– பாலைவன லாந்தர்
*
கறுத்து தடித்த உதடுகளால்
கறுத்து தடித்த உதடுகளால் வழங்கப்படும் முத்தங்களுக்காக ஏன் இத்தனை பிரயாசைப்படுகிறீர்கள்
கறுத்து தடித்த உதடுகளால் உலகின் மிகப்பெரிய முத்தங்களை வழங்கிவிட முடியுமா என்ன
கறுத்து தடித்த உதடுகளால் தனது ஏக்கங்களை இலகுவாக விவரித்து விட முடியும் என்று நம்புகிறீர்களா
கறுத்து தடித்த உதடுகளால் போகிக்கும் சமயத்தில் முணுமுணுக்கப்படும் “ம்ம்ம்” என்ற சங்கீத அதிர்வால் அந்த நிலம் தனது பூர்வீகத்தை அடைந்து விடுமென கனா கண்டீர்களா
கறுத்து தடித்த உதடுகளால் அளவிற்கு அதிகமாக அடுக்கப்படும் மாமிசம் தடவிய அரைவேக்காட்டு மைதா ரொட்டிகளை வெண்ணை வழியாமல் தின்று விட முடியுமா
கறுத்து தடித்த உதடுகளால் பற்களுக்கு நடுவில் நிறுத்தப்பட்ட சிகாரை புகைத்து முடிக்கும் வரை உதடுகளில் இருந்து நழுவிவிடாமல் நெருப்பை உறிஞ்சுவிட இயலுமா
கறுத்து தடித்த உதடுகளால் எதை செய்துவிட முடியுமென பனைக்கீற்று முனை போலுள்ள உதடுகளை ஆணிக்கொண்டை போன்ற ஆயுதத்தால் குத்திக்குத்தி தடிக்க வைக்கின்றனர்
பாழடைந்து வெடிப்புகள் நிரம்பிய சுவற்றில் அறையப்பட்டிருக்கும் பித்தளை ஆணிகளைப் போன்று கறுத்து தடித்த உதடுகளில் மீச்சிறு அணிகலன்களை பொருத்தி இருக்கும் பெண்களை இறுக்கமாக அணைத்து சொல்ல வேண்டும்
ஆமன்
***
2) இப்போது நடந்து கொண்டிருப்பது எத்தனையாவது யுத்தம்
மதில்களைத் தகர்த்து நுரையீரல்களின் ஓடுகளில்
காத்தாடி விட்டுக்கொண்டிருந்த விரல்களில்
நூலினை சிறிது சிறிதாகச் செலுத்தும் மாலுமி
அன்னார்ந்து மேலெழுந்து கேட்கிறான்
இது எத்தனையாவது யுத்தம்
நத்தைக்கூட்டை விசுக்கென நசுக்கியப் பின்
யாருமற்ற ஆழ்கிணற்றைத் தேடி பதுங்கி
பிசுபிசுக்கும் உணவை விழுங்குவதற்கு
வாய் திறக்கும் வாய்க்குள் நெளியும் புழுக்கள்
கூட்டமாகக் கேட்கின்றன
இது எத்தனையாவது யுத்தம்
இரண்டு பாதங்கள் ஒன்றையொன்று முந்துகின்றன
சமரசம் செய்யும் உடல் சாவகசமாய் அமர்ந்துகொள்ள
மலைகளைத் தகர்த்து ஒரு பாறையைத் தேர்ந்தெடுக்கிறது
மீதமிருக்கும் பாறைகள் இரண்டு பாதங்களுக்கு நடுவே
மரமென வளர்ந்துகொண்டே கேட்கிறது
இது எத்தனையாவது யுத்தம்
பூச்சிக்கொல்லியை நுகர்ந்தவுடன் பிரசவிக்கப்பட்ட
பூச்சிக் குட்டிகளின் இறுதிப்பூச்சி
தனது கண்களை திறக்காமலேயே
பெரிய பூச்சியின் உணர்கொம்பை பிடித்திழுத்து கேட்கிறது
இது எத்தனையாவது யுத்தம்
***
***
3) சிவந்த மண்டைகள்
பிரேதப்பரிசோதனையின் போது
உடைக்கப்படும் மண்டைகளின் சப்தம்
தன்னை இம்சிக்காமல் இருப்பதற்காக
காதுகளில் ஓர் இசையை பொருத்தி கொள்ளுதல்
ஒவ்வொரு மண்டைக்கும் ஏறி இறங்கும்
சப்தத்தின் அளவீடுகள்
அதிலும் சின்னஞ்சிறு மண்டைக்கென
ஒரு ம்யூட்
பழுத்த மண்டைகளுக்கு வேறு ரகம்
மண்டைகளை உடைத்த பின்
மறக்காமல் நிலைக்கண்ணாடியில்
தனது தலையை தடவிப்பார்த்தபின்
அணிந்து கொள்ளும் கண் ஆடி
இரண்டு கண்களும் தோண்டி எடுக்கப்பட்டு
வீசியெறியப்பட்ட மண்டையில்
குளிர் கண்ணாடி அணிவித்து
சுயமி புகைப்படம் எடுப்பதென்பது வியாதி
ஓய்வாக இருக்கும் போது மண்டைகளுக்கு பெயரிடுதல்
அதனோடு உரையாடுதல்
தனக்கு பிடித்த கதைகளை வாசித்து காட்டுதல்
நெளிந்து போன குவளையை நெளிந்த மண்டையில் அடித்து சியர்ஸ் சொல்லுதல்
இறுதியாக நெற்றியில் முத்தமிடுதல்
மற்ற நேரங்களில் மண்டைகள் எனப்படுபவை
முப்பத்தைந்து
நாற்பத்தேழு
எழுபத்தெட்டு
***
பாலைவன லாந்தர் – தற்பொழுது கத்தாரில் வசிக்கிறார். உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள், லாடம் என்று இரு கவிதைத்தொகுப்புகள் வந்துள்ளன. தொடர்புக்கு – palaivanam999@gmail.com
மிகவும் சிறப்பான கவிதைகள்!
“கறுத்து தடித்த உதடுகளால்” மிக அற்புதமான கவிதை ஆங்கிலத்தில் சொல்லப்படும் “அனபோரா” என்ற உத்தியை அழகாக பயன்படுத்தி செய்யப்பட்ட கவிதை. திரும்ப படிக்கத் தூண்டும் எல்லாவகை அம்சங்களும் பொருந்திய கவிதை. வாழ்த்துக்கள் பாலைவன லாந்தர்.
– பூவிதழ் உமேஷ்
அருமயான கவிதைகள்..வாழ்த்துகள்..
நன்றி
முகமது பாட்சா
பூவிதழ் உமேஷ்
சௌவி