அமல்ராஜ் பிரான்சிஸ்
63
எங்கள் திருமணம் முடிந்து மன்னார் தீவுக்குத் தனியாகக் குடித்தனம் போன பின்னர் சுமார் ஆறு மாதங்களாக ஊர்ப்பக்கம் தலைகாட்டவே முடியவில்லை. வாரத்தில் ஆறு நாட்களும் வேலை என்பதே என் ஒட்டுமொத்த வாழ்க்கையாக மாறிவிட்டிருந்தது. சரி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைதானே என்றால், அன்றுதான் வீட்டில் தலைக்குமேல் வேலைகள் மலைகட்டிக் கிடக்கும். தன் கையிலிருக்கும் அதிகாரத்தை மறந்துவிட்டு நீண்டதொரு பட்டியலுடன் நாய்க்குட்டி போல் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருப்பாள் நிவேதா.
சதா வேலையென்று சுற்றிக்கொண்டிருக்கும் என் போன்றவர்கள் நம்முடைய ஏழு நாட்களில் ஒன்றையாவது பரிபூரணமாக மனைவியிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அதில் சொல்லொண்ணா சந்தோஷமும், திருப்தியும் உண்டு. ஆதலால் என்னுடைய ஞாயிறுக்கிழமை என்னுடையதல்ல. அது முற்றுமுழுவதுமாக அவளுடைய நாள். எப்படியென்றால், அவள் அமரச்சொன்னால் அமர்வேன். உறங்கச்சொன்னால் உறங்குவேன். காய்கறி வாங்கிவரச் சொன்னால் சந்திரிக்கா பையை சுமந்துகொண்டு காய்கறி வாங்கிவருவேன். தொல்லை பண்ணாமல் தொலைக்காட்சி பார் என்றால் சமர்த்தாக சன் டீவியைப் போட்டுக்கொண்டு தேமே என உட்கார்ந்திருப்பேன். தவிர, எப்போதாவது பெருந்தேவி மனமிற்கி “தம்” அடிக்க அனுமதி கொடுத்தால், ஹம்சாக் கடையில் போய் ஒரு தம்மும் ப்ளைன் டீயும் அடித்துவிட்டு வருவேன்.
இவ்வளவுதான் என்னுடைய ஞாயிறு! அல்லது அவளுக்காக வாழப் பழகிக்கொண்ட ஞாயிறு. ஓர் அழகான ஸ்திரியைத் திருமணம் செய்துகொண்டால் மட்டும் போதுமா என்ன, அவளை வைத்துக் கொண்டாடவுமல்லவா தெரிந்திருக்க வேண்டும்.
அந்த வருடத்தின் டிசம்பர் மாதத்தில் ஒருவார விடுமுறை எடுத்துக்கொண்டு நானும் நிவேதாவும் ஊருக்குப் போனோம். அப்பொழுதெல்லாம் ஊருக்குப் போதல் என்பது மாபெரும் கொண்டாட்டமாகவே மாறிப்போயிருந்தது எனக்கு. நகரத்தில் சுற்றிச்சுற்றி இயந்திர வாழ்க்கைக்குள்ளேயே உழலும் எனக்கு, ஊருக்குப் போதல் என்பது அக நிம்மதிக்கும், சுதந்திரத்திற்குமான அகன்ற கதவைத் திறந்துவிட்டது. தோள்களில் சுமந்து கொண்டிருக்கும் பளுவையும், கால்களில் கட்டியிருக்கும் சக்கரத்தையும் ஆசுவாசமாக இறக்கி வைக்கும் பெரும் பாக்கியத்தை அந்த நாட்கள் கொடுத்தன.
அந்தத்தடவை ஊருக்குப்போய் நான் அடித்த லூட்டிகள் கொஞ்சநஞ்சமல்ல. அதுவும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வசமாகிய அந்தோனியுடனான அந்தக் கடல் பயணம் பிரமாதம்.
…
அன்று அந்தோனி அழைப்பதற்குள்ளாகவே நானாக ஓடிச்சென்று அவனுடைய படகில் தொற்றிக்கொண்டேன். “டேய், நிவே என்னயக் கொல்லப்போறாள்டா. நீ முதல்ல இறங்கு…” என தடுத்தவனை உதறித்தள்ளிவிட்டு குஜாலாக அணியத்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். என்னுடைய ஸ்தூலமான முடிவு பின்னர் அவனுக்கும் உவகையாய் மாறிப்போனது.
படகு உறுமிக்கொண்டு தண்ணீருக்குள் பாய்ந்தது.
நீலம் கண்களை நிறைத்துப் படர ஆரம்பித்தது. நீலம்தான் எத்தனை சுறுசுறுப்பான வர்ணம். தண்ணீர்தான் எத்தனை வினோதமான படைப்பு. தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் வானம் கரங்களை நீட்டியபடி முறுவலுற்றது. தொலைந்து போனவனின் தரிசனம் கண்டதாலோ என்னவோ அலைகளின் ஆர்ப்பரிப்பில் வீட்டுநாயின் மெல்லிய துள்ளல் தெரிந்தது. கடலே வானம் எனக்கிடக்கும் பறவைகள், காற்றின் சுவரில் ஏறி ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தன. குட்டி மீன்களின் தண்ணீருக்கு மேலான பறத்தலின் பேரழகில் என்னுடைய இரு கண்களையும் கொண்டுபோய் ஒட்டிவிட்டிருந்தேன். கடலுக்குள்ளிருந்து எழுந்து வரும் வைகறையின் ஒளியில் ஈரம் ஒட்டியிருந்தது. அவ்வீரத்தை முகர்ந்த கண்கள் கசிய ஆரம்பித்தன.
“இதோ மீண்டும் வருகிறேன் அன்பே… உன்னைக் காண மறந்த அத்தனை பொழுதுகளின் வாஞ்சைகளையும் கைகளில் அள்ளிக்கொண்டு வருகிறேன். என்னை எடுத்துக்கொள். என்ன ஆனாலும் நான் கடலாலானவன். உன்னால் பிறந்தவன். உப்புத் துணிக்கைகளாலும் கரிக்கும் ஜலத்தாலும் சிருஷ்டிக்கப்பட்ட கடல் ஜீவன்… இதோ என் அன்பே…”
“என்னடா கருவாட்டக் கண்ட பூன போல முளுசுறாய்?”
“இல்ல, அத்தனையும் இன்னும் அப்படியேதான் இருக்கு இல்ல. சைக், இப்படிப்பட்டதொரு அமர்க்களமான பிரபஞ்சத்த விட்டுப்போட்டா மன்னாரில போய் சீனி-மாவு நிறுத்துக்கொண்டிருக்கிறன்…?”
“உன்ட தலையெழுத்து அப்பிடி… முறப்பட்டுக்கொள்ளாம கிடச்சத அனுபவிக்க வேண்டியதுதான்…”
கடல் பயணங்கள் என்றுமே சலிப்பூட்டுபவையல்ல. அது இன்னும் இன்னும் வேண்டும் எனக் கேட்கும், உச்சி வெயிலில் கிரிக்கெட் ஆடும் சிறுவனின் தீராத்தாகத்தை ஒத்தது. போருக்கு முன்னரான காலத்தில் – அதாவது நான் தொழிலுக்குப் போய்க்கொண்டிருந்த காலத்தில் – கடல் எப்படியெல்லாம் என்னுடைய வாழ்க்கையோடு கலந்திருந்தது என்பதை வருடங்கள் கழித்து நினைத்துப் பார்த்தால் பெரும் பொறாமையுணர்வே மிஞ்சியது. இப்பொழுது மன்னாரும், அதன் அவசரச் சூழலும், ப்ரமிளா ஸ்டோரும், காசு பணமும் கொடுக்காத ஓர் உன்னதக் கொண்டாட்டத்தையல்லவா அப்பொழுது இந்தக் கடல் கொடுத்தது.
அந்தோனி படகின் பின்பக்கத்தில் அமர்ந்துகொண்டு இயந்திரப் பிடியைத் திருகத்திருக அது தலையை நிமிர்த்திக்கொண்டு கள்ளித்தீவுப் பக்கம் ஓடியது. கள்ளித்தீவு மன்னார் மாவட்ட மேற்குக் கடற்கரையோரமாக இருக்கும் தீவிர கடலோடிகள் வசிக்கும் கிராமம். மன்னார் மாவட்டத்தின் வடக்குப் பெருநிலப்பரப்பிற்கான அதிகமான கடலுணவுகள் இங்கிருந்துதான் வருகின்றன. எங்கள் ஊரிலிருந்து கள்ளித்தீவு தொலைவு என்றும் சொல்ல முடியாது. பட்டக்காடு கரையில் தாண்டால் வெறும் அரைமணித்தியாலத்தில் கள்ளித்தீவில் மிதக்கலாம்.
பத்து நிமிடங்கள் ஓடிய எங்கள் படகு கள்ளித்தீவின் மேற்குப் பக்கத்தில் இருக்கும் கண்டல் காடுகளின் நடுவே கிடக்கும் நீர்ப்பாதையில் இறங்கியது. 2008க்கு முன்னர் இக்கடல் பிராந்தியத்தில் நாங்கள் மீன் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் இப்போது நிலைமை அப்படியல்ல. சண்டை சச்சரவுகளின்றி அக்கடற்பிரதேசத்தைப் பகிர்ந்துகொள்ள பட்டக்காடு மீனவர்களுக்கும் இப்போது அனுமதியிருக்கிறது. இதன் பொருள், வருடங்கள் கடந்த பின்னர் பட்டக்காடு மீனவர்களுக்கான கடல் எல்லை விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். கள்ளித்தீவு மீனவர்களின் பெருந்தன்மைக்கே தலைவணங்க வேண்டும்.
மன்னார்த்தீவின் இந்த வடபகுதிக் கடல் மிகவும் சுவாரசியமானது. கடலும் கடல் சார்ந்த அழகியலினதும் ஒட்டுமொத்தப் பெருவெளி அது. இந்த அழகியலின் முக்கிய ஆக்கக்கூறு என்றால், அக்கடலின் கரையோர சதுப்புநிலத்தில் ஊன்றி நிற்கும் கண்டல் காடுகள்தான். அதைப் பார்த்தால் தண்ணீரின் மீது பச்சைக் கூந்தல் மிதந்துகொண்டிருப்பது போலிருக்கும். தண்ணீரின் அடியில் வேர் பாய்ச்சி, நீர்மட்டத்துக்கு மேல் தலையை உயர்த்திப் புறஉலகைக் கவனிக்கும் இம்மரங்களின் பேரழகுக்குக் கடல் பிரபஞ்சத்தில் ஈடு இணையில்லை.
இவ்விடத்தில் கண்டல் காடுகள் (அல்லது அலையாத்திக் காடுகள்) பற்றிக் கொஞ்சம் மேலதிகமாக உரையாடுதல் அவசியம். கடலின் கரையோரப் பிரதேசங்களில் காணப்படும் சதுப்பு நிலங்களில் வளரும் ஒருவகைத் தாவர இனமே இந்தக் கண்டல் காடுகள். உவர் நீரிலும், மிகக்குறைந்த ஒக்சிஜனிலும் குறைபட்டுக்கொள்ளாமல் பெருமகிழ்வோடு வளரக்கூடிய தாவர இனம் இது. கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு-மூன்று கிலோ மீட்டர் வரையுள்ள ஆழம் குறைந்த சதுப்புநிலக் கடலில் இந்தக் கண்டல் காடுகள் பெரும் எண்ணிக்கையில் வளருகின்றன.
இலங்கையை எடுத்துக்கொண்டால் அதன் கரையோரப் பகுதிகளில் சுமார் 6’500 ஹெக்டயர் வரையான கடற்பரப்பை இந்தக் கண்டல் காடுகள் நிரப்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதில் முக்கியமானதொரு பகுதி மன்னார் மாவட்டத்தின் விடத்தல் தீவிற்குத் தெற்கே திருக்கேதீஸ்வரம் தொடங்கி வடக்கே இலுப்பைக்கடவை வரையான கரையோரப் பிரதேசத்தில் காணப்படுகிறது. அதுவும் இவற்றில் அதிகமான கண்டல் காடுகள் விடத்தல் தீவை அண்டிய கரையோரத்திலேயே செழித்துக் கிடக்கின்றன.
கடலரிப்பைத் தடுப்பதில் இந்தக் கண்டல் காடுகளின் பங்கு இன்றியமையாதது. கரையோர சதுப்பு நிலங்களில் ஆழமாக வேரூன்றி நம்முடைய ஒட்டுமொத்த நிலப்பகுதியும் பேரலைகளால் அரிக்கப்பட்டுப் போகாத வண்ணம் சுவர் எழுப்பிக் காக்கிறது இக்கண்டல் காடுகள். சுனாமி போன்ற பேரலைகளின் போதும் இந்தக் காட்டுப் பெருஞ்சுவரின் மகிமை கரையோர நிலங்களுக்கு மிகவும் தேவையாக இருக்கிறது.
கடலரிப்பிலிருந்து நம் மண்ணைக் காப்பாற்றுகிறது என்பதோடு இக்கண்டல் காடுகளின் மகிமை நின்றுவிடவில்லை. அதைவிட மிக முக்கியமான இன்னுமொரு சமாச்சாரமும் உண்டு.
மிகப்பெரிய கடல் வளமான மீன்களின் பிரதான இனப்பெருக்கம் நிகழும் இடமாக இக்கண்டல் காடுகளே காணப்படுகின்றன. ஆழிப்பகுதியின் பவளப் பாறைகளுக்குள் வாழும் மீன்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து வந்துசேரும் இடம் இதுதான். மீன்களின் இனப்பெருக்கத்திற்குத் தேவையான மட்டுப்படுத்தப்பட்ட ஒளி, மிதக்கும் நிழல், சதுப்புத்தரை, பாதுகாப்பு என அத்தனையும் இக்காடுகளில் தாராளமாகக் கிடைக்கின்றன.
வந்த காரியம் நிறைவாக முடிந்து சரியான காலம் திரும்பியதும் தங்கள் குஞ்சு பரிவாரங்களை அழைத்துக்கொண்டு மீன்கள் மீண்டும் தங்கள் ஆழிப்பகுதிக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.
ஆனால் தற்போது, குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் கடுமையாகச் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் இயற்கை வளங்களில் இந்தக் கண்டல் காடுகள் பிரதானமானவை. கணவாய் வளைப்பதற்கும், கண்டல் காடுகளுக்குள் பெரும் கூட்டமாக நிற்கும் மீன்களை கஷ்டமில்லாமல் வளைத்துப் பிடிப்பதற்கும் மற்றும் இன்னபிற அற்ப தேவைகளுக்காகவும் இக்கண்டல் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நம் கண் முன்னாலேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் இப்பேரழிவைப் பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது. கால்நீட்டி ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் மரக்கிளையில் நாமே கோடாரி வைத்துவிட்ட பீதியைக் கொடுக்கிறது.
‘கண்டல் காடுகள் இல்லையென்றால் கடலரிப்பு அதிகரித்து கடல், நிலத்தை வேகமாக விழுங்கிவிடும். மீன்களின் இனப்பெருக்கம் பெருமளவில் குறைந்து கடல்வளம் அழிந்துவிடும்.’ இந்த விஸ்தாரம் எல்லாம் நம் பெருங்குடிகளுக்குத் தெரியாது என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. எல்லாம் நாமே முதன்மைப் படைப்பு என்கிற ஈனத்தனமிக்க மமதை. நான் கொடிகட்டி வாழ்ந்துவிட்டால் போதும் என்று நினைக்கிற வக்கிரப்புத்தி.
இதற்குள் கொஞ்சம்கூட மனசாட்சியில்லாமல் “முன்னரப் போல இப்ப மீன்பாடு இல்ல” என சமூகம் வடிக்கும் நீலிக்கண்ணீர்.
கண்டல் காடுகளின் நடுவில் வளைந்து வளைந்து போகும் நீர்ப்பாதையில் எங்கள் படகு அமைதியாக ஊர்ந்து கொண்டிருந்தது. எண்ணிக்கைக்குள் அடக்க முடியாத கண்டல் மரங்கள் இரு பக்கமும் எதேஷ்டமாக வளர்ந்து நின்றபடி எங்களை மிதகளிப்போடு வரவேற்றன. என்னுடைய முழு ஆன்மாவும் பட்சியாகி என்னை விட்டுப்போய் அந்தக் கண்டல்காடுகளின் மேல் குந்திக்கொண்டது. மரங்களின் மீதான பறவையின் வாழ்க்கைதான் எத்தனை அலாதியானது?
தண்ணீருக்கு மேலாகத் தெரியும் சுருள் சுருளான கண்டல் மரங்களின் வேர்கள், அவற்றின் நெருக்கமான இடைவெளிகளில் உலாத்தித் திரியும் நீண்ட கழுத்தையும் கால்களையும் கொண்ட பறவைகள், கிளைகளில் கீச்கீச் என சஞ்சரித்துத் திரியும் நீர்புறாக்கள், சிறு அலைகள் மோதமோத சீரிய தாளத்தில் தாளலயம் போடும் பச்சைநிறக் கூரை என அப்பிரதேசத்தில் விரியும் உன்னதக் காட்சியைப் பார்த்தால் பேசாமல் இங்கேயே கிடந்துவிடுவதே சுபம் எனத் தோன்றியது.
சுவாரசியத்தை மறக்கடித்து இவ்வியற்கையின் மீது நமக்கெழும் அத்தனை அதிருப்திகளும் அற்பத்தனமானவை. இயற்கை என்னும் அழகை ரசித்துக் கொண்டாடுவதற்கு இப்பொழுதெல்லாம் நமக்கு நேரம் கிடைப்பதில்லை. கடின வாழ்க்கையின் அத்தனை சௌகரியங்களையும் செயற்கை உலகுதான் சிருஷ்டிக்கும் என்கிற போலி நம்பிக்கையில்தான் மானுட சமூகம் தீர்க்கமாக இருக்கிறது. கடைசியில் நமக்குத் தெரியாமலேயே ஒரு மனநோய் பீடித்த சமூகம் நம் மத்தியில் முளைத்துக் கொண்டிருக்கிறது என்கிற பிரக்ஞை நமக்குக் கொஞ்சம்கூட இல்லை.
கண்டல் காட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த படகை முன்னாலிருந்த ஆழிப் பிரம்மாண்டம் வரவேற்றது. கண்ணெட்டிய தூரம்வரை நிகரற்ற நீலக்காடு வியாபித்துக் கிடந்தது. அதன் முடிவில் வானம் தண்ணீருக்குள் மூழ்கிக்கொண்டிருந்தது. தூரத்தில், பக்கத்தில் என எட்டும் இடமெல்லாம் குட்டிக்குட்டிப் படகுகள் அலைந்து கொண்டிருந்தன. திரும்பும் திசையெல்லாம் பத்துக்களின் எட்டுப்பத்து மடங்கில் மீன்பட்டிகள் தோன்றின.
மீன்பட்டி பற்றி முந்திய அத்தியாயம் ஒன்றிலும் சொல்லியிருக்கிறேன். பரவாயில்லை, மீண்டும் சொல்கிறேன். மீன்களை வளைத்துப் பிடிப்பதற்காக நம் மீனவர்கள் கண்டுபிடித்த ஒரு சூட்சுமமான முறைதான் இந்த மீன்பட்டி எனப்படுகின்ற பட்டி வலை. வலையை செங்குத்தாக ஒரு இடத்தில் கட்டி பின்னர் அதைக் குறித்த இடைவெளியில் வளையம் வளையமாக சுற்றி நடுவது. அச்சுருளின் வெளிமுனை வலை நீண்டு வேலியாக இருக்கும். இதுதான் அந்தச் சுருளுக்குள் செல்வதற்கான வாயில்.
மீன்களைப் பைத்தியமாக்கி அதல பாதாளத்தில் தள்ளிவிடும் தந்திரம் இது.
கூட்டம் கூட்டமாக வருகின்ற மீன்கள் முன்னால் நீண்டு கிடக்கும் வேலியில் முட்டித்திரும்பி அதைப் பிடித்துக்கொண்டே அந்தச் சுருள் பட்டியினுள் நுழைந்துவிடும். மேலும் மேலும் என நுழைந்து நுழைந்து கடைசி வட்டத்திற்குள் போய் சிக்கிக்கொள்ளும்போதுதான் அம்மீன்களுக்கு மனித ஜென்மத்தின் வஞ்சகப்புத்தி புரிய வரும். உள்ளே வந்த வழி சிக்கல் நிறைந்தது என்பதால் உள்ளே போனவர்கள் அத்தனை இலகுவாக மீண்டும் வெளியே வந்துவிட முடியாது. திக்குத்தெரியாமல், வந்த இடம் புரியாமல் அதனுள்ளேயே சுற்றிக்கொண்டு கிடப்பதைத் தவிர வேறு போக்கிடம் இல்லை.
சில நாட்கள் கழித்து அங்கு வரும் ‘புத்திசாலி’ மனிதன், சுருளின் கடைசி வளையத்துக்குள் இறங்கி அங்கிருக்கும் அத்தனை மீன்களையும் இன்னுமொரு வலையைப் போட்டு கபக் எனப் பிடித்துக்கொண்டு விடுவான். இதைத்தான் மீன்பட்டிகள் என்போம்.
இக்கடலின் இன்னுமொரு ஆச்சரியம் அங்கிருக்கும் பவளப்பாறைகள். கள்ளித்தீவுக்கரையிலிருந்து சுமார் இரண்டு-மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் அந்த பவளப்பாறைத் திட்டுகள் காணப்படுகின்றன. அதிகமான கடல் உயிரினங்களின் வாழ்விடம் இந்தப் பவளப்பாறைகளாகத்தான் இருக்கிறது. கடல்வாழ் உயிரினங்களின் பெரும் சீவியம் இந்தப் பவளப்பாறைகள் அண்டிய பிரதேசத்தில்தான் நடக்கிறது. இதனால்தான் பவளப்பாறைகள் இருக்கும் இடங்கள் மீனவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கின்றன.
அந்தப் பவளப்பாறைத் திட்டுக்களுக்கும் கண்டல் காடுகளுக்கும் இடைப்பட்ட இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரத்தை சுமார் நூற்றுக்கணக்கான பட்டிகள் நிரப்பியிருந்தன. இவ்வளவு பெரிய கடலில் எதற்காக குறித்த இடத்தில் மட்டும் இத்தனை பட்டிகள் என்றால் அங்குதான் மனிதனின் வியூகத்திறன் வேலையைக் காட்டுகிறது.
பவளப்பாறைத் திட்டுக்களில் வாழும் மீன்கள் விசேடமாக மணலை, சிறையா போன்றவை தங்கள் இனப்பெருக்கத்திற்காக கண்டல் காடுகளை நோக்கிப் பெரும் கூட்டமாகப் படையெடுத்து வருகின்றன என்று சொன்னேனல்லவா, இதற்காகத்தான் இந்த பவளப்பாறைகளுக்கும் கண்டல் காடுகளுக்கும் இடையில் இத்தனை மீன்பட்டிகள். இப்பெரும் பயணத்தின் பொருட்டு இந்த வழியில் மீன்கள் எப்பொழுதும் செறிந்து கிடக்கும். இவ்விடத்தில் வலையைப் போட்டால் மீனவர்களுக்கு பெரும் லாபம் கிட்டும்.
ஆனால் இதிலிருக்கும் மிக முக்கியமான சிக்கல் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பவளப் பாறைகளுக்கும் கண்டல் காடுகளுக்கும் இடையில் நிகழும் போக்குவரத்தில் இரண்டு வகையான மீன்கள் உண்டு. ஒன்று, இனப்பெருக்கத்திற்காக கண்டல் காடுகளை நோக்கிச் செல்பவை. இரண்டு, இனப்பெருக்கம் முடிந்து பவளப்பாறையை நோக்கித் திரும்பும் மீன்களும், அவற்றின் குஞ்சுகளும்.
ஆக, இந்த இரண்டு பிரதேசத்தையும் குறுக்கறுத்து வலைகளைப் போட்டு வைத்தால் என்ன நடக்கும்? நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
மனிதர்கள் குரூரமானவர்கள் என்று சொல்வதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்? கர்ப்பிணி மீன்களையும், மீன் குஞ்சுகளையும் வலைபோட்டு வேட்டையாடும் மனிதர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
அதே கேள்வியோடுதான் நான் அந்தோனியைப் பார்த்தேன்.
“அடப்பாவி. இனப்பெருக்கத்துக்கு போற இடத்தில பட்டியப் போட்டு எல்லா மீனையும் புடிச்சிட்டா எப்பிடிடா கடல்ல மீன் பெருகும்? பெரிய அயோக்கியத்தனமால்லா கிடக்கு?”
“ம்… அது சனத்துக்குப் புரியணுமே. அவங்களுக்கு இண்டைய பாட்டுக்கு மீன் பட்டா போதும் எண்ட மனநில. கடலுக்குள்ள இறங்குறவனுக்கு இதத்தவிர வேற எதப்பத்தியும் யோசின இல்ல. ராஜா மாமா அடிக்கடி சொல்லுவார் ஞாபகமிருக்கா? அவங்கட காலத்தில 800, 1000 கிலோனு மீன்பாடு இருந்திச்சாம். அந்தக் காலம் முடிஞ்சு போச்சு மாப்ள. இப்ப ஒரு நாளைக்கு என்ன பாடுனு நினைக்கிறா? முக்கித்தக்கி ஒரு 50 கிலோ. அல்லது இப்பிடி குஞ்சு குருமானெல்லாம் சேத்துக்கொண்டுவந்தா ஒரு 100 கிலோ தேறுது. அவ்வளவுதான்.”
“குட்டிபோடப் போற மீனெல்லாம் பட்டி போட்டு புடிச்சுக்கொண்டிருந்தா மயிருனா மீன் பெருகும்?”
“அதத்தான் நானும் சொல்றன். அதப்பத்தி யாருக்குக் கவல? நமக்கெல்லாம் இண்டைய சீவியத்துக்கு மீன்பாடு இருந்தா சரியெண்டு இருக்கு. இண்டைக்கு அமோகமா வாழணும் எண்ட படபடப்பில எதிர்காலம் பத்தி யாரும் கவலப்படுறதில்ல. இண்டைக்குத் தின்ன ஒண்ணுமில்லாதவனுக்குத்தானே நாளைய பத்திய கவலயும் இருக்கும். மூக்கு முட்ட புடிச்சவனுக்கு?”
இன்னும் இருபது ஆண்டுகளில் சீனாவிலிருந்து தகர டப்பாக்களில் வரவிருக்கும் செயற்கை மீன்களை விழுங்க நாம் இப்பொழுதே தயாரிக்கொண்டால்தான் உண்டு.
“எம்பிமார வச்சாவது இந்த இடத்தில பட்டி வலைகளப் போடுறத உடனடியா தடைசெய்யலாம் இல்லையா மச்சான்?” என நான் ஆத்திரத்தை விழுங்கிச் சொன்னபோது “ஆமா ஆமா. சொன்ன உடனே தடபுடனு செய்துட்டுத்தா மறுவேல பாப்பானுங்க. த்தூ!” என காறித் துப்பிவிட்டு சிகரட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான் அந்தோனி.
எங்கள் கடல் எங்கள் கண்களுக்கு முன்னாலேயே அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்க இதயம் வலித்தது. கடலுணவுகளை லட்சங்கள் கொடுத்து நுகரப்போகும் ஒரு பாவப்பட்ட சந்ததியொன்றை உருவாக்குவதில்தான் நம் சமூகம் அக்கறையாயிருக்கிறது.
அன்று வானம் தெளிவாய் ஜொலித்தது. காற்று மிகையாக இல்லாததால் அலைகளில் விறைப்பிருக்கவில்லை. நீலம் பாலித்த ஜலம் சூரியக்கதிர்களில் பட்டு மின்னியது. ஆங்காங்கே தரித்து நிற்கும் படகுகளில் நின்ற மீனவர்கள் தத்தம் காரியங்களில் கருத்தாயிருந்தார்கள்.
எங்கள் படகு தூரத்திலிருந்த பவளப்பாறைத் தீவை நோக்கிப் பறந்துகொண்டிருந்தது. வேகமான காற்றில் சிகரட் புகையை இழுத்து சுருள் சுருளாக விட்டுக்கொண்டிருந்தான் அந்தோனி.
“டேய். கேக்கணும்னு நினச்சன். இது கள்ளித்தீவு ஆக்கள்ட பக்கம்லா. நம்ம ஆக்கள் எப்பிடி இதுக்குள்ள…?”
“ம்… எங்கட கஷ்டத்தப் பாத்து அவங்க கிழமயில ஒருநாள் இங்கால தொழில் செய்யலாம் எண்டுட்டாங்க.”
“அட சூப்பர்ல…”
“ஓமோம்… ஆனா என்ன நம்மள மாதிரி சின்ன மீனவங்களுக்கு பாவம் பாக்குற இவங்கட இரக்க குணம் அந்தப் பக்கம் இருக்கிற பெரிய மீனவங்களுக்குத்தா இல்லாமப்போச்சு…”
பேசிக்கொண்டிருக்கும் போதே அந்தோனியின் பிடிக்குள்ளிருந்த இயந்திரம் அணைந்தது. சலாரென நீரில் பாய்ந்து அருகிலிருந்த பட்டிக்குள் இறங்கினான். ஈயம் கட்டியிருந்த சுருக்கு வலையைப் பாய்ச்சினான்.
எனக்கோ படகிலிருந்து இறங்குவதற்கு பேய்பயம். வருடங்களுக்கு முன்னர் என்னை அந்த ஜெல்லிமீன் படுத்தி எடுத்ததற்குப் பிறகு கடலுக்குள் கால் வைப்பதென்றாலே நரம்புகளுக்குள் மின்னல் பாய ஆரம்பித்துவிடுகிறது. எத்தனை கனமான பாய்ச்சல் அது. இப்பொழுது நினைத்தாலும் சுருக்கென்று உடல் குறுகிக்கொண்டு விடுகிறது.
நம்மைக் கவ்விப்பிடிக்க வரும் ஆபத்துகள்தான் நம்மைப் பெரும் கோழைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
படகில் இருந்தபடி தெளிந்த நீரினுள் வண்ணம் வண்ணமாகத் ஒளிர்ந்த பவளப்பாறைகளையும் அவற்றைச் சுற்றி வளையம் போடும் மீன்களையும் வெறித்துக் கொண்டிருந்தேன். மீன்களின் குதூகலத்துக்கு ஈடு இணையென்று இந்த சிருஷ்டியில் எதுவுமில்லை. அடுத்த கணம் நேரப்போகும் பேரிடர் பற்றிய பிரக்ஞையற்று கூடிக்குலாவி வாழும் திவ்ய உயிரிகள் அவை.
மன்னார்க்கடலில் கண்டல் காடுகளுக்கும் மீன்களுக்கும் நேரும் அதே ஆபத்துதான் இந்தப் பவளப் பாறைகளுக்கும். மனிதனின் சல்லித்தனத்துக்குப் பலியாகிக் கொண்டிருக்கும் இன்னுமொரு முக்கிய கடல்வளம் இந்தப் பவளப்பாறைகள்.
மனிதர்கள் மட்டும் இல்லையென்றால் இவ்வுலகு எவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்கும்?
பவளப்பாறைகளைத் தொலைக்காட்சியிலாவது நீங்கள் பார்த்திருப்பீர்கள். இயற்கையின் சிருஷ்டிப்பில் கடவுள் செய்த மற்றுமொரு உன்னத மாயாஜாலம் இந்தப் பவளப்பாறைகள். சொரசொரப்பான பாறைத்திட்டுக்களில் பல்வண்ண மைகளை சீரில்லாமல் தெளித்து, ஒழுங்கற்ற கோடுகளையும் நிறத்திட்டுக்களையும் அங்குமிங்கும் கலை நயத்தோடு குவித்து உருவாக்கிய படைப்பு. அதிலும் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்களை கிள்ளி எடுத்து அளந்து வரைந்த சித்திரங்கள் அழகின் உச்சக்கட்டம். உண்மையில் கடவுள் ஒரு மகத்தான அழகியல் தேர்ந்த கலைஞன்தான் என்பதற்கு பவளப்பாறைகளை மிகச்சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.
அந்த மகத்துவ படைப்பு மனிதனுக்கு மட்டும் சத்துராதியாய் தோன்றுகிறது. அல்லது, அதன் அருமை பெருமைகளையும், அவற்றின் சித்திர அழகியலையும் மனிதனால் புரிந்துகொள்ளவோ கொண்டாடவோ முடியவில்லை. மூளையை அடிவயிற்றில் புதைத்துக்கொண்டு சதா அலைந்து திரியும் ஒரு சிறுமைப்பட்ட குலமாக நாம் மாறிவிட்டதன் அடையாளம்தான் இது.
தண்ணீருக்குள் புதைத்திருந்த கண்களை அந்தோனி வரும்வரை நான் தேடவேயில்லை. பட்டியின் அடியில் கிடந்த கரைவலையை தூக்கி படகில் ஏற்றியபோது அந்தோனி களைத்துப் போயிருந்தான். தலையில் ஊறிய வியர்வை வழிந்து வந்து நுனிமூக்கில் துளி கட்டிக்கொண்டு நின்றது. இன்றும் எதிர்பார்த்த அளவு மீன்பாடு இல்லை என்று சொல்வதுபோல இருந்தது அவனுடைய முகபாவனை. வீணான கயிற்றைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறோமோ என அங்கலாய்த்தன கண்கள்.
“இந்த மயிர் வேலைய விட்டுப்போட்டு எங்கினயும் நாள் கூலிக்கு போனாக்கூட பிரயோசனமா இருக்கும்…”
வார்த்தைகளில் கடும் சோர்வு அப்பிக்கிடந்தது.
இப்போதெல்லாம் எங்கள் மாவட்டத்திலிருக்கும் அத்தனை சிறுதொழில் மீனவர்களுடைய முகங்களிலும் இதே வருத்தம்தான் கொட்டிக்கிடக்கிறது. வியர்வைக்கு ஈடுகட்ட முடியாத வாழ்வாதாரமாக இக்கடல் தொழில் மாறிப்போயிருக்கிறது.
“அதுசரி, இப்பவுமாடா கடல்ல டைனமைட் அடிக்கிறாங்க…?”
இயந்திரத்தை பட்டக்காடு நோக்கி வேகமாகச் செலுத்திக் கொண்டிருந்த அந்தோனியைப் பார்த்துக் கேட்டேன். வெடித்துப் பெருகிய பெருமூச்சைக் காற்றில் கரைத்துவிட்டு மௌனமானான்.
என் புருவங்கள் தடித்துத் திரண்டன. அங்கலாய்ப்பிற்குள் புழுங்கிக்கொண்டிருந்த என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு அந்தோனி சொன்னான்.
“போன கிழமையும் ஊருக்கு அந்தப் பக்கம் டைனமைட் அடிச்சதெண்டு சொல்லி ரெண்டு போட்ட நேவிக்காரங்க அள்ளிக்கொண்டு போயிருக்கிறாங்கள். கோட்ல கேஸ் நடக்குதாமெண்டு கேள்வி!”
“எங்க இருந்துடா இவங்களுக்கு டைனமைட் வருது…?”
“தெற்குல இருந்துதா வருதாமெண்டு சொல்றாங்க. மல உடைக்கிற கம்பனிகள்ல வேல பாக்குறவங்க அங்க இருந்து களவெடுத்துக்கொண்டு வந்து நம்ம ஆக்களுக்கு விக்குறாங்களாம்… அதோட இந்தியாப் பக்கமிருந்தும் சாமான் களவா வர்றதா சொல்லுறாங்க…”
மனிதகுலம் தவறானவற்றில்தான் அதிகம் ஈடுபாடு கொண்டிருக்கிறது. இதுவொரு களைய முடியாத பசி. நேர்மையானவற்றில் ஆசுவாசம் கொண்டு நிம்மதியாயிருந்த மனிதர்களைப் பேராசை பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. நேர்மையின் ஏழ்மை மனிதர்கள் மேல் பெரும் பளுவாய் விழுகிறபோது கபடத்தனம் சௌகரியமாய்த் தோன்றுகிறது. சத்தியத்துக்கும் மனித குலத்துக்கும் இடையிலான இடைவெளியை இனி ஒருபோதும் நம்மால் அடைக்க முடியாது. அறம் எப்போதோ பல்லிளித்துவிட்டது.
இலங்கைக் கடல் பிராந்தியத்தில் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்ட ரோலர், தங்கூசி வலை, சுருக்கு வலை என்ற பட்டியலில் அடுத்திருப்பது இந்த டைனமைட்டுக்கள். பவளப்பாறைகளே பெரும்பாலும் மீன்களின் வாழ்விடமென்பதால் டைனமைட்களின் இலக்கு எப்போதும் இந்த பவளப்பாறைகளாகவே இருக்கிறது. அங்கு எறியப்படும் டைனமைட்டுக்கள் மாபெரும் வெடிப்பை உண்டுபண்ணி ஒரே நொடியில் அங்கிருக்கும் அத்தனை கடல் உயிரிகளையும் காவுகொண்டு விடுகிறது. இந்தப் பேரழிவுக்கு மீனவர்கள் வைத்த நாமம் “லாபம்”.
இங்கு நாம் அவதானிக்க வேண்டிய இரண்டு முக்கிய விடயங்கள் உண்டு. ஒன்று, இந்த வெடிப்பில் இனப்பெருக்கத்துக்குத் தயாராக இருக்கின்ற மீன்கள், மீன் குஞ்சுகள் என எதிர்கால வளம் அடியோடு அழிக்கப்படுகிறது.
இரண்டாவது, மீன்களின் “வீடு” என அழைக்கப்படும் பவளப்பாறைகள் அழிக்கப்படுகின்றன.
பவளப்பாறைகள் வெறும் 5 மில்லிமீட்டர் வளர்வதற்கு 365 நாட்கள் எடுத்துக்கொள்கின்றனவாம். அப்படியெனின் இன்று அழிக்கப்படும் பவளப்பாறைகளை மீண்டும் உருவாக்கி முடிக்க எத்தனை தலைமுறைகள் எடுக்கும் என்பதை நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.
மண்டையோடு உருகிவிடுமோ என்கிற அளவுக்குச் சூரியன் எரித்துக் கொண்டிருந்தான். பார்வை கூசியது. படகுக்குள் பரவிக்கிடந்த உப்பு வாடையில் மனது உழன்றது. படகை கரையை நோக்கி செலுத்த ஆரம்பித்தான் அந்தோனி.
நாங்கள் அன்று கரை எட்டியபோது நிவேதா எனக்காகக் கரையில் காத்துக்கொண்டிருந்தாள். அவள் பளிங்குத் தோலில் சாரை சாரையாக விழுந்த வெயில் மினுமினுத்தது. நானும் அந்தோனியும் கீழே இறங்கி படகைக் கரைக்குத் தள்ளினோம். காலை கரையில் வைத்தபோது மணல் தழலாய்க் கொதித்தது. அருகில் போய் நிவேதாவின் கையைப் பற்றிக்கொண்டேன்.
“என்ன இங்க நிக்கிறா…?”
“உங்களப் பாத்துக்கொண்டுதான்!”
“ஓஹ். என்ன லவ்வா?”
“கடலளவு!”
“அப்ப கிஸ் ஒண்டு கிடைக்குமா?”
“கொஞ்சம் நேரமாகும்…”
“காரணம்?”
“ஏய் லூசு… அந்தோனி! கேக்கப்போது…”
“ரைட்டு…”
“மச்சான் அந்த போட் யார்ட?”
அந்தோனி பரபரப்பாய் திரும்பிக் கடலைப் பார்த்தான். வாடி மறைப்பும் சௌகரியமாயிருந்தது.
“பச்ச்ச்!”
அவ்வளவுதான். நிவேதா மருண்டு போனாள். அதே வேகத்தில் தலையைத் திருப்பி எங்களைப் பார்த்து பேந்தப் பேந்த முழித்தான் அந்தோனி.
“எங்கடா? அங்க ஒண்ணுமே இல்லையே…?”
“ஆமா, அங்க ஒண்டுமே இல்லையே…”
“நாசமாப் போக. கலியாணம் கட்டி மென்டல் ஆனதுதான் மிச்சம்!”
நானும் நிவேதாவும் வெடித்துச் சிரித்தோம்.
***
அமல்ராஜ் பிரான்சிஸ்