன்றி தொடர்ந்து அப்படியே இயங்கவும், ஒவ்வொரு கிராமத்திலும், புறநகர்ப் பகுதியிலும் பிராடஸ்டண்டு தேவாலயம் இல்லாத பட்சத்தில் ஒரு தேவாலயம் கட்டிக் கொள்ளவும் அனுமதி தரப்படுகிறது. சட்டத்தின் முன்னால் கத்தோலிக்கர்களுக்கு உள்ள அத்தனை உரிமைகளும் பிராடஸ்டண்டு வகுப்பினருக்கும் வழங்கப்படுகிறது. வெளியூருக்குப் போகும் பிரெஞ்சுப் பிராடஸ்டண்டுகளுக்கு மதம் தொடர்பான எல்லாவிதமான வழக்குகளிலிருந்தும் பாதுகாப்பு தரப்படும். இந்த ராஜ்ஜியத்திலுள்ள எந்த பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட கத்தோலிக்கர்களுக்கு என்னென்ன உரிமை உண்டோ அதே உரிமை பிராடஸ்டண்டுகளுக்கும் வழங்கப்படும். நீதிமன்றங்களின் கத்தோலிக்க நீதிபதிகளின் எண்ணிக்கைக்குச் சம எண்ணிக்கையில் பிராடஸ்டண்டு நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள்…”
மாக்ஸிமில்லியன் வாசிப்பதை நிறுத்தி மன்னரைப் பார்த்தபடி நின்றார்.
“சாலிக் சட்டத்தின்படி எனக்கு முன்னால் மன்னனாக இருந்த என் ஒன்றுவிட்ட சகோதரன் மூன்றாவது ஹென்றி காலமானபோது நான்தான் இந்த நாட்டின் மன்னனாவதற்கு எல்லா உரிமைகளையும் உடையவனாக இருந்தேன். மூன்றாவது ஹென்றியின் காப்படியன் கிளை வாரிசில்லாமல் இருந்ததால் எங்கள் பர்பன் கிளைக்கு அரசுரிமை வருவதுதான் சட்டப்படி சரியானதாக இருந்திருக்கும். ஆனால் பத்து வருடங்களுக்கு முன்னால் ஹென்றி ஒரு கிறிஸ்துவ துறவியால் கொலை செய்யப்பட்டபோது எனக்கு எதிராக இருந்தவர்கள் என்ன வாதத்தை முன் வைத்தார்கள் என்பது உங்கள் நினைவில் இருக்கிறதா மாக்ஸிமில்லியன்?”
மாக்ஸிமில்லியன் தனது கண்களை மூடிக் கொண்டார். அவர் குரல் நினைவுகளின் சுமையினால் கனிந்து ஒலித்தது.
“கத்தோலிக்கன் அல்லாத மன்னனைக் கொலை செய்வது சட்டப்படி குற்றமல்ல என்றார்கள்.”
காட்டில் காலடிகளை எடுத்து வைக்க நொறுங்கும் காய்ந்த இலைகளைப்போல் திக்கித் திணறிச் சுடர்விடும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பிரம்மாண்டமாக வளர்ந்து சுவர்களில் ஏறி வழியும் நிழல்களாக அறை முழுவதும் பெருத்த மௌனம் கனமாய் அமர்ந்து கொண்டது.
“என் மீது வெளிநாட்டுக்காரர்கள் மட்டுமில்லாமல் இதே நாட்டில் வாழ்பவர்களும் நடத்தியிருக்கும் பல கொலை முயற்சிகளை வெகு எளிதில் மறந்துவிட்டீர்கள் அமைச்சர் பெருமகனாரே. பிராடஸ்டண்டுகளைப் பொறுத்தவரை நான் மதத்துரோகி. கத்தோலிக்கர்களைப் பொறுத்தவரையில் நான் நம்பக்கூடாத விஷப்பாம்பு. சுருக்கமாகச் சொல்லப் போனால் எல்லோராலும் எந்தவித மனச்சங்கடமும் இல்லாமல் கொலைசெய்யப்படக் கூடிய தகுதியுடையவன். நான் பிராடஸ்டண்டாக வளர்க்கப்பட்டாலும் நான் கைக்குழந்தையாக இருந்த போது நவாராவில் எனக்குக் கத்தோலிக்க முறையில்தான் ஞானஸ்நானம் தரப்பட்டது. அதைக்கூட இவர்கள் திரித்து எனக்குப் புனித நீரால் இல்லாமல் ஜூரான்சோன் மதுவினாலும் நசுக்கிய பூண்டினாலும் ஞானஸ்நானம் தரப்பட்டதாகத் திரித்துச் சொல்கிறார்கள். அது தெரியுமல்லவா உங்களுக்கு?”
மாக்ஸிமில்லியன் தலையை லேசாக கீழ்நோக்கிச் சாய்த்துக் கொண்டார். நான்காவது ஹென்றி தனக்குள் பேசுவதைப்போல் பேசிக் கொண்டு போனார்.
“ஞானஸ்நானத்தால் கத்தோலிக்கன். வளர்ப்பால் பிராடஸ்டண்டு. பின்பு பகிரங்கமான சடங்கினால் மீண்டும் கத்தோலிக்கன். இப்போது நான் கத்தோலிக்கனா? அல்லது பிராடஸ்டண்டா? எனக்கே தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் எனக்குத் தெரிகிறது. வெளியிலிருந்து நம்மைத் தின்னக் காத்திருக்கும் பலதரப்பட்ட எதிரிகளிடமிருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால் கத்தோலிக்கர்களும் பிராடஸ்டண்டுகளும் ஒன்றாக வேண்டும் சல்லிப் பெருமகனாரே. அப்படி அவர்கள் ஒன்றாக வேண்டுமென்றால் சொற்பொழிவுகளோ உபந்நியாசங்களோ போதாது அமைச்சரே. சட்டத்தின் முன் எல்லோருக்கும் சம உரிமை தரப்பட வேண்டும். சட்டம் தரக்கூடிய மிகப் பெரிய உரிமை எது தெரியுமா? நீதி. உயிருக்கு அச்சப்படத் தேவையில்லாத நிலை.”
நான்காவது ஹென்றி நாற்காலியிலிருந்து எழுந்து தனது அமைச்சருக்கு வெகு அருகில் வந்து நின்று கொண்டார். அமைச்சரைவிட அரசர் சற்று உயரம் குறைவானவராக இருந்தார். அவருடைய கனமான உஷ்ண மூச்சு மாக்ஸிமில்லியனின் முகத்தில் மோதிப் பரவியது.
“இதுவரை பிராடஸ்டண்டு விசுவாசத்தில் அசராத விசுவாசத்தோடு இருக்கும் நீங்கள் மட்டுமல்ல, நானும் புனித பார்த்தோலமியூ நாள் படுகொலைகளை மறக்கவில்லை நண்பரே.”
மாக்ஸிமில்லியன் தனது முகத்திற்கு முன்னால் நிழல்களில் மூழ்கிக் கிடந்த மன்னரின் முகத்தையும் அதன் நடுவிலிருந்த எடுப்பான நீள நாசியையும் பார்த்தார். அந்த மூக்கினால்தான் புனித பார்த்தோலமியூ கொலைகளிலிருந்து ஹென்றி தப்பிப் பிழைத்தார் என்று மாக்ஸிமில்லியனின் தந்தை அடிக்கடிச் சொல்வார். பிரெஞ்சு அரச குடும்பத்தவர்களுக்கே பிரத்யேகமாக இருந்த நீளமான நாசி. தனது திருமணம் முடிந்த உடனேயே பாரீஸ் தெருக்களில் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டபோது தனது மனைவி கத்தோலிக்க மதத்தவளாக மட்டுமில்லாமல் அரசியின் தங்கையாக இருந்த காரணத்தாலும் கத்தோலிக்க மதத்திற்கு மாறிவிடுவதாக ஹென்றி செய்து தந்த சத்தியத்தாலும் மட்டுமே அவர் மயிரிழையில் தப்பிப் பிழைத்தார்.
பாரீஸில் இருந்த கல்லூரியில் அப்போது படித்துக் கொண்டிருந்த மாக்ஸிமில்லியன் கையில் கத்தோலிக்கப் பிரார்த்தனைப் புத்தகம் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டதால் கல்லூரியை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
“ஆனாலும் உங்கள் கள்ளக் காதலியின் பேச்சைக் கேட்டுத்தான் பதவிக்காக நீங்கள் கத்தோலிக்கராக மாறியதாகப் பேச்சுள்ளது,” என்று தாழ்ந்த குரலில் சொன்னார் மாக்ஸிமில்லியன்.
அவர் பார்வையில் இப்போது மிகப் பெரிய கனிவு நிறைந்திருந்தது. தனது பதினொன்றாவது வயதில் அவருடைய தந்தை முதன்முறையாக நவாரா அரசவைக்குக் கூட்டிச் சென்று ஹென்றியிடம் அறிமுகப்படுத்திய நாளிலிருந்து மாக்ஸிமில்லியன் ஹென்றியுடனேயே சேவகனாக, தூதுவனாக, நண்பனாக, ஆலோசகனாக இருக்கிறார். இருவரும் ஒன்றாகவே புனித பார்த்தோலமியூ நாள் கொலைகளிலிருந்து பாரீஸைவிட்டுத் தப்பி வந்தார்கள்.
அதன்பிறகு நவாராவின் தெள்ளத் தெளிந்த நீல வானத்தின் கீழ் வண்ணமயமான ஆடைகளை அணிந்து கலகலவென்று சிரித்த இளவரசன் எப்படியெல்லாமோ மாறிவிட்டார். அவருடன் சேர்ந்து பாரீஸ் படுகொலைகளிலிருந்து தப்பித்த மாக்ஸிமில்லியன் மட்டும் தான் ஏற்றுக் கொண்ட கொள்கையில் எந்தவிதமான மாற்றத்திற்கும் இடம் கொடுக்காமல் திடமாக இருக்கிறார்.
தன் நண்பனின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு ஹென்றி மிகப் பெரிதாகச் சிரித்தார்.
“காப்பிர்யேல்லைச் சொல்கிறாயா? உனக்கு ஒன்று சொல்லட்டுமா? நீ சொல்வது சரிதான். காமவயப்பட்டுத்தான் நான் கத்தோலிக்கனானேன். ஆனால் நீ நினைப்பதுபோல் பெண்ணின் மீதோ பதவியின் மீதோ மோகம் கொண்டு நான் மதம் மாறவில்லை. என்னை வேறொரு பெரும் காமம் சிறுவயதிலிருந்தே ஆட்டிப் படைத்து வந்திருக்கிறது. அது, இந்தப் பிரான்சு தேசத்தின் மண் மீது நான் கொண்டிருக்கும் காமம். இந்த தேசம் பகைவர்களின் கைகளுக்குப் போய் சிதறி சின்னாபின்னமாகிவிடக் கூடாதே என்ற பெரும் மோகம். இந்த மண்ணின் மீதும் அதன் மக்களின் மீதும் நான் வைத்த பேராசை. உன்னைப் போன்றவர்கள் பதவிமீதும், பெண்கள் மீதும், மத நம்பிக்கைகளின் மீதும், வைத்திருந்த பாசத்தை நான் இந்த மண்ணின்மீது வைத்தேன். அதற்காக என் நற்பெயரையும் நிம்மதியையும் ஏன் என் கடவுளையுமேகூட இழக்கத் துணிந்தேன். வரைமுறை இல்லாத பெருங்காமம் இப்படித்தான் ஒருவனுடைய கண்ணை மறைக்கும். அந்த வகையில் நான் காமுகன், மிகப் பெரிய காமுகன்.”
வெளியே இரவு கவியத் தொடங்கியிருந்தது. மாக்ஸிமில்லியனின் எதிரே இருந்த சுவரில் நான்காவது ஹென்றியின் நிழலுருவம் பெரும் பேயாய், பூதமாய், பெருங்காமத்தால் ஓங்கி வளர்ந்த ராட்சசமாய்த் தெரிந்தது.
மாக்ஸிமில்லியனின் கையும் உடலும் நடுங்க ஆரம்பித்திருந்தன. தனது கையிலிருந்த ஒப்பந்தத் தாளை மீண்டும் சுருட்டி அவர் அந்தப் பயங்கரமான அறையிலிருந்து கிளம்பத் தயாரானார்.
“நில்லுங்கள், அமைச்சரே. ஒப்பந்தத்தின் வேறொரு முக்கியமான ஷரத்தை வாசிக்காமல் போகிறீர்களே”
மாக்ஸிமில்லியன் மீண்டும் தாளை விரித்தார்.
“பிராடஸ்டண்டுகள் தங்கள் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்ளும் விதத்தில் எட்டு ஆண்டுகளுக்குத் தங்களுக்குச் சொந்தமான நூற்றைம்பது கோட்டைகளைக் கட்டிக் கொள்ளலாம். அவற்றில் தேவையான ஆயுதங்களையும் போர் வீரர்களையும் அவர்கள் சொந்த செலவில் வைத்துக் கொள்ளலாம். இக்கோட்டைகள் அரசின் அதிகாரத்துக்கு உட்படத் தேவையில்லை.”
நான்காவாது ஹென்றி மீண்டும் கலகலவென்று சிரித்தார்.
“நாட்டை ஒன்றாக்கத் துடிப்பவன் அதைப் பிளவுபடுத்துவதுபோல் குடிமக்களில் ஒரு பிரிவினர் மட்டும் கோட்டைகளைச் சுயாதீனமாகக் கட்டிக்கொள்ள அனுமதிப்பது உங்களுக்கு விநோதமாகத் தோன்றவில்லையா நண்பரே?”
“தோன்றியது. ஆனால் பிராடஸ்டண்டுகளிடையே தமது உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு உண்டு என்ற நம்பிக்கை வரும் வரைக்கும் தேவைதான் என்று நான் கருதினேன்.”
நான்காவது ஹென்றி தனது அமைச்சரான மாக்ஸிமில்லியன் டி பெத்தூன் சல்லியை உற்றுப் பார்த்தார்.
“இத்தனை பேசுகிறீர்கள். என்னுடன் நெடுங்காலமாகக் கூடவே இருக்கிறீர்கள், நீங்களும் ஒரு கோட்டையைக் கட்டி வைத்திருக்கிறீர்கள். ஏன், உங்களுக்குக்கூட என்மீதும் இந்த நாட்டின்மீதும் நம்பிக்கை பிறக்கவில்லையா நண்பரே?”
’’நானா? கோட்டை கட்டினேனா? எப்போது?” என்று திகைப்புடன் கேட்டார் மாக்ஸிமில்லன்.
’நீங்கள் கட்டியதுதான். புனித பார்த்தோலமியூ இரவில் நீங்கள் உங்களுக்கென்றே கட்டி வைத்திருக்கும் கோட்டை.”
நான்காவது ஹென்றி இரண்டு விரல்களால் தனது பழைய நண்பனின் மார்பை ஓரிரண்டு முறைகள் தட்டிவிட்டு அறையை விட்டு வெளியேறினார். அவர் சிரிப்பு மட்டும் அறைக்குள் நெடுநேரமாய்க் கேட்டுக் கொண்டிருப்பதுபோல் மாக்ஸிமில்லியனுக்குத் தோன்றியது.
நான்காவது ஹென்றி இளைஞர் அல்ல. மத்திய வயதுக்காரர். நாற்பத்தாறே வயதானவர். அவர் போவதை முப்பத்தெட்டு வயதான மாக்ஸிமில்லன் டி பெத்தூன் சல்லி மிகுந்த வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அறையின் ஜன்னலுக்கு வெளியே நாந்த்ஸ் நகரம். அதன்மீது கனமாய் அமர்ந்திருக்கும் கும்மிருட்டு. அதையும் தாண்டி மேற்கில் வெகு தூரத்தில் கடல். அது எல்லையில்லாதது. அந்தக் கடலிலிருந்து திடீரென்று எழுந்த குளிர்ந்த காற்று மாக்ஸிமில்லனைச் சூழ்ந்து கொண்டது.
அந்தக் காற்றின் தீண்டலினால் தான் முழுவதும் சுத்தமாவதைப்போல் மாக்ஸி மில்லியனுக்குத் தோன்றியது.
***
சித்துராஜ் பொன்ராஜ் – இவர் சிங்கப்பூரில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பு பணிகளுடன், படைப்புகள் (கதை, கவிதை, நாவல்), விமர்சனங்கள், இலக்கிய உரைகள் என பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறார். தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.
வாசித்தறியாத வரலாற்றை வைத்து இரு நண்பர்களுக்குள் இரு பிரிவினரையும் அணுசரித்துப் போகவேண்டிய இக்கட்டான சூழலில், அரச பதவிக்காக கத்தோலிக்கனாக மாறிய நான்காம் ஹென்றி… அவரை விட வயதில் இளையவரான, அவருடனே பயணம் செய்யும்… கொண்ட கொள்கையில் மாறாத மாக்ஸி மில்லியன் இருவரின் நட்பு எப்படி இருந்திருக்கும் என்பதைத் தன் கற்பனையைக் கலந்து மிக அழகாகக் கொடுத்திருக்கிறார் கதை ஆசிரியர்.
படிக்கும் போதே பிரமிக்க வைக்கும் எழுத்து நடை…
அருமை… வாழ்த்துகள்.
*
கதையின் பின்னணியை முன்குறிப்பாக கொடுத்ததிலிருந்தே கதைத் தொடங்கியிருக்கிறது. அதுவே ஒரு வாசல்.
எடுத்த எடுப்பிலேயே ஒரு வசனத்தைத் தந்துவிட்டு, அறையின் நடுப்பகுதியில் கொழுத்த மீன்களாய் நீந்திக் கொண்டிருக்கும் இருட்டுக்குள் நம்மை பிரவேசிக்க வைக்கிறார் சித்துராஜ்.
ஆசிரியரால் இக்கதை நெடுக பிரயோகிக்கப்பட்டிருக்கும் உவமைகள், வெறும் மொழியின் கட்டுமானமாக இருக்கவில்லை. கதாபாத்திரங்களின் மனவோட்டத்தையும் சூழலின் தன்மைக்குள் தாழ்ந்தும் உயர்ந்தும் நிகழும் நுண்ணிய உருமாற்றங்களையும் மிகக் கச்சிதமாக அடையாளப்படுத்துகின்றன.
நான்காம் ஹென்றியையும் சல்லிப் பெருமகனாரான மாக்ஸிமில்லியனையும் கதை நிகழும் சூழலான அவ்வறையின் ஒரு நிழல் மூலையில் நின்றபடி மூன்றாம் சாட்சியாக கவனிப்பவனாக என்னை உணர்ந்தேன்.
நூற்றாண்டு கடந்து டைம் டிராவல் செய்ய வைத்துவிட்டார் சித்துராஜ் பொன்ராஜ். இந்தக் காலக்கடத்தியின் சிறந்த மாலுமியாக அவருடைய கதை சொல்லும் லாகவம் அசர வைக்கிறது. வாசிப்பனுபவத்தின் அனைத்து திசைகளுக்கும் காற்றைப் போல கரம் பற்றி இழுத்துப் போய் ஒவ்வொன்றையும் உற்றுப் பார்க்க பணிக்கிற எழுத்தாற்றல்.
இத்தனை நுணுக்கத்தையும் கொடுக்கக் கொடுக்க, அந்த நூற்றாண்டின் மத்தியல் மனம் சஞ்சாரம் செய்யத் தொடங்குகிறது. வரலாற்றுப் புனைவின் நோக்கத்தை நிறைவேற்ற உத்தியாக எதையும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எந்தக் கதாபாத்திரத்தின் ‘கண்ணாக’ வாசகனை மாற்ற வேண்டும் என்கிற உழைப்பு ஓர் எழுத்தாளனுக்கு அவசியம். அது சரியாகவே தொழில்பட்டிருக்கிறது.
நான்காம் ஹென்றியின் உற்றுப் பார்த்தலை ஓரிடத்தில் இப்படி வர்ணிக்கிறார். ‘அந்தப் பார்வையில் நவாரா பிரதேசத்தின் பிரெனி மலைப்பாறைகளின் கடுமையும் உஷ்ணமும் அப்பாறைகளினூடே ஓடும் வெளிச்சம் மிகுந்த சிற்றருவிகளின் மிக லேசாய் சப்திக்கும் சிரிப்பொலியும் நிறைந்திருந்தது.’
இந்த வர்ணனை மாக்ஸிமில்லியனின் கோணத்திலிருந்து விவரிக்கப்படுகிறது என்பதை உணர்ந்துகொள்ள சிறிது அவகாசம் பிடிக்கும். (கொஞ்சம் அசந்தாலும் pleasure of the text, வெறுமனே கதாசிரியர் பக்கமே நிற்க வைத்துவிடும். ஆனால், ஒரு கதை சொல்லலில் அதன் முக்கியத்துவமாக, கதைக்குள் வரும் சொல் மொத்தமும் நியாயம் செய்யவேண்டியது கதாபாத்திரங்களுக்கானவை அல்லவா! அதைக் கைப்பற்றிக்கொண்டு உற்றுப் பார்க்க வேண்டிய பொறுப்பு வாசகனாக நமக்கு இருக்கிறது)
இதுதானே கதை நெடுக.. இருக்க வேண்டும்.
இந்த ‘நூற்றைம்பது கோட்டைக்குள்’ அது கனக்கச்சிதமாக இருக்கிறது.
இன்னுமொரு இடத்தில் நான்காம் ஹென்றியின் குரலோசை.. எப்படியிருக்கிறது தெரியுமா?
‘அறையில் கூடியிருக்கும் இருளில் தெற்குப் பிரஞ்சுப் பிரதேசங்களில் வளரும் அடர்த்தி மிக்க மால்பெக் திராட்சைகளினால் உருவாகிய மதுவைப் போல் மிகுந்த நிதானத்துடனும் கனத்துடனும் பரவி ஆரோகணித்தது’
(ஆனால், ஏறுவரிசையை குறிக்கும் ‘ஆரோகணமோ’, அந்த ஸ்பெஷல் மதுவைப் போல நிதானத்துடனும் கனத்துடனும் இருக்கிறதாம்!! அடடா நான்காம் ஹென்றியின் குரலோசையை மட்டுமல்ல, ஓர் அரசனாக கதையின் இக்கட்டுச் சூழலில் அவனுடைய மனவோட்டத்தையும் எழுத்தாளன் தூக்கிப் பிடிக்கிற இடம் அது) -இந்த Irony யை சித்துராஜின் கவி மனம், தேர்ந்த ஜூனியரைப் போல கதாசிரியர் சித்துராஜூக்கு தந்துதவுகிறது.
வேறோர் இடத்தில் நான்காவது ஹென்றியின் குரல் இப்படி இருக்கிறது..
‘பிரெனி மலைத்தொடர்களில் தாவித் தாவி மேலேறிச் செல்லும் நீண்ட ரோமமுடைய ஆடுகளின் கால்கள் இடற சரசரவென்று மலையிலிருந்து உருண்டு வரும் உஷ்ணமான கூழாங்கற்கள்’
இதெல்லாமே மாக்ஸிமில்லியன் பார்வையிலிருந்து சொல்லப்படுகிறது என்பதுதான் ஒட்டுமொத்த கதையின் அமைப்பும்.
அவன் அரசரின் சிறுவயது தோழன்..
இது அந்த இருவரின் கதை..
‘அவர்களை நாளை காலை வரச் சொல்லி விடலாமா?’ -எனக் கேட்டு கதையைத் தொடங்கி வைக்கும் மாக்ஸிமில்லியன்..
கதை முடியும்போது அவர் மட்டுமே அந்த அறையில் தனித்து நிற்கிறார்.
நடுவே என்னவெல்லாம் நடந்தது என்பதை..
நானும் ஓர் ஓரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
இத்தனை நுணுக்கத்தையும் கொடுக்கக் கொடுக்க, அந்த நூற்றாண்டின் மத்தியல் வாசக மனம் சஞ்சாரம் செய்யத் தொடங்குகிறது. வரலாற்றுப் புனைவின் நோக்கத்தை நிறைவேற்ற உத்தியாக எதையும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எந்தக் கதாபாத்திரத்தின் ‘கண்ணாக’ வாசகனை மாற்ற வேண்டும் என்கிற உழைப்பு ஓர் எழுத்தாளனுக்கு அவசியம். அது சரியாகவே தொழில்பட்டிருக்கிறது.
வாழ்த்துக்கள்
சித்துராஜ் பொன்ராஜ்
[இவ்வகையில்,
சமீபத்தில் வாசித்த கார்த்திக் புகழேந்தியின் ‘தல புராணம்’ சிறுகதைக்குப் பிறகு, இந்த ‘நூற்றைம்பது கோட்டைகள்’ சிறுகதை என்னை வாசிப்புக்குள் இழுத்துப் பிடித்து வைத்துக்கொண்டது.
இரண்டு சிறுகதைகளையுமே, நவயுக எழுத்து வகையில் வரலாற்றுப் பின்னணியோடு முயன்று பார்க்க வேண்டிய புதிய பாய்ச்சலுக்கான முன்னோடி எழுத்தாக வரிந்துகொள்ளலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.]
கார்த்திக் புகழேந்தி & சித்துராஜ் பொன்ராஜ். இருவருக்குமே எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
***
ப்ரியங்களுடன்
கவிதைக்காரன் இளங்கோ.